Election bannerElection banner
Published:Updated:

'சேவ் ஐஸ்வர்யா'னு நாங்க சொல்லலையே... வேற யார் சொல்லியிருப்பா கமல்?! #BiggBossTamil2

'சேவ் ஐஸ்வர்யா'னு நாங்க சொல்லலையே... வேற யார் சொல்லியிருப்பா கமல்?! #BiggBossTamil2
'சேவ் ஐஸ்வர்யா'னு நாங்க சொல்லலையே... வேற யார் சொல்லியிருப்பா கமல்?! #BiggBossTamil2

'சேவ் ஐஸ்வர்யா'னு நாங்க சொல்லலையே... வேற யார் சொல்லியிருப்பா கமல்?! #BiggBossTamil2

கமல் வரும் வாரஇறுதிகளில் உள்ளே நுழையும் போது பொதுவாக போட்டியாளர்களின் மீதுள்ள கோபத்தையும் விமர்சனங்களையும் முன்னுரையாக பார்வையாளர்களிடம் சொல்வார். ஆனால் இம்முறை அவரது கோபம் பார்வையாளர்களை நோக்கி இருந்தது. கடந்த பிக்பாஸ் சீஸனோடு ஒப்பிடும் போது பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சேதாரம் ஏதுமில்லை என்றாலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையின் சதவீதம் குறைந்து விட்டதையும் அதன் மூலம் ‘யார் வெளியேற்றப்பட வேண்டும்? என்கிற பார்வையாளர்களின் விருப்பங்கள் நிறைவேறாமல் போவதையும் சுட்டிக் காட்டினார். ‘டிவிட்டரில் உட்கார்ந்து கேலி பண்ணீங்கன்னா வேலைக்கு ஆகாது. களத்தில் இறங்குங்க. என்னைச் சொல்றீங்கள்ல. நான் இறங்கிட்டேன் இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்பது போல் பார்வையாளர்களுக்கே சவால் விட்டார். 

அப்போதே புரிந்து விட்டது. பார்வையாளர்களின் பெரும்பாலான சதவீத விருப்பிற்கு மாறாக ஏதோ நடந்திருக்கிறது என்பது. ஐஸ்வர்யா வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் இந்த வாரத்தின் பரவலான எதிர்பார்ப்பு. ஆனால் அது நிறைவேறவில்லை. ஆக ஏதோவொரு ‘காக்கும் கரம்’ இந்த முறையும் ஐஸ்வர்யாவைக் காப்பாற்றியிருக்கிறது. திருவிளையாடல் முருகன் சொல்வது போல ‘பெரியவர்களால் நடத்தப்பட்ட நாடகம் அல்லவா? நன்றாகத்தான் இருக்கிறது!.

இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்படுவதின் மூலம் ஏற்படும் பார்வையாளர்களின் கோபத்தைச் சமாளிக்க, தாமே முந்திக் கொண்டு ‘என்னாத்த ஓட்டுப் போட்டீங்க?” என்று பார்வையாளர்களின் பக்கம் பந்தைத் திருப்பி, ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதால் தனக்கும் அதிருப்தியும் கோபமும் இருப்பது போன்ற ஒரு பாவனையை கமல் சிறப்பாகச் செய்து முடித்து விட்டார் என்றே தோன்றுகிறது. உலக நாயகனுக்கு இது போன்ற நடிப்பெல்லாம் சோளப்பொறி. ஆனால் அவர் ஓவர்ஆக்ட் செய்ததில் விஷயம் அம்பலமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. 

‘ரெட் கார்ட்’ கொடுத்து ஐஸ்வர்யாவை வெளியேற்றுவதுதான் கமலின் விருப்பம் என்றால், கடந்த முறை ‘மஹத்தை’ வெளியேற்றியது போல் இப்போதும் ஐஸ்வர்யாவை வெளியேற்றியிருக்கலாம். மஹத் எபிஸோடில் எந்த சார்ட்டையும் காட்டவில்லை. ஆனால் இம்முறை ஏதோ சார்ட்டையெல்லாம் காண்பித்து பார்வையாளர்களை குற்றம் சொல்ல முயன்றார். இதற்கு கமல் திரைப்படத்திலிருந்தே ஓர் உதாரணம் சொல்லலாம். ‘மைக்கேல் மதன காமராஜனில்” தந்தையின் மறைவிற்குப் பிறகு நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் அவரது மகன், கணக்காளர் நாகேஷ் செய்த தில்லுமுல்லுவை கண்டுபிடித்து விடுவார். அதை தனது கணினியில் டைப் அடித்து நாகேஷிடம் காட்டும் போது ‘இது இப்ப நீங்க அடிச்சது’ என்று நாகேஷ் சமாளிக்க முயல, ‘நான் அடிச்சதில்ல. நீங்க அடிச்சத பத்தி கேக்கறேன்” என்று கமல் சொல்லும் வசனம் பிரபலமானது. அதைப் போல கணினியில் உருவான ஒரு சார்ட்டை காண்பித்து ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதின் காரணத்தை விளக்க முயன்றார். ‘நம்மாளுங்க லேமினேட் பண்ணி எதைக் காண்பிச்சாலும் நம்பிடுவாங்க” என்று விவேக் அடிக்கும் கிண்டல் எப்போதும் செல்லுபடியாகாது. ‘நிஜ அரசியலிலும் இது போல் வாக்கு சதவீதத்தை குறைவாக நிகழ்த்தி சொதப்பி விடாதீர்கள்’ என்று அவர் சொல்கிற செய்தியை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அது ஏறத்தாழ உண்மையானது. (அங்கும் கூட குளறுபடிகள் நிகழ வாய்ப்புள்ளது என்றாலும்). 

கமல் சுட்டிக் காட்டிய சார்ட்டின் வழியாக சில சந்தேகங்கள் எழுகின்றன. ‘வாக்கு சதவீதம் குறைகிறதே” என்று கவலைப்படும் கமல், இதற்கு முன்பு பலமுறை வாக்களித்தும் அது மக்களின் பெரும்பாலான எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்பதும் அது குறித்தான அதிருப்தி பார்வையாளர்களுக்கு தொடர்ந்து இருக்கிறது என்பதும் அதனாலேயே கூட வாக்களிக்கும் ஆர்வம் அவர்களுக்கு குறைந்திருக்கலாம் என்பதும் கமலுக்கு தெரியாதா? இது குறித்த இணையக் கருத்துக்களை அவர் பார்க்கவில்லையா? ஏற்கெனவே அளித்திருந்த வாக்குகளுக்கு மதிப்பில்லாத போது எப்படி ஆர்வம் வரும்?

எந்தப் போட்டியாளரின் மீதும் சார்பில்லை என்பவர், வந்திருக்கும் வாக்குகளின் படி பெரும்பான்மையான சதவீதத்தைப் பெற்றிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு வழக்கமான புன்னகையுடன் காப்பாற்றப்பட்ட செய்தியை சொல்லியிருக்க வேண்டியதுதானே? ‘மக்களின் பிரதிநிதி’தானே அவர்? நானா இருந்தா ரெட் கார்ட் கொடுத்திருப்பேன் என்றெல்லாம் ஏன் மிகையாக கோபப்பட வேண்டும்? மஹத் உடல் சார்ந்த வன்முறையை நிகழ்த்திய போது கூட அவரிடம் இத்தனை கோபம் வரவில்லையே? 

இன்னொரு முக்கியமான விஷயம். கமல் இந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளை சரியாக பார்த்தாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கடந்த சீஸனில், ஜூலி பொய் சொன்ன எபிஸோடில் அவரது குறுக்கு விசாரணை ஒரு திறமையான வழக்கறிஞரின் பணிக்கு நிகராக இருந்தது. ஆனால் இன்றோ, ‘என்ன நடந்தது?” என்று போட்டியாளர்களிடமிருந்து தெரிந்து கொள்ளும் சூழலில்தான் அவர் இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நடந்த விஷயத்தை அவர்களின் வாயாலேயே வரவழைக்கும் உத்திதான் அது என்றாலும் இன்றைய எபிஸோடில் கமல்ஹாசனின் சிரத்தையின்மையை உணர முடிந்தது. 

‘இந்த வாரம் நாமினேஷன்’ என்று சொல்லி சென்றாயனை ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று ஜனனியும் ரித்விகாவும் மறுபடி மறுபடி குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அன்றைய நாளில் என்ன நடந்தது என்றால், தன்னுடைய முதல் அழைப்பை ஏற்று திரும்பும் ஐஸ்வர்யா, ‘நீங்கள் அடுத்த வாரம் நேரடி நாமினேஷன் ஆயிட்டிங்க’ என்றுதான் சென்றாயனிடம் கூறுகிறார். (இதை அன்றைய நாளின் கட்டுரையிலும் நான் அழுத்தமாக கூறியிருக்கிறேன்.) வீடியோவைப் பார்த்தால் இந்த விஷயம் தெளிவாக தெரியும். இன்று ஒளிபரப்பப்பட்ட குறும்படம் எண் ஒன்றிலும் இது தெளிவாக வெளிப்படுகிறது. 

ஜனனியும் ரித்விகாவும் உரையாடலை சரியாக நினைவு வைத்துக் கொள்ளாமல் பிசகினால் சொல்லியிருக்கலாம். ஆனால் வீடியோவின் வழியாக உரையாடல்களை நிதானமாக பார்க்க வாய்ப்புள்ள கமல், இதை கவனித்திருக்க வேண்டும். ஒரு நடுநிலையாளராக, ஜனனியும் ரித்விகாவும் கவனப்பிசகாக அளித்த சாட்சியத்தையும் சபையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். 

நெருக்கடியான சூழலில் இருந்த ஐஸ்வர்யா, எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘உத்தி’ என்பதாக கருதிக் கொண்டு ஒரு பொய்யிலிருந்து துவங்கி மற்றவர்களின் கேள்விகளை சமாளிக்கத் தெரியாமல் விழித்தது நிஜம். அதிலும் வெள்ளந்தியான சென்றாயனை ஏமாற்றியது துரோகம்தான். ஆனால் இதைச் செய்து விட்டு அவர் சாமர்த்தியமாக நடந்து கொண்டோம் என்று மகிழவில்லை. அது சார்ந்த குற்றவுணர்ச்சியிலும் அவதிப்படுகிறார். ‘என்ன செய்யறது, விளையாட்டுக்காகத்தானே?” என்று யாஷிகாவிடம் ஆதங்கப்படுகிறார். 

‘ஐஸ்வர்யா பொய் சொன்னார், அந்தப் பொய்க்கு யாஷிகாவும் மும்தாஜூம் துணை நின்றார்கள்’ என்கிற செய்தியை கமல் தன் குறுக்கு விசாரணையின் மூலம் இன்று நிறுவ முயல்கிறார். உண்மை பேசுவது நல்ல பண்புதான். மறுக்கவில்லை. ஆனால் பிக்பாஸ் நல்லொழுக்க கருத்துக்களை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியா? டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை விதம் விதமாக வதைப்பது எந்த வகையில் சேர்த்தி? 

ஐஸ்வர்யா பொய் சொல்லுவதின் மூலம், ஒரு கெட்ட செய்தியை மக்களிடம் பரப்பி விடுவோம் என்று பிக்பாஸ் டீம் நினைத்திருந்தால், இரண்டாவது அழைப்பின் போது ‘பாருங்க ஐஸ்வர்யா. நீங்க பொய் சொல்லி சென்றாயனை ஏமாத்த டிரை பண்றீங்க. அது தவறு. உண்மையைப் பேசி கன்வின்ஸ் செய்ய முயலுங்கள்” என்று எச்சரித்திருக்க வேண்டுமே? ஒரு பக்கம் பிள்ளையையும் கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டும் உத்தி ஏன்? வாகன ஓட்டுநர்கள் தவறு செய்யும் வரை காத்திருந்து, பிறகு மறைவிலிருந்து ஓடி வந்து அவர்களைப் பிடித்து தண்டனை தரும் போக்குவரத்து காவலர்களுக்கும் இதற்கும் வித்தியாசமில்லை. போட்டியாளர்களை தவறு செய்ய அனுமதித்து விட்டு பிறகு பஞ்சாயத்தில் அறச்சீற்றத்துடன் வறுத்தெடுப்பதும், அவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதும் பொய்யை விடவும் மோசமான விஷயம். 

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதில் ஐஸ்வர்யாவிற்கு மொழிப்பிரச்னை இருக்கும் சந்தேகத்தின் பலனும் அவருக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். முதல் அழைப்பின் போது ‘இந்த டாஸ்க்ல மத்தவங்களை sacrifice பண்ண வைக்கணும்’ என்றுதான் அந்த ஆசாமி தன் உரையாடலைத் துவங்குகிறார். இதை ‘மத்தவங்களையும் கன்வின்ஸ் பண்ணனும்’ என்பது போல் ஐஸ்வர்யா புரிந்து கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இதைத்தான் அவர் பஞ்சாயத்திலும் சொல்கிறார். 

ஆனால் நாட்டாமை சில முன்தீர்மானங்களுடன் பஞ்சாயத்திற்கு வந்திருப்பதாகவே தெரிகிறது. ‘ஐஸ்வர்யாவை’ காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, அவர்களை வறுத்தெடுப்பது போல் ஒரு பாவனை செய்வதின் மூலம் பார்வையாளர்களின் கோபத்திற்கான வடிகாலை அளிக்கலாம் என்பதற்கான உத்தி என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த வாரத்தில் ‘யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்” என்று பல இணைய தளங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ஐஸ்வர்யாவிற்கு எதிரான முடிவுகளே வந்திருக்கின்றன. எனில் பிக்பாஸ் டீமிற்கு மட்டும் எப்படி சாதகமாக முடிவு வந்தது என்பது ஆச்சரியம். 

தனக்குப் பதிலாக ‘நீங்கதான் நாமினேட் ஆகியிருக்கீங்க?’ என்று ஐஸ்வர்யா சென்றாயனிடம் சொன்ன பொய் தவறுதான் என்றாலும் உத்தி என்கிற கோணத்தில் அது பரிசிலீக்கப்பட வேண்டியதே. ஏனெனில் பிக்பாஸ்ஸின் உத்திகள் இதைவிடவும் கொடூரமானவை. எனவே இதைப் பற்றிய நல்லொழுக்க வகுப்பு நடத்தும் நிலையில் பிக்பாஸ் டீம் நிச்சயம் இல்லை. 

என்றாலும் இந்த வாரத்தில் ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். அது பொய் சொன்ன காரணத்திற்காக அல்ல. ஆங்கிலத்தில் பேசி விட்டு அந்த தவறுக்காக மற்றவர்களிடம் வேண்டுகோள் வைக்க விரும்பாதது மட்டுமல்லாமல், ஒருவர் மீதுள்ள கோபத்தினால் அனைவரையும் எடுத்தெறிந்து பேசிய ஆணவத்திற்காக. ‘ஒரு சான்ஸ் கொடுங்க’ என்ற முறையிட்ட பிறகும் அவரால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை எனில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதே சரியானது. இந்தக் கோணத்தில் ரித்விகா, ஜனனி, விஜி, பாலாஜி ஆகியோரின் கோபம் நியாயமானது. 

**

ரித்விகாவிற்கான டாஸ்க்கை ஏன் ஒப்புக் கொள்ளவில்லை’ என்கிற கோணத்தில் பல கிடுக்கிப்பிடிகளை கமல் போட்டும் மும்தாஜ் மிக எளிதாக வெளியே வந்தார். ‘அடுத்து என்ன கேட்பது?’ என்று கமலே திகைத்து நின்றார். தன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிலவற்றை மும்தாஜ் தவிர்ப்பது ஏற்புடையதல்ல. மிக முக்கியமாக, சாணிக்குளத்தில் கூட இறங்கத் தயாராக இருப்பதாக பாவனை செய்யும் மும்தாஜ், ஒருமுறை கூட நீச்சல் குளத்தில் இறங்கத் தயாராக இல்லை. காலை வேளையில் அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்கிற காரணம் இருந்தாலும், மற்ற வேளைகளில் கூட அவர் இதைச் செய்ய முன்வருவதில்லை. ஹரீஷ் வருகையின் போது ‘என்னப்பா ஆம்பளைங்க மட்டும் குளத்தில் குதிக்க வர்றீங்க?” என்ற சமயத்திலும் மும்தாஜ் மறுத்து விட்டார். அப்போது அது காலை நேரம் அல்ல. 

வேறென்ன? வெள்ளிக்கிழமை நிகழ்வுகளில் சுவாரஸ்யமாக ஒன்றுமில்லை. மறுபடியும் ஒரு புகைப்படப் போட்டி. வீடு இரு அணிகளாகப் பிரிந்து ஐந்து புகைப்படங்களை எடுக்க வேண்டும். அதையொட்டி ஒரு கதையை உருவாக்க வேண்டும். இதில் விஜயலஷ்மி உருவாக்கிய ‘கதை’ நன்றாக இருந்தது. சென்ட்டிமென்ட்டுடன் சொன்னால் அது ஜெயிக்கும் என்பதை விஜி உணர்ந்திருக்கிறார். (இயக்குநரின் மகள் அல்லவா?!). ஆனால் இந்தச் சாக்கில் தன்னை ‘குழந்தை’ என்றெல்லாம் அழைத்துக் கொண்டது புனைவு என்றாலும் கூட கொடூரம். 

சென்றாயன் அணி உருவாக்கிய கதையில் ‘ரத்தம், கொலை, ஜெயில்’ என்று டெரராக இருந்தது. அதனாலேயே அது தோற்றுப் போவதற்கான நியாயம் இருந்தது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

மற்றபடி, ‘வாழ்வோ, சாவோ, வீவோ’ போன்ற கமலின் வழக்கமான நையாண்டிகள் அற்புதம். ‘உடம்பு முடியலைன்னு நானும் இங்க தலையணை போட்டு படுத்துட்டே நிகழ்ச்சியை நடத்தினா அது சரியா இருக்குமா?’ என்று மும்தாஜிற்கு செக் வைத்த கிண்டல் எல்லாம் அற்புதம். ‘எதுல விட்டேன்” என்று ஓர் இடைவேளைக்குப் பின் வந்து கமல் கேட்டதும், முதல் பெஞ்ச் மாணவன் மாதிரி ‘பொய்’ என்று எடுத்துக் கொடுத்த விஜயலட்சுமியின் முந்திரிக்கொட்டைத்தனம் எரிச்சல். இனி வரும் டாஸ்குகளில் இவர் கவனமாக இல்லையெனில் அடுத்த வறுத்தெடுத்தலுக்கு ஆளாவார்.

இந்த வாரம் சென்றாயன் வெளியேற்றப்படவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. இதையேதான் ‘தெரிஞ்சா வருத்தப்படுவீங்க!” என்று கமலும் சூசகமாக சொன்னார். இது உண்மையிலேயே வருத்தமான விஷயம். சமையல் போட்டியில் தொடர்ந்த வெற்றி என்று சென்றாயன் இப்போதுதான் மேலேறி வருகிறார். யாரையும் ஏமாற்ற விரும்பாத அவரது வெள்ளந்திதனம் ஒருவகையில் பலவீனம் என்றாலும் அதுவே அவரது பலமும் கூட. புத்திசாலியாக இருப்பதை விடவும் பொய் சொல்லாமல் இருப்பது உயர்ந்தது.  

மக்கள் ஒழுங்காக வாக்களிக்கவில்லை என்கிறார் கமல். கமலின் விஸ்வரூப பாணியில் சொல்வதானால் " எந்த மக்கள் ? " என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஆன்லைனில் நடக்கும் ஒரு சர்வேயில் கூட ஐஷ்வர்யா முதல் இடத்தைப் பிடிக்கவில்லை. பல தளங்களின் சர்வேக்களில் ஐஷ்வர்யா வாங்கியிருப்பது கடைசி இடம் தான். எல்லா தளத்திலும் சரியாக வாக்களிக்கும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் , பிக்பாஸின் தளத்தில் மட்டும் தவறாக வாக்களித்துவிடுகிறார்கள் போல. 

‘வாக்களியுங்கள்’ என்கிற உபதேசத்தைக் காட்டிலும் வரும் வாக்குகள் சரியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்கிற நம்பகத்தன்மையை பார்வையாளர்களுக்கு அளிப்பது மிக முக்கியமானது. கமலும்,  பிக்பாஸ் டீமும் இதைக் கவனிக்குமா? 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு