வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (21/09/2018)

கடைசி தொடர்பு:20:42 (21/09/2018)

ரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்! #BiggBossTamil2

ரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்! #BiggBossTamil2

``இத்தனை நாள் வாங்கின சம்பளத்துக்கு இன்னிக்குத்தான் நீ வியர்வை சிந்த உழைச்சிருக்கே” என்று சில முதலாளிகள் சொல்வதைப் போல, இன்றுதான் பிக்பாஸ் போட்டியில் ரத்தம் சிந்த போட்டியாளர்கள் டாஸ்க் செய்தார்கள். என்னதான் மூடி மழுப்பினாலும் வடக்கு x தெற்கு என்கிற பிரிவு பல தருணங்களில் தன்னிச்சையாக வெளிப்படுகிறது. அதிலும் விஜயலட்சுமியின் வருகைக்குப் பