Published:Updated:

"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா?" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2

"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா?" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2
"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா?" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2

"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா?" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2

‘ஒரு பொம்மலாட்டம் நடக்குது... ரொம்ப புதுமையாக இருக்குது... நாலு பேரு நடுவிலே... நூலு ஒருத்தன் கையிலே’ என்று ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்றிருக்கிறது. ‘சிவப்பு மலர்கள்’ என்கிற திரைப்படத்தில் எம்.எஸ்.வி. இசையில் வெளிவந்த பாடல். பிக் பாஸ் வீட்டின் சூழலுக்கு மிக பொருத்தமான பாடல்.

59-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. மும்தாஜிற்கு ஜனனி ஏதோவொரு  சதியோலசனையைத் தந்துகொண்டிருக்கும் மங்கலகரமான சம்பவத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ‘நீங்க முதல்ல செக் பண்ணா ரிஜக்ட் பண்ணிடுங்க’ என்கிற மாதிரி ஐடியா தந்துகொண்டிருந்தது விஷபாட்டில்.

தரப்பரிசோதனையை மும்தாஸ் ஆரம்பித்தார். “பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் பொம்மையில் சுட்டிக் காட்டிய பிழைகளைப் பார்க்க யாஷிகா ஆர்வம் காட்டவில்லை. ‘இதுதானே நடக்கப் போகிறது. தெரியும். நானும் பதிலுக்கு பழிவாங்கத்தான் வந்துள்ளேன்’ என்கிற முன்தீர்மானத்துடன் யாஷிகா  இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

சில பொம்மைகளை ரிஜக்ட் செய்த மும்தாஜ், இறுதியில் 3 பொம்மைகளை தேர்வு செய்தார். இப்போது யாஷிகாவின் முறை. ‘ஸ்ட்டிரிக்ட் ஆபிசராக’ மாறிய யாஷிகா, அனைத்துப் பொருட்களையும் நிராகரிக்க வேண்டும் என்கிற முன்கூட்டிய திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒவ்வொரு பொம்மையையும் ஓரக்கண்ணால் பார்த்து அவர் அலட்சியமாக  தூக்கிப் போட “மோமோ’வின் முகம், Momo சாலன்ஜின் உருவம் மாதிரியாக மாறிக்கொண்டு போனது. இறுதியில் அனைத்துப் பொம்மைகளையும் ரிஜக்ட் செய்தார், யாஷிகா. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மும்தாஜ், யாஷிகா சுட்டிக் காட்டிய அதே குறைகளைக்கொண்டு முன்னர் தேர்வு செய்த பொம்மைகளை நிராகரித்தார்.

“இல்லை. உங்கள் முடிவை நீங்கள் அறிவித்து விட்டீர்கள். எனவே இது செல்லாது” என்று யாஷிகா கூறியதை மும்தாஜ் பொருட்படுத்தவில்லை. “நீ சொன்ன அதே விதிகள் உங்களின் பொம்மைக்கும் பொருந்தும்” என்று வாதம் செய்தார். இருவரும் பிக் பாஸிடம் இது குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். சற்று யோசித்துப் பார்த்தால் இரண்டு பேர்களின் கோரிக்கையும் நியாயமானது. ஆனால் மும்தாஜின் தராசு சற்று கீழேயுள்ளது. ஏனெனில் முடிவை அறிவித்தவிட்ட பிறகு அதைத் திரும்பப் பெறுவது முறையானதல்ல. 

‘சரி ஒழிந்து போகிறது’ என்று ஒரு பொம்மையை யாஷிகா தேர்வு செய்ய, எனில் நானும் ஒரு பொம்மையைத்தான் தேர்வு செய்வேன் என்று அவருடன் மல்லுக்கட்டினார், மும்தாஜ். 

நடந்துகொண்டிருக்கும் வாக்குவாதங்களை ஜனனியும் வைஷ்ணவியும் இணைந்து வெளியில் பணப்பெட்டியை காவல் காத்துக்கொண்டிருந்த மஹத்திடம் சென்று தெரிவித்தனர். ‘போங்கப்பா.. நான் போராடி போராடி டயர்ட் ஆகிட்டேன்’ என்று அலுத்துக்கொண்டார், மஹத். அவரது அலுப்பு உண்மையானதா அல்லது யாஷிகாவின் சார்பாக இருப்பதென்று முடிவெடுத்துவிட்டாரோ என்று தெரியவில்லை. 

