Published:Updated:

"மும்பை பிக்பாஸ் போல இருக்கக்கூடாது தமிழ்நாட்டு பிக்பாஸ்!" - பொறிந்து தள்ளிய கமல் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
"மும்பை பிக்பாஸ் போல இருக்கக்கூடாது தமிழ்நாட்டு பிக்பாஸ்!" - பொறிந்து தள்ளிய கமல் #BiggBossTamil2
"மும்பை பிக்பாஸ் போல இருக்கக்கூடாது தமிழ்நாட்டு பிக்பாஸ்!" - பொறிந்து தள்ளிய கமல் #BiggBossTamil2

மும்தாஜின் நீண்ட பொறுமைக்கு கிடைத்த பரிசாக இன்றைய பஞ்சாயத்து நாளைக் குறிப்பிடலாம். கமல் சொன்னதுபோல் ‘டாஸ்க் செய்ய முடியாது’ என்று முன்பு அழிச்சாட்டியமாக  மைக்கை கழற்றி வைத்த மும்தாஜ், இன்று இடம் வலமாக மாறிவிட்டார். பெரிய கோடு வந்ததும் சிறிய கோடு தன் மதிப்பை கணிசமாக இழப்பதுபோல, மஹத் மற்றும் ஐஸ்வர்யாவின் கோபத்துக்கு முன்னால் மும்தாஜின் பொறுமை அவரை கூடுதல் நல்லவராக இன்று நிறுத்திவிட்டது. இதனால் தராசு அவர் பக்கம் இயல்பாக சாய்ந்துவிட்டது. 

ஆனால் மும்தாஜின் பொறுமைக்குக் கிடைத்த அதே பரிசு டேனிக்கு கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிக்பாஸின் கேமராவும் கமலின் பஞ்சாயத்தும் வார இறுதியில் தனக்கு  நீதி சொல்லும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு மஹத்தின் அட்டூழியங்களை தாங்கிக்கொண்டிருந்தார், டேனி. ‘இரண்டு நிமிஷம்தான் பேசுவேன். அதுக்கு மேல பேச மாட்டேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். தனக்கான வாய்ப்பு கிடைத்ததும் அதைப் பட்டியலிடவும் செய்தார். ஆனால் சற்று ஓவராக பொங்கிவிட்டாரோ என்று தோன்றியது. ‘பாலியல் வல்லுறவு’ போன்ற பெரிய பாறாங்கல் வார்த்தைகளை அவர் உபயோகித்ததும் மஹத்தே அதிர்ச்சியடைந்துவிட்டார் (இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?!). தான் சொன்ன வார்த்தையின் பொருள் அறிந்துதான் டேனி சொன்னாரா? பாலியல் சீண்டல் என்பதைத்தான் அப்படி சொல்லிவிட்டாரோ? ‘பாகுபலி’ உடையில் இருந்த டேனியின் பின்பக்கத்தை தட்டுவதன் மூலம் மும்தாஜிற்கும் அதை உணர்த்த முயன்ற மஹத்தின் ஒரு கேவலமான காரியத்தைத்தான் சொல்லவந்தாரா என்று தெரியவி்ல்லை. 

‘இங்க அடிச்சிட்டான் சார்” என்று தன் வயிற்றை டேனி காட்டியபோது ‘என்னாச்சு தொப்புளை சுத்தி ஊசி போட்டாங்களா’ என்று கமல் கேட்டது அக்மார்க் நையாண்டி. சாமர்த்தியமாக செருகப்பட்ட இந்தக் குண்டூசி மஹத்தின் மூளைக்கு உறைத்தால் இனி அவர் எந்நாளும் முண்டாவை முறுக்கிக்கொண்டு சேட்டையில் இறங்கமாட்டார். ஆனால் ஒருவர் அத்தனை உணர்ச்சிகரமாக புகார் வைத்துக்கொண்டிருக்கும் போது சர்காஸ்டிக்காக கமல் கிண்டலடிப்பதும் முறையாக தென்படவில்லை. ‘என் உடல் சார்ந்த பிரச்னைகள் தெரிந்தும் மஹத் முரட்டுத்தனமாக கையாண்டார்’ என்று அவர் சொல்வது, குறும்புத்தனங்கள் அல்லாத கரிசனத்தோடு அணுகப்பட வேண்டியது. 

“டேனிங்கிற உத்தமரைக் குத்திட்டீங்களாமே” என்று அந்தச் சமயத்திலும் கமல் குத்திக் காண்பித்தது நெருடல். ஒருவரின் குற்றம் கேமராவில் துல்லியமாக பதிவாகியிருந்தாலும்கூட, வாதி, பிரதிவாதி ஆகிய இருவரையும் விசாரித்து, அவர்களின் தரப்பை நிதானமாக கேட்டு பிறகு தீர்ப்பளிப்பதே உண்மையான நீதி விசாரணை. அதுவரை அடக்கி வைத்திருந்த மனத்தாங்கல்களை வெளியில் கொட்டினாலாவது ஆசுவாசம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு போதிய வாய்ப்பு தராமல் ‘நாங்க பார்த்துட்டுதான் இருக்கோம்’ என்று அமர வைப்பது முறையானதல்ல. “நீங்க அடிபட்டதை திரும்பத் திரும்ப காண்பிச்சாக்கூட மக்கள் பக்கோடா சாப்பிட போயிடுவாங்க’ என்பதன் மூலம் பார்வையாளர்களையும் கமல் ஒருவகையில் அவமதிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி பார்வையாளர்கள் அலட்சியமாக  திரும்பி அமர்ந்திருந்தால் ‘தவறு செய்தவர்களை தண்டியுங்கள்’ என்கிற ஆவேசக்கூச்சலும் அறச்சீற்றமும் வந்திருக்குமா?

பெரும்பாலான பஞ்சாயத்துக்களில் பெண்களின் பக்கம் அதிகம் சாயும் தராசு, ஆண்களுக்கு மீதும் அதே கரிசனத்தோடு சாய்கிறதா? ‘சரி, எழுந்து துடைச்சுட்டு போ’ என்று இடதுகையால் அலட்சியத்துடன் கையாள்கிறது. டேனியின் பஞ்சாயத்தில் நடந்ததும் அதுதானோ என்று தோன்றுகிறது.  மும்தாஜின் குரல் ஒலித்த அளவுக்கு டேனிக்கு வாய்ப்பு தரப்படவில்லை. மும்தாஜிற்காக போடப்பட்ட குறும்படத்தில்கூட, டேனியை நோக்கி ஆவேசமாக வந்து துணியால் அடித்த மஹத்தின் காட்சி இல்லை. 

‘மெனு கொடுத்திட்டீங்கள்ல சமைச்சுடறேன்’ என்று ஆவேசமாக கிளம்பிய கமலின் நளபாகத்தில் உப்பு, உறைப்பு எல்லாம் சற்று தூக்கலாகவே இருந்தது. அதே சமயம் நையாண்டி, வார்த்தை ஜாலம் போன்ற தொடுவுணவுகளின் சுவை அபாரம். 

**

உடனே சிலுவையில் அறையுமளவிற்கு மஹத் கொடூரமான குற்றவாளியல்ல. அவருடைய வயதிற்கே உரிய பக்குவமின்மையோடு நிறைய பிழைகளைச் செய்தார். ‘எங்களின் எச்சரிக்கையையும் மீறி அவன் தப்பு செய்தது உண்மைதான். ஆனால் அவன் அடிப்படையில் நல்லவன். அந்தப் பக்கத்தை அவன் காண்பிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளவில்லை.’ என்று சமநிலையுடன் ஒலித்த ரித்விகா மற்றும் ஜனனியின் குரல் சரியானதாக இருந்தது. இதை புதிதாக வந்த விஜயலட்சுமியும் ஆமோதித்தார்.

பாலாஜியுடன் முன்பு சண்டையிட்ட பிறகு மனம் வருந்தி அவருடைய காலை தலையில் தொட்டு அழுது மன்னிப்பு கேட்ட மஹத், அதே ஆத்மார்த்தமான மன்னிப்பை மும்தாஜிடமும் டேனியிடமும் டாஸ்க் முடிந்த பிறகு கேட்டிருக்கலாம் அல்லது சம்பிரதாயத்திற்காக அல்லாமல் உள்ளபடியே மனம் வருந்தி இந்தச் சபையில்கூட அவர் அதைச் செய்திருந்தால்கூட அவருடைய பிம்பம் பெரிதும் சேதம் ஆகாமல் இருந்திருக்கும். தண்டிக்கச் சொல்லும் அதே மக்கள் மன்னிப்பை வழங்கவும் தயாராக இருப்பார்கள். “ஆமாம். தவறு செஞ்சிட்டேன், திருத்திக்கறேன், என்ன இப்போ.’ என்கிற அளவில் அவர் நிறுத்திக்கொண்டதிலிருந்து ‘தான் செய்தது நியாயம்’ என்று இன்னுமும் நம்பிக்கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

ரித்விகா குறிப்பிட்டதுபோல் தான் செய்த பிழைகளை உணராத அளவிற்கு காதல் மஹத்தின் கண்ணை மறைத்து விட்டதா? இதை நடைமுறையிலும்கூட காணலாம். பைக்கின் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்திருக்கும் போதுதான் இளைஞர்களுக்கு சாகசக் கலையைக் காட்டும் ஆர்வம் அதிகம் வந்துவிடும். இல்லாத அறச்சீற்றம் எல்லாம் அப்போது வரும். மஹத்தும் அப்படியொரு உந்தப்பட்ட பலியாடு போல தோற்றமளிக்கிறார். 

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் உருவாக்கப்படவில்லை. அவர்கள் தாங்கள் செய்த தவறை சாவகாசமாக உணர்ந்து சுயபரிசீலனையோடு மனம் திருந்தும் இடமாக அவை அமைய வேண்டும் என்கிற நோக்கில் அமைக்கப்பட்டிருக்கின்றன. (ஆனால் குற்றவாளிகளையும் நிரபராதிகளையும் மேலதிக குற்றவாளிகளாக உருவாக்கும் ஊழல் அமைப்புகளாக சிறைச்சாலைகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது வேறு விஷயம்). கமல் அத்தனை எடுத்துச் சொல்லியும் ‘இன்னமும் 30 நாள் இருக்குல்ல, சார். பார்த்துக்கலாம்’ என்று அரியர்ஸ் பேப்பர் வைத்திருக்கும் மாணவனின் அலட்சியத்தோடு மஹத் சொல்வது திகைப்பாக இருக்கிறது. பிக்பாஸில் ஜெயிப்பதல்ல, ஒரு நல்ல குடிமகனாக சமூகத்திலும் ஜெயிப்பதுதான் உண்மையான சவால். 

டாஸ்க்கின் போது ஏற்படும் தள்ளுமுள்ளுக்களைகூட ஒரு மாதிரியாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது முடிந்த பிறகும்கூட தன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு மஹத் வந்ததும், அதை இன்னுமும் உணராமலிருப்பதும் நிச்சயம் முறையானதல்ல. ‘பொம்பளை’ன்னுல்லாம் சொல்லல” என்று சாதித்த மஹத், குறும்படத்தில் அது நிரூபிக்கப்பட்ட பிறகுகூட தன் தவறை உணர்ந்த தோரணையைக் காட்டவில்லை. அசட்டுத்தனமாக சிரிப்பதின் மூலம் அத்தனையையும் மழுப்பி எரிச்சலைக் கிளப்பும் முகபாவத்தைத்தான் காட்டிக்கொண்டிருந்தார். தன்னுடைய முன்னாள் பிம்பமாக மஹத்தைப் பார்த்து குற்றவுணர்ச்சி அடையும் பாலாஜியின் கண்ணீரில் மஹத்திற்கான செய்தி இருக்கிறது. 

மஹத், ஐஸ்வர்யா போன்ற spoiled child-களை திருத்துவதுகூட சற்று எளிதானது. ஆனால் மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடி அவர்களை ஆயுதமாக பயன்படுத்தும் தந்திரக்காரர்களை திருத்துவது அத்தனை சுலபமானதல்ல. ஒருவகையில் மும்தாஜ், யாஷிகா போன்றோர் அந்த விளையாட்டைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களும் முழுக்க கெட்டவர்களும் அல்ல. ‘எத்தனையோ அன்பு கொடுத்தேன். பதிலுக்கு வெறுப்பை கக்குகிறார்கள்’ என்கிற மும்தாஜின் மனத்தாங்கலும் புரிந்துகொள்ளப்பட வேண்டியது. 

பஞ்சாயத்தின் சுமை அத்தனையையும் தானே சுமக்காமல், அதை பார்வையாளர்களுக்கும் புதிய போட்டியாளரான விஜயலட்சுமிக்கும் மடைமாற்றிவிட்டது கமலின் சாமர்த்தியங்களுள் ஒன்று. இந்த நிகழ்ச்சியை ‘கொஞ்சம் கொஞ்சமே பார்த்த’ விஜயலட்சுமி, அதை வைத்துக்கொண்டு  மிகவும் ஸ்ட்ராங்கான அபிப்ராயங்களை கூறியது வியப்பு. ‘யாஷிகா’வை ‘நெகட்டிவ் காரெக்ட்டர்’ என்றும் பாலாஜி ‘ரொம்ப ஃபேக்’ என்றெல்லாம் அவரால் எப்படி தீர்ப்பு சொல்ல முடிகிறதோ?

**

நிகழ்ச்சி துவங்கியதும் ‘இதோ சமைச்சு எடுத்துட்டு வர்றேன்’ என்று போனவரை நீண்ட நேரம் காணவில்லை. ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே’ என்கிற பாடல் மாதிரி, உணர்ச்சி வெள்ளத்தில் பஞ்சாயத்து நாளுக்காக காத்துக் கொண்டிருந்த பார்வையாளர்களை சாவகாசமாக அமர்த்தி வைத்து பிராண்டுகளை சாமர்த்தியமாக செருகும் நிகழ்ச்சிகளை பிக்பாஸ் ஒளிபரப்பினார்.

இன்னொரு சமையல் போட்டி. ‘எண்ணெய் அதிகம் இல்லாத  பதார்த்தங்கள்’ என்னும் நோக்கில் மஹத் அணியை பாரபட்சமில்லாமல் தேர்ந்தெடுத்தார் ‘நடுவர்’ ஐஸ்வர்யா. ‘மரப்போம், மன்னிப்போம்’ என்று எழுதப்பட்ட பலூனை பறக்கவிட்டார் ஜனனி. 

அடுத்தது ஃபேஷன் ஷோ. மும்தாஜ் குறிப்பிட்ட படி தொழில்முறை போட்டியாளர் போல செயல்பட்டு அசத்தினார் யாஷிகா. ஃபேஷன் ஷோக்களில் ‘Show stopper’ என்பது மிகப் பெரிய அங்கீகாரம். பார்வையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றவருக்கே இது கிடைக்கும். இந்த அங்கீகாரம் சென்றாயனுக்கு கிடைத்தது சிறப்பு. சிரிப்பை வரவழைக்கும் தோரணைகளுடன் கம்பீரமாக அவர் மேடையில் நடந்தது சுவாரஸ்யமானது. 

வேறென்ன, பிக்பாஸ் என்னும் மைக்ரோ வடிவத்தில் கிடைக்கும் பாடங்களை, வாழ்க்கை என்னும் பெரிய வடிவத்திற்கும் நீட்டிப்பதே இந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் நேரத்தின் மீதான நிகர லாபம். போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது பொருந்தும். ‘இவன் தப்பு  செஞ்சிட்டான்’ என்று ஒவ்வொருவராக கைநீட்டி ஆவேசப்படும் அதே நேரத்தில், சம்பந்தப்பட்டவரின் தவறுகளில் நம்முடைய பிம்பமும் கலந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்து திருத்திக் கொள்வதே இந்த நிகழ்ச்சியின் மீதான சரியான நுகர்வாகவும் பார்வையுமாகவும் இருக்கும். 

‘ரித்விகா, ஐஷ்வர்யா சொல்வது போல் நிகழ்ச்சியின் பல சமயங்களில் மஹத் என்பவர் யாஷிகா, ஐஷ்வர்யா ஆட்டுவிக்கும் ஒரு கருவி போலத்தான் செயல்படுகிறார். மஹத்தை ' தாளித்த ' கமல்,   கூடவே இருக்கும் கூட்டாளிகளான யாஷிகா, ஐஷ்வர்யாவையும் விட்டுவைக்கவில்லை. ' நானும் பொன்னம்பலமும் ஒரே விஷயத்தைப் பேசுவதாக நினைக்காதீர்கள். மும்பை பிக்பாஸில் நடப்பது போன்ற நிகழ்வுகள் இங்கு என் தமிழ்நாட்டின் பிக்பாஸில் நடக்கக்கூடாது என்பது தான் என் நிலைப்பாடு ' என்றார் கமல்.  இங்க இருந்து மஹத் எதைக் கொண்டு போவார்னு நினைக்கறீங்க பாலாஜி எனக் கமல் கேட்டதற்கு, எதுவும் யோசிக்காமல், " கெட்ட பேர மட்டும் தான் கொண்டு போவான்"னு தோணுது என்றார் . அரங்கம் நிறைந்த கைத்தட்டல்களாவது மஹத்துக்கு எதையாவது உணர்த்தியிருக்கலாம். 'காதல்' மஹத் எதையும் ஏற்கும் நிலையில் இல்லை. 

எப்பப்பாரு ஸ்கூல் பையன் மாதிரி புகார் சொல்லிக்கொண்டிருந்த டேனியை ஒருபக்கம் அடக்கி வைத்தாலும், மும்தாஜின் அதீத பொறுமையையும் பாராட்டினார் கமல். "மும்தாஜ் மாதிரியான வயசுல பெரியவங்கள மட்டுமல்ல, ரோட்டுல நீங்க நடந்து போறப்ப, சின்ன பொண்ணக்கூட இப்படி எல்லாம் நீங்க கெட்ட வார்த்தைல பேச முடியாது மஹத்" என மஹத்தின் மலினமான வசவுகள் பக்கம் திரும்பினார். 

" போன சீசன்லயும் சண்டை, சச்சரவு எல்லாம் உண்டு, ஏன் மருத்துவ முத்தம் கூட உண்டு " என சொல்லிவிட்டு, கமல் அமைதி காக்க மறுபடியும் கிளாப்ஸ் . "ஆனால், இந்த டீம் போல IQ கம்மியா இருக்குற யாரையும் நான் பார்த்ததே இல்லை" , என கமல் டாப் கியர் போட்டு ஸ்பீடு ஏற்றினார். நேற்றைய எபிசோட் முழுக்கவே கமலின் அதிரடி தொடர்ந்தது.  தமிழ்ல கெட்ட வார்த்தை பேசக்கூடாதுன்னா,  ஆங்கிலத்துல சிலர் பேசறாங்க என்றதும், யாஷிகா டரியலாகத் தொடங்கினார்.  " எங்களுக்கு கெட்ட வார்த்தை தெரியாதுன்னு எல்லாம் நினைச்சுக்காதீங்க. ஆனா, எங்க பேச வேண்டும் என தெரியும் " என்றார். நான்கு வாரங்களுக்கு முன் எடுக்க வேண்டிய சாட்டையை , ரொம்பவும் லேட்டாக்கிவிட்டார் கமல் என்றுதான் தோன்றியது. விளம்பர இடைவெளிகூட இல்லாமல், 20 நிமிடங்கள் பொறித்துத் தள்ளிவிட்டு , ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தாளிக்கலாம் என தன் டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்தார்.  


 எவிக்ஷன் பட்டியலில் இருப்பவர்களிடம்,  இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நீங்கள் ஏன் இருக்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லுங்கள் என தன் அடுத்த காயை நகர்த்த ஆரம்பித்தார் கமல். ' நான் திரையில் நடித்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் இங்கு நான் நீடித்ததற்குக் காரணமே, மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான். அதைத் தொடர விரும்புகிறேன்' என்றார் மும்தாஜ். தன் மகள், மனைவியுடன் சேர, இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்று எமோஷனல் ஆனார் பாலாஜி. ' என் எதிர்காலத்துக்காக விளையாட வேண்டும் " என்றார் மஹத். நிகழ்காலத்தை வன்மங்களால் தீயிட்டு கொளுத்திவிட்டு எந்த எதிர்காலத்தை நோக்கி மஹத் பயணிக்கப் போகிறார் என தெரியவில்லை. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

எப்போதும் சனிக்கிழமை, கமல் ஒருவரைக் காப்பாற்றுவார். அது நல்லவர், கெட்டவர் பாகுபாடின்றி, நிகழ்ச்சியை இழுத்துக்கொண்டு செல்லும் Show Runnerஆக இருப்பார்கள். ஆனால், இந்த வாரம் கவரில் இருந்து ஒரு ரெட் கார்டை மட்டும் வெளியே எடுத்து, மறுபடியும் உள்ளே வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

மஹத் வெளியேற்றப்படவிருக்கிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது. அது உறுதியானதுதானா என்பதை இன்று அறிந்து கொள்வோம். மஹத் தன் மீதான பிழைகளை உணர்ந்து களைந்து ‘மகத்தான’ மஹத்தாக மாறுவார் என்கிற நம்பிக்கையில் அவர் மீதான கோபங்களை மாற்றிக் கொள்வோம். ஒருத்தன் மன்னிப்பு கேட்கலைன்னாலும் அவனை மன்னிக்கறவன் பெரிய மனுஷன்தான்.