Election bannerElection banner
Published:Updated:

ஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கும் நடந்தது நியாயமே இல்லை பிக்பாஸ்! #BiggBossTamil2

ஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கும் நடந்தது நியாயமே இல்லை பிக்பாஸ்! #BiggBossTamil2
ஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கும் நடந்தது நியாயமே இல்லை பிக்பாஸ்! #BiggBossTamil2

ஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கும் நடந்தது நியாயமே இல்லை பிக்பாஸ்! #BiggBossTamil2

``சென்றாயா… இப்படிப் பலியாடாக்கி திருப்பி அனுப்பப்படுவதற்காகத்தான் சென்றாயா’ என்று பொன்னம்பலம் மாதிரி கவிதை மாதிரி ஒன்றை எழுதிப் பாட வேண்டும் போல் ஆவேசமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய. ஐஸ்வர்யா, மும்தாஜ் என்று மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொண்ட படிநிலையின் வரிசையைத் தாண்டி சம்பந்தமேயில்லாத சென்றாயன் பலியாடாக பிரியாணிக்கப்பட்டது ஆச்சர்யம் மட்டுமல்ல, அதிர்ச்சியும்கூட. ஆனால், இன்னொரு வகையில் இது குறித்து ஆச்சர்யமும் இல்லை. இப்படி அப்பிராணிகளை பலி தருவது பிக்பாஸ்ஸின் வழக்கமான மரபு. எவர் கேமராவுக்கு அதிகத் தீனியைத் தருகிறாரோ அவரின் இருப்பே பிக்பாஸுக்கு முக்கியம். அதற்காக எப்படிப்பட்ட ‘ஆதாரங்களையும்’ உருவாக்குவார்கள் போலிருக்கிறது. இந்தத் தீனியைத் தருபவர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவை வெளியே அனுப்ப முடியாமலும், “ஆனால் அனுப்ப முடியவில்லையே’ என்று திசை திருப்பி மக்களை குறை சொல்வதிலும் ஆன நாடகத்தை பிக்பாஸ் + கமல் கூட்டணி திறமையாகச் செய்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு இருந்தது நேற்றைய நிகழ்வுகள்.

இந்த எவிக்ஷன் என்கிற சடங்கு ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் இரண்டு நாள்களாக ஒளிபரப்பப்படுகிறது. ‘யார் வெளியேற்றப்படவிருக்கிறார்’ என்கிற விஷயத்தை பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிற பாணியில் கமலும் பல்வேறு விதமாக இழுக்கிறார். ஆனால் யார் என்று அறியாதவரைதான் பார்வையாளர்களுக்கு இது சஸ்பென்ஸ் மற்றும் சுவாரஸ்யம். ஆனால் இது தொடர்பான விடைகள் ஒவ்வொரு வாரமும் இணையதளங்களில் முன்பே கசிந்துவிடுகிறது. அது தொடர்ந்து சரியாகவும் இருக்கிறது. இதை அறிந்துகொண்ட பிறகு வாரஇறுதி நிகழ்ச்சி அத்தனை சுவாரஸ்யமாக இருப்பதில்லை. அதிலும் கமல் இதை நன்றாக இழுக்கும் போது, அதில் சுவாரஸ்யம் இருந்தாலும்கூட “ஆண்டவரே... எங்களுக்குத் தெரியும். விஷயத்தை சட்டுபுட்டுன்னு முடிங்க’ என்றுதான் சொல்லத் தோன்றிவிடுகிறது. இணையத்தில் புழங்காதவர்களுக்கும் விஷயத்தை அறியாதவர்களுக்கும் மட்டுமே இது சுவாரஸ்யம். 

சீஸன் இரண்டு தொடங்கப்பட்ட சமயத்தில் அந்த வீட்டைச் சுற்றிக் காட்ட பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்ற போது, ஏதோ தீவிரவாதிகளின் பாணியில் அவர்களின் கண்களையெல்லாம் கட்டி பிக்பாஸ் டீம் அழைத்துச் சென்றதாக வாசித்த நினைவிருக்கிறது. இத்தனை ரகசியத்துடன் கறார்தனத்தை காட்டும் பிக்பாஸ், இந்த எவிக்ஷன் விஷயத்தில் மட்டும் ஒவ்வொரு வாரமும் கோட்டை விடுவது ஏன்? நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக அவர்களே திரைமறைவில் செய்யும் உத்தியா?

