Published:Updated:

மும்தாஜை மஹத் இப்படியெல்லாம் சீண்டக்கூடாது பிக்பாஸ்... இது வன்மம்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
மும்தாஜை மஹத் இப்படியெல்லாம் சீண்டக்கூடாது பிக்பாஸ்... இது வன்மம்! #BiggBossTamil2
மும்தாஜை மஹத் இப்படியெல்லாம் சீண்டக்கூடாது பிக்பாஸ்... இது வன்மம்! #BiggBossTamil2

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத்தின் அலப்பறைகளைப் பார்த்து எனக்கு சிறிது கோபம் வந்தது. ஆனால் இது சற்று நேரம்தான். பின்பு வழக்கம்போல் என் சமநிலையுணர்விற்கு திரும்பிவிட்டேன். இனி எக்காரணம் கொண்டும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து சிறிது கூட உணர்ச்சிவசப்படக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். 

உதாரணத்திற்கு ஒரேயோரு விஷயத்தைப் பார்ப்போம். பாலாஜியின் தலையில் ஐஸ்வர்யா குப்பைக் கொட்டின நிகழ்ச்சியன்று, இதைப் பார்த்தவர்களில் பெரும்பாலோனோர் ஆத்திரவசப்பட்டிருப்பார்கள். சமூகவலைத்தள பின்னூட்டங்கள் உணர்ச்சிகளாலும் வசைகளாலும் பொங்கி வழிந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள்! சம்பந்தப்பட்ட இருவருமே ராசியாகிவிட்டார்கள். ‘ஏன் என் மேல சரியா குப்பை கொட்டவில்லை?” என்று பாலாஜி, ஐஸ்வர்யாவிடம் விளையாடிக்கொண்டிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் ‘தண்ணி வேணுமா, குப்பை வேணுமா?” என்று பாலாஜியை ரித்விகா கிண்டலடிக்கிறார். அதை பாலாஜியும் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார். 

அவ்வளவுதான். தீர்ந்தது விஷயம். இதற்காக நாம் முன்னர் அத்தனை உணர்ச்சிவசப்பட்டது எத்தனை கேலிக்கூத்தாகிவிட்டது பார்த்தீர்களா? சமகாலத்தில் பிரம்மாண்டமாக தெரியும் பெரும்பாலான பிரச்னைகள், காலம் நகர்ந்து செல்லும்போது அற்பமாகிவிடும் என்கிற தொலைநோக்குப் பார்வையும் நிதானமும் நமக்கு வேண்டும். நகைச்சுவையின் மூலம் எந்தவொரு கசப்பையும் கடந்து செல்ல முடியும் என்பது நகைச்சுவையின் பலம்.  அதற்காக சமூகத்தில் நிகழும் அநீதிகளையும் ஆதாரமான பிரச்னைகளையும் கண்டு சும்மா இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. உடனே உணர்ச்சிவசப்படாமல் பகுத்தறிவோடு நிதானமாக செயல்படுவது நல்லது. 

. இந்த டாஸ்க் தலைகீழாகும்போது அல்லது கமலின் நையாண்டியான வார்த்தைகளுக்குப் பிறகு மஹத் வெளியேற்றப்படும்போது ‘அப்பாடா.. சூப்பரு!” என்று பார்வையாளர்கள் ஆசுவாசமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். நிகழ்ச்சியும் அமோகமாக வெற்றி பெறும். 

ஆனால், யதார்த்தத்தில் இப்படியான சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்களா,  எளிய மக்கள் துயரத்தைச் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம். செயற்கையான நெருக்கடிகளை உருவாக்கி, கற்பனையான தீர்வுகளை அளிப்பதன் மூலம் இது போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன என்கிற அடிப்படையை நாம் புரிந்துகொண்டால் அதிகம் உணர்ச்சிவசப்படத் தோன்றாது. 

**

இன்றைய நிகழ்ச்சியில் சூப்பர் ஹீரோ  மற்றும் சூப்பர் வில்லன் என்று இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. போட்டியாளர்கள் தாங்களாக அணி பிரித்துக்கொள்வதைத் தவிர, பிக்பாஸ்ஸே அணி பிரிப்பதிலும் சூட்சுமம் உள்ளது டேனியும் மஹத்தும் பெரும்பாலான சமயங்களில் எதிரெதிர் அணியில் வைக்கப்படுவதில் உள்ள காரண, காரியத்தைப் பார்க்க வேண்டும். இருவரும் நிச்சயம் மோதிக்கொள்வார்கள் என்பது பிக்பாஸின் கணக்கு. மும்தாஜையும் ஐஸ்வர்யாவையும் இன்று ஒரே அணியில் கோர்த்து விட்டதும் அதே வில்லங்கமான ஐடியாதான். 

அமரேந்திர பாகுபலியாக டேனியும், ராஜமாதாவாக மும்தாஜூம், நயன்தாராவாக யாஷிகாவும், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரிஷாவாக ஐஸ்வர்யாவும், எந்திரனாக பாலாஜியும் ஒப்பனை அணிந்திருந்தார்கள். (பாவம் ஷங்கரும், ராஜமெளலியும்!, எத்தனை கோடி செலவு செஞ்சு எடுத்தார்கள்!).

ஹெலனா என்கிற மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பாராம். தரப்பட்டிருக்கும் ஐந்து மேக்னடிக் சாவிகளைக்கொண்டு ஹீரோக்கள் அணி அவரைக் காப்பாற்ற வேண்டும். இவர்களைத் தடுப்பதுதானே வில்லன்களின் வேலை? எனவே வில்லன்களின் தடையையும் மீறி இதை ஹீரோக்கள் செய்ய வேண்டும். டாஸ்க் பஸ்ஸர் அடிக்கும் போதுதான் இதை அவர்கள் செய்ய வேண்டும். எனவே போட்டியாளர்கள் அன்னம், தண்ணிகூட இல்லாமல் ஆப்பிளைக் கடித்துக்கொண்டு ஹெலனா பக்கத்திலேயே குத்த வைத்திருந்து அமர்ந்திருந்தார்கள்.  மஹத்தின் அராஜகத்தையும் மீறி டேனி அணி மூன்று சாவிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது சிறப்பானது. 

இன்று மஹத்துடைய அராஜகத்தின் அளவு கூடிக் கொண்டே போனது. ‘டாஸ்க்கில் தொந்தரவு செய்யலாம்’ என்கிற விதியை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அந்த எல்லையையும் தாண்டி மும்தாஜை அநாகரிகமாக கிண்டலடித்துக்கொண்டேயிருந்தார். “ஆளும் மண்டையும்”, “மூஞ்சியைப் பாரு”, “யானைக்குட்டி”, “ஒண்ணு ஆம்பளை மாதிரி நடக்குது, இன்னொன்னு பொம்பளை மாதிரி நடக்குது” என்பதெல்லாம் அவர் உதிர்த்த திருவாக்கியங்களின் சில உதாரணங்கள். 

மஹத்தின் கிறுக்குத்தனங்களை மும்தாஜ் மிகத் திறமையாக எதிர்கொண்டார். பிக்பாஸிடமும் கடவுளிடமும் தன்னை ஒப்படைத்துக்கொண்டு உணர்ச்சிவயப்படாமல் இருந்தார். பாத்திரங்களின் சத்தம்கொண்டு மஹத் எரிச்சல்படுத்த முயன்றபோது நடனமாடுவதின் மூலம் எதிரணியின் முகத்தில் கரியைப் பூசலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போது, மும்தாஜ் அது போலவே செய்தது பாராட்டத்தக்கது. டேனியும் தன் வழக்கப்படி பெரும்பாலான சமயங்களில் நிதானப் போக்கை கடைப்பிடித்தார் என்றாலும் மஹத் தரும் எரிச்சலால் அவர் சற்று கோபமடையும் போது மும்தாஜ் அவரை ஆற்றுப்படுத்தினார். 

எதிரணியை எரிச்சல்பட வைப்பதற்காக மஹத்திற்கு சுயபுத்திகூட இல்லை. ‘முட்டையை ஊற்றலாம், பாத்திரங்களை வைத்து ஒலியெழுப்பலாம்’ என்று ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் தந்த ஐடியாக்களை செயல்படுத்திக்கொண்டிருந்தார். எடுப்பார் கைப்பிள்ளை என்பதற்கு மஹத் ஒரு சிறந்த உதாரணம். 

‘ஹீரோக்கள்’ அணியில் இருந்துகொண்டு வில்லனுக்கு உதவிய ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் வரலாறு மன்னிக்காது. இவர்களை ஹீரோக்களாக அல்ல, காமெடியன்களாகத்தான் பார்க்க முடியும்.  ‘மஹத்தை ஆக்டிவ்வாக மாற்றுவதற்காகத்தான் இப்படி செய்கிறோம்’ என்கிற யாஷிகாவின் சால்ஜாப்பு அபத்தமானது. 

மும்தாஜின் புடவையில் தண்ணீரை ஊற்றுவது, டேனியின் மேல் முட்டையை ஊற்றுவது, தரப்பட்டிருக்கும் எல்லையைத் தாண்டி மற்ற போட்டியாளர்களை வெறுப்பேற்றுவதுபோன்ற மஹத்தின் செய்கைகளைப் பார்க்கும்போது கோபத்தைவிடவும் பரிதாபமே வருகிறது. அவருக்கு உடனடித் தேவை உளவியல் ஆலோசனை அல்லது சிகிச்சை என்று யூகிக்கத் தோன்றுகிறது. 

யாஷிகாவுடனான காதல் விவகாரம் தொடர்பான குழப்பம், ஒரு வழியாக கடைசியில் இதை பொதுவில் ஒப்புக்கொண்டது, வெளியில் தன் பெண் தோழி இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்கிற கலக்கம், இது சார்ந்த குற்றவுணர்வு, கவனித்துக்கொண்டிருக்கும் பொதுசமூகம் தன்னை எவ்வாறு மதிப்பிடுகிறது என்கிற பதட்டம், அறுபது நாட்களையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சூழலில் அடைக்கப்பட்டிருக்கும் உளப்பாதிப்பு ஆகியவற்றின் எதிர்வினைகளாகத்தான் மகத்தின் அத்துமீறிய செய்கைகளைப் பார்கக முடிகிறது. ‘நானா உடல் சார்ந்த வன்முறையில் ஈடுபட்டேன்?” என்று காமிராவின் முன்பு வந்து அவர் வாக்குமூலம் தருவதும் புலம்புவதும் அவருடைய குற்றவுணர்வின் பிரதிபலிப்பு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

டேனியின் மீது அவர் அடிக்கப் பாய்ந்தது இன்றைய அத்துமீறல்களின் உச்சம் எனலாம். இளம் வயதில் தனக்கு நிகழ்ந்த விபத்து காரணமாக, ‘அவன் எங்க என் மூஞ்சை உடைச்சுடப் போறானோன்னு பயந்தேன்’ என்று சபையில் ஒப்புக் கொண்டது டேனியின் வெளிப்படைத்தனம் என்றாலும் கூட அதை அவர் செய்திருக்கக்கூடாதோ என்று இப்போது தோன்கிறது. இவருடைய பலவீனத்தை அறிந்து கொண்ட மஹத், தன் உடல்பலத்தையும் திமிரையும் கூடுதலாக காட்டுவதற்கு அந்த வாக்குமூலமும் ஒரு காரணமாக இருக்கலாம். 

எதிரணியின் துணிகளைக் கலைத்துப் போடுவது, சமையல் பகுதியில் உள்ள பொருட்களை வெளியே போடுவது, மெலிதாக கிண்டல் செய்வது போன்ற செயல்களைத் தாண்டி ஜனனியும், ரித்விகாவும் ஓய்ந்துவிட்டார்கள். மஹத்தைப் போன்று எல்லை தாண்டிய தீவிரவாதத்தை செய்ய அவர்கள் முனையவில்லை என்பதின் மூலம் அவர்கள் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே உடைபட்ட தனது கால், சென்றாயனால் மிதிபட்ட போதும் ஐஸ்வர்யா அதை இயல்பாக எடுத்துக்கொண்டது நன்று. 

ஒரு கட்டத்திற்கு மேல் பாலாஜியால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டேனியின் மீது மஹத் செய்யும் வன்முறையைக் கண்டு பொரும ஆரம்பித்துவிட்டார். ‘வேற யார் மேலயோ இருக்கிற கோபத்தை என் கிட்ட காட்டாத” என்று சென்றாயன், பாலாஜியிடம் வெடித்ததும் இதனால்தான் என்று தோன்றுகிறது. ‘கேமைவிட மனுஷன்தான் எனக்கு முக்கியம்’ என்று பாலாஜி ஓரிடத்தில் சொன்னது திருவாக்கியம். ‘கோபம் இருக்கிற இடத்தில்தான் குணமிருக்கும்’ என்கிற பொதுவான நம்பிக்கை உண்மைதான் போல. 

பாத்திரங்களை கழுவிக்கொண்டே, டேனியிடம் மும்தாஜ் இன்று நிகழ்த்திய உரையாடல் மிக முக்கியமானது. ‘மஹத்தோட ரியல் கேரக்டர் இப்படி இருக்கும்னு நெனச்சுக்கூட பார்க்கலை. எந்தக் காரணமும் இல்லாம இப்படி புண்படுத்தறது சரியா? ஐஸ்வர்யா திரும்பி வந்தாகூட எனக்கு வேணாம். அந்த அளவிற்கு அவங்க என்னைப் புண்படுத்தியிருக்காங்க. என் மனசு உடைஞ்சுடுச்சு. நான் மன்னிச்சுடுவேன். ஆனா மறக்க மாட்டேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்கு எவ்வளவோ மதிப்பும் வரவேற்பும் கொடுத்திருக்காங்க. இதையும் அவங்க பார்த்திட்டுதான் இருப்பாங்க. இந்த ரெண்டு பேருக்காக பயந்து நான் வெளியே போக மாட்டேன். அந்த அளவிற்கு அவங்க வொர்த்தே கிடையாது’ என்றெல்லாம் மும்தாஜ் பேசிக்கொண்டிருந்தது அவருடைய முதிர்ச்சியைக் காட்டுவது மட்டுமின்றி, இந்த விளையாட்டை அவர் கவனத்தோடு விளையாடிக்கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது. ‘மும்தாஜ் மட்டும்தான் கேரக்டர்ல இருந்து வெளியே வரலை’ என்று ஜனனி சொல்லிக்கொண்டிருந்தது உண்மைதான். மஹத்தின் அட்டூழியங்களை மிக பக்குவமாக எதிர்கொண்டார், மும்தாஜ். ‘காலம் ஒருநாள் மாறும்’ என்கிற நேர்மறையான நம்பிக்கை அவருக்கு இருப்பது சிறப்பு. 

மேக்னிடிக் சாவியைப் பொருத்துவதற்கு இடையூறாக நிற்கும் மஹத் கூட்டணியுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்தான் டேனி கூட்டணி எதிர்வினையாக உடல்வன்முறையைப் பயன்படுத்தியதே ஒழிய, மஹத்தைப் போல் தாமாக முன்வந்து எதையும் நிகழ்த்தவில்லை. எனவே குற்றவுணர்ச்சியோடு, ‘எனக்கும் அடிபட்டுடுச்சு.. என் மேலயே பழிபோடறாங்க” என்றலெ்லாம் மஹத் கூப்பாடு போடுவது முறையானதல்ல. 

ஓவர் டைம் செய்து இந்த வார பஞ்சாயத்து நாட்களை நடத்தும் பொறுப்பும் கடமையும் நாட்டாமையான கமலுக்கு இருக்கிறது. மென்மையான போக்கைக் கைவிட்டு அழுத்தமான சொற்களாலும் நடவடிக்கையாலும் மஹத்தின் அராஜகங்கங்களை அவர் கண்டிக்க வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் நிகழ்ச்சியை கொண்டு செல்ல வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார் என்றாலும்கூட பொதுமனநிலையின் எண்ணங்களையும் கோபங்களையும் பிரதபலிக்க வேண்டிய கடமையும் அவருக்கு ஒருபுறம் இருக்கிறது. இந்தப் புரிதலோடு இந்த வார பஞ்சாயத்தை அவர் கையாள்வார் என்று நம்புவோம். 

**

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இதே 65-வது நாளில் முதல் சீஸனில் என்ன நடந்தது?  ஒரு டாஸ்க்கில் ஜெயித்தனின் காரணமாக ‘NRI’ அணி, தோற்ற அணியிடம் பல அலப்பறைகளைச் செய்து கொண்டிருந்தது. இவற்றில் ஆரத்தியின் ஆட்டம் ஓவராக இருந்தது. ஜூலியின் முந்தையை தவறுகளை ஆரத்தி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தார். 

ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை தலைகீழானது. NRI அணிக்கு தரப்பட்ட அதிகாரம், ‘மதுரை’ அணிக்கு தரப்பட்டது. அதுவரை டொங்கலாக இருந்த வையாபுரி, நாட்டாமையாக நிமிர்ந்து அமர்ந்துகொண்டார். தான் செய்த வதைகளை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு ஆரத்தி அணி மாறியது. 

சீஸன் இரண்டிலும் நிலைமை இப்படி மாறும். மஹத்தைப் போலவே அராஜகம் செய்து பழிவாங்காமல் அவரை மன்னிப்பதுதான் மஹத்திற்கு தரும் பெரிய தண்டனையாக இருக்கும்.