Election bannerElection banner
Published:Updated:

அலோ பிக்பாஸ்... சீஸன் 3 எப்போ பாஸ்? #BiggBossTamil2

அலோ பிக்பாஸ்... சீஸன் 3 எப்போ பாஸ்? #BiggBossTamil2
அலோ பிக்பாஸ்... சீஸன் 3 எப்போ பாஸ்? #BiggBossTamil2

அலோ பிக்பாஸ்... சீஸன் 3 எப்போ பாஸ்? #BiggBossTamil2

டேனி, ஐஸ்வர்யா போன்றவர்கள் மீதுதான் மக்கள் கொலைவெறியுடன் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு எதிரான வாக்குகள்தாம்  அதிகம் இருக்கும் என்பதுபோல் யூகிக்க முடிந்தது. ஆனால், வழக்கம்போல் பிக்பாஸ் வேறு மாதிரி உத்திகளை கையாண்டிருக்கிறது. வலிமையான போட்டியாளர்களின் மீது கை வைக்காமல் இருக்கிற பலியாடுகளில் ஒன்றை வாரா வாரம் பிரியாணி போட்டு விடுகிறார். அந்த வகையில் இந்த வார பிரியாணி, வைஷ்ணவி.

‘எனக்கு இங்க இருக்கணும்னு ஆசையா இருக்கு சார்” என்று இந்த வாரம் கமல் வந்தவுடனேயே கையைத் தூக்கிய வைஷ்ணவி வெளியேற்றப்பட்டது துரதிர்ஷ்டமானது. பிரியாவிடை வைபவம், அழுகை, புகைப்படம், செடி பரிசளித்தல் போன்ற சடங்குகள் எதுவுமே நடைபெறாமல் அவர் வெளியேற நேர்ந்தது பரிதாபம். போதாக்குறைக்கு “அஞ்சு நிமிஷத்துல அவங்களை கிழிச்சுடுங்க’ என்று கமல் உசுப்பேற்றிவிட போகிற போது உண்மையைச் சொன்ன வைஷ்ணவியை பலர் ரசிக்கவில்லை. குறிப்பாக சென்றாயன் ‘கிளம்பு காத்து வரட்டும்’ என்பது மாதிரியே துரத்திவிட்டார். எனவே, கடைசி நேர வழியனுப்பலும் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லாமல்போனது. ஒருவர் சென்ற பிறகு அவரை நினைவுகூர்தலும்கூட அதிகம் நிகழவில்லை. பாலாஜி மட்டும் நகைச்சுவையாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். 

‘இங்க சொல்றத அங்க சொல்றா, அங்க சொல்றத இங்க சொல்றா” என்பதே வைஷ்ணவியின் மீதான பெரும் குற்றச்சாட்டாக இருந்தது. உண்மையில் பெரும்பாலான ஏனைய போட்டியாளர்களும் அங்கு அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், வைஷ்ணவியின் உடல்மொழியில் இருந்த மிகைத்தன்மை அவருக்கு எதிராக இருந்தது என்று யூகிக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாத்திரத்தை கவனித்து உள்வாங்கி பிரதிபலிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது என்பது ‘பாலாஜி’யாக இருந்த போது தெரிந்தது. எனவே, நடிப்புத்துறை சார்ந்து வைஷ்ணவி பிரகாசிப்பார் என்று எதிர்பார்ப்போம். 

**

இதர போட்டியாளர்களின் உத்திகளைப் பற்றிச் சொல்லும் விளையாட்டு  இன்றும் தொடர்ந்தது. இதில் வைஷ்ணவி பற்றிய பகுதி காட்டப்படவில்லை. வெளியே செல்கிறவருக்கு எதற்கு ஃபுட்டேஜ்ஜை வீணடிப்பானேன் என்று பிக் பாஸ் டீம் நினைத்து விட்டதோ, என்னவோ. 

