Published:Updated:

சினேகனுக்கும் ஜுலிக்கும் முட்டிக்கிச்சு... யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் சேர்ந்தாச்சு! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
சினேகனுக்கும் ஜுலிக்கும் முட்டிக்கிச்சு... யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் சேர்ந்தாச்சு! #BiggBossTamil2
சினேகனுக்கும் ஜுலிக்கும் முட்டிக்கிச்சு... யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் சேர்ந்தாச்சு! #BiggBossTamil2

பிக்பாஸ் டீமில் உள்ள ஒருவர் எவராவது தூக்கக் கலக்கத்தில் நேற்றைய வீடியோவை தவறாகப் போட்டு விட்டால்கூட பார்வையாளர்கள் எவருக்கும் வித்தியாசம் தெரியாது என்கிற அளவுக்கு அனைத்து நாள்களும் ஒரே மாதிரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. காலை எழுந்தவுடன் பாட்டு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல காஃபி, மாலை முழுவதும் வம்பு என்று ஒரே மாதிரியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அதாவது இவை தொடர்பான காட்சிகள்தாம் அதிகம் காண்பிக்கப்படுகிறது. 

இன்று  ஒளிபரப்பான பகுதியில் கூட 63-ம் நாளின் தொடக்க நேரம் படத்தின் ‘பிஸ்தா’ பாடலோடு தொடங்கி, நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றும் ‘பூக்காரம்மா’ மாதிரி அரை முழத்தில் சட்டென்று முடிந்துவிட்டது. சில காட்சிகள் முடிந்தவுடன் பிறகு 64-ம் நாள் ‘சால்ட்டுகோட்டா.. சைதாப்பேட்டை’க்குப் போய் விட்டது. என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. 

இப்படி தினசரி ஒரே மாதிரியான காட்சிகளைக் காண்பிப்பதற்குப் பதிலாக, போட்டியாளர்களின் தனித்திறமைகள், சினிமா அனுபவங்கள், தனிப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் போன்றவற்றைப் பற்றி பேசுவதையோ அல்லது அதையே ஒரு task-ஆக வைப்பதையோ கூட செய்யலாம். பிராண்டுகளுக்கான விளம்பரமாக அல்லாமல், டாஸக்குகளை சுவாரஸ்யமாக வடிவமைக்கலாம்.ஒரே டாஸ்க்கை நாலைந்து நாள் இழுக்கும் அபத்தங்களை நிறுத்தலாம். 

வம்பு, புறணி, சண்டை, வன்மம், கோபம், பழிவாங்குதல் போன்ற எதிர்மறை உணர்வுகளே இந்த நிகழ்ச்சியில் அதிகம் காட்டப்படுவதால் பார்வையாளர்களும் மனதளவில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு. ஒரே நெகட்டிவ் வைப்ரேஷன். இப்போதேல்லாம் அலுவலகத்தில் எவரைப் பார்த்தாலும் ‘இந்த ஆசாமி நமக்கு எதிராக நாமினேட் செய்திருப்பாரோ’ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் அவசர ஆத்திரத்துக்கு நானே காபி போட்டுக்கொண்டிருந்தவன், ‘நீதானே கிச்சன் டீம்? போட்டுக் கொடு” என்று வீம்பாக காத்துக்கொண்டிருக்கிறேன். காபி குடித்த டம்ளரையும் கழுவி வைப்பதில்லை. அதான் வெஸல் வாஷிங் டீம் இருக்கிறதே. “யாஷிகா இண்டஸ்ட்ரிஸ் பேமென்ட் வந்துடுச்சா, அது ராவடியான கம்பெனியாச்சே?” என்று வாடிக்கையாளரின் நிறுவனத்தை அலுவலகத்தில் தவறாகச் சொல்லி பிறகு நாக்கைக் கடித்துக்கொள்கிறேன். கற்பனையாக இருந்தாலும் இப்படியெல்லாம் நடந்துவிடுமோ என்றுகூட பயமாக இருக்கிறது. 

தொழில்நுட்பக் காரணமா அல்லது வேறு ஏதாவதா என்று தெரியவில்லை, பிக்பாஸ் வீட்டு நபர்கள் பேசிக்கொள்வது, சமயங்களில் சரியாகக் கேட்பதில்லை. குறிப்பாக மிக்ஸியில் கூழாங்கல்லை போட்டது சத்தத்துடன் பாலாஜி இழுத்து இழுத்து பேசுவதெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. பொம்மை மூலப்பொருள்களை கைப்பற்றுவதற்காக மஹத்தும் ஐஸ்வர்யாவும் கன்வேயர் பெல்ட்டின் உள்ளேயே தலையைவிட முயன்றதைப் போல, வசனங்கள் கேட்காமல் நான் அவ்வப்போது ஸ்பீக்கரின் நெருக்கத்தில் காதை வைத்து காத்திருப்பதைப் பார்த்து வீட்டில் வேப்பிலை அடிக்க ஆள் சொல்லியிருக்கிறார்கள். பொதுவாழ்க்கைக்காக எத்தனை சோதனைகளைத் தாங்க வேண்டியிருக்கிறது!.

**

பிக்பாஸ் வீட்டில் 63-ம் நாளும் அதற்கு அடுத்த நாளும் என்னதான் நடந்தது?

இரண்டு அணிகளாகப் பிரிந்து, 12 ஆங்கில மாதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் காலண்டர் தயார் செய்ய வேண்டுமாம். டேனி மற்றும் மஹத் தலைமையில் இரண்டு அணிகள் இதற்காகக் கிளம்பின.

வீட்டிலுள்ள சின்னச் சின்ன பொருள்களை வைத்தே வித்தியாசமாக யோசித்து எடுத்து அசத்தினார்கள். மூன்று நிறத்தில் உள்ள துணிகளை வைத்து தேசியக் கொடியை ஆகஸ்ட் மாதத்துக்காக உருவாக்குவதில் இரண்டு அணியும் ஒரே மாதிரியாக யோசித்திருந்தார்கள். ஆனால், டேனி அணி அதை க்ளோசப்பில் எடுத்திருந்தது சிறப்பு. ஐஸ்வர்யாவை குடை பிடிக்க வைத்து, பாலாஜியை குடையின் மேல் தண்ணீர் ஊற்ற வைத்து மழை வருவது போல் செய்து… professional photographer ரேஞ்சுக்கு என்னென்னமோ செய்துகொண்டிருந்தார், டேனி. உழைப்பாளர் தினத்தைக் குறிக்க பாத்ரூமில் உள்ள துடைப்பக்கட்டைகளை எடுத்திருந்தது மஹத் அணி. (கழிவறைப் பணியைப் பொதுவாக எடுக்க விரும்பாத ஜனனி, துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றியெல்லாம் பிறகு விளக்கம் சொல்லி புல்லரிக்க வைத்தார்). ஐஸ்வர்யாவை ஸ்விம் ஸூட்டில் சில புகைப்படங்கள் எடுத்து அசத்தியிருந்தார் டேனி. 

ஒவ்வொரு மாதத்தையும் குறிக்கும் வகையில் இவர்கள் எடுத்த 12 புகைப்படங்களை வைத்து சிறந்த அணியைத் தேர்வு செய்யும் நடுவராக யாஷிகா இருந்தார். சிறப்பான கான்செப்ட்டோடு புகைப்படங்களை எடுத்ததாக மஹத் அணியைத் தேர்வு செய்தார். (நியாயமான தேர்வாகத் தெரியவில்லை). சிறந்த புகைப்படமாக டேனி அணி மே மாதத்துக்காக எடுத்த புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்தார். இதையெல்லாம் கூட சகித்துக்கொள்ளலாம். சிறந்த மாடல் என்று ‘பாலாஜி’யைத் தேர்ந்தெடுத்தது, திருப்பதியில் ‘ஜிலேபி’ பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் என்பதை விடவும் சிறந்த காமெடி. ஐஸ்வர்யாவுடன் ‘டூ’ மோடில் இருந்ததால் வந்த எதிர்வினையோ, என்னமோ. ஐஸ்வர்யாதான் சிறந்த மாடல் லுக்கில் இருந்தார்.

யாஷிகாவை விட்டு பிரிந்திருப்பதால் மஹத் மற்றும் ஐஸ்வர்யா கூட்டணி கலக்கத்தில் இருக்கிறது. தனித்தனியாக புலம்பிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மற்றவர்கள் தனித்தனியாக ஆலோசனைகளும் ஆறுதலும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். “ஏன் இப்படி யாஷிகா மாறிட்டா” என்று அனத்திக்கொண்டிருந்த மஹத்தை இழுத்துக்கொண்டு போய் புகை அறையில் தள்ளி விட்டார் டேனி. உள்ளேயிருந்த யாஷிகாவோடு பேசி ஒரு மாதிரியாக ராசியானார் மஹத். ‘நான் எப்போதும் உங்க இரண்டு பேர்களைப் பற்றியும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். மும்தாஜ் என் மீது செலுத்துவதும் அன்புதான். என் மீது அன்புள்ளவர்களோடு நான் பிரிய மாட்டேன்’ என்பது மாதிரி சொன்னார் யாஷிகா. 

பரிசாக வந்த தின்பண்டங்களைக் கண்டு கோயில் சுண்டல் மாதிரி அடித்துப்பிடித்துக் கொண்டு மக்கள் ஓடிவர, விளக்கை அணைத்து அவர்களின் சந்தோஷத்தில் பிக்பாஸ் மண்ணைப் போட்டதோடு 63-ம் நாள் முடிந்தது. 

**

64-ம் நாளில் நாமினேஷன் சடங்கு தொடங்கியது. ஹிட்லர் நாஜி முகாமில் இருந்த எவரோதான் பிக்பாஸ் டீமிலும் இருக்க வேண்டும் போல. போட்டியாளர்களின் புகைப்படங்களைச் சுக்குநூறாகக் கிழிப்பது, அவர்களின் முகத்தில் அம்பால் குத்துவது ஆகிய டெரரான ஐடியாக்களைத் தொடர்ந்து அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட பானையை உடைப்பதின் மூலம் நாமினேஷன் செய்ய வேண்டுமாம். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டில்’ ஐஸ்வர்யா வன்மத்துடன் அடித்த அடியில் நிஜமாகவே மும்தாஜுக்கு வலித்திருக்கும். 

பாலாஜி மற்றும் சென்றாயன் ஏற்கெனவே நாமினேஷனில் இருந்தார்கள். நாமினேஷன் செய்வதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார் பிக்பாஸ். இரு நபர்கள் கொண்ட அணியை பிக்பாஸ் தீர்மானிப்பார். அவர்கள் இரண்டு பேரும் கார்டன் ஏரியாவுக்குச் சென்று கலந்தாலோசித்து தலா ஒரு பெயரை நாமினேட் செய்ய வேண்டும். 

விளையாட்டு என்கிற நோக்கில் அல்லாமல் தனிப்பட்ட காரணங்கள், பழிவாங்கல்கள் போன்றவற்றிற்காகவே அதிக நாமினேஷன்கள் இருந்தன. இந்த விளையாட்டின் காலம் ஒரு வருடமாக இருந்தால் நிச்சயம் அந்த வீட்டினுள் ஒரு கொலை நடக்கும் போல் அத்தனை வன்மம். மஹத் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு ஏற்படும் கோபத்தைப் பார்த்தால் ஒரு பக்கம் திகைப்பாகவும் இன்னொரு பக்கம் நகைப்பாகவும் இருக்கிறது. மும்தாஜ் மீது இவர்கள் இத்தனை கொலைவெறி கொள்வதற்கான நியாயமான காரணங்கள் தென்படவில்லை. 

அன்பைக் கொண்டு மும்தாஜ் ஏமாற்றுவது உண்மையென்றாலும் கூட அது இந்த விளையாட்டின் ஒரு பகுதி என்கிற அளவில் அவரிடம் ஜாக்கிரதையாக இருந்தால் போயிற்று. ‘நான் மூஞ்சிக்கு நேரா உண்மையைப் பேசிடுவேன்’ என்கிற சாக்கில் மஹத் ஆடும் ஆட்டம் ஓவர். ‘அவ, இவ’ என்றெல்லாம் அவர் மும்தாஜைப் பேசுவது ஏற்க முடியாதது. இந்த வாரமாவது கமல் இதைப் பற்றி கேட்பாரா அல்லது ‘என்ன மஹத்’ என்று கமல் கேட்டதும், ‘சார்….” என்று மஹத் எல்கேஜி பாப்பா மாதிரி தலையைக் குனிந்துகொண்டு சிரித்ததும் விட்டுவிடுவாரா என்று தெரியவில்லை. 

சிலர் பானைகளை நாகரிகத்துடன் மெதுவாக உடைக்க சிலர் ஓங்கி அடிப்பதின் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் மீதுள்ள ஆத்திரத்தைக் கொட்டினர். “வயது 32 ன்னாலும் 12 வயது பையன் மாதிரி நடந்துக்கறார்” என்று மும்தாஜ் மஹத்தை நாமினேட் செய்ய, “மும்தாஜ் 12 வயது இல்லே, 2 வயது பாப்பா மாதிரி நடந்துக்கறாங்க” என்பது போல் சொல்லி ஐஸ்வர்யா, மும்தாஜின் பானையை ‘பொளேர்’ என்று கோபத்துடன் உடைத்தார். அது பார்க்க மிகவும் கேவலமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. மிகவும் கேவலமான போட்டியாளர் யார் என்பதில் மஹத்துக்கும், ஐஷ்வர்யாவுக்கும் தினமும் சண்டையே நடக்கும் போல. 

ஒருவரையொருவர் மண்டையை உடைத்துக்கொள்வது போல் கோபத்துடன் நடந்த நாமினேஷன் வைபவத்தில் தேறியவர்கள் மஹத், ஐஸ்வர்யா, மும்தாஜ். பழிவாங்கப்பட வேண்டும் என்கிற காரணத்துக்காகவே மும்தாஜ் தேர்வானார் என்றால், கோபம் என்கிற காரணத்துக்காக மஹத்தும் ஐஸ்வர்யாவும் எவிக்ஷன் பட்டியலில் வந்தார்கள். 

இந்தப் பட்டியலில் இருந்த எவரையாவது யாஷிகா காப்பாற்றலாம் என்று பிக்பாஸ் அறிவிக்க, சற்று பரபரப்பு ஏற்பட்டது. பழைய நட்பா அல்லது புதிய நட்பா, இரண்டில் எதை யாஷிகா தேர்வு செய்வார் என்று தோன்றிய சுவாரஸ்யத்தை ‘ஐஸ்வர்யாவை’ தேர்வு செய்வதின் மூலம் உடைத்தார் யாஷிகா. நம்பவே முடியாமல் மகிழ்ச்சி எபக்டை கொடுத்தார் ஐஸ்வர்யா. (விதியா அல்லது பிக்பாஸின் மதியா என்று தெரியவில்லை, ஐஸ்வர்யா ஒவ்வொரு முறையும் தப்பித்து விடுகிறார்). 

ஐஸ்வர்யா, யாஷிகாவை பழைய பிரியத்துடன் கட்டிக்கொள்ள பிரிந்திருந்த நட்பு மீண்டும் மலர்ந்தது. நாயகன் திரைப்படத்தில், திருமணம் முடிந்த பிறகு கமலும் சரண்யாவும் கட்டிக்கொள்ள, அவர்களுடன் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும் ஜனகராஜ் போல, மஹத்தும் இவர்களுடன் வந்து ஒட்டி நின்று கொண்டார். பாவம், மும்தாஜ். இதுவரை யாஷிகாவின் ஆதரவாவது இருந்தது. இனி தனியாக நின்று போராட வேண்டும். 

‘அடுத்த வாரம் ஐஸ்வர்யா, யாஷிகாவை காப்பாத்துவா” என்று கிசுகிசுவென குரலில் ரித்விகா மும்தாஜிடம் கூறியது உண்மையாயிற்று. ‘சேதுண்ணே.. இந்த மெட்ராஸை நம்ம கன்ட்ரோல்ல கொண்டு வர்றோம்’ என்கிற ‘காக்க காக்க’ பாண்டியா மாதிரி ‘ரெண்டு பேரும் ஒண்ணா இருந்து எதிர்கொள்வோம்’ என்று ஐஸ்வர்யாவிடம் கூறினார் யாஷிகா. 

‘அப்பாடி நம்ம தப்பிச்சிட்டோம்’ என்று டேனியும் ஜனனியும் பேசிக்கொள்ள, ‘மாஸா பண்ண. வேற வெவல்’ என்று ‘பானை உடைத்த பாக்கியசாலியான’ ஐஸ்வர்யாவை இன்னமும் வெறி ஏற்றிக்கொண்டிருந்தார் மஹத். துர்கா பூஜை, பத்ரகாளி பூஜையாக பிரமோஷன் பெற்று விடும் போலிருக்கிறது. “டேனி, என்னைத்தான் நாமினேட் பண்ணுவார். இல்லைன்னா என் பெயரை மாத்திக்கறேன்” என்று ஜனனி உறுதியாகச் சொன்னது உண்மையாயிற்று. டேனி அப்படித்தான் செய்தார். ‘கண்ணுக்கினியாள்’ என்று ஜனனியின் பெயர் மாற்றப்படவிருந்த வரலாற்றுச் சம்பவம் டேனியால் நிகழாமல் போயிற்று. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

அடுத்ததாக கிரிக்கெட் போட்டி என்கிற டாஸ்க். இதற்காக ‘டக்வொர்த் லூயிஸ்’ முறையை விட அதிக சிக்கலான விதிகளை பதினைந்து நிமிடத்துக்கு வாசித்துக் கொண்டிருந்தார் டேனி. ஆக்டிவிட்டி ஏரியா சிறியது என்பதால் தெரு கிரிக்கெட்டை விடவும் நகைச்சுவையான விதிகள். ‘வக்கீல் அங்கிள் வீட்டு கதவுல பட்டா ஃபோர், மாமி வீட்டு கண்ணாடி உடைஞ்சா அவுட்’ என்று தெரு கிரிக்கெட்டில் விதிகள் இருப்பது போல் இங்கும் சில விநோதமான விதிமுறைகள். ரன் ஓடுவதற்குப் பதிலாக பேட்டைச் சுற்ற வேண்டுமாம். 

கிரிக்கெட் ஆட்டத்திலும் மஹத்துக்கும் நடுவராக இருந்த மும்தாஜுக்கும் முட்டிக் கொண்டது. மஹத் சொன்ன தவறான ரன் எண்ணிக்கையை மும்தாஜ் திருத்திய போது இருவருக்குள்ளும் மோதல். ஆட்டக்காரராக இருந்த ஜனனியே, மூன்று ரன்கள் எனும் போது பார்வையாளர் பகுதியில் இருந்த மஹத், ‘நான்கு’ என்று அடம்பிடித்தார். மஞ்சள் அணி 20 ரன்கள் எடுத்திருக்க, பச்சை அணி 9 ரன்கள் எடுத்து கேவலமாக தோற்றது. 

“மும்தாஜ் இதுவரைக்கும் கூட அமைதியா இருந்தாங்க. இப்ப பதிலுக்கு வாய்ஸை உயர்த்த ஆரம்பிச்சிருக்காங்க, கவனிச்சீங்களா?” என்று பாலாஜி குறிப்பிட்டார். “ஏண்டா.. இப்படியெல்லாம் பண்றே?” என்று மஹத்துக்கு ஆலோசனை தர முயன்றார் ஜனனி. “இனிமேதான் இருக்கு கச்சேரியே” என்று மஹத் சூளுரை ஏற்றதோடு இன்றைய நாள் முடிந்து தொலைந்தது. 

**

பிக்பாஸ் சீஸன் 2 இப்படி மொக்கையாகப் போய்க்கொண்டிருப்பதால் சீஸன் ஒன்றில் இதே நாளில் என்னவெல்லாம் முக்கியமாக நடந்தது என்பதை தினமும் ரீவைண்டு செய்து பார்த்தாவது ஆறுதல் அடைவோம். 

கடந்த சீஸனின் 64-வது நாளில் ரைசா வெளியேற்றப்பட்டிருப்பதை அறிகிறோம். பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் முடிந்த சரித்திர நாள். மிக முக்கியமாக ஆர்த்தியும் ஜூலியும் ரீஎண்ட்ரியாக இன்று நுழைந்திருக்கிறார்கள். எனவே, இழந்திருந்த கலகலப்பை வீடு பெற்றது. புலியாக இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த காஜல், பூனையாக மாறி வெளியேறிய ரைசாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். பாசத் தங்கச்சி ஜூலியிடம் பழைய ‘நட்பை’ பேண முடியாமல் விலகியிருக்கிறார் சிநேகன். ஒருவரின் முகத்தில் வண்ணப் பொடியை பூசுவதின் மூலம் நாமினேஷன் முறை நடந்திருக்கிறது. 

டைட்டில்ல எதுக்குடா சினேகன்-ஜுலினு கேக்குறீங்களா... என்ன பண்ணச் சொல்றீங்க..? சீஸன் 2ல விசேஷமா எதுனா நடக்குற வரை good old memories-னு பழசை நினைச்சுப் பார்த்துக்கிவோம்!

பேசாமல் சீனியர் ஜூலியையாவது சீஸன் -2 வுக்கு அழைத்து வரலாம். இத்தனை மொக்கை இனியும் தாங்காது.