Published:Updated:

நீங்க நல்லவர்தான் மஹத்... ஆனா அதான் பிரச்னை... Will Miss U! #BiggBossTamil2

நீங்க நல்லவர்தான் மஹத்... ஆனா அதான் பிரச்னை... Will Miss U! #BiggBossTamil2
நீங்க நல்லவர்தான் மஹத்... ஆனா அதான் பிரச்னை... Will Miss U! #BiggBossTamil2

நீங்க நல்லவர்தான் மஹத்... ஆனா அதான் பிரச்னை... Will Miss U! #BiggBossTamil2

தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட முதல் போட்டியாளர் என்கிற பெருமையை மஹத் பெற்றார். கால்பந்து மைதானத்தில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஆட்டக்காரர் திடீரென்று ஏற்படும் உணர்ச்சிக் கொதிப்பில் எதிராளியை முட்டி நடுவரால் வெளியேற்றப்பட்டால் ‘ஐயோ இப்படிப் பண்ணிட்டாரே... இவர் இருந்தால் டீம் ஜெயிக்கும் சாத்தியம் அதிகமாயிற்றே’ என்று நாம் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஆனால் ஆட்டத்திறனின்றி மற்றவர்களைத் தாக்குவதையே பழக்கமாக வைத்திருப்பவர் என்றால் ‘போய்த் தொலையட்டும். இனியாவது ஆட்டம் நல்லாயிருக்கும்’ என்று எண்ணத் தோன்றும். ஆனால் மஹத்தை இரண்டு வகையிலும் சேர்க்கத் தோன்றவில்லை.

கோபம் என்கிற பலவீனத்தைத் தவிர மஹத் சிறந்த போட்டியாளரே. ஒருவரை வெறுப்பேற்றுவதில் மன்னனாகவும் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருப்பதும் இவரது பலவீனங்களில் சில. ஒரு காலகட்டம் வரைகூட மஹத் நன்றாகத்தான் இருந்தார். யாஷிகா மும்தாஜூடன் இணைந்த பிறகுதான் தொடங்கியது பிரச்னை. பொஸஸிவ்னஸ் காரணமாகவோ என்னவோ, இவரும் ஐஸ்வர்யாவுடன்  கூட்டணி அமைத்துக்கொண்டு வெறுப்பரசியலை அந்த வீட்டுக்குள் ஆழமாக விதைத்தார்கள். விதைத்ததின் அறுவடையை இன்று எதிர்கொண்டார், மஹத். பல சமயங்களில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் பொம்மையாக இருந்தார், மஹத். கண்மூடித்தனமாக அவர்களின் பின்னால் நின்றார். சற்று சுயமாக யோசித்திருந்தால்கூட இந்த வெளியேற்றம் தவிர்க்கப்பட்டிருக்கும். பாலாஜி குறிப்பிடுவதும் இதையே. கூடா நட்பு கேடாய் முடியும் எனக் காலங்காலமாகச் சொல்லி வரும் விஷயம் எவ்வளவு உண்மை எனப் புரிய வைத்திருக்கிறார்கள் மஹத்தும், ஐஷ்வர்யாவும். தவறாக வழிநடத்தும் எவ்வளவு தீங்கில் நம்மை கொண்டு செல்லும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

‘மஹத்துக்கு இன்னொரு வாய்ப்பு தந்திருக்கலாமே’ என்று சிலர் நினைத்திருந்தாலும் அதில் தவறில்லை. அவர் ஒருவேளை தன்னைத் திருத்திக்கொண்டு இனி நல்ல போட்டியாளராகக் கூட இருக்கக்கூடும். ஆனால், ஒருவருக்குத் தரும் தண்டனை என்பது மற்றவர்களுக்கான சமிக்ஞையும் எச்சரிக்கையும் ஆகும். அதனால்தான் நடைமுறையிலும் பல குற்றங்கள் நிகழாமல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. 

‘இங்க காட்டினது ஒரு கண்ணாடி மாதிரி. தலை கலைஞ்சிருக்கு அவ்வளவுதான். சீவிட்டா சரியாயிடும்’ என்பது தொடங்கி ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ வரை, மஹத்துக்குக் கமல் தந்த உபதேசங்கள் அனைத்தும் அற்புதம். மஹத்துக்கு அதீதமான கோபம் உருவாவதற்கு அவருடைய இள வயது அனுபவங்கள் காரணமாக இருக்குமா என்கிற நோக்கில் அவர் ஆராய முனைந்தது சரியானது. ஒருவரின் ஆளுமைக் குணம் அவருடைய பதினைந்து வயதுக்குள் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கை முழுக்க பெரும்பாலும் வழிநடத்தும் என்கிறார்கள். நாம் கீழ்மைகளிலிருந்து மேலெழத் திமிறும்போதெல்லாம் ஆழ்மனக் காயங்கள் கீழிறங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மனக்கசடுகளை ஆராய்ந்து களைய முயன்றால் மீதமிருக்கும் வாழ்க்கை பெரும்பாலும் வெளிச்சமாக இருக்கும். 

இந்த வெளியேற்றத்தை மஹத் இயல்பாக கடந்தது சிறப்பு. ‘வெளியே வந்து பார்க்கும்போது நீங்கள்லாம் வேற மாதிரி தெரியறீங்க” என்று அவர் சொன்னது முக்கியமானது. குறிப்பாக டேனி மற்றும் மும்தாஜிடம் பழைய நட்பை மீட்டுக்கொண்டது நன்று. ‘மச்சான், டேக்கேர்டா’ என்று பரஸ்பரம் டேனியும் மஹத்தும் பேசிக்கொண்டது சற்று நெகிழ வைப்பதாக இருந்தது. நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ஒரு மனச்சிக்கலை இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது அதற்கான விடை கிடைக்கும். 

‘இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் இமேஜை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ள முடியும்’ என்று கமல் சொன்னது உண்மைதான். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாலாஜியின் மிகையான கோபத்தைப் பார்த்து நமக்கு எரிச்சலும் அருவருப்பும் வந்தது உண்மை. ஆனால் அதே பாலாஜி இன்று மஹத்துக்கு உபதேசம் செய்யுமளவுக்குச் சற்று உயர்ந்திருக்கிறார். அவரின் பிம்பம் இப்போது நமக்கு வேறு கோணத்தில் தெரிகிறது. இது மஹத்துக்கும் நிகழக்கூடும். 

“உங்கள் கோபத்தின் காரணமாக உங்களுக்கு வில்லன் வேடங்கள் கிடைக்கக்கூடும். இன்றைக்குப் பெரிய கதாநாயகர்களாக இருப்பவர்கள் தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர்கள்தாம். ஆனால், வாழ்க்கையில் வில்லனாக இருக்கக் கூடாது. ஒருவகையில் கோபம் என்பது மற்றவர்களுக்கு அல்ல, நமக்கே வில்லன்’ என்று போகிற போக்கில் பல பெரிய அறிவுரைகளை அநாயசமாகச் சொல்லிச் சென்றார் கமல். 

சமநிலை உணர்வோடு ரித்விகா குறிப்பிட்டதைப்போல மஹத்துக்குள் இருக்கும் ‘நல்லவனை’ மேலதிகமாக மேம்படுத்துவதுதான் மஹத்தின் முதல் வேலையாக இருக்க வேண்டும். 

**

மஹத்தின் பிரிவு யாஷிகாவை அதிகம் பாதிக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், இத்தனை ஆழமாகத் துன்புறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபது நாள்களுக்குள் உருவாவது முதிர்ச்சியான காதலாக இருக்குமா. இந்த நோக்கில் யாஷிகாவின் எதிர்வினை மிகையாகத் தோன்றுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், எதிர்பாராத சூழலில் உருவாகும் ஒரு காதல், முந்தையதை விடவும் அதிக உண்மையாகவும், பிணைப்புடனும் இருப்பதற்கான சாத்தியமும் உண்டு.

நான் சமீபத்தில் பார்த்த ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில் The Guernsey Literary and Potato Peel Pie Society (2018), தன் நண்பனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுவாள் ஒரு பெண். ஓர் எழுத்தாளராக அவர் இன்னொரு பிரதேசத்துக்குச் செல்லும்போது அங்கு சந்திக்கும் ஓர் ஆணின் நல்லியல்புகளால் கவரப்படுவார். தன்னிச்சையான நேசம் உருவாகும். ஆனால், முந்தைய காதலால் அதை ஏற்க முடியாமல் தத்தளிப்புக்கு ஆளாவார். வீடு திரும்பியவுடன்கூட அந்த நபர் மீது ஆழமாக உருவாகியிருக்கும் காதலை உதறித் தள்ள முடியாமல், தன் வருங்கால கணவனிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி, புதிய காதலருடன் பிறகு இணைவார். பல திரைப்படங்களில் இது போன்ற கதையைப் பார்த்திருப்போம்.

இது திரைக்கதையல்ல. நம் வாழ்க்கையிலும் நேரக்கூடிய கதைதான். மஹத் – யாஷிகா எபிஸோடிலும் நிகழ்ந்திருக்கலாம். இது முழுக்க முழுக்க அகவயமான விஷயம். இது சம்பந்தப்பட்டவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டியது. நாம் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கவும், இயன்றால் உபதேசங்கள் மட்டுமே வழங்க முடியும். ‘நீ வெளியே போனவுடனே முதல்ல பிராச்சியைப் பார்த்துப் பேசு” என்று ஜனனி மஹத்துக்கு உபதேசம் செய்ததும் இந்த நோக்கில்தான். ‘சமூகத்துக்கு பயந்துகொண்டு’ நம்முடைய வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் கலாசாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

‘அப்ப மும்தாஜ் நல்லவங்களா?’ என்று இப்போது கேட்குமளவுக்கு ஐஸ்வர்யா முட்டாளாக இருந்திருக்கிறார். ‘நான் தப்பா சொன்ன அளவுக்கு அவங்க தப்பானவங்க இல்லை’ என்கிற வாக்குமூலத்தையும் யாஷிகா இப்போது தருகிறார். மஹத் உருவாக்கியிருக்கும் வெற்றிடம் இவர்களை யோசிக்க வைத்திருக்கிறது. குறும்பு செய்த மாணவர்களுக்கு ‘உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே’ என்று சொல்லிக்கொண்டே செய்யத் தரப்படும் தோப்புக்கரண தண்டனைகளைப் போல, ‘நீ என்னை நாமினேட் பண்ணு. நான் உன்னை நாமினேட் பண்றேன்’ என்று ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பேசிக்கொள்வது அத்தனை புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. ஐஸ்வர்யாவைவிடவும் யாஷிகா இளையவர் என்றாலும் சமயங்களில் ஸ்மார்ட் ஆக யோசிப்பவர். இந்த விளையாட்டின் தன்மைகளைப் பற்றியெல்லாம் அறியாமலா இவர்கள் வந்திருப்பார்கள். அதிலும் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் உடைய யாஷிகா இவ்வாறெல்லாம் அனத்துவது நிச்சயம் புத்திசாலித்தனம் அல்ல. இதைத் தனக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு மீதமுள்ள 30 நாள்களை எதிர்கொள்வதுதான் சரியானது. தற்காலிக உணர்ச்சிக் கொந்தளிப்பில் அமிழ்ந்து நல்ல வாய்ப்பைத் தவற விடுவது முறையானதல்ல.

இருக்கிற போட்டியாளர்களிலேயே மலிவானவராகக் கருதப்பட்ட சென்றாயனின் கிராஃப் இப்போது மெள்ள உயர்ந்துகொண்டிருப்பதில் நமக்கான செய்தியும் இருக்கிறது. சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும் விடாமுயற்சியின் மூலம் ஏணிப்படிகளில் மெள்ள ஏறி வெற்றிக்கொடியை ஒருநாள் பறித்துவிட முடியும். இதுவரை தலைவராக இல்லாமல் இருந்த மும்தாஜ் மற்றும் சென்றாயன் ஆகிய இரு நபர்களில் சென்றாயனை மக்கள் தேர்ந்தெடுத்தது சிறப்பு. மும்தாஜூம் அவருக்கு ஆதரவளித்தது நல்ல விஷயம். ஆனால் சென்றாயனின் நெருங்கிய நண்பரான பாலாஜி, இந்த விஷயத்துக்கு ஆத்மார்த்தமாக மகிழாமல் ‘வந்தாத்தான் இங்க இருக்குற பிரச்னை என்னான்னு அவனுக்குத் தெரியும்’ என்பதுபோல் புறணி பேசியது நெருடல். பாலாஜியிடம் உள்ள எதிர்மறை அம்சங்களில் இதுவும் ஒன்று. சென்றாயன் தன் வெள்ளந்தியான அன்பைத் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தாலும் சமயங்களில் அவரைச் சிறுமைப்படுத்தும் கெட்ட வழக்கத்தை பாலாஜி கைவிடவில்லை. போலவே மஹத்தை தவறாக வழிநடத்தியவர்களாக யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் குறிப்பிடும் போது ‘இந்த ரெண்டு நாய்ங்க...’ என்று புறணி பேசியது முறையற்றது. மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் தகுதியை பாலாஜி இதன் மூலம் இழந்துவிடுகிறார். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

புதிய தலைவரான சென்றாயன், ஒரு பதினைந்து நிமிடமாவது நாம் கூடி கிராமத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்கிற ஆலோசனையைத் தந்தது நல்ல விஷயம். அங்கும்கூட தன்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு பாலாஜியை முன்னே நிறுத்தியது அவரது நல்லியல்பைக் காட்டுகிறது. நகர்ப்புறவாசிகளுக்கு கிராமத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதுதான் நடைமுறை உண்மை. அதைப் பற்றிய மிகையான கற்பிதங்களும் கற்பனைகளும் இருக்கின்றன. ‘கிராமத்துக்காரங்க வெள்ளந்திங்க’ என்று ஒரு முனையிலும், ‘ஆ... ஊன்னா கத்தியத் தூக்கிடுவாங்க’ என்று அதற்கு எதிரான வேறு முனையிலும் உள்ள முன்தீர்மான அபிப்ராயங்கள் அதிகம். நாம் தினசரி நுகரும் உணவுப் பொருள்களின் தயாரிப்புக்கு ஆதாரமாக இருக்கும் கிராமத்து விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி நகர்ப்புற வாசிகள் அறிந்துகொள்வது முக்கியமானது. ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்று காந்தி சொன்னது கிராமங்களின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. 

நகர்ப்புறவாசிகளின் இந்த மனோபாவத்தை உடைப்பதற்கான முயற்சியில் சென்றாயன் ஈடுபடத் தொடங்கியிருப்பது நல்ல நோக்கம். அவரின் நோக்கத்தை பாலாஜி, டேனி உள்ளிட்டவர்கள் நகைச்சுவையின் மூலம் கலைத்துப் போட்டது சோகமானது. ஆனால் அதுவரையில் இறுக்கமாக இருந்த பிக்பாஸ் வீடு, நீண்ட நாள்களுக்குப் பிறகு கலகலப்பாக மாறிய நல்ல விஷயமும் இதன் இடையே நடந்தது. சென்றாயனின் மூன்று பெண்களாக, ஜனனி, விஜய்லஷ்மி, ரித்விகா ஆகியோர் ரகளையாகக் கூத்தடித்தார்கள். ‘யப்பா.. யப்பா..’ என்று ஜனனி சிணுங்கிக் கொண்டேயிருந்தது நகைச்சுவையாக இருந்தது. 

திங்கள் அன்று நிகழவிருக்கும் நாமினேஷன்களைப் பற்றிய உரையாடல்களும் சதித்திட்டங்களும் நடந்தன. இப்போது அவர்களின் முக்கியக் குறி, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் மீது இருக்கும். இது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. புதிய போட்டியாளரான விஜயலஷ்மியைப் பற்றி அறிந்துகொள்ள இன்னமும் சில நாள்களாகும். 

விஜயலஷ்மியோடு இன்னமும் சில ‘வைல்ட் கார்ட் என்ட்ரிகள்’ நிகழ்ந்தால்தான் இந்த நிகழ்ச்சியின் வண்ணம் கூடும்.

அடுத்த கட்டுரைக்கு