“விட்ட இடத்திலிருந்து தொடங்குவோமா?” என்றபடி வந்த கமல் இதைத் தொடர்ந்தார். மஹத் எழுந்து நிற்க அவரைப் பற்றிய கருத்துகள் வந்தன. கோபம், நேர்மை, உத்தியேதும் இல்லை என்பதே இவரைப் பற்றிய அபிப்ராயங்களாக இருந்தன. அடுத்து எழுந்த முக்கியமான போட்டியாளர், டேனி. ‘அனைவரையும் கவனித்து அதற்கேற்ப தன் வியூகங்களை, உத்திகளை அமைப்பது, டாஸ்க்குகளில் கொலைவெறியுடன் ஈடுபடுவது, மற்றவர்களை மகிழ்விப்பது போன்ற விஷயங்கள் இவர் மீது சொல்லப்பட்டன. ‘எல்லோரையும் டெம்போல ஏத்தி அங்கங்க விட்டுட்டு இவர் மட்டும் பைனலுக்குப் போயிடுவார்” என்று நகைச்சுவையுடன் சொன்னார் பாலாஜி. “டேனி கிட்ட வந்தப்ப இருந்த என்டர்டெயின்மென்ட் காணாமப் போயிடுச்சே” என்ற சரியான அபிப்ராயத்தைச் சுட்டிக் காட்டினார் கமல். “எங்க சார். உடனுக்குடனே பிராது கொடுத்துடறாங்களே” என்றார் டேனி பரிதாபமாக.

“நல்லா என்டர்டெயின் பண்ணுவார்’ என்பது பாலாஜியைப் பற்றி அபிப்ராயமாக இருந்தது. உண்மைதான். “எல்லோருக்கும் நல்லவராக இருக்கிறார், தன்னை மறைத்துக் கொள்கிறார்’ என்பது ஜனனியைப் பற்றி வந்து விழுந்த கருத்துகள். “ஆனா அந்த முட்டைக்கண்ணு காட்டிக் கொடுத்துடுது” என்றார் ரித்விகா. “டாஸ்க்குகளில் சிறப்பாகச் செயல்படுவார், நேர்மையாக இருப்பார், மொக்கை ஜோக் சொல்வார்,’ போன்றவை யாஷிகாவின் மீதான அபிப்ராயங்களாக இருந்தன. ‘பிக்பாஸின் மாஸ்டர் மைண்ட்’ என்றெல்லாம் மிகையாக யாஷிகாவை உயர்த்திப்பிடித்தார் வைஷ்ணவி. (மய்யத்துல சேர்ந்தீங்கன்னா வளமான வருங்காலம் இருக்கு வைஷ்ணவி).

ரித்விகாவைப் பற்றி பெரும்பாலும் நேர்மறை அபிப்ராயங்களாக வந்தன. ‘நேர்மை, பொறுமை, திறமை” என்றார்கள். (நல்லவேளை அதே ப்ளோவில் சந்தானம் காமெடி மாதிரி ‘எருமை’ என்று சொல்லவில்லை). “சார்பு கிடையாது” என்று டேனி சொல்லும் போது ‘Emotional detachment’ என்ற முக்கியமான விஷயத்தைச் சுட்டிக் காட்டினார் வைஷ்ணவி. “அவங்க வக்கீலாவோ, ஜட்ஜாவோ போயிருக்கலாம்:” என்று டேனி சொன்னதை கமலும் பிறகு வழிமொழிந்தார். 

இந்தப் புகழாரங்களுக்கு ரித்விகா தகுதியானவர்தான். பொதுவாக அமைதியாக இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் எடுபடமாட்டார்கள். ரித்விகாவும் முதலில் அப்படித்தான் தென்பட்டார். அந்த நோக்கில் பொறுமை என்பது ரித்விகாவின் மைனஸ் பாயின்ட். ஆனால், தனது புத்திசாலித்தனம், சாதுர்யம், அறிவுக்கூர்மை, நேர்மை போன்ற விஷயங்களால் பிறகு கவர்ந்து விட்டார். ஏறத்தாழ இவருக்கு நிகராக ஜனனியைச் சொல்ல முடியும். (மஹத்தின் நண்பியாக இருப்பதுதான் பெரிய மைனஸ் பாயின்ட்!).

