Published:Updated:

அல்லக்கை... அராத்து... டுபாக்கூர்... யார் ஜெயிப்பார் பிக்பாஸில்? #BiggBossTamil2

அல்லக்கை... அராத்து... டுபாக்கூர்... யார் ஜெயிப்பார் பிக்பாஸில்? #BiggBossTamil2
அல்லக்கை... அராத்து... டுபாக்கூர்... யார் ஜெயிப்பார் பிக்பாஸில்? #BiggBossTamil2

அல்லக்கை... அராத்து... டுபாக்கூர்... யார் ஜெயிப்பார் பிக்பாஸில்? #BiggBossTamil2

பிக்பாஸ் சீஸன் 2-ஐ வெல்லக்கூடியவர்கள் என்று நான் கணித்திருந்த போட்டியாளர்களில் முதன்மையானவரான டேனி இன்று வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.தொடக்கத்தில் இவரை அப்படிக் கணிப்பதற்கான எவ்வித அடையாளமும் தென்படவில்லை. ஒரு சாதாரண குறும்புத்தனமான இளைஞராகத்தான் அறிமுகமானார். தலைமுறை இடைவெளி காரணமாக நடுத்தர வயது மற்றும் இளம் வயது என்கிற கூட்டணி தன்னிச்சையாக அங்கு உருவானது. மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா என்ற இளைஞர் கூட்டணியுடன் டேனி இணைந்தது தன்னிச்சையானது. ஆனால் அந்தக் குழுவின் லீடர் என்கிற மாதிரியான தவறான அபிப்ராயத்தைப் பொன்னம்பலமும் பாலாஜியும் தொடர்ந்து பேசுவதின் மூலம் உருவாக்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டணியின் மூளை என்று யாஷிகாவை ஒருவகையில் சொல்ல முடியும். 

“நீதான் அவர்களை தவறாக வழிநடத்துகிறாய்” என்கிற புகாரை பொன்னம்பலம் தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தார். ‘பாட்டுப்பாடுவது, கத்துவது’ போன்ற விஷயங்கள் பாலாஜிக்கும் பிடிக்கவில்லை. டாஸ்க்குகளில் ஆர்வமாகவும் அக்கறையுடனும் டேனி பங்கேற்பதின் மூலம் முக்கியமான போட்டியாளராக அவர் உருவாகிக்கொண்டிருந்தது அவர்களை உறுத்தியிருக்கலாம். டேனியே விவரித்தபடி யாஷிகா கூட்டணியில் அவர் முழுவதுமாக ஐக்கியம் ஆகவில்லை. மஹத்தைப் போன்று யாஷிகா ஆட்டி வைக்கும் பொம்மையாகவும் அவர் மாறவில்லை. மேலும் மஹத்தின் கண்களை காதல் மறைத்திருந்தது. பட்டும் படாமல் அந்தக் கூட்டணியில் இருந்த டேனி, ஒரு கட்டத்துக்குப் பிறகு பாலாஜியின் தொடர்ந்த எச்சரிக்கை காரணமாக விலகிவந்தார். மஹத்தின் உடல் சார்ந்த வன்முறை இந்த உடைவுக்கு ஒரு காரணமாக இருந்தது. பிறகு சில சமயங்களில் மும்தாஜூடனும் சில சமயங்களில் பாலாஜியுடனும் நெருக்கமாக இருந்தார், டேனி. மற்றவர்களைப் போலவே இவரும் புறம் பேசினார். டாஸ்க்குகளில் வெல்வதற்காக சில ஆவேசமான வழிமுறைகளைப் பின்பற்றினார். மற்றபடி இதர சமயங்களில் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுத்தலுடனும் இயங்கினார். தம் மீது வைக்கப்பட்ட புகார் காரணமாக (குறிப்பாக வைஷ்ணவி) குறும்புத்தனங்களைச் சுருக்கிக்கொண்டார். 

யாஷிகாவைப் போன்று பின்னணியில் நின்று டேனி எவரையும் ஆட்டி வைக்கவில்லை. மஹத் மற்றும் ஐஸ்வர்யா போன்று இன்னொருவர் ஆட்டி வைக்கும் பொம்மையாகயும் இல்லை. பாலாஜியைப் போன்று கெட்ட வார்த்தைகளோ, புறணியோ அதிகம் பேசவில்லை. ஜனனி மற்றும் ரித்விகா போன்று இனம் சார்ந்த குழுத்தன்மையைக் கடைப்பிடிக்கவில்லை. மும்தாஜ் போன்று அன்பு செலுத்தி எவரையும் கவர முயலவில்லை. சென்றாயனைப் போல் வெள்ளந்தியாக இருக்கவும் இல்லை. 

இத்தனை தகுதிகள் இருந்தும், ‘பழுத்த மரம் கல்லடி படும்’ என்கிற பழமொழியின்படி எப்படியோ பொதுச் சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகி இன்று வெளியேறியிருக்கிறார்.

எவிக்ஷன் கார்டு மூலம் டேனியின் வெளியேற்றம் உறுதி என்றாகிவிட்ட பிறகு பந்து விளையாட்டு, கூண்டு விளையாட்டு போன்ற நேரக்கடத்தல்களைச் செய்திருக்க வேண்டியதில்லை. ‘இதைத்தானே அவனும் சொன்னான். இதுக்கு எதுக்கு யூடர்ன் போட்டு வந்து எட்டி உதைச்சு, டேபிளையெல்லாம் உடைச்சிருக்கே?” என்கிற ‘மருதமலை’ வடிவேலு காமெடி மாதிரியே இவை ஆகின. 

பொதுவாக மக்களின் வெறுப்புக்கு ஆளானவர்களை வெளியே அனுப்பும் போது சில அன்பான, பாதுகாப்பான வார்த்தைகளைச் சொல்லியே கமல் அனுப்பி வைப்பார். ‘ஒரே அடியில் நாக்அவுட் பண்ணிடுவேன்’ என்று துள்ளிய மஹத்துக்கே அந்தக் கரிசனம் கிடைத்தது. ஆனால் டேனியை அனுப்பும்போது ‘வெளியே போய் பாருங்க... அப்பத்தானே தெரியும்’ என்று இந்தக் கரிசனத்தைக் கமல் காட்டாமல் இருந்தது ஏனென்று புரியவில்லை. என்றாலும், பிறகு சில நேர்மறையான உபதேசங்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

எனவே, வீட்டில் இப்போது பெண்களின் ஆதிக்கம் அதிகமிருக்கிறது. அப்பிராணிகளான பாலாஜி மற்றும் சென்றாயனின் பாடு சிரமம்தான். வெற்றி பெறுவதற்கான ஆர்வமும் தகுதியும் இல்லாத பாலாஜி போட்டியில் நீடிக்கிறார். ஆனால், போதுமான தகுதிகள் உள்ள டேனி வெளியேறுகிறார். ஒருவகையில் நடைமுறையில் உள்ள அபத்த நகைச்சுவையையே இது பிரதிபலிக்கிறது. உடல்பலத்துடன் மூளை பலமும் உள்ள யாஷிகாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது. 

**

எவிக்ஷன் கவருடன் நிகழ்ச்சியின் உள்ளே நுழைந்த கமல், ‘ஜெயிக்கறவங்களை எனக்குப் பிடிக்கும். அதே போல் ஜெயிப்பதற்காகப் போராடறவங்களையும் பிடிக்கும். வலிமையான சக போட்டியாளர்கள்தாம் அந்த வெற்றிக்கு மேலும் பொருள் சேர்க்கிறார்கள், போட்டியை சுவாரஸ்யப்படுத்துகிறார்கள் என்பது போல் முன்னுரை வழங்கிய கமல், ‘இந்த விருதை வென்றால் அது குறித்து என்ன சொல்வீர்கள் என்கிற வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் தர விரும்புகிறேன். விருது உரையை வழங்குங்கள்’ என்றார். 

‘இதுவரை என் வாழ்க்கையில் பரிசு என்கிற விஷயத்தையே வாங்கியதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘ஸ்கூல் சர்டிஃபிகேட், சமையல் போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து இறுதிப் போட்டியையும் வென்று பரிசு வாங்கியிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி’ என்று முதலில் சென்றாயன் பேச, ‘கடகடன்னு பேசிட்டீங்க. அப்போ தயார் செஞ்சு வெச்சிருந்தீங்க போல” என்று கமல் கிண்டலடித்தார். (யாருக்குத் தெரியும், டேனி சொன்னது போல முயல் – ஆமை கதையாகக்கூட சீஸன் 2 முடியலாம்.) 

மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா போன்று அயல் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் ‘தமிழ்நாட்டின்’ மீது அதிகப் பிரியம் காட்டியது புரிந்துகொள்ளக்கூடியது. `அழாமப் பேசணும்” என்று கமலால் ஜாலியாக எச்சரிக்கப்பட்ட மும்தாஜ், ‘கடந்த எட்டு வருடமாக எனக்குப் படம் இல்லை. அம்மா திரும்பி வரச் சொன்னாங்க. ஆனா தமிழ்நாடுதான் என் வீடு’ என்று நெகிழ்ச்சியானார். ‘வெற்றியை எப்பவுமே தூரத்துல இருந்துதான் ரசிச்சிருக்கேன். இப்ப என் கைல இருக்கு. என்னை ஏளனமாப் பார்த்தவங்களுக்கு இதன் மூலம் பதில் சொல்லியிருக்கேன்” என்று தன்னம்பிக்கை உற்சாகத்துடன் பேசினார் ரித்விகா. “இந்த நாற்பது நாள்லயே வின் பண்ணியிருக்கேன்னா, என்கிட்ட நூறு நாள் இருந்தா பிக்பாஸாவே ஆகியிருப்பேன்’ என்பது போல் ஓவர் தன்னம்பிக்கையுடன் பேசினார், விஜயலஷ்மி.

“அதிக சினிமா வாய்ப்பு இல்லாம இருந்தேன். அதிர்ஷ்டம் இல்லையோன்னு டிப்ரஷனா இருந்தது. பிக்பாஸ் மூலம் வாய்ப்பு வந்தது. எல்லாத்துக்கும் ஒரு டைம் வரும். சோர்ந்து போகாம அந்த நேரத்துக்காகக் காத்திருங்கள்’ என்பது ஜனனியின் செய்தி. கமலை `அப்பா’ என்று குறிப்பிட்டு அதிர்ச்சியளித்த பாலாஜி ‘ரெண்டு விஷயத்துல ஜெயிச்சி புதிய மனிதனாக இருக்கிறேன்’ என்று உருக்கமாகக் கூறினார். ‘என்னை இந்தப் பரிசு மேலும் மேம்படுத்தியிருப்பாக உணர்கிறேன்’ என்றார், டேனி. (இந்த ‘மேம்பாடு’ என்கிற வார்த்தையை இவர் விடறதா இல்லை போலிருக்கிறது!). 

‘தமிழக மக்களுக்கு நன்றி’ என்று ஐஸ் வைத்த யாஷிகா, 19 வயசுல ஒருத்தர் இத்தனை பெரிய பரிசை வெல்ல முடியும்ங்கிறது சாதனைதான்’ என்கிற மாதிரி புளகாங்கிதமடைந்தார். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்பதை தன் மழலைத் தமிழில் சொன்ன ஐஸ்வர்யா, ‘இ்நத வெற்றியை தமிழக மக்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’ என்று ஒரே போடாகப் போட்டார். (அப்போ ஆர்மி... இனி அரசியல் பேரவையா கன்வர்ட் ஆயிடும் போல!)

“இப்படி நீங்க எல்லாம் பேசறதைப் பார்க்க சந்தோஷமாயிருக்கு. போட்டியில் வெல்வதைவிடவும் அதில் உற்சாகமாகப் பங்கெடுப்பது முக்கியம். அந்த வகையில் இதில் தொடர்ந்து ஆர்வமாகப் பங்கெடுப்பவர்கள் பார்வையாளர்கள்தாம்’ என்று பார்வையாளர்களுக்கு அல்வா கலந்த பெரிய ஐஸ்கட்டியைப் பரிசாகத் தந்தார் கமல். ‘இந்த சீஸன் முடிஞ்சதும் அவங்களுக்கு ஒண்ணும் கிடைக்கப் போறதில்லை. இருந்தாலும் ஆர்வமாப் பங்கெடுத்துக்கறாங்க’ என்றும் சொன்னார். (‘அகக் கண்ணாடி, சுயபரிசீலனை’ன்னு நெறைய வியாக்கியானம் சொல்லிட்டு இப்போ இப்படிச் சொல்றீங்களே ஆண்டவரே?!)

ஓர் இடைவெளிக்குப் பின் திரும்பிய கமல் எவிக்ஷன் சடங்கைத் தொடங்கினார். சில பல விளையாட்டுகளுக்குப் பின் இதை வெளிப்படுத்துவது என்றானது. முன்னமே டேனியைத் தேர்வு செய்துவிட்டதால் இந்த விளையாட்டுகள் எல்லாம் ஒருவகையில் அபத்தம் என்றானது. பாலாஜிக்குப் பச்சைப் பந்து கிடைத்ததும், டேனி அடைக்கப்பட்டிருந்த கூண்டு திறக்கப்பட்டதும் கவனமாக தீர்மானிக்கப்பட்டிருந்தன. 

இதற்கு முன்பாகப் போட்டியாளர்களை இருக்கையில் காணாமல் விசிலடித்து கமல் கூப்பிட்டது சுவாரஸ்யம் மற்றும் அபஸ்வரம். . தான் காப்பாற்றப்பட்டதும் பாலாஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ‘இருக்க ஆசைப்படுகிறேன்’ என்ற ஜனனி சற்று பதற்றமாக இருந்தார். ‘எதுவாக இருந்தாலும் ஓகே’ என்ற டேனி இயல்பாக அல்லது மறைத்து வைத்த பதற்றத்துடன் இருந்தார். 

ஆக... டேனி இருந்த கூண்டு திறக்கப்பட்டதின் மூலம் அவர் வெளியேற்றப்படுவது உறுதியாயிற்று. சென்றாயன் அந்தத் திருப்பணியைச் செய்து வைத்தார். என்றாலும் கமல் வைத்திருந்த எவிக்ஷன் கவரில் ‘டேனியின் பெயர் ஏற்கெனவே இருந்தது. 

டேனியின் எவிக்ஷனுக்கு பிக்பாஸ் வீடு எந்த நெகிழ்ச்சியையும் காட்டவில்லை. வலிமையான போட்டியாளர் வெளியேறுவது குறித்த சந்தோஷமாக இருக்கலாம். ‘ஏதாவது ஒண்ணாவது அழுதுதான்னு பாருங்களேன். இந்த ராஜமாதா சும்மாவே அழும்... இப்போ ஒரு சொட்டுத் தண்ணி கூட வரலை. ‘பேட்டா... பேட்டா’ன்னு டாட்டா காட்டிட்டாங்க’ என்று பிறகு டேனி இந்த விஷயத்தைக் கிண்டலடித்தார். ‘அடுத்த வாரம் நான் வந்துடுவேன்’ என்று கூறினார், ஐஸ்வர்யா. தன் செடியை மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, சென்றாயன் ஆகியோருக்குப் பரிசாக அளித்தார், டேனி. 

“இந்த வீடு எனக்குச் சோறு போட்டது. வெயில் மழையிலிருந்து காப்பாற்றியது. இன்னொரு வீடாகவே இதைக் கருதுகிறேன்’ என்கிற சென்டிமென்ட் டயலாக்குடன் அனைவரிடமும் விடைபெற்று வெளியேறினார், டேனி. 

**

வெளியே வந்த டேனி ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் எதிலிருந்தோ தப்பி வந்த உற்சாகத்துடனும் இருந்தார். ‘வலிமையான போட்டியாளராக முதலில் தென்பட்ட உங்களிடம் பிறகு ஒரு சரிவு ஏற்பட்டது. பிறகு அதிலிருந்து நீங்கள் மீளவேயில்லை. ஏன்?’ என்ற கேள்வியை கமல் முன்வைத்தார். “ஆமாம். சார். மொதல்ல ஜாலியாத்தான் இருந்தேன். அதற்கு அப்புறம் நான் பேசறது சரியான்னு டவுட் வந்துடுச்சு. சுத்தி இருக்குற ஒன்பது பத்துப் பேரைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. சுய லாபத்துக்காகக்கூட அவங்க தப்பா வழிநடத்தலாம். ‘இவன் ஜெயிக்கிற குதிரை’ன்னு கூட சிலர் ஏதாச்சும் சொல்லலாம். அதை நான் உணர்ந்தேன். அதனால பாதுகாப்பாக இருக்க வேண்டியிருந்தது’ என்பது போல் விளக்கமளித்தார், டேனி. மக்கள் இதற்கு கைதட்டலும் விசிலும் அடிக்க அகம் மகிழ்ந்து போனார், டேனி. ‘எதுக்குக் கைத்தட்டறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு மகிழுங்க’ என்று வில்லங்கமாகக் கமல் சொன்னதும் ‘எதுவா இருந்தா என்ன, விசில் சத்தம் எனக்கு இனிமையானது’ என்று அதை அநாயசமாகத் தாண்டினார் டேனி. 

‘நன்மையோ அல்லது தீமையோ, உன் தேர்வில்தான் அது உள்ளது’ என்பதை பிக்பாஸில் கற்றுக்கொண்ட முக்கியமான பாடமாகச் சொன்னார் டேனி. ‘இம்மானுவேல் காந்த்’ என்கிற ஜெர்மனி மெய்யியலாயர் பெரிய புத்தகமாகச் சொன்னதை நீங்க சுருக்கமாகச் சொல்லிட்டீங்க” என்றார் கமல். (தீதும் நன்றும் பிறர் தர வாரா’ன்னு நம்ம முன்னோடி தமிழர்களும் சொல்லியிருக்கிறார்கள்). ‘வெளியே போய்தான் ஆசை தீர கெட்ட வார்த்தை பேசணும். உள்ள அவ்ளோ இருக்கு” என்று டேனி சொன்னதும் ‘அய்யய்யோ... பிக்பாஸ் மனிதர்களை மாற்றி வெளியே அனுப்பும்னு நான் சொல்லிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா...’ என்று மெலிதாகப் பதறினார் கமல். ‘இல்லை சார்… மாத்திப்பேன். அதுவும் போயிடும்’ என்றார் டேனி. 

டேனியின் வில்லங்கமான காட்சிகள் தொடர்பான குறும்படம் போடப்பட்டது. “புறம் பேசுறது தப்புன்னு நானே முதல்ல சொல்லிட்டு இருந்தேன். ஆனா வேற வழியில்ல. அங்க சூழல் அந்த மாதிரி இருந்தது. ஆனா எனக்கே இவ்ளோ பன்ச் போட்டிருந்தீங்கன்னா.. உள்ளே இன்னமும் நிறைய கேரக்டர்கள் இருக்கு. அவங்களுக்கு என்ன ஆகப் போகுதோ?” என்று ஜாலியானார் டேனி. ‘நீங்க உள்ள மத்தவங்களுக்கு நெறைய பட்டப்பெயர்கள் கொடுத்தீங்க. உங்களுக்கும் மக்கள் அந்த மாதிரி கொடுத்திருக்காங்க. வெளில போய் பாருங்க” என்று கமல் சொன்னவுடன் ‘என்ன சார் பயமுறுத்தறீங்க?” என்று ஜெர்க் ஆனார் டேனி. ‘ரெண்டு பக்கமும்தான் இருக்கும். உங்களைப் பார்த்து நீங்களே சத்தமாச் சிரிச்சீங்கன்னா மத்த சத்தம் ஓய்ஞ்சுடும்” என்று கமல் கூறியது முக்கியமானது. 

இதரப் போட்டியாளர்களை மதிப்பிடும் விளையாட்டு நடந்தது. டேனி என்பதற்காக இதன் அடைமொழிகள் ‘மெட்ராஸ் பாஷை’யில் இருந்தன. இதில் சில வார்த்தைகள் உருது உள்ளிட்ட இதர மொழிகளில் இருப்பதைக் கவனிக்கலாம். ‘கப்சா’ என்பது உருது வார்த்தை. மெட்ராஸ் பாஷை என்பது இங்கு ஊடுருவப்பட்ட கலாசாரங்களின் வழியாக உருவாகிய கலப்பு மொழி. டேனியுடன் இணைந்து கமலும் இந்த பாஷையைப் பேசியது சுவாரஸ்யம். (ஆனால் சினிமாக்களில் பாவனை செய்யப்படுவது அசலான மெட்ராஸ் பாஷையில்லை).

வாய் உதார் (விஜயலட்சுமி), அராத்து (யாஷிகா), உஷார் பக்கிரி (சென்றாயன்), அல்லக்கை (ஐஸ்வர்யா), பேஜார் (ரித்விகா), போங்கு (ஜனனி), கப்சா (பாலாஜி), டுபாக்கூர் (மும்தாஜ்) ஆகிய பட்டங்களைக் கொடுத்த டேனி, இவற்றைப் பற்றிய விளக்கங்களையும் ஜாலியாக அளித்தார். அவர் அறியாத ஒரு விஷயம், இதையெல்லாம் பிக்பாஸ் மக்கள் உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்ததுதான். பொருள் அறியாத பட்டங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். 

பிறகு டேனி திரையில் தோன்றியவுடன் இது குறித்து அவரிடம் ‘குஜாலாக’ உரையாடினார்கள். “நீங்களும் இந்த இடத்துக்குச் சீக்கிரமா வரணும்” என்று அவர்களைக் கலாய்த்தார் டேனி. டேனியின் திருமணம் பற்றிய அறிவுரையை பாலாஜி மீண்டும் கூற, ‘மாமனார் ஒப்புக் கொண்ட பிறகு அப்புறம் மடமடன்னு வேலையைப் பார்க்கணும்” என்று டேனி கூற “அவர்தான் டிவில எல்லாத்தையும் பார்த்திட்டிருப்பாரே’ என்று முத்த மழையையொட்டி ஜாலியாக கமென்ட் அடித்தார் கமல். (ஷோக்கா சொன்னே தல!). 

தனது திருமணத்துக்கு பிக்பாஸ் வீட்டு மக்கள் எவ்வாறெல்லாம் உதவப் போகிறார்கள் என்று ஜாலியாகச் சென்று கொண்டிருந்த உரையாடலை இடைமறித்த கமல், “இது சண்டையா மாறுவதற்குள் நிறுத்திப்போம்” என்று டேனியை வாழ்த்தி விடையளித்தார்.

“நான் காட்டற அன்பு உண்மையா, பொய்யா –ன்னு இருந்த சந்தேகத்தை இங்கே இருந்தப்பவே டேனி கேட்டிருக்கலாம்’ என்று ஆதங்கப்பட்டார் ராஜமாதா. “நித்யாவும் இதையேதான் சொன்னாங்க. வெளில இருந்து பார்க்கறப்ப அப்படிக் கூட தெரியலாம்:” என்று பேஜார் ரித்விகா வழக்கம் போல் உபதேசம் கூற ‘போங்கு’ ஜனனி அதை ஆமோதித்தார். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்குக் கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“டேனியை யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இப்பக்கூட விட்டுக்கொடுக்கலை. ஆனா, டேனி ஒரே நாள்ல எப்படி மாறிட்டார்னு பார்த்தியா” என்கிற அபிப்ராயத்தை ரித்விகா சொன்னார். பாலாஜி தந்த நெருக்கடியும், மஹத், யாஷிகா செய்த துரோகமும்தான் அதற்கு காரணமாக இருக்கும். இரண்டுக்கும் இடையிலான தத்தளிப்பில் டேனி இருந்ததாகத்தான் தெரிகிறது. 

பெண் போட்டியாளர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் இனி என்ன நிகழப் போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம். ஜெய் ராஜமாதா! 

கடினமான போட்டியாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட டேனியலும் வெளியேறிவிட்டார். இப்போது யார் டைட்டில் வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள். வாய் உதார் (விஜயலட்சுமி), அராத்து (யாஷிகா), உஷார் பக்கிரி (சென்றாயன்), அல்லக்கை (ஐஸ்வர்யா), பேஜார் (ரித்விகா), போங்கு (ஜனனி), கப்சா (பாலாஜி), டுபாக்கூர் (மும்தாஜ்). உங்கள் சாய்ஸை (முடிந்தால் காரணத்தோடு) கமென்ட்டில் குறிப்பிடுங்களேன் . 
 

அடுத்த கட்டுரைக்கு