Published:Updated:

``என்னை அழ விடுங்க..!" ஐஸ்வர்யாவைப் பின்னியெடுத்த விஜி #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
``என்னை அழ விடுங்க..!" ஐஸ்வர்யாவைப் பின்னியெடுத்த விஜி #BiggBossTamil2
``என்னை அழ விடுங்க..!" ஐஸ்வர்யாவைப் பின்னியெடுத்த விஜி #BiggBossTamil2

‘அனைத்துக் கடினமான விஷயங்களுக்கும் ஓர் எளிமையான தீர்வு உண்டு’ என்றொரு பழமொழி இருக்கிறது. பெண் என்பவள் சக்தியின் வடிவம்; மனவுறுதியின் அடையாளம் என்பதெல்லாம் ஒருபக்கம் உண்மைதான் என்றாலும் அவர்களை விளையாட்டுக்காக அச்சுறுத்த ஓர் எளிமையான வழியுண்டு. ஆம், கெத்தான பெண்மணியாக இருந்தாலும் டெரரான ஆண்களுக்குகூட அஞ்சாதவர்கள் இந்த விஷயத்துக்கு நிச்சயம் அஞ்சுவார்கள். பல்லி, கரப்பான்பூச்சி போன்ற எளிய ஆயுதங்களே அவை. ஒரு கரப்பானைப் பார்த்தவுடன் வாயில் வைத்து வீல் என்று அலறாத பெண்ணை இதுவரையும் நான் பார்த்ததில்லை. சரி, இந்த வர்ணனை மிகைதான் என்றாலும் அடிப்படையில் பெரும்பாலும் உண்மை. அதென்னமோ, கரப்பான் பூச்சிக்கும் பெண் குலத்துக்கும் பூர்வாந்திரமான நூற்றாண்டுக்கால விரோதம் உள்ளது.  கரப்பானுக்கு மீசையிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். 

எண்ணங்களின் வழியாகவே ஒருவரை அழுத்தமாக அச்சுறுத்த முடியும் என்பது தொடர்பான உளவியல் பரிசோதனைகள் ஏராளமாக நிகழ்ந்திருக்கின்றன. தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் ஒரு விஷயத்தை உங்கள் மனதில் பதிய வைப்பதின் மூலம் அது உண்மையென்று நம்ப வைக்க முடியும். தண்டனைக்காக ஒருவரை முன்கூட்டியே மெல்ல மெல்ல தயார்ப்படுத்தினால், உடல் அடையக்கூடிய துன்பத்தை விடவும் மனதின் துன்பம் அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள ஒருவரிடம், ‘உங்கள் கையின் மீது காய்ச்சப்பட்ட கம்பியை வைத்து மெலிதாகச் சூடு போடப் போகிறோம்’ என்பது போல் தொடர்ச்சியாக அவரிடம் பேசி அவர் மனதில் அந்த விஷயத்தை ஆழமாக பதிய வைத்திருக்கிறார்கள்; மனதளவில் அவரை தயார்ப்படுத்தியிருக்கிறார்கள். இறுதிக்கட்டம் வந்ததும், சூடான கம்பிக்குப் பதிலாக ஒரு சாதாரண பென்சிலை அவர் மீது வைத்திருக்கிறார்கள். நம்பினால் நம்புங்கள், சூடான கம்பியை வைத்தால் உடல் எவ்வாறு எதிர்வினை செய்யுமோ அப்படியே அவருக்குக் கொப்புளம் உருவாகியது. 

எதற்காக இந்த வியாக்கியானம் எனில், பிக்பாஸில் நடந்த ‘அபிஷேக’ டாஸ்க்கில் ‘ப்ளீச்.. ப்ளீச்’ என்று தண்ணீர் வீசியது மற்றும் விநோதமான திரவங்களை தயாரித்து ஊற்றியதற்குப் பதிலாக ஒரு பல்லியோ அல்லது கரப்பான்பூச்சியோ கையில் இருப்பது போன்று தொடர்ந்து பேசி நம்ப வைத்து பிறகு ஏதோவொன்றை கழுத்தின் பின்புறம் போட்டிருந்தால் பெண் போட்டியாளர்கள் அலறியடித்துக் கொண்டு கையை எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. (இதே உத்தியை முன்பு மஹத் பாவனை செய்ததும் மும்தாஜ் அதற்கு அலறியதும் நினைவில் இருக்கலாம்). 

**

93-ம் நாள். ‘கத்தி’ படத்திலிருந்து ‘பக்கம் வந்து முத்தங்கள் தா’ என்ற பாடலைப் போட்டார்கள். அடுத்த போட்டியாளருக்கு எப்படியெல்லாம் இடையூறு செய்யலாம் என்பதை காலையிலிருந்தே யோசிக்கத் தொடங்கிவிட்டார் ‘இம்சை திலகம்’ விஜயலஷ்மி. யாஷிகாவையும் இதற்காக கூட்டணியில் இணைத்துக்கொண்டார். ‘ 3 கிலோ பருப்பு பாக்கெட்டை கையில் கட்டி விட்டோமென்றால் வலி தாங்காமல் கையை எடுத்துவிடுவார்கள்’ என்பது இவரின் அடுத்த கொடூர ஐடியா. பிக்பாஸ் கோடு போட்டால் அதில் 8 வழிச் சாலையே போடுமளவுக்கு அம்மணி ‘டெரராக’ இருக்கிறார். இவருக்கு சீரியல்களில் சிறந்த வில்லி வேஷம் கிடைக்கக்கூடும். ‘நீ என்ன பெரிய பருப்பா?” என்று கேட்கப்படும் உரையாடலுக்கு இன்றுதான் பொருள் புரிந்தது. 

பிக்பாஸ் வீட்டைப் புகுந்த வீடாகவே யாஷிகா கருதிக்கொண்டார் போலிருக்கிறது. ‘இந்த வீட்ல நெறய சிரிச்சிருக்கேன். அழுதிருக்கேன். இத்தனை நாள் புடவை கட்டினதெல்லாம் இங்கதான். இன்னமும் 4 நாள்தான் இருக்கு. எளிதில் விட்டுத்தரமாட்டேன். என்னோட நூறு சதவிகிதத்தை தந்திருக்கேன். இந்த வீ்ட்டை மிஸ் பண்ணுவேன்’ என்றெல்லாம் கேமராவைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார். 

காலை சுமார் 11 மணிக்கு ஐஸ்வர்யாவுக்கு அழைப்பு வந்தது. இதற்காகத் தயாராக இருந்தவர் பஸ்ஸரின் மேல் கையை வைத்தார். உடனே தன் பருப்பு மூட்டை ஐடியாவை செயல்படுத்தத் தொடங்கினார் விஜி. இந்தச் சடங்கின் முதல் சம்பிரதாயமாக கையின் மேல் எண்ணைய்யை ஊற்றினர். பிறகு நீர் அபிஷேகம். சபரிமலைக்கு கொண்டு செல்லும் இருமுடி மூட்டை மாதிரி பருப்புமூட்டையை கொண்டு வந்து ஐஸ்வர்யாவின் கையில் கட்டினார் விஜி. மற்றவர்கள் தலையைக் குனிந்து முகத்தை மூடிக்கொள்ளும் போது ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் மட்டும் பெரும்பாலும் முகத்தை நிமிர்த்தி வீசப்படும் நீரை வாங்கிக்கொண்டனர். (அப்ப.. முறத்தால புலியை விரட்டின கதையெல்லாம் சும்மாவா?!) ஐஸ்வர்யாவின் கழுத்தின் மேல் டவல்களைக் கட்டி அதன் மேல் நீரை ஊற்றினர். “நனைஞ்சா துடைக்க டவல் தருவோம். இங்க டவலையே நனைச்சு வெச்சிருக்கோம் பார்த்தியா?” என்று கவிதை மாதிரியான நகைச்சுவை ஒன்றை சொன்னார் பாலாஜி. ஏதோவொரு பூச்சியைக் கொண்டு வந்து போட்ட ஜனனியை பூச்சி மாதிரி அலட்சியமாகப் பார்த்தார் ஐஸ்வர்யா. 

மேலும் பல சுமைகளை விஜி கொண்டு வந்து கட்ட முயலும் போது ‘தொடக்கூடாது’ என்று ஆட்சேபணை செய்தார் ஐஸ்வர்யா. ‘நான் தொடவில்லை’ என்று பதிலுக்கு மல்லுக்கட்டினார் விஜி. (கையில் சுமை கட்டப்படும் போதே போட்டியாளர் அதைக் கழற்றிப் போடலாம் என்று நினைக்கிறேன். அடிவாங்கும் பாட்ஷா மாதிரி புன்னகையுடன் அப்போது ஏற்றுக்கொள்வது ஏன்? என்பது புரியவில்லை!) வழக்கம் போல், சோப்பு நுரை, க்ரீம், விநோத திரவங்களின் அபிஷேகங்களும் நடந்தன. 

இந்த டாஸ்க்கின் ‘வெப்பன் சப்ளையர்’ என்று ஜனனியைச் சொல்லலாம். (டேனி... எங்கப்பா இருக்க... நல்லா சொல்லிட்டுப் போனே... டைட்டிலு!). வில்லன்களுக்காகப் பணிபுரியும் விஞ்ஞானிகள் மாதிரி சமையல் அறைக்குச் சென்று விதம்விதமான திரவங்களை தயார் செய்து எடுத்து வந்தார். விஜி தண்ணீரை விசிறியடிக்கும் போது மக் இரண்டு முறை ஐஸ்வர்யாவின் மீது விழ அதற்கொரு சண்டை நடந்தது. 

பஸ்ஸர் கையின் மீது இரண்டு மூன்று டவல் போன்றவற்றைக் கட்டியது போதாதென்று பிளாஸ்டிக் பையைக் கட்டி அதன் வழியாக தண்ணீர் ஊற்றினர். (இந்த வகையில் விஜிக்கு நோபல் பரிசு கூட தரலாம்). பளு தாங்காமல் சிலதைப் பிடுங்கிப் போட்டார் ஐஸ்வர்யா. என்றாலும் விடாமல் அவற்றை மறுபடியும் கொண்டு வந்து கதறக் கதற கட்டினார் விஜி. எனவே அவற்றைக் கழற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் பளு தாங்காமல் கையை எடுத்துவிட்டார். ‘வெற்றி... வெற்றி...’ எனக் கூவி மகிழந்தது விஜி கூட்டணி. 

‘எல்லோருக்கும் ஒருவழி என்றால் ஐஸ்வர்யாவுக்குத் தனிவழிதானே?’ எனவே அவர் என்ன செய்யப் போகிறாரோ என்று மற்றவர்கள் நினைத்தபடியே ஆயிற்று. புகையறைக்குள் மறைந்துகொண்ட ஐஸ்வர்யா ஓவென்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினார். ‘நான் பாயின்ட்ஸ்க்காக அழல. எனக்குக் கை வலிக்குது. உடல் ரீதியா என்னைத் துன்புறுத்தறீங்க. எல்லோரும் வெளியே போங்க.” என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லத் தொடங்கினார். “பாரு... ஐஸூ… எனக்கும் இதுதான் செய்யப் போறாங்க.” என்று சமாதானம் சொல்ல வந்த ரித்விகாவின் பேச்சையும் அவர் கேட்கவில்லை. “உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் மகளே!’ என்பது போல் ஓரமாக நின்றிருந்தார் யாஷிகா. “எங்களுக்கும்தான் வலிச்சது. காதுல கோலப்பொடியெல்லாம் போட்டாங்க. நாங்க பொறுத்துக்கல. என்ன இவ மட்டும் ஓவரா சீன் போடறா?” என்று குமுறிய விஜியை, ‘சரி. இப்ப விடு… அவ கூட கூட பேச வேண்டாம்’ என்று சமாதானப்படுத்தினார் பாலாஜி. 

கீழே விழுந்த குழந்தையை நெருங்கிச் சென்று நாம் பல்வேறு விதமாக சமாதானப்படுத்தினால்தான் அது இன்னமும் உரக்க அழும். யாரும் கவனிக்காமல் இருப்பது போல் விட்டால் அதுவாகவே சிறிது நேரத்தில் எழுந்து நடந்து செல்லும். அதைப் போலத்தான் ஐஸ்வர்யாவின் நிலைமையும் இருந்தது. அவருடைய சிறுபிள்ளைத்தனத்தின் உச்சம் என்று இந்த அழுகையைச் சொல்லலாம். பிக்பாஸின் பல நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்தவர், அதுபற்றி பல சமயங்களில் மற்றவர்களிடம் சொன்னவருக்கு இப்படியொரு வலியைத் தாங்கும் டாஸ்க் வரும் என்று தெரியாதா, மற்றவர்களுக்கு நடக்கும் போது இவர் பார்க்கவில்லையா, அதில் உற்சாகமாக கலந்துகொள்ளவில்லையா என்று பல கேள்விகள் எழுகின்றன. 

தான் தோற்றதை விடவும் எதிர்த்தரப்பின் இடையூறுகளில் விழுந்து அவர்களின் முன்னால் தோற்றுவிட்டோமே என்கிற மனவலிதான் அவருக்கு அதிகம் இருக்கும் போலிருக்கிறது. ஜனனி சொன்னது போல “யாஷிகா மட்டும் இருக்கட்டும். நாம போகலாம்’ என்று சொன்னது சரியான ஆலோசனை. ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தியதில் அனைவருமே கரிசனம் காட்டியது அழகான விஷயம். ‘அதையே நினைச்சிட்டிருக்காத’ என்று பின்பு யாஷிகாவும் தனிமையில் சமாதானப்படுத்தினார். அரை மணி நேரம் தாக்குப் பிடித்தற்காக ஐஸ்வர்யாவுக்கு 20 மதிப்பெண் வழங்கப்பட்டது. சிறிது நேரத்துக்குள் பழைய மனநிலைக்குத் திரும்பி விட்டார் ஐஸ்வர்யா. இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்!

‘பாலாஜி அண்ணாவுக்கு உடம்பெல்லாம் துணி சுத்தி மம்மி மாதிரி ஆக்கிடலாமா?, தலைல தேங்காய் உடைக்கலாமா?’ என்றெல்லாம் ‘டெரர் திலகங்களான’ யாஷிகாவும் விஜியும் கொடூர ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். பக்கத்திலிருந்த பாலாஜி ஜாலியாக ‘ஜெர்க்’ ஆனார். “கதவைத் திறந்துவிடுங்க... இப்படியே ஓடிப் போயிடறேன்” என்பதை அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். 

அடுத்த பலியாடாக ரித்விகா அழைக்கப்பட்டார். ‘டார்ச்சர் ராணி’ விஜியின் தலைமையில் வழக்கமான சம்பிரதாயங்கள் ஆரம்பம் ஆகின. ஐஸ்வர்யாவும் இந்தச் சடங்கில் உற்சாகமாகக் கலந்துகொண்டார். (உனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குத் தக்காளிச் சட்னி!). பிரசவ வார்டு நர்ஸ் போல ‘வெப்பன் சப்ளையர்’ ஜனனி, சமையல் அறைக்கும் ஆபரேஷன் அறைக்கும் இடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருந்தார். அதிக நேரம் தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்த்த ரித்விகா, பளு தாங்காமல் விரைவிலேயே கையை எடுத்து விட்டார். மற்றவர்களின் டார்ச்சர்களை தொடர்ந்து பார்த்த விளைவாகக் கூட இருக்கும். 

ஆக கடைசி பலியாடு பாலாஜி. இவருக்கு அதிகம் சிரமப்படவே தேவையில்லை. எந்தவொரு டாஸ்க்கிலும் ஆர்வமில்லாத பாலாஜி மிக எளிமையான டார்க்கெட். ‘நீங்க என் மேல தண்ணி ஊத்தறதை வீட்ல பொண்ணு பார்ப்பா” என்று அவர் சொல்லிக்கொண்டிருந்த போது “யாரு தண்ணி ஊத்தப் போறது?” என்று யாஷிகா கேட்க, ‘ஓ… அப்ப எனக்கு வேற அயிட்டம் வெச்சிருக்கீங்களா?” என்று டெரர் ஆனார் பாலாஜி. அவர் கையில் கட்டியிருந்த கயிறு இதற்கு வாகாக இருக்கும் என்று சொல்லப்பட, பதற்றத்துடன் அதைக் கழற்ற முயற்சி செய்யும்போதே பிக்பாஸ் கூப்பிட பலிபீடத்துக்குச் சென்றார் பாலாஜி. வழக்கமான அயிட்டங்களுடன் ஒரு பக்கெட்டையே கொண்டு வந்து கையில் கட்டினார்கள். (அடுத்த போட்டியாளர் இருந்தால் ‘வாட்டர் டாங்க்கை’ கொண்டு வந்து விஜி கட்டியிருப்பார் போல). தலையணை, தண்ணீர் என்று விதம்விதமான பொருள்களை கல்லாப்பெட்டிக்குள் போட்டார்கள். எந்த வில்லங்கமும் இல்லாமல் சிரிக்கச் சிரிக்க நடந்த டாஸ்க் பாலாஜியுடையது மட்டுமே. ‘கொலைகாரப் பாவிங்களா’ என்று அலறினார் பாலாஜி. 

முகத்தில் ஆவேசமாக தண்ணீர் விசிறிய ஜனனியைப் பார்த்து ‘சிட்டுக்கு ஒரு சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்று பாலாஜி பாடாத குறைதான். இவர்களின் அலப்பறை தாங்காமல் விரைவிலேயே கையை எடுத்தார் பாலாஜி. ‘அடிச்சிட்டீங்க இல்லையா... இனி ஒருத்தன் என் முன்னாடி நிக்கக் கூடாது. கிளம்புங்க” என்கிற வீறாப்பு வேறு. பிறகு, ‘படுத்தே விட்டானய்யா’ என்கிற மோடில் அப்படியே தரையில் மல்லாக்காக சாய்ந்து விட்டார். அனைவரும் இவரைக் கிண்டலடித்து மகிழ்ந்தனர். இவர்களின் கிண்டலுக்கு ஜாலியாக ஒத்துழைத்தார் பாலாஜி. 

ஆக.. ‘அடிச்சான் பாரு பஸ்ஸரை’ டாஸ்க்கில் விஜியும், யாஷிகாவும் முன்னணியில் இருந்தனர். அடுத்த டாஸ்க், ‘ஞாபகம் வருகிறதா?” இதுவொரு சுவாரஸ்யமான போட்டி. விதம் விதமான நிறங்களில் உள்ள சிறிய பலகைகள் தரப்படும். சில குறிப்பிட்ட நிறங்களை வரிசையாக அறிவிப்பார்கள். அதைச் சரியாக நினைவில் வைத்துக்கொண்டு பலகைகளை அதே நிற வரிசையில் அடுக்க வேண்டும். இடையில் கவனத்தைக் கலைப்பதற்காகப் பாடல்கள் போடுவார்கள். அதில் திசை திரும்பாமல் நிறங்களை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஞாபக சக்தியை சோதிக்கும் விளையாட்டு இது. ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் நிறங்களின் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டே போகும். (இந்த டாஸ்க்கிற்காக ‘திருவனந்தபுரம் செல்லும் ரயில் மூன்றாம் பிளாட்பாரத்தில் வந்து நிற்கும்’ என்பது போன்ற இனிமையான பெண் குரல் அறிவிப்பின் வழியாக ஒலித்தது. அந்த ‘கரகர’ உலோகக் குரலை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு இனி இதையே பயன்படுத்தலாம்). 

முதல் சுற்றை எளிமையாகக் கடந்த போட்டியாளர்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் நிறங்களின் எண்ணிக்கை கூடியதாலும், இடையில் பாடல்கள் ஒலித்தாலும் நிறங்களை வரிசைப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறினர். இதற்குத் தோதாக ‘நிறங்களின் பெயர்கள்’ வரும் சரியான பாடலைத் தேர்ந்தெடுத்து போட்டது பிக்பாஸின் பயங்கர குறும்பு. ‘வொய் திஸ் கொலைவெறி பாடலில்’.. மூணு கலரு வொயிட்டு .. நைட்டு கலரு பிளாக்கு’ என்றெல்லாம் வில்லங்கமான வரிகள் வர, போட்டியாளர்கள் குழம்பினர். (வொய் திஸ் கொலைவெறி பிக்பாஸ்?!)

 பாடலுக்கு ரகளையாக நடனமாடினாலும் ஏதோவோர் உத்தியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடினார் ஐஸ்வர்யா. வழக்கம் போல் பாலாஜி இந்த டாஸ்க்கையும் சிரத்தையின்றி விளையாட்டாகவே அணுகினார். ‘வாழ்க்கைல ஜெயிக்கறதுதான் முக்கியம். என் பொண்ணு விளையாடற விளையாட்டையெல்லாம் என்னை விளையாடச் சொல்றாங்க. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. ராஸ்கல்ஸ்” என்கிற வீறாப்பு வேறு. 

யாஷிகா வெற்றி பெறுவதற்கு, ஐஸ்வர்யா உதவுகிறார் என்ற புகாரை முன்வைத்தார் விஜி. “இது புத்தி சம்பந்தப்பட்ட விஷயம். அவங்க ஜெயிக்க வாய்ப்பேயில்லை’ என்று புகையறையில் ரகசியமாக கிண்டலடித்துக்கொண்டிருந்தார் யாஷிகா. இந்த விளையாட்டின் இறுதியில் அதிகப் புள்ளிகளைப் பெற்றார் ஐஸ்வர்யா. இதன் மூலம் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஒரே மதிப்பெண்ணோடு முன்னணியில் இருந்தனர். ‘நம்ம ஜெயிச்சதைப் பார்த்து ஜனனிக்கும் விஜயலட்சுமிக்கும் பொறாமை’ என்று ரகசியமாகச் சொல்லி சிரித்து மகிழ்ந்தார் யாஷிகா. “இந்த விளையாட்டில ஐஸ்வர்யாவுக்கு லட்டு மாதிரி பாயின்ட் கிடைச்சுது. பஸ்ஸர் டாஸ்க்ல அவ்ள கஷ்டப்பட்டதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆயிடுச்சு” என்று அனத்திக்கொண்டிருந்தார் ஜனனி. “எனக்கு எண்பது பாயின்ட் கிடைச்சதே அதிசயம்” என்று தன் புண்ணுக்கு தானே மருந்து தடவிக்கொண்டிருந்தார் விஜி. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

**

சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட இனிமையான மற்றும் கசப்பான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது அடுத்த டாஸ்க். ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளருடன் நிகழ்ந்த இனிமையான மற்றும் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்தனர். ‘நான் வைல்ட் கார்ட்ல வந்ததை எல்லோருமே புகாரா சொல்றதுதான் லைட்டா வலிக்குது” என்று நியாயமான காரணத்தைச் சொன்னார் விஜி. “யார் மேலயும் எனக்கு எந்தப் புகாரும் இல்லை’ என்று ஜென் குருவாக மாறினார் யாஷிகா. ‘ராணி மகாராணி’ டாஸ்க்ல ஐஸ்வர்யாவைப் பார்த்த போதுதான் பயமா இருந்தது” என்றார் ஜனனி. அந்த வீ்ட்டின் ஒரே ஆண்மகனான பாலாஜியை ‘கடைக்குட்டி சிங்கத்தோடு’ ஒப்பிட்ட காட்சியோடு இன்றைய நாள் முடிவடைந்தது. 

மதிப்பெண் அடிப்படையில் மிகவும் பலவீனமாக இருப்பவர் பாலாஜி. மைனஸ் பத்தில் இருக்கிறார். (நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்துக்காகவும் நகைச்சுவைக்காகவும்தான் பாலாஜியை இத்தனை தூரம் கடத்தி பாதுகாப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது). ஆனால் கடந்த சீஸனில், ஆரத்தி மற்றும் கணேஷ் அடைந்த சித்ரவதைகளோடு ஒப்பிடும் போது இந்த சீஸனின் கொடூரங்கள் குறைவுதான். ஆனால் அமைதிக்குப் பின் புயல் வரலாம். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
 

சுரேஷ் கண்ணன்