Published:Updated:

காயத்ரி, சினேகன் ரீ என்ட்ரி... ஐஸ்வர்யா, ஆரத்தி கோக்குமாக்கு கெமிஸ்ட்ரி! BiggBossTamil2

காயத்ரி, சினேகன் ரீ என்ட்ரி... ஐஸ்வர்யா, ஆரத்தி கோக்குமாக்கு கெமிஸ்ட்ரி! BiggBossTamil2
காயத்ரி, சினேகன் ரீ என்ட்ரி... ஐஸ்வர்யா, ஆரத்தி கோக்குமாக்கு கெமிஸ்ட்ரி! BiggBossTamil2

காயத்ரி, சினேகன் ரீ என்ட்ரி... ஐஸ்வர்யா, ஆரத்தி கோக்குமாக்கு கெமிஸ்ட்ரி! BiggBossTamil2

இன்றைய தினத்தின் ஹைலைட் என்பது நாமினேஷன்தான். திங்கட்கிழமை என்றாலே பிக்பாஸ் வீட்டில் ‘நாமினேஷன்’ ஸ்பெஷல் என்றாலும் அதை வறுவல், பொறியல், கூட்டு என்று விதவிதமாகச் செய்து அழகு பார்ப்பதில் பிக்பாஸ் திறமைசாலி. ‘போன்பூத்’ டாஸ்க்கில் தோற்றதால் ரித்விகா ஏற்கெனவே எவிக்ஷன் வரிசையில் இருக்கிறார். ‘ஐஸ்வர்யாவையும் இதில் சேர்க்க வேண்டும் என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆனால் நாமினேஷன் சடங்கை விதிமுறைகளின் படிதான் செய்ய முடியும்” என்று கமலின் வேண்டுகோளை பிக்பாஸ் மறுத்துவிட்டார். ஏனெனில் இந்த விளையாட்டு சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளதால் சில ஆதாரமான விதிகளை உடைக்க முடியாது என்பதில் அவர்கள் கறாராக இருப்பார்கள். 

ரூல்ஸ்படிதான் பிக்பாஸ் வீடு இயங்குகிறது என்பது உண்மை. ஆனால் அவை பிக்பாஸால் போடப்பட்ட விநோதமான விதிகள் என்பதும் உண்மை. ‘தனிநபர்களைவிட அமைப்பு பெரிது’ என்கிற ஆதார விஷயம் கமலின் வேண்டுகோள் மறுக்கப்பட்டதின் மூலம் மறுபடியும் நிரூபணமாகிறது. கமலின் வேண்டுகோள் பொதுவில் அறிவிக்கப்பட்டதின் மூலம் அவை போட்டியாளர்களின் தேர்வுகளில் செல்வாக்கை செலுத்தக்கூடிய, சில போட்டியாளர்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. ‘கமல் சாரே சொல்லிட்டார்ல’ என்று சிலர் அதைக் குறிப்பிடுவார்கள். அப்படித்தான் ஆனது. முடிவெடுக்க முடியாத சூழலில் ஜனனி அதைக் குறிப்பிட்டார். ரித்விகா உடனே அதை நிராகரித்தார்.

வீட்டில் இரு பிரிவுகள் இருந்தது, இன்று வெளிப்படையாகத் தெரிந்தது. அனைவரும் கூடிப் பேசி இரண்டு நபர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு வந்தவுடன் விஜயலஷ்மி எழுந்து சென்று பாலாஜி குழுவுடன் இணைந்து ஆலோசிக்கத் தொடங்கினார். ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ் ஆகிய மூவரும் தங்களுக்குள் ஆலோசித்தனர். 

இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டிவைடைட்’ போட்டியில் பணம் பங்கு போட்டுக் கொள்வதைப் போன்றே இந்த நாமினேஷன் சடங்கு நடந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. இவர்களின் உரையாடல் தொடரத் தொடர நாமினேஷன் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் ஐஸ்வர்யாவின் அழிச்சாட்டியம் அதிகமாக இருந்தது. முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றி பேசி குழப்பிக்கொண்டிருந்தார்.