ஆக.. நேர்மையாகவும் கச்சிதமாகவும் பதில் சொன்ன  ரித்விகாவுக்குப் பரிசொன்று காத்திருப்பதறாக கமல் அறிவித்தார். அதைப் பற்றி பிக்பாஸ் பிறகு சொல்வாராம். (அடுத்த வார எவிக்ஷனிலிருந்து ரித்விகா காப்பாற்றப்படலாம்).

ஓர் இடைவெளிக்குப் பிறகு எவிக்ஷன் கவருடன் வந்தார் கமல். ‘கேரளாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இயற்கை பேரழிவைப்’ பற்றி பேசிய அவர், ‘நான் கேரளாவுக்குச் சிறப்பு கவனம் செலுத்தறதா பேசிக்கறாங்க. இந்தியா பூராவும் எனக்கு ஸ்பெஷல்தான். (‘உலக’ நாயகன் இப்படிச் சொல்லலாமா. பேரழிவு ஐரோப்பாவில் ஆப்பிரிக்காவில் என எங்கு நிகழ்ந்தாலும் துயரம்தான்). காஷ்மீரில் நடந்தாலும் இப்படித்தான்” என்று அவர் சொன்னதும் பார்வையாளர்கள் கைதட்டினார்கள். “இங்க கிடைக்கிற அப்ளாஸ் காஷ்மீர்ல இருந்து கிடைச்சதா எடுத்துக்கறேன்” என்ற அவர், ‘சென்னை வெள்ளத்தின் போது அண்டை மாநிலத்தவர்கள் நமக்கு உதவி செய்தார்கள். எனவே, கேரள மாநில சகோதரர்களுக்கு உதவுவதின் வழியாகவும் சுதந்திரதினத்தை நாம் கொண்டாடலாம். அது நம் கடமையும் கூட’ என்று கமல் சொன்னது நெகிழ்வு.

பிறகு அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், கிராம சபை கூட்டத்தைச் சிறப்பாக நடத்தியதற்காக பாலாஜியைப் பாராட்டினார், ‘சரி பாராட்டியாச்சு. அடுத்த விஷயத்துக்குப் போவோம். அதுவும் என் கடமைதானே?” என்றபடி எவிக்ஷன் வைபவத்தைத் துவங்கினார். அந்தப் பட்டியலில் இருப்பவர்களை நோக்கி “என்ன நினைக்கறீங்க?” என்ற கேள்வியை வீசினார். (நேரத்தை இழுத்தாகணுமே!).

“எனக்கு போக வேணாம் சார். இரண்டாவது வாய்ப்பு தரப்பட்டது. சிலது கத்துட்டு இருக்கேன். இன்னமும் முடிக்கலை. இங்க இருக்க விரும்பறேன்” என்பது போல் வைஷ்ணவி சொல்ல, கமலின் முகத்தில் தெரிந்த நுண்ணிய மாற்றங்களுக்கான காரணம் பிறகுதான் தெரிந்தது. 

போன சீஸனில் இருந்தே நான் நினைத்துக்கொண்டிருக்கும் மற்றும் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை டேனி சரியாகச் சுட்டிக் காட்டினார். “இது என்னமோ ஜெயில் மாதிரியும், இங்க வந்த பிறகுதான் திருந்தற மாதிரியும் சிலர் சொல்றது சரியா இல்ல. நம் வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ளலாம். இதுவரை வீட்டைப்பத்தி மட்டுமே யோசிச்ச நான், இனி என் தெருவைப் பற்றி யோசிப்பேன்” என்று கமல் மாதிரியே வியாக்கியானம் தந்து கொண்டிருக்க, தனக்கு ஒரு போட்டியாளர் இருப்பதை விரும்பாத கமல் ‘சட்டுன்னு விஷயத்தைச் சொல்லுங்க’ என்று அவசரப்படுத்தியவுடன் ‘இங்க இருக்கணும் சார்” என்று முடித்துக்கொண்டார். “அம்மா அப்பாவை மதிக்கணும். மனைவியை மதிக்கணும்-னு உணர்ந்திட்டேன்” என்றெல்லாம் சொன்னார் சென்றாயன். (இதுக்கு நாலைந்து எம்.ஜி.ஆர் படங்களை பார்த்திருக்கலாமே செண்டு சார்!). 