“நான் அப்பவே சொன்னேன். எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிடுங்கன்னு” என்று ஜனனி சலித்துக்கொள்ள “எனக்கு நடிக்கத் தெரியாதேய்யா” என்கிற சிம்பு மாதிரி, “என்னால நியாயமா நடந்துக்காம இருக்க முடியாது. என்னன்னு சொல்லி ரிஜக்ட் பண்றது” என்றார், மும்தாஜ். கூட்டிக் கழித்து பார்த்தால் ‘எப்படியும் அவங்க கிட்ட இருக்கறதை விட நம்ம கிட்டதான் அதிக பணம் இருக்கும்” என்று பிறகு ஆறுதல் அடைந்தார்கள். 

இந்தப் பஞ்சாயத்தின் முடிவு பிறகு தெரிந்தது. ‘யாஷிகா அணிக்கு சார்பாகவே பிக் பாஸ் தீர்ப்பளித்தார்’ என்பது அவர் தந்த கூலியைப் பார்த்தபோது தெரிந்தது. மும்தாஜிற்கு ஒரு பொம்மைக்கான கூலியைத் தந்த பிக் பாஸ், யாஷிகாவிற்கு மூன்று பொம்மைக்கான கூலியைத் தந்ததோடு, போனஸ் பணமான ரூ.500-ஐ இணைத்து தந்தார். இதன் மூலம் மும்தாஜ் முதலில் தந்த தீர்ப்பைத்தான் அவர் கணக்கில் எடுத்துக்கொண்டார் என்பது புரிகிறது. 

எதற்காகவோ கலங்கிப்போய் அமர்ந்திருந்த மஹத்தை ஐஸ்வர்யா அருகில் சென்று பேசி தேற்றினார். ‘நான் அதிக மனஉளைச்சலில் இருக்கிறேன். வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை பார்க்க வேண்டும் போல் உள்ளது’ என்பது மஹத் கலங்கியதற்கான காரணம், யாஷிகா தொடர்பான விஷயம் கூடுதல் உளைச்சலை அவருக்கு தந்திருக்கலாம். “60 சதவீத கேமை விளையாடி முடிச்சிட்டே. இப்ப போய் ஏன் இப்படி சொல்றே. உனக்குத் தேவை தூக்கம். போய்த் தூங்கு” என்று மஹத்தின் தோழியாக சரியான ஆறுதலைத் தந்தார், ஐஸ்வர்யா.

தலையில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு உலவிய மஹத்தை, “ஏண்டா பால்பாக்கெட் போடற பையன் மாதிரி உலாத்தறே.  எவனாவது எந்தப் பொட்டியையாவது தூக்கிட்டுப் போங்கடா. நான் எதுக்கு உட்கார்ந்திருக்கேன். வாட்ச்மேனா. என்னனு எனக்கே புரியலை’ என்று பாலாஜி சொல்லிய நகைச்சுவைத் தொனியைக் கேட்டு சற்று மனம் தளர்ந்து சிரிக்கத் துவங்கினார், மஹத். தன் சூப்பர்வைசர் பதவி பறிபோன துக்கத்தை நகைச்சுவையின் மூலம் பாலாஜி வெளிப்படுத்திக்கொள்கிறார் என்று தோன்றிற்று. 

60-ம் நாள் காலை. சுப்ரபாத பாட்டு போடுவதற்கு முன்னாலேயே மஹத்திற்கு ஞானோதயம் வந்துவிட்டது. ஆரஞ்சு அணியின் உடமைகளை திருடலாமா என்று யோசித்த அவர், ‘ச்சே.. பாவம் வேண்டாம். அதிகம் டென்ஷன் ஆயிடுவாங்க. அவங்களும் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க... தப்பு. என்று கேமராவின் முன்பு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த ஞானோதயத்திற்குப் பின் இருப்பது கருணையா அல்லது காதலா என்பது விஜய் டிவி பட்டிமன்றத்தில் விவாதிக்க வேண்டிய தலைப்பு.