கடந்த டாஸ்க்கில் ரித்விகாவின் வேண்டுகோளை மும்தாஜ் நிராகரித்து அவரின் நாமினேஷனுக்குக் காரணமாகிவிட்டதால் மும்தாஜின் பெயரை மற்றவர்கள் முன்மொழிந்தது சரியான விஷயம். உடல்நலம் காரணமாக வீட்டின் பங்களிப்புகளிலும் அவரால் சரியாகக் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற உபகாரணமும் முக்கியமானது. ஆனால், அது உண்மையோ அல்லது நடிப்போ ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர் மனஉளைச்சலில் தவிக்கும் போது முதலில் ஆதரவுக்கரம் நீட்டுபவர் மும்தாஜ்தான். அதையும் இழப்பது அவர்களுக்குப் பின்னடைவைத் தரும். என்றாலும் ‘அவங்களை விட டாஸ்க் நான் நல்லாப் பண்றேன்’ என்று ஒரு கட்டத்தில் மும்தாஜின் பெயரை முன்மொழியவும் ஐஸ்வர்யா தயங்கவில்லை. (வெஷம்... வெஷம்!)

‘வைல்ட் கார்ட் என்ட்ரி’ என்கிற காரணம் விஜயலட்சுமியின் மீது சுமத்தப்படுவது அத்தனை நியாயமில்லை. ஏனெனில் அதற்கு அவர் காரணமில்லை. ஆனால் இதரப் போட்டியாளர்கள் ‘தான் இத்தனை நாள்களாக கஷ்டப்பட்டுவிட்டு இடையில் புதிய ஆள் வந்து தட்டிச் செல்வது சரியில்லை’ என்று நினைத்தால் அவர்களின் கோணத்தில் அது நியாயம்தான். விஜயலட்சுமி பேசும் தொனி சரியில்லை என்று சொல்லப்படுகிற உபகாரணத்தில் உண்மையுள்ளது. வீட்டில் பரவும் வெறுப்புஉணர்ச்சி, கசப்பு, எதிர்மறை உணர்வு ஆகியவற்றுக்கு சமீபத்திய விஜயலட்சுமியின் சீண்டல்கள் காரணமாக இருக்கின்றன. குழம்பை கையில் ஊற்றி சுவைப்பது போல சண்டையின் ருசியை அவ்வப்போது ருசித்து வீட்டின் கசப்பை அதிகமாக்குகிறார். (இன்று காலையில் ஐஸ்வர்யாவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதை அறிந்தும், அவர் இன்னுமும் சாப்பிடவில்லை என்பதை அறிந்தும், ‘குக்கரை கழுவித்தந்துவிட்டு சாப்பிடட்டுமே” என்பது போல்  நெருக்கடி தந்தது மனிதநேயம் அல்ல).

பாலாஜி மற்றும் ஜனனியின் மீது அதிக காரணங்கள் சொல்ல முடியாவிட்டாலும் உடல்பலம் சார்ந்த டாஸ்க்குகளில் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்பது உண்மை. இனி வரும் டாஸ்க்குகள் கடுமையாக இருக்கும் என்பதால் அவர்களின் பெயர்கள் முன்மொழியப்படுவதில் நியாயம் உள்ளது. ஜனனி பின்னாலிருந்து ஏற்றித் தருகிறார் என்றால் புறணி பேசுவதில் பாலாஜி இன்னமும் விற்பன்னராக இருக்கிறார். 

சர்ச்சைகளின் நாயகியான ஐஸ்வர்யா ‘ஊதவே வேணாம்’ மோடில் இருக்கிறார். ஆங்கிலத்தில் பேசி தவறும் செய்துவிட்டு நீச்சல் குளத்தில் இறங்கமாட்டேன், வேண்டுகோள் வைக்கமாட்டேன், தொடர்ந்து அப்படித்தான் பேசுவேன்’ என்று அழிச்சாட்டியம் செய்த காரணத்துக்காகவே வெளியே அனுப்பப்படலாம். ஆத்திரத்தில் தன் நெருக்கமான தோழி யாஷிகா செய்த நல்உபதேசமும்கூட அவர் காதில் விழவில்லை. வேகமாக ஆடும் ஊஞ்சல்போல அவரது மனநிலை மாறி மாறி ஆடுகிறது. 

