Published:Updated:

சென்றாயா.... நீ ஜெயிச்சுட்ட மக்கா! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
சென்றாயா.... நீ ஜெயிச்சுட்ட மக்கா! #BiggBossTamil2
சென்றாயா.... நீ ஜெயிச்சுட்ட மக்கா! #BiggBossTamil2

பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களின் அத்தனை உறவுகளும் வந்து போய் விட்டார்கள். பிக்பாஸின் சொந்தக்காரர்கள் வருவது மட்டும்தான் இனி பாக்கி. (வேற யார், நாம்தான்!) ‘ப்ரீஸ் & ரிலீஸ்’ டாஸ்க்கும் முடிந்து விட்டதின் மூலம் விக்ரமன் திரைப்படம் முடிந்து விட்டது. அடுத்த வாரங்களில் ரணகள taskகள் ஆரம்பமாகும் என்பதாகத் தெரிகிறது. பாலாஜி சொன்னது போல அதைத் தாண்டுவதுதான் பெரிய விஷயம். 

உறவுகளைப் பார்த்தவுடன் போட்டியாளர்களின் எதிர்வினை மிகையாக இருந்ததாகவும், இவையெல்லாம் நிச்சயம் நடிப்புதான் என்பதாகவும் பல எதிர்வினைகளை இணையத்தில் பார்த்தேன். இப்படிச் சில தனிநபர்களின் உணர்ச்சிகளை, வெளியிலிருந்து கவனித்து மலினப்படுத்துவது சரியா என்று தோன்றியது. இது போன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களில் சந்தேகத்தின் பலனை சம்பந்தப்பட்டவருக்கு அளித்துதான் ஆக வேண்டும். இது சினிமா அல்லது சீரியலாக இருந்தால் கூட ‘ஓவர்ஆக்டிங்’ என்று கிண்டலடிப்பதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. நிஜ மனிதர்களின் உணர்வுகளை ‘போலி’ என்று உறுதியாகச் சொல்வதில் நமக்கு ஒரு தயக்கம் இருக்க வேண்டும். உங்களின் உண்மையான அழுகையை ஒருவர் மலினப்படுத்தினால், எள்ளலாகக் கையாண்டால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கலாம். 

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் நம்மவர்களுக்கும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அவர்கள் உணர்ச்சிகரமான சூழலில் பொதுவில் அழுவதற்கு தயங்காதவர்கள். ஆண்கள் உட்பட. ஆனால் நாம் அப்படியல்ல. போலவே சில விஷயங்களை சட்டென்று புரிந்துகொண்டு தங்களின் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வரும் கலாசாரம் அங்கு வளர்ந்திருக்கிறது. நாம் இன்னமும் அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதனின் சில ஆதாரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் பல ஒற்றுமைகள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. 

இருப்பதிலேயே சென்றாயனின் எதிர்வினை அதிகப்படியாக இருந்ததாக பலருக்குத் தோன்றியிருக்கலாம். நகரத்து மனிதர்களை விடவும் கிராமத்து மனிதர்கள் பொதுவெளியில் தங்களின் உணர்ச்சிகளை அப்படியே கொட்டி விடுவதில் இயல்பானவர்கள். ‘நாகரிகம் தெரியவில்லை’ என்று அதை கொச்சைப்படுத்தி விட முடியாது. ‘திருமணமாகி நாலைந்து வருடங்கள் ஆகி விட்டன. எங்களுக்குக் குழந்தையில்லை. நாங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வோம்’ என்று ஒரு சபையில் முன்பு வாக்கு தருமளவுக்கு சென்றாயனுக்கு இது அடிப்படை உளைச்சலாக இருந்திருக்கிறது. ‘இன்னமும் விசேஷம் ஏதும் இல்லையா?” என்கிற கேள்விகளால் அந்த தம்பதி துரத்தப்பட்டிருப்பார்கள். ‘அப்படி எவரையும் விசாரிக்காதீர்கள்’ என்று சென்றாயன் வலியுடன் வேண்டியதையும் கவனித்திருக்கலாம். அவருடைய நோக்கில் இப்படியொரு பெரிய பிரச்னையிலிருந்து விடுபட்டதை அவருடைய இயல்போடு கொண்டாடித் தீர்த்ததில் எந்தவொரு மிகையுமில்லை. அதை கிண்டலடிப்பதுதான் அநாகரிகம்.