அன்று சுதந்திர தின நாள் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மான் அற்புதமாக இசையமைத்த ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலித்தது. மக்கள் அனைவரும் மரியாதையுடன் நின்றுகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்ததும் 'கோவில்' படத்தின் வடிவேலு நகைச்சுவைக்காட்சிதான் நினைவிற்கு வருகிறது. இரு பிரிவாக பிரிந்து அடித்துக்கொண்டிருக்கும் கும்பலின் கலவரத்தைத் தடுக்க, சார்லி இதே பாட்டை போட்டுவிடுவார். கலவரக்காரர்கள் அனைவரும் அட்டென்ஷனில் நின்று தேசத்திற்கு மரியாதை செலுத்துவார்கள். அந்தக் காட்சியைப் போலவே, இதுவரை அடித்துக்கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டு மக்களும் இந்தப் பாடலுக்கு இதே மாதிரியாக நின்றுகொண்டிருந்தார்கள். 

இரண்டு அணிகளில் இருந்தும் சில பேர் ஒன்றிணைந்து ஆட, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் போல் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. 

இவர்கள் போடும் சண்டையைப் பார்த்து இப்போதெல்லாம் பிக் பாஸிற்கே பயம் வந்துவிட்டதோ, என்னமோ. ‘இது பிக்பாஸ்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் விஷயத்தைச் சொல்கிறார். ‘பொம்மலாட்டம்’ டாஸ்க்கின் கடைசி ரவுண்ட் இது. ஒரு பொம்மைக்கு ரூ.60 வழங்கப்படும் என்று சந்தை விலையை ஏற்றினார். அதன் மூலம் சண்டையும் உயரும் என்பது அவரின் கணக்காக இருக்கக்கூடும். 

கன்வேயர் பெல்ட் நகர பொருட்கள் வரத் துவங்கின. சுதந்திர நாள் என்பதால் மக்கள் சண்டை போடாமல் கண்ணியம் காக்க முடிவு செய்தனர். பொருட்களை ஒருவர் பின் ஒருவராக அமைதியாக எடுத்துக்கொண்டிருக்க, பழக்கத்தின் காரணமாக அவசரப்பட்டு எடுத்துவிட்ட காட்டனை மும்தாஜிடம் திருப்பித் தந்தார், ஐஸ்வர்யா. என்றாலும் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ‘சண்டை வேணும்’ என்கிற கொலைவெறி மூடில்  இன்று இருந்தார்கள். “சபாஷ் செல்லங்களா, அப்படித்தான் இருக்கணும்” என்று பிக்பாஸ் அகம் மகிழ்ந்து போயிருப்பார். 

“சண்டை இல்லாம என்னத்த டாஸ்க்... போரடிக்குது” என்று மஹத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார், யாஷிகா. தன் அணிக்காக ஒருபக்கம் ஆவேசமாக போராடும் மஹத், இன்னொரு பக்கம் அணிதுரோகம் செய்யவும் தயங்குவதில்லை. “நீங்க போய் மும்தாஜ்கிட்ட இருந்து கொடுத்ததை பிடுங்கிடுங்க” என்று சேம் சைட் கோல் போட்டுக்கொண்டிருந்தார். 

தொகை குறைவாக உள்ள ஆரஞ்சு அணி, எதிரணியிடமிருந்து எதையாவது சுட்டேயாக வேண்டும் என்கிற தவிப்பில் இருந்தது. ‘அவர்களின் பணப்பெட்டியை சுட்டு விடலாம்’ என்று யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பாத்ரூம் ஏரியாவில் நின்றபடி திட்டமிட்டனர். இதற்காக வெளியில் இருந்த டேனியிடம் சைகை காட்டினார்கள். ஆனால் பின்னால் மும்தாஜ் நின்று கொண்டிருந்ததால் ‘அலர்ட்டா இருடா.. ஆறுமுகம்’ என்று அவர்களை நகைச்சுவையாக எச்சரித்தார், டேனி. எனவே எதிரணியை குறிப்பாக பொருட்களின் பக்கத்தில் புதையல் பூதம் மாதிரி அமர்ந்திருக்கும் வைஷ்ணவியையும் ஜனனியையும் வெறுப்பேற்றத் துவங்கினர். அவர்களின் அருகே சென்று ஜாகிங் செய்யத் துவங்கினர். ‘இந்த திருட்டுக் கொட்டுகளை நம்ப முடியாதே' என்கிற பதட்டத்தில் இருந்த அவர்கள் ‘மஹத்... மஹத்’ என்று அபயக்குரல் எழுப்பினர். 

அவரோ சாவகாசமாக எதிரணியை நோக்கி நடக்க, ‘மஹத்.. நம்ம ஏரியாவிற்கு போ” என்று ஆங்கிலத்தில் கத்தத் துவங்கினார், மும்தாஜ். 

