Published:Updated:

ஜனனியா... பாலாஜியா... யார் பிக்பாஸிலிருந்து அவுட்? #BiggBossTamil2

ஜனனியா... பாலாஜியா... யார் பிக்பாஸிலிருந்து அவுட்? #BiggBossTamil2
ஜனனியா... பாலாஜியா... யார் பிக்பாஸிலிருந்து அவுட்? #BiggBossTamil2

ஜனனியா... பாலாஜியா... யார் பிக்பாஸிலிருந்து அவுட்? #BiggBossTamil2

``இன்னும் மூணு மாசத்துக்கு உங்க வாழ்க்கைல சில கஷ்டங்கள் வரும்” என்று ஜோசியக்காரர் சொல்ல, `அப்புறம் சரியாயிடுமா?” என்று வாடிக்கையாளர் ஆவலுடன் கேட்க ``இல்ல. அப்படியே பழகிடும்” என்று அவர் சொல்வதாக ஒரு பழைய நகைச்சுவை உண்டு. பிக்பாஸ் சீஸன் இரண்டுக்கும் இதையே பொருத்திப் பார்க்கலாம் போலிருக்கிறது. `ஏதோவொன்று நடக்கப் போகிறது’ என்கிற எதிர்பார்ப்பிலேயே 75 நாள்கள் கடந்து விட்டன. சரி, மிச்சத்தையும் இப்படியே கழித்து விடுவோம். 

சென்றாயனுக்கும் பாலாஜிக்கும் இடையே நிகழ்ந்த ஒரு முட்டலை வைத்து அதிக நேரத்தை ஓட்ட வேண்டிய அளவுக்கு பிக்பாஸின்  நிலைமை மோசமாக இருக்கிறது. இத்தனை நாள்களாக சென்றாயனை, பாலாஜி சிறுமைப்படுத்துவதைப் பற்றித் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால், இந்த முறை பாலாஜியின் பக்கம் பேச வேண்டிய சூழல். சென்றாயன் `வெள்ளந்தியாக நடிக்கிறார்’ என்பதில் எத்தனை சதவிகிதம் உண்மையிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், தான் ஒரு மந்த புத்திக்காரர் என்பதை சென்றாயன் இன்று நிரூபித்தார்.

தலைவருக்கான போட்டியில், கூடையை முதுகில் மாட்டிக் கொண்டு எறியப்படும் பந்துகளைப் பிடித்து கூடையில் சேகரிக்க வேண்டும் என்பது டாஸ்க். சென்றாயன் வருகிற பந்துகளை எல்லாம் விட்டு விட்டு நீச்சல் குளத்தில் இருந்த ஒன்றிரண்டு பந்துகளை மீன்  பிடிப்பது போல் இறங்கி சாவகாசமாக பிடித்துக் கொண்டிருந்தார். இதற்காகக் கூடையைக் கழற்றி வைத்து விட்டார். இது குறித்து பாலாஜி சென்றாயனை எச்சரித்துக் கொண்டிருந்தார். ஐஸ்வர்யாவும் இது போல் செய்தார். கூடையை முதுகில் தொடர்ந்து மாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அடிப்படையான விதி. தான் கூடையைக் கழற்றி வைத்ததை போட்டி முடிந்த பிறகு பல்வேறு விதமாக நியாயப்படுத்திய சென்றாயன், பின்பு `ஓ.. கழற்றி வைத்ததால் நான் போட்டிக்குத் தகுதியற்றவன் ஆகி விட்டேனோ?” என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார். பிறகு ``ஏன் அப்பவே சொல்லலை.. நான் கஷ்டப்பட்டு மீதப் போட்டியை செஞ்சிருக்க வேணாமில்லை” என்று பாலாஜியிடம் தொடர்ந்து மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார்.

`ஒரு போட்டியின் இடையில் தகுதி நீக்கம் பற்றி சொல்ல முடியாது. முடிந்த பிறகுதான் சொல்லுவார்கள்’ என்று விஜயலட்சுமி அளித்த விளக்கத்தையும் அவரால் ஏற்க முடியவில்லை. பாலாஜிக்கும் இவருக்கும் இதனால் கசப்பு உருவானது. `இவன் ரெண்டாவது தடவை இப்படிப் பண்றான்” என்று பாலாஜி கோபப்பட்டார். அடுத்த வாரத்துக்கு மீண்டும் தலைவராவதிலும் அதன் மூலம் இறுதிப்போட்டியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்வதிலும் சென்றாயனுக்கு உள்ள துடிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆனால், ஒரு போட்டியில் தாம் செய்த விதிமீறலைப் பற்றி அறிந்தவுடன் ஒப்புக்கொண்டு விலகுவதுதான் சிறந்தது. விதம் விதமாக அதை நியாயப்படுத்துவதின் மூலம் தன்னுடைய அறியாமைதான் அம்பலமாகும் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. தான் தலைவர் பதவியில் இருந்த போது அதற்குரிய ஆளுமையுடன் கூட அவரால் செயல்பட முடியவில்லை. அவருடைய வெள்ளந்தித்தனம் காரணமாக அவரை ஒப்புக்குத்தான் தலைவராக மற்றவர்கள் மதித்தார்கள். தினம் ஒரு பதினைந்து நிமிடம் `கிராமத்து விஷயங்களைப் பற்றிப் பேசலாம்’ என்று அவர் கொண்டு வந்த நியாயமான முன்னெடுப்பு முதல் நாளிலேயே கலகலத்து விட்டது. அடுத்தடுத்த நாள்களில் நடந்தது போல் தெரியவில்லை. இருப்பதிலேயே பலவீனமான தலைவராக இருந்தார் சென்றாயன்.  

**

75-ம் நாள் காலை. `அடடா மழைடா’ என்ற பாடலைப் போட்டு சென்னைவாசிகளை வெறுப்பேற்றினார் பிக்பாஸ். `அட! தூறல் போடுகிறதே!’ என்று மகிழ்ச்சியடையும் வகையில்தான் சென்னை இருக்கிறது. அடை மழையெல்லாம் இல்லை. 

`தினம் ஒரு சமையல்’ வரிசையில் இன்று சென்றாயனின் நளபாகம். `பிரியாணி பேளா’ என்ற வஸ்துவை தயார் செய்தார். இதையொட்டி அரிசியின் முக்கியத்துவம் பற்றி ஹவுஸ்மேட்ஸைகளை பேசச் சொன்னார் பிக்பாஸ். எவராவது இப்படி நிச்சயம் சொல்வார்கள் நான் எதிர்பார்த்தது போலவே `விவசாயி, உழைப்பு’ என்றெல்லாம் `கட்டுரைத்தனமாக’ பேசினார் ஜனனி. தன் வருங்கால கணவரை விருந்துக்கு அழைத்திருந்த விஜயலஷ்மி, நிறைய பதார்த்தங்களை செய்து விட்டு சோறு தயார் செய்ய மறந்திருந்த பழைய நகைச்சுவைக் கதையைச் சொன்னார். (இதுதான் அரிசியின் முக்கியத்துவமா?!). 

அரிசியை உருவாக்கும் ஏழை விவசாயிகளே, வருடத்துக்கு ஒருமுறைதான் அரிசியைச் சுவைக்கும் பரிதாபகரமான சூழல் ஒரு காலத்தில் இருந்தது. களி, கூழ் என்பது தினம் உணவாக இருக்கும் போது பண்டிகை சமயங்களில் மட்டும்தான் அரிசி உணவு சமைக்க முடியும். இந்தப் பின்னணியைப் பற்றிய அனுபவத்தை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார் சென்றாயன். 

`ப்ரீஸ் & ரிலீஸ்’ டாஸ்க்கின் பாசக் காட்சிகளில் பிக்பாஸின் உத்தரவை ஹவுஸ்மேட்ஸ்கள் பலமுறை மீறிய போதே நினைத்துக் கொண்டிருந்தேன். கல்லுளி மங்கனான பிக்பாஸ் நிச்சயம் இதற்கு கடும் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், மீறல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண்ணைச் சற்று குறைப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தான் வெறும் கல்லுளிமங்கன் அல்ல, பாறாங்கல்லுளி என்பதை பிக்பாஸ் நிரூபித்தார். ஜீரோ மதிப்பெண்ணை அளித்து ஹவுஸ்மேட்ஸ்களுக்கு `வெவ்வே’ காட்டினார். போட்டியாளர்கள் டாஸ்க்கை ஒழுங்காகக் கடைப்பிடித்தற்காக சில மதிப்பெண்ணை அளித்திருக்கலாம். `எங்களுக்கு உறவுகள்தான் முக்கியம், லக்ஸரி பொருள்கள் அல்ல’ என்று போட்டியாளர்கள் சொன்னார்கள். (வேறு வழியும் இல்லை!).

சென்றாயனின் தலைமைப் பொறுப்பு முடிவடைவதால் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடந்தது. எவிக்ஷன் பட்டியலில் இருக்கும் பாலாஜி, டேனி மற்றும் ஜனனி ஆகியோர் இதில் கலந்துகொள்ள முடியாது. முன்னரே விவரித்தபடி, குறிப்பிட்ட இடைவெளிகளில், வெளியிலிருந்து எறியப்படும் பந்துகளை முதுகில் சுமந்திருக்கும் கூடையில் சேமிக்க வேண்டும். எவர் அதிக எண்ணிக்கையிலான பந்துகளை சேமித்திருக்கிறாரோ அவரே தலைவர். பாலாஜி இதற்கு நடுவர். 

போட்டி ஆரம்பமாகியது. வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் பந்துகள் தொடர்ந்து விழுந்தன. கூடைகளில் பந்துகள் நிரம்பினாலும் அவர்கள் குனிந்து சேகரிக்கும் போது பந்துகள் கீழே விழும் அபாயம் இருந்தது. யாஷிகா மிகத் திறமையாக விளையாடினார். கூடையை ஒரு வசதியான கோணத்தில் மாட்டிக் கொண்டு பந்துகளை பாய்ந்து பாய்ந்து சேகரித்தார். உடல்நிலை உபாதையையும் மீறி முட்டிக்கால் போட்டு தாவிக் கொண்டிருந்தார் மும்தாஜ். நீச்சல்குளத்தில் விழுந்த பந்துகளை, சுத்தம் செய்யும் வலையின் மூலம் விஜயலஷ்மி கைப்பற்ற, ஐஸ்வர்யாவும் பிறகு அதைக் காப்பியடித்தார். (சொந்தமா எதுவும் செய்யறதில்ல!). ரித்விகா விரைவிலேயே சோர்ந்து போனார். 

``இது ஒண்ணும் அமெரிக்க அதிபர் தேர்தல் இல்லை. ஈஸியா விளையாடுங்க. கைய காலை உடைச்சுக்காதீங்க” என்பது போல் போட்டியில் ஈடுபடாதவர்கள் இவர்களை ஜாலியாக எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே சொன்னது போல் வருகிற பந்துகளை விட்டு விட்டு நீச்சல் குளத்தில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தார் சென்றாயன். போட்டியாளர்கள் ஓடி ஓடி பந்துகளை சேகரித்ததில் மூச்சு வாங்கியதில் அந்தச் சத்தம் மைக்கில் நாராசம் பாய்ச்சுவதுபோல் கேட்டது. 

`இந்த மாதிரி ஜாலியான டாஸ்க்கெல்லாம் நான் இருக்கும் போது வர மாட்டேங்குது” என்று ஜனனி சிணுங்கிக் கொண்டிருக்க, ``டேனிய ஒக்கார வெச்சுட்டாங்க பாரு. அதான் மேட்டர். அது சரி, டாஸ்க்குகளில் என்னுடைய பங்களிப்பு பற்றி நீ என்ன நெனக்கறே?” என்று கெத்தாக பாலாஜி கேட்க, `ரொம்பக் கேவலமாக இருக்கு” என்று அவரை வாரினார் ஜனனி. இப்படியே அவர்கள் ஒருவரையொருவர் பரஸ்பரம் ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்தனர். `ரித்விகாவுக்கு முடியலைன்னா அவ பந்துகளையெல்லாம் விஜயலஷ்மிக்கு கொடுத்துடச் சொல்லிடலாம்” என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார் ஜனனி. `தமிழ்ப் பெண்கள்’ கூட்டணி போல. `நான்தான் ஜெயிக்கப் போறேன். நீ சும்மா உக்காரு’ என்று ரித்விகாவிடம் சொல்லும் அளவுக்கான தன்னம்பிக்கையுடன் இருந்தார் விஜயலட்சுமி. 

ஆனால், சாமர்த்தியமாகவும் சமயோசிதமாகவும் விளையாடிய யாஷிகா வெற்றி பெற்றார். ``உனக்கு கால்ல அடிபட்டிருக்கு. பார்த்து விளையாடு. இனிமே வர்ற டாஸ்க் எல்லாம் கஷ்டமா இருக்கும்’ என்று ஐஸ்வர்யாவையும் எச்சரிக்க அவர் தவறவில்லை. மஹத்தின் வெளியேற்றத்துக்குப் பிறகு தங்கள் கூட்டணி பலவீனமாக உள்ளதால், டாஸ்க்குகளில் வெற்றி பெறுவதின் மூலம்தான் தன் முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்கிற ஆவேசம் யாஷிகாவிடம் தென்படுகிறது. இந்தப் போட்டியில் வெல்வதின் மூலம் இறுதிப் போட்டிக்கு நகரும் சக்தி தரப்படும் என்று வேறு பிக்பாஸ் உசுப்பேற்றியிருந்தார். ஆக 163 பந்துகளைப் பொறுக்கி தலைவரானார் யாஷிகா. (சிறந்த பொறுக்கிகள்தாம் தலைவராக முடியும் என்று நடைமுறை விஷயங்களை வைத்து இந்த வாக்கியத்தைத் தவறாக வாசித்து விடாதீர்கள்!)

போட்டியை முடித்து வந்தவுடன், கட்டுரையின் தொடக்கத்தில் விவரிக்கப்பட்டிருந்த படியான வாதப் பிரதிவாதங்கள், பாலாஜிக்கும் சென்றாயனுக்கும் இடையில் ஆவேசமாக நடந்தன. `அப்ப சில பேருக்கு மட்டும் பாரபட்சம் பார்ப்பீங்களா?” என்று அர்த்தமில்லாமல் கோபித்துக் கொண்டு சென்றார் சென்றாயன். ``இங்க இப்ப ஆறு மஹத் இருக்காங்க. ஒவ்வொருத்தரையும் சமாளிக்கணும். இவனைப் பாவம்.. பாவம்.. னு சொல்லியே உசுப்பேத்துறாங்க’ என்று டேனியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பாலாஜி.

**

``உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக மகிழ்ச்சியான தருணம் மற்றும் ஒரு வருத்தமான தருணம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளுமாறு போட்டியாளர்களுக்கு அடுத்த டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ்.

``எங்க பொண்ணு போஷிகாவின் பிறந்த நாளை வெளிநாடுகளில் கொண்டாடுமளவுக்கு நிலைமை இருந்தது சந்தோஷம். அவளைப் பிரிந்திருப்பது துயரம்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் பாலாஜி. விஜயலஷ்மி விவரித்த இரு சம்பவமும் உண்மையாக இருக்கலாம் என்றாலும் எழுதப்பட்ட திரைக்கதை போலவே இருந்தது. (இவர் இயக்குநர் அகத்தியனின் மகள் என்பது அறியாதவர்களுக்கான ஒரு தகவல்). `பாலா படத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்தை’ மகிழ்ச்சியானதாகத் தெரிவித்த ஜனனி, வர்க்க வித்தியாசம் காரணமாக உடைந்து போன தன் காதல் அனுபவத்தைத் துயரமான தருணமாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஐஸ்வர்யா விவரித்ததும் அதே போன்று பிரிந்த காதலைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்வதாக இருந்தது. இந்தத் தோல்விகள்தாம்  வாழ்வில் இன்னமும் முன்னேறுவதற்கான உத்வேகத்தைத் தந்ததாக இருவரும் குறிப்பிட்டார்கள். 

`மிகுந்த சிரமங்களுக்குப் பிறகு சொந்த வீடு வாங்கிய அனுபவத்தை’ மகிழ்ச்சியானதாகக் குறிப்பிட்டார் ரித்விகா. நடுத்தரவர்க்கத்தினர் அனைவருக்குமே உள்ள கனவு இது என்கிற வகையில் ரித்விகா குறிப்பிட்டதை நெருக்கமாக உணர முடிந்தது. ``மிகக் குறைந்த சம்பளத்தில் கூட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பொருளாதாரக் காரணங்களால் அவை வெளிவராது. `துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தையும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், அது வெளிவந்து புகழ் கிடைத்து அதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்த தருணம் முக்கியமானது’ என்று தன் அனுபவத்தை யாஷிகா பகிர்ந்துகொண்டது அருமை. 

சென்றாயன் விவரித்த அனுபவங்கள் நெகிழ்ச்சியானவை.``சினிமால எவ்வளவோ வேலை செஞ்சிருக்கேன். கஷ்டப்பட்டிருக்கேன். ஒரு முறை சூட்டிங்ல ஓரமா உட்கார்ந்திருந்தப்ப `ரிச் பாய்ஸ் இருந்தா வாங்க’-ன்னு மாஸ்டர் கூப்பிட்டாரு. எனக்கு அப்ப அதோட அர்த்தம் தெரியல. நான் முன்னாடி போய் நின்னேன். என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ரொம்ப வேதனையா இருந்தது. பிறகு சில வாய்ப்புகள் கிடைச்சாலும் கூட `டயலாக்’ சரியா சொல்லாம சொதப்பிடுவேன். `பொல்லாதவன்’ படத்தின் மூலமாகத்தான் எனக்கு ஒரு பிரேக் கிடைச்சது. அதற்கு அப்புறம் என்னை கிண்டலடிச்சவங்க கூட பாராட்டினாங்க’ என்றார் சென்றாயன். (ஆம்! பொல்லாதவன் திரைப்படத்தில் சிறிது நேரமே வந்தாலும் சென்னைவாசியின் அசலான மொழியைப் பேசி அசர வைத்திருந்தார் சென்றாயன். சினிமா பற்றிய என் சமூகவலைதளக் குறிப்புகளில் பலமுறை நான் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன்). 

டேனி விவரித்த சம்பவம் இதைவிடவும் நெகிழ்ச்சியானது. அந்தத் துயரச் சம்பவத்தை அத்தனை அருமையாக விவரித்தார். அவர் கூடவே பயணம் செய்த அனுபவம் ஏற்பட்டது. அவருடைய தந்தை இறந்த சமயத்தில் ஆம்புலன்ஸில் ஏற்றி சொந்த ஊருக்குக் கொண்டு சென்ற போது ஆம்புலன்ஸுக்குத் தருவதற்கான பணமில்லாமல் அவதிப்பட்ட சம்பவத்தை, திகில் பட அனுபவம் போல் விவரித்தார். `நெருக்கடியான சந்தர்ப்பங்களுக்காக பணத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற அவரது உபதேசம் முக்கியமானது. 

``என் அண்ணனின் மகனும் என் தங்கையும் பிறந்த சமயத்தில் அருகிலேயே இருந்தேன். அவர்களை முதலில் கையில் ஏந்திய அனுபவம் மகத்தானது. நானே அம்மாவான தருணமாக உணர்ந்தேன்’ என்று மும்தாஜ் விவரித்த அனுபவம் கவிதைத்தனமானது. 

யாஷிகாவின் கூடையில் இருந்து விழுந்த பந்துகளை திருப்பிக் கொடுத்த மும்தாஜின் பெருந்தன்மையை சர்காஸ்டிக்காகப் பாராட்டினார் பாலாஜி. ``விஜயலஷ்மி எடுத்ததைப் பார்த்து நானும் முதல்ல எடுத்திட்டேன். ஆனா மனசு உறுத்திச்சு. நைட்டு என்னால தூங்க முடியாது’ என்றெல்லாம் அதற்கு விளக்கமளித்தார் மும்தாஜ். `அப்ப நீங்க பிக்பாஸ்ல ஜெயிக்கும் போது யாஷிகா அழுதா, அதைத் தூக்கி கொடுத்துடுவீங்களா?” என்று விஜயலட்சுமி லாஜிக்காக மடக்க முயல, `அது மக்கள் ஜெயிக்க வெச்சது’ என்று பார்வையாளர்களுக்கு ஐஸ் வைக்கும் நோக்கில் நாடகத்தனமான விளக்கத்தை அளித்தார் மும்தாஜ். 

`அது என் உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றி” என்று மும்தாஜ் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். மட்டுமல்ல, `மற்றவர்களின் கூடையில் இருந்துதான் எடுக்கக் கூடாது. கீழே விழும் பந்துகளை எடுக்கலாம்’ என்று விதியிருக்கிறது. `இன்னொருவரின் உழைப்பை அபகரிக்கவில்லை’ என்பது போல் மும்தாஜ் சொல்வது பாவனையே. முந்தைய டாஸ்க் ஒன்றில் எதிரணி சிரமப்பட்டுச் சம்பாதித்து வைத்திருந்த பணத்தைப் பெட்டியிலிருந்து எடுக்கும் போது இந்த அறவுணர்வு எங்கே போனது என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஒருவேளை இந்தச் சமயத்தில் மட்டும் மனசாட்சி உறுத்தியதோ, என்னமோ. யாஷிகாவுக்கு விட்டுத் தந்ததுதான் பாலாஜி குழுவின் முக்கியமான கோபம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

``இப்போதுதான் வீடு சண்டைகளை மறந்து மகிழ்ச்சியான சமநிலைக்கு வந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் விஜயலஷ்மி குட்டையை மறுபடி குழப்ப வேண்டாம். அவர் வெளியிலிருந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வந்திருப்பதால் அவருக்கு சில அனுகூலங்கள் இருக்கின்றன’ என்பது போல் மும்தாஜூம் டேனியும் பேசிக் கொண்டிருந்தார்கள். நீச்சல் குளத்தில் விழுந்த பந்துகளை வலையின் மூலம் முதலில் எடுத்த விஜயலஷ்மி பிறகு அந்த வலையை நீச்சல் குளத்திலேயே போட்டதும், அதை ஐஸ்வர்யா எடுத்து வைத்த போது மீண்டும் எடுத்துப் போட்டதின் மூலம் தன் அதிபுத்திசாலித்தனத்தை விஜயலஷ்மி காட்டுவதில் மும்தாஜுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. எப்படியாவது போட்டியை வெல்லலாம் என்பது ஒருவகை. ஸ்போர்ட்மேன்ஷிப்போடு விளையாட்டை ஆடுவது ஒருவகை. அவரவர்களின் தேர்வு இது. முதிர்ச்சியும் பக்குவமும் உள்ளவர்கள் இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். 

`உங்க கல்யாணத்துக்கு ஒரு பவுன் மோதிரம் போடணும்” என்று வெள்ளைச் சட்டைக்குப் பிறகு மும்தாஜிடம் இன்னொன்றுக்கு அடிபோடும் சென்றாயனின் கிண்டலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. 

இன்று நாட்டாமை வரும் நாள். கடந்த வாரச் சண்டைக்காட்சிகள் முடிந்து `லாலாலா’ காட்சிகள் இந்த வாரத்தைப் பெரும்பான்மையாக ஆக்கிரமித்து மீண்டும் சண்டைக்காட்சிகள் தொடரக்கூடிய அடையாளத்துடன் முடிந்திருக்கிறது. அதிக சர்ச்சைகள் ஏற்படவில்லை. எனவே பஞ்சாயத்துக்கு அதிக வேலையில்லை. `உறவுகளின் அருமை’யைப் பற்றி ஆண்டவர் இன்று அதிகம் பேசக்கூடும். 

டேனி, பாலாஜி, ஜனனி என்று எவிக்ஷன் பட்டியலில் உள்ள மூவரில் கடைசி நபருக்கு ஆபத்து அதிகம் இருப்பது போல் யூகிக்க முடிகிறது. பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு