வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (18/08/2018)

கடைசி தொடர்பு:11:40 (18/08/2018)

மும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு? #BiggBossTamil2

நாள் 61 - பிக்பாஸ் வீட்டில் 'இன்று' நடந்தது என்ன?

மும்தாஜ் vs மஹத்... வெளியே போகப்போவது யாரு? #BiggBossTamil2

‘இன்று மும்தாஜ் கார்னர் செய்யப்பட்ட தினம்’ என்று பிக்பாஸ் வீட்டின் சுவரில் பொறித்து வைக்கலாம். அந்த அளவுக்கு மும்தாஜ் மீதுள்ள மனக்குறைகளை பெரும்பாலோனோர் கொட்டித் தீர்த்தார்கள். குறிப்பாக மஹத் இதை ஆவேசமாகத் தொடங்கி வைக்க, அந்தத் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு இன்னமும் அதிக ரணகளமாக ஆட்டம் ஆடினார் ஐஸ்வர்யா. 

மும்தாஜ் - Bigg Boss Tamil 2

உண்மையில் மஹத்தின் கோபம் என்னவென்றே புரியவில்லை. மெஜாரிட்டி அடிப்படையில் அவரது பெயர் சிறந்த பங்களிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், ‘தன்னைச் சிறந்த பங்களிப்பாளர்’ என்று மும்தாஜ் தனி உரையாடலில் சொல்லிக்கொண்டாரோ இல்லையோ, அதுதான் உண்மை என்கிற எளிய விஷயம் மஹத்தின் மரமண்டைக்கு உறைத்திருக்க வேண்டும். என்னமோ, நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டதுபோல, ‘ரத்தம் சிந்தினேன், 50 மணிநேரம் உழைத்தேன்’ என்றெல்லாம் அவர் தொடர்ந்து கூவுவது அபத்தமாக இருக்கிறது. 

மஹத் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு பொருள்களைப் பிடுங்கிக்கொடுத்தார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், ஒரு குழு கடுமையான உழைப்பால் மட்டும் வெற்றி பெறுவதில்லை. அந்தக் குழுவின் உழைப்பைச் சரியாக ஒருங்கிணைப்பதற்கு ஒரு சரியான தலைமை வேண்டும். ‘Hard work’ஐவிட ‘Smart work’- தேவை எனும் காலகட்டத்தில் இருக்கிறோம். எதிரணியைச் சேர்ந்த பெண்களுடன் அவ்வப்போது வழிந்துகொண்டிருந்தது, அணிதுரோகம் செய்தது, தலைமையின் பேச்சைக் கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டது, ஆபத்து நேரத்தில் மெத்தனமாக இருந்தது போன்ற காரணங்களுக்காக மஹத்தான் மோசமான பங்களிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவருடன் மாரடித்த காரணத்துக்காகவே மும்தாஜுக்கு ஏதாவது சிறப்பு விருது தரலாம். 

‘சரியாகப் பங்கெடுக்காதவர்’ விருது சென்றாயனுக்கு தரப்பட்டதுகூட இவர்களுக்குப் பிரச்னையில்லை. மும்தாஜை திட்டித் தீர்ப்பதற்கு அந்தச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள். அவ்வளவே. போலீஸ் – திருடன் டாஸ்கிலும் ஏறத்தாழ இதேதான் நடந்தது. மும்தாஜின் ஆலோசனைகளைப் பல நேரங்களில் கேட்கத் தவறிய மஹத், டாஸ்க் முடிந்ததும் பல காரணங்களைச் சொல்லி அவர் மீது கோபப்பட்டுக்கொண்டிருந்தார். 

‘தையல் திறமை எனக்குக் இருந்தாலும் தைப்பதற்கான வாய்ப்பு தரப்படவில்லை’ என்று சென்றாயன் கூறியதை வைத்து அதையே பஞ்சாயத்து சபையிலும் மும்தாஜ் மீதான புகாராகக் கூறினார்கள். மும்தாஜ் இதற்காக சென்றாயனை பின்பு தனியாக விசாரித்தார். “நானா உங்களுக்குத் தைக்க வாய்ப்பு தரவில்லை. பொம்மைகள் ரிஜக்ட் ஆகிவிடும் என்கிற பயத்தில் மஹத்தானே உன்னைத் தடுத்தார்? ஏன் இதை நீங்கள் சபையில் சொல்லவில்லை?” என்கிற கேள்விகளுக்கெல்லாம் சங்கடத்துடன் ஆமோதித்தார் சென்றாயன். மும்தாஜும் இந்த விஷயத்தைச் சபையிலேயே கேட்டிருக்கலாம். அப்போது அவருக்குத் தோன்றவில்லைபோல. சென்றாயன் சில விதங்களில் பலியாடாக ஆக்கப்படுவது உண்மைதான். ஆனால், இது சார்ந்த தாழ்வு உணர்விலிருந்து அவர் வெளியே வந்து சம்பந்தப்பட்ட சூழலிலேயே புத்திசாலித்தனமாக வாதாட வேண்டும். 

மஹத் - ஜனனி - ஐஸ்வர்யா - Bigg Boss Tamil 2

மும்தாஜ் பல விதங்களில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மனிதர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பது மஹத்தின் புகாராக இருந்தால், ‘வலிமையானது எஞ்சும்’ என்கிற இந்த ஆட்டத்தின் விதியின்படி அது சிறப்பானதே. அதற்கேற்றவாறான எதிர் உத்திகளைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஆவேசமாக குதித்துக்கொண்டிருப்பதில் ஓர் உபயோகமும் இல்லை. யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவால் ‘பயன்படுத்தப்படுவது’ பற்றி மஹத்துக்கு எவ்வித பிரச்னையும் இல்லை போலிருக்கிறது. 

மும்தாஜிடம் சில எதிர்மறையான அம்சங்கள் இருக்கின்றன. அவர் இந்த விளையாட்டில் சில உத்திகளைப் பயன்படுத்தவும்கூடும். ஆனால், ஏறத்தாழ இந்த வீட்டில் அனைவருமே இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த விளையாட்டில் அவர்கள் இத்தனை நாள்களாக நீடிக்கிறார்கள் என்பது எளிய உண்மை. எனவே, மும்தாஜை மட்டும் தனிமைப்படுத்தி குற்றம் சாட்டுவது முறையானதல்ல. 

**

60-ம் நாளின் சம்பவங்கள் இரவிலும் தொடர்கின்றன. ‘வேண்டும்போது சிலரைப் பயன்படுத்திக்கொள்கிறார்’ என்று வெடித்த மஹத்தின் கோபம் இன்னமும் தணியவில்லை. இந்த விஷயத்தையே பல்வேறு சொற்களின் வழியாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். ஐஸ்வர்யாவும் தனது ஆவேசத்தின் வழியாக இதற்குச் சரியான பக்கவாத்தியமாக இருந்தார். சிறப்பாக நடைபெற்றது இந்தக் கச்சேரி. ‘உன்னை மும்தாஜ் நாமினேட் செய்யச் சொல்லி பலரிடம் சொல்லியிருக்கிறார். அவரைப் போய் நம்பிக்கொண்டிருக்கிறாயே” என்று மஹத், ஜனனியிடம் சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த மும்தாஜ், ‘எப்போது நான் அப்படிச் சொன்னேன்?” என்று ஒவ்வொருவரிடமாக வாக்குமூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

பெரும்பாலோனோர் மறுக்க, யாஷிகா மட்டுமே ‘ஆம்’ என்றார். ஆனால், விசாரிக்கும்போது ‘யாரை நாமினேட் செய்யலாம்’ என்கிற குழப்பத்தில் யாஷிகா இருக்கும்போது, மும்தாஜ் அவருக்கு ஆலோசனை தந்து உதவியிருக்கிறார். அவ்வளவே. ‘நானாகச் சென்று மற்றவரிடம் ‘இவரை நாமினேட் செய்யச் சொல்லவில்லை’ என்கிற மும்தாஜின் கூற்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. அப்போதும் வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் மஹத். ஓர் உரையாடலை முதிர்ச்சியோடு நிகழ்த்தும் பக்குவம் மஹத்துக்கு இன்னமும் வரவில்லை. 

“இப்போது சண்டை போட்டுக்கொண்டாலும் நாளையே யாஷிகா, ஐஸ்வர்யா மும்தாஜூடன் இணைந்துகொண்டாலும் ஆச்சர்யமில்லை. பின்பு மஹத்தும் அந்தப் பக்கம் சாய்வார். அதன் பிறகு ஜனனியும் வைஷ்ணவியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை” என்று பிறகு சென்றாயன் தனியாகக் கூறிக்கொண்டிருந்ததை டேனியும் ஆமோதித்தார். இந்தச் சர்ச்சையில் தன்னுடைய பெயரும் அடிபட்டதை எண்ணி ஜனனி கலங்கிக்கொண்டிருந்தார். வைஷ்ணவி இவருக்கு ஆறுதல் கூறினார். ‘இங்க எல்லோருக்கும் டபுள் ரோல்’ என்கிற விஸ்வரூபம் வசனத்தை வேறு வார்த்தைகளில் புத்திமதியாகக் கூறினார் வைஷ்ணவி. ஜனனியுடையது ‘முதலைக்கண்ணீர்’ என்று யாஷிகா கூற மஹத்தும் ஐஸ்வர்யாவும் சிரித்தார்கள். 

டேனியல் - ஐஸ்வர்யா - Bigg Boss Tamil 2

தங்கள் நிகழ்ச்சி ஸ்பான்ஸர்களின் விளம்பரங்களைப் பல்வேறு வகையில் இங்கு நுழைப்பது பிக்பாஸின் வழக்கமான பணி மற்றும் பாணி. அந்த வகையில் இன்னொரு டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது. ‘நாளை காலை பாடல் முடிந்ததும் தண்ணீர் சிறிது நேரத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்படும். அதற்குள் தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள வேண்டிய மக்கள், 10 பக்கெட் நீரையும் சேமித்துக்கொள்ள வேண்டும். அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.’ 

விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, ‘தாம் ஒருவரிடம் எப்படி பழகுகிறோம்’ என்பது குறித்து மும்தாஜூம் ஜனனியும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஒருவர் என்னிடம் எப்படி நடந்து கொள்கிறாரோ, அதே வகையில்தான் நானும் பழகுவேன்” என்று ஜனனி சொல்ல ‘நான் ஒருவரிடம் அன்பு செலுத்துகிறேன் என்றால், அந்தச் சமயத்தில் அதற்கு உண்மையாகத்தான் இருப்பேன்” என்று மும்தாஜ் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். ‘மஹத் கோபக்காரன். ஆனால் போலி கிடையாது. அவன் மற்றவர்களின் செல்வாக்கால் செலுத்தப்படுகிறான்’ என்கிற கணிப்பை ஜனனி சொல்ல ‘இந்த ஒரு விஷயத்தில் அப்படி கிடையாது. ஐஸ்வர்யா விஷத்தைக் கக்குகிறாள். மஹத் மரியாதையின்றி பேசுகிறான். ஒருவர் தங்கமானவராகவே இருந்தால்கூட மரியாதையின்றி பேசும் நபர் எனக்குத் தேவையில்லை. இந்த விஷயத்தில் சென்றாயனே பரவாயில்லை’ என்று மும்தாஜ் சொல்லிக்கொண்டிருந்தார். 

61-ம் நாள் காலை. ‘நான் யாரு... நான் யாரு... நான் ராஜா’ என்ற சூழலுக்கு பொருத்தமான பாடல் ஒலிபரப்பானது. ஒவ்வொருவருமே தங்களை ராஜாவாக நினைத்துக்கொள்வதுதான் பிரச்னை. ஸ்டோர் ரூம் பெல் அடிக்க உள்ளே சென்று பார்த்ததில் 10 காலி பக்கெட்டுக்கள் இருந்தன. 

போட்டியாளர்கள் வெள்ளை நிற உடையில் அமர்ந்திருக்க போட்டியின் விவரம் அறிவிக்கப்பட்டது. வீடு இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும். தலா ஐந்து பக்கெட் நீரை வைத்துக்கொண்டு தரப்பட்டிருக்கும் அழுக்குத் துணிகளையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். எந்த அணி சுத்தமாக வேலை செய்து, தண்ணீரையும் அதிகம் சேமித்திருக்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி. 

ஜனனி - Bigg Boss Tamil 2

இப்போதேல்லாம் சர்வதேச கன்ஸ்யூமர் பிராண்டுகளுக்குப் பொதுப் பிரச்னைகளைப் பற்றிய அக்கறை நிறைய வந்திருக்கிறது. அதைப் பற்றி பரப்புரை செய்வதையும் தங்களின் வணிக உத்தியாக வைத்திருக்கிறது. ஆனால், சுற்றுச்சூழல் மாசுபடுவது உள்ளிட்ட பல சமூகப் பிரச்னைகளுக்கு இந்தப் பிராண்டுகளே காரணமாக இருக்கும் என்பது ஒரு நகைச்சுவை முரண். 

‘ஒரு பக்கெட் தண்ணீரை முதலிலேயே எடுத்து வைத்து விட வேண்டும். கை கறையானால் கழுவாதீர்கள். ஆடையில் துடைத்துக் கொள்ளுங்கள்’ என்று பல ஆலோசனைகளைக் கூறிக்கொண்டிருந்தார் டேனி. இன்னொரு புறம் மும்தாஜ், தன் அணியிடம் பேசிக் கொண்டிருந்தார். 

ஆட்டம் ஆரம்பம் ஆகியது. தரப்பட்டிருக்கும் நீரின் அளவோடு ஒப்பிடும்போது தரப்பட்டிருக்கும் துணி மற்றும் பாத்திரங்களின் அளவு அதிகம்தான். ஆனாலும் அதுதானே சவால்? 

‘ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது’ என்பது அவரது பாலிஸி. ஆனால், இவரது கொண்டாட்டம் எதிரணியை எரிச்சல் அடையச் செய்யலாம். இன்னொருபுறம், மூட்டு வலியுடன் தரையில் அமர்ந்து துணி துவைத்துக்கொண்டிருந்தார் மும்தாஜ். ஒரு வழியாகத் தரப்பட்டிருக்கும் தண்ணீரை மிச்சம் செய்து வேலைகளை முடித்தார்கள். 

நடுவர்களான மஹத்தும் வைஷ்ணவியும் சோதனை செய்ய வந்தார்கள். நகையைப் பரிசோதனை செய்வதுபோல் ஒவ்வொன்றையும் நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்தார் வைஷ்ணவி. பின்னே, நடுவர் வாய்ப்பு எப்போதாவது ஒருமுறைதானே வருகிறது? தன் தேர்வால் பிரச்னை ஏற்படலாம் என்பதால் மஹத்தையும் அவ்வப்போது தொட்டுக்கொண்டார். ‘தாங்கள் சொதப்பிவிட்டோமோ” என்று அப்போதே தோல்வியின் வாசனையைக் கண்டு கொண்டது டேனியின் அணி.

சோதனை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. டேனி அணி 46 புள்ளிகளும் மும்தாஜ் அணி 47.5 புள்ளிகளும் எடுத்திருந்தன. டேனி அணியைவிட கூடுதலாக அரை பக்கெட் தண்ணீரை மிச்சம் பிடித்திருந்தது மும்தாஜ் அணி. சோதனை முடிந்ததும் பாத்திரங்களைப் பார்த்த டேனி, ‘அவங்க டெஸ்ட் செய்யும்போது பக்கத்துலயே இருந்திருக்கணும்” என்று பேசிக்கொண்டிருந்தார். 

டாஸ்க் - Bigg Boss Tamil 2

தமிழ்நாட்டில் இருக்கும் நீர்ப் பற்றாக்குறையைப் பற்றி விளக்கிய அறிவிப்பு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த உறுதிமொழியைப் போட்டியாளர்களை ஏற்கச் சொல்லியது.

**

பொம்மலாட்டம் டாஸ்கில் நீல அணி வெற்றி பெற்றதால் முழுமையான மதிப்பெண்களைப் பெற்ற அவர்கள் லக்ஸரி பொருள்களை தேர்வு செய்யலாம் என்கிற அறிவிப்பு வந்தது. ஆனால், இதுவரை ரிமோட்டை வைத்து டிஸ்ப்ளேயில் தெரியும் பொருள்களை சொகுசாகத் தேர்வு செய்துகொண்டிருந்த மக்களுக்குப் பிக்பாஸ் ஆப்பு வைத்தார். ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் நிறைய பலூன்கள் இருக்கும். அதில் சிலவற்றில் மட்டும் பொருள்கள் எழுதப்பட்ட சீட்டுகள் உள்ளே இருக்கும். பலூன்களை உடைத்து அந்தச் சீட்டுகளில் உள்ள பொருள்களை மட்டும், தரப்பட்டிருக்கும் நேரத்துக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்கிற புதிய சிக்கலை பிக்பாஸ் கொண்டு வந்தார். (ரூம் போட்டு யோசிப்பாங்க... போலிருக்கு!).

மனித உடலின் பின்பக்கத்தை வைத்து பலூன்களை உடைக்க முடியும் என்கிற புதிய விஷயத்தைச் பிக்பாஸ் போட்டியாளர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். தரப்பட்டிருக்கும் நேரத்துக்குள் பொருள்களைத் தேர்வு செய்வது சிரமமாக இருந்தது. இன்னும் சில புள்ளிகளைப் பயன்படுத்தலாம் என்பதற்குள் பஸ்ஸர் அடித்துவிட்டது. இந்த விஷயம் முடிந்த பிறகும்கூட பலூன்களை உடைத்து விளையாடிக் கொண்டிருந்தன, பிக்பாஸ் வீட்டு குழந்தைகள். 

“இந்தப் பரதேசிங்க நம்மள நாமினேட் செய்யலை. பிக்பாஸ்தான் செஞ்சிருக்கார்” என்று சென்றாயனிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார் பாலாஜி. தோல்வி என்கிற விருதை யார் கையால் வாங்குகிறோம் என்பதுதான் அவருக்கு பிரதான பிரச்னைபோல. “ ‘bad performer’-னு சொல்லும்போது வாதாட நமக்கு மனசு வரல. ஆனா அவிய்ங்க ஒத்துக்கறாங்களா பார்த்தியா... அவமானம்-னு நெனக்கறாங்க. உன்னையும் என்னையும் இந்த வீட்டுல நல்லா பயன்படுத்திக்கறாங்க.. புதுசா நல்ல போட்டியாளர் வந்தா இவிங்க காலி” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் பாலாஜி. இப்போது நாமினேஷன் என்கிற ஒரே படகில் பயணித்துக்கொண்டிருப்பதால் சென்றாயனை மதித்து பேசிக்கொண்டிருக்கிறார் பாலாஜி. இல்லையென்றால்?

பிக்பாஸ் டாஸ்க்

ஐஸ்வர்யாவின் தலைமைப் பதவி முடிவடைவதால் அடுத்த தலைவருக்கான போட்டி நடைபெறத் தொடங்கியது. ‘கணக்கு டீச்சரா அவங்க” என்று ஷகீலாவைப் பார்த்து ஆச்சர்யப்படும் மாணவன் மாதிரி, ஐஸ்வர்யாதான் இந்த வீட்டின் தலைவர் என்கிற விஷயமே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு எவ்வித பொறுப்பும் இல்லாமல் சிறுபிள்ளைபோல் கூடிக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.

மஹத் மற்றும் யாஷிகாதான் அடுத்த வாரத் தலைவருக்கான போட்டியாளர்கள் என்பது முன்னரே முடிவாகியிருந்தால் அவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நடைபெறும். ரூம் போட்டு யோசிக்கும் பிக்பாஸ் டீம் இதற்கும் ஒரு ஐடியாவை வைத்திருந்தது. 

யார் யார் தனக்கு ஆதரவு தருகிறார்கள் என்கிற தேர்தலை இரு போட்டியாளர்களும் முதலில் எதிர்கொள்ள வேண்டும். வேண்டா வெறுப்பாக, அரை மனதாக ஒவ்வொருவரிடமும் வேண்டினார் மஹத். ‘என் ஓட்டு உனக்குத்தான்’ என்று யாஷிகாவிடம் ஜாலியாகக் கூறினார் டேனி. மஹத்தின் ஆதரவு குறைவாக இருந்ததால் தாமாக முன்வந்தார் வைஷ்ணவி. ஒரு மாதிரியாக இரண்டு அணிகள் உருவாகின. அதற்குப் பிறகு இதன் இரண்டாம் பகுதி நடந்தது. 

போட்டியாளர்கள் வெள்ளை உடை அணிந்துகொண்டு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நகர முடியாதவாறு நிற்பார்கள். எதிரணி அவர் மீது சற்று தூரத்திலிருந்து வண்ணத்தில் தோய்க்கப்பட்ட பந்துகளை எறிய வேண்டும். போட்டியாளர் தன் உடையில் கறை படாதவாறு தப்பிக்க வேண்டும். எவருடைய உடையில் குறைவான கறையிருக்கிறதோ அவரே தலைவர். (‘கறையில்லாதவர் தலைவர் அல்ல. குறைவான கறையுள்ளவர்தான் தலைவர்’ என்கிற இந்தப் பாணியில் நமக்கும்கூட ஒரு செய்தியிருக்கிறது)

யாஷிகாவுக்கு விட்டுத் தருவது என்கிற முன்முடிவிலேயே மஹத் வந்திருப்பதுபோல் தெரிந்தது. சாமர்த்தியமாக விளையாடாமல் இருந்தவர், ஒரு கட்டத்தில் தனது பின்புறத்தைக் காட்டி அதிக கறைகளை வாங்கிக்கொண்டார். யாஷிகா சிறப்பாக விளையாடிக் குறைந்த கறைகளுடன் தப்பித்துக்கொண்டதால் அவரே அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் போட்டிக்காக நடந்த இந்தக் கலாட்டாக்களின் இடையே மும்தாஜ் தென்படவில்லை. ‘அவிய்ங்க கண்ட்ரோல்ல எல்லாம் இருக்கணும்னு நெனக்கறாங்க. வீட்ல அப்படி இருந்து பழகிட்டாங்கபோல” என்று பிறகு சொல்லிக்கொண்டிருந்தார் பாலாஜி.

பிக்பாஸ் போட்டியாளர்கள்

அடுத்ததாக ‘பிக்பாஸ் பஞ்சாயத்து சபை’ என்ற நிகழ்ச்சி தொடங்கியது. ‘பாலாஜி பஞ்சாயத்து தலைவராக இருப்பார்’ என்ற அறிவிப்பைக் கேட்டு ஜெர்க் ஆனார் பாலாஜி. ‘வீட்டிலுள்ள பிரச்னைகள் மற்றும் இதர போட்டியாளர்களிடம் உள்ள பிரச்னைகளைப் பற்றி பஞ்சாயத்து தலைவரிடம் பிராது தரலாம். நாட்டாமை அதை தீர ஆலோசித்து தன்னுடைய தீர்வைச் சொல்வார்’. ‘கடவுளே. சூப்பர்வைசர் டாஸ்க் மாதிரி இது சொதப்பிடக் கூடாது’ என்று விளையாட்டாகப் பயந்த பாலாஜி ‘மக்களே..எனக்குக் தெரிஞ்சத சொல்றேன்” என்று பாதுகாப்பான முன்னுரையுடன் ஆரம்பித்தார்.

முதல் பிராது ரித்விகாடமிருந்து வந்தது. “வீட்டின் மக்கள் துடைக்கும் காகிதங்களை ஆங்காங்கே போட்டு விடுகிறார்கள். ஷவர் தண்ணீரை சரியாக மூடுவதில்லை’ என்கிற புகாரை வைக்க, ‘இதற்கான அணி மட்டுமே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. நம் கண்ணில் படும் எந்தவொரு விஷயத்தையும் நாமே சரிசெய்யலாம்’ என்று தீர்ப்பு சொன்னார் நாட்டாமை. ‘டாஸ்குகளில் நான் மிகுந்த அக்கறை காட்டுவதை ‘wild’ என்று சொல்கிறார்கள்’ என்று அடுத்த பிராதை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா. அவரை இடைமறித்த மஹத் இதற்காக மும்தாஜை நேரடியாகக் குற்றம் சாட்டினார். ‘அது நடந்து முடிந்தது. நடக்கவிருக்கிற விஷயத்தைப் பற்றி பேசுவோம்' என்று திருவிளையாடல் சிவாஜியாக மாறினார் பாலாஜி.

‘Worst performer’ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனவருத்தத்தைப் புகாராக முன்வைத்தார் சென்றாயன். ‘இது மோசமான பங்களிப்பாளர் என்பதை விடவும் சரியாகப் பங்கெடுக்காதவர் என்பதே சரி. நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொண்டால் இதற்கு விடை கிடைக்கும்’ என்று தீர்ப்பளித்தார் பாலாஜி. தன்னைப் பற்றிய புகார்கள் எழும் போதெல்லாம் மும்தாஜ் தரும் முகபாவங்களைக் கவனிப்பது சுவாரஸ்யமானதாக இருந்தது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் காலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

மும்தாஜ் மீது பல புகார்களை நேற்றிரவு அள்ளி வீசிய அதே மோடில் மஹத் இன்னமும் இருந்தார். எனவே அதே காரணங்களை மும்தாஜ் மீது பஞ்சாயத்திலும் அடுக்கினார். சரியாக பங்கெடுக்காதவராக சென்றாயன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்னையும் எழுந்தது. சென்றாயனும் இது குறித்த தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். ‘எங்கள் அணியிடம் இது பற்றி கலந்தாலோசித்து பெரும்பான்மையாக வந்த முடிவைத்தான் நான் எடுத்தேன். மோசமான பங்களிப்பாளர் என்கிற பட்டம் எனக்குக் கிடைத்தாலும் பிரச்னையில்லை’ என்பது மும்தாஜின் விளக்கமாக இருந்தது. “மற்றவர்கள் ஆயிரம் கருத்துகளைக் கூறினாலும் அணித்தலைவர் என்கிற முறையில் நீங்கள்தானே அதை அலசி ஆராய்ந்து முடிவெடுத்திருக்க வேண்டும்” என்கிற பாலாஜியின் கேள்வி ஒருபுறம் சரியாக இருப்பதாகத் தெரிந்தாலும் ‘ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும்’ என்கிற பிக்பாஸின் அறிவிப்பையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 

“அணித்தலைவர் என்றால் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக கூறாமல் கனிவாகக் கூறினால் வேலைகள் எளிதில் நடக்கும். எதிர் அபிப்ராயங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்பது போன்ற தீர்ப்பை மும்தாஜிடம் சொன்னார் பாலாஜி. எனினும் மஹத், ஐஸ்வர்யா போன்றவர்கள் ஆவேசமாக புகார்களை தொடர்ந்து அடுக்க, ‘எனக்குக் தலை சுத்துது’ என்றார் பாலாஜி. (புது கட்சி ஆரம்பிக்க இதுதான் நல்ல சமயம் பாலாஜி!). 

டாஸ்க்

எதிரணி ஜாலியாக இருக்க, மும்தாஜ் கண்டிப்பாக இருந்ததைப் பற்றி சென்றாயன் ஜாலியாகப் பேசி கலாய்த்தார். (அதனால்தான் மும்தாஜ் அணி வெற்றி பெற்றது என்பதையும் கவனிக்க வேண்டும்). ‘இந்த உலகமே என்னைத் தவறாக நினைத்தாலும்’... என்கிற வழக்கமான டயலாக்கைப் பேசினார் மும்தாஜ். “ரொம்ப சீரியஸாக இருக்காதீங்க. ஜாலியா டாஸ்க் விளையாடுங்க. நீங்க ஆயிரம் அன்பு செலுத்தினாலும் நீங்கள் கண்டிப்பாகச் சொன்னதைத்தான் மக்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள்’ என்கிற அறிவுரையுடன் பஞ்சாயத்தை முடித்தார் பாலாஜி. “யாரோ டீ கப்பை வெச்சிட்டாங்க. நான் எடுத்து வெச்சிடறேன்’ என்று உடனடியாக திருந்த முயன்றார் மஹத். ‘ஏ... வென்று... நான் இன்னமும் டீ குடிச்சு முடிக்கலை” என்பதுபோல் அதை வாங்கி வைத்துக்கொண்டார் ஐஸ்வர்யா. 

“இவிங்க பண்றதெல்லாம் எனக்குக் குழந்தைத்தனமா இருக்கு” என்று சென்றாயனிடம் மும்தாஜ் பேசிக்கொண்டிருப்பதுடன் இன்றைய நாள் முடிந்தது. ‘நாளை’ என்று காட்டப்பட்ட பகுதியில் மும்தாஜ் தொடர்பாக, மஹத்தும் ஐஸ்வர்யாவும் ஆவேசமாக ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் காட்சி காட்டப்பட்டது. கமலின் பஞ்சாயத்து இடைவெளியில் நடக்கும் காட்சிகள்போல. 

மஹத்தின் முன்கோபம், உடல்சார்ந்த வன்முறையில் அவர் எளிதில் ஈடுபடத் துணிவது, பொம்மலாட்ட டாஸ்கில் நடந்த தள்ளுமுள்ளுக்கள், மோசடிகள், மும்தாஜிடம் இருப்பதாகச் சொல்லப்படும் ஆதிக்க மனோபாவம் போன்றவற்றைப் பற்றி கமல் இன்று பஞ்சாயத்து செய்வார் என்று எதிர்பார்ப்போம். 

டேனி மீது மக்கள் கொலைவெறியுடன் இருந்தாலும் வலிமையான போட்டியாளரான அவரை பிக்பாஸ் எப்படியும் காப்பாற்றி விடுவார். ரித்விகா அல்லது வைஷ்ணவி ஆகிய இரண்டு பலியாடுகளில் ஒன்று தேர்ந்தெடுக்கப்படலாம். வைஷ்ணவியால் சிறிது கலகமும் அதனால் சர்ச்சையும் ஏற்படுகிறது. எனவே ரித்விகாவுக்கு அதிக ஆபத்து இருப்பதுபோல் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


டிரெண்டிங் @ விகடன்