Published:Updated:

``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

தார்மிக் லீ

``ஒரு பொம்மைக்கு இவ்வளவு பிராப்ளமா! இதுதான் கடந்த சில எபிசோடுகளில் நடந்துகொண்டிருந்தது. சரி, அதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?"

``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா
``தொடக்கத்தில் குடுமிச் சண்டை... இறுதியில் குதூகலம்..!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

குடுமிப்பிடி சண்டை என வாய் வார்த்தைக்குச் சொன்னது, நேற்று நிஜமாகவே நடந்தேறிவிட்டது. சென்டு ப்ரோ ஐஸ்வர்யாவின் முடியைப் பிடித்து ஐஸ் வண்டியைப்போல் இழுத்துச் சென்றார். ஒரு பொம்மைக்கு இவ்வளவு பிராப்ளமா..! இதுதான் கடந்த சில எபிசோடுகளில் நடந்துகொண்டிருந்தது. சரி, அதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

* போட்டியாளர்களைக் காட்டுவதற்கு வெளியில் சுற்றும் அணில்களே பரவாயில்லை என நினைத்த எடிட்டர், பிக் பாஸ் வீட்டில் சுற்றிக்கொண்டிருந்த அணில்களின் மீது ஃபோக்கஸ் வைத்துக் காட்டிக்கொண்டிருந்தார். உள்ளே சந்தைக் கடையைப்போல் கூவிக்கொண்டிருந்த சத்தம் மட்டும் கேட்டது. டேனியல், தான் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையே மறந்துபோய் கிச்சனிலேயே குடியிருக்கிறார். `100 வடை... 100 இட்லி... 100 தோசை போட்டேன். அடுத்து நான் என்ன போடணும்?' என்ற மோடிலே எந்நேரமும் இருக்கிறார். `தமிழ் வாழ்க... தமிழ் வாழ்க..!' என்பதுபோன்ற முழக்கங்களைக் கேட்ட யாஷிகா, முழுத் தமிழச்சியாகவே மாற முயற்சி செய்துகொண்டிருக்கிறார்போல! விதவிதமாய் ஆடையணிந்து வந்த யாஷிகா, இப்போது வேட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 

* டேனியல், தான் ரசித்து சமைத்த சப்பாத்தியை யாஷிகாவுக்கு ஊட்டிவிட்டு, ருசித்துப் பார்க்கச் சொன்னார். அருகில் இருந்த மஹத், `நாங்கென்ன தக்காளி தொக்கா...' எனக் கேட்டு அவரும் ஒரு வாய் சப்பாத்தியை டேனியலிடமிருந்து வாங்கிக்கொண்டார். தட் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை மொமன்ட். போட்டியாளர்கள் என்னவோ ஒவ்வொரு நாளும் கார்த்திகையாக நினைத்துதான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், பிக் பாஸ் அதை தீபாவளி நாளாக மாற்றி டாஸ்க் என்ற பெயரில் பட்டாசுகளைக் கொளுத்திப் போடுகிறார். 

* வார இறுதி வந்துவிட்டதால் பெண் போட்டியாளர்களுக்குக் குதூகலமாகிவிட்டது. அவர்களிடமிருந்த விதவித ஆடைகளையும், தரை வரை தொங்கும் ஆபரணங்களையும் எடுத்து, எதை அணிவது என்ற மாபெரும் குழப்பத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். போற போக்கைப் பார்த்தால், கட்டிலில் இருக்கும் போல்டு நட்டுகளைக்கூட விட்டுவைக்காமல் உருவி அணிந்து பார்ப்பார்கள்போல. பிறகு, பாலாஜியை யாஷிகா புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார். `நீங்க இல்லேன்னா இந்த வீட்டுல சிரிப்பே இருக்காது' என்று யாஷிகா பாலாஜியைப் பார்த்துச் சொல்ல, அதற்கு `என்னால எல்லோரும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்' என்று இவர் கூற... ஒரே குஜாலாக இருந்தது. உண்மையில் உள்ளே நடக்கும் கூத்துகளைப் பார்த்து ஊரே சிரிப்பது, இப்போது தெரியாது... பின்னாடி தெரியும்!

* டேனியல், மஹத், ஐஸ்வர்யா, ரித்விகா, சென்றாயன், யாஷிகா மற்றும் ஜனனி என எல்லோரும் சேர்ந்து நீச்சல் குளமே கதியெனக் கிடந்தனர். கரை தொட்டு, தம் கட்டி முங்கு நீச்சல், தொட்டுப் பிடிச்சு போன்ற பல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். மும்தாஜுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. போர்வைக்குள் நடுங்கிக்கொண்டே சில ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். நேற்று மஹத், இவருடன் ஏன் சண்டை போட்டார் என்பது புரியாத புதிர். எதை எதையோ சொல்லி, `நீங்க இப்படித்தான் எல்லாரையும் பண்றீங்க' என்று பயங்கரமாக மும்தாஜுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார், மஹத். இந்தச் சம்பவத்துக்கு ஐஸ்வர்யாவும் உடந்தை. தொடர்ந்து வீட்டில் இருக்கும் அணில்களைத் தவிர எல்லோரிடமும் புரணி பேசிக்கொண்டிருந்தார், மஹத். 

இப்படி எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டதால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு, எல்லோரிடமும் இருந்து விலகிக்கொண்டார் போல. கடந்த வாரத்தில் வாய் வார்த்தைகளில் நடந்த சண்டைகளைவிட அடிதடி சண்டைகள்தாம் அதிகமாக நடந்தது. ஆண்டவர் வேறு இன்று இரவு அவதரிப்பார். இவ்வளவு நாள் உள்ளுக்குள் இருந்த சந்திரமுகியை மூட்டை கட்டிவிட்டு, கங்காவாக மாறி கமலிடம் மன்றாடும் போட்டியாளர்களைத்தான் இன்று இரவும் பார்ப்போம். அதையும் புத்திசாலித்தனமாகக் கையாண்டு, புத்திமதி சொல்வதுதான் ஆண்டவர் ஸ்டைல்... பொறுத்திருந்து பார்ப்போம்!