Published:Updated:

அழுக்கு மாப், முட்டை, சுடு மிளகாய், எண்ணெய்... ரணகொடூரம் பிக்பாஸ்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
அழுக்கு மாப், முட்டை, சுடு மிளகாய், எண்ணெய்... ரணகொடூரம் பிக்பாஸ்! #BiggBossTamil2
அழுக்கு மாப், முட்டை, சுடு மிளகாய், எண்ணெய்... ரணகொடூரம் பிக்பாஸ்! #BiggBossTamil2

முதல் சீஸன் போட்டியாளர்களும் சென்று, இரண்டாம் சீஸன் போட்டியாளர்களும் கணிசமாக குறைந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் வீடு இப்போது வெறிச்சோடி இருக்கிறது. கடைசி வாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான் என்றாலும், காதில் கரப்பான்பூச்சிவிடுவது, மூக்கில் மிளகு கஷாயம் ஊற்றவது, உறியடிக்கிறவரின் மீது ஆவேசமாக ஊற்றுவது போல தண்ணீர் ஊற்றுவது போன்ற டாஸ்குகள் அரங்கேறுகின்றன. ஒரு பக்கம் சிறுபிள்ளைத்தனமாகவும்  இன்னொருபக்கம் ரணக்கொடூரமாகவும்  தெரிகிற இது போன்ற டாஸ்க்குகளை கைவிட்டு உடல்பலத்தோடு மனபலத்தையும் சோதிக்கும் சுவாரஸ்யமான விளையாட்டுக்களை தரலாம். 

மென்மையான மனதுடைய பார்வையாளர்கள் இந்தக் கொடூரமான காட்சிகளினால் மனதளவில் பாதிக்கப்படலாம். மிக குறிப்பாக இவற்றை ஒருவேளை பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரிடம் வன்முறை உணர்ச்சியும் பழிவாங்கல் உணர்வும் பெருகக்கூடிய வாய்ப்பும் உண்டு. ஊடகங்களின் மூலமாக பல்வேறு எதிர்மறை செய்திகள் தொடர்ந்து நம் மனதில் படிந்துகொண்டே இருக்கின்றன. ‘வெடிகுண்டு வெடித்து நூறு பேர் கொடூர பலி’ என்ற செய்தியைக் கூட ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கடந்து செல்கிறோம். 

ஒரு வளரிளம் சிறுவன் தன்னிடமிருந்த டேப் வழியாக ஒரு விபத்துக்காட்சியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மெல்லிய அதிர்ச்சியுடன் அவனிடம் அதைப் பற்றி விசாரித்தபோது ‘ஒரு வண்டி வேகமா வந்து அந்த ஆளை அப்படியே தூக்கிடுச்சு. பார்க்கவே சூப்பரா இருந்துச்சு” என்று மகிழ்ச்சியும் சிரிப்பும் கொப்பளிக்கச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் எனக்குத்தான் கவலையாகவும் பயமாகவும் இருந்தது. இது போன்று வன்முறைக் காட்சிகள் இன்று இணையத்தில் ஏராளமாக இருக்கின்றன. திரைப்படங்கள், வீடியோகேம்கள் என்று பெரும்பாலானவற்றில் வன்முறையும் எதிர்மறைத்தன்மையும் பெருகியோடுகிறது. 

இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதையே பிரதிபலிப்பது துரதிர்ஷ்டமானது. இத்தனைக்கும் கமலின் தலையீட்டினால்தான் புகைபிடிப்பது உள்ளிட்ட சில ஆட்சேபகரமான விஷயங்களை தமிழில்விட்டு வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையெனில் இதர பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் நடக்கும் கொடூரங்கள் இதிலும் நடந்தால் இதன் ஆபத்து மிகுந்திருக்கும். வீட்டில் தனியாக இருக்கும் இளம்பருவத்தினர் இது போன்ற டாஸ்க்குகளை தங்களுக்குள் விளையாட்டாக பரிசோதித்துக்கொண்டால் அது ஆபத்தான எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். 

அன்பு, கருணை, பாசம் போன்ற நல்லியல்புகள் குறைந்து எதிர்மறையான விஷயங்கள் ஆக்ரமித்துக் கொண்டு வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் எரியும் நெருப்பில் எண்ணைய்யை ஊற்றுகின்றன. 

**

92-ம் நாள். வீட்டின் வாசலில் ரித்விகா மங்கலகரமாக கோலம் போட்டு முடித்ததும் விடியற்காலை பாடலாக ‘கககபோ’ ஒலித்தது. ரேஷன் பொருட்கள் வந்திறங்கின. ஆப்பிள் போன்ற பழங்கள் அதிகம் தென்பட்டன. ‘சாப்பிட்டு நன்றாக உடம்பைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். விதம் விதமான சோதனைகள் காத்திருக்கின்றன’ என்கிற செய்தியை பிக்பாஸ் மறைமுகமாக சொன்னாரோ, என்னவோ. 

சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு பொருள் தொடர்பாக ஒரு டாஸ்க். ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இதன் நடுவர்களாக இருப்பார்களாம். (பார்யா!). ரித்விகா மற்றும் ஜனனி ஓர் அணியாகவும், பாலாஜி மற்றும் விஜி இன்னொரு அணியாகவும் இணைந்தார்கள். தரப்பட்டிருக்கும் விளம்பர பாக்கிங்குளை வைத்து பிரமிட் போன்ற உருவத்தை அமைக்க வேண்டுமாம். இவர்கள் பொருட்களை அடுக்கிக்கொண்டிருக்கும் போது, ஸ்பான்ஸர்களுக்கு விசுவாசமாக கேமரா பொருட்களை க்ளோசப் கோணத்தில் மறுபடி மறுபடி காட்டிக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் சருமத்தை வெட்டுவது, பாழாக்குவது போன்ற டாஸக்குகளை கொடுத்துக் கொண்டு இன்னொரு புறம் அதன் பராமரிப்பிற்கான விளம்பரத்தையும் செய்வது பிக்பாஸின் கொடூரக் குறும்புகளில் ஒன்று. 

பிரமிட் உருவத்தை எப்படி அமைப்பது என்பது தெரியாமல் இரு அணிகளும் முதலில் குழம்பினார்கள். மாற்றி மாற்றி அடுக்கி ஒரு மாதிரியாக இறுதி நிலைக்கு வந்தார்கள். ரித்விகா மற்றும் ஜனனி அணி அடுக்கிய வடிவம் பார்ப்பதற்கு ஒழுங்காக இருந்தாலும் பிரமிட் வடிவில் இல்லை. விஜி மற்றும் பாலாஜி அடுக்கியது, “எந்தக் கூறு எடுத்தாலும் பத்து ரூபா’ என்று சாலையோரங்களில் குவித்து வைப்பதைப் போல அலங்கோலமாக தென்பட்டாலும் அது பிரமிட் வடிவத்தை நினைவுப்படுத்தியால் அந்த அணி வென்றதாக நடுவர் யாஷிகா அறிவித்தார். அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டே வரும் பிள்ளை மாதிரி, இன்னொரு நடுவரான ஐஸ்வர்யாவும் சில வார்த்தைகளைச் சொன்னார். தனது அணி வெற்றியடைந்தவுடன் கான்வென்ட் பிள்ளை போல துள்ளிக் குதித்து மகிழ்ந்தார் விஜி. 

“நீங்கள் உங்களின் கடுமையான முயற்சியால் 14-வது வாரத்தை அடைந்துள்ளீர்கள். வாழ்த்துகள்’ என்று அறிவித்த பிக்பாஸ், கோல்டன் டிக்கெட் பெற்ற ஜனனி தவிர்த்து மற்ற அனைவரும் இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்படுகிறார்கள் என்பதையும் அறிவித்தார். (‘சண்டேன்னா ரெண்டு’ என்பதைப் போல இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருப்பதாக கமல் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்). “இனிமேல் தனித்தனியான டாஸ்க்குகள் தரப்பட்டு அது தொடர்பான மதிப்பெண்கள் கார்டன் ஏரியாவில் உள்ள ஸ்கோர் போர்டில் அறிவிக்கப்படும்”: என்றார் பிக்பாஸ். இதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் போட்டியாளருக்கு பெரும்பரிசு காத்திருக்கிறதாம். 