இரண்டு தரப்புக்கு இடையில் நடக்கும் போரில் சம்பந்தமேயில்லாத அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் போல பார்வையாளர்களின் ‘ஹிட் லிஸ்ட்’டில் இல்லாத சென்றாயன் இன்று வெளியேற்றப்பட்டது துரதிர்ஷ்டமானது. கமல் குறிப்பிடுவது போல் வாக்களிக்கும் சதவிகிதம் உயர்ந்தால் இதில் மாற்றம் உண்டாகக்ககூடும். ஆனால் மக்களின் வாக்குகளின்படிதான் முடிவுகள் அமைகிறதா என்பதும் ஐயத்துக்குரியதாக இருக்கிறது. இது சார்ந்த வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ‘நான் கேட்டு வாங்கினேன்’ என்று கமல் வற்புறுத்தி முடிவுகளை ஒரு வாரத்துக்கு வெளியிடும் அளவுக்கு வாக்கு எண்ணிக்கையின் ரகசியம் காக்கப்படுகிறது. 

ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்ட விஷயத்தை வெறுப்புத் தொனியுடன் கமல் நேற்றே சொல்லி விட்டார். ஆனால், இன்றைய நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யாவின் ‘பொய்யை’ தன்னுடைய நையாண்டி பாணியில் மறைமுகமாகத் தொடர்ந்து குத்திக் காட்டிக் கொண்டேயிருந்தார். சென்றாயனின் வெளியேற்றம் அறிவிக்கப்பட்ட போது அது சார்ந்த குற்றவுணர்ச்சியோடு பேச அனுமதி கேட்ட ஐஸ்வர்யாவை கவனிக்காமலிருக்க முயன்று, பிறகு வேண்டாவெறுப்பாக அனுமதியளித்து, ஐஸ்வர்யா சொல்ல வருவதை காதில் முழுவதும் சரியாக வாங்காமல் “அப்ப நீங்க வெளியே போக வேண்டியதுதானே” என்று பொங்கி, ‘அதைத்தான் சொல்ல வந்தேன்’ என்று பரிதாபமாக ஐஸ்வர்யா முனகியதும் சட்டென்று தணிந்து ‘நிகழ்ச்சி விதியின் படி அது சாத்தியம் இல்லை’ என்று தானே விளக்கமும் அளித்து ‘அந்நியன் – அம்பிக்கு’ சவால் விடும் வகையில் திறமையைக் காட்டினார் உலகநாயகன். 

ஒரு பக்கம் குத்திக் காண்பித்து விட்டு `அவங்களுக்கு Mood swing’ ஆகுது. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதுதான் அவர்களுக்கு நல்லது’ என்று அனுதாபத்தையும் பிறகு காட்டுவது முரண். ஐஸ்வர்யாவின் மீது உண்மையான கரிசனம் உண்டென்றால் ‘ரெட் கார்ட்’ கொடுத்து இந்த வாரமே வெளியேற்றியிருக்கலாம். மன அழுத்தத்தில் ஐஸ்வர்யா தொடர்ந்து அழுவதையும் சண்டை போடுவதையும் பல கோணங்களில் காட்டி வணிகமாக்குவதற்கு உடன்படாமல் இதையாவது செய்திருக்கலாம். ஐஸ்வர்யா மட்டுமல்ல, அந்த வீட்டில் உள்ள பலருக்கும் உள்ள உளச்சிக்கல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் காரணம் பிக்பாஸ் தரும் அழுத்தம்தானே? ‘அநீதியின் பால் கோபம் கொள்ளும்’ கமல்ஹாசன் அதையும் தட்டிக் கேட்பாரா?

வெள்ளந்தியான சென்றாயனை ஐஸ்வர்யா ஏமாற்றியது தார்மிகரீதியாக சரியில்லாததுதான். இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு பொங்குமளவுக்கு, குத்திக் காண்பிக்கும் அளவுக்கு அது இமாலயத் தவறு அல்ல. இதை விடவும் கொடுமைகள் செய்த மஹத் போன்ற போட்டியாளர்களை ‘எல்கேஜி’ குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுவது போல் கொஞ்சி வெளியே அனுப்பிய கமல், இன்றைய தினத்தில் அதீதமாக பொங்குவது ஆச்சர்யம். கடந்த சீஸனில் அதிக அலப்பறைகள் செய்த காயத்ரி மற்றும் ஜூலியின் வெளியேற்றத்தின் போது ‘சமூக வலைதளங்களின்’ எதிர்ப்பு காரணமாக “ஆறுதலான’ வார்த்தைகளைச் சொல்லி பாதுகாப்பாக அனுப்பிய கமலின் சமநிலையுணர்வு எங்கே போனது என்று தெரியவில்லை. 

அப்படி ஐஸ்வர்யா செய்த இமாலயத் தவறுதான் என்ன. அவருடைய நோக்கில், தரப்பிலிருந்து சுருக்கமாகத் தொகுத்துக் கொள்வோம். ‘காக்கும் கரத்தால்’ பலமுறை காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா, அந்த வார நாமினேஷனில் ஏற்கெனவே இருக்கிறார். வீட்டில் நிகழும் சச்சரவுகள் காரணமாக மற்றவர்களால் தான் தனிமைப்படுத்திருப்பதாக உணர்கிறார். இந்த நிலையில் ‘போன் பூத்’ டாஸ்க்கின் மூலம் அடுத்த வாரமும் நாமினேஷனுக்கு ஆளாக்கப்படும் நிலையைக் கண்டு பதற்றமாகிறார். எப்படியாவது இதிலிருந்து விடுபட வேண்டும் என்று தோன்றிவிடுகிறது. 

முதல் அழைப்பை எடுத்தது அவர்தான் என்பதால் பிக்பாஸ் ஆசாமி சொல்லும் குறிப்புகளைப் புரிந்துகொள்வதில் அவருக்கு மொழிப் பிரச்னை இருந்திருக்கலாம். பேசிய நபர் டாஸ்க்கை அறிமுகப்படுத்தும் நோக்கில், `உங்க sacrifice இருக்கட்டும். இந்த டாஸ்க்ல நீங்க மத்தவங்களை sacrifice பண்ண வைக்கணும். சென்றாயன் தலைல சிவப்பு மை பூசணும்’ என்கிறார். மொழிப் பிரச்னை காரணமாக ‘எல்லோரையுமே இதற்காக கன்வின்ஸ் செய்ய வேண்டும்” என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஐஸ்வர்யா, ஒருவேளை சென்றாயன் ஒப்புக் கொண்டால் கூட மற்றவர்கள் அவரைக் குழப்பி விடுவார்களோ என்பதற்காக `உத்தி’ என்று நினைத்துக்கொண்டு ஒரு பொய்யைச் சொல்கிறார். ஏனெனில் இதை விடவும் கொடூரமான பாணிகளில் நடக்கும் இதர பிக்பாஸ் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கும் ஐஸ்வர்யா, ‘பொய் சொல்லி கன்வின்ஸ் செய்வதும் தலையில் சாயம் அடிப்பதும் சாதாரணம்’ என்று கருதிக் கொள்கிறார். தான்தான் நாமினேஷன் என்பதை மறைத்து ``நீங்கள்தான் அடுத்த வாரம் நாமினேஷன்’ என்று பொய் சொல்கிறார். வெள்ளந்தியான சென்றாயனும் இதற்கு ஒப்புக் கொள்கிறார். பதில் உபகாரமாக சென்றாயனுக்கு நான் நிச்சயம் உதவுவேன் என்கிற உறுதிமொழியையும் ஐஸ்வர்யா ஏற்றுக் கொள்கிறார். அதை சென்றாயனுக்கும் சொல்கிறார். பிறகு பின்பற்றவும் செய்கிறார்.

ஒருபக்கம் பொய் சொல்லி சம்மதம் வாங்கினாலும் சென்றாயனின் தலையில் சாயம் பூசுவதில் உள்ளூற அவருக்குத் தயக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் தன் தலைமுடி குறித்து அதிக அக்கறை கொண்டிருக்கும் சென்றாயனுக்கு மை பூசலாமா என்று கலக்கமும் குற்றவுணர்ச்சியும் அவருக்கு ஏற்படுகிறது. யாஷிகாவிடம் உண்மையைச் சொல்லி ‘தான் செய்வது சரியா’ என்று புலம்புகிறார். ‘என்ன பண்றது, விளையாட்டுக்காகத்தானே” என்று அவரே பிறகு ஆறுதல் சொல்லிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் இதரப் போட்டியாளர்களும் பல்வேறு கேள்விகளின் மூலம் விசாரிப்பதால் அவருடைய குற்றவுணர்ச்சி அதிகமாகிறது. டாஸ்க்கை பாதியிலேயே நிறுத்தி விட்டு ‘வேண்டாம் போ’ என்று குழந்தை போல் அடம் செய்கிறார். ‘பாதியிலேயே நிறுத்தி விட்டா எப்படி, வாழ்வோ, சாவோ, ஏதோவொன்றைப் பார்த்து விடுவோம்’ என்கிற முடிவுக்கு சென்றாயன் வருகிறார். டாஸ்க் நிறைவேற்றப்படுகிறது. என்றாலும் பொய் சொல்லித்தான் ஏமாற்றப்பட்டது குறித்து சென்றாயனுக்கு வருத்தம் இருக்கிறது. தன் தலைமுடியை இழந்துகொண்டிருப்பது குறித்த வருத்தமும் இருக்கிறது. (ஆனால் இது போன்ற கொடூரமான டாஸ்க்குகளை அளித்த பிக்பாஸின் மீது சென்றாயனுக்கோ, நமக்கோ, கமலுக்கோ கோபம் வராது. நெருக்கடியில் அதை நிறைவேற்றியவர்களின் மீதுதான் கோபம் கொள்வோம். கமலும் அப்படித்தான் இருக்கிறார். பெரிய முதலாளியைக் கோபித்துக் கொள்ள முடியுமா?).

நேர்மையும் உண்மையும் மிக மிக எளிமையானது என்பதே இந்தச் சம்பவங்களின் மூலம் நாம் உணரும் நீதி. எந்தத் தகிடுதத்தமும் இன்றி, சென்றாயனிடம் நேரடியாகச் சென்று ஐஸ்வர்யா கேட்டிருந்தால் அவர் – சில பல தயக்கங்களுக்குப் பின் – நிச்சயம் ஒப்புக் கொண்டிருப்பார். 

விஜய்சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ என்கிற திரைப்படத்தின் மையமும் இதுதான். அரசாங்க அலுவலகத்துக்குச் சென்றால் சிக்கல் ஏற்படக்கூடும் என்று கருதும் விஜய்சேதுபதி ஒரு பொய்யைச் சொல்லி விடுவார். அந்த ஒரு பொய் பல்வேறு சிக்கல்களுக்கு அவரை இட்டுச் செல்லும். இறுதிக்காட்சியில் அரசு அதிகாரியிடம் நேரடியாகச் சென்று அத்தனை உண்மைகளையும் சொல்லி தன் பணியை மிக எளிமையாக முடிப்பார்.

‘அரசு அலுவலகம் என்றாலே அது ஊழலும் முறைகேடும் நிறைந்தது என்கிற மிகைப்படுத்தப்பட்ட கற்பனையில் இடைத்தரகர்களை தேடிச் செல்லாதீர்கள். அந்த மனோபாவம்தான் ஊழல் பெருகக் காரணமாகயிருக்கிறது. அரசாங்க அலுவலகங்களிலும் நேர்மையாளர்கள் உண்டு. முன்தீர்மானங்களைக் கழற்றி விட்டு நேரடியாகச் சென்று அணுகுங்கள்’ என்பதுதான் அந்தத் திரைப்படத்தின் சாரம். ஐஸ்வர்யா விவகாரத்திலும் இதுவேதான் நடந்திருக்கிறது. 

பிக்பாஸ் தரும் நெருக்கடியினால், ஐஸ்வர்யா செய்தது ஒரு பிழை. ஆனால் அதற்கு கமல் அளிக்கும் தண்டனை பெரியது. சட்டத்தின் ஓட்டைகளின் வழியாக மிகப்பெரிய கிரிமினல்களை கூட தப்பிக்க வைக்கும் நீதி அமைப்பு ஒருபக்கம் இருக்க, ஒரு பிக்பாக்கெட் கேஸை தர்மஅடி போடும் பொதுப்புத்தியின் அதே மனோபாவத்தை கமலும் பின்பற்றுகிறாரே என்று வருத்தமாக இருக்கிறது. இந்த சீஸனிலும் சரி, கடந்த சீஸனிலும் சரி, ஐஸ்வர்யாவை விடவும் அதிகத் தவறுகள் செய்த எந்தவொரு போட்டியாளரையும் அவர் இவ்வளவு கொடூரமாகக் கடிந்து கொண்டதில்லை. 

சென்றாயன் வெளியேற்றப்படுவதும், ரித்விகா டாஸ்க் முடியாமல் அடுத்த வாரத்துக்கு நாமினேட் ஆனதும் நிச்சயம் துரதிர்ஷ்டமானது. இந்த வருத்தம் நமக்கும் உண்டு. ஆனால் அந்தக் கோபத்தையெல்லாம் ஐஸ்வர்யா என்கிற ஒற்றை நபரின் மீது கமல் போடுவது முறையானதல்ல. 

ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர், அனைத்துப் போட்டியாளர்களையும் பாரபட்சமின்றி சமமாகக் கையாள்வதை விட்டு விட்டு சிலர் மீது கோபப்படுவதும், சிலரின் வாதங்களை ஆதரிப்பதும், ஒருவரை சபையில் அவமானப்படுத்துவதும் சரியல்ல. 

தனக்கு அளிக்கப்பட்ட ஓட்டு உரிமையைக் கொண்டு ஐஸ்வர்யாவை அடுத்த வார நாமினேஷனில் கமல் இணைப்பது அநீதி. ‘அநீதியின் பால் கோபம் கொள்ளும் கமல்ஹாசன்’ இதைச் செய்வது சரியா. இதன் மூலம் ‘அடுத்த வார நாமினேஷன்ல இருந்து நீங்க சேவ் ஆயிட்டிங்க’ என்று பிக்பாஸ் முன்னர் அளித்த வாக்குறுதியும் நம்பிக்கையும் பொருள் இழந்து போகிறது. சென்றாயன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர்களின் தலைமுடி இழப்புக்கும் உளைச்சலுக்கும் அர்த்தம் இல்லாமல் போகிறது. இதைப் பற்றி கமல் யோசித்தாரா?

ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணி செய்யும்  நபரை ஒரு சிறிய தவறுக்காக நிர்வாகம் பெரிய தண்டனை கொடுத்தால், அந்த நபர் எப்படியெல்லாம் மனம் பாதிப்பு அடைவாரோ அதே விதமான பாதிப்பை ஐஸ்வர்யா இப்போது அடைந்திருக்கிறார். புகையறையில் அவரது புலம்பலும் அழுகையையும் அதைத்தான் சுட்டுகிறது. 

இனி வாக்குகளின் சதவிகிதம் உயர்ந்தாலும் அது சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்கிற நம்பகத்தன்மையை பிக்பாஸ் உருவாக்காதவரை சந்தேகமும் தொடர்ந்து வாக்களிப்பதில் ஆர்வமின்மையும் இருந்து கொண்டுதான் இருக்கும். இதை கமலும் பிக்பாஸூம் உணர வேண்டும்.

**

கமல் குறிப்பிட்டது போல சென்றாயனின் வெள்ளந்தித்தனம் பல சமயத்தில் நம்மைக் கவர்ந்திருக்கிறது. எந்தவொரு விருந்தினர் வந்தாலும் பரபரப்புடன் அவர் உபசரிப்பதற்கும் தமிழ் கலாசாரத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. குற்றங்களும் வன்மங்களும் நிறைந்திருக்கும் உலகில், குழந்தையைப் போன்ற சென்றாயர்களின் களங்கமற்ற தன்மையே நமக்குப் பெரிதும் ஆசுவாசமளிக்கிறது. பிக்பாஸ் போன்ற ‘வஞ்சக’ சூழலில் சென்றாயன் போன்ற வெள்ளந்திகள் வெளியேறுவது ஒருவகையில் நல்லதுதான். ‘ஒருபக்கம் அண்ணா.. அண்ணா.. ன்னு டீ காபி கொடுக்கறாங்க. இன்னொரு பக்கம் ‘எலிமினேட்’ பண்றாங்க’ என்று அவர் அனத்துவது நகைச்சுவையென்றாலும் சில வன்மங்கள் வெள்ளந்தி ஆசாமிகளுக்குப் புரியாமல் இருப்பதே நன்று. அந்த வகையிலாவது களங்கமின்மைகள் உலகில் நீடிக்கட்டும்.

இன்னொருபக்கம் இந்த வெள்ளந்தித்தனத்தை அதிக ரொமான்டிசைஸ் செய்யவும் முடியாது. ஒருவர் அப்பாவியாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சூழலைப் பார்த்து கற்றுக்கொண்டு முன்னேறுவதுதான் ஒருவரின் அறிவுடைமை. பல சமயங்களில் இந்த வீட்டின் விதிகளை சென்றாயனால் புரிந்துகொள்ள முடியவில்லை. நிறைய முறை கேலி செய்யப்பட்டார். முதல் வாரத்திலேயே கழிவறைப் பணி தரப்படுவது முதல் பல்வேறு விதமாக சிறுமைப்படுத்தப்பட்டார். இந்த அனுபவங்களிலிருந்து அவர் உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சமையலில் முன்னேறியதைப் போல மனிதர்களைப் புரிந்து கொள்வதிலும் அவர் திறமைசாலியாக மாற வேண்டும். 

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான உடல்மொழியை தருவதைக் கவனிக்கலாம். ‘இந்த வீடு எனக்கு கோயில் மாதிரி’ என்று பொன்னம்பலம் சொன்னார். ஹரிஷூம் தனது மீள்வருகையின் போது இதையே சொன்னார். சென்றாயனும் ஏறத்தாழ அதையே செய்து காட்டினார். தான் வசித்த இடத்தை விழுந்து கும்பிட்டார். பல இடங்களில் அமர்ந்து பார்த்தார். தன்னுடைய முதல் பணி கிடைத்த கழிவறை முன்பு புகைப்படம் எடுத்து அசத்தினார். பணிஓய்வு பெறுபவர்களின் விசுவாசத்துக்கும் நெகிழ்ச்சிக்கும் இணையானது இது. 

ஒருபக்கம் போட்டியில் நீடிக்கும் வரை அங்கிருந்து விலகக் கூடாது என்று துடிப்பவர்கள், இன்னொரு பக்கம் வெளியேறியவுடன் விடுதலையுணர்வையும் ஆசுவாசத்தையும் அடைகிறார்கள். வெளியே வந்தவுடன் இந்த உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். சென்றாயனும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘தப்பிச்சோம்டா சாமி’ என்கிற மகிழ்ச்சி அவர் முகத்தில் பொங்கியது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘என் தாய், தந்தையையும் மனைவியையும் திட்டியிருக்கிறேன். அடித்திருக்கிறேன். உள்ளே சென்ற பிறகுதான் உறவுகளின் அருமை புரிகிறது. என்னை மன்னிச்சுடுங்க’ என்று அவர் உருக்கமாகக் கதறியது நெகிழ்ச்சி. இதில் நமக்கான பாடமும் இருக்கிறது. வீட்டில் புலியாக இருக்கிற சென்றாயன், வெளியுலகத்தில் எலியாகக் கூட மதிக்கப்படுவதில்லை. நிறைய அவமானங்களுக்குப் பிறகுதான் வீட்டின் அருமை புரிகிறது. ‘நாங்க தவமிருந்து பெத்த பிள்ளை. அவன் மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை’ என்று அந்த வயதான பெற்றோர்கள் சொன்னது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாய்மையின் குணம் என்பது மன்னிப்பு மற்றும் கருணையின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது. 

லக்ஸரி பட்ஜெட்டின் போது தனக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை என்பது சென்றாயனின் நீண்ட கால ஆதங்கம். மஹத்தும் கூட இது பற்றி புலம்பியிருக்கிறார். அதைத் தீர்மானிக்கும் இடத்தை ஒரு சிலரே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மும்தாஜின் நோக்கில் அவர் சொல்வதில் சில நியாயங்கள் இருந்தாலும் கூட பொதுவாக இந்த விஷயத்தில் சென்றாயனுக்குப் பாரபட்சம் காட்டப்படுவது உண்மைதான். இதைப் பற்றி ஆவேசமாக முதலில் முழங்கிய பாலாஜி, மும்தாஜின் ஆட்சேபத்துக்குப் பிறகு ‘புகாரா சொல்லலை மேடம்’ என்று பம்மியது நகைச்சுவை. அவரால் மும்தாஜை நேரடியாக தாக்க முடியவில்லை என்பதால் புதிய ஆயுதமான விஜயலட்சுமியை நன்றாகத் தூண்டி விடுகிறார். இனி பிக்பாஸ் வீட்டில் இருக்கப் போகும் ஒரே ஆண் பாலாஜிதான். பாவம், என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கப் போகிறாரோ?!

கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். இறுதிப் போட்டி நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் இது வெற்றி பெறுபவர் அனைத்துத் தரப்பின் நம்பிக்கையையும் திருப்தியையும் பெற்றவராக இருக்கும் முயற்சிகளை பிக்பாஸ் டீம் செய்வது நல்லது. அது இந்த நிகழ்ச்சியின் மீதான நம்பகத்தன்மையின் சேதாரத்தைக் குறைக்கும். அநீதியின் பால் சாயாமல் வெற்றி பெற்றவரையாவது எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் நேர்மையாகத் தேர்ந்தெடுங்கள் என்பதே பெரும்பாலோரின் வேண்டுகோளாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கக்கூடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு