Published:Updated:

சினேகன் கொடுத்த அதிர்ச்சி... மும்தாஜின் நெகிழ்ச்சி..! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
சினேகன் கொடுத்த அதிர்ச்சி... மும்தாஜின் நெகிழ்ச்சி..! #BiggBossTamil2
சினேகன் கொடுத்த அதிர்ச்சி... மும்தாஜின் நெகிழ்ச்சி..! #BiggBossTamil2

“ஆடுகளத்தை சமமாக்க வேண்டியிருக்கிறது” என்று இன்றைய பிரமோவில் கண்சிவக்க கமல் பேசியபோது, ‘ரைட்டு.. இன்னிக்கு பஞ்சாயத்து சூடா இருக்கும் போல’ என்று ஆவலாக காத்துக்கொண்டிருந்தால், எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. இன்றைய பிக்பாஸ் Alumini Meeting மாதிரி ஜாலியாகத்தான்போனது. சரி, நாளைக்காவது ஏதாவது இருக்கும் போல. இப்படியே நூற்று ஐந்து நாளையும் கடக்க வேண்டியதுதான். **

“இது 13 வது வாரம். என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டீர்கள். வாக்கு சதவீதம் இரட்டிப்பாகி இருக்கிறது. நன்றி. இதையே அடுத்த வருடமும் பின்பற்றுங்கள்” என்கிற அரசியல் பொடியுடனும் மகிழ்ச்சியான முகக்குறிப்புடனும் உள்ளே வந்தார் கமல். ரீகேப்பைத் தொடர்ந்து 90-வது நாள் காட்சிகள் ஒளிபரப்பாகின.

“நல்ல டிரஸ்ஸா போடப் போறேன். அப்ப கமல் சார் என்னை சேவ் பண்ணிடுவாருல்ல” என்று குழந்தைத்தனமாக பேசிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “ஒவ்வொரு வாரமும் நான் இப்படித்தான் பயந்துட்டே இருப்பேன். அந்த நாள் ஞாபகம் வருது” என்றார் காயத்ரி. அவருடைய ‘ஐஸ்வர்யா பாசத்திற்கான’ காரணம் இப்போது புரிகிறது.  ‘நான்தான் வெளியே போகப் போறேன்’ என்பது போல் யாஷிகா, ஐஸ்வர்யா, பாலாஜி ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘மும்தாஜை அகால நேரத்தில் வெளியே அனுப்பினால் அவர் வெளியே போகாமல் எப்படியெல்லாம் முரண்டு பிடிப்பார்’ என்பதை பாலாஜி நடித்துக் காண்பிக்க, மற்ற இருவரும் உருண்டு புரண்டு சிரித்தார்கள். 

“பசங்க இன்னமும் சாப்பிடாம இருக்காங்க. அதைச் சொல்லாம நீங்க அவங்க கூட விளையாடிட்டு இருக்கீங்களேண்ணா” என்றபடி உள்ளே வந்தார் மும்தாஜ். விளையாட்டாக அவர்களின் காதைத் திருகி சாப்பிட அழைத்துச் சென்றார். இதுவொரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது சட்டென்று மறந்து ‘குடும்பம்’ என்கிற தோற்றம் உருவாவது இது போன்ற இயல்பான காட்சிகளினால்தான். பெரும்பாலும் இந்த தருணங்களை மும்தாஜ்தான் உருவாக்குகிறார். ‘அன்பின் நீர்வீழ்ச்சி’ என்கிற பட்டத்தை மோமோவிற்கு தரலாம். 

