Published:Updated:

"அடுத்தது என்ன... நெருப்பா?! அடுத்த டாஸ்க் பார்சல்!" - பிக்பாஸ் மிட்நைட் மசாலா

தார்மிக் லீ

லிவ்விங் ஏரியாவில் இருந்த பிளாஸ்மா டிவிக்கு அருகில் முதலுதவிப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ரைட்டு, அடுத்த சம்பவம் பார்சல்! பிக்பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?

"அடுத்தது என்ன... நெருப்பா?! அடுத்த டாஸ்க் பார்சல்!" - பிக்பாஸ் மிட்நைட் மசாலா
"அடுத்தது என்ன... நெருப்பா?! அடுத்த டாஸ்க் பார்சல்!" - பிக்பாஸ் மிட்நைட் மசாலா

'எறியிறாய்ங்க. ஆனா எங்க இருந்து எறியிறாய்ங்கனு தெரியலையே!' என்று போட்டியாளர்கள் கேட்காத குறைதான். அந்தளவுக்கு டாஸ்க் என்று கூறிக்கொண்டு பிக்பாஸ் செய்யும் லூட்டிகள் படுபயங்கரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. `இவன் எப்போ பஸ்ஸர்ல இருந்து கையை எடுப்பான், குரல்வளையைக் கடிக்கலாம்' என்ற ரேஞ்சில் டாஸ்க் செய்பவரை மற்ற போட்டியாளர்கள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து  பிக்பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?!

* வழக்கம்போல, பாலாஜி சமையல் என்ற பெயரில் பாத்திரங்களை வைத்து குங்ஃபூ பயிற்சி செய்துகொண்டிருந்தார். போட்டியாளர்களுக்கு உண்மையிலேயே பாலாஜி செய்வதுதான் சாப்பாடா, இல்லை அண்டர்கிரவுண்ட் வழியாக தனியே எதுவும் ஸ்பெஷல் சாப்பாடு வருகிறதா என்பது தெரியவில்லை. ஏனென்றால், பாலாஜியின் சமையல் செய்முறைகளைப் பார்த்தாலே இரண்டு நாள்களுக்குப் பசிக்காது. அந்தளவுக்குப் புஜபல பராக்கிரமங்களோடு பயங்கர ஆக்ரோஷமாக சமையல் செய்துவருகிறார். இல்லை பாலாஜியின் சாப்பாடு இவர்களுக்கே பழகிவிட்டதுபோல!

* பல அணியாகப் பிரிந்து, பிக்பாஸ் போட்டியை விளையாடிக்கொண்டிருந்த போட்டியாளார்கள், தற்போது ஒன்றுகூடி கதை பேசி வருகின்றனர். ஆள்கள் குறையக் குறைய வீட்டுக்குள் ஒருமைப்பாடு உண்டாகியிருக்கிறது. இருந்த 6 போட்டியாளர்களும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பாட்டுப் போட்டி நடத்தி விளையாடிக்கொண்டிருந்தனர். பாலாஜி அனைவரையும் கிண்டல் செய்துகொண்டிருந்தார். `எங்க நீங்க பாடுங்க' என்று பாலாஜி விட்டெறிந்த குண்டுகளை ரிட்டர்ன் செய்தார், விஜயலட்சுமி. `அது வந்து... அதாவது... இப்போ நான் என்ன பாடுறது...' என்று வடிவேலுபோல மலுப்பிக்கொண்டிருந்தார். தட், `உனக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா!' மொமன்ட்.

* நேற்றுவரை விஜயலட்சுமி, யாஷிகா, ஜனனி மட்டுமே பஸ்ஸர் டாஸ்க்கை விளையாடியிருந்தார்கள். அதன்பின் அனைவரும் அந்த டாஸ்க்கை செய்துவிட்டது, ஸ்கோர் போர்டு மூலம் தெரியவந்தது. யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பாயின்ட்டில் சம நிலையில் இருந்தனர். ஜனனி நேற்றே அந்த டாஸ்க்கை செய்யாததால், புள்ளிப் பட்டியலில் பின்தங்கியே இருந்தார். ரித்விகா டாஸ்க்கை சரிவர விளையாடவில்லைபோல. இருப்பதிலேயே, ஜனனியும் பாலாஜியும்தான் குறைவான புள்ளிகளோடு இருந்தனர். ஒருவேளை, பாலாஜி டாஸ்க்கை இன்னும் செய்யவில்லையா என்பது தெரியவில்லை. 

* பாலாஜியின் சமையல் முறையைப் பார்த்த ஐஸ்வர்யா, என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அவரே அவருக்கான தோசைகளை சுடத் தொடங்கினார். தோசைக் கல்லை வைத்துதான் குத்து மதிப்பாக அது தோசை எனச் சொல்லமுடிகிறது. அவர் சுடும் தோசை எங்கோ சென்று எப்படி எப்படியோ ரவுண்டானது. தோசையில் `தோ'வை நீக்கி `சை' என்றானது. அந்தளவு அலங்கோலமான ஒரு தோசையை ஊற்றி, தானே சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பாலாஜியின் சமையல் மீது அவ்வளவு வெறுப்பா... ஓ மை காட்!

* இதற்கிடையே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது. போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்திருந்தபோது, வீட்டின் வாசலையும் ஜன்னல்களையும் ஸ்க்ரீன்களால் மூடினர். சிலபல அரட்டைகளுக்குப் பிறகு ஸ்க்ரீன் திறக்கப்பட்டது. `அடுத்தது என்ன நெருப்பா...' என்று நரசிம்மா விஜயகாந்த் ஸ்டைலில்தான் அடுத்த டாஸ்கிற்காகக் காத்துக்கொண்டிருக்கினர், போட்டியாளர்கள். நினைத்தது போலவே, ஒரு புது ஐட்டத்தைப் பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி எறிந்திருக்கிறார்போல. லிவ்விங் ஏரியாவில் இருந்த பிளாஸ்மா டிவிக்கு அருகில் முதலுதவிப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ரைட்டு, அடுத்த சம்பவம் பார்சல்! 

`போட்டியாளர்களைக் கொல்லும் நிலைக்கு ஆளாக்கிவிட்டு, அந்த முதலுதவிப் பெட்டியை வைத்து மருத்துவ உதவி செய்யவேண்டும். இதான் அடுத்த டாஸ்க்..!' என்று பிக்பாஸ் சொன்னாலும், ஆச்சர்யம் இல்லை. அதைப் போட்டியாளர்கள் செய்துமுடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆகா...!