Published:Updated:

மிஸ் யூ மும்தாஜ்... அவங்க சவாலை சமாளிப்பாங்களா பிக்பாஸின் 5 கேர்ள்ஸ்!? #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
மிஸ் யூ மும்தாஜ்... அவங்க சவாலை சமாளிப்பாங்களா பிக்பாஸின் 5 கேர்ள்ஸ்!? #BiggBossTamil2
மிஸ் யூ மும்தாஜ்... அவங்க சவாலை சமாளிப்பாங்களா பிக்பாஸின் 5 கேர்ள்ஸ்!? #BiggBossTamil2

எந்தவொரு போட்டியாளரின் மீதும் தனிப்பட்ட விருப்பை அல்லது வெறுப்பை உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்றும் அப்படியே தன்னிச்சையாக ஏற்பட்டாலும் அது இந்தத் தொடரில் பிரதிபலிக்கவே கூடாது என்றும் ஒரு கறாரான முன்தீர்மானத்தை எண்ணிக்கொண்டுதான் இந்தத் தொடரை ஆரம்பித்தேன். ஆனால் அதிலோர் அழுத்தமான சலனத்தை உருவாக்கிவிட்டது, இன்றைய பிக்பாஸ். ஆம். மும்தாஜின் வெளியேற்றம் சற்று உணர்வுபூர்வமாகப் பாதித்தது. அவருடைய பிரிவுஉபசார நிகழ்ச்சி அத்தனை நெகிழ்ச்சியாக அமைந்துவிட்டது. இன்று நடந்த சம்பவங்கள் அதற்கு முக்கியக் காரணம். 

ஒருவருடைய எதிர்மறைத்தன்மைகளையும் மீறி அவரை நேசிக்க முடியும் என்பதற்கு மும்தாஜ் நல்ல உதாரணம். ஒரு நடிகை என்கிற தகுதியுடன் இந்த நிகழ்ச்சிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதாக முதலில் எனக்குத் தோன்றியது. தொடக்கப்பகுதிகளில் அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார். உடல் உபாதைகளைக் காட்டி சில டாஸ்க்குகளில் பங்கேற்க மாட்டேன் என்று அடம்பிடித்தது, காலையுணவு சமைக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தது, சில தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்த்தது போன்வற்றால் இந்த விளையாட்டில் அவருடைய பங்களிப்பின் மீது அதிருப்தி உருவாகியது. பெரும்பாலான சமயங்களில் அவர் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆனாலும் தப்பித்துக்கொண்டே வந்தார். 

ஒரு கட்டத்தில் அவருடைய வேறொரு வகையான பிம்பத்தை உணர முடிந்தது. தாய்மையெனும் பிம்பம். தன்னுடைய சகோதரன் மகனை நினைவுப்படுத்துவதின் காரணத்தினாலேயே ஷாரிக்கின் மீது அன்பு மழை பொழிந்தார். மும்தாஜிஜுக்கு `மோமோ’ என்கிற செல்லப்பெயரை உருவாக்கியது ஷாரிக்தான். ஆனால் சில டாஸ்க்குகளில் ஷாரிக் நடந்துகொண்ட முறையால் அவர் மீது மும்தாஜுக்கு அதிருப்தி உருவாகியது. (ஷாரிக்கின் நோக்கில் அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன). ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் மும்தாஜ் அளித்த அன்பு பிரத்யேகமானது. தன்னைப் போலவே வேறொரு கலாசாரத்தில் இருந்து வந்து காலூன்றுவதற்காகப் போராடுபவர்கள் என்பதின் காரணமாக அவர்களின் மீது தன்னிச்சையான அன்பு உருவானதாக ஒருமுறை சொன்னார். 

மிக குறிப்பாக ஐஸ்வர்யா மீது அவர் காட்டிய அன்பு நிபந்தனையில்லாதது என்றே நினைக்கிறேன். மும்தாஜின் அன்பை ஐஸ்வர்யா கோபத்தில் பலமுறை நிராகரித்த போதும், அப்போதைக்குக் கோபப்பட்டாலும் மீண்டும் தன் பிரியத்தைப் புதுப்பிக்க மும்தாஜ் தவறியதில்லை. 

ஒரு கதை நினைவுக்கு வருகிறது. நீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு தேளை ஒரு பாதிரியார் காப்பாற்றுவதற்காக கையில் எடுத்தாராம். அது அவருடைய கையில் கொட்டியதாம். வலி தாங்காமல் அவர் கையை உதற தேள் மறுபடியும் நீரில் விழுந்ததாம். மறுபடியும் தூக்க மறுபடியும் தேள் கொட்டியது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் ``ஏங்க.. அதான் தேள் கொட்டுதுன்னு தெரியுதில்ல. அப்படியே விட வேண்டியதுதானே?” எனக் கேட்க, ``கொட்டுவது தேளின் குணம். காப்பாற்றுவது மனித குணம். சிறிய அறிவுள்ள தேள், உயிர் போகும் கட்டத்திலும் தன் குணத்தை விடாமல் பிடிவாதமாக இருக்கும் போது, ஆறறிவு உள்ள மனிதன் தன் நல்ல குணத்தை இழக்கலாமா?” என்று பாதிரியார் கேட்டாராம். 

ஐஸ்வர்யா மீது மும்தாஜ் காட்டிய அன்பை இப்படியாக வகைப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. `அன்பு காட்டி ஏமாற்றுகிறார்’ என்பது மும்தாஜின் மீதுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டு. அப்படி நெடுங்காலத்துக்கு அன்பு காட்டி ஏமாற்ற முடியாது என்பதே உண்மை. மேலும் அன்பு போன்ற உணர்ச்சிகள் அகவயமானவை; புறவயமாக நிரூபிக்க முடியாதவை. மும்தாஜ் எல்லா சமயங்களிலும் சாந்த சொரூபியாக நடிக்கவில்லை. மற்றவர்களிடம் முரண் ஏற்படும் சமயங்களில் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்தினார். ஸ்டீமரை அணைக்க மறந்த விவகாரத்தில் விஜியுடன் நிகழ்ந்த மோதல் ஓர் உதாரணம். 

அன்பு காட்டி ஏமாற்றுதல் என்பதை அவர் ஓர் உத்தியாகப் பயன்படுத்தினார் என்று சொல்லப்பட்டாலும், அப்படி போலியாக அன்பு காட்டக்கூட இன்று நம்மைச் சுற்றி எவருமில்லை என்பதே உண்மை. தன்னலமும் சுயமோகமும் மிகுந்த சமகாலத்தில் அவரவர்களின் பிரச்னைகளுக்காகவே போராட நேரம் கிடைக்காத போது மற்றவர்களின் மீது அன்பு செலுத்த நேரமோ, எண்ணமோ பெரும்பாலானோர்க்கு இல்லை. மிக அரிதாக சிலர் மட்டுமே அன்பெனும் ஒளியைப் பிடிவாதமாகத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மும்தாஜின் அன்பு ஒருவேளை போலித்தனமாக இருந்தாலும் அது அவசியமானதே. தன் குடும்பத்தின் மீது இத்தனை பிணைப்பும் பாசமும் கொண்டிருப்பவரால் அப்படிப் போலியாக நடிக்க முடியாது என்றும் தோன்றுகிறது. பிரிவு காரணமாக குடும்பத்தினரிடம் செலுத்த முடியாத அன்பைத்தான் அவர் மற்றவர்களிடம் கொட்டி சமன் செய்தார் என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. 

அன்புக்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் நிபந்தனையற்ற அன்பைத் தருவதற்கு தயாராக இருப்பவர்கள், முன்வருபவர்கள் மிகச் சிலரே. தன் உடல்நிலையைக் காட்டி பல சலுகைகளை அவர் பெற்றுக்கொண்டது ஒருவகையான நெருடல் என்றாலும் அவற்றை அனுமதித்த பிக்பாஸே முதன்மையான காரணி. இந்த நிகழ்ச்சியின் வணிகத்துக்கு நடிகையெனும் பிம்பம் அவசியம் என்ற காரணத்துக்காக ஒப்பந்தத்தில் அவருடைய பிரத்யேக சலுகைகளை பிக்பாஸ் குழு ஏற்றுக்கொண்டிருந்திருக்கலாம். போட்டியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவது இந்த நிகழ்ச்சியின் அடிப்படைக்கு எதிரானது. இதற்கு மும்தாஜை மட்டும் குறைசொல்வது சரியானதாக இல்லை. 

மும்தாஜிடம் எதிர்மறைத்தன்மைகளும் இருந்தன. நிறைகளோடு குறையும் இல்லாத மனிதர் எவர். சுத்தம், நிறம், வர்க்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் சென்றாயனோடு மனவிலகலோடு இருந்தது பல இடங்களில் வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் என்னதான் மறைத்தாலும் இது அம்பலப்பட்டது. போலவே யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் காட்டிய மிகையான நெருக்கத்தை அவர் இதர போட்டியாளர்களிடம் அத்தனை காட்டவில்லை என்பதும் நெருடல்தான். அந்த வீட்டில் எவர் துயரப்பட்டாலும் முதலில் நீள்வது மும்தாஜின் கரமாகத்தான் இருந்தது என்றாலும் அந்த இரண்டு பெண்களின் மீது இவர் காட்டிய கரிசனத்தின் சதவீதம் அதிகம். 

கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டாலும் மும்தாஜ் தன்னுடைய மதத்தின் மீதும் மரபின் மீதும் நம்பிக்கையும் பிடிவாதமும் உள்ள பெண்மணி. விளையாட்டுக்காகக்கூட அவர் இவற்றை விட்டுக்கொடுக்கவில்லை என்பது ஒருவகையில் நேர்மறையான விஷயம். அதன் காரணமாகவேகூட பாரபட்சமான உணர்வுகள் தோன்றலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதே நோக்கிலான பாரபட்சம் எதிர்த்தரப்பிலிருந்தும் உருவாகியிருக்கலாம். `தமிழ்ப்பெண்கள் கூட்டணி’ உருவாவதற்கும் இதுவேகூட காரணமாகியிருக்கும். 

**

எவ்வித முன்னுரையும் இல்லாமல் நேரடியாக அகம் டிவிக்குள் வந்தார் கமல். இப்போது போட்டியிடுபவர்களில், `டாப் 3 போட்டியாளர்கள் என்று எவரைச் சொல்வீர்கள்?” என்று சீனியர்களைக் கேட்டார். மும்தாஜ், ஐஸ்வர்யா, விஜியின் பெயர்களைத் தவிர மற்றவர்களின் பெயர்கள் கலவையாக வந்தன. இதில் பாலாஜியை எப்படிச் சேர்த்தார்கள் என்று புரியவில்லை. 

அடுத்ததாக, சமூகவலைதளங்களில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்களை அழுத்துவதைப் போல மனிதர்களின் மீதும் முத்திரை குத்தும் விளையாட்டு நடந்தது. பிடித்த நபராக வையாபுரியைத் தேர்ந்தெடுத்த பாலாஜி, `பலூன் டாஸ்க்கில் வாய்ப்பே தரவில்லை’ என்ற ஜாலியான கோபத்துடன் சிநேகனின் மீது டிஸ்லைக் பட்டனைக் குத்தினார். அதே வையாபுரியைப் பிடித்த நபராகத் தேர்வு செய்த ஜனனி, `திட்டினாங்க’ என்கிற ஜாலியான காரணத்துக்காக தோழி காயத்ரியை டிஸ்லைக் செய்தார். (`ரொம்பநாள் பழகின ஃபீலிங் வருது’ என்று வையாபுரியை இவர் சொன்ன போது, `எனக்கும் அப்படித்தான். ஏன்னா ரொம்ப நாள் பழகியிருக்கோம்’ என்று கமல் ஜாலியாகக் கடித்தார்). (`இனி டிப்ளமேட்டிக்கா இருக்க மாட்டேன்’ என்று வாக்களித்த ஜனனி இன்னமும் அதிலிருந்து வெளியே வரவில்லை).

பிடித்த நபராக காயத்ரியைத் தேர்வு செய்தார் ரித்விகா. சீஸன் ஒன்றில் தொலைக்காட்சியில் பார்த்ததில் உருவான எண்ணம், நேரில் பழகிய போது முற்றிலும் மாறி விட்டதாம். `கோபித்துக்கொள்ள மாட்டார்’ என்கிற உரிமையில் வையாபுரிக்கு டிஸ்லைக்கை அளித்தார். வழக்கம் போல் பெண்களைக் கவர்ந்து விடுவதில் சிநேகன் முன்னணியில் இருந்தார். யாஷிகாவிடமிருந்து லைக் பட்டனை வாங்கினார். `இன்னமும் அதிகம் பழகவில்லை’ என்கிற காரணத்தினால் காயத்ரிக்கு டிஸ்லைக். அதே சிநேகனுக்கு லைக் வழங்கிய ஐஸ்வர்யா, வழக்கம் போல் யாஷிகாவின் காரணத்தைக் காப்பிடியத்து டிஸ்லைக்கை ஆர்த்திக்கு வழங்கினார். `என்னைத் தமிழ்ப்பெண் என்று கருதாமல் ஒதுக்குகிறார்’ என்கிற வில்லங்கமான காரணத்தைக் கூறி வையாபுரிக்கு டிஸ்லைக் குத்திய மும்தாஜ், தன்னிடம் விசாரித்து புரிந்து கொண்ட காரணத்துக்காக ஆர்த்தியின் மீது லைக் குத்தினார். 

விஜயலஷ்மியைப் பற்றி சிநேகன் கவிதை எழுதினாராம். அதனால் லைக்கை சிநேகனுக்கு அளித்தார் விஜி. (என்ன கொடுமை சரவணன்!) பாலாஜி சொன்ன அதே காரணத்தைச் சொல்லி வையாபுரிக்கு டிஸ்லைக் பட்டன். 

இப்போது பிடித்த மற்றும் பிடிக்காத நபர்களைத் தேர்ந்தெடுப்பது சீனியர்களின் முறை. ரித்விகாவுக்கு லைக் அளித்த காயத்ரி, தோழி என்கிற உரிமையில் ஜனனிக்கு டிஸ்லைக் அளித்தார். `இத்தனை பொண்ணுங்க கூட மாரடிக்கிறது இமாலய சாதனை’ என்கிற காரணத்துக்காக பாலாஜிக்கு லைக் அளித்த சுஜா, `குறும்பு’ என்கிற மழுப்பலான காரணத்தைச் சொல்லி ஐஸ்வர்யாவுக்கு டிஸ்லைக் அளித்தார். பிடித்த நபராக `யாஷிகா’ வைத் தேர்ந்தெடுத்த சிநேகன், `விளையாட்டாகவே இருக்கிறார்’ என்கிற காரணத்துக்காக பாலாஜியை பிடிக்காத நபராக தேர்ந்தெடுத்தார். (சிநேகன் பிடிக்காத நபராக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தால்தான் ஆச்சர்யம்!). 

லைக் பட்டனை பாலாஜியின் மீது குத்திய வையாபுரி, `பாத்ரூமில் தனிஇடம் வைத்திருப்பதெல்லாம் ஓவர்’ என்று மும்தாஜுக்கு அளிக்கப்படும் தனிச்சலுகைகளை காரணம் காட்டி அவருக்கு டிஸ்லைக் அளித்தார். பிடித்த நபராக மும்தாஜை ஆர்த்தி தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமில்லை. அன்பு செலுத்தி தாய் போல் இருக்கிறாராம். பிடிக்காத நபராக ஐஸ்வர்யாவைத் தேர்ந்தெடுத்து `கோபத்தை’ காரணமாக சொன்னார். 

**

அடுத்ததாக எவிக்ஷன் படலத்துக்கு வந்த கமல், ``வேற வழியில்ல. இதைச் செஞ்சுதான் ஆகணும்’ என்கிற தீவிரமான முகபாவத்தோடு சீஸன் ஒன்று போட்டியாளர்களின் பெயர்களை வாசித்து சபையை கலகலக்க வைத்தார். சீனியர்களை அன்புடன் வழியனுப்பி வைத்தார்கள் ஜூனியர்கள். ``ஓகே.. இப்ப சீரியஸ் விஷயத்துக்கு வரலாம். ஆடுகளத்தைச் சமமாக்க வேண்டியிருக்கிற கடமை எனக்கிருக்கிறது என்று இங்கு சொன்னேன். நானும் உங்களுக்குச் சில குறிப்புகள் கொடுத்தேன். முன்னாள் போட்டியாளர்களும் உங்களுக்குத் தந்திருப்பாங்க. அவற்றிலிருந்து என்ன உணர்ந்தீர்கள், கற்றுக் கொண்டீர்கள்?” என்கிற கேள்வியை முன்வைத்தார் கமல். ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்து கொண்ட அறிவுரைகளை கூறினார்கள். இவற்றை காட்சி வழியாக முன்னமே பார்த்து விட்டோம். 

இதைத் தொடர்ந்து, எவ்வித விளையாட்டும் இல்லாமல், சுற்றி வளைக்காமல் காப்பாற்றப்படுபவராக விஜயலட்சுமியின் பெயரை அறிவித்தார் கமல். அடுத்தது எவிக்ஷன். `ஒரு நூலிழை வித்தியாசத்தில்தான் இவர் பின்தங்கியிருக்கிறார்’ என்கிற விவரத்தைச் சொல்லி அவர் அறிவித்தது ``மும்தாஜின்’ பெயரை. இதை எதிர்பார்த்தது போல் தயாராக இருந்தார் மும்தாஜ். 

இனிவரும் டாஸ்க்குகள் உடல்பலம் சார்ந்து கடுமையானதாக இருக்கும் என்பதால் மும்தாஜை வெளியே அனுப்பியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ``ஆடுகளத்தைச் சமதளமாக்க வேண்டும்’ என்று கமல் குறிப்பிட்டது இதைத்தான் போலிருக்கிறது. இந்த நோக்கில் பாலாஜியும் பலவீனமான போட்டியாளர்தான். ``தேவர் மகன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் இன்றும் நமது நினைவில் நிற்கும். ஒவ்வொன்றுமே தனித்தன்மையைக் கொண்டது. இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களும் அப்படித்தான். நீங்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தாம். இங்கு தோற்றவர்கள் என்று எவருமில்லை” என்கிற உற்சாக வார்த்தைகளைக் கூறினார் கமல்.

அனைவரையும் விட அதிகமாகக் கலங்கியவர் யாஷிகாதான். `எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கென்னமோ கண்ணீர் வரலை.” என்கிற காரணத்தை பிறகு கூறினார் ஐஸ்வர்யா. `ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அனைவருக்கும் அறிவுரை கூறிய மும்தாஜ், ரித்விகாவிடம் வைத்த வேண்டுகோள் முக்கியமானது. `இந்திப் பொண்ணு, தமிழ்ப் பொண்ணு –ன்னு எந்தப் பாரபட்சமும் பார்க்காதீங்க. உங்க கிட்ட இதை எதிர்பார்க்கலை” என்று கூற, `நான் அப்படிப் பேசலை. வீட்ல போய் வீடியோல பாருங்க’ என்றார் ரித்விகா. ஆனால் எப்படியோ ஒரு பிரிவு அந்த வீட்டில் ஏற்பட்டுவிட்டது துரதிர்ஷ்டமானது. தகுதி, திறமை போன்ற ஆதார விஷயங்கள்தாம் ஒரு விளையாட்டின் அளவுகோலாகவும் தீர்மானிக்கும் காரணியாகவும் இருக்க வேண்டும். 

`அண்ணா.. நீங்கதான் வீட்ல பெரியவங்க. பார்த்துக்கங்க’ என்று பாலாஜியிடம் கூறிய மும்தாஜ், செடியை யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பரிசளித்தார். `குட்டிப்பிசாசு’ என்று அவர் ஐஸ்வர்யாவைக் கூப்பிட்டது நெகிழ்ச்சியானது. ``என் அம்மா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க” என்று யாஷிகா பிறகு நெகிழ, `அவங்க பெருமைப்படற மாதிரி நடந்துக்கணும்” என்றார் ஐஸ்வர்யா. (ஒவ்வொரு நண்பரும் போகும் போது இப்படித்தான் சொல்றீங்க. ஆனா `பழைய குருடி, கதவைத் திறடி’ன்னு மாறிடறீங்க). ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் காட்டிய நெருக்கத்தை மற்றவர்களிடம் மும்தாஜ் காட்டாதது வெளிப்படை. 