இந்த வகையில் முதல் டாஸ்க்கை அவர் அறிவித்தார். இதுவும் வடிவேலு காமெடியில் இருந்து சுட்டதுதான். ஒரு கொடூரனின் தலையில் தெரியாமல் கையை வைத்துவிடும் வடிவேலுவிற்கு கையை எடுத்தால் குரல்வளை கடிக்கப்படும் ஆபத்து ஏற்படும். கையை எடுக்க முடியாமல் தவிக்கும் அவர், இன்னொரு பலியாடு வரும் வரையில் அவஸ்தைப்படுவார். அந்தக் காமெடியை பிரதிபலிக்கும் டாஸ்க் இது.

பிக்பாஸ் அழைத்தவுடன் பஸ்ஸரின் மேல் போட்டியாளர் கையை வைக்க வேண்டும். போட்டி நிறுத்தப்படும் வரை எக்காரணம் கொண்டும் கையை எடுக்கக்கூடாது. எடுத்தால் அவுட். இதர போட்டியாளர்கள் இவர் கையை எடுக்க வைக்க எந்தவிதமான யுக்தியையும் இடையூறுகளையும் செய்யலாம். ஆனால் ஆளைப்பிடித்து இழுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. 

முதல் பலியாடாக வந்தவர் விஜி. ஆனால் இவருக்கு துணிச்சலும் மனவுறுதியும் அதிகம். முன்திட்டத்துடன் கண்ணாடியை மாட்டிக் கொண்டு வந்தவரை, அதை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார் பிக்பாஸ். பிறகு ஆரம்பித்தது அந்த ரணகள அபிஷேகம். க்ரீம், முட்டை, பொடி என்று என்னென்னேவோ அவர் மீது போடப்பட்டது. காதுகளுக்குள் கீரிம் விடப்பட்ட போது ‘பாவமே’ என்றிருந்தது. இதற்கிடையில் கோலமாவும் வீசப்பட்டு, ‘கோலமாவு கோகிலாக’வாக மாறினார் விஜி. ஆவேசமாக தண்ணீரை யாஷிகா விசிறியடிக்கும் போது ‘ஐ வாண்ட் மோர் எமோஷன். இதெல்லாம் பத்தாது’ என்று ஜாலியாக அலறினார் விஜி. இதெல்லாம் எதிர்தரப்பின் மனவுறுதியை உடைக்கும் தந்திரம்தான். இன்னொருபக்கம் எதிர்தரப்பு இன்னமும் மூர்க்கமாகும் ஆபத்தும் உண்டு. 

தரை துடைக்கும் மாப்பை வைத்து விஜியின் முகத்தில் தடவலாம் என்கிற பாலாஜியின் ஐடியாவும் பரிதாபமாக தோற்றுப்போனது. நீர்ப்பற்றாக்குறை கடுமையாக உள்ள பிரதேசங்களில் உள்ளவர்கள், இப்படி பக்கெட் பக்கெட்டாக நீர் வீசப்பட்டு வீணாவதைக் கண்டு மனம் நொந்திருப்பார்கள். ‘அண்ணன் கூப்பிடறன்லே... வாம்மா போகலாம்’ என்று அஹிம்சை முறையையும் முயன்று பார்த்தார் பாலாஜி. எதுவும் நடக்கவில்லை. எதிர் தரப்பினர் தண்ணீர் எடுத்து வந்தே சோர்ந்து போனார்கள். ‘பிக்பாஸ், ஒரு ஸ்மால் டவுட். டாஸ்க் அவங்களுக்கா, எங்களுக்கா?” என்று பரிதாபமாக கேட்டார் பாலாஜி. ஐஸ்பேக் உள்ளிட்ட எதை முயன்றும் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்று உறுதியாக நின்றார் விஜி. 

மாலை 04.00 மணிக்கு துவங்கிய இந்த டாஸ்க் சரியாக மாலை 06.00 மணிக்கு முடித்து வைக்கப்பட்டது. இரண்டு மணி நேரமாக அசையாமல் கல்லுப்பிள்ளையார் போல நின்றிருந்த விஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் விஜிக்கு 120 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இறுதிவரை தீவிரமாக முயற்சிக்காத காரணத்தினால் மற்றவர்களுக்கு பத்து மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. 

இரவு 07.00 மணிக்கு அடுத்த பலியாடாக ஜனனி தேர்வு செய்யப்பட்டார். அபிஷேக ஆராதனைகள் மறுபடியும் ஆரம்பாகின. முகத்தின் மேலும் காதுகளின் உள்ளேயும் ஸ்பிரே அடித்தார்கள் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். பார்ப்பவர்களுக்கு மனம் கூசியிருக்கும். இந்த வதை முகாமின் தலைவராக தன்னைத்தானே நியமித்துக் கொண்டார் விஜி. “வந்துடும்மா செல்லம்” என்று பாலாஜி ஒருபக்கம் கெஞ்சிக் கொண்டிருக்க, தண்ணீர் ஊற்றுவதைத்தவிர அப்பிராணிகளான ஜனனிக்கும் ரித்விகாவிற்கும் வேறு வழிகள் தெரியவில்லை. ஆனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை விடவும் பல கொடுமையான வழிகளை யோசித்து யோசித்து செயல்படுத்தினார் விஜி. ‘கடுமையா கஷ்டப்படுவதை விட புத்திசாலித்தனமா செயல்படணும் என்பது அவர் பாலிஸி. ஏற்கெனவே ‘வெறுப்பேற்றும் திலகமாக’ இருந்த அவர், தான் கற்ற மொத்த வித்தையையும் இதில் இறக்கினார். 

மிளகு பொடியை முகத்தின் மீது ஊதுதல், விதம் விதமான பொடிகளை தூவுதல் என்று என்னென்னவோ செய்தார் விஜி. சமையல் குறிப்பு மாதிரி ஏதொவொரு வஸ்துவை தயார் செய்து எடுத்து வந்து ஜனனியின் தலையில் ஊற்றினார் யாஷிகா. இடையிடையில் தண்ணீரும் வீசப்பட்டது. இரண்டு, மூன்று துணிகளை போர்த்தி விட்டு தண்ணீரை ஊற்றினால் பளு அதிகமாகும் என்று இன்னொரு ஐடியாவைத் தந்தார், ஹிட்லரின் வாரிசான விஜி. ஒரு கட்டத்தில் ஆள் அடையாளமே தெரியாத சோளக்காட்டு பொம்மை போல் ஆனார் ஜனனி. (பாவம், அவருடைய உறவுகள் பார்த்துக் கொண்டிருந்தால் மனம் பதறியிருப்பார்கள்). மற்றவர்கள் தண்ணீர் எடுத்து வரச் சென்றிருந்த சமயத்தில் முகத்தில் உள்ள வஸ்துகளின் எரிச்சல் தாங்காமலோ என்னமோ, கையை எடுத்து விட்டு துடைத்துக் கொண்டார் ஜனனி. இதை எவரும் கவனிக்கவில்லை. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இந்த தன்னிச்சையான அல்லது தாங்க முடியாமல் செய்த செய்கையை ஜனனி தானே முன்வந்து ஒப்புக் கொண்டிருக்கலாம். ஏனெனில் அத்தனை காமிராக்கள் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்து விட்டார் போலிருக்கிறது. ஒருவேளை அவருக்கே அது தெரியவில்லையோ என்கிற சந்தேகத்தின் பலனையும் அளிக்கலாம். எப்படியோ, ஜனனி கையை எடுத்து விட்டதை அறியாத இதர போட்டியாளர்கள் தங்களின் கொடூரத்தை தொடர்ந்து கொண்டிருக்க, சற்று நேரம் சந்தோஷமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ், ‘ஜனனி, நீங்கள் கையை எடுத்து விட்டதால் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்’ என்று சொல்ல. ‘நானா?’ என்பது மாதிரி விழித்த ஜனனிக்கு சுத்தம் செய்து கொள்ள மற்றவர்கள் உதவினார்கள். 

**

இரவு 07.30 மணி. அடுத்த அழைப்பு யாஷிகாவிற்கு வந்தது. ‘நான் மைக்கை கழற்றப் போறதில்லை. அதுதான் என் உத்தி’ என்று பிக்பாஸூக்கே ஜாலியாக செக் வைத்தார் யாஷிகா. (ஒரு மைக் எண்பதாயிரம் ரூபாயாமே… நீ பார்த்தே?”). 

‘வதையின் நாயகியான’ விஜி, சமையல் அறையில் உப்புமாவிற்கு தாளிப்பது போல் எண்ணையில் மிளகாய் போட்டு ஏதோ தாளித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்தக் கமறும் வாசனையை யாஷிகாவின் முகத்திற்கு நேராக காண்பித்துக் கொண்டிருந்தார். பஸ்ஸர் வைத்திருக்கும் கையின் மேல் எண்ணைய்யை ஊற்றினால் வழுக்கிக் கொண்டு வரும் என்கிற யோசனையை தெரிவித்தவரும் அவர்தான். பிக்பாஸே விஜியைப் பார்த்து மிரண்டு போயிருப்பார். யாஷிகா தயார் செய்து எடுத்து வைத்திருந்த சிறப்பு திரவத்தை யார் ஊற்றுவது என்று தயங்கும் போது அதை வாங்கிய ஐஸ்வர்யா, அதை யாஷிகாவின் மீது படாமல் தலைக்கு மேலாக ஊற்றினார். 

இதைக் கண்டு பயங்கர எரிச்சலானார் விஜி. தன் தோழி அவஸ்தைப்படுவதைக் கண்டு மனம் பொறுக்காத ஐஸ்வர்யா, அவரைக் காப்பாற்றும் நோக்கில் அவர் மீது போடப்படும் திரவங்கள் போகும் படியாக தண்ணீரை ஊற்றுவதால் மற்றவர்கள் எரிச்சலானார்கள். ‘நான் எவ்ள கஷ்டப்பட்டு ஐடியா உருவாக்கி செய்யறேன். இப்படி இன்னொரு போட்டியாளரே அவங்க பிரெண்டு சார்பா நின்னா எப்படி? நான் விளையாடப் போறதில்லை” என்று கோபித்துக் கொண்டு சென்றார் விஜி. பாலாஜியின் சமாதானத்தையும் அவர் கேட்கவில்லை. இன்னொருபக்கம் யாஷிகாவின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நீரை வீசினார் ஐஸ்வர்யா. “இது என் உத்தி, இதில் என்ன பிரச்சினை?” என்பது அவரது வாதம். 

இது ஐஸ்வர்யாவிற்கு வேண்டாத வேலை. விளையாட்டின் இடையே நட்பைப் பேணுவதும் பாரபட்சம் காட்டுவதும் முறையற்றது. மற்றவர்கள் சுட்டிக் காட்டியவுடன் வீம்பிற்காகவும் பாவனையாகவும் சில விஷயங்களை யாஷிகாவின் மீது போட்டார் ஐஸ்வர்யா. “எனக்கு பத்து மார்க்தானே போகும்? போகட்டும். நான் இதுக்கு வரமாட்டேன்’ என்று எரிச்சலாகி விலகிச் சென்றார் விஜி.

ஐஸ்வர்யா காக்கும்படியாக யாஷிகா ஒன்றும் குலைந்து போகவில்லை. அவர் வலிமையான போட்டியாளர் என்பதால் இந்தச் சவாலை தைரியமாகவே எதிர்கொண்டார். மற்றவர்கள் முகத்தை மூடிக் கொண்ட போது இவர் அப்படிச் செய்யாமல் பல சமயங்களில் முகத்தை நேராகவே வைத்து எதிர்கொண்டார். “அவங்க புடவையால முகத்தை மூடிக்கறாங்க. புடவைத் தலைப்பை வெட்டி விட்டுடலாம்” என்று இன்னொரு டெரரான ஐடியாவை செயல்படுத்தினார் விஜி. ஐஸ்வர்யா இந்த ஆலோசனைக்கு வராததால் அது தொடர்பான சர்ச்சையும் எழுந்தது. “நீ சும்மா இரு..’ என்று யாஷிகாவே கூறியும் ஐஸ்வர்யாவால் தன் பாசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பக்கம் அவரது நட்புணர்ச்சியை பாராட்டலாம் என்றாலும் அதைக் காட்டுவதற்கு இது சரியான சமயம் அல்ல. இந்த விஷயத்தில் வழக்கம் போல் ஐஸ்வர்யா சிறுபிள்ளைத்தனமாகவே நடந்து கொண்டார். 

“ஐஸ்பேக்குகளை காணோமே’ என்று விஜி எழுப்பிய கேள்வியும் பிறகு சர்ச்சையானது. மற்றவர்கள் அதை எடுக்காத நிலையில், ஐஸ்வர்யாதான் எடுத்து ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்கிற விஜியின் சந்தேகம் உண்மையானது. இது பற்றி நேராக கேட்கப்படும் போது திருதிருவென்று விழித்து மழுப்பலான பதிலைக் கூறினார் ஐஸ்வர்யா. “அண்ணன், கூப்பிடறன்லே.. வாம்மா..” என்ற அகிம்சை முறையை மறுபடியும் யாஷிகாவிடம் ஆரம்பித்தார் பாலாஜி. அது சரிவராத போது கடுப்பாகவும் தவறவில்லை. தேங்காய் நாரை காதில் விடலாம் என்ற ஐடியாவையும் முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால் கடுமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டாம் என்று ஒரு கட்டத்தில் பிக்பாஸ் தடுத்து விட்டார். ‘காதுக்குள்ள குச்சி விடலாம்’ என்றொரு சேம் சைட் கோல் ஐடியாவை ஐஸ்வர்யா தர, மற்றவர்கள் அதற்கு ஆட்சேபித்தனர்.

ஒருவழியாக சுமார் இரவு 09.30 மணிக்கு இந்த டாஸ்க் முடிவடைந்தது. விஜியைப் போலவே இரண்டு மணி நேரம் தாக்குப் பிடித்து இந்த டாஸ்க்கில் வென்றார் யாஷிகா. அபராதமான பத்து மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு மீதமுள்ள 110 மதிப்பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டது. அனைவரும் யாஷிகாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஐஸ்வர்யா தன் கழுத்தில் ஷால் அணிந்து கொண்டதை ரித்விகா மற்றவர்களிடம் ஆட்சேபம் தெரிவித்துக் கொண்டிருந்தார். முகத்தை மூடிக் கொள்வதற்கான உத்தியாக அவர் இதைப் பயன்படுத்தக்கூடும் என்பது அவர்களின் ஆட்சேபம். 

**

இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியில்லாத இரண்டு நபர்களை ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும் என்பது அடுத்த டாஸ்க். வலிமையான போட்டியாளராக இருந்தாலும் இடையில் வந்த காரணத்தினால் விஜியின் பெயர் நிறைய முறை பரிந்துரைக்கப்பட்டது. “எப்போது எந்த மனநிலையில் செயல்படுகிறார் என்று தெரியவில்லை, அடிக்கடி கோபமடைகிறார், நட்பு காரணமாக பாரபட்சம் காட்டுகிறார்’ போன்ற காரணத்தினால் ஐஸ்வர்யாவின் பெயரும் பல முறை சொல்லப்பட்டது. ‘டாஸ்குகளில் சிறப்பாக செயல்படுவதில்லை’ என்கிற காரணத்தினால் பாலாஜியின் பெயரும் சொல்லப்பட்டது. 

அடுத்ததாக யார் தலையில் என்ன ஊற்றுவார்களோ என்று மீதமிருந்தவர்கள் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்த போது ‘இன்று போய் நாளை வாராய்’ என்ற செய்தியுடன் விளக்கையணைத்தார் பிக்பாஸ். ‘அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்ள சேதாரம்னா’ என்கிற கதையாக, நாளை ஐஸ்வர்யா செய்யப்போகும் கூத்துகளை யூகிக்கும் போது இப்போதே கலவரமாக இருக்கிறது.