கமல் கோபத்தை எதிர்கொண்ட காரணத்தால் சோர்வுற்றிருந்த ஐஸ்வர்யா, மஹத்துக்கு செய்து தந்த சத்தியத்தாலும், யாஷிகாவை இறுதியில் கொண்டுபோய் சேர்ப்பேன் என்கிற உறுதியாலும் மீண்டும் புத்துணர்ச்சியோடு இந்தப் போரில் இணைந்திருக்கிறார். எனவே எந்தக் காரணம்கொண்டும் அவர் விட்டுத் தர தயாராக இல்லை. ‘மக்களை சந்தித்துவிட்டு வருகிறீர்களா?” என்று கடந்த வாரத்தில் ரித்விகா மற்றும் ஜனனி முன்வைத்த சவாலை எதிர்கொண்டு மீண்டிருப்பதால் மறுபடியும் இன்னொரு நாமினேஷனுக்குள் நுழைய அவர் தயாராக இல்லை. அவரின் பெயரை யார் குறிப்பிட்டாலும் ‘அப்ப நீங்களும் என்கூட வர்றீங்களா?” என்றோ அல்லது “அப்ப நீங்க போங்க” என்றோ மாற்றி மாற்றி அலப்பறை தந்துகொண்டிருந்தார். யாஷிகாவின் மீது எந்தக் காரணத்தையும் யாராலும் சொல்ல முடியவில்லை. அத்தனை ஜாக்கிரதையாக இந்த ஆட்டத்தை அவர் ஆடிக் கொண்டிருக்கிறார். 

தனிநபராலோ, இரண்டு பிரிவுகளாலோ அல்லாது அனைவரும் கூடிப்பேசி ஒருமனதாக இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தவே குழுக்கள் இணைந்து ஆலோசிக்க வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார்கள். சில பல உரையாடலுக்குப் பின் தான் நாமினேஷனுக்கு செல்வதாக மும்தாஜ் அறிவித்துவிட்டார். எனவே இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். 

எதிர்அணியில் அனைவரும் ஐஸ்வர்யாவைக் குறிவைத்தனர். ‘இந்த கேம் ஃபார்மட் இப்படித்தான் இருக்கு. இவ்வளோ ஸ்ட்ரெஸ் ஆக வேணாம். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கீங்க” என்ற காரணத்தை ஐஸ்வர்யாவின் மீது ஜனனி சொன்னவுடன் ‘அப்ப நீங்க என்கூட வாங்க” என்றார் ஐஸ்வர்யா. (வாடா... வாடா… என் ஏரியாவுக்கு வாடா!). “முதல்ல விஜி பேரைச் சொன்னீங்க. நான் உங்களை நாமினேட் பண்ணவுடனே என் பேரைச் சொல்றீங்க, இது சரியா?” என்ற ஜனனியின் கேள்வியை ஐஸ்வர்யாவால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. ‘உங்களைவிட டாஸ்க் நான் நல்லாப் பண்ணுவேன்’ என்றுதான் சொல்ல முடிந்தது. 

பாலாஜியின் பெயர் அடிபட்டபோது “ஐஸ்வர்யா என்கூட வரட்டும். நான் போறதுக்கு ரெடியா இருக்கேன்’ என்றார். “சென்றாயன் போனதுக்கு நீங்கதானே காரணம்?அவனை ஏமாத்திட்டீங்க. ஏமாத்தினவங்க இந்த வீட்ல இருக்கலாமா?’ என்றோர் அபத்தமான லாஜிக்கை பாலாஜி முன்வைக்க, “நானா அவங்களுக்கு ஓட்டுப்போட வேணாம்னு தடுத்தேன். அது மக்கள் தீர்மானம்தானே?” என்று சரியான பதிலை சொன்னார், ஐஸ்வர்யா. “அப்போ உங்களுக்கு குற்றவுணர்ச்சியே இல்லையா?” என்றபோது ‘இல்லை’ என்று ஐஸ்வர்யா சொன்னதில், சென்றாயன் வெளியே சென்றதற்கு மக்கள் தீர்ப்புதானே காரணம் என்கிற உணர்வே மேலோங்கி இருந்தது. 

“கமல் சார் முன்னாடி. சென்றாயனுக்குப் பதில் நான் போறேன்னு சொன்னீங்கள்ல. இப்போ அதைச் செய்யலாமே?” என்றொரு லாஜிக்கான கேள்வியில் ஐஸ்வர்யாவை மடக்கினார், மும்தாஜ். சரியான பாயின்ட். “அவங்க போனதுக்கு நான் காரணம் இல்லை” என்று மறுபடியும் அடம்பிடித்தார், ஐஸ்வர்யா. சென்றாயன் வெளியே சென்றதற்கு ஐஸ்வர்யா நேரடி காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தார்மிக ரீதியாகவும், மற்றவர்கள் அதைக் குத்திக் காண்பித்துக்கொண்டே இருப்பதாலும் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள மீண்டும் நாமினேஷனுக்குள் செல்ல ஐஸ்வர்யா தயார் ஆகலாம். இதனால் இழந்த நன்மதிப்பை மீண்டும் அவர் பெறக்கூடும். ஆனால் தீர்மானமானதொரு முடிவை எடுக்கும் மனநிலையில் அவர் இல்லை. 

“அப்ப பாலாஜியும் யாஷிகாவும் போகட்டும்’ என்றோர் அபத்தமான முன்மொழிதலை வைத்தார் விஜயலஷ்மி. இதை அவருடைய அணியே ஒப்புக்கொள்ளவில்லை. ‘யாஷிகா மீது என்ன காரணம் சொல்வீர்கள்?” என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. ”நீங்க ஏன் விஜி வரமாட்டேன்றீங்க?” என்று மும்தாஜ் மறுபடியும் விஜியின் கையைப் பிடித்து இழுக்க.. “நான் யாரையும் ஏமாத்தல. டாஸ்க்கை பிரேக் பண்ணலை. இங்க இருக்கறவங்களைப் பத்தி உண்மையா கருத்துச் சொல்றேன். அதுக்குக் கோபப்பட்டா என்ன பண்றது? எல்லாத்துக்கும் நான் தயாராத்தான் வந்திருக்கேன்” என்றெல்லாம் நீட்டி முழக்கிய விஜி, “நான் இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இந்த வீட்டைப் பத்தி மக்களுக்குக் கொஞ்சம் புரிய வெச்சிருக்கேன் எண்பத்தைந்து நாளும் இருந்திருந்தா கலக்கியிருப்பேன்” என்பது மாதிரி தம்பட்டம் அடிக்க “ஒருத்தரைப் புரிஞ்சுக்க ஒரு மணி நேரம் போதும் –ன்னு சொன்னீங்களே?” என்று மும்தாஜ் மடக்க முயல ‘நான் ஆடியன்ஸ் பத்தி சொல்லிட்டிருக்கேன்” என்றார் விஜி. (அதாவது இந்த அம்மணிக்கு ஒருவரைப் பற்றிப் புரிந்துகொள்ள ஒரு மணி நேரம் போதுமாம். அத்தனை புத்திசாலியாம். ஆனால் மண்டூகங்களான பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் வீட்டைப் பற்றிய உண்மையான நிலையைப் புரிய வைக்க அவருக்கு இன்னமும் அவகாசம் தேவையாம். டியூப்லைட்டுகளான நமக்கு இன்னமும் புரியவில்லையாம்).

“கமல் சார் என்னைத் திட்டிட்டாரு. இந்த வாரம் என்னை ப்ரூவ் பண்ணிட்டுத்தான் வெளியே போவேன்” என்று ஒருபக்கம் ஐஸ்வர்யா அடம்பிடிக்க, ‘உங்களை நம்பினவங்களையெல்லாம் ஏமாத்திட்டீங்க” என்று பாலாஜி இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் ஏழரையைக் கூட்டிக் கொண்டிருந்தார். ‘அது மக்களோட முடிவுதானே அண்ணா!” என்று இடைமறித்த மும்தாஜின் மீதும் கோபமாகப் பாய்ந்தார் பாலாஜி. 

“இப்படியே பேசிட்டு இருந்தா என்னங்கய்யா அர்த்தம்?” என்று டென்ஷன் ஆன பிக்பாஸ், “மூன்று பேரை நாமினேட் செய்யுங்கள்’ என்று ஒரு நபரைக் கூட்டி அதிரடியாக கட்டளையிட்டார். ‘பிக்பாஸுக்கு ஏதாச்சும் ரிப்ளை தந்தாகணுமே” என்கிற தலைவியின் பொறுப்புஉணர்ச்சியோடு ரித்விகா பெயர்களை அறிவிக்கத் தொடங்க ‘நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று அடம்பிடித்தார் ஐஸ்வர்யா. யாஷிகாவின் ஆலோசனையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதோ இந்த விளையாட்டின் முடிவுதான் தன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகிறது என்பது போல் அவர் கற்பனை செய்து கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. வெளியே வருவதின் மூலமும் மக்களின் நன்மதிப்பை அவர் பெற முடியும். 

“இன்னமும் இதை இழுத்திக்கிட்டு இருந்தா எல்லோரையும் நாமினேட் பண்ணிடுவாங்க” என்று மும்தாஜ் சொன்னதில் அர்த்தமுள்ளது. கல்லுளிமங்கர் பிக்பாஸ் அதைச் செய்யக்கூடியவர்தான். “பிக்பாஸ் இஷ்டத்துக்குத்தான் நாம போகணும். நம்ம இஷ்டத்துக்கு அவர் வருவாரா? அப்படின்னா நாம பிக்பாஸ் ஆயிடுவமே?” என்றார் பாலாஜி. (பணியாளர்களை மனதளவில் அடிமைகளாக தயாரித்து வைத்திருக்கும் முதலாளித்துவச் சமூகத்தின் உளவியல் சார்ந்த வெற்றிக்கான குறியீடு இது!) நேரம் கடந்து கொண்டிருக்கவே பெயர்களை அறிவிக்கத் தயாரானார் ரித்விகா. அப்பவும் ஐஸ்வர்யா ஒப்புக் கொள்ளவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதால் அவரின் மறுப்போடு தொடர முடியாது. ஒரு கட்டத்தில் மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க கையை அலட்சியமாக வீசி ஒப்புதல் சொன்னார் ஐஸ்வர்யா. (மேடத்துக்கு அப்பவும் கெத்து குறையவில்லை!).

ஆக.. மும்தாஜ், விஜயலட்சுமி ஐஸ்வர்யா மற்றும் ஏற்கெனவே நாமினேட் ஆன ரித்விகா.. என நால்வர் இந்த எவிக்ஷன் பட்டியலில் இணைந்தனர். ஒருவழியாக இந்த நாமினேஷன் சடங்கு மங்களகரமாக நிறைவுற்றது. 

**

‘சில்லென்று ஒரு காதல்’ திரைப்படத்தில் சூர்யாவின் மும்பை ஃபிளாட்டுக்குள் வடிவேலுவின் கிராமத்து கோஷ்டி ஆர்ப்பாட்டத்துடன் நுழைவது போல பழைய போட்டியாளர்களான ஆரத்தி, வையாபுரி, சுஜா, காயத்ரி மற்றும் சிநேகன் உள்ளே வந்தார்கள். ‘தமிழ்நாட்டின் திருமகளே.. பிக்பாஸ் வீட்டின் மருமகளே’ என்று ஐஸ்வர்யாவைப் பற்றி கூறி வந்தவுடனேயே தன் அலப்பறையைத் தொடக்கினார் ஆரத்தி. டபக்கென்று அவர் காலில் விழுந்து அவரை விடவும்தான் ராஜதந்திரி என்பதை நிரூபித்தார் ஐஸ்வர்யா. (கடந்த சீஸனில் ஆரத்தி செய்த அலப்பறைகளையெல்லாம் பார்த்து ‘இவரை சென்ட்டிமென்ட்டாக மடக்குவோம்’ என்று முடிவு செய்து விட்டார் போல). “வீட்டுப் பொண்ணு மாதிரி இயல்பா இருக்கேம்மா” என்று ரித்விகாவையும் ‘பிந்து மாதவி மாதிரி பொறுமையா இருக்கே” என்று ஜனனியையும் பாராட்டினார் வையாபுரி. (வீட்டம்மா கிட்ட கோபிக்காம ஒழுங்கா இருக்கீங்களா சார்?!). ஸ்டைலான விக்குடன் இருந்தார் காயத்ரி. (சிகை என்கிற விஷயத்தோடு தொடர்பு இல்லாமல் இவரைப் பற்றிப் பேசமுடியவில்லையே?!) மிகையான ஒப்பனையோடு சுஜா உலாவர, திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன சிறுவன் மாதிரி சுற்றி வந்தார் சிநேகன்.

‘இந்த முறை ஒரு பெண்தான் பிக்பாஸ் டைட்டிலை அடையணும்’ என்று விருப்பப்பட்டார் ஆரத்தி. (நிச்சயம் அதுதான் நடக்கும். பாலாஜி ஆட்டத்திலேயே இல்லை). “இந்த வீட்ல இருக்கிற தேவதைகள் நடுவில் இருக்கறதால பாலாஜி சிரிக்கறதை மறந்துட்டார்” என்று ஆரத்தி கிண்டலடிக்க, “தேவதைங்களா.. எங்கேயிருக்காங்க?” என்று தேடினார் பாலாஜி. “பாலாஜியை வெளியே அழைத்துச் செல்வது போன்று நாம் நாடகம் ஆடலாம்’ என்கிற சிநேகனின் ஐடியா மிகவும் சொதப்பலாக தோற்றுப் போனது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

பழைய போட்டியாளர்களும் இந்தப் புதிய போட்டியில் இணைந்து கொள்வதற்கான பாவனையைச் செய்தார்கள். அவர்களின் பெட்டிகள் வந்து இறங்கின. ஆண்கள் அறையை அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுக்க வேண்டி வந்தது. ‘இவர்கள் இங்கேதான் இருக்கப் போகிறார்களா?” என்று மற்றவர்களுக்கு இன்னமும் ஐயம் தீரவில்லை. அவர்களை நம்பவைக்க ஒரு பாட்டாவது போடுங்களேன்’ என்று ஆரத்தி புலம்ப, மிகவும் தாமதமாக வரவேற்பு பாடலைப் போட்டார் பிக்பாஸ்.

அர்ஜுனனுக்கு உபதேசம் சொன்ன கண்ணனாக தன்னை நினைத்துக்கொண்டு ஐஸ்வர்யாவுக்கு சுயமுன்னேற்ற உரையை ஆற்றத் தொடங்கினார் ஆரத்தி. அதை வேறு வழியில்லாமல் பொறுமையாகக் கேட்க வேண்டிய நிலைமை ஐஸ்வர்யாவுக்கு. எப்போது வேண்டுமானலும் ஆரத்தியின் கழுத்தை நோக்கி ஐஸ்வர்யா பாய்ந்து விடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தேன். “தமிழ்ப் பொண்ணுங்கள்லாம் ரொம்ப அப்பாவி. ஈஸியா விட்டுக்கொடுத்துடுவாங்க” என்றலெ்லாம் ஆரத்தி அளந்து விட்டுக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழக ஆண்கள், ஒன்று வாழ்க்கையையே வெறுத்திருப்பார்கள் அல்லது ஆரத்தி மீது கொலைவெறி அடைந்திருப்பார்கள். ‘நீங்க கல்கத்தால இருந்து இங்க வந்து ஜெயிக்க நினைக்கும் போது இங்கயே இருக்க அவங்க ஜெயிக்க நினைக்கறதுல தப்பு என்ன. கல்கத்தா பிக்பாஸ்ல தமிழ்ப்பொண்ணுங்களை விடுவாங்களா. என்றெல்லாம் இனவாத வாசனையுடன் கூடிய வார்த்தைகளை இறைத்துக்கொண்டிருந்தார் ஆரத்தி. அவரின் வழக்கமான அலப்பறைகளின் இடையில் சில உண்மையான உபதேசங்களும் இருந்தன. ஐஸ்வர்யாவுக்கு அவை பயன்படக்கூடும். 

நீச்சல்குள விவகாரத்தில் ஐஸ்வர்யாவின் பக்கம் நிற்க முடியவில்லையே என்கிற மனஉளைச்சலில் இருக்கிறார் யாஷிகா. அந்தச் சமயத்தில் அவர் செய்தது சரியான விஷயம்தான். என்றாலும் நண்பரை விட்டுக்கொடுத்து விட்டோமே என்று மனம் புழுங்குகிறார். ஷாரிக், மஹத், டேனி ஆகிய நண்பர்களை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோமே என்று அவருக்கு வருத்தமாக இருக்கிறது. மும்தாஜ் அவருக்கு ஆறுதல் சொன்னார். இந்த வகையில் ‘நவீனக் கர்ணன்’ என்கிற பட்டத்தை யாஷிகாவுக்குத் தரலாம். யாஷிகா போல ஒரு விசுவாச நண்பர் இருந்தால் உலகத்தையே ஜெயிக்கலாம். 

“செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.. யாஷிகா.. வஞ்சகன் பிக்பாஸடா.” என்ற பாடலோடு நிறைவு செய்வோம்.

அடுத்த கட்டுரைக்கு