ஆண் பாவம் திரைப்படத்தில் ஒரு புகழ் பெற்ற வசனம் இருக்கிறது. திருமணம் ஆகாத வெறுப்பில் இருக்கும் பாண்டியராஜன், தன் அப்பாவிடம், ‘நான் வேணா பாட்டியை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” என்று கிண்டலாக கேட்க, ‘அடி செருப்பால... எங்க அம்மாவையா கல்யாணம் பண்ணுவே” என்று கோபமாக கேட்பார் விகே ராமசாமி. “நீ எங்க அம்மாவை கல்யாணம் பண்ணும்போது நான் உங்க அம்மாவை கல்யாணம் பண்ணக்கூடாதா?” என்று விசித்திரமான லாஜிக்கை முன்வைப்பார், பாண்டியராஜன். 

மும்தாஜின் கூக்குரலைப் பொருட்படுத்தாத மஹத், ஏறத்தாழ இதே லாஜிக்கை சொன்னார். “அவங்க நம்ம ஏரியாவுல இருக்கும்போது நான் அவங்க ஏரியா இருக்கக்கூடாதா?”. ஜாகிங் சென்றுகொண்டிருந்த ஐஸ்வர்யாவும் யாஷிகாவும், எதிரணியின் பொருட்களின் பக்கத்தில் சென்று அமர, கொள்ளைக் கூட்டத்தைக் கண்டதுபோல் வைஷ்ணவியும் ஜனனியும் மிகையாக பதட்டமடைந்தார்கள். பணப்பெட்டியின் மேலேயே சென்று அமர்ந்துகொண்டார், ஜனனி. ‘ஏய்.. வந்து தொலைங்க” என்று சிரிப்புடன் சொன்னார் டேனி. 

எதிரணி அருகில் இல்லாத சமயத்தில் பொருட்கள் வரத் துவங்க, கொக்கு மாதிரி அதற்காகவே காத்துக்கொண்டிருந்த, மும்தாஜ் அப்படியே லபக்கிக்கொண்டார். “ஷேரிங் பண்ணணும்னு முன்னாடி நியாயம் பேசினீங்க.. இப்ப என்ன?” என்று எதிரணி சண்டைக்கு வந்தது. குடுகுடுவென்று நடந்து வந்த ஜனனி, மும்தாஜிடமிருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு குடுகுடுவென்று நடந்து போனது பார்க்க காமெடியாக இருந்தது. இதனால் வெறுப்படைந்த, ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்' மோடில் இருந்த ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் எதிரணியிடம் சென்று ஒரு பொம்மையைப் பிடுங்கி வர ‘குய்யோ... முறையோ... ‘என்று கூப்பாடு போட்டார், ஜனனி. ‘டேய் மஹத்து.. எங்கடா போயிட்டே” என்று இவர்கள் அலற, பாத்ரூமிலிருந்து அரைகுறையாக ஆடையணிந்து சாவகாசமாக நகர்ந்து உருண்டு வந்தார், மஹத். 

‘அதைக் கொடுத்துடுங்க. நமக்கு வேணாம்' என்று டேனி சொன்னதும் பறித்து வந்த பொம்மையை தூக்கிப்போட்டார், ரித்விகா. “உங்க திறமை மேல நம்பிக்கை இல்லையா?” என்றார், ஜனனி. யாஷிகா கூட்டணி ‘சண்டைக்கு வாங்க' என்று ஜனனியை இம்சைப்படுத்திக்கொண்டிருந்தது. “மஹத் வந்தாதான் எல்லாம். இவங்களுக்கா ஒண்ணும் துப்பு இல்ல” என்று கிண்டலடித்தார், பாலாஜி. ‘மஹத்து .. உங்க டீம்ல நீ  மட்டும்தான் பெஸ்ட்’ என்று வெறுப்பேற்றினார், ஐஸ்வர்யா. “நீங்கதானே முதல்ல எடுத்தீங்க. அது உங்க கண்ணுக்கு தெரியலையா?” என்று ரவுடி ராக்கம்மாவாக மாறினார், யாஷிகா. 

டாஸ்க் சத்தம் ஒலித்ததும் சந்தைக்கடை மாதிரியான இரைச்சல் தணிந்து, பொம்மை செய்யும் பணியில் ஈடுபடத் துவங்கினார்கள். ‘எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிடணும்” என்று டெரராக பேசிக்கொண்டிருந்தது ஆரஞ்சு அணி. 

தரபரிசோதனை மறுபடியும் துவங்கியது. வேண்டுமென்றே ஒவ்வொன்றிலும் குறை கூறி மும்தாஜ் அணியின் பொம்மைகளை நிராகரித்தார் யாஷிகா. எனவே பழிக்குப்பழியாக அதே போல் செய்தார் மும்தாஜ். ஆக இரு அணியிலிருந்தும் ஒரு பொம்மையும் தேறவில்லை. 

எதிரணியை வெறுப்பேற்றும் சேவையில் மறுபடியும் ஈடுபடத் துவங்கினார்கள் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். சிவலிங்கத்தை கட்டிப் பிடித்த மார்க்கண்டேயன் மாதிரி பணப்பெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டார் மும்தாஜ். எங்கேயே தொலைந்து போயிருந்த  மஹத்தை நோக்கி அபயக்குரல் எழுப்பினார்கள் ஜனனியும் வைஷ்ணவியும். அதே போல் கத்தி கிண்டலடித்தது யாஷிகா கூட்டணி.

சென்றாயனிடம் எதையோ சொல்வதற்காக டேனி கூப்பிட, அவரும் யதார்த்தமாக எழுந்து செல்ல, யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் அங்கிருந்த பொருட்களை எடுக்கத் துவங்கினார்கள். ‘சென்றாயன். அண்ணா..என்ன பண்றீங்க.. இங்க பாருங்க . என்ன நடந்திட்டு இருக்குன்னு?” என்று மும்தாஜ் எரிச்சல்பட, தையல்கருவி பெட்டிகளை எடுத்துச் சென்ற ஐஸ்வர்யாவை தடுக்கும் நோக்கில் அவரது தலைமுடியை பிடித்திழுத்தார் சென்றாயன். 

இப்படியொரு தருணத்திற்காகத்தான் ஐஸ்வர்யா காத்துக் கொண்டிருந்தார் போலிருக்கிறது. பிக்பாஸிடம் சென்று புகார் தந்தது மட்டுமல்லாமல் ஊரைக் கூட்டி பிரச்னையாக்குவதில் சாமர்த்தியசாலியாக இருந்தார். மறுபடியும் அவர் அங்கு செல்ல, ‘வேணாம் தங்கம்.. சொன்னா கேளு” என்று அமைதியாக தடுக்க முயன்ற சென்றாயனிடம் வீம்புச் சண்டைக்கு சென்றார்கள் ஜஸ்வர்யாவும் யாஷிகாவும். ‘அவங்க விளையாடிட்டுதானே இருந்தாங்க. ஏன் அப்படிப் பண்ணே?” என்று சென்றாயனிடம் எரிச்சல்பட்டார் பாலாஜி. “உங்க இடத்துல வந்து அப்படிப் பண்ணா சும்மா இருப்பியா?” என்ற சென்றாயனின் நியாயமான கேள்வியை எவரும் கவனிக்கவில்லை. 

சென்றாயனிடம் ஆவேசமாக நெருங்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை டேனி கட்டுப்படுத்த முயன்றும் அவர் அடங்குவதாக இல்லை. அழிச்சாட்டியமாக அங்கிருக்கும் பொருட்களை எடுத்து தங்கள் அணியின் பக்கம் தூக்கிப் போட்டது ஐஸ்+யாஷ் கூட்டணி. ‘Physical violence’ என்கிற வார்த்தையை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு இந்தக் கூட்டணி ரணகளமாக ஆடியது. “வேற வெவல் போயிடுவேன். எனக்கு மூஞ்சி பத்தி கவலையில்லே’ என்று பிலிம் காட்டிய ஐஸ்வர்யா, ‘பொம்பளை பிள்ளையை இப்படித்தான் டச் பண்ணுவியா?” என்று அந்தச் சூழலை இன்னமும் ஆபாசமாக்கினார். ‘சாமி.. சத்தியமா சொல்லு.. நான் அந்த மாதிரியா பண்ணேன்” என்றார் சென்றாயன். “மஹத்தும் டேனியும் அடிச்சிக்கிட்டாங்களே.. அது என்ன?,” என்று அவர் கேட்ட கேள்வியில் நியாயமான தர்க்கம் இருந்தது. 

“ஆம்பளைங்க பிரச்னைன்னா சீக்கிரம் தீந்துரும். பொம்பளைங்க பிரச்னை தீராதப்பா” என்று அவர் முன்னர் சொன்னது இப்போது உண்மையாயிற்று. ஓர் ஆணின் தொடுகையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பெண்கள் எப்படி வேண்டுமானாலும் புகார் செய்ய முடியும் என்கிற பொது நடைமுறையை  ஐஸ்வர்யா சிறப்பாக பயன்படுத்தினார். “ஓகே.. பிக்பாஸ் இது தப்புன்னு சொன்னா வெளியே போக தயாரா இருக்கேன். வீடியோல எல்லாம் இருக்கு” என்று சென்றாயன் எரிச்சல் அடையும்படியாக இருவரின் அழிச்சாட்டியங்கள் இருந்தன.

நடந்த சம்பவத்தை மும்தாஜிடம் விவரித்துக் கொண்டிருக்கும் போது “பிடிச்சு இழுத்தேன். முடி வந்து மாட்டிக்கிச்சு” என்று சென்றாயன் மழுப்ப முயன்றதை ‘பொய்.. பொய்..” என்றார்கள். “ஆமாம். அவர்களை தடுக்க முயன்றேன்” என்று தைரியமாகவே சென்றாயன் சொல்லியிருக்கலாம். 

சென்றாயனின் கோபம் தூண்டப்பட்டதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. சென்றாயன் பொருட்களின் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் கூட, பொருட்களுக்கு ஆபத்து நேரக்கூடும் என்கிற சமயத்தில் மஹத்தைத்தான் வைஷ்ணவியும் ஜனனியும் அழைத்தனர். இதனால் அவருடைய அகங்காரம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இதையேதான் பின்னால் மஹத்திடமும் கூறினார் சென்றாயன். “நீ என்னை நம்பி விட்டுட்டுப் போயிருக்கே.. இவங்களும் என்னை நம்பி உட்கார்ந்திருக்காங்க.. அப்புறமும் நான் விட்டுட்டா என்னை மதிப்பீங்களா? ஏற்கெனவே வந்த நாள்ல இருந்து என்னை ‘காமெடி பீஸூன்றீங்க?” என்று அவர் கோபமும் ஆதங்கமும் கலந்து குறிப்பிட்டது அவரின் உள்ளக்குமுறலின் வெளிப்பாடாக அமைந்தது. 

“நியாயமா விளையாடுங்கப்பா” என்று ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்த சென்றாயனுக்கு இப்படி நேர்ந்தது துரதிர்ஷ்டமானது.

மும்தாஜையும் யாஷிகாவையும் கன்பெஃஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ், அவர்களிடமிருந்த பணத்தைப் பற்றி அறிவிக்கச் சொன்னார். ‘எனக்கு கணக்கு வராது” என்ற யாஷிகாவிற்கு உதவினார் மும்தாஜ். இதன்படி யாஷிகாவிடம் ரூ.950-ம் மும்தாஜிடம் ரூ.1290-ம் இருந்தது. எனவே மும்தாஜ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்கள். 

**

சுதந்திர தினம் என்பதால் அனைவரும் நேர்த்தியான ஒப்பனையையும் உடையையும் அணிந்து அமர்ந்திருந்தார்கள். டேனி தன் சிகையை சற்று ஒழுங்கி படுத்திக் கொள்ளலாம். குளோசப் காட்சிகளில் பார்க்க கலவரமாக இருக்கிறது. ‘எந்த காரணங்களால் நம் இந்திய நாடு சிறந்த நாடாக திகழ்கிறது, ‘இந்தியன் என்று சொல்வதால் ஏற்படும் பெருமையை சொல்ல வேண்டும்’ என்கிற டாஸ்க் தரப்பட்டது. 

இந்தியாவின் பன்மைக்கலாசாரத்தினால் பெருமிதப்படுவதாக ஜனனி கூறினார். ‘இந்தியா உழைக்கும் நாடு” என்பதால் பெருமைப்படுவதாக ரித்விகா கூற, ‘பெருமைன்றதை விட இந்தியாவில் பிறந்ததற்கு அதிர்ஷ்டம்தான் காரணம்’ என்று வித்தியாசமாக கூறுவதாக நினைத்துக் கொண்டு எதையோ சொல்லி விட்டுச் சென்றார் வைஷ்ணவி. மூவண்ணக் கொடியின் சிறப்புகளைப் பற்றி சொன்ன டேனி, ‘தாய் மண், வீரவணக்கம்’ போன்ற சிறப்பு மசாலாக்களை தூவி பேசினார். ‘பல்வேறு கலாசாரம், நடனம், உணவு ஆகிய வகைகளில் இந்தியாவைப் போல் வேறெங்கும் இருக்க முடியாது’ என்று பெருமிதப்பட்ட ஐஸ்வர்யா ‘ஜெய்ஹிந்த்’ என்றார். 

அடுத்ததாக, ‘இந்த வீட்டில் சிறப்பாக உணவு சமைத்த நபர் யார்?” என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்லி அந்த நபரின் மீது பேட்ஜ் குத்த வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு  பரிசு காத்திருக்கிறது. சொல்லி வைத்தாற் போல் பெரும்பாலோனோர் டேனியையே குறிப்பிட்டனர். ‘குறைந்த நேரத்தில் விரைவாக சமைப்பது, விதம் விதமாகவும் அதே சமயத்தில் சுவையாகவும் சமைப்பது’ ‘தென்னிந்திய சமையல்” என்கிற காரணங்கள் கூறப்பட்டுக் கொண்டிருக்க மும்தாஜின் முகத்தில் சிறிய மாற்றங்கள் தென்பட்டன. மும்தாஜை விடவும் அதிக வாய்ப்பு டேனிக்கு அமைந்தது பற்றியும் சொல்லப்பட்டது. 

சிறப்பான உதவியாளர்கள் இல்லாவிட்டால் இதை நிகழ்த்துவது கடினம் என்பதை குறிப்பிட்ட டேனி, தன் தேர்வாக சென்றாயனை தேர்ந்தெடுத்தார். பாலாஜியும் சென்றாயனை தேர்வு செய்ய, அகம் மகிழ்ந்தார் சென்றாயன். சென்றாயனின் தனிப்பட்ட சமையல் திறமையையும் மற்றவர்கள் குறிப்பிட்டனர். இதில் மும்தாஜிற்கான செய்தி இருந்தது. 

பாலாஜியின் சேவையை பிரத்யேகமாக குறிப்பிட்டார் டேனி. ஆக.. அதிக பேட்ஜ்களைப் பெற்று சிறந்த ‘சமையல் தயாரிப்பாளர்’ என்கிற விருதை  டேனி பெற்றார். ‘ஹோட்டல் ஆரம்பிச்சுடு மச்சான்’ என்று கிண்டலடித்தார் மஹத்.

‘பொம்மலாட்டம்’ டாஸ்க்கில் சிறப்பாக பங்கெடுத்த மற்றும் சரியாக பங்களிக்காத போட்டியாளரை கலந்தாலோசித்து ஒருமனதாக  தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக்பாஸ். ஆரஞ்சு அணி கூடிப் பேசி சிறந்த போட்டியாளராக யாஷிகாவையும் சரியாக பங்கெடுக்காத போட்டியாளராக பாலாஜியையும் தேர்ந்தெடுத்தனர். இதில் பாலாஜியின் தேர்வு சரியானதே. ஆனால் பெரும்பாலான நேரங்களில் மஹத்தோடு மல்லுக்கட்டிய ஐஸ்வர்யாவை சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் ஏற்கெனவே ஆவேசமாக ஆடிக்கொண்டிருக்கும் அவருக்கு தங்கச் சலங்கையை கட்டி விடுவது போன்ற ஆபத்தும் இருக்கிறது. 

நீல அணி கலந்தாலோசித்து மெஜாரிட்டி அடிப்படையில் சிறந்த பங்களிப்பாளராக மஹத்தை தேர்ந்தெடுத்தது. இது ஒருவகையில் சரிதான். மஹத் அந்த அளவிற்கு தன் உழைப்பைத் தந்திருக்கிறார். ஆனால் அணிதுரோகம் செய்தவரும் தலைவரின் பேச்சை கேட்காதவருமான அவர் சரியான தேர்வா என்பதை யோசிக்க வேண்டும். சரியான பங்கெடுக்காதவர் என்பதற்கு தன்னிச்சையாக சென்றயானை தேர்ந்தெடுத்து பலிகொடுத்தனர். 

சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்கு நேரடியாக தகுதியாவார்கள். சரியாக பங்கெடுக்காதவர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எவிக்ஷன் பட்டியலில் இணைவார்கள். 

தன்னுடைய தேர்வு குறித்தான நியாயங்களை வைஷ்ணவியிடமும் ஜனனியிடமும் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ். சென்றாயன் சமையலில் அதிக நேரம் செலவழித்ததாலும், பொம்மைகளை சரியாக தயாரிக்காததாலும் அவரை சரியாக பங்கெடுக்காதவராக தேர்ந்தெடுத்த காரணத்தைக் கூறினார். ‘சாப்பாடும்  டைம்க்கு வேணும் –ன்னு கேட்கறாங்கள்ல.. அது எப்படி வரும்?” என்று சென்றாயனுக்கு ஆதரவாக பேசினார் டேனி. ‘Worst performer’ –ன்னு நீங்க ஒத்துட்டிருக்க கூடாது. ஆர்க்யூ பண்ணியிருக்கணும்” என்றார் ஐஸ்வர்யா. “என்ன பண்றது முடிவு பண்ணிட்டாங்க. என்ன பேச முடியும்?” என்றார் சென்றாயன் பரிதாபமாக. ‘இங்க பொம்பளைங்க டாமினேஷன் அதிகமாயிடுச்சு” என்று ஐஸ்வர்யா சொன்னதுதான் வேடிக்கை.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘தன்னை சிறந்த பங்களிப்பாளராக மும்தாஜ் சொல்லிக் கொள்கிறார்’ என்கிற வதந்தி வெளியில் பரவ இது குறித்து மிகையாக கோபப்பட்டார் மஹத். ‘அம்பது மணி நேரம் வெளியிலேயே இருந்து ரத்தக்காயத்தோட போராடினேன். எப்படி இவங்களே இவங்களை சொல்லிக்கலாம். சென்றாயனாவது பொருட்களைப் பறிக்க இங்கயும் அங்கயும் ஓடினான். இரண்டு பேர் அங்கயே உட்கார்ந்திட்டு இருந்தாங்களே.. அவங்கள்ல ஒருத்தரை ஏன் செலக்ட் பண்ணலை” என்பதாக அவரின் கோபம் அமைந்தது. 

“மும்தாஜோட பிளானே இதுதான். தனக்குப் பிடிக்காதவங்களையும் கூட வெச்சிப்பாங்க. சமயம் வரும் போது கட் பண்ணி விட்டுடுவாங்க. பிக்பாஸ் துவங்கிய போது அவங்க மேல நிறைய புகார் வந்தது. ஆனா இப்ப பாருங்க.. அது குறைஞ்சிட்டுது. இதுதான் அவங்க பிளான். இது புரியாம இதுங்க ரெண்டும் அவங்க பின்னாடி சுத்திட்டு இருக்குங்க” என்றெல்லாம் பாலாஜியிடம் பேசிக் கொண்டிருந்தார் மஹத். 

கழிவறையில் நின்றிருந்த மும்தாஜ், இது பற்றி பேச மஹத்தை அழைத்த போது கோபம் தணியாத மஹத், பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்த அதே உள்ளடக்கத்தை கோபமாக சொல்லி விலகிச் சென்றார். “நான் அந்த மாதிரி சொல்லல. தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க” என்று மும்தாஜ் சொல்ல வரும் விளக்கத்தை காதில் வாங்க மஹத் தயாராக இல்லை. 

மஹத் சந்தேகப்படுவது போல மும்தாஜ் தன்னைத்தானே சிறந்த பங்களிப்பாளராக கருதிக் கொண்டாலும் கூட அதில் தவறில்லை. ஏனெனில் அணியை வழிநடத்தியது, அவர்களுடன் மாரடித்தது, தவறாக செல்லும் போதெல்லாம் கண்டித்தது என்று பெரும்பாலான சமயங்களில் தலைமைக்குணத்துடன் நடந்து கொண்டார் மும்தாஜ். ஆனால் சிறந்த போட்டியாளராக தன்னையே அறிவித்துக் கொண்டால் மஹத் குதிப்பார் என்பது மும்தாஜ் அறிந்திருக்கக்கூடும். என்றாலும் அவர் பயந்தது நடந்து விட்டது என்றே தோன்றுகிறது. 

இந்தக் களேபரத்திற்கு இடையில். கிராம சபையின் முக்கியத்துவம் பற்றி பேசுங்கள் என்று கமல் சொன்ன வேண்டுகோள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. 

ஐஷ்வர்யாவும் யாஷிகாவும் சென்றாயன் மீது பழி சுமத்தியதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் சொல்லுங்களேன்.  


 

அடுத்த கட்டுரைக்கு