Published:Updated:

"யெஸ் யாஷிகாவையும் காதலிக்கிறேன்!" ஒப்புக் கொண்ட மஹத் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
"யெஸ் யாஷிகாவையும் காதலிக்கிறேன்!" ஒப்புக் கொண்ட மஹத் #BiggBossTamil2
"யெஸ் யாஷிகாவையும் காதலிக்கிறேன்!" ஒப்புக் கொண்ட மஹத் #BiggBossTamil2

பாலைவனத்தில் பெய்த மழை மாதிரி, இன்று பிக்பாஸ் வீட்டில் மூன்று பரபரப்பான சம்பவங்கள் நடந்தது ஆறுதலாக இருந்தது. அவை என்னவென்பதை விரிவாக பார்த்துவிடுவோம். 

முதல் சம்பவம்: மும்தாஜ் காலையில் நடனம் ஆடியது. ஆம். இது ‘சம்பவமே’தான். ஒருவர் நடனமாடியதில் என்ன ஆச்சரியம் என்று சிலருக்குத் தோன்றலாம். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து காலையில் வெளியே வந்து மும்தாஜ் நடனமாடியது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். நடிகர் பிரபு, பிரபுதேவா மாதிரி திடீரென்று ஆடினால் எப்படியிருக்கும்? எனவே மக்கள் ஆச்சரியப்பட்டதில் அதிசயமில்லை. சினிமா நடிகை என்கிற நோக்கில் மும்தாஜ் ஒரு டான்சர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆனால் ‘சென்னையில் மழையா?” என்று ஆச்சரியமான செய்தியைக் கேட்பது, பார்ப்பதுபோல் பிக்பாஸ் வீட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘டான்ஸ் ஆடினீங்களாமே?” என்று சென்றாயன், மும்தாஜை பிறகு ஆச்சரியமாக விசாரித்துக்கொண்டிருந்தார். உண்மையோ அல்லது பொய்யோ, தன்னுடைய உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பல சலுகைகளை எடுத்துக்கொள்வது மும்தாஜின் வழக்கம். மிக குறிப்பாக, ‘காலையில் என்னால் உணவு சமைக்க முடியாது’ என்பது அதில் முக்கியமானது. ‘மூட்டுக்கள் இறுகிவிடும். விரல்களை அசைக்க முடியாது’ என்று பொதுவாக அனத்திக கொண்டிருப்பார். அப்படிப்பட்ட மும்தாஜ் காலையில் நடனமாடியது பலருக்கு ஆச்சரியம். 

இப்போதைய சூழ்நிலையில் மும்தாஜ் முன்வந்து நடனமாடியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மஹத்தின் அதீதமான அவமரியாதையாலும் ‘பேபி... பேபி...”என்று செல்லம் பாராட்டிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, இப்போது நஞ்சைக் கக்குவதாலும் ஏற்பட்ட உளைச்சலில் தனிமைப்பட்டிருக்கிறார். பொதுவாகவே மனஉறுதி கொண்ட மும்தாஜ், இந்த மனநிலையில் இருந்து வெளியே வருவதற்காகவும், தன்னை உற்சாகப்படுத்திக்கொள்வதற்காகவும் நடனமாடியிருக்கலாம். ‘நான் சோர்ந்து போகவில்லை’ என்பதை எதிரிகளுக்குச் சொல்லும் செய்தியாகவும் இருக்கலாம். அந்தச் சமயத்தில் அவரது ஆரோக்கியமும் ஒத்துழைத்திருக்கலாம். அவ்வளவுதான். இது பெரிய விஷயமில்லை. ஆனால் சின்ன விஷயத்தையே பெரியதாக்கும் பிக்பாஸ் வீடு இதை விட்டு விடுமா என்ன?

“அவங்க நம்மள  மாதிரியே செய்யப் பார்க்குறாங்க” என்று யாஷிகா கும்பல் புறணி பேசிக்கொண்டிருந்தது. ‘அப்பப்போ கூப்பிட்டு வெச்சு பேசறாங்க” என்று ஜனனி சொன்னபோது, “முதல் வாரங்கள்ல நம்மகளுக்கு பிரச்னை ஏற்படும்போது அவங்க கூப்பிட்டு ஆறுதல் தந்தாங்கள்ல… இப்போ அவங்களுக்கு பிரச்னை வரும்போது நாம போறதுதான் சரியானது” என்று ரித்விகா சுட்டிக்காட்டியது சிறப்பு. ரித்விகாவின் நல்லியல்புகள் பல சமயங்களில் பிரமிக்க வைக்கின்றன. 

ஆனால் மும்தாஜின் மீது கொலைவெறியில் இருக்கும் மஹத் இதை நல்ல சந்தர்ப்பமாக உபயோகித்துக்கொள்வார் என்று எண்ணியது பொய்யாகவில்லை. ‘சீனைப் போடுது பாரு’ என்பதுபோல் ‘பேட்டரி மாத்தி தர்றீங்களா, விரல் வலிக்குது” மும்தாஜைப் போலவே பேசி கிண்டலடித்துக்கொண்டிருந்தார்கள். மற்றவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

நாளுக்கு நாள் மும்தாஜின் மீதான இவரது சீண்டல்கள் நாகரிக எல்லையும் மீறி அதிகமாகிக்கொண்டே போகின்றன. ‘நேருக்கு நேர்’ என்கிற பஞ்சாயத்தில், மஹத் தொடர்பாக மும்தாஜ் வாக்குமூலம் அளித்துக்கொண்டிருக்கும்போது, காறித்துப்புவது போன்றதொரு சத்தத்தை மஹத் செய்தது மிகவும் அநாகரிகமானது. இந்த வாரத்தில் மஹத் வெளியேற்றப்படுவது அவசியம் என்கிற சூழலை மஹத்தே உருவாக்கிக்கொண்டிருக்கிறார். 

மஹத் மற்றும் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜ் மீது இத்தனை கோபம் வருவதற்கான காரணம் என்னவென்றே இன்னுமும் புரியவில்லை. நமக்கு காட்டப்படாத காட்சிகளில் ஏதேனும் இருக்குமா என்கிற மெல்லிய சந்தேகம் எழாமல் இல்லை. மஹத்தின் குற்றச்சாட்டின்படி, ‘தன்னை பெஸ்ட் பெர்ஃபாமர் ஆக மும்தாஜ் கருதிக்கொண்டாலும் சரி அல்லது சொல்லியிருந்தாலும் சரி, அது நியாயமானதே. ‘எதிர் டீம்ல பாருங்க, ஜாலியா இருந்தாங்க. நீங்க என்னடான்னா பணப்பெட்டில கோடி ரூபா இருந்த மாதிரி அதை கட்டிப்பிடிச்சிக்கிட்டே தூங்கினீங்க” என்று மும்தாஜை சென்றாயன் கிண்டலடித்தது ஒரு பக்கம் நகைச்சுவைதான் என்றாலும் அந்த அளவிற்கான அர்ப்பணிப்பை மும்தாஜ் தந்திருக்கிறார் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது. தவறு செய்யும் மஹத்தை தொடர்ந்து எச்சரித்தது, அணிதுரோகம் செய்யும் அவருடன் மல்லுக்கட்டியது, டாஸ்க்கில் கண்டிப்பாக இருந்தது போன்வற்றை நாம் பார்த்தோம். 

“அறுபது மணி நேரம் தூங்காம இருந்தேன், ரத்தம் சிந்தினேன்’ என்று மஹத் தொடர்ந்து அனத்தினாலும், அணியை சிறப்பாக நடத்தியது மும்தாஜ்தான். ‘மஹத் பிறகு பிரச்னை செய்யலாம் என்கிற யூகத்தின் அடிப்படையில் ‘ஒழிஞ்சு போ’ என்று அவருக்கு பெஸ்ட் பெர்ஃபாமரை கூடிப்பேசி தந்திருக்கலாம். இதற்குப் பிறகும் மஹத் ஏழரையைக் கூட்டுவது நியாயமே அல்ல. 

தங்களுக்கும் யாஷிகாவிற்கும் நடுவில் மும்தாஜ் வருவதுதான் மஹத்திற்கும் ஐஸ்வர்யாவிற்கும் பெரிய பிரச்னை போல! இவர்கள் வெளியே சென்று தங்களின் காவிய நட்பை தொடர்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் ஆட்டத்தில் இருக்கும்போது எதிர் தரப்பின் உத்தியை சாமர்த்தியமாக முறியடிப்பதுதான் ஒரு நல்ல ஆட்டக்காரருக்கு அழகு. கோபத்தில் கூவுவதும், சிறுபிள்ளை போல ஒழுங்கு காட்டுவதும் ரசிக்கத்தக்கதாக இல்லை.

மஹத் செய்யும் ஒழுங்கீனம் குறித்து சென்றாயனிடம் மும்தாஜ் பிறகு சொல்லிக்கொண்டிருந்தது முக்கியமானது. தனக்குப் பிடிக்காத போட்டியாளரைக்கூட இழுத்து வைத்து பேசும் அளவிற்கு மும்தாஜின் தனிமை அமைந்தது பரிதாபம்தான். “இந்த வாரம் யாரு போவான்னு நெனக்கறீங்க?” என்று நிருபர் போல ஆரம்பித்த சென்றாயனிடம், ‘மஹத்தான் போகணும். லேடீஸ்கிட்ட எப்படி பேசணும்னு மேனர்ஸ் கிடையாது. படிக்காத நீங்களேகூட பரவாயில்ல. படிச்ச அவன் மோசமா நடந்துக்கறான். ‘த்தூங்கிறான்... நீயெல்லாம் பொம்பளையாங்கிறான்’. மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருப்பாங்க. இதையும் மீறி மக்கள் அவனைக் காப்பாத்தினாங்கன்னா என்ன சொல்றது. அவன் இருந்தா நான் போயிடுவேன்.” என்று மும்தாஜ் வருத்தப்பட்டதில் நியாயம் இருந்தது. 

தான் நடனமாடியது வீட்டில் புயலைக் கிளப்பும் என்பதை மும்தாஜ் யூகித்திருப்பார். எனவேதான் ‘தன் உடல் ஆரோக்கியம் சற்று தேவலை’ என்பதுபோல் டேனியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “என்கிட்ட சொன்னா மெசேஜ் பாஸ் ஆவும்-னு நெனச்சி சொல்றாங்க போலிருக்கு. எது உண்மைன்னே புரியலையே” என்று டேனி தனிமையில் அனத்திக்கொண்டிருந்தார். அவருடைய தலைமுடிக்கும் தாடிக்கும் அந்த அனத்தல் பொருத்தமாக இருந்தது. ஆனால் அவர் மைக்கை சரியாக இழுத்து வைத்து பேசியதில் இருந்து ‘அவரும் இந்த உலகத்திற்கு ஏதோ சொல்ல வருகிறார்’ என்பது நன்றாகவே புரிந்தது. 

‘எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்” என்று மும்தாஜ் எல்லாப் பிரச்னைகளையும் கடவுள் மீது இறக்கி வைக்கிறார். ‘ஆண்டவன் என்ன முடிவு பண்றான்னோ, அதான் நடக்கும்’ என்று மஹத்தும் அடிக்கடி சொல்கிறார். எந்தக் கடவுள் என்ன முடிவு எடுக்கிறாரோ, நமக்குத் தெரியாது, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் என்கிற கடவுள் எடுக்கும் முடிவுதான் இப்போது முக்கியமானது. 

**

இரண்டாவது சம்பவம்: மஹத் – யாஷிகா காதல். கமலுக்கு முன்பாக, மஹத் மீதான தன் காதலை துணிச்சலாக சபையில் போட்டு உடைத்துவிட்டார் யாஷிகா. ஆனால் மஹத் இன்னுமும் ‘அது நட்பிற்கும் மேலே’ என்று மழுப்பிக்கொண்டிருக்கிறார். அதை எப்படியாவது கக்கவைத்துவிட வேண்டும் என்று பிக்பாஸ் முடிவு செய்து விட்டார் போல. 

வீட்டில் இரண்டாவது முறையாக தலைவியாகி இருக்கும் யாஷிகாவிற்கு ஒரு சிறப்புச் சலுகை தந்தார். அதன்படி சபையைக் கூட்டி மற்றவர்களினால் தனக்கு என்னவெல்லாம் பிரச்னை வந்தது என்பதை புகார் எழுப்பி அவர்களின் பதில்களைக் கேட்டு வாங்கலாம் என்றொரு பகுதியை ‘நேருக்கு நேர்’ என்ற பெயரில் உருவாக்கினார். 

மற்றவர்களின் மீதான புகார்கள் எல்லாம் அத்தனை முக்கியமில்லை. பஞ்சாயத்து எதற்காக கூட்டப்பட்டதோ அதை மட்டும் பார்ப்போம். மொழி வன்மை இல்லாவிடினும், தன்னுடைய பிரச்னை என்ன என்பதை துல்லியமாக வெளிப்படுத்தும் யாஷிகாவின் அறிவுத்திறமை வியக்க வேண்டியிருக்கிறது. 

குற்றம் சாட்டப்பட்டவர் கூண்டில் மஹத் வந்து நின்றதும், தன் சரவெடி உரையாடலைத் துவங்கினார், யாஷிகா. “நீங்கதான் முதல்ல இருந்து உங்களோட ஃபீலிங்க்ஸை என்கிட்ட சொல்லிட்டு இருந்தீங்க.  நான் சொல்லலை. ஒரு கட்டத்துல உங்க பாசத்தைப் பார்த்ததும் நானும் விழுந்தேன். ஆனா நீங்க மத்தவங்க பேச்சைக் கேட்டுட்டு சமயங்கள்ல என்கூட பேசாம இருந்தீங்க. எனக்கு ஆதரவா நிற்க வேண்டிய சமயங்களில் நிற்கவில்லை. ‘நான் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாதவள்’ என்கிற அடிப்படையில் அப்பவும் உங்ககிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தேன். ஆனா உள்ளுக்குள் காயப்பட்டேன். என்கிட்ட ஒரு மாதிரி பேசறீங்க. மத்தவங்க கிட்ட ஒருமாதிரி பேசறீங்க. “யாஷிகாவுடனான நட்பு அதற்கும் மேலானதா?”ன்னு ஒரு கேள்வி வந்தப்போ, இந்த வீட்ல இருக்கற எல்லோருமே ‘யெஸ்’-ன்னு அட்டையைக் காட்டினாங்க. நீங்க மட்டும் ‘நோ’ –ன்னு சொன்னீங்க அப்புறமா எனக்கு மட்டும் ‘யெஸ்’ன்னு சொன்னீங்க. காதலிக்கிற விஷயத்தில் நான் உண்மையா நின்னேன். நீங்க நிக்கலை” என்று பெரிய புகாரை முன்வைத்தார், யாஷிகா.

‘ஆண்டவா’ என்று வேண்டிக்கொண்டே தன் பதிலைச் சொல்ல ஆரம்பித்தார். யாஷிகாவின் நேர்த்தியான புகாரைப்போல இவருடைய பதிலும் நேர்மையாக இருந்தது. “கமல் சார் சீரியஸா கேட்கும்போது ‘ஆமா சார். எனக்கும் ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு ஒப்புக்கொண்டேன். ஆனா வெளியே ஒரு உயிர் எனக்காக காத்திருக்குன்னும் சொல்லிட்டேன். இந்த வீட்டுக்குள்ள நாம சேர்ந்து வாழற சூழ்நிலை அமைஞ்சிருக்கு. அதனால காதல் உணர்ச்சி வர்றது இயல்பு. இது சரியா தப்பான்னு எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா வந்துடுச்சி. ஆனா இதை மத்தவங்க எப்படி பார்ப்பாங்களோன்னு சமயங்கள்ல தற்காப்பு மனநிலைக்குப் போயிட்டேன். உங்க மேல எனக்கும் லவ் இருக்கு. இதை மத்தவங்க புரிஞ்சுக்கறது கஷ்டம்” என்றார். 

“இது உங்க இருவருக்கும் உள்ள பிரச்னை. பார்த்து கையாளுங்கள்’ என்கிற ஐஸ்வர்யாவின் அபிப்ராயமும் முதிர்ச்சியானது. ‘வெளிலயும் ஒண்ணு.. உள்ளயும் ஒண்ணுன்னா.. எது உண்மை?” என்று கேட்ட பாலாஜியின் கேள்வி பொதுசமூகத்தின் பிரதிபலிப்புதான். 

இது சற்று சிக்கலான விஷயம். ஒரே சமயத்தில் இருவர் மீது காதல் உருவாகுமா என்றால் உருவாகும். அதுதான் இயற்கை. ஆண்கள்கூட இதை சற்று வெளிப்படையாக பேசும் சூழ்நிலை இருக்கிறது. ஆனால் பெண்கள் மூச்சுகூட விட முடியாது. ஒரே வீட்டினுள் வலுக்கட்டாயமாக வசிக்க நேரும்போது இப்படி உருவாவதற்கான சாத்தியம் அதிகம். இதைக் கடக்க அதிக மனவுறுதி வேண்டும். துரதிர்ஷ்டமாக அப்படி இருப்பவர்கள் மிகக் குறைவு. கலாசார காவலர்களும் பொதுப்புத்தி உள்ளவர்களும் நிச்சயம் இதை எதிர்ப்பார்கள். ஆனால் அவர்களுமே இப்படியொரு அனுபவத்தில் விழுந்தோ அல்லது விழாமலோ கடந்திருக்கலாம். ஆனால் வெளியில் மூச்சுவிட மாட்டார்கள். ‘நாலு பேர் என்ன நினைப்பாங்க’ என்கிற காரணத்திற்காகவே நம்முடைய சுயத்தை நிறைய இழக்கிறோம். 

ஐஸ்வர்யா குறிப்பிட்டதைப் போல இது சம்பந்தப்பட்ட நாலு பேருக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயம். மஹத்தும் யாஷிகாவும் குறிப்பிட்டது போல ‘இது வற்புறுத்தப்பட்டோ, கட்டாயத்தினாலோ உருவானதல்ல. பரஸ்பரம் இருவரின் சம்மதமும் இருக்கிறது’. இதில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இருப்பதுதான் நல்லது. 

மூன்றாவது சம்பவம்: பிக்பாஸ் விருது விழா. ‘ஆஸ்கர்’ முதல் “ஆண்டிப்பட்டி எட்டாம் வார்டு அவார்டு’ வரை விருது என்றாலே சர்ச்சையில்லாமல் இருக்குமா? பிக்பாஸ் விருது விழாவிலும் அது நிகழ்ந்தது. 

‘நரி தந்திரமானது, கழுதை முட்டாள்’ என்பது போல மனிதர்களின் குணாதிசயங்களை விலங்குகளின் மீது ஏற்றி கதை சொல்வது, அதை இளம் மனங்களில் பதிய வைப்பது போன்ற அபத்தம் இருக்க முடியாது. இயற்கையில் படைக்கப்பட்டவாறுதான் விலங்குகள் இன்றும் இயங்குகின்றன. ஆறாம் அறிவு மனிதனுக்கு மட்டும் உள்ளது என்பது முக்கியமான வேறுபாடு. ஆனால் அறிவால் உயர்ந்த மனிதன்தான், பல சமயங்களில் மற்ற உயிரினங்களை விடவும் கேவலமாக நடந்துகொண்டிருக்கிறான் என்பது நடைமுறை உண்மை. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

எந்த விஷயத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமாக நடந்து கொள்வதால், ‘கழுதை’ என்கிற விருதை ஐஸ்வர்யாவிற்குத் தர மும்தாஜ் தேர்ந்தெடுத்த போது ‘பெரிய முட்டாளிடம் சிறிய முட்டாள் விருது பெறுகிறது’ என்று ஒழுங்கு காட்டி விட்டுச் சென்றார் ஐஸ்வர்யா. ‘மந்தமாக இருக்கிறார்’ என்கிற காரணத்தையொட்டி சென்றாயனுக்கு ‘ஆமை’ என்கிற விருதை டேனி தரும் போது ‘முயல் ஆமை’ கதையைச் சுட்டிக் காட்டி அந்த விஷயத்தை பாசிட்டிவ் ஆக்கியது டேனியின் சிறப்பு. ‘நரி’ என்கிற விருது டேனியலுக்கு பொருத்தமானது. சென்றாயன் சொன்னது போல இது டேனியின் திறமையைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 

‘அன்பைக் காட்டி ஏமாற்றுபவர், கண்டுபிடிக்க முடியாதவாறு சாமர்த்தியமாக கோள் மூட்டி சண்டை போட வைப்பவர், மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சுபவர் போன்ற காரணங்களால் பாம்பு, எலி, அட்டைப்பூச்சி ஆகிய விருதுகள் மும்தாஜிற்கு கிடைத்தன. இதற்கான விளக்கம் தந்த பிறகு புன்னகையுடன் அவற்றை ஏற்றுக் கொண்டார் மும்தாஜ். ‘Best performer’ என்று மும்தாஜ் தன்னை சொல்லிக் கொண்டாரா இல்லையா என்கிற பஞ்சாயத்தும் அப்போது நடந்தது. 

‘முதலைக்கண்ணீர் வடிக்கிறார்’ என்கிற நோக்கில் ‘முதலை’ என்கிற விருதை ஏற்க மறுத்தார் ஜனனி. ஆனால் டாஸ்க்கை முடிக்காமல் பிக்பாஸ் அடம் பிடிக்கவே, வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். ஒரு விருதை மறுக்க சம்பந்தப்பட்டவருக்கான உரிமையைக் கூட தராமல் இருப்பது அராஜகம். சரி, பிக்பாஸின் பல அராஜகங்களில் இதுவும் ஒன்று என்று போக வேண்டியதுதான். (கடந்த சீஸனில் ‘சோம்பேறி’ என்பது போல் தனக்கு தரப்பட்ட விருதை ஓவியா ஏற்கவில்லை என்பதும் பிக்பாஸ் அதை ஆட்சேபிக்கவில்லை என்றும் நினைவு). 

பல சமயங்களில் மும்தாஜை அவமதித்தும், இடையூறு செய்தும், மலினமாக கிண்டல் செய்வதின் மூலம் தான் ஒரு அடிமுட்டாள் என்பதை மஹத்தே நிறுவிக் கொள்கிறார். அவருடைய கையாலாகாத கோபமும் பெரிய பலவீனம். பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய நபர்களுள் முதலாவதாக மஹத்தும், இரண்டாவதாக ஐஸ்வர்யாவும் இருக்கின்றனர். 

**

சரி, கடந்த சீஸனில் இதே 65-வது நாளில் என்னென்ன விஷயங்கள் நடந்தன என்பதை சில வரிகளில் பார்ப்போம். 

ஒரு டாஸ்க்கில் ஜெயித்த அணி NRI போலவும் தோற்ற அணி அவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டிய அடிமைகளாகவும் நடந்து கொண்டனர். NRI அணியின் அனுமதியைப் பெற்றுதான் கழிவறைக்கு கூட செல்ல வேண்டும் என்பது போன்ற அராஜகமான விதிகள். இந்த மிகையான கட்டுப்பாடுகளை சிநேகன் ஆட்சேபித்தார். ஹரீஷை, பிந்துமாதவி உப்புமூட்டை போல் முதுகில் சுமந்து சென்ற வரலாற்றுச் சம்பவம் நடந்தது. NRI பந்தாவில் ஆரத்தியின் ஆட்டம் ஓவராக இருந்தது.