Published:Updated:

``பிக்பாஸ் டிராபியைவிட எனக்கு முடிதான் முக்கியம்!" `அட்ரா சக்க' மும்தாஜ் #BiggBossTamil2

ஒருவழியாக பிக்பாஸ் அவருடைய `போன்பூத்’ என்கிற லக்ஸரி டாஸ்க்கை முடித்துக்கொண்டார். கடைசியில் ரித்விகா மாட்டிக்கொண்டார்.

``பிக்பாஸ் டிராபியைவிட எனக்கு முடிதான் முக்கியம்!" `அட்ரா சக்க' மும்தாஜ் #BiggBossTamil2
``பிக்பாஸ் டிராபியைவிட எனக்கு முடிதான் முக்கியம்!" `அட்ரா சக்க' மும்தாஜ் #BiggBossTamil2

ஒருவழியாக பிக்பாஸ் அவருடைய ‘போன்பூத்’ என்கிற லக்ஸரி டாஸ்க்கை முடித்துக்கொண்டார். கடைசியில் ரித்விகா மாட்டிக்கொண்டார். இவர் தலைகீழாக நின்றும், விதவிதமாகப் பேசியும் மற்றவர்கள் வற்புறுத்தியும்கூட மும்தாஜுக்கான டாஸ்க்கை செய்ய அவரின் சம்மதத்தைப் பெற ரித்விகாவால் முடியவில்லை. அவரால் இயலவில்லை என்பதைவிடவும் மும்தாஜ் சம்மதிக்கவில்லை என்றுதான் அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.

இதுவரை இரண்டு குழுவாக இயங்கிய வீடு, இந்த டாஸ்க்கின் மூலம் ஒருவரையொருவர் அனுசரித்துப் போக வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார்கள். யாஷிகா, ஜனனியிடம் போய் நிற்க வேண்டியிருந்தது. பாலாஜி, யாஷிகாவிடம் அடக்கமாகப் பேசவேண்டியிருந்தது. இந்தப் பாத்திரத்தைத் திறம்பட நடித்தார் பாலாஜி. அவருடைய எகத்தாள உணர்வை ஒளித்துக்கொண்டு யாஷிகாவின் முன் பணிவுடன் நின்றார். யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாக்குமான அந்தச் சமயத்தின் விலகலைப் பயன்படுத்திக்கொண்டு ஐஸ்வர்யாவைப் பற்றிய புகார்களை வைத்தார். “அவர் தன்னை புத்திசாலின்னு நெனச்சிட்டிருக்காரு. உண்மையான ஆளுன்னா, புறம் பேசாம நேராப் பேசணும்” என்ற ஐஸ்வர்யாவின் கோபத்தில் சிறிது நியாயம் இருந்தது. 

ஆனால் ரித்விகாவைத் தவிர, போட்டியாளர்கள் கடக்கவே முடியாத நெருக்கடியோ சவாலோ இந்த டாஸ்க்கில் இல்லை. பாலாஜி சொன்னவுடனேயே யாஷிகா ஒப்புக்கொண்டார். விஜயலட்சுமியும் அப்படியே. சில பல தயக்கங்களுக்குப் பிறகு மற்றவர்களும் ஒப்புக்கொண்டனர். ‘உனக்குக் கிடைச்ச டாஸ்க் ரொம்ப ஈஸி’ என்று யாஷிகா குறித்து மற்றவர்கள் பொறாமைப்பட்டனர். 

‘பிக்பாஸ் தருகிற உடையை அணிய வேண்டும்’ என்றதும் தான்கூட பயந்திருந்தாக பாலாஜி சொன்னார். புடவை வந்ததும் அவர் மகிழ்ச்சியாகிவிட்டார். ‘சுடிதாரை விட புடவையில் தன் மனைவி நித்யா அழகாக இருப்பார்’ என்று முன்னர் சொன்னதின் மூலம் இந்த உடையில் பெண்களைக் காண அவருக்குப் பிடிக்கும் என்பது தெரிந்தது. இது பெரும்பாலான இந்திய ஆண்களின் மனநிலை. நவீன பாணி ஆடையில் திரையில் ஆடிப்பாடும் நடிகைகளை ரசிக்கும் அதே மனம், தனது மனைவியை புடவையில் மட்டுமே காண விரும்பும் பழைமைவாத மனநிலை. 

‘எந்த மாதிரியான உடையோ?” என்று பாலாஜி பயந்தது எனக்கும் தோன்றியது. ‘ஒருவேளை ஏதாவது கவர்ச்சியான உடையைத் தந்து சங்கடப்படுத்துவார்களோ?” என்று ஒரு கணம் தோன்றியது. பிறகு சற்று நிதானப்படுத்திக்கொண்ட பிறகுதான் உறைத்தது. ‘அந்த மாதிரியாகத்தானே யாஷிகா பெரும்பாலான சமயங்களில் இருக்கிறார், அவருக்கு இது தண்டனை அல்லவே’ என்று. ஒரு பழைய ஜோக் உண்டு. ‘இந்த மாதிரி டிரஸ்லாம் போட்டா என் இமேஜ் ஸ்பாயில் ஆயிடும். நான் போட மாட்டேன்’ என்று ஒரு கவர்ச்சி நடிகை சொல்கிறார். என்னவென்று பார்த்தால் அது புடவை’. மற்றவர்கள் பொறாமைப்பட்டாலும்கூட ‘ஒப்பனையில்லாமலும் அசெளகரியமான ஆடையை உடுத்தியிருப்பதும் எனக்கு சவாலான டாஸ்க்தான்’ என்று யாஷிகா சொன்னதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஒருவர் எதற்காக சங்கடப்படுவாரோ அதையே அவருக்கு டாஸ்க்காக தருவதை நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே பிக்பாஸ் செய்து வருகிறார்.

ஆனால் – இந்த டாஸ்க் இத்தனை சுமுகமாக முடிந்துவிட்டால் பிக்பாஸின் கெத்து என்னாவது? ‘தோல், முடி சம்பந்தமா வந்தால் நிச்சயம் நான் செய்யமாட்டேன்’ என்று மிகத் தெளிவாகவும் கறாராகவும் மும்தாஜ் முதலிலேயே சொல்லிவிட்டார். இதன் மூலம், இது தொடர்பான மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை முதலிலேயே அழித்துவிடுவதற்கான விஷயத்தை அழுத்தமாகச் செய்தார். இப்படி அவர் சொல்லாமல் இருந்தால்கூட பிக்பாஸ் வேறு ஏதாவது தந்திருப்பாரோ என்னமோ. ‘பிடிக்காததை ஊட்டுவோம்’ என்கிற தன் இயல்புபடி அவரின் முடியை பச்சை வண்ணமாக்கும் டாஸ்க்கை ரித்விகாவுக்குத் தந்தார். 

மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு மாதிரி சுமுகமாக முடிந்த டாஸ்க், ரித்விகாவுக்கு மட்டும் இமாலயப் பணியாக அமைந்தது. ரித்விகாவுக்கும் இது குறித்தான சந்தேகம் முதலிலேயே இருந்தது. எனவே தனக்குத் தரப்பட்ட டாஸ்க்கிற்காக மும்தாஜிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். “பாருங்க மும்தாஜ். இது 13-வது வாரம். ரொம்ப முக்கியமான காலகட்டம். இதுக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கேன். உங்களுக்கே இது தெரியும். மத்தவங்கள்லாம் அவங்களுக்கு பிடிக்காட்டிகூட இந்த டாஸ்க்கை பண்ணினாங்க. இன்ஜெக்ஷன்னா எனக்கு அத்தனை பயம். நான்கூட டாட்டூ போட்டுக்கிட்டேன் இது எனக்காக நீங்க பண்றது இல்லை. உங்களோட உறுதியைச் சோதிக்கறதுக்காகவும் விட்டுக்கொடுக்கும் தன்மையைப் பார்ப்பதற்காகவும் தரப்படும் டாஸ்க். இதில் வென்றால் அது உங்களுக்கும் நல்லதே. ஒரு விஷயத்தை அறிவித்துவிட்டால் அதிலிருந்து எக்காரணம் கொண்டு பிக்பாஸ் பின்வாங்கமாட்டார். எனக்காகப் பண்ணுங்களேன். ப்ளீஸ்’ என்று விதவிதமாக ரித்விகா முறையிட்டும் கெஞ்சியும் தன் நிலையில் உறுதியாக இருந்தார் மும்தாஜ். இதன் மூலம் மற்றவர்களின் பகைமையை மேலதிமாக சம்பாதித்துக்கொண்டார். 

‘அன்பு காட்டி ஏமாத்தறாங்க’ என்ற மும்தாஜின் மீதுள்ள புகார் இப்போது இன்னமும் அதிகமாகியது. ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் மும்தாஜ் குறித்து மீண்டும் புறணி பேசத் தொடங்கிவிட்டார்கள். ‘எந்த டாஸ்க்கையும் ஒழுங்காப் பண்றதில்லை. பண்ண முடியலைன்னா வெளில போக வேண்டியதுதானே. மத்தவங்களுக்கு இடம் கிடைக்கும்ல்’ என்பது அவர்களின் எரிச்சல். பிரியத்துக்குரிய ‘மோமோ’ மறுபடியும் அவர்களுக்கு வில்லியாகிவிட்டார். “வெளில அவங்களுக்கு நிறைய சப்போர்ட் இருக்கு. அதை நான் நம்பியிருந்தா அவங்க கால் அடிலதான் இருக்கணும். உள்ள வந்து பார்த்தாதான் விஷயம் புரியது. அன்பு என்கிற விஷயம் மட்டும் இல்லாட்டி அவங்க ஜீரோ’ என்று புதிதாக வந்திருக்கிற விஜயலட்சுமி உட்பட அனைவரின் விரோதத்தையும் மும்தாஜ் இப்போது சம்பாதித்திருக்கிறார். 

“அடுத்த வாரம் நாமினேஷன் வரட்டும். ரெண்டு ஓட்டா போட்டு குத்தறேன்’ என்று சென்றாயன் ஒருபக்கம் ஆவேசப்பட, ஜனனியும் பாலாஜியும் தங்களின் பாணியில் மும்தாஜ் குறித்து புறணி பேசிக்கொண்டிருக்கிறார்கள். “அவங்க எனக்காக நிச்சயம் பண்ணுவாங்க. எனக்கு அது நல்லாத் தெரியும்’ என்கிற நியாயவுணர்ச்சியுடன் பேசுபவர் ரித்விகா மட்டுமே. “எனக்காக அவங்க பிரே பண்றாங்க. எனக்குத் தெரியும். ஆனா டாஸ்க்கை பண்ணிட்டு அவங்களுக்காக பிரே பண்ணியிருக்கலாம்’ என்று ரித்விகாவும் ஒருவகையில் தடுமாறுகிறார். 

மற்றவர்களுக்குப் பிடிக்காவிடினும் அவரவர்களின் டாஸ்க்குகளை செய்து முடித்துவிட்ட நிலையில் மும்தாஜ் மட்டும் உறுதியாக மறுப்பதின் மூலம் போட்டியாளர்கள் மட்டுமன்றி பார்வையாளர்களின் விரோதத்தையும் சேர்த்து சம்பாதிப்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை. “முடிக்கு கலர் அடிக்கணும். அவ்வளவுதானே, இது என்ன பெரிய விஷயமா, சென்றாயன் பண்ணிக்கலையா, பாலாஜி மொட்டை அடிச்சுக்கலையா?” என்று பலருக்கும் தோன்றுவதிலும் நியாயம் இருக்கிறதுதான். இதுவரை சம்பாதித்த இமேஜை ஒரே நாளில் மும்தாஜ் இழக்கும் அபாயமும் இருக்கிறது. ஆனால், இப்படி ஒரே நாளில் வில்லியாகும்படி மும்தாஜ் செய்தது அத்தனை அபாண்டமான குற்றமா என்ன?

மும்தாஜ் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதற்கான நியாயமும் சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டாக வேண்டும். “நிறைய மாத்திரைகளை சாப்பிடுவதால் ஏற்கெனவே என் முடி பாழாகி இருக்கிறது. நிறைய கொட்டியிருக்கிறது. பல டிரீட்மென்ட் செய்து ஒருமாதிரியாக ஒப்பேற்றி வைத்திருக்கிறேன்.  பச்சை நிறத்தில் ஸ்பிரே வேண்டுமானால் செய்து கொள்கிறேன். ப்ளீச் போட்டு வண்ணமடித்தால் நிச்சயம் என் முடி பாழாகிவிடும். பிறகு அந்த நிரந்தர நிலையை வலியுடன் என்னால் வாழ்நாள் முழுதும் அனுபவிக்க முடியாது. அதற்கு விஷம் கொடுத்தால்கூட சாப்பிட்டுவிடுவேன். பிக்பாஸ் டிராஃபியை எனக்குக் கொடுத்தால்கூட இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். ரித்விகாவின் மீது எனக்கு நிறைய அன்பும் கரிசனமும் இருக்கிறது. ஆனால் உதவ முடியாத நிலையில் இருக்கிறேன். அவர் வெளியேற மாட்டார், நிச்சயம் காப்பாற்றப்படுவார் என்கிற நம்பிக்கையிருக்கிறது. நாமினேஷன் என்பது நாம் வாரா வாரம் எதிர்கொள்ளும் விஷயம்தானே?” என்று பல்வேறு விளக்கங்களால் மறுத்துக்கொண்டேயிருந்தார் மும்தாஜ். 

‘அன்பு காட்டி ஏமாற்றுகிறார்’ என்று மும்தாஜ் மீது சுமத்தப்படும் நிரந்தரப் புகாரில் எத்தனை சதவிகித உண்மை இருக்கிறதோ தெரியவில்லை. (பெரும்பாலான சமயங்களில் எனக்கு அவ்வாறு தெரியவில்லை). ஆனால், தேவைப்படும் போதெல்லாம் அவரின் அன்பை பெற்றுக்கொண்டவர்கள் இப்போது அவரைத் தூற்றுவது ஒருவகையில் துரோகம். ‘மோமோ.. மோமோ’ என்று கொஞ்சும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் கூட ஒரே கணத்தில் மாறி அவதூறு பேசுவது முறையானதல்ல. ‘நமக்கு தேவைப்பட்ட போதெல்லாம் அவங்க அன்பு கொடுத்தாங்க. அவங்களுக்குத் தேவைப்படும் போது நாம போயாகணும்’ என்று முன்பு ரித்விகா சொன்னதுதான் சரியான அணுகுமுறை. 

உடல்நலம் காரணமாக அந்த வீட்டின் பங்களிப்புகளில் மும்தாஜ் கலந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். இதைப் போலவே அவருக்கான சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன என்பதையும் அவரும் அதை எதிர்பார்த்தார் என்பதையும் பார்த்தோம். ஆனால், இந்தக் குறையை இயன்ற போதெல்லாம் அவர் சமன் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். சமையல் டீமில் இருக்கும்போது காலையுணவை எழுந்து தயாரிக்க முடியாத காரணத்தால் அதற்கான முன் ஏற்பாடுகளை இரவில் விழித்திருந்து செய்யவும் அவர் தயங்கதில்லை. 

போலவே ‘போலீஸ் –திருடன்’ டாஸ்க், ‘பொம்மலாட்டம் டாஸ்க்’ போன்றவற்றில் முழு அர்ப்பணிப்புடன் இயங்கினார். போலீஸ் திருடன் டாஸ்க்கில் “டீ’ விவகாரம் காரணமாக சில நாள்கள் தொடர்ந்து சாப்பிட முடியாத சூழல் ஏற்பட்டிருந்தும்கூட டாஸ்க்கிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. பொம்மலாட்டம் டாஸ்க்கில் தூங்கும்போதுகூட பணப்பெட்டியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கும் அளவுக்கு ‘கொலைவெறியுடன்’ டாஸ்க் விதியைக் கடைப்பிடித்தார். ‘அடங்காப்பிடாரி’ மஹத்தையும் ஒருபுறம் சமாளித்துக்கொண்டு டாஸ்க்கையும் வழிநடத்தியது பொறுமையின் உச்சம் எனலாம். மஹத்தின் அலப்பறைகள் அத்தகையது. 

ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா, ஜனனி என்று எவர் சோர்வுற்றிருந்தாலும் தானே முன்வந்து அவர்களை அரவணைத்து தேற்றுவதில் மும்தாஜ் முன்னணியில் இருந்தார். ‘போன்பூத்’ டாஸ்க்கில்கூட மற்றவர்கள் துன்பம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டால் ‘விருப்பமில்லையென்றால் விட்டுவிடு’ என்று அறிவுரை கூறவும் அவர் தயங்கவில்லை. மற்றவர்களின் வலியை தன் வலியாக கருதுபவர்களால்தாம் இப்படிச் சொல்ல முடியும். “உங்களுக்காக விஜயலட்சுமி செய்தார். அவர் வேண்டுகோளையாவது நீங்கள் மதியுங்களேன்’ என்று லாஜிக்காக மடக்க முயன்றார் சென்றாயன். “அவருக்கு விருப்பமில்லையென்று உறுதியாக மறுத்திருந்தால் நிச்சயம் நான் வற்புறுத்தியிருக்க மாட்டேன்’ என்பது மும்தாஜின் விளக்கம். 

இதையெல்லாம் மீறி ஒன்று இருக்கிறது. பிக்பாஸின் கட்டளை என்பதற்காகவே உயிரைக் கொடுத்தாவது அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. முதலாளித்துவச் சமூகத்தில் பணியாளர்கள் இப்படித்தான் தொடர்ந்து மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். ‘உண்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணிபுரிவது என்பது வேறு. முதலாளிகள் சொல்லும் அனைத்துக்கும் கேள்வி கேட்காமல் அடிமைத்தனத்துடன் பணிபுரிவது வேறு. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மெள்ள மெள்ள இந்த நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். இயந்திரக்குரலை கேட்ட மறுநொடியே அவர்கள் தன்னிலைக்குள் வந்து விடுவதைக் கவனிக்கலாம். பிக்பாஸ் சொன்னால் அதுதான் பைனல் என்கிற சூழ்நிலையை தன் கறார்த்தனத்தின் மூலம் பிக்பாஸ் உருவாக்கி வைத்திருக்கிறார். 

‘இந்த டாஸ்க்கில் தோற்றால் என்னவாகப் போகிறது. அடுத்த வார நாமினேஷன் அவ்வளவுதானே? உங்கள் தரப்பில் நியாயமிருந்தால் நிச்சயம் மக்கள் வாக்களித்து உங்களைக் காப்பாற்றப் போகிறார்கள். ரித்விகாவும் நிச்சயம் இப்படிக் காப்பாற்றப்படபோகிறார். (அதாவது மக்களின் வாக்கு உண்மையிலேயே பரிசீலிக்கப்படுகிறது என்கிற நிலையில்). ஒவ்வொரு வாரத்திலும் நிகழும் இந்தச் சடங்குக்காக இத்தனை மன அழுத்தத்தை தாங்கிக் கொள்வது ஒருவகையில் வீண். பிக்பாஸை விடவும் இந்தப் பெரிய உலகம் பெரியது. இந்த நோக்கில் மும்தாஜின் மறுப்பு அத்தனை பெரிய குற்றமாகத் தெரியவில்லை. மும்தாஜிடமும் சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவருடைய அத்தனை நல்லியல்புகளையும் மறந்து ஒரே கணத்தில் வில்லியாக்கும் தவற்றைப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் செய்யக் கூடாது. 

முன்னகர்ந்துகொண்டிருக்கிற நேரத்தில் ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொண்டாலும் அந்தச் சூழலைப் புரிந்துகொண்டு தன்னைத் தேற்றிக் கொண்ட ரித்விகாவின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. நிச்சயம் அவர் இறுதிக்கோட்டை நோக்கி நகர்வார். 

**

பிக்பாஸ் வீட்டின் சமையல் அணியில் இருந்தவர்களில் எவர் சிறந்தவர் என்கிற டாஸ்க் நடந்தது. இதில் சென்றாயன் அதிக பேட்ஜ்களை பெற்று முன்னணியில் வந்தது ஆச்சர்யம். இந்த வகையில் இன்னொரு வெற்றி அவருக்கு. சமையல் தெரியாத அவர் இவ்வளவு தூரம் கற்றுக்கொண்டு முன்னுக்கு வந்ததால் அவர் ஆதரிக்கப்பட வேண்டும் என்கிற காரணத்தினாலேயே ஜனனி உட்பட பலர் தேர்வு செய்தனர். மும்தாஜுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியது. அந்தச் சமயத்தில் அவருக்கு எதிரான மனநிலையே அங்கு இருந்தது. எனவே, இந்த டாஸ்க்கின் போது இறுக்கமான முகபாவத்துடன் இருந்தார் மும்தாஜ். மற்றவர்களின் கோரிக்கைகளையும் நிராகரித்து ரித்விகாவின் நாமினேஷனுக்கு தான் காரணமாகி விட்டோமே என்கிற குற்றவுணர்விலும் மனஅழுத்தத்திலும் அவர் இருந்திருக்கக்கூடும். ‘மன்னிச்சுடு ரித்து’ என்று அவர் முன்னர் தனிமையிலும் புலம்பிக்கொண்டிருந்தார். 

இதில் கூடுதல் அழுத்தம் தரும் வகையில் சமையல் திறன் டாஸ்க்கிலும் அவரை வெறுப்பேற்றுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. விருது பெற்ற சென்றாயன், ‘எனக்குத் தெரியாது .. எனக்குத் தெரியாது .. ன்னு மும்தாஜ் மேடம் சொன்னதாலேயே ஒரு சவாலா எடுத்துக்கிட்டு இதைப் பண்ணினேன். எனவே அவர்களுக்கும் ஒரு பெரிய நன்றி” என்று சர்காஸ்டிக்காக சென்றாயன் பேச, ஏற்கெனவே கொதிநிலையில் இருந்த மும்தாஜ், ‘தப்பாப் பேசறீங்கண்ணே.. உங்களுக்குத் தெரியாது –ன்னு நான் சொல்லலை. உங்களுக்குப் புரிய வைக்க முடியாது –ன்னுதான் முதலில் இருந்தே சொல்லிட்டு இருக்கேன்” என்றார். உண்மைதான். 

சென்றாயன் விளையாட்டுக்குத்தான் அப்படியொரு கமென்ட்டை சொன்னார் என்பது வெளிப்படை. அதன் உள்ளுற சற்று உண்மையும் இருந்திருக்கலாம். வழக்கமான சமயமாக இருந்திருந்தால் மும்தாஜ் கூட சாதாரண ஆட்சேபத்தோடு இதைக் கடந்திருக்கக்கூடும். ஆனால், கடினமான சூழலில் இருந்த மும்தாஜ், மிகவும் தீவிரமாகி ‘தப்பாச் சொல்லாதீங்க.. நீங்களும் மஹத் மாதிரி என்னைத் திட்டணும்னா. திட்டிக்கோங்க’ என்று சம்பந்தமில்லாமல் பேசத் தொடங்கி விட்டார். ‘நான் எது செஞ்சாலும் குத்தமா?, நானும் பார்த்துட்டுதான் வர்றேன். இந்த வீட்ல ரெண்டு பேர் அப்படி இருக்கீங்க?” என்று ஆதங்கப்பட்டார் சென்றாயன். (இன்னொருவர் யார்?! பாலாஜியா?) பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பாவனையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். ‘நான் புதுசா கிரேவி செஞ்சேனே.. யாராவது பாராட்டினீங்களா?’ என்கிற ஜனனியின் சிணுங்கலோடும் பாலாஜி அதைக் கிண்டலடிப்பதோடும் நிகழ்ச்சி நிறைவுற்றது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இறுதி நிலைக்கு செல்லக்கூடிய தகுதியுள்ள போட்டியாளர்களுள் ஒருவரான ரித்விகாவை பார்வையாளர்கள் நிச்சயம் கைவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வாரத்தை எதிர்நோக்குவோம்.