வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (30/08/2018)

கடைசி தொடர்பு:11:16 (30/08/2018)

``அம்மாகிட்ட இருந்துதான் எல்லாம் கத்துக்கிட்டேன்!" - மும்தாஜ் #Rewind

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் டேனியலிடம் தன் குடும்பத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தார், மும்தாஜ். அவர் ஏற்கெனவே தன் குடும்பம் பற்றி நமக்களித்த பிரத்யேகப் பேட்டி இது. 

``அம்மாகிட்ட இருந்துதான் எல்லாம் கத்துக்கிட்டேன்!

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து அவர்களுக்கு ஸ்வீட் சர்பிரைஸ் கொடுத்திருந்தார்கள். அதில், ரொம்பவே எமோஷனலாகப் ஃபீல் ஆனவர், மும்தாஜ். அவருடைய குடும்பத்திலிருந்து அம்மா, சகோதரர் மற்றும் சகோதரரின் மகனும் வந்திருந்தார்கள். அவர்கள் சென்ற பிறகு டேனியலிடம் தன் குடும்பத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தார், மும்தாஜ்.  அவர் ஏற்கெனவே தன் குடும்பம் பற்றி நமக்களித்த பிரத்யேகப் பேட்டி இது. 

சில வருடங்களுக்கு முன்பான சந்திப்பு அது. பல வருடங்கள் `லைம்லைட்'டில் இருந்தவர், சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போயிருந்தார். `என்ன செய்துகொண்டிருக்கிறார்?' என்கிற ஆவல் மேலிட, அவரை சென்னை அண்ணா நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் ஒரு மதிய வேளையில் சந்தித்தேன். வரவேற்பறையில் மும்தாஜ் வீடுதான் என்பதற்கு எந்தவிதமான தடயமும் இல்லை. அவர் முகம் பதித்த படங்களை சுவரில் எங்குமே பார்க்க முடியவில்லை. டம்ளரிலிருந்து தண்ணீர் ஒரு துளி சிதறியிருந்தது. பதறிப்போய் டிஷ்யூ பேப்பரால் துடைக்கிறார். வீட்டை அவ்வளவு தூய்மையாக வைத்திருக்கிறார். மேஜை மேல் வைத்திருந்த எல்லாம் சரியாக இருக்கிறதா என்பது முதற்கொண்டு வரவேற்பு அறையின் சுத்தத்தை உறுதிசெய்த பிறகே பேச ஆரம்பிக்கிறார்... பேச்சில் எளிமையோ எளிமை!

மும்தாஜ் - பிக் பாஸ்

``எனக்கு மனிதர்கள் மட்டுமல்ல, வீட்ல இருக்கிற ஒவ்வொரு பொருள் மேலேயும்  அக்கறை இருக்கும். எப்போவும் வீட்டைச் சுத்தமா வெச்சிருக்கணும்ங்கிறதுல உறுதியா இருப்பேன். இது எல்லாமே என் அம்மாகிட்ட இருந்து வந்த பழக்கம். சின்ன வயசுல இருந்தே `நம்ம தேவைகளுக்காக அடுத்தவங்களை எதிர்பார்த்து இருக்கக்கூடாது'னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இதுல ஒரு அழகு என்னனா, என் அம்மா பெரிய பணக்கார குடும்பத்தில் வளர்ந்தவங்க. சின்ன வயசுல கிட்டத்தட்ட பதினைந்து வேலையாள்கள் வீட்ல இருப்பாங்களாம். அம்மா குளிச்சு முடிச்சு வந்தாங்கனா, அவங்க அன்றைக்கு உடுத்திக்கொள்ள வேண்டிய டிரெஸ்ஸை தயாரா கையில ஏந்திக்கிட்டு ஒரு பணிப்பெண் நின்னுக்கிட்டு இருப்பாங்களாம். அப்படிச் செல்லமாக இருந்தவர், ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் திருமணமாகிச் சென்றார்.

அங்கிருந்த அத்தனை பேருக்கும் இவர் ஒரே ஆளாக காலை, மதியம், மாலை எனத் தொடர்ந்து சப்பாத்திக்கு மாவு பிசைந்துக்கிட்டே இருப்பார். வாக்கப்பட்டு வந்த இடமும் பெரிய இடம்தான். இருந்தாலும், தன் குடும்பத்துக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்வாங்க. என்னோட ரூமை நான் கிளீனா வெச்சுக்கணும். இல்லைனா அன்னைக்கு நைட்டு ஹால்ல இருக்கிற சோபாவுலதான் படுத்துத் தூங்கணும். எத்தனை நாள் ஆனாலும் நான்தான் என் ரூம், டிரெஸ் எல்லாத்தையும் கிளீன் பண்ணணும். இப்படி ஒரு கண்டிஷன் இருந்ததுனால, வேற வழியில்லாம என் ரூமை யாருடைய துணையையும் எதிர்பார்க்காம நானே கிளீன் பண்ணுவேன். அதேமாதிரி, காலையில சரியான நேரத்துக்கு எந்திரிக்கணும்; சரியான நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போகணும். இப்படி எல்லாத்திலும் சுத்தம் மற்றும் நேரத்தைக் கடைபிடிக்கிறதுனு சின்ன வயசுல இருந்தே கத்துக்கொடுத்துட்டாங்க. அதுதான் இப்போவரை தொடருது.'' (இதைத்தான் இப்போதும் பிக் பாஸில் பார்க்க முடிகிறதுபோல!). என்பவரிடம், இப்போது  உள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கணும்னு கேட்டேன். 

``இப்போது உள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறது மட்டும் இல்லைங்க. குழந்தையைப் பார்த்துக்கிறதே இல்லை. அவங்களையும் முழுமையாகக் குற்றம் சொல்லலை. ஆனா, குழந்தைக்கான பாசம், பாதுகாப்பு இதெல்லாம் முக்கியம் இல்லையா.. கணவன், மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போற வீட்ல குழந்தையைப் பார்த்துக்கிறது குழந்தை பாதுகாப்பாளராகத்தான் (மெய்டாகத்தான்) இருக்கும். அவங்களைப் பொறுத்தவரை சரியான நேரத்துக்கு குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டிவிடணும்; ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கணும்... அவ்வளவுதான். இப்படி இருக்கும்போது குழந்தைக்குத் தேவையான அன்பு, அறிவுரை எல்லாம் எங்கிருந்து வரும்னு நினைக்கிறீங்க. மகனுக்கோ, மகளுக்கோ என்ன பிரச்னை இருக்கு; அவங்க சரியா படிக்கிறாங்களா இல்லையா.. இப்படி எதையும் கண்டுக்காம, நைட்டு வரைக்கும் வேலை பார்த்துட்டு குழந்தை தூங்கினதுக்குப் பிறகு வரக்கூடிய பெற்றோர்களைத்தான் இப்போ அதிகமா பார்க்க முடியுது. குழந்தை வளர்ப்பில் முக்கியப் பங்கு பெண்களுக்கு இருக்கு. அதை அவங்க சரியா நிறைவேற்றணும்.'' என்னும் வார்த்தை தீர்க்கமாக வந்து விழுந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் கேட்டேன், ``அப்போ பொண்ணுங்க எந்த வேலைக்கும் போக வேண்டாம்னு சொல்றீங்களா, குழந்தைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு அப்படியே வீட்டோடு இருந்துவிட வேண்டுமா?'' 

பிக் பாஸ்

``நான் அந்த அர்த்தத்துல சொல்லல. குடும்பத்தைச் சரியாக கவனிக்க முடியாத, கண்காணிக்க முடியாத ஒருத்தரால எப்படி ஒரு ஆபீஸ்ல சரியா நடந்துக்க முடியும் என்பதுதான் என் கேள்வி. நம்ம சம்பாதிப்பது, கஷ்டப்படுறது, கடன் வாங்குறது எல்லாமே நம்ம குழந்தைகளுக்காவும், அவர்களுடைய எதிர்காலத்திற்காகவும்தானே. இப்படி அவங்களுக்காக சேர்க்கிற சொத்துமேலதான் உங்களுக்கு அதிக அக்கறை இருக்கே  தவிர, அந்தக் குழந்தைமேல அக்கறை காட்டுறதுக்கு நேரம் ஒதுக்காம ஓடிக்கிட்டு இருக்கீங்கனு சொல்ல வர்றேன். உங்க குடும்பத்து கஷ்டத்தைச் சமாளிக்க முடியலயா... தாராளமா வீட்ல இருந்து வேலை பார்க்கிற ஆஃப்ஷனைத் தேர்ந்தெடுங்கனு சொல்றேன்''. என்றார்.  

எனக்கோ ஏன் திடீரென இவ்வளவு உன்னிப்பாக யோசிக்கணும், பேசணும்னு தோன்றவே.. டேபிள் மேல் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அவர் எதிர்பார்த்தபடி டம்ளரிலிருந்து கீழே சிந்திய தண்ணீர்த் துளியை டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினேன். `இப்போது திடீர்னு குடும்ப நலன் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன. திருமணம் பற்றிய யோசனையில் இருக்கீங்களா?' என்றேன். 

``திருமணம் செய்ய வேண்டியிருந்தால் மட்டும்தான் குடும்பத்தைப் பத்தி யோசிக்கணுமா என்ன... என் நலனை எதிர்பார்க்கும் என் குடும்பம் மீது எனக்கு எப்போதும் நல்ல அட்டாச்மென்ட் உண்டு. இதை எல்லாம் புதுசா ஒண்ணும் யோசிக்கல. நான் பார்த்த, பேசிய, கடந்து வந்த பாதையில் பார்த்த விஷயங்களைத்தான் பகிர்ந்துக்கிறேன். பாம்பே டிராஃபிக்ல நிறைய குழந்தைகள் பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பாங்க. நிறைய நாள்கள் அதை நான் காரிலிருந்து பார்த்திருக்கிறேன். பெரும்பாலான குழந்தைகள் சோர்ந்து போய் எப்போவும் கிறக்கத்துல இருக்கிற மாதிரியே திரிவாங்க. அதுக்குக் காரணம், அவங்களுக்குக் குடிப்பழக்கத்தை கத்துக்கொடுத்து பிச்சை எடுக்க வைக்கிறதுதான் என்பதைப் பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

மும்தாஜ்

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துல இருந்து விலகியதே இல்லை. பாம்பேல கணவன், மனைவி இரண்டு பேருமே பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறாங்க. அதனால காலையில அவசர அவசரமா எழுந்து போக வேண்டியிருக்கும். இதுக்காக குழந்தையைக் கவனிச்சுக்க ஒரு ஆள் போட்டாங்க. இவங்க வேலைக்குக் கிளம்பியதும், வேலை ஆள் குழந்தைக்குப் பிச்சை எடுக்கிற டிரெஸ்ஸைப் போட்டுவிட்டு, பிச்சை எடுக்க அனுப்பி வெச்சாங்க. சாயுங்காலம் குளிக்க வெச்சு குழந்தையை ஃப்ரெஷ்ஷா தயார்படுத்தி வெச்சுடுவாங்க. இப்படியே போயிட்டு இருந்தது. திடீர்னு ஒருநாள்  அந்தக் குழந்தை காணாம போயிடுச்சு. பிறகுதான் பெற்றோர்கள் பதறிப்போய் குழந்தையைக் காணோம்னு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் பண்றாங்க. கிட்டத்தட்ட இரண்டு மாசம் கழிச்சு அந்தக் குழந்தையைக் கண்டுபிடிச்சிருக்காங்க. நல்லவேளை, குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. அப்புறம் வேலையை விட்டுட்டு வீட்டுலே இருந்து தன்னோட குழந்தையைப் பார்த்துக்கிட்டாங்க. இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துதான் தன்னோட குழந்தையைப் பத்திரமா பாத்துக்கணும்ங்கிறது இல்ல. இப்படிப் பல விஷயங்களை என் லைஃப்ல பார்த்திருக்கேன். நிறைய பேருக்கு அட்வைஸும் கொடுத்திருக்கேன்.'' என்றவர், பேசி முடித்தபோது கண்கள் கலங்கியிருந்தன. சமூக சேவை பற்றி அவரிடம் கேட்டபோது, 

``சமூக சேவை என்பதைத் தாண்டி, சக மனிதர்களை மதிக்கத் தெரியணும்னு நினைக்கிறேன். அன்றாடம் பார்க்கிற பல விஷயங்கள் மனதைக் காயப்படுத்திடுது. காரில் பயணம் செய்யும்போதுகூட ஹாரன் அடிப்பதோடு நிறுத்திக்காம, ஆபாச வார்த்தைகளால திட்டுறதை நிறைய இடங்களில் பார்க்க முடியுது. இப்படி நிறைய விஷயங்களைச் சகித்துக்கொள்ள பழகிட்டோம். இதெல்லாம் மாறணும். அதேபோல பெண்களுக்கு நான் சில விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். வேலை பார்க்கும் இடங்களில் பொதுவாகவே நம்ம இடம் கொடுக்காம யாருமே நம்மை நெருங்க முடியாது. தேவையில்லாத நட்பையும் வளர்த்துக்கக் கூடாது. மத்தவங்க கண்களுக்குத் தவறான தோற்றத்தைத் தரக்கூடிய ஆடைகளைப் பெண்கள் தவிர்ப்பது நல்லது. சரியான ஆடையை அணியும்போதும் நம்மைத் தவறாகத்தான் பார்க்கிறார்கள் என்றால், அவங்க பார்வையிலதான் குறைபாடு இருக்கிறதா நினைக்கிறேன்." என்றவரிடம், `சினிமாதானே மாடர்ன் டிரெஸ்ஸை பெண்கள் அதிகம் அணியக் காரணம்?' எனக் கேட்டேன்.  

``ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். சினிமா வேறு... வாழ்க்கை வேறு. இரண்டையும் எப்போதுமே குழப்பிக்கொள்ளக் கூடாது. சினிமாவில் கதை அம்சத்துக்கு ஏற்றவாறுதான் உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியச் சொல்கிறார்கள். அதை ஒரு குடும்பத்துக்குள் கொண்டு வரும்போது, தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. என்னதான் சினிமா, நடிப்பு என்று என்னுடைய உழைப்பைக் கொட்டினாலும், ஒரு போதும் என்னுடைய லிமிட்டை எந்த இடத்திலும் தாண்டிச் சென்றதில்லை. இதுவரையில் என்னை எந்த பார்ட்டியிலும் யாரும் பார்த்திருக்க முடியாது. பார்ட்டிக்குப் போவது பொதுவாக எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல, எனக்குத் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ... உதவி என்று வந்தால் எந்த நேரம் எனப் பார்க்காமல் ஓடிப்போய் உதவுவேன். அதுதான் என் குணம்'' என்றார், மும்தாஜ். அவருக்கே உரிய பளிச் சிரிப்போடு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க