“இப்ப என்னதான்யா சொல்லுதீரு?” என்று கமல் அழுத்திக் கேட்டவுடன் ‘இங்க இருக்க ஆசைப்படறேன் சார்” என்றார் சென்றாயன். பார்வையாளர்களின் கைதட்டல்கள் கேட்டன. “அவங்க கைதட்றதை கேட்டு உங்களைக் காப்பாத்திட்டாங்கன்னு நெனச்சிடாதீங்க. அவங்க ஜனனியைக் காப்பாத்திட்டாங்க” என்று வழக்கம் போல் சட்டென்று திசை மாற்றி விளையாடினார் கமல். “எல்லோருக்கும் நன்றி” என்று அரசியல்வாதி போல் கும்பிடு போட்டார், மாண்புமிகு, செல்வி ஜனனி அவர்கள். 

“உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று மற்றவர்களைக் கேட்க, ‘பதற்றமா இருக்கு” என்பதை வெவ்வேறு சொற்களில் கூறினார்கள். “சரி, யாரைக் காப்பாத்த விரும்பறீங்க?’ என்று கேட்ட போது நிறைய பேர் ‘சென்றாயன்’ என்றார்கள். (பின்னே பலவீனமான போட்டியாளர் இருந்தாத்தானே நமக்கு பலம்!) மஹத்தும் ஐஸ்வர்யாவும் மட்டும் “டேனி மற்றும் சென்றாயன்” என்றனர். எனவே ‘டேனி நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்’ என்றார் கமல். எழுந்து நின்று நன்றி சொன்ன டேனி “மிஷன் கம்ப்ளீட் பண்ணிட்டுதான் சார் வருவேன். மக்கள் அதற்கு ஹெல்ப் பண்ணணும்” என்றார், ஜேம்ஸ்பாண்ட் தனமாக. (இதெல்லாம் சரிதான். முடியை வெட்டிக்கங்க டேனி. சகிக்கல). 

மற்ற போட்டியாளர்களிடம் இருப்பது போலவே டேனியிடமும் சில பிழைகள் இருந்தாலும் பலர் ஏன் இவரை இப்படி வெறுக்கிறார்கள் என்கிற ரகசியம் எனக்குப் பிடிபடவேயில்லை. போட்டியின் இறுதிவரை தாக்குப் பிடிக்கப் போகிறவர் என்பதை ஒரு கட்டத்திலிருந்தே நான் உணர்ந்து கொண்டேன். டேனியின் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள்.

ஆக எவிக்ஷன் பட்டியலில் மீதமிருப்பவர்கள் சென்றாயனும் வைஷ்ணவியும். “பாருங்கோள்… தூதன் வருவான் செய்தியொன்று தருவான்” என்கிற ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்திபன் போல “சென்றாயன்.. நீங்க ஸ்டோர் ரூமுக்குப் போங்க. வைஷ்ணவி நீங்க கன்பெஷன் ரூமுக்குப் போங்க. உங்களுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது” என்றார் கமல். அவர்கள் கிளம்பிய திசையில் ஏதோ குழப்பம் தெரிய.. “ஆட்டத்தைக் கெடுத்துடுவாங்க போல இருக்கே’ என்று நினைத்த கமல் சரியான இடங்களை மீண்டும் சொல்லி அனுப்பினார்.

இருவரும் அவரவர்களின் இடங்களில் சென்று பதற்றத்துடன் காத்துக்கொண்டிருக்க, வரவேற்பறையில் அமர்ந்திருந்த போட்டியாளர்கள் அவர்களை விடவும் பதற்றத்துடன் இருந்தார்கள். ‘டபுள் எவிக்ஷனா இருக்குமோ,” என்று வழக்கத்துக்கு மாறாக டேனி பதற்றப்பட, “நீ வேற சும்மா இருப்பா.. ஏற்கெனவே எனக்கு மூத்திரம் முட்டுது” என்றார் பாலாஜி. இதற்கிடையே எவிக்ஷன் ஆகவிருக்கும் ‘வைஷ்ணவி’யின் பெயரை பார்வையாளர்களிடம் காட்டினார் கமல். 

உள்ளே சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட போட்டியாளர்கள் ‘வைல்டு கார்ட் என்ட்ரியா இருக்குமோ. இதுவரைக்கும் பிக்பாஸ்ல டிபுள் எவிக்ஷன் நடந்திருக்கா?” என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். “அவனுக்கு ஒரு பாயசத்த போட்டுற வேண்டியதுதான்’ என்கிற வசனத்தைப் போல, யாராவது கிளம்பும் போதெல்லாம் அவர்களுக்கு ‘டீ’ போட்டுத் தருவது மும்தாஜின் வழக்கமாகி விட்டது. ‘இறுதி விருந்து’ போல இதுவொரு குறியீடு போல. ‘சென்றாயன் அண்ணாக்கு டீ போட்டுக் குடுத்தேன்’ என்றார் மும்தாஜ். “இப்போதான் அவரோட கனெக்ட் ஆகுது” என்றும் கண்கலங்கினார். (பார்ரா!)

இதற்கிடையில் ஸ்டோர் ரூம் பெல் அடிக்க மக்கள் குழப்பத்துடன் அங்கு சென்று பார்க்க ‘காக்கா போச்’ என்பது போல் சென்றாயனைக் காணோம். மேஜிக். ‘அப்ப சென்றாயன்தான் பிரியாணியா?” என்று முடிவு செய்து ‘வைஷ்ணவி காப்பாற்றப்பட்டாரா” என்று மகிழ்ச்சியும் சோகமும் அடைந்தார்கள். திருவிழாவில் காணாமல் போனவர்களைத் தேடுவது போல ‘வைஷ்ணவி.. செண்டு.. ‘என்று அவர்கள் கத்திக் கொண்டிருந்ததைப் பார்க்க பரிதாபமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. 

கன்ஃபெஷன் ரூமில் பதற்றத்துடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்த வைஷ்ணவியை திடீரென்று பிக்பாஸ் அழைக்க பயந்து போன வைஷ்ணவி ‘சொல்லுங்க எஜமான்’ என்றார். அவர் வெளியேற்றப்படும் செய்தியை அறிந்தவுடன் அதிருப்தியை மறைத்துக்கொண்டு ‘நன்றி’ என்றார். ‘வைஷ்ணவி விடைபெற்றுக் கொண்டு நம்மிடையே வருவார்’ என்றார் கமல். அவ்வாறெல்லாம் நடைபெறவில்லை போல. 

ஓர் இடைவெளிக்குப் பின்பு வந்த கமல், ‘நீர் சேமிப்பு’ டாஸ்க்கைப் பற்றிப் பேசிய பிறகு சொன்ன விஷயம் மிக மிக முக்கியமானது. “வெள்ளம் வந்தா தண்ணியெல்லாம் வீணா கடல்ல போகுதுன்னு சொல்றாங்க. இயற்கையில் எதுவும் வீணாவதில்லை. அணையைக் கட்டுவது மட்டுமே நீர் சேமிப்பு அல்ல. உலகம் பிறந்தது நமக்காக’ன்னு நெனச்சுக்கக் கூடாது” என்றார். கடலில் வாழும் உயிரினங்களுக்காக நன்னீர் கடலில் இணைவது முக்கியமானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். நாம் மட்டுமே அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கருதுவது மனிதகுலத்தின் சுயநலம். 

பிறகு கமலுடன் மேடையில் தோன்றினார் வைஷ்ணவி. “அஞ்சு நிமிஷம் கிடைச்சா.. எல்லோரையும் கிழிச்சுத் தோரணம் கட்டிடுவேன்’னு சொன்னீங்க. ஆனா செய்யல. இப்ப போகப் போறீங்க. இப்பவாவது அதைச் செய்வீங்களா?” என்று கமல் கேட்க, தன் வழக்கமான பாணியில் எதையோ சொல்ல வைஷ்ணவி முயல, ‘செய்வீங்களா, இல்லையா. செய்வீங்கன்னா.. வீடியோ மூலமா உள்ளே போகலாம்’ என்று கமல் சொன்னதுடன் உத்வேகம் பெற்ற வைஷ்ணவி. ‘செஞ்சுடலாம் சார். எனக்கு பயம் இல்ல” என்றார். 

அகம் டிவி வழியே உள்ளே நுழைந்த போது காமிரா வைஷ்ணவியைக் காட்டவில்லை. ‘என்ன.. யாரு போயிருப்பாங்கன்னு நெனக்கறீங்க?” என்றார் கமல். ‘ஒண்ணுமே புரியலையே சார்” என்று போட்டியாளர்கள் குழம்ப. ‘சரி. ரூம்ல போய் எல்லோரும் பாத்திடுங்க” என்று கமல் சொன்னதும் அடித்துப் பிடித்து கன்ஃபெஷன் ரூமுக்கு ஓட, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பிணைக்கைதி மாதிரி பரிதாபமாக உட்கார்ந்திருந்தார் சென்றாயன். அனைவரும் மகிழ்ச்சியுடன் கூவி அவரைக் கட்டிப் பிடிக்க, “வழக்கமா என்னை மதிக்கவே மாட்டீங்க. இன்னிக்கு என்னங்கடா ஆச்சு உங்களுக்கு?” என்பது போல் விழித்தார் சென்றாயன். 

“கிடைச்சுட்டான் சார்” என்று சொன்னபடி அவரை கமலின் முன்னால் நிறுத்தினார்கள். ‘சென்றாயன்-ன்னு பேரை வெச்சுக்கிட்டு செல்லவேயில்ல” என்று கிண்டலடித்த கமல், “அப்ப வைஷ்ணவிக்கு என்ன ஆச்சு” என்று விளையாட்டைத் தொடர்ந்தார். “அவங்க ஒரு வேளை மறுபடியும் சீக்ரெட் ரூம் போயிருக்கலாம்ல’ என்றார். (அது என்ன சிகரெட் ரூமா.. அடிக்கடி போக!). “ஆமாம். அங்க தர்ற பொங்கல், மசால் வடைக்காகப் போயிருந்தாலும் போயிருக்கும்” என்று பாலாஜி சொன்னதற்கு வெடித்துச் சிரித்தார் வைஷ்ணவி. 

பிறகு கேமராவின் முன்னால் வந்தார் வைஷ்ணவி. “இப்போது இவர் உங்களை ஐந்து நிமிடம் கிழித்து எடுப்பார்” என்றார் கமல். “கிளம்பும் போது இப்படிச் செய்யக் கூடாதுதான். ஆனா உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். விரும்புவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று தன் கிழித்தல் புராணத்தை ஆரம்பித்தார் வைஷ்ணவி. 

“மஹத்.. நீங்க ரொம்ப எமோஷனலா இருக்கீங்க. உங்க கூட இருக்கறவங்களால இன்ப்ளூயன்ஸ் ஆயிடறீங்க. யாஷிகா எமோஷனல் கிடையாது. இதனாலேயே உங்களுக்கு ஆபத்து வரலாம். ஜாக்கிரதையா இருங்க” என்றவர், “ஐஸ்வர்யா.. உங்க எதிரியே உங்க கோபம்தான். நீங்களா சில விஷயங்களை கற்பனை பண்ணிக்கிட்டு கத்த ஆரம்பிச்சுடறீங்க. இம்மெச்சூர்னு சொன்னா உங்களுக்குக் கோபம் வருது. ஆனா நீங்க சமயங்கள்ல இம்மெச்சூர்தான்’ என்றதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார் ஐஸ்வர்யா.

அடுத்ததாக, “டேனி.. உங்க டிராக் நல்லாத்தான் போகுது. ஆனா வேற யாரையோ சொல்ற மாதிரி சிலரை கேலி பண்றீங்க. அதனால நான் பலமுறை ஹர்ட் ஆனேன். அது விஷயமா உங்க கூட பேசவந்த போது கூட அலட்சியமா பேசினீங்க. அது மட்டும் பார்த்துக்கங்க” என்றவுடன் புன்னகை செய்தார் டேனி.

‘சென்றாயன்..உங்களுக்கு எதுவுமே புரியலை. “சுத்தம்” என்றவுடன் “என்னைப் பத்தியா திட்டறே… அப்ப நீ போ புள்ள” என்று ஜாலியாகக் கோபப்பட்டார் சென்றாயன். மறுபடியும் வைஷ்ணவி விளக்கம் தர, ‘கமல் சார் சொன்ன மாதிரி சுருக்கமா முடி” என்று சென்றாயன் சொல்ல, “அப்படில்லாம் இல்ல. நான் சொல்லிட்டுத்தான் போவேன்” என்று ஜாலியாக அடம்பிடித்தார் வைஷ்ணவி. “ரித்விகா சொன்ன மாதிரி உங்களுக்குத் திறமை இருக்கு. கொஞ்சம் கவனமா இருந்தா உங்களுக்கே புரியும். சமயத்துல உண்மையாவே உங்களுக்குப் புரியல. சமயத்துல வேணுமின்னே புரியாத மாதிரி நடிக்கறீங்க” என்றார் வைஷ்ணவி. 

“ஜனனி.. டிப்ளமஸி உன்னோட பலவீனமான விஷயம். ஒருத்தர் கஷ்டம்-னு வர்ற போது நீ முன்னாடி வரணும்” என்று அறிவுறுத்திய வைஷ்ணவி, ‘ரித்விகா நீ fair person. நோ்மையா பேசறதா நெனக்கும் போது முழு விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு பேசு” என்று ரித்விகாவை நோக்கிச் சொன்னார். 

“யாஷிகா.. நீ இன்னமும் வெளியே வரணும். “போயிடுவேன்’ற மாதிரி ஸ்டார்ட்டிங்ல சொன்னே. ஆனா சில விஷயங்கள் பிளான் பண்ற மாதிரி இருக்கு” என்று சொன்ன வைஷ்ணவி அதற்காக மும்தாஜ் தொடர்பான விஷயங்களைச் சொல்ல, “அது அப்படி இல்ல:” என்று விளக்கமளித்தார் யாஷிகா. சற்றுமுன்தான் ‘எதையும் முழுசா தெரிஞ்சுக்கிட்டு பேசு” என்று ரித்விகாவுக்கு அளித்த அறிவுரையை தானே மீறினார் வைஷ்ணவி. “ரெண்டு அர்த்தம் இருந்தா உங்களுக்கு வசதியான அர்த்தத்தையே எடுத்துக்கறீங்க” என்று மும்தாஜ் பற்றி சொன்னார். 

சில நினைவுப் பொருள்களை பரிசாக வைத்திருப்பாக வைஷ்ணவி சொன்னவுடன் அவருக்குச் சம்பிரதாயமாக விடை தந்தனர் மக்கள். ‘விட்டா பேசிட்டே இருப்பாங்க. சீக்கிரம் கடையைச் சாத்துங்க” என்றார் சென்றாயன். (அப்படி என்ன கோபம் வைஷ்ணவி மீது?). “கால் கட்டு போடுங்க.. வாய்க்கட்டும் போடுங்க’ என்றார் கூடுதலாக. 

“பொதுவா நான் சின்ன விஷயங்களுக்காக அழ மாட்டேன். ஆனா இங்க நேர்மாறாக நடந்தது. பதினாறு வித்தியாசமான மனிதர்களுடன் பழக முடிந்தது” என்றார் வைஷ்ணவி. வைஷ்ணவியின் தந்தையும் வைஷ்ணவியின் தாயாரும் மேடையற, ‘Walk in to the fame’ என்று வைஷ்ணவிக்கு விடை தந்தார் கமல். (வைஷ்ணவி சமூகவலைதள எதிர்வினைகளை வெளியே வந்து பார்க்கும் போது அது flame ஆகவும் இருக்கலாம்).