மினியேச்சர் வீட்டை உருவாக்கி அதில் சிறப்பாக வண்ணம் பூசும் போட்டி நடந்தது. BB1 மற்றும் BB2 போட்டியாளர்கள் இரண்டு அணியாகப் பிரிந்தார்கள். சீனியர்கள் சட்டென்று வேலையை முடித்து விட ஜூனியர்கள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். நடுவர்களான மும்தாஜூம் ரித்விகாவும் வீட்டைப் பார்வையிட வந்த போது ‘லேகியம் விற்கும் குரலில்”.. பாருங்க சார்.. பாருங்க சார்.. வாஸ்து படி கட்டியிருக்கு” என்று பல காரணங்களைக் கூவினார் ஆர்த்தி. ஜூனியர்கள் வண்ணமடித்த வீட்டின் வெளியே அமர்ந்திருந்த பாலாஜியை ‘யார் இது வாட்ச்மேனா?” என்று கேட்டு கலாய்த்தார்கள். ஜூனியர்களின் கைவண்ணத்தில் சில குறிப்பிட்ட அம்சங்கள் சிறப்பு என்றாலும் ஒட்டுமொத்த பார்வையில் சீனியர்களின் பணி செம்மையாக இருந்ததால் வெற்றியை அவர்கள் தட்டிச் சென்றார்கள்.

“இன்னிக்கு 91-வது நாள். வீடுகளுக்கு வண்ணமடித்த காட்சியைப் பார்த்தோம். இந்தப் போட்டியில் ஏற்கெனவே கலந்து கொண்டவர்களின் வாழ்வில் வண்ணத்தை இது தந்திருக்கிறதா என்பதை அவர்களிடம் உரையாடிப் பார்ப்போம்” என்றபடி கமல் மறுபடியும் வந்தார். 

“பழையவர்கள், புதியவர்கள் என்று கலந்து உட்கார்ந்திருக்கீங்க. பார்க்கவே சந்தோஷமா இருக்கு. சில பேர் மட்டும் இல்ல. இறுதி விழாவில் எல்லோரையும் சேர்ந்து பார்த்தா சந்தோஷமா இருக்கும்” என்று நெகிழ்ந்தார் கமல். (நம்ம குடும்பத்துல ஒருத்தர் விடாம எல்லோரையும் நிக்க வெச்சு ஒரு போட்டோ எடுத்து பார்க்கணும்ன்றதுதான் என் கனவு’ என்று கண்ணீர் மல்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ சத்யராஜ் நினைவில் வந்து போனார்).

“ஒருத்தரோட ஒருத்தர் தொடர்புல இருக்கீங்களா? என் கூட தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்கள், வையாபுரி மற்றும் சிநேகன்தான்” என்றார் கமல். “எல்லோருமே ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கோம் சார். ஒரு சிலர் மட்டும் இல்லை” என்று சீனியர்கள் சொன்னார்கள். “யாரு அந்த ஒரு சிலர்ன்னு கேட்க மாட்டேன்” என்று சொன்ன கமல், அடுத்த நிமிடமே ‘யாரு அவங்கள்லாம்?” என்று கேட்டு அதிர வைத்தார். சீனியர்கள் இதற்கு மழுப்பினார்கள். ‘ஓவியா உட்பட அனைவரிடமும் தொடர்பில் இருப்பதாக சொன்னார் காயத்ரி.

‘சுஜா, எப்ப சாப்பாடு?” என்று கமல் விசாரிக்க ‘நவம்பர் மாசம் சார்” என்று சூசகமான பதிலைச் சொன்னார் சுஜா. (ஆனால் – “நிகழ்ச்சியில் வாக்களித்தபடி ‘ஒரு அப்பாவாக” கமல் எங்கள் வீட்டிற்கு வரவேயில்லை” என்று ஒரு நேர்காணலில் அவர் குறைபட்டுக் கொண்டதும் இடையில் நினைவில் வந்து போனது). 

ஜனனிக்கும் யாஷிகாவிற்கும் வாழ்த்து சொன்ன கமல் “நம்பவே முடியலை. நைட்டு பதினோரு மணில இருந்து காலை எட்டு மணிக்கு வரைக்கும் நடந்துட்டு இருந்தீங்க. நான் கூட யாஷிகாதான் ஜெயிப்பாங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா ஜனனி பேலன்ஸ் பண்ணிட்டாங்க. குச்சிப்புடி நடனம் தெரியும் போல. நான் கூட ஆடியிருக்கேன்” என்ற கமல், பெரும்பாலான உரையாடல்களில் எப்போதும் தன்னையும் நுழைத்துக் கொள்வதை சற்று கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பல சமயங்களில் சலிப்பூட்டுகிறது. 

“ஜனனியோடு ஒப்பிடும் போது என் குடுவையில் தண்ணீர் அளவு அதிகமாக இருந்தது. அதனால் என்னால் சமாளிக்க முடியவில்லை” என்றார் யாஷிகா. “போன முறை கார் டாஸ்க்ல நடந்த மாதிரி ஆயிடுச்சு. ஒரு சின்ன இழைல சிநேகன் தோத்துட்டார்ல. இருந்ததிலேயே இதான் பெரிய டாஸ்க்” என்றார் கமல். “பிஸிகல் டாஸ்க்ல நீ சரியா செய்ய மாட்றேன்னு சொல்லிட்டே இருந்தாங்க. இதை எப்படியோ முடிச்சிட்டேன். எனக்குள்ள இத்தனை மனபலம் இருக்குன்னு எனக்கே இப்பத்தான் தெரிஞ்சது. சீனியர்கள் எங்களுக்கு ரொம்பவும் சப்போர்ட்டா இருந்தாங்க ” என்றார் ஜனனி. 

“போன சீஸன்ல கோல்டன் டிக்கெட் வாங்கினவர் சிநேகன். இது வெற்றிக்கான அறிகுறி இல்லை. வெற்றி கிட்ட போயிருக்கீங்க. அவ்வளவுதான். நம்பிக்கை அதிகமாகி கோட்டை விட்றாதீங்க” என்பது போல் எச்சரிக்கை செய்தார் கமல். “ஆமாம். சார்.. இப்பத்தான் பொறுப்பு அதிகமாகியிருக்கு” என்று அதை ஆமோதித்தார் ஜனனி. “கோல்டன் டிக்கெட் வந்தப்புறம்தான் சார் நான் இன்னமும் ஆவேசமா விளையாடினேன். அதான் டிக்கெட் கிடைச்சிருச்சேன்னு அலட்சியமா இருக்கல. மக்கள் என் மேல வெச்சிருந்த நம்பிக்கையை காப்பாத்தணும்னு நெனச்சேன்” என்றார் சிநேகன். 

“சிநேகனுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு சார். அவரைப் போலவே நான்தான் இந்த வீட்ல முதல் தலைவரா இருந்தேன். கோல்டன் டிக்கெட்டையும் வாங்கியிருக்கேன்” என்று புளகாங்கிதமாக ஜனனி சொல்லிக் கொண்டிருந்ததில் சிறு அபஸ்வரம் இணைந்திருந்தது. ‘அவரை மாதிரியே ரன்னர்அப் ஆகிடாதீங்க” என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததை சிநேகனும் சுட்டிக் காட்டினார். 

ஸ்டோர் ரூமில் இருந்த பூங்கொத்து மற்றும் விருதுப் பட்டயத்தை வையாபுரி எடுத்த வர, கமலின் முன்னிலையில் ஜனனிக்கு அவற்றை வழங்கி மகிழ்ந்தார்கள். “விஷயம் தெரியுமில்லையா.. இந்த சீஸன்ல நாள் எண்ணிக்கை கூடியிருக்கு. 105 நாட்கள் வரும்” என்று நினைவுப்படுத்தினார் கமல்.

