Published:Updated:

இருட்டு அறையில் முரட்டு நாமினேசன்... ஐஷ்வர்யாவுக்கு செம்ம செக்...! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
இருட்டு அறையில் முரட்டு நாமினேசன்... ஐஷ்வர்யாவுக்கு செம்ம செக்...! #BiggBossTamil2
இருட்டு அறையில் முரட்டு நாமினேசன்... ஐஷ்வர்யாவுக்கு செம்ம செக்...! #BiggBossTamil2

திங்கட்கிழமை வந்தாலே ‘ஸ்கூலுக்குப் போய்த் தொலைக்கணுமா” என்று பிள்ளைகளுக்கும் ‘மறுபடியும் ஆஃபீஸா?’ என்று பெரியவர்களுக்கும் மனச்சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் வந்துவிடுவதைப் போல, பிக்பாஸ் வீட்டில் திங்கள் என்றாலே நாமினேஷன் குழப்பங்கள் வந்துவிடுகின்றன. ‘யார் யாரைப் போட்டுத் தள்ளுவது என்கிற ரேஞ்சிலேயே யோசிக்கிறார்கள். முன்பெல்லாம் கன்ஃபெஷன் ரூமுக்கு வந்த பிறகுதான் யாரை அவர்கள் நாமினேஷன் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவரும். அதில் ஒரு சுவாரஸ்யமும் இருந்தது. இப்போதோ சீரணி அரங்கில் கூட்டம் போட்டு ஆலோசிக்காத குறையாக ‘உரத்த சிந்தனையில்’ அவர்கள் பேசிக்கொள்வதால் அந்த சுவாரஸ்யமும் போய்விட்டது. 

இந்த முறை நாமினேஷனில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார், பிக்பாஸ். இதுவரையிலான முறை பற்றி நமக்குத் தெரியும். ஒருவரைப் பற்றிய காரணங்களுடன் நாமினேட் செய்தால், சம்பந்தப்பட்டவர் அந்தக் காரணங்களை மறுக்க முடியாது. அப்புறம் வேண்டுமானால் அதைப் பற்றி இழுத்து சண்டை போட்டுக்கொள்ளலாமே ஒழிய, நாமினேஷன் செய்தது, செய்ததுதான். ஆனால், இந்த முறை, அந்தக் காரணங்களை மறுத்து, ‘நான் எவ்வளோ நல்லவன் தெரியுமா” என்று தன் தரப்பு நியாயங்களை அடுக்கலாம். இதையெல்லாம் நாமினேஷன் செய்யப் போகிறவர் நம்பினால் நீங்கள் ஒருவேளை தப்பிக்க முடியும். பிக்பாஸ் ஜனநாயக முறையைப் பின்பற்றுகிறாராமாம். 

இதற்காக ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் விசாரணை அறை போல, ஒரேயொரு லைட் போட்டு மற்ற இடங்களை இருட்டாக்கி வைத்திருந்தார்கள். “இங்க என்னய்யா ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது? ஒரு ஆள் நெஜம் சொல்றான்னா, பொய் சொல்றான்னான்னு ஃபேஸ் பார்த்துதானே கண்டுபிடிக்க முடியும்.. லைட்டைப் போடுங்கய்யா” என்று ‘பல்ராம் நாயுடு’ இதையெல்லாம் ஏற்கெனவே கிண்டல் செய்துவிட்டார். ஆனால் பிக்பாஸ், 1970-களில் வந்த ஜெய்சங்கர் படக்காட்சிகளிலிருந்து ஐடியாக்களை எடுக்கிறார் போல. 

இந்த விசாரணை அறையில் விஜயலட்சுமிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் முட்டிக்கொண்டது. தாயின் வருகைக்குப் பிறகு ஐஸ்வர்யா தெளிவாகிவிட்டதாகச் சொன்னாலும் இன்னமும் அவர் உளச்சிக்கலில் இருக்கிறார் என்று தோன்றுகிறது. தன்னைப் பற்றி யாராவது சொல்லிவிடுவார்களோ என்கிற கடுமையான அச்சத்தில் இருக்கிறார். இதனால் எந்தவோர் எதிர்மறையான ஒற்றைச் சொல்லையும் பூதாகரமாகக் கற்பனை செய்துகொள்கிறார். அந்த அச்சம் கடுமையான கோபமாகவும் அழுகையாகவும் மாறுகிறது. இன்னொரு பக்கம், விஜயலட்சுமி சில முன்தீர்மானங்களுடன் வந்திருப்பதாகத் தெரிகிறது. வந்த முதல் நாளிலிருந்தே யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத் ஆகியோருடன் அவர் நெருக்கம் காட்டவில்லை. பாலாஜி குழுவுடன் ஐக்கியமாகியிருந்தார். மஹத்தும் இதை நெருடலாக உணர்ந்தார். 

தொலைக்காட்சியில் சில மணி நேரங்கள் பார்த்ததை வைத்து ஒரு நபரைப் பற்றித் தீர்மானிப்பது முறையானதல்ல. அதிலும் பிக்பாஸ் போன்ற சிறையில் இருப்பவர்களின் மனக்குழப்பங்களையும் சேர்த்துதான் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். பெரும்பாலான பார்வையாளர்கள் செய்வதைப் போல, கறுப்பு – வெள்ளை என்று போட்டியாளர்களை ஹீரோ – வில்லனாக இரண்டு எதிர் முனையில் பிரித்துப் பார்க்கும் அதே தவற்றை விஜயலட்சுமியும் செய்கிறார் என்று தோன்றுகிறது. மேலும் அவரது அலட்சிய மனோபாவமும் நுட்பமாக வெறுப்பேற்றும் திறமையும் ரசிக்கத்தக்கதாக இல்லை. இனவாத அரசியல் இரண்டு குழுக்களிடையே செல்வாக்கு செலுத்துவதையும் உணர முடிகிறது. 

விஜயலட்சுமியின் புண்படுத்தலால், கோபமும் அழுகையுமாக புகையறைக்குள் அடைக்கலம் புகுந்த ஐஸ்வர்யாவை விதவிதமான சொற்களில் தேற்றினார் யாஷிகா. நட்பு காரணமாக ஐஸ்வர்யாவுக்குச் சாதகமாக இவர் செயல்படுகிறார் என்பது வெளிப்படை என்றாலும், யாஷிகாவைப் போல் ஒரு விசுவாசமான நட்பு ஒருவருக்குக் கிடைத்தால் அவர் பல உயரங்களைத் தொட முடியும் என்று தோன்றுகிறது. அப்படியொரு நம்பிக்கையை இன்று ஐஸ்வர்யாவுக்கு ஊட்டி அசரடித்தார், யாஷிகா. இது மட்டும் அல்லாமல், தான் நாமினேஷன் செய்யும்போது எதிராளிகளை திசைதிருப்பி ‘ராஜதந்திரி’ என்பதையும் நிரூபித்தார். ‘என்னைத்தான் நிச்சயம் கூப்பிடுவாங்க” என்று துடித்துக்கொண்டிருந்த ஜனனிக்கு பல்பு கிடைத்தது. போலவே ஐஸ்வர்யாவைப் புண்படு்த்திய விஜயலஷ்மியையும் யாஷிகா நாமினேட் செய்யவில்லை. மாறாக அப்பிராணிகளான பாலாஜியையும் சென்றாயனையும் நாமினேட் செய்து எதிர் அணியைக் குழம்ப வைத்தார். 

வீட்டின் தலைவியாக இருக்கிற யாஷிகா, தனக்குக் கிடைக்கப் போகும் ‘காப்பாற்றும்’ சக்தியை வைத்து இந்த முறையும் ஐஸ்வர்யாவைக் காப்பாற்றி விடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் இருந்தது. யாஷிகாவுக்கும்கூட. ஆனால், பிக்பாஸ் அதில் மண்ணள்ளி போட்டார். எனவே, ஐஸ்வர்யா எவிக்ஷன் பட்டியிலில் வந்து சேர்ந்திருக்கிறார். ‘மக்கள் மன்றத்தில் உங்களை நிரூபியுங்கள்’ என்று ‘தமிழ்ப் பெண்கள்’ கூட்டணி இவருக்குச் சவால்விட்டது உண்மையாகியிருக்கிறது. ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்ன செய்யப் போகிறது. அவர்களின் ஆதரவு ஐஸ்வர்யாவுக்கு இருக்கிறதா, இல்லையா என்பது இந்த வாரத்தில் தெரிந்துவிடும். 

‘அடுத்த வாரம் நான் வந்துடுவேன்’ என்று டேனிக்கு ஐஸ்வர்யா தந்த ஜாலியான வாக்குறுதி உண்மையாகிவிடுமா என்பதைப் பார்ப்போம். சிம்பிளாகச் சொல்வதென்றால், இது இருட்டு அறையில் முரட்டு நாமினேசன். 

இன்றைய நாளில் வேறென்ன கலாட்டாக்கள் நடந்தன என்பதை விரிவாகப் பார்ப்போம். 

**

78-ம் நாள் காலை. ஏதோவொரு திரைப்படத்திலிருந்து ஏதோவொரு பாட்டு போட்டார்கள். ஒன்றும் புரியவில்லை. இப்போது வரும் பாடல்கள் பெரும்பாலும் மிக்ஸியில் அரைத்த கிருணிப்பழச்சாறு மாதிரி ஒரே மாதிரியாக இருக்கிறது. மண் மாதிரியான ருசி. 

“டிபன் ஆச்சா. வாங்க நாமினேஷன் சடங்கை ஆரம்பிச்சிடுவோம்” என்று காலையிலேயே ஏழரையைக் கூட்டுவதற்கான முஸ்தீபுகளில் மும்முரமாக இறங்கினார், பிக்பாஸ். முதல் நபர் ஜனனி. தான் நாமினேட் செய்ய விரும்பும் மூன்று நபர்களை அழைத்துக்கொண்டு இருட்டறைக்கு அவர் செல்ல வேண்டும். ஒவ்வொருவரின் மீதுள்ள காரணங்களையும் சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாப்பதற்கான விளக்கங்களைச் சொல்லலாம். நியாயம் என்று படுபவற்றை நாமினேட் செய்பவர் ஏற்கலாம். 

ஆனால், இவையெல்லாம் ஒரு சம்பிரதாயம்தான். யாரை நாமினேட் செய்யப் போகிறோம் என்பதை எல்லோருமே ஏற்கெனவே ஆலோசித்து முடிவு செய்து வைத்திருந்தார்கள். நட்பு, குழுத்தன்மை, தனிப்பட்ட பகைமை போன்றவை இதில் செல்வாக்கு செலுத்தின. அனைத்து நபர்களுமே பிரியத்துடன் அழைத்துச் சென்றது ‘ஐஸ்வர்யாவை’. ‘மக்கள் முன்னாடி ஜெயிச்சுட்டு வாங்க. நாங்க ஒத்துக்கறோம்” என்று சொல்லி வைத்துக்கொண்டு அதே பாட்டை அனைவரும் பாடினார்கள். 

மும்தாஜ், ஐஸ்வர்யா, சென்றாயன் ஆகியோரை அழைத்துக்கொண்டு முதலில் சென்றார் ஜனனி. ‘மக்களைச் சந்தித்துவிட்டு வாங்களேன்’ என்று முதல் பந்தை ஐஸ்வர்யாவை நோக்கி வீச ‘வந்த நாள்ல இருந்து நான் எல்லா டாஸ்க்கையும் நல்லா செஞ்சிருக்கேன்’ என்று தற்காக்க முயன்றார், ஐஸ்வர்யா. என்றாலும் பிறகு மக்களைச் சந்திப்பதாக ஒப்புக்கொண்டார். “நீங்க அன்பு, பாசம்லாம் காட்டுறீங்க. ஆனா இந்த விளையாட்டோட ஃபார்மட்டுக்கு அது ஒத்து வராது இல்லையா?” என்று அடுத்த பந்தை மும்தாஜை நோக்கி வீசினார் ஜனனி. “அதுதான் என் இயல்பு. நான் நானா இருந்துதான் இந்த விளையாட்டை ஜெயிக்க விரும்புகிறேன்” என்று அதை மறுத்தார், மும்தாஜ். 

‘டாஸ்க்ல தப்பு செஞ்சதைச் சுட்டிக் காட்டினா உங்களுக்குக் கோபம் வந்துடுதே?” என்று சென்றாயனை நோக்கி அடுத்த கேள்வியை ஜனனி வீச “கோபம் வராம இருக்க நான் என்ன ஜடமா? கோபம் வந்தாகூட யார் கிட்டயாவது சண்டை போடுறேனா, ஓரமாத்தானே போறேன்” என்பது சென்றாயனின் தற்காப்பு வாதம். இதற்குப் பிறகு ஐஸ்வர்யாவையும் சென்றாயனையும் நாமினேட் செய்தார், ஜனனி. 

“கடைசியாத்தான் பிக்பாஸ் என்னைக் கூப்பிடுவார். நான் உன்னை ரூமுக்கு லுலுலாய்க்கு அழைச்சுட்டுப் போறேன். நீ டிஃபண்ட் பண்ணு. டைரக்ட் நாமினேஷன் கிடைக்குதா, காப்பாத்தற வாய்ப்பு கிடைக்குதான்னு அப்புறம் பார்ப்போம்” என்று ஐஸ்வர்யாவுக்கு டிப்ஸ் கொடுத்தார், யாஷிகா. “மைண்ட்ல அவங்க முன்னாடியே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. என்னைவிட மாட்டாங்க’ என்பது போல் சிணுங்கினார், ஐஸ்வர்யா. ‘ஐஸ்வர்யாவை, யாஷிகா இந்த முறையும் காப்பாத்திடும்’ என்பதுபோல் பாலாஜியும் சென்றாயனும் இன்னொரு பக்கம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

இருட்டு அறைக்கு அடுத்த மூன்று நபர்களை அழைத்துக்கொண்டு போனார், பாலாஜி. ‘நீங்க யாஷிகாவைச் சார்ந்து இருக்கீங்க.” என்கிற வழக்கமான காரணத்தை ஐஸ்வர்யாவை நோக்கி வீசினார். அதற்கு ஐஸ்வர்யா சொன்ன பதில் கவனிக்கத்தக்கது. “நான் முதல்ல இருந்தே அப்படித்தான் இருக்கேன். ஒரு வாக்கியத்தை தமிழில் அமைத்து பேசுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அதனால் யாஷிகாவுடன் ஒட்டிக்கொண்டது தன்னிச்சையானது’ என்று மொழி மற்றும் கலாசாரப் பிரச்னைகளையொட்டி ஐஸ்வர்யா சொன்னது இயல்பானது. “இன்னொரு சான்ஸ் கொடுத்தா என்னை நிரூபிப்பேன்” என்று அவர் வேண்டியதும் நியாயமான காரணம்தான். 

“டாஸ்க்ல உங்க முழு மைண்டு போயிடுது. அதனால வீட்டு வேலைகளைச் சரியாச் செய்ய மாட்டேன்றீங்க. ஒரு விஷயத்தை மத்தவங்க கிட்ட தைரியமா சொல்ல மாட்டேன்றீங்க” என்று ஜனனிக்கான காரணத்தைச் சொன்னார், பாலாஜி. “சரி. என்னை மாத்திக்கறேன். இனிமே தைரியமாப் பேசுறேன்” என்று தன் தவறுகளை ஒப்புக்கொண்டார் ஜனனி. ‘அன்பு’ மேட்டர் மறுபடியும் மும்தாஜ் மீது பாய்ந்தது. ‘அதுதான் என் நேச்சர்’ என்று அதே புராணத்தைப் பாடினார், மும்தாஜ். ஐஸ்வர்யாவையும் மும்தாஜையும் பாலாஜி நாமினேட் செய்தார். நட்பு கருதி ஜனனியை அவர் காப்பாற்றியது வெளிப்படை. ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்று ஐஸ்வர்யாவைப் பற்றிய காரணத்தைக் குறிப்பிட்டார், பாலாஜி. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக மும்தாஜ் இருப்பது பற்றிய கோபம் பாலாஜிக்கு இருக்கிறது. 

அடுத்தது மும்தாஜ். ‘விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோரை அழைத்துச் சென்றார். ‘நீங்க வைல்ட் கார்ட் என்ட்ரி’ என்கிற ஆதாரமான காரணத்தை விஜயலஷ்மியின் மீது வீசினார் மும்தாஜ். ‘அது நான் முடிவு பண்றதில்லை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கேன். டாஸ்க்லாம் நல்லாப் பண்றேன். மனிதாபிமானம் இல்லாம யாரையும் தூக்கிப் போடலை’ என்று விஜயலஷ்மி சொன்னது பக்கத்திலிருந்த ஐஸ்வர்யா குறித்து என்பதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. 

அடுத்த காரணத்தை ஐஸ்வர்யா நோக்கி சொன்னார் மும்தாஜ். “என்கிட்ட நெறைய தப்புப் பண்ணீங்க. நான் மன்னிச்சிட்டேன். ஆனா அப்போ நீங்க காப்பாத்தப்பட்டீங்க.” என்ற புகாருக்கு ‘நான் இந்த ஷோல இருந்து நல்ல மனநிலையில் கிளம்ப விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு வேண்டும்’ என்றார் ஐஸ்வர்யா. ‘நீங்க கேம்ல நெறய முனைப்பா இருக்கீங்க. ஆனா மத்தவங்க கிட்ட அதிகம் பழக மாட்றீங்க” என்கிற காரணத்தை ரித்விகாவுக்குச் சொன்னார் மும்தாஜ். “நாங்க வீட்ல குட்மார்னிங் சொல்லிக்க மாட்டோம். கட்டிப்பிடிச்சுக்க மாட்டோம். ஆனா மரியாதையும் அன்பும் மனசுல இருக்கும். எனக்கும் அப்படி தோணணும்’ என்கிற கலாசார அடிப்படையிலான சரியான காரணத்தைச் சொன்னார் ரித்விகா. விஜயலஷ்மியையும் ஐஸ்வர்யாவையும் நாமினேட் செய்தார் மும்தாஜ்.

இருட்டறையின் அடுத்த தலைவர் ரித்விகா. மும்தாஜ், சென்றாயன், ஐஸ்வர்யா ஆகியோர் விசாரணைக் கைதிகள். ‘`உங்க தலைவர் பதவியை ஒழுங்கா செஞ்சீங்களா? வேலையைச் சரியாப் பகிர்ந்து கொடுத்தீங்களா?'' என்ற கேள்வியைச் சென்றாயனின் மீது வீசினார் ரித்விகா. `தெரியலை. அடுத்த முறை மாத்திக்கறேன்’ என்று வாக்குமூலம் தந்தார் செண்டு. ஐஸ்வர்யாவின் மீது தேன் தடவிய வார்த்தைகளைப் புகாராக வைத்தார் ரித்விகா. ``நீங்க ஒரு வலிமையான போட்டியாளர். ஆனால், உங்கள் தனித்தன்மையை எப்போது காட்டப் போறீங்க. நாமினேஷனுக்கு ஏன் பயப்படறீங்க? ஒருமுறை மக்களோடு விளையாடிப் பார்க்கலாமா?'' என்று சாமர்த்தியமாகத் தூண்டில் போட்டதில் ஐஸ்வர்யா என்கிற மீன் தப்பிக்க முடியவில்லை. ‘சரி’ என்று ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா. “மத்தவங்களை விட நீங்க வேலை கம்மியாப் பண்றீங்க. அது குறித்தான குற்றவுணர்ச்சி உங்களிடம் இருக்கா?” என்று மும்தாஜை நோக்கி கேட்க, தன் உடல்நிலையை வழக்கம் போல் சுட்டிக் காட்டினார் மும்தாஜ். ஆக. மும்தாஜையும் ஐஸ்வர்யாவையும் நாமினேட் செய்தார் ரித்விகா. 

இந்த ஆட்டத்தில் சூடு பிடித்தது விஜயலட்சுமியின் வருகையின் போதுதான். வந்தவுடனேயே “உங்களுக்கு சுயபுத்தி இல்லை” என்று ஐஸ்வர்யாவை நோக்கி அதிரடியாக ஆரம்பித்து முதல் கேள்வியை நோக்கி வீசினார். “தமிழ்ப் பொண்ணுங்கதான் வரணுமா –ன்னு கேட்கறீங்க. திறமையுள்ளவர்களை தமிழர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அதே சமயத்தில் அவர்கள் முட்டாள்களும் அல்ல. நீங்கள் மக்கள் முன்னால் நின்று ஒருமுறை நிரூபித்து வாருங்கள்” என்று காட்டமான குரலில் தன் புகார்களை விஜயலட்சுமி சொன்னார். 

வேற்றுப் பிரதேசங்களில் தங்கி பணிபுரிவர்களுக்கு எப்போதுமே ஒரு பாதுகாப்பின்மை உணர்வும் கலாசார அசெளகரியமும் அச்சமும் இருக்கும். அந்தப் புள்ளியை விஜயலட்சுமி தொட்டு விட்டார். மட்டுமல்லாமல் அதுவரை மற்றவர்களின் புகார்களை வரிசையாகக் கேட்டு பொறுமை காத்த ஐஸ்வர்யா, தன் கொதிநிலையை விஜயலட்சுமியிடம் காட்டினார். “எத்தனை நாளா என்னைத் தெரியும்?” என்ற ஐஸ்வர்யாவின் கேள்விக்கு ‘ஒரு நாள்ல ஒருத்தரைப் புரிஞ்சுக்க முடியும்’ என்று படு ஸ்மார்ட்டாக விஜயலட்சுமி பதில் அளிக்க, இருவருக்கும் முட்டிக்கொண்டு நின்றது. 

அடுத்த கேள்வியை மும்தாஜ் நோக்கி வீசினார் விஜயலட்சுமி. ‘உடல்நலம்’ குறித்த பிரச்னைதான். ‘அதைத் தவிர மற்ற விஷயங்களில் என் பங்களிப்பு வலிமையாகத்தான் இருக்கிறது’ என்று தன் தரப்பு நியாயத்தைச் சொன்னார் மும்தாஜ். ‘பல விஷயங்களை புரியாமல் பேசுகிறீர்கள்’ என்ற சென்றாயனின் மீதான புகாரை மறுத்தார் சென்றாயன். ‘வரும் வாரங்களில் சரிசெய்து கொள்கிறேன்’ என்று ஒப்புக் கொண்டார்.

இந்த டாஸ்க் முடிந்தும் பிக்பாஸ் பஸ்ஸரை அடிக்கவில்லை. ‘சண்டை போட்டுத் தொலைங்களேன்’ என்பது மாதிரி காத்திருந்தார். அவரது காத்திருப்பு வீண் போகவில்லை. “நீங்க பிக்பாஸ் எத்தனை எபிஸோடு பார்த்திருக்கீங்க.. பார்க்கலைன்னு முன்னாடி சொல்லியிருக்கீங்க. கொஞ்சம் பார்த்துட்டு எப்படி ஒருத்தரை ஜட்ஜ் பண்ண முடியும்?.. என்று ஐஸ்வர்யா ஆரம்பிக்க ‘சர்வாதிகாரி எபிஸோடு லட்சணம் மட்டும் போதுமே” என்று பதில் சொன்னார் விஜயலட்சுமி. “நீங்க கேள்வி கேட்கற தொனி சரியில்லை’ என்பதற்கு ‘இது டாஸ்க். பிக்பாஸ் என்னைக் கேட்கச் சொல்லியிருக்கிறார்” என்பது விஜயலட்சுமியின் வாதம். என்றால் சர்வாதிகாரி பாத்திரமும் பிக்பாஸ் சொல்லிச் செய்ததுதான் என்பது ஐஸ்வர்யாவின் வாதம். இரண்டு வாதங்களுக்கு இடையில் பக்கவாதம் வந்தது போல் சரிந்து கிடந்தார்கள் மும்தாஜூம் சென்றாயனும். ‘சண்டை போடாதீங்க ஏட்டய்யா” என்கிற இருவரின் சமாதானத்தையும் அந்த இருவரும் கேட்கவில்லை. தொடர்ந்து முட்டல்கள் தொடர்ந்தன. 

“உள்ளே ஒரு பிரளயமே நடந்துச்சு. ஒரே சண்டை’ என்கிற உற்சாகத்துடன் வெளியே வந்தார் விஜயலட்சுமி. ‘நான் பார்க்காமப் போயிட்டனே” என்று ஜாலியாகக் கவலைப்பட்டது விஷபாட்டில். ஐஸ்வர்யாவுக்குப் பிரச்னை என்றதுமே தாய்ப்பறவை போல் அவரை நோக்கி ஓடினார் யாஷிகா. ‘இன்னமும் கொஞ்ச நாள்தான் இருக்கு. நீதான் தைரியமா நின்னு உன்னை ப்ரூவ் பண்ணணும். மாறிட்டேன்னு சொல்லிட்டு இப்படிப் பின்வாங்காதே. ஒரு புன்னகையோட தைரியமாப் போய் நில்லு’ என்று பல்வேறு விதமாக ஐஸ்வர்யாவுக்கு தைரியமும் ஆறுதலும் சொல்ல, ஒருவழியாக தன்னைத் தேற்றிக் கொண்டார் ஐஸ்வர்யா.

பிறகு ‘அன்பு மட்டுமே போதாது’ என்று மும்தாஜையும் ‘முதிர்ச்சியில்லாத ஐஸ்வர்யாவோடு போட்டி போடுவதில் எனக்கு உடன்பாடில்லை’ என்கிற வில்லங்கமான அபிப்ராயத்தோடு ஐஸ்வர்யாவையும் நாமினேட் செய்தார் விஜயலஷ்மி. இதில் மறுபடியும் புண்பட்ட ஐஸ்வர்யாவுக்கு மறுபடியும் தைரியம் கூறினார் யாஷிகா.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

சென்றாயனின் விசாரணைக் காட்சிகள் ரொம்பவும் சுமார் போல. எனவே அவை காட்டப்படவில்லை. ‘ஜனனி சொன்னது தப்பா தெரிஞ்சது. பிறகு ரைட்டா தெரிஞ்சா. ரூம் போட்டு யோசிச்சுப் பார்த்தா அப்புறம் தப்பா தெரிஞ்சது” என்று கோக்குமாக்கான காரணத்தைச் சொல்லி ஜனனியை நாமினேட் செய்த சென்றாயன், மும்தாஜையும் நாமினேட் செய்தார். பிறகு ‘டெராடெரா பைட்டா காதல் இருக்கு’ என்ற பாடலைப் பாடி மும்தாஜை ஜாலியாகக் கலாய்த்தார். ஏறத்தாழ பாடலைச் சரியாகப் பாடிய அவர் ஒரு நிலையில் தடுமாற ‘மாட்டினியா” என்கிற மாதிரி பதிலுக்குக் கிண்டல் செய்தார் மும்தாஜ். இருந்தாலும் விடாமல் பாடலைப் பாடித் தீர்த்தார் சென்றாயன். 

‘ஐஸ்வர்யா என்ன செய்யப் போறாளோ’ என்று ரித்விகா உள்ளிட்ட சிலர் ஜாலியாக பயந்து கொண்டிருந்தனர். சென்றாயன், ஜனனி, விஜயலட்சுமி ஆகியோரை அழைத்துச் சென்ற ஐஸ்வர்யா, பிறகு ஜனனி மற்றும் விஜயலட்சுமியை நாமினேட் செய்தார். சென்றாயனை வெறும் சம்பிரதாயத்துக்குத்தான் அவர் அழைத்துச் சென்றார் என்பது வெளிப்படை. மொழிப் பிரச்னை காரணமாக ஐஸ்வர்யாவால் சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பேசிக் கொண்டார்கள். 

மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பாலாஜியையும் சென்றாயனையும் நாமினேட் செய்தார் யாஷிகா. ‘என்னைத்தான் நிச்சயம் கூப்பிடுவாங்க’ என்று நம்பிக்கொண்டு செல்லத் தயாராக இருந்த ஜனனிக்கு பல்புதான் கிடைத்தது. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக்பாஸின் லாஜிக்கை யாஷிகாவும் பின்பற்றுவது சிறப்பு. எதிர்த்தரப்பை குழப்பி அவர்கள் எதிர்பாராத சமயத்தில் தாக்கும் கொரில்லா போர்முறையை யாஷிகா பின்பற்றுவார் போலிருக்கிறது. 

ஆக இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, விஜயலட்சுமி மற்றும் சென்றாயன். 

ஒரு பற்பசை பிராண்டை விளம்பரப்படுத்த ‘புன்னகை’ என்கிற பெயரில் ஒரு டாஸ்க் நடந்தது. சுல்தான் என்கிற வெளியே வராத படத்தில் ரஜினியுடன் நடித்ததற்காக ‘புன்னகையான தருணத்தை’ அடைந்ததாக விஜயலட்சுமி கூறியது காமெடி. அம்மாவுக்குத் தங்கக் கம்மல் வாங்கிய தருணத்தை சென்றாயன் பகிர்ந்தது நெகிழ்ச்சி. ‘மெட்ராஸ்’ படத்துக்காக சீனியர் நடிகர்களுடன் போட்டி போட்டு ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியதை ‘புன்னகையான’ தருணமாக ரித்விகா கூறினார். 

இன்றைய நாளில் நடந்த சில அகங்கார மோதல்களைப் பார்த்து நம்மால் ‘புன்னகை’ புரியமுடியவில்லை என்பதுதான் நிஜம்.