``பாருங்க.. உங்க வாக்குகளின் மூலம் முடிவுகளை அப்படியே புரட்டிப் போட்டுட்டீங்க” என்று குறிப்பிட்ட கமல், PricewaterhouseCoopers என்கிற பன்னாட்டு தணிக்கை நிறுவனம்தான், பிக்பாஸ் வாக்குகளை கையாள்வதாகவும் எவர் வேண்டுமானாலும் அதைப் பார்வையிட முடியும் என்பது போல் சொன்னார். (கமல் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்றாலும் சத்யம் நிறுவனம் தொடர்பாக நடந்த முறைகேடுகளும் நினைவில் வராமல் இல்லை. அதிலும் இதே தணிக்கை நிறுவனம்தான் சம்பந்தப்பட்டிருந்தது). இதே மாதிரியான வாக்களிப்பை தொடர்ந்து செய்தால் அது உபயோகமாக இருக்கும் என்று அரசியல் பொடியையும் வழக்கம் போல் தூவினார் கமல்.

**

வெளியே வந்த மும்தாஜ் முதலில் தன் சகோதரரைத் தேடியது நெகிழ்ச்சி. `இப்படி நடக்கணும்னு அவருக்குத் தெரியாதோ, என்னமோ” என்று விளையாடினார் கமல். `ரித்விகாவுக்குக் குறிப்பிட்ட அளவு கூட சமயங்களில் உங்களின் வாக்கு சதவிகிதம் இருந்தது’ என்று கமல் சுட்டிக்காட்டிய போது அசுவாரஸ்மான முகபாவத்தை வெளிப்படுத்தினார் மும்தாஜ். `எந்தக் காரணத்துக்காக நீங்கள் வெளியே வந்திருப்பீங்கன்னு நெனக்கறீங்க?” என்ற கேள்விக்கு `நான் வலிமையான மனோபாவம் கொண்ட பெண்மணி. ரித்விகா அளித்த டாஸ்க்கை செய்ய முடியாதது துரதிர்ஷ்டம்தான் என்றாலும் சில காரணங்களுக்காக “முடியாது’ என்றால் முடியாது என்பதை சொல்லும் துணிச்சல் உள்ளது. முடி போயிடுச்சுன்னு சென்றாயன் அழுதாரு. என்னால் அந்தத் தியாகத்தைச் செய்ய முடியாது. எப்படியும் வாரா வாரம் நாமினேட் ஆகறோம். அதனால பரவாயில்லை’ ன்னு நெனச்சேன். அது காரணமாக இருக்கலாம்’ என்றார் மும்தாஜ். 

`புதுசா ஒரு காரணம் ஆரம்பிச்சது. தமிழ்ப்பெண்கள் ஜெயிக்கணும் –னு சொல்லிட்டிருந்தாங்க. நான் இத்தனை வருஷம் தமிழ்நாட்ல இருந்தாலும் என்னைத் தமிழ்ப்பொண்ணா ஏத்துக்கலையோன்னு தோணுது” என்றார் மும்தாஜ். அந்த நேரத்து கசப்பு உணர்ச்சியுடன் இதை அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் பல காரணங்களைச் சுட்டிக் காட்டிஅதை வலிமையாக மறுத்தார் கமல். `நான் மலையாளி இல்லைன்னு சொன்னா கேரளா –ல ஒத்துக்க மாட்டாங்க. எம்.ஜி.ஆர் மலையாளின்னு சொல்லிப் பார்த்தாங்க. தமிழக மக்கள் ஏத்துக்கலை. தமிழர்கள் அதைப் பார்க்க மாட்டாங்க” என்று கமல் அளித்த விளக்கம் ஒருவகையில் உண்மைதான். ஆனால் சமயங்களில் இனவுணர்வு காரணமாக அவர்கள் சறுக்கி விடுவதும் இருக்கிறதுதான்.

பின்பு, பல்வேறு சமயங்களில் டாஸ்க் செய்ய மும்தாஜ் மறுத்த தருணங்கள் வெளிப்பட்டன. சிரிப்புடனும் புன்னகையுடனும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார் மும்தாஜ். `என் உடல்நிலையில் பிரச்னை இருந்தாலும் என்னால் இயன்ற டாஸ்க்குகளைச் செய்தேன்’ என்று விளக்கமளித்தார் மும்தாஜ். `மற்றவர்களுக்காக கண்ணீர் விட்டு ஏமாற்றுகிறார் என்று உங்கள் மீது புகார் இருந்தது. ஆனால் வெளியில் வரும் போது நீங்கள் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. அது மனிதநேயத்துக்கான அடையாளம். மற்றவர்களுக்காக கண்ணீர் விடுவது நடிகர்களுக்கு முக்கியமானது. ஒரு நடிகர்தான் நடிக்கும் பாத்திரத்துக்காக, அந்தக் காட்சிக்காக அழுதாலும் அதில் ஒரு பங்கு உண்மை’ என்று தசாவதாரம் பட உதாரணத்துடன் சொன்னார் கமல். `எனக்காக கண்ணீர் விடுகிறவர்களைப் பார்த்து உதாசினம் செய்ய மாட்டேன்’ என்று கமல் சொன்னது நெகிழ்ச்சியான உண்மை. `தான் வெளியேறப் போவதை இந்த வாரத்தில் முன்பே உணர்ந்ததாகச் சொன்னார் மும்தாஜ்.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

பிறகு அவரது சகோதரரும் அவரது மகனும் வர உணர்ச்சியின் தத்தளிப்புக்குள் சென்றார் மும்தாஜ். தன்னுடைய சகோதரரின் அறிமுகத்தின் வழியாக தான் எவ்வாறு கமலின் ரசிகையாக மாறினேன் என்பதையும் `உங்க மேல ஒரு சின்ன க்ரஷ் உண்டு’ என்று வெட்கச் சிரிப்புடனும் சொன்னது சுவாரஸ்யம். இதைப் பல காட்சிகளில் முன்பே உணர முடிந்தது. 

கமல் முன்னால் கால் மேல் போட்டு அமர்ந்ததற்காக மன்னிப்பு கேட்ட மும்தாஜ், அப்படிச் செய்யாவிட்டால் வீட்டுக்குப் போனவுடன் சகோதரரரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும், ஏனெனில் அவர் உங்களின் தீவிரமான ரசிகர். பெரிய மரியாதை வைத்திருக்கிறார்” என்று நெகிழ்ந்தார். `சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. மரியாதை மனதில் இருப்பது முக்கியம். அதை உங்களிடமிருந்து உணர முடிகிறது” என்றார் கமல். பிறகு மும்தாஜின் மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய குறும்படம் ஒளிபரப்பானது. இதுவரையான குறும்படங்களில் இதுதான் பெரும்படம். 

‘நான் நெறய பிக்பாஸ் ஷோ பார்த்திருந்தாலும் உள்ளே கிடைத்தது வேறு மாதிரியான அனுபவம். ஒரு வனத்துக்குள் இருப்பது போல் இருந்தது. உடல் பலவீனம் இருந்தாலும் மனவலிமை காரணமாக இதில் கலந்துகொண்டேன்.” என்றார். பிறகு அகம்டிவி வலிமையாக சக போட்டியாளர்களிடம் தன் அன்பைப் பகிர்ந்துகொண்டது சுவாரஸ்யமான காட்சி. ஐஸ்வர்யாவும் மும்தாஜூம் இணைந்து இந்திப் பாடல் பாடியதும் சுவாரஸ்யம். (இது போன்ற தருணங்களை பிக்பாஸ் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்). ‘ஒரு பெண் ‘முடியாது’ என்று சொன்னால் அது முடியாதுதான்’ பெண்கள் இந்த விஷயத்தில் உறுதியாக இருங்கள். இதை திமிர் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள்’ என்கிற அழுத்தமான அறிவுரையுடன் விடைபெற்றார் மும்தாஜ். (அமிதாப்பச்சன் நடித்த ‘pink’ திரைப்படமும் இதே விஷயத்தைத்தான் சொல்கிறது). 

`அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது. அப்போதுதான் போட்டி வலிமையாக இருக்கும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறார்கள்’ என்கிற அறிவிப்புடன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் கமல்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய காட்சி பிக்பாஸ் வீட்டில் மிக அரிதானது. சிலரின் பிரிவுகளின் போதுதான் அதுவரை மறந்திருந்த பல ஆதாரமான விஷயங்களை நாம் உணர்கிறோம்; கற்றுக் கொள்கிறோம்.