**

“சீஸன் ஒன்று போட்டியாளர்களுக்கு எல்லோமே கண்ணைக் கட்டி விட்ட மாதிரி இருந்தது. அவங்களா முட்டி மோதி ஒரு பாதையை உருவாக்கினாங்க. புதிய போட்டியாளர்களுக்கு அப்படியில்லை. தமிழ் உட்பட நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன போல. ஆனால் அவை தவறான வழிகாட்டுதலாக அமைந்து விடக்கூடாது. காயத்ரியை கடிஞ்சிருக்கேன்னா, அதன் மூலம் உங்களுக்கு மறைமுகமாக சில குறிப்புகள் கொடுத்திருக்கேன் –ன்னு அர்த்தம். இங்க வந்து போனவங்களும் சொன்னாங்க. அந்தக் கருவிகளை நீங்கதான் சரியா பயன்படுத்திக்கணும்” என்பது போல் சொன்னார் கமல். (சீஸன் ஒன்று போட்டியாளர்களுக்கும் இதர மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முன்னுதாரணங்களாக இருந்திருக்கலாம்). 

இரண்டு அணிகளுக்கும் வழங்கப்பட்ட ‘பழிமொழி’ விருதைப் பற்றிய உரையாடலை ஆரம்பித்தார் கமல். (இதெல்லாம் நேரக்கடத்தல்தான்!) பாலாஜிக்கு கிடைத்த ‘மொசப்பிடிக்கற’ விருதை அவர் சங்கடத்துடன் ஒப்புக் கொண்டார். “வாய் உதார் –னு கொடுத்திருக்காங்க. முயல் பிடிக்கலாம்தான் சார்.. ஆனா கோபம் வரும் போதெல்லாம் உங்க முகம் நினைவிற்கு வந்து அடங்கிடுது சார்” என்று சமாளித்தார் பாலாஜி. ‘சந்துல சிந்து பாடுறது’ விருதை ஒப்புக் கொண்டார் ஜனனி. “ரெண்டு பேர் பேசிட்டு இருக்கும் போது நடுவுல ஒரு பாயிண்டை கோர்த்து விட்டுட்டு போயிடுவேன்” என்று சுயவாக்குமூலம் தந்தார்.

‘ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்’ விருதை ரித்விகாவும் ஒப்புக் கொண்டார். ‘சனிக்கிழமை மட்டும் மலர்வதாக சொல்கிறார்களே’ என்று கமல் அடித்த கிண்டலையும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் ரித்விகா. ‘மாமியார் உடைச்சா மண்குடம்’ பழமொழியை ஏற்று தன்னைச் சரி செய்து கொள்வதாக சொன்னார் விஜி. “சிரிக்க வெக்கறவங்களை எனக்குப் பிடிக்கும்” என்று அவர் சொன்னதற்கு “அப்ப, யாரு சிரிக்க வெக்க மாட்றாங்க?” என்ற கமலின் கேள்விக்கு, “யாஷிகா, ஐஸ்வர்யா..” என்றவர் “மும்தாஜ்… சுத்தம்’’ என்றதும் சபையே சிரிப்பால் அதிர்ந்தது. “என்னையே ஒரு காமெடி பீஸா மாத்திட்டாங்க. நான் என்னத்த காமெடி பண்றது?” என்று சிணுங்கினார் மும்தாஜ்.

“தவளை தன் வாயால் கெடும்” என்பதை ஐஸ்வர்யா விளக்க ஆரம்பிக்க “அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நாங்கதான் உங்களுக்கு விளக்கணும். அது எப்படி உங்களுக்கு பொருந்தும் –னு சொல்லுங்க” என்றார் கமல். (இன்னமும் சூடு தணியலை போலிருக்கு!) “புரிஞ்சிக்காம பேசிடுவேன். ஏத்துக்கறேன்” என்றார் ஐஸ்வர்யா. ‘உங்க முன்னாடி வர பயந்துட்டு இருந்தா சார். நான்தான் தைரியம் சொல்லி கூட்டிட்டு வந்தேன்” என்றவுடன் கமல் முகத்தில் மெல்லிய மாற்றம் தெரிந்தது. ஆனால் அதைப் பற்றி ஏதும் அவர் பேசவில்லை. 

‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்கிற பழமொழியின் பொருளை யார் யாஷிகாவிற்கு தப்பா சொல்லிக் கொடுத்தது” என்று கிண்டலடித்த கமல், “ஐஸ்வர்யாவைப் பற்றி அவங்களுக்குத் நல்லாத் தெரியும் சார். அதனாலதான் கொடுத்தோம்” என்று சிநேகன் விளக்கியவுடன் ‘அடடே! பாம்பும் தவளையும் நட்பாக இருக்கும் அதிசயம்” என்று கமல் சொன்னது சமயோசித நகைச்சுவை. மேலும் சில பழமொழிகளைப் பற்றிய விளக்கங்கள் கிடைத்தவுடன் அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார் கமல்.

“என் முன்னாடி கால் மேல் கால் போட்டு அமரும் விஷயத்தை சிநேகன் ஆட்சேபித்தார். அதை தெளிவாக்கி விடுகிறேன். அதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. சிநேகன் கிராமப்பின்புலத்தில் இருந்து வந்தவர். பின்னாடி கைய கட்டி பேசறது, தோள்ல துண்டு போட்டு பேசறது, இதெல்லாம் அங்க மரியாதைக்குறைவு –ன்னு நினைப்பாங்க. (இதில் சாதியம் ஒளிந்திருக்கிறது என்பதையும் கமல் சுட்டிக் காட்டியிருக்கலாம்). நான் கிராமத்தை விட்டு சின்ன வயசுலேயே வெளியே வந்துட்டேன். ‘என் கால் மேல உங்க காலை போடாம இருங்க. அது போதும்” என்றார் கமல். 

கமலின் விளக்கத்திற்குப் பிறகும் சிநேகன் தன் விசுவாசத்தை விடுவதாக இல்லை. “பிக்பாஸை குரல் வழியாகத்தான் கேட்கிறோம். ஆனால் உங்களின் மூலம்தான் உருவமாக பார்க்கிறோம்” என்று நெகிழ்ந்தார். (கவிதை பிரமாதம்). “நான் வளர்ந்த விதம் அப்படி. பெரியார் பேச்சு கேட்டு வளர்ந்திருக்கேன். பெண்களை எப்படி புரிந்து கொள்ளணும்னு பாடம் கத்திருக்கேன். இருந்தாலும் ஒரு மேடைல என்னால கால் மேல் கால் போட்டு உட்கார முடியாது. எதையும் இடது கைல வாங்க மாட்டேன். எதிர் நபரின் நம்பிக்கையை புண்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான். சில விஷயங்கள் தன்னிச்சையா உள்ளே உறைஞ்சு போயிடுச்சு. மாத்திக்க முடியலை. யாராவது விபூதி பூசினா பெரியார் மறுக்க மாட்டார். அன்பு காரணமா. அப்படித்தான்” என்றார் கமல். இந்த, கால் மேல் கால் போடும் விவகாரத்திற்கு ‘கால்’ மணி நேரத்திற்கும் மேலாக கமல் வியாக்கியானம் அளித்தும் சிநேகன் அடங்குவதாக இல்லை. 

‘பார்க்கிற மக்கள் நிறைய பேர் இதைச் சொன்னாங்க சார். அதை சொல்ல வேண்டியது என் கடமையில்லையா?” என்று விடாமல் விஸ்வாசத்தை நீட்டினார்.  “அப்ப சொல்ல வேண்டியதுதான்” என்றார் கமல். (என்னதாம்ப்பா உங்க பிரச்னை?!).

**

“பிக்பாஸ் நிகழ்ச்சி சீஸன் 1 போட்டியாளர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது?” என்கிற தலைப்பில் அடுத்த உரையாடல் அமைந்தது. “கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது. சோஷியல் மீடியால வறுத்தெடுத்தாங்க. அப்புறம் சரியாயிடுச்சு. ஓவியா கூடெல்லாம் ஷாப்பிங் போயிட்டுதான் இருக்கேன்” என்றார் காயத்ரி. (ஓவியா பெயரைக் கேட்டவுடன் முன்னணி நடிகரின் பெயரை சொல்லும் போது கிடைக்கும் வரவேற்பு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்தது. தலைவிடா!) “ஒரு சின்ன குடில் வாழ்க்கை மாதிரி என்னுடையது இருந்தது. பிக்பாஸ் வீடடிற்கு வந்தப்புறம் நெறைய அனுபவங்கள் கிடைச்சது. கார் டாஸ்க் மூலமா என் மனபலத்தை நானே தெரிஞ்சுக்கிட்டேன்” என்றார் சுஜா. (சினிமா வாய்ப்பு கிடைச்சுதுங்களா மேடம்?!). 

“இந்த வீட்ல இருந்து நெறைய எடுத்துட்டு போயிருக்கேன்” என்று ஆரம்பித்தார் சிநேகன். (பிளாஸ்மா டிவியையுமா?!) அன்புக்கு நெறய ஏங்குறவன் நான். உலகம் பூரா மக்கள் எனக்கு அந்த அன்பைக் கொடுத்தாங்க. அதுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிதான் காரணம்.” என்று அகம் மகிழ்ந்தார் சிநேகன். “உங்களுக்கு சில மாசங்கள்ல கிடைச்சது, எனக்கு 60 வருஷத்துல கிடைச்சது” என்றார் கமல். 

“மூணு படத்துல ஹீரோவா நடிச்சிட்டிருக்கேன்’ என்றொரு தகவலைச் சொன்னார் சிநேகன். “எழுதறதை விட்டுடாதீங்க” என்று அவசியமான ஆலோசனையைத் தந்தார் கமல். 

“முன்னாடில்லாம் வெளியே போகும் போது.. ‘ஏய்.. காமெடி’ன்ற மாதிரி கூப்பிட்டு கேவலப்படுத்துவாங்க. இப்ப ‘அப்பா’ ஸ்தானத்துல வெச்சு பார்க்கறாங்க. சந்தோஷம். இப்பல்லாம் ஒரு கல்யாணத்தையும் விடறதில்லை. குடும்பத்தோட போயிடுவேன். பொண்டாட்டிதான் கொஞ்சம் பிரச்சினை. காஃபி லேட்டானதுக்கு சும்மா  கேட்டா கூட “பாத்தீங்களா.. கோபப்படமாட்டேன்னு அங்க சொன்னாரு. இப்ப கோப்படறாருன்னு ஊரெல்லாம் சொல்லிட்டு திரியறா” என்று வையாபுரி நகைச்சுவையாகச் சொல்ல “பொண்டாட்டிங்கன்னா அப்படித்தான். பாலாஜியைப் பாருங்க. வாயைப் பிளந்து பார்த்துட்டிருக்காரு. இப்படியொரு வில்லங்கமான கோணம் இருக்கான்னு யோசிக்கறாரு போல” என்று கமல் சொல்ல வீடே சிரிப்பால் அதிர்ந்தது. 

“நான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் அதிகம் நினைவு வைத்திருக்கிறார்கள்” என்றார் ஆர்த்தி. (பின்னே! நீங்க செஞ்ச காரியம்லாம் அப்படி!)

“போன சீஸனுக்கும் இந்த சீஸனுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. போனதில் அதிக புகார்கள் இல்லை. இந்த முறை எல்கேஜி பசங்க மாதிரி, கிள்ளிட்டான், அடிச்சுட்டான்’னு நிறைய கம்ப்ளெயிண்ட். அவங்க கேமை, கேமாத்தான் பார்த்தாங்க. இப்ப, ஈகோ, உத்தி ன்னு என்னென்னமோ இருக்கு. டீம் ஸ்ப்ரிட் இல்லை” என்பது போல் உரையாடலை நகர்த்திச் சென்றார் கமல். “இப்ப நாங்க உள்ள வந்தவுடனே அவங்க ஒண்ணு சேர்ந்துட்டாங்க” என்றார் ஆர்த்தி.

“ஒரு நபருக்கு நியாயமா கிடைக்க வேண்டிய வாக்கு, ஒருவேளை மக்களுக்கு அதைப் போடத் தெரியாததால் தவறிப் போனது போல. ஆனா இந்த முறை கணிசமா கூடியிருக்கு” என்று வாக்களிப்பு சதவீதம் உயர்ந்த விஷயத்தை மறுபடியும் சுட்டிக் காட்டிய கமல், எவிக்ஷன் பட்டியலில் இருந்தவர்களைப் பற்றி பேசத் துவங்கினார். ‘என் பேரை சொல்ல விட்டுட்டீங்ளே.. அப்ப நான் இல்லையா?” என்று முந்திரிக்கொட்டைத்தனமாக விஜி அலறினார். 

“இந்த எவிக்ஷன் பட்டியலில் இருந்து ஒருவரைக் காப்பாற்றணும்னா யாரைக் காப்பாற்றுவீர்கள்?” என்று முன்னாள் போட்டியாளர்களைக் கேட்டார் கமல். “மும்தாஜை சொல்வேன். அவங்க உடல்நிலையைக் காட்டி டபாய்க்கறாங்களோன்னு எனக்கு முன்னாடி தோணுச்சு. சந்தேகம் இருந்தது. ஆனா அவங்க கிட்ட பேசிப் பார்த்தப்பறம் அதுல உண்மையிருக்கறதா தெரிஞ்சது. இந்த நிலையிலும் அவங்க முடிஞ்சத விளையாடறாங்க. அன்பு செலுத்தறது அவங்களோட பிளஸ் பாயிண்ட்” என்றார் ஆர்த்தி.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“ரித்விகா’ என்ற பெயரை வையாபுரி சொன்னதும் பார்வையாளர்களின் கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது. பின்பு சிநேகன், சுஜா, காயத்ரி என்று அனைவருமே ரித்விகாவின் பெயரைக் குறிப்பிட்டார்கள். வாக்களிப்பு சதவீதத்தில் ரித்விகாவிற்கு கிடைத்த சதவீதம் பிரமிப்பூட்டும் அளவில் இருந்ததாக கமல் வியந்த போதே தெரிந்து போயிற்று, ரித்விகா காப்பாற்றப்பட்டார் என்று. இறுதிப் போட்டியில் வெல்லக்கூடிய தகுதியுள்ளவர் ரித்விகா. மக்களின் ஆதரவும் அவருக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘மக்களுக்கு நன்றி’ சொன்ன ரித்விகா, ‘இனி அடிச்சு ஆடுவேன்” என்கிற உறுதிமொழியையும் தந்தார்.

“வெற்றியடைஞ்சுட்டோம்னு அதிக தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். ஜாக்கிரதையா விளையாடுங்க” என்ற அறிவுரையை ரித்விகாவிற்கு வழங்கினார் கமல். ‘ஒரு சிறிய தவறு கண்ணில்பட்டாலும் தங்களின் ஆதரவை மக்கள் திரும்பப் பெற தவற மாட்டார்கள்”: என்று எச்சரிக்கை செய்தார் கமல். சரியான உபதேசம். 

ஆக.. பாக்கியிருப்பவர்கள் மும்தாஜ், ஐஸ்வர்யா மற்றும் விஜி. “மும்தாஜ் வெளியேற்றப்பட்டதாகவும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாகவும்’ ஒரு தகவல் இணையக் காற்றில் உலவுகிறது. வாக்கு சதவீதக் குறைவினால்தான் தவறானவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பது மாதிரியான புகாரை கடந்த வாரம் கமல் முன்வைத்தார். ஆனால் அவரே வாக்கு சதவீதம் பெருகியிருக்கிறது என்று இந்த வாரம் அறிவித்த பிறகும் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

ஐஸ்வர்யா எப்படி காப்பாற்றப்பட்டார்? எனில் அங்கு என்னதான் நடக்கிறது? “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…” என்று கவுண்டமணி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.