‘இதுவரைக்கும் எங்க அம்மாவை நான் கட்டிப் பிடிச்சதேயில்லை. எழுபது நாளைக்கும் அப்புறம் அவங்களைப் பார்க்கும்போது தன்னாலே கட்டிப்பிடிச்சிட்டேன்’ என்று ரித்விகா சொல்வதைக் கவனிக்கலாம். “வெளில இருந்து பார்க்கும் போது ‘இவங்க நடிக்கறாங்க’ –ன்னு நெறைய பேரு சொல்வாங்க. எனக்கும் கூட அப்படித் தோணியிருக்கு. ஆனா உள்ள வந்து பார்த்த போதுதான் இது பொய்யில்லைன்னு தோணுது” என்று விஜயலஷ்மி சொல்வதையும் கவனிக்கலாம். 

இது போன்ற உணர்ச்சிகரகான சூழல்களில் ஒருவரின் எதிர்வினை மிகையாக இருந்தாலும் கூட நாகரிகம் கருதி ஏற்றுக் கொள்ளுவதே முறையானது. சாவு வீடுகளில் கதறியழுபவர்களிடம் ‘என்ன ஓவரா சீன் போடறே?” என்று நாம் எப்பவாவது கேட்டிருக்கிறோமா?

**

74-ம் நாள் காலை. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்திலிருந்து பாடல் ஒலிபரப்பானது. மகளின் கோரிக்கையை ஏற்று நடனம் ஆடினார் பாலாஜி. பார்ப்பதற்கு நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தன்னுடைய உறவுகள் வரக்கூடிய தினம் என்கிற எதிர்பார்ப்புடன் மும்தாஜ் பரிசாகத் தந்த வெள்ளைச் சட்டையைப் போட்டுக் கொண்டு தயாராக இருந்தார் சென்றாயன். இவர் மும்தாஜை ‘குஷ்பு இட்லி’ என்று கிண்டல் செய்த போது ‘ ரீவைண்டு, லூப், ஸ்லோ மோஷன்’ என்றெல்லாம் பிக்பாஸ் கட்டளையிட, திரும்பத் திரும்ப அவரைத் தொடுவதை மும்தாஜ் விரும்பவில்லை. எனவே, தள்ளி நின்றே சென்றாயன் செய்துகொண்டிருந்தார். 

பெற்றோர் செய்வதை பிள்ளைகளும் நகலெடுப்பதைப் போல பிக்பாஸ் விளையாட்டை அவர் சொல்லாமலேயே போட்டியாளர்களும் தங்களுக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர். ‘பாலாஜியண்ணா ரிலீஸ்’ என்றவுடன் ‘வந்தா ரிலீஸ் போகப் போறேன்’ என்ற வில்லங்கமான அவரின் நகைச்சுவைக்கு வெடித்து சிரித்தார்கள். அவருடைய அபானவாயு பிரச்னை பற்றி கிண்டலாக பேசிக் கொண்டார்கள். 

பிரசவ வார்டில் காத்திருப்பதைப் போல் தவிப்புடன் காத்திருந்த சென்றாயன், ஸ்டோர் ரூமில் ஓர் உருவம் தெரிவதை குறுகுறுவென்று பார்த்தார். அது தன் மனைவி கயல்விழி என்பதை அறிந்ததும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்றார். ‘எல்லோரும் ப்ரீஸ்’ என்று ஒரு விநாடி தாமதமாக பிக்பாஸ் சொன்னது வீண். சென்றாயனை அப்போது எவராலும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது போல. ஓவர் பாசத்தில் மனைவியைக் கீழே தள்ளி விடுவாரோ என்று கூட பயமாக இருந்தது. மற்றவர்களிடம் அறிமுகம் ஆனவுடன் அவரைத் தனியாக அழைத்து கயல்விழி சொன்ன விஷயத்தைக் கேட்டவுடன் சென்றாயன் காட்டிய உற்சாகத்தை ‘உணர்ச்சியின் பிரளயம்’ எனலாம். ‘வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்’ என்ற வாக்கியத்தின் பொருளை சென்றாயனின் உற்சாகத்தின் மூலம் பார்க்க முடிந்தது. இயற்கையின் ஆதார நோக்கமே உயிர் சுழற்சிதான். அதற்காக அது எத்தனை விஷயங்களை உருவாக்கி வைத்திருக்கிறது என்பது பற்றிய விவரங்களை தேடிச் சென்றால் பல ஆச்சர்யமான தகவல்களை அறிய முடியும். தன்னுடைய ரத்த சம்பந்தமான வாரிசின் மூலம் தன்னுடைய இருப்பு இந்த பூமியில் தொடரும் என்று ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறார். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனனியின் கண்களில் தன்னிச்சையாகக் கண்ணீர் வழிந்தது இயல்பானது. 

‘எங்க அப்பா அம்மா வரலையா?’ என்று பிறகு ஆவலாக விசாரித்த சென்றாயன் சற்று ஏமாந்து போய், பிறகு அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் இன்னொரு உற்சாக நடனத்தை ஆடித்தீர்த்து விட்டார். தாயையும் தந்தையும் தூக்கிக் கொண்டு போகும் போது ‘ஒரு அசல் கிராமத்து மனிதனை’ பார்த்த உற்சாகம் நமக்கும் ஏற்பட்டது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு தனிநபரின் சீமந்த விழா நடைபெற்றது பிக்பாஸாகத்தான் இருக்க முடியும். சென்றாயனின் கரைபுரண்ட உற்சாகம் பல்வேறு சமயங்களில் பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. ‘எனக்கு மசாலா மேகி தோசை செஞ்சு தரணும்’ என்று மனைவியிடமிருந்து கோரிக்கை வர, ‘உனக்கு என்ன வேணும் தங்கம்.. இந்த பிக்பாஸ் வீடு வேணுமா.. சொல்லு. எது வேணுமின்னாலும் கொண்டு வர்றேன்’ என்று மலையையே புரட்டிப் போடுமளவுக்குத் தெம்பாகி விட்டார். 

தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதாகட்டும், ஆசீர்வாதம் வாங்குவது ஆகட்டும், சென்றாயன் பாலாஜியை முதலில் தேடுவதைக் கவனிக்கலாம். இந்த ஒரு காரணத்துக்காகவாவது பாலாஜி, சென்றாயனைப் பற்றிப் புறணி பேசாமல் இருக்கலாம். அவர்கள் கிளம்புவதற்கான சமிக்ஞைகள் வந்ததும்.. “பிக்பாஸ் என்னை மட்டும் விட்டுடுங்க.. என்னால முடியல’ என்று சென்றாயன் கதறியது பார்க்க பரிதாபமாக இருந்தது. ‘எழுபது நாளைக்கே இந்த சீனா?” என்று இதைக் கருதுபவர்களும் இருக்கக்கூடும். சில விஷயங்களில் ‘பெரிய துயரம், சிறிய துயரம்’ என்று அளவுகோல் கிடையாது. 

ஏதோ ஒரு சமயத்தில் ‘அம்மா இல்லை’ என்று ஐஸ்வர்யா சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு, சென்றாயனின் அம்மா ‘நான் இருக்கம்மா’ என்று அவரை ஆறுதல்படுத்த முனைய, ஒரு மாதிரியான சங்கடமான சூழல். ‘எல்லாம் இருக்காங்க. நேத்து வந்தாங்க.. நீ இங்க வா” என்று இயல்பாக அதைக் கடக்க வைத்தார் சென்றாயன். (பாலாஜி மீது குப்பை கொட்டிய அன்று – நாள் 45 – இரவில் தன் தரப்பு நியாயத்தை டேனி மற்றும் ஜனனியிடம் விளக்கும் போது ‘எங்க அம்மா செத்துட்டாங்க. அவங்களுக்குத் தெரியுமா… எங்க அம்மா பத்தி தப்பாப் பேசலாமா?’ என்பது போல் ஐஸ்வர்யா ஆதங்கப்படுகிறார். மொழிப் பிரச்னையால் அப்படிச் சொல்லி விட்டாரா என்று தோன்றுகிறது. ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் தன் தாயை இழிவாகப் பேசியவரின் மீது இத்தனை கோபம் கொண்ட ஐஸ்வர்யா, அப்படிச் சொல்லியிருப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது). 

வருகிற அம்மாக்கள் அனைவருமே ‘எல்லோரும் ஜெயிக்கப் போறீங்க. சந்தோஷமா இருங்க. நல்லா விளையாடுங்க’ என்று ஆசீர்வதிப்பதைப் பார்க்கலாம். சென்றாயனின் அம்மாவும் அதையேதான் செய்தார். கயல்விழிக்கு வளையல் அணிவித்து மும்தாஜ் மரியாதை செய்தது நெகிழ்வான காட்சி. (மத அரசியல் தோற்றுப் போகும் இது போன்ற தருணங்களைத்தாம் நாம் அதிகம் உருவாக்க வேண்டும்). சென்றாயனின் பெற்றோர்களின் மூலம் இயல்பான கிராமத்து மனிதர்களைப் பார்க்க முடிந்தது. ‘அய்யா.. என் தங்கம்’ என்று அம்மா ஒருபக்கம் உருக.. ‘லூசுப் பயலே.. ஏன் சும்மா சும்மா. அழறே.. அழக் கூடாது.. ஜெயிச்சுட்டு வா..’ என்று இயல்பான வார்த்தைகளில் தைரியம் சொன்னார் சென்றாயனின் தந்தை. ‘வாய்யா மொட்டை மண்டையா” என்று தன் தந்தையை சென்றாயன் அழைத்துச் சென்றது சுவாரஸ்யமான காட்சி. 

இந்த டாஸ்க்கில் பிக்பாஸின் கட்டளைகளை போட்டியாளர்கள் சில சமயங்களில் சட்டை செய்யவேயில்லை. உணர்ச்சி வெள்ளத்தில் அவை அடித்துச் சென்று விட்டது இயல்பானதொன்று. ‘எந்தக் குழந்தையாக இருந்தாலும் எனக்கு சரி’ என்று பாலின பேதம் பார்க்காத தந்தையாக சென்றாயன் இருந்தது சிறப்பு. ‘சென்றாயன் பிக்பாஸில் வின் பண்றது என்ன.. இதோ வின் பண்ணிட்டானே’ என்று பாலாஜி சொன்னதை, ‘ஆமாம். அதானே வாழ்க்கை.. அதுதான் முக்கியம்’ என்று டேனி ஆமோதித்தது சரியானது. தற்காலிக வெற்றிகளை நோக்கி ஓடும் நேரத்தில் நிரந்தர வெற்றிகளின் ருசிகளை தவற விட்டு விடுகிறோம். 

நித்யா கடிதத்தில் எழுதிய வார்த்தைகளின் புண்படுதலிலிருந்து பாலாஜி இன்னமும் வெளியே வரவில்லை என்று தெரிகிறது. டேனி இது குறித்து நேர்மறையாகப் பேசும் போது.. ‘வேலையைப் பாருய்யா..’ என்பது போல் விலகிச் சென்றார். 

‘விஜயலட்சுமிக்கும் மும்தாஜுக்கும் எப்ப வேணா முட்டிக்கும். இப்பத்தான் லைட்டா ஆரம்பிச்சிருக்கு’ என்று பாலாஜி புறணி பேசிக் கொண்டிருக்கும் போது நித்யாவும் போஷிகாவும் உள்ளே நுழைந்தனர். வழக்கம் போல் சென்றாயன் மிகையான உற்சாகத்தில் குதிக்க, பாலாஜியும் மகிழ்ந்தது போல் எதையோ செய்தார். முன்னாள் போட்டியாளர் என்பதால் நித்யாவை சக போட்டியாளர்கள் உருக்கத்துடன் அணைத்துக் கொண்டனர். ‘ஸாரி உன்னை அழ வெச்சுட்டேன். இந்த ஒன்பது வருஷத்துல நீ கண்ணீர் விட்டு நான் பார்த்ததில்லை’ என்று பாலாஜியிடம் நித்யா வருத்தப்பட்டது நெகிழ்ச்சி. ஆண்களின் கண்ணீரைப் பார்த்தவுடன் பெண்களின் தாய்மையுணர்ச்சி ஓவர்டைமில் வேலை செய்து விடுகிறது. 

பிறகு பாலாஜியிடம் தனிமையில் நித்யா பேசிய காட்சி முக்கியமானது. “நீ மாறிட்டேன்னு மத்தவங்க சொல்றாங்க. ஆனா உண்மைநிலை நமக்கு மட்டும்தான் தெரியும். எத்தனையோ தடவை நீ மாறிட்டேன்னு நெனச்சு நான் ஏமாந்திருக்கேன். இப்ப தெரியற மாற்றம் ஒரிஜினலா –ன்னு எனக்குத் தெரியணும். அதனால நான் அவசரப்படலை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வா. வெளியவும் உனக்கு நூறுநாள் டாஸ்க் இருக்கு. அப்பவும் உன் கிட்ட மாற்றம் தெரிஞ்சா நாம சேர்ந்து வாழறதுல பிரச்னையிருக்காது. போஷிகாவை உன் கிட்ட இருந்து பிரிக்கணும்னு நாங்க எப்பவும் நெனச்சதில்லை’ என்றெல்லாம் பேசிய நித்யாவின் நிதானமான அணுகுமுறை  முதிர்ச்சியானது. உணர்ச்சி வேகத்தில் மறுபடியும் கீழே விழ அவர் தயாராக இல்லை என்பதை அவருடைய நிதானமும் பக்குவமும் காட்டுகிறது. நல்லது நடக்கட்டும். 

“டேனி.. உங்க உத்தி நல்லா போயிட்டிருக்கு. ஆனா சில விஷயங்கள் மாத்திக்கணும். நீங்க ஸ்ட்ராங் பிளேயர்’ என்று டேனிக்கு டிப்ஸ் கொடுத்த நித்யா, ‘மும்தாஜ்.. நீங்க ரெண்டு சைடையும் பார்த்துட்டு பேசணும். மத்தவங்க பலவீனங்களை உங்க ஆயுதமா மாத்திக்காதீங்க” என்று வில்லங்மான டிப்ஸை தர, ‘எந்த விஷயம் புரியலையே.. என் மனசாட்சிக்குத் தெரியும்’ என்று திகைத்துப் போனார் மும்தாஜ். 

பிறகு இதை விஜயலஷ்மியிடமும் விசாரித்தார் மும்தாஜ். ‘வெளிய இருந்து பார்த்தீங்கள்ல..நான் அந்த மாதிரி நடந்துக்கிறதா உங்களுக்குத் தெரிஞ்சுதா, ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?” என்ற கேள்விக்கு மழுப்பிய விஜயலஷ்மி ‘சென்றாயன்.. என்னைக் கொஞ்சம் விடறீங்களா?” என்கிற வசனத்தை மட்டும் க்ளூ மாதிரி சொன்னார். ‘நான் நல்லாப் பண்றேன்னு நித்யா சொல்லிட்டாங்க’ என்று அகம் மகிழ்ந்திருந்தார் ஜனனி. 

அனைவரையும் லிவ்விங் ஏரியா சோபாவில் அமர வைத்த பிக்பாஸ். விஜயலஷ்மியின் குழந்தையின் புகைப்படங்களைக் காண்பிக்க, இளம் தாயான அவர் உருக்கத்துடன் கலங்கி அமர்ந்திருந்தார். ஏழு மாதங்களில் குழந்தையைப் பிரிந்து விட்டு வருவது துயரமானதுதான். புகைப்படத்தை மட்டும் காண்பித்து முடித்து விடுவார்கள் போல என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது விஜயலஷ்மியின் கணவரும் மகனும் ஆச்சர்ய வருகையைத் தந்தது சிறப்பு. சந்தோஷமும் அழுகையுமாக விஜயலஷ்மியின் முகத்தில் பல ரூபங்கள் தெரிந்தன. புதிய சூழலில் பல மனிதர்கள் தம்மை நோக்கி ஓடி வந்த பீதியுடன் இருந்தது குழந்தை. அந்த பயத்தில், தாயின் முகம் கூட சற்று மறந்து விட்டது போல. தந்தையிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. பிறகுதான் தாவிச் சென்றது. 

விஜயலட்சுமியின் குழந்தையிடம் அனைவரும் விளையாடி, அவர்கள் கிளம்பிச் சென்றதும், “குழந்தையை யாரு பார்த்துப்பா” என்று பாலாஜி விசாரித்ததற்கு ‘அவரே பத்து அம்மாவுக்குச் சமம்” என்று விஜயலட்சுமி கூறியதில் தந்தைகளுக்கான செய்தியுள்ளது. 

**

‘இத்துடன் ‘ப்ரீஸ் & ரிலீஸ்’ டாஸ்க் முடிவடைகிறது. தம்முடைய உறவுகளையும் மற்றவர்களின் உறவுகளையும் பார்த்த அனுபவங்களைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ் பகிர்ந்து கொள்ளலாம்’ என்கிற அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டார்.

“என்னோட தம்பி, தங்கச்சி வந்தாங்க. சந்தோஷம். ஆனா எங்க அம்மா, அப்பா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனா மத்தவங்க அம்மா – அப்பா வரும் போது அவங்களை என்னோட பெற்றோர் மாதிரியே உணர்ந்தேன்’ என்பது போல் யாஷிகா குறிப்பிட்டது அருமை. “அம்மாதான் எமோஷனல் ஆனவங்க. ஆனா தங்கச்சி உணர்ச்சிவசப்பட்டது ஆச்சர்யம்” என்றார் ஜனனி. “இந்த விளையாட்டில் ஆர்வம் போய் விட்டது என்று முன்பு கமல் சாரிடம் சொன்னேன். ஆனால் என்னுடைய அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் அந்த நம்பிக்கையின்மையெல்லாம் போய் விட்டது. என்னுடைய எதிர்மறை மனோபாவத்தையெல்லாம் என் அம்மா எடுத்துச் சென்று விட்டார். இனி நம்பிக்கையுடன் இந்த விளையாட்டை விளையாடுவேன்’ என்றார் ஐஸ்வர்யா.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“என்னோட அம்மாவோட ஸ்மெல்லை ரொம்ப நாளைக்கு அப்புறம் உணர்ந்தேன்’ என்று மும்தாஜ் நெகிழ்ந்தது அற்புதமானது. “எங்க அண்ணா என் கிட்ட ரெண்டு வார்த்தை பேசியிருந்தா இன்னமும் சந்தோஷமாகியிருப்பேன்” என்றார். ‘உறவுகள் கூடினால் பேசவும் தோன்றுமோ’ என்கிற விஷயத்தையும் மும்தாஜ் கவனிக்கலாம். ‘பிக்பாஸ் வீடு மாதிரியான அனுபவம் எங்கேயும் கிடைக்காது” என்று மும்தாஜ் சொன்னதும் உண்மைதான்.

“இந்த டாஸ்க் ரொம்ப கஷ்டம். நம்முடைய பெற்றோர் முன்பு நாம் எப்போதும் குழந்தைகள்தாம். என் அம்மாவை இதுவரைக்கும் நான் கட்டிப்பிடிச்சதில்லை. இப்ப செஞ்சேன். பரஸ்பரம் நாம ஒரு ஃபேமிலி –ன்ற உணர்வை இத்தனை நாள் மறைச்சு வெச்சிருந்தோம். இனிமே ஆரோக்கியமான போட்டியை விளையாடலாம்’ என்று தன் வழக்கமான புத்திசாலித்தனத்துடன் பேசினார் ரித்விகா.

“இன்னமும் குழந்தை பிறக்கலையான்னு’ யாரையும் கேட்காதீங்க. அது மிகப்பெரிய வலி” என்று தன் சொந்த அனுபவத்திலிருந்து உபதேசம் செய்த சென்றாயன், தான் தந்தையாகப் போகும் செய்தி மிக்க மகிழ்ச்சியை அளித்திருப்பதாக மறுபடியும் உற்சாகமடைந்தார். “ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த என் காதலி, அதையெல்லாம் விட்டு வந்து இப்போது எனக்காகப் பல சிரமங்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எந்நாளும் மறக்க மாட்டேன். அருகிலிருக்கும் உறவுகளை தவிர்க்காமல் கொண்டாடுங்கள்” என்று சொல்லி நெகிழ வைத்தார் டேனி. 

“இங்க எல்லோரும் நடிக்கறாங்கன்னு வெளில பேசிக்கறாங்க. நானும் கூட அப்படித்தான் நெனச்சேன். ஆனா உள்ள வந்து பார்க்கும் போது அப்படித் தெரியல. உறவுகளை நோக்கி அவங்க ஓடினதுல உண்மைதான் தெரிஞ்சது’ என்று விஜயலட்சுமி கூறியது பார்வையாளர்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம். “நாங்க மறுபடியும் சேரணும்னு ஹவுஸ்மேட்ஸ் உட்பட பல பேர் ஆசைப்படறாங்க. அந்த மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவேன். அப்படிப்பட்ட ஆளா மாறுவேன்’ என்று நேர்மறையாக பாலாஜி சொன்னது சிறப்பு. 

மனிதன் என்பவன் அடிப்படையில் கூடிவாழ விரும்பும் ஓர் உயிரினம். பனிக்கட்டி நீர் போல, சக மனிதனின் மீதான அன்பு அவனுக்குள் உறைந்துதான் கிடக்கிறது. சுயநலமான தருணங்களிலும், செயற்கையான போட்டிகள் நம் மீது திணிக்கப்படும் சூழலிலுமான சமயங்களில் தன்னிலை மறந்து விடுகிறான். இது போன்ற நெகிழச்சியான தருணங்கள் அவனுக்குள் இருக்கும் அன்பை அவனுக்கே வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன என்பதைத்தான் இந்தப் பகுதி நமக்கு உணர்த்துகிறது.