Published:Updated:

`ஒரு கத சொல்லட்டா சார்!' - `வேதா' சென்றாயன் - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா

தார்மிக் லீ

பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா

`ஒரு கத சொல்லட்டா சார்!' - `வேதா' சென்றாயன் - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா
`ஒரு கத சொல்லட்டா சார்!' - `வேதா' சென்றாயன் - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா

டாஸ்க் என்ற பெயரில் ரம்பமாய் அறுத்துக்கொண்டிருக்கிறார், பிக் பாஸ். `ஜென்டில்மேன்' படத்தில் செந்தில் அறிமுகம் செய்து வைத்த, கப்லிங், டிக்கிலோனா விளையாட்டே இதற்குப் பரவாயில்லை. அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட், போட்டோகிராஃபி பரிதாபங்களுக்குப் பிறகு மிட்நைட்  மற்றும் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது?!

* கிச்சன் ஏரியாவில் டேனி சப்பாத்தி மாவோடு மல்யுத்தம் செய்துகொண்டிருந்தார். ரித்விகா, மும்தாஜ், டேனியல் ஏதோ ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்க, நடுவே கடுமையான சத்தத்துடன் சைரன் ஒலித்தது. சில நாள்களுக்கு முன்னால், வீட்டில் இருப்பவர்கள் யாராவது ஆங்கிலம் பேசினால் இதுபோல் சைரன் அடிக்கும் அல்லவா... பிக் பாஸ், எந்த டாஸ்க்கும் இல்லாத காரணத்தினால், மீண்டும் இதையே லான்ச் செய்துவிட்டார் போல. இல்லை அப்போது அடித்த சைரன், இப்போதுதான் ஒலிக்கிறதா என்பது தெரியவில்லை. பிறகு ஜனனியும், ஐஸ்வர்யாவும் இவர்களோடு கைகோத்து சமையலுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள். ஜனனி, `தக்காளிய நசுக்கிப் பார்த்து வாங்கணும்' என்பதுபோல் தக்காளிகளோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தார். ஐஸ்வர்யா புதினாக்களை ஆய்ந்துகொண்டிருந்தார். சென்றாயன் இந்த இருவரிடமும் ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்தார். 

* பின்னர் ஒரு மணி நேரம் சமையல் வேலைகள் மட்டும்தான் நடந்தது. ஐஸ்வர்யா, யாஷிகா, சென்றாயன், ஜனனி போன்றவர்கள் இங்கே வந்துதான் சமையல் கற்றுக்கொள்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கூடிய சீக்கிரம் உலக லெவல் செஃப் ஆக வாழ்த்துகள் தோழர்களே. இதைத் தொடர்ந்து மார்னிங் மசாலா ஒளிபரப்பானது. எல்லோரும் குஷியாக எழ, மும்தாஜ் வீக் டேஸ் வந்துவிட்டதால், `வீக்' மோடுக்குப் போய்விட்டார்போல. மிகவும் சோர்வோடு எழுந்தவர், இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டே வேலைகளைத் தொடங்கினார். பின்னர், பால் பொங்கும்போது அதை எப்படி கன்ட்ரோல் செய்வது என டேனியல், ஜனனிக்குச் சில விஞ்ஞானத்துக்குச் சவால்விடும் அறிவுரைகளைக் கூறிக்கொண்டிருந்தார். 

* பிறகு, சென்றாயன் டேனியலை நரி என்று கலாய்க்க, பதிலுக்கு அவர் இவரை ஆமை என்று கலாய்க்க... ஒரே கூத்தாக இருந்தது. தொடர்ந்து, சென்றாயன் `ஒரு கத சொல்லட்டா சார்' என்று `வேதா' மோடுக்கு மாறி, `ஒரு நரி செம பசியா இருந்துச்சாம். அப்போ அந்தப் பக்கம் தெனாலிராமன் வந்திருக்கார். அவரைப் பார்த்ததும் `நல்லா சாப்பாடு சிக்கிடுச்சுனு' நரி நினைச்சிருக்கு. தெனாலிராமன் நரியைப் பார்க்கும்போது, இதோடு தோலை வித்து காசாக்கிடலாம்னு ஒரு பிளானைப் போட்டிருக்கார். இப்படி நினைச்சுக்கிட்டே இருக்கும்போது, நரிக்கு வெறி பிடிச்சு தெனாலிராமனைத் துரத்த ஆரம்பிச்சிடுச்சு. தூரத்துல ஒரு ரூம் இருந்துச்சு. தெனாலிராமன், உள்ளேபோய் கதவைச் சாத்திக்கிட்டார். கதவுல இருக்கிற ஒரு ஓட்டை வழியா நரி, அதோட வாலை விட்டிருக்கு. தெனாலிராமன் அங்கிருக்கிற வெளக்கமாறு குச்சியை எடுத்து நரியைக் குத்தியே ஓடவிட்டிருக்கார்' என்று கதையைச் சொல்லி முடித்துக்கொண்டார். இதை இட்லினு சொன்னா சட்னிகூட நம்பாது சென்றாயன்!

* டேனியல், பாத்ரூமுக்கு அருகே இருந்த பென்ஞ்சில் உட்கார்ந்து, `என் கண்ணு வேணும்னு கேட்டியாமே' என்பதுபோல் கண்ணைப் பிதுக்கி, நீண்டநேரம் அவரிடம் அவரே பேசிக்கொண்டிருந்தார். `இப்போ நாம கரெக்டான ரூட்லதான் போறோமா. இந்த கேமை சரியாதான் விளையாடுறோமா. எனக்கு எதுவும் புரியலையே. நம்ம ஏன் இப்படி இருக்கோம்..!' என்று தன்னைத் தானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். இவரைத் தொடர்ந்து, கேமரா சென்றாயனின் பக்கம் திரும்பியது. அவரும் தனியாக உட்கார்ந்து, மண்டை முடியைச் சுருட்டிக்கொண்டே ஏதோ பிதற்றிக்கொண்டிருந்தார். ஒருவேளை இது டாஸ்க்கா இல்லை உண்மையிலேயே இருவரும் முக்தி நிலையை அடைந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. `ஆத்தாடி பைத்தியமா இவங்க... ரொம்ப நேரம் நல்லா பேசிக்கிட்டு இருந்தானுங்களே' என்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது. 

ஆகமொத்தம், ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடுமே வறண்ட பாலைவனமாக மாறி, அனைவரும் தனித்தனியே எதை எதையோ செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்வது ஒருபக்கம் கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல குபீர் சிரிப்பை ஏற்படுத்தினாலும், இன்னொருபக்கம் பாவமாகவும் இருக்கிறது. இன்னும் என்னென்ன நடக்கவிருக்கிறதோ. பொறுத்திருந்து பார்ப்போம்!