வைஷ்ணவியை அம்போவென்று விட்டு விட்டு பிக்பாஸ் வீட்டு மக்கள் தங்களின் பிரச்னைகளுக்குள் ஆழ்ந்தார்கள். யாஷிகாவுடனான கூட்டணி தற்காலிகமாக உடைந்திருப்பதால் அது குறித்த குழப்பத்துடன் மஹத்தும் ஐஸ்வர்யாவும் பேசிக்கொண்டிருந்தனர். “யாஷிகா அவங்க கூட இருக்கற வரைக்கும்தான் அவங்க ஆட்டம். தனியா விட்டுட்டா ஐஸ்வர்யாவால எதுவுமே பண்ண முடியாது” என்றார் பாலாஜி. ‘எப்படியாவது ஃபைனல் வரைக்கும் போகணும்” என்று யாஷிகாவிடம் கூறிக்கொண்டிருந்தார் டேனி. 

“என்னோட பிம்பம் ஐஸ்வர்யா –ன்னு நீங்க சொன்னப்ப நான் defend பண்ணியிருந்தா சில விரும்பத்தகாத விஷயங்கள் வெளியே வந்திருக்கும்” என்று யாஷிகா சொன்னதற்கு ‘அவ உன்னோட ஜெராக்ஸ் காப்பி. நீ பண்ணதையேதான் பண்ணுவா” என்றார் பாலாஜி.  இன்னொரு பக்கம் மஹத்துக்கும் ஐஸ்வர்யாவுக்கும் உபதேசம் தந்தார் பாலாஜி.

“நான் ஏன் நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போனேன்னு எனக்கே புரியலையே?” என்பது போல ‘நான் ஏன் மும்தாஜ் மேல கோபப்பட்டேன்னு தெரியலை” என்று புலம்பிக்கொண்டிருந்தார் மஹத். “உன் கிட்ட ஒருத்தர் எப்படி நடந்துக்கறார் –ன்றதை பொறுத்து அவங்களை ஜட்ஜ் பண்ணு. மத்தவங்களை சொல்றதை கேக்காதே” என்று மஹத்துக்கு உபதேசம் தந்தார் ஜனனி. “மும்தாஜை அப்படிப் பேசிட்டமேன்னு ஃபீல் பண்றான்’ என்று பிறகு ரித்விகாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஜனனி.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

மக்கள் நள்ளிரவைத் தாண்டியும் பேசிக்கொண்டிருந்தனர். வைஷ்ணவி செய்த சில விஷயங்களை கிண்டலடித்துக் கொண்டிருந்தார் பாலாஜி. மஹத், ஐஸ்வர்யா உட்பட ஒவ்வொருவருமே இதுவரையான சம்பவங்களைத் தொகுத்துக்கொண்டு சுயபரிசீலனையில் ஈடுபட வேண்டிய தருணம் இது. குறிப்பாக மஹத் இனிமேல் கட்டுக்கடங்காமல் வரும் கோபத்தை கைவிட்டேயாக வேண்டும். ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று ஆரம்பித்தால் கதவு திறக்கப்பட்டு வெளியே போகவேண்டியதுதான். 

‘ஹலோ பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா.. எப்ப சார் கடையைத் திறப்பீங்க?” என்று அனத்தும் வடிவேலு காமெடி மாதிரி “ஹலோ பிக்பாஸ்… எப்பத்தான் புது போட்டியாளர் வருவார்?” என்று நாம் அனத்த வேண்டியிருக்கிறது. 

புது போட்டியாளர்கள் வருவார்களா என்கிற ஆர்வத்தைக் கடந்து ஒன்று இருக்கிறது. அறுபது நாள்கள் ஆகிவிட்டன. இன்னும் எவ்விதமான சுவாரஸ்ய நிகழ்வுகளை நோக்கி நகராமல், வெறுமனே சிற்சில மொமன்ட்களை மட்டும் வைத்து இழுத்துக்கொண்டு செல்கிறது இந்த சீஸன். ஏன், பிக்பாஸ் அப்படியே 3 வது சீஸன் ஆரம்பிச்சுட்டாத்தான் என்ன ? 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு