Published:Updated:

"பாலாஜி நல்லவர், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க!" - ஈரோடு மகேஷ் ரிக்வெஸ்ட்!

"பாலாஜி நல்லவர், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க!" - ஈரோடு மகேஷ் ரிக்வெஸ்ட்!
News
"பாலாஜி நல்லவர், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க!" - ஈரோடு மகேஷ் ரிக்வெஸ்ட்!

'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியின் நடுவரும், பாலாஜியின் நண்பருமான ஈரோடு மகேஷ் தன் நண்பனைப் பற்றியும், பிக் பாஸ் நபர்கள் பற்றியும் பேசியிருக்கிறார்.

பாலாஜி என்ற பெயருக்குப் பின்னால் தவறாமல் நினைவுக்கு வரும் பெயர், மகேஷ். கடந்த பதினைந்து வருடங்களாக நட்பால் இணைபிரியாமல் இருந்து வருபவர்கள். தற்போது பாலாஜியை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அவரைப் பிரிந்த சோகத்தில் இருக்கும் ஈரோடு மகேஷிடம் பேசினேன்.  

''என்னைப் பார்க்கிறவங்க பெரும்பாலும் கேட்கிறது, 'பாலாஜியை ஏன் தனியா பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வெச்சீங்க?'னுதான். பிக் பாஸுக்கு மட்டுமில்ல, பொதுவாகவே நான் தனியாக ஒரு நிகழ்ச்சிக்குப் போனால்கூட, பாலாஜி வரலையானுதான் முதல்ல கேட்பாங்க. மனைவி வரலையானு கேட்பதற்கு முன்பு, இதுதான் கேள்வியா இருக்கும். நிஜமாகவே நான் பாலாஜியை மிஸ் பண்றேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடி கிளம்புறதா சொல்லிட்டுத்தான் போனார். 'உன்மேல இருக்கிற தவறான கண்ணோட்டம் மாறுவதற்கு இது நல்ல வாய்ப்பு மச்சி. மூன்று வாரம் இருந்துட்டா, கண்டிப்பா எழுபது நாள்களுக்கும்மேல உன்னால தாக்குப் பிடிக்க முடியும்'னு சொன்னேன். அது அப்படியே நடந்துடுச்சு. நூறு நாள்கள் வரைக்கும் இருப்பார்னு நம்புறேன். எல்லாம் மக்கள் கையிலதான இருக்கு!.'' என்ற மகேஷிடம், 'பாலாஜி எப்போவும் போஷிகாவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாரே?' என்றேன்.  

"அவருடைய உலகம் போஷிகாதான். ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்வளவு வேலை இருந்தாலும் அவருடைய நினைவில் ஓடிக்கொண்டே இருப்பது போஷிகாவாகத்தான் இருக்கும். ஸ்கூல்ல இருந்து போஷிகா கிளம்பிடுச்சா... வீட்டுக்குப் போயிடுச்சானு டிரைவருக்கு அடிக்கடி போன் பண்ணிக்கிட்டே இருப்பார். இப்போ போஷிகாவைப் பிரிந்து அவர் இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கும். இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில்கூட  ஜனனி மொட்டை அடிக்க சொன்னபோது, 'என் பொண்ணா நினைச்சு அடிச்சுக்கிறேன்'னு சொன்னார். அதைப் பார்த்தாலே அவருடைய உண்மையான அன்பு புரியும். பாலாஜி உண்மையில் நல்ல மனிதன். பிக் பாஸில் கோபப்படுறது, கெட்ட வார்த்தைகள் பேசுறது  இதையெல்லாம் நான் நியாப்படுத்த விரும்பலை. அதேபோல, நம்ம முன்னாடி அன்பா பேசிட்டு, வில்லத்தனம் பண்ற எத்தனையோ பேரை நம்ம வாழ்க்கையில பார்க்க முடியும். ஆனால், பாலாஜிக்கு அப்படி செய்யத் தெரியாது. அவர்கூட பழகுனவங்களுக்கு அது தெரியும். அவர்கிட்ட இருக்கிற மைனஸ், அவருடைய கோபம். அவரைவிட சிறந்த அப்பாவைப் பார்க்க முடியாது. இப்போது வெளியில் காட்டக்கூடிய காட்சி அப்படி இருக்கு. அவரின் பலம், பலவீனம் எல்லாம் போஷிகாதான்!. இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கிட்டு அவர் அமைதியாக இருக்கக் காரணம், போஷிகாதான். பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனப்போ இருந்த பாலாஜி இப்போ இல்லை. ரொம்பவே மாறியிருக்கார்.!" என்பவர், தொடர்கிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"பிக் பாஸ் வீட்ல அவர் சொன்னது எல்லாமே நடந்திருக்கு. பொன்னம்பலத்தை எப்படியும் கமல் வீட்டுக்குள்ள வந்துதான் கூட்டிக்கிட்டு போவார்னு சொன்னார். அப்படித்தான் நடந்தது. மஹத்துக்கும் ஏதோ நடக்கப்போகுதுனு சொன்னார், ரெட் கார்டு கொடுத்து அனுப்பிட்டாங்க. 'நீ எல்லோரையும் சரியா அனலைஸ் பண்ற மச்சி... ஆனா, உன் வாழ்கையை மட்டும்தான் சரியா அனலைஸ் பண்ணமாட்டேங்கிற'னு  நான் அடிக்கடி அவர்கிட்ட சொல்றதுண்டு. நீங்கவேணா பாருங்க... பாலாஜி நல்ல மாற்றத்தோடு திரும்பி வருவார்.'' என்றவர், நித்யாவுக்கும் ஒரு அட்வைஸ் சொன்னார். 

''தனிமை மாதிரி கொடுமையான விஷயம் வேறெதுவும் இல்லை. வாழ்க்கையோட பெரிய பிடிப்பே நமக்காக ஒருத்தர் இருக்கார் என்பதுதான். அது எந்த உறவாகவும் இருக்கலாம். நித்யா - பாலாஜிக்கு இடையில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், தன் தவறை உணர்ந்து பாலாஜி அமைதியாதான் இருந்தார். திருமணம் என்பது சேர்ந்து வாழ்றதுக்குத்தான். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து, விட்டுக்கொடுத்து வாழ்ந்தா மட்டுமே வாழ்க்கையை இனிமையாக நகர்த்திப் போக முடியும். எல்லோருக்கும் தன்னைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பைத் தரணும். பாலாஜி வெளியே வந்ததும் நிறைய பேசணும்." என்றவரிடம், 'பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடித்த நபர் யார்?' எனக் கேட்டேன். 

''எனக்கு சென்றாயனைப் பிடிக்கும். அவருக்கு பைக் வாங்கணும்னு நீண்ட நாள் ஆசை. என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சி முடிந்து வரும்போது பென்ஸ் காரே வாங்கிடுவாப்ல!" என்கிறார், ஈரோடு மகேஷ்.