Published:Updated:

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2
பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2

“ஏட்டய்யா.. கோர்ட்டுக்கு டைம் ஆச்சு.. போய் அக்யூஸ்ட்டை கூட்டிட்டு வாங்க” என்று அர்ஜூன் சொன்னவுடன் “கிராதகன், தாயையும் பிள்ளையையும் பிரிக்கறதுல அவ்வளவு சந்தோஷம்” என்று ‘பொறுப்புள்ள அதிகாரி’யான வடிவேலு கோபப்படுவார். ‘மருதமலை’ திரைப்படத்தில் வரும் இந்த நகைச்சுவைக் காட்சியின் சாயலை பிக்பாஸ் வீட்டிலும் பார்க்க முடிந்தது. உறவுகள் கிளம்பும் போது அனைவரையும் ‘ப்ரீஸ்’ செய்து பிக்பாஸ் விளையாட, சம்பந்தப்பட்டவர் ஒரு எல்லை வரை மரியாதை தந்து விட்டு அப்போதும் பிக்பாஸ் ரிலீஸ் செய்யவில்லையென்றால் ‘போய்யா.. யோவ்’ என்றபடி கிளம்பி விடுகிறார்கள்.

உறவுகள் வீட்டிற்குள் இருக்கும் போதே பிரிவதற்கான மனநிலையையும் அப்போதே உருவாக்கி கொண்டால் என்ன? வெளிகேட்டிற்கு முன்னால் அழுது, கட்டிப்பிடித்து விடை தந்தால்தான் ‘பாசமா?” என்றெல்லாம் வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு சர்காஸ்டிக்காக தோன்றினாலும் உள்ளே இருக்கும் சூழலும், அவரவர்களின் பாசப்பிணைப்பின் அளவும் என்னவென்று நமக்குத் தெரியாத சூழலில் இதைக் கொச்சைப்படுத்தாமல் இருப்பது ஒருவகை நாகரிகம். 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2ஆண்டுக்கணக்கில் உறவுகளைப் பிரிந்து அயல் பிரதேசங்களில் வாழ்பவர்களின் நிலைமை இதையும் விட கொடுமைதான். மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவர்கள் கைபேசி உட்பட பலவழிகளில் உறவுகளைத் தொடர்பு கொள்ள முடியும். வீடியோ போனெல்லாம் கூட இன்று வந்து விட்டது. திரைப்படங்கள், புத்தகவாசிப்பு, இணையம் என்று பல்வேறு வழிகளில் கவனத்தை திசைதிருப்ப முடியும். ஆனால் பிக்பாஸ் வீடென்பது இது போல எவ்வித அடிப்படையும் இல்லாத சிறை போன்றது. வெளிமுகங்களையே பார்க்காமல், ஒரே முகங்களைப் பார்த்துக் கொண்டு, ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டு, புறம் பேசிக் கொண்டு, புறம் பேசுதல்களைத் சகித்துக் கொண்டு இறுக்கமான சூழலில் வசிக்கும் போது பாலைவன மழை மாதிரி உறவுகளைப் பார்த்ததும் அத்தனை உணர்ச்சிகளும் கொட்டி விடுகின்றன. 

சாவு வீடுகளில் அழுபவர்கள், இறந்தவருக்காக மட்டும் அழுவதில்லை, தங்களின் அதுவரையான அழுத்தப்பட்ட சோகங்களுக்காகவும் சேர்தே அழுகிறார்கள் என்றொரு தர்க்கம் இருக்கிறது. ஒருவரின் அழுகையை முழுக்கவும் நாடகத்தனம் என்று சொல்லி விட முடியாது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் மற்றவர்கள் அழுது தீர்க்கும் போது தான் சும்மா இருந்தால் உலகம் தவறாக நினைக்குமோ என்பதற்காகவே சிலர் மிகையாக அழுது தீர்த்தது போலவும் தோன்றியது. 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2உதாரணத்திற்கு ரித்விகாவைச் சொல்லலாம். அறிவும் நிதானமும் கூடிய பெண் அவர். அவருடைய தந்தையின் உருவம் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போதே அவர் வீட்டுக்குள் வந்து விட்டார் என்பதை அறிந்து கொள்ள முடிகிற போது அந்த சூழலை அவர் சற்று நிதானமாக கையாண்டிருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை. போலவே, பொருளாதார காரணங்களின் அடிப்படையில் தன் தாயோடு நீடிக்கும் உறவை ஐஸ்வர்யா விவரித்து விட்ட போது அவரின் மிகையான உருக்கத்தில் நாடகத்தனம் கலந்திருப்பதாகவும் தோன்ற வைத்து விட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே இவர்களை கவனித்து விட்டு நாம் எந்தவொரு முடிவிற்கும் வந்து விட முடியாது. பிரிந்திருக்கும் போதுதான் உறவுகளின் அருமை அதிகம் தெரியும் என்பதை நம் வாழ்க்கையிலேயே அதிகம் பார்த்திருப்போம். நாமும் இவர்களைப் போல மிகையாக இல்லாவிடினும் உள்ளுக்குள் அதிகமாக கலங்கியிருப்போம். 

**

72-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. யாஷிகாவின் பெற்றோர் வராதது குறித்து சற்றுமுன் புறணி பேசிய பாலாஜி, இப்போது யாஷிகாவின் எதிரே வேறு மாதிரியான ஆறுதலைச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘புறம் பேசாதீர்கள்’ என்று வீட்டம்மணி அனுப்பிய குறிப்பை இத்தனை சீக்கிரம் அவர் மறப்பது முறையல்ல. 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2மும்தாஜிற்கு ஒரு சோகமான பின்னணி இருந்ததைப் போலவே ஐஸ்வர்யாவின் பின்னணியையும் இன்று அறிந்து கொள்ள முடிந்தது. நாம் பார்த்து எரிச்சலுறுபவர்கள், மகிழ்ச்சியடைபவர்கள்.. என்று அனைவரிடமும் இது போன்ற சோகப் பின்னணி இருக்கும். ‘ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஓர் உன்னதமான கதை இருக்கிறது’ என்பார் எழுத்தாளர் சுஜாதா. “எங்க அப்பா போய்.. பிஸ்னஸூம் போய் விட்ட பிறகு ‘மகளாக அல்ல, மகனாக இருப்பேன்’ என்ற உறுதியுடன் சென்னைக்கு வந்து விட்டேன். ஆனால் நான் என்ன செய்கிறேன், பணத்திற்கு எப்படி அல்லல்படுகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் என் அம்மா விசாரிக்கவே மாட்டார். குறிப்பிட்ட தேதிக்குள் பணம் வரவில்லையென்றால் ‘நான் வீட்டு வேலைக்குப் போகிறேன்’ என்பது மாதிரி எமோஷனல் பிளாக்மெயில் செய்வார்” என்பது போன்ற பரிதாபமான விளக்கத்தை ஐஸ்வர்யா தந்து கொண்டிருந்தார்.

“என் பெற்றோர் கூட எனக்கு அத்தனை முக்கியமில்லை. என் நண்பன்தான் முக்கியம்” என்று முன்பொருமுறை ஐஸ்வர்யா சொன்ன போது சற்று கோபமாக வந்தது. ஆனால் இப்படியொரு பின்னணியை அறிந்தவுடன் கோபம் விலகி, அவர் மீது பரிதாபமும் கரிசனமும் வந்து விட்டது. சினிமா அம்மாக்களான, மனோரமா, சரண்யா பொன்வண்ணன் போன்று அத்தனை அம்மாக்களும் பாசத்தில் உருகுவார்கள் என்பதெல்லாம் நமது கற்பனை. அதற்கு எதிர்முனையில் இருக்கும் அம்மாக்களும் இருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை. அதற்காக ஐஸ்வர்யாவின் தாய் கெட்டவரும் கிடையாது. அவருடைய சூழல், மனஅழுத்தம் என்னவோ. ஐஸ்வர்யா சொன்னது போல் ‘Mom is a mom’. “உன் அருமை ஒருநாள் நிச்சயமா அவங்களுக்குத் தெரியும்’ என்பது போல் ஆறுதல் சொன்னார் பாலாஜி. 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2‘எல்லோரும் ப்ரீஸ்’ என்று பிக்பாஸ் அறிவிப்பு தர, ‘இந்த இரவில் யாரோ வரப்போகிறார்கள்’ என்று மக்கள் எதிர்பார்த்த போது விளக்கையெல்லாம் அணைத்து அவர்களை ரிலீஸ் செய்தார் பிக்பாஸ். (சின்னப்புள்ளத்தனமா இருக்கே பிக்பாஸ்!).

**

73-ம் நாள் காலை. கருங்குருவி ஒன்று வாசலில் அமர்ந்திருக்க, ‘தொடக்கம் மாங்கல்யம்’ என்கிற அட்டகாசமான பாட்டு ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தில் இருந்து ஒலிபரப்பானது. எல்லா துயரத்தையும் உதறி உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவை பார்க்கும் போது நேற்றைய பரிதாபக் கதை நினைவிற்கு வந்தது. 

“இன்றைக்கு யார் யாரின் உறவினர்கள் வருவார்கள்?” என்று ஜனனியும் பாலாஜியும் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘என் ஃபேமில இருந்து யாரும் வர வேண்டாம்” என்று கசப்புணர்ச்சியுடன் சொன்னார் பாலாஜி. “ஏண்ணா அப்படிச் சொல்றீங்க.. போஷிகாவை பார்க்க ஆசையாக இல்லையா?” எனும் போது இல்லையென்பது போல தலையசைத்தார். கடிதத்தின் வார்த்தைகள் அவரை ஆழமாக புண்படுத்தியிருக்கிறது போல. மீண்டு வரட்டும். ‘saffron pulao’ என்கிற வஸ்துவை தயார் செய்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. பழைய சோற்றின் மீது பருப்பை ஊற்றி வைத்தது போல் விநோதமாக இருந்தது அது. 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2சிறிது நேரத்தில் ஸ்டோர் ரூம் பெல் அடிக்க, என்னவென்று பார்க்க கெத்தாக சென்ற தலைவர் சென்றாயன் சற்று பயந்து பின்வாங்கினார். டேனியின் அம்மாவும் வருங்கால மனைவியும் வந்திருந்தனர். (முதலில் தங்கை என்று தவறாக நினைத்து விட்டேன்). வழக்கம் போல் வில்லாதி வில்லன் பிக்பாஸ் அந்தச் சமயத்தில் அனைவரையும் ப்ரீஸ் செய்து வைத்திருக்க, டேனியும் தாயும் காதலியும் உருக்கத்துடன் டேனியை கட்டிக் கொண்டதும், டேனியின் கண்களில் இருந்து தன்னிச்சையாக கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. 

பிறகு ரிலீஸ் செய்யப்பட்டதும், மாமியாரின் எதிரேயே பயங்கரமாக ரொமான்ஸ் செய்து தீர்த்தார் குட்டு. ‘பொறுமையா இருந்து காரியத்தை சாதிப்பா” என்று ரகசியக் குரலில் டேனியின் அம்மா சொல்லும் போது “நீ இங்க பேசறது மைக்ல கேட்கும்மா” என்று சிரித்துக் கொண்டே டேனி சொன்னது சுவாரஸ்யமான காட்சி. டேனியின் தாயார் அனைவரையும் ஆசிர்வதித்தார். ஒரு வயதிற்கு மேல் ஒரு தாய் ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே தாயாகி விடும் நெகிழ்வை நாம் நடைமுறையில் உணர்ந்திருப்போம். உள்ளே நடக்கும் சில நிகழ்வுகளை ரகசியக்குரலில் டேனியின் காதில் ஓதினார் குட்டு. 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2கொஞ்சல்ஸ், விசாரிப்புகள் சற்று முடிந்ததும், டேனியை ப்ரீஸ் செய்து அவர்களை வெளியே அனுப்ப ‘ரொம்ப காய்ஞ்சு போயிருக்கேன் பிக்பாஸ். தயவு காட்டுங்க’ என்று வெளிப்படையாக டேனி கெஞ்சியது நகைச்சுவை. மும்தாஜ் உசுப்பேற்றி விட்டதும் பிக்பாஸின் உத்தரவிற்காக காத்திருக்காமல் பறந்து சென்றார் டேனி. வெளிகேட்டின் அருகே மறுபடியும் முத்த மழை. (மனுஷன் வாழறாயன்யா!). 

வந்த விருந்தினர்களிடம் வழக்கம் போல் உற்சாகம் காண்பித்த சென்றாயன், வெளியுலக விஷயத்தைப் பற்றி குட்டுவிடம் ஏதோ கேட்க “ஏண்ணா. இதையே எல்லோர் கிட்டயும் கேட்கறீங்க?” என்று அவர் சிணுங்க, வீடு சிரிப்பில் மூழ்கியது. ‘திருமணத்திற்கு அவர்கள் வீட்டில் ஒப்புக் கொண்டார்கள்’ என்கிற நல்ல செய்தியை மும்தாஜிடம் பிறகு சொன்னார் டேனி. மணமக்கள் நீடுழி வாழ்க!.

டேனியின் வருங்கால மனைவி ‘மும்தாஜை ரொம்ப பிடிக்கும்’ என்று சொன்னதை வைத்து ‘உங்களுக்கு வெளியில் லேடீஸ் சப்போர்ட் நிறைய இருக்கு” என்கிற யூகத்தைச் சொன்னார் ஜனனி. ‘எங்கம்மா என்ன சொன்னாங்க?” என்று டேனி ஒவ்வொருவரிடமாக விசாரித்துக் கொண்டிருந்தார். “சண்டை போடாம இருங்கப்பா’ன்னு சொன்னாங்க. இருக்கலாம்தான். ஆனா இந்த நாசமாப் போற டாஸ்க் வந்துடுதே” என்று பாலாஜி சொன்னது ரகளை. 

‘உன்னை சிலர் முதுகில் குத்துகிறார்கள்’ என்று குட்டு கடிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகளைப் பற்றி நேரில் சொன்னார். இது பற்றி பாலாஜியிடம் பேசிக் கொண்டிருந்தார் டேனி. ‘யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத், ஷாரிக்’ கூட்டணி அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தது என்று அறிந்து கொண்டதாக சொன்னார். தன்னம்பிக்கை இருக்கலாம். தலைக்கனம் கூடாது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் டேனி. 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2**

மெயின் கேட் கதவுகள் திறக்கப்பட, மறுபடியும் பிக்பாஸ் விளையாடுகிறார் போல என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே எட்டிப் பார்த்த ஒரு ஜோக்கர் உருவத்தைக் கண்டு பயந்து விட்டது யாஷிகா குழந்தை. The Dark Knight’ல் ஜோக்கர் மாதிரியாக உள்ளே நுழைந்த உருவத்தைப் பார்த்து பீதியாகத்தான் இருந்தது. ஆனால் வந்த ஆசாமி, வெறுப்பேற்றுவதிலும் நக்கல் அடிப்பதிலும் தேறியவராக இருந்தார். ‘நீ இனிமே காமெடி பண்ணணும் ஓகேவா?” என்பது போல் பாலாஜியிடம் சொன்ன போது சிரிப்பு தாங்கவில்லை. ‘உங்க முட்டைக்கண்ணுக்கு நான் ரசிகன்’ என்றதும் ஜனனிக்கு பெருமையும் சிரிப்பும் பொங்கிக் கொண்டு வந்தது. இதில் அதிகம் காண்டானது ‘புது தலைவர்’ சென்றாயன்தான். பதிலுக்கு பதில் பேசி பல்பு வாங்கினார். “நீ இனிமே ஓவர்ரியாக்ஷன் பண்ணே.. டிவியை உடைச்சுடுவேன்’ என்று ஜோக்கர் சொன்னது நல்ல நக்கல். 

சமையலறை சுத்தமாக இல்லாததைக் கிண்டலடித்த ஜோக்கர்,. “நீங்க தாடிய கொஞ்சம் டிரிம் பண்ணினா முகம் கொஞ்சம் வெளிய தெரியும்” என்று என்னுடைய நீண்ட நாள் ஆதங்கத்தை டேனியிடம் சொன்ன போது சிரிப்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது. அனைவரையும் கலாய்த்த ஜோக்கர், விஜயலஷ்மியை மட்டும் விட்டு வைத்தது ஏனென்று தெரியவில்லை. ‘சிரிப்பு வந்தா சிரிச்சுடுங்க. நடிக்கறதையெல்லாம் வெளிய செய்ங்க’ என்று அவர் சொன்னது காமெடிக்கு இடையயான சீரியஸ் உபதேசம். ஸ்டோர் ரூமின் வாசலில் நின்று கொண்டு அனைவரும் கொலைவெறியுடன் துரத்திப் பிடிப்பதற்கு முன் மறைந்து போனார். ‘சூப்பர் காரெக்ட்டர்’ என்று தன் எரிச்சலை மறைத்துக் கொண்டு பாராட்டினார் சென்றாயன். 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2சோகமாக இருந்த யாஷிகாவிடம் ‘இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது” என்பது போல் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ். (போதும்ப்பா… இந்த வசனம். பிக்பாஸ் மேடையை ஏதோ கின்னஸ் சாதனை போல் திரும்பத் திரும்ப சொல்லும் போது எரிச்சலாகிறது). “தற்காலிகமாக கிடைத்த உறவிற்காக நீண்ட கால உறவை மறக்க கூடாது. நாளையைப் பற்றி யோசிக்க வேண்டாம்’ என்பது போல் மும்தாஜ் தந்த ஆலோசனை முக்கியமானது. 

**

சிறிது நேரத்தில் தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்க ஐஸ்வர்யாவின் அம்மா பேசினார். ‘நான் அங்கு வர முயன்றேன். ஆனால் முடியவில்லை. நீ சந்தோஷமாக இரு. விளையாட்டை வென்று விட்டு வா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வங்காளம் கேட்பதற்கு மிக இனிமையான பாஷை என்பது மறுபடியும் உறுதிப்பட்டது. அவரின் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா குழந்தை போல் கதறியழ அனைவரும் தேற்றினர். இது பிக்பாஸின் விளையாட்டாக இருக்கலாம் என்று ஒருவருக்குமா தோன்றவில்லை? பெரும்பாலும் பொருளாதாரக் காரணங்களுக்காகத்தான் எங்கள் உறவு நீடிக்கிறது என்பது போல் பேசிய ஐஸ்வர்யாவா இப்படி அழுகிறார் என்கிற தர்க்கத்திற்குள் இதை அடக்க முடியாது. மனித உணர்ச்சிகள் அத்தனை எளிதான தர்க்கத்திற்குள் அடங்குவதல்ல. 

ஐஸ்வர்யாவின் உண்மையான பெயர் பூஜா என்கிற முக்கியமான வரலாற்றுத் தகவல், அதன் ஆர்மிக்கும் மற்றவர்களுக்கும் தெரிய வந்த நாள் இன்று.  மற்றவர்களின் ஆறுதலால் தன்னைத் தேற்றிக் கொண்ட பூஜாவிற்கு.. அதாவது ஐஸ்வர்யாவிற்கு பிறகு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. ஜோக்கர் எடுத்துப் போன டெடிபேர் பொம்மையோடு வந்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யாவின் அம்மா. ‘எல்லோரும் ப்ரீஸ்’ என்று வழக்கமான விளையாட்டை பிக்பாஸ் விளையாட முற்பட, அதை சட்டை செய்யாமல் தாயை நோக்கி பாய்ந்தோடினார் ஐஸ்வர்யா. (எத்தனை முறை பல்பு வாங்கினாலும் உங்களுக்கு சலிக்கவேயில்லையா பிக்பாஸூ?!).

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2அந்த வீட்டு நாய்க்குட்டி உட்பட அனைவரிடமும் ஐஸ்வர்யாவின் தாய் மன்னிப்புக் கேட்டது மிக நெகிழ்வு. பிள்ளைகளின் பிழைகளுக்காக பெற்றோர்கள் தலைகுனிய வேண்டிய தருணங்கள். “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.. அவ பூ தான் போட்டா” என்று ஆறுதல் சொன்னார் பாலாஜி. ‘மன்னிக்க முடியாத குற்றம்னு இந்த உலகத்துல எதுவுமே கிடையாது’ என்று கடந்த சீஸனில் சிநேகன் சொல்லிக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. மும்தாஜிடமும் மன்னிப்பு கோர, அவரும் கலங்கித் தீர்த்தார். ‘This is my another mom’ என்று மும்தாஜை அறிமுகப்படுத்தினார் ஐஸ்வர்யா. (அடுத்த டாஸ்க் வரைக்கும் இது தாங்குமா?!).

தானே ‘தத்தக்கா பித்தக்கா’ தமிழில் பேசும் போது இந்த லட்சணத்தில் தன் தாய்க்கு தமிழில் உரையாடச் சொல்லி ஐஸ்வர்யா கற்றுக் கொடுத்தது நல்ல நகைச்சுவை. சரி, உணர்வுகளுக்கு மொழி ஏது? தன் தாயை வெளியில் அழைத்துச் சென்று பிக்பாஸ் இல்லத்தைக் காட்டி “எத்தனை முறை டிவில பார்த்திருப்போம்.. இப்ப நானே இங்க இருக்கேன்’ என்று ஐஸ்வர்யா பெருமையடித்துக் கொண்டது முக்கியமானது. விசாரிப்புகள், நெகிழ்ச்சிகள் முடிந்ததும் மறுபடியும் அதே விளையாட்டு. ஐஸ்வர்யாவின் அம்மா ‘ரத்னா’வை வெளியே கிளம்பச் சொன்ன பிக்பாஸ், எல்லோரையும் ப்ரீஸ் செய்ய, சற்று மரியாதை கொடுத்த ஐஸ்வர்யா பிறகு மற்றவர்கள் சொன்னவுடன் கட்டளையை காற்றில் தூக்கிப் போட்டு விட்டு  அலறியடித்துக் கொண்டு ஓடினார். (பிக்பாஸுக்கு மறுபடியும் பல்பே...) 

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2திரும்பி வந்த ஐஸ்வர்யாவிடம் ‘உங்க வீட்ல அக்காவிற்கு கல்யாணமா?” என்று சென்றாயன் விசாரிக்க “எல்லா கல்யாண வீட்லயும் வேலை செய்வே?” என்று பாலாஜி கிண்டலடித்தது சற்று அபஸ்வரம். (இனிமே நல்ல காமெடி பண்ணனும்னு ஜோக்கர் சொல்லிட்டுப் போனாரா, இல்லையா பாலாஜி?!).

“பணம் அனுப்பினாதான் உறவு”ன்னு ஐஸ்வர்யா சொன்ன போது வந்த கண்ணீர் உண்மையானது. மத்தவங்களோட சொந்தக்காரங்க வரும் போதெல்லாம் ஜனனி அத்தனை உணர்ச்சிவசப்படாம தள்ளியே நின்னாங்க. ஐஸ்வர்யா அம்மாவைப் பார்த்தவுடனே கண்ல தண்ணி கொட்டுச்சு’ என்று மும்தாஜிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. (ஆக.. நீங்க திருந்தறதா இல்லையாண்ணே?!).

*

‘டன்டனக்கா’ என்று தாளம் போட்டபடி கிச்சன் ஏரியாவில் உலவிய சென்றாயன், லிவ்விங் ஏரியா டிவியில் ‘செய்தி வாசிப்பவர்’ மாதிரி தெரிந்த ஒரு உருவத்தை கவனிக்கவேயில்லை. மற்றவர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்திருந்தனர். ‘என்னா மனுஷங்க இவங்க?” என்று நொந்து போன பிக்பாஸ், புதிய போட்டியாளர்கள் உள்ளே நுழையும் போது ஒலிக்கும் இசையைப் போட, ‘வைல்டு.. வைல்டு…’ என்று வைல்டாக கத்திக் கொண்டிருந்தார் டேனி. அந்த இசைக்கும் யாஷிகா + ஐஸ்வர்யா கூட்டணி ஆடிக் கொண்டிருந்தது. 

அப்பவும் அவர்கள் உள்ளே வந்து தொலையாததால், “மூதேவிங்களா.. சோபால வந்து உக்காருங்க” என்று பிக்பாஸ் அதட்ட வேண்டியிருந்தது. டிவியில் தெரிந்த தந்தையின் உருவத்தைப் பார்த்தவுடனேயே கதறித் தீர்த்தார் ரித்விகா. அவரை மட்டும் ரிலீஸ் செய்தவுடன் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி வீடெங்கும் அழுகையுடன் தேடினார். ‘இந்தச் சமயத்தில் மும்தாஜ் நிச்சயம் கதறுவார்’ என்கிற உறுதியான நம்பிக்கையுடன் காமிரா அவர் முகத்திற்கு நெருக்கமாக சென்றது. (என்னா வில்லத்தனம்?!).

பிக்பாஸுக்கு பல்போ பல்பு... பழக்கத்த மாத்திக்கலாமே பாலாஜி... #BiggBossTamil2சிறிது நேரம் ரித்விகாவை கதற விட்டார் பிக்பாஸ். ‘வீட்டுக்குள்ளதான் இருப்பாங்க. வந்துருவாங்க” என்று மற்றவர்கள் ஆறுதல் கூறினர். சிறிது நேரத்தில் ரித்விகாவின் தாயும் தந்தையும் வாசலின் வழியே உள்ளே நுழைந்தார்கள். ‘எங்கப்பாவுக்கு கால்ல அடிபட்டுடுச்சு. கொஞ்சம் தாங்கி தாங்கித்தான் நடப்பாங்க” என்று முன்பு ரித்விகா சொல்லியிருந்தது நினைவிற்கு வந்தது. ‘நாங்க ரெண்டு பேரும் அத்தனை பேசிக்க மாட்டோம்” என்று அப்போது சொன்ன ரித்விகா, அப்பாவிற்காக இத்தனை கதறியதில் நமக்கும் செய்தி இருக்கிறது. அன்பை ஒளித்து வைக்கும் கலாசாரத்திலிருந்து வெளியே வர வேண்டும். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


ரித்விகாவின் அப்பா அத்தனை உணர்ச்சிவசப்படாவிட்டாலும் உள்ளுக்குள் அவர் நெகிழ்ந்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. “வீடே காலியா இருக்கு’ என்று ரித்விகா தாய் சொன்ன ஒரு வசனமே அவர்களின் பிரிவை ஆழமாக உணர்த்துவதாக இருந்தது. 

ரித்விகாவின் பெற்றோர் விடைபெற்ற பின், நடந்த உரையாடலில் இயல்பாக பாலாஜியை ரித்விகா துணியால் அடிக்கப் போக, கழுகு போல் இந்தத் தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்த பிக்பாஸ் ‘லூப்’ என்றார். எனவே பாலாஜிக்கு தொடர்ந்து தருமஅடி விழுந்தது. “ரிலீஸ் ஆனதும் ஓடிடு’ என்று ஐடியா தந்த ஜனனிக்கு பல்பு. இந்தச் சமயத்தில் ரித்விகாவிற்கு ‘ப்ரீஸ்’ ஆணை கிடைக்க வசமாக மாட்டிக் கொண்டார். ‘ஒரு பெரிய மனுஷனை இப்படியா அடிப்பே.. என்ன ஆணவம்?’ என்று வடிவேலு வசனத்தை சொல்லி ஜாலியாக பழிவாங்கினார்  பாலாஜி.

நாளை – கயல்விழி விஜயம். சிவாஜி மாதிரி சிரிப்பும் அழுகையுமாக பின்னுகிறார் சென்றாயன். வெளியில் இருந்து நாம் கிண்டலடித்தாலும் இவையெல்லாம் ஏறத்தாழ உண்மையான உணர்வுகள். சென்றாயன் இதுவரை அறியாத ‘நல்ல செய்தி’யை கயல்விழி மேடம் இன்று தெரிவிப்பார் போலிருக்கிறது. 


இப்படி சிரிப்பா சிரிச்சு வாரஇறுதியில் நாட்டாமைக்கு எந்த வேலையும் தர மாட்டாங்க போலிருக்கே?! ஆனா மனுஷன் எதையாவது பேசி ரெண்டு நாளை நிரப்பிடுவாரு. அந்த நம்பிக்கை மட்டும் இருக்கு.

அடுத்த கட்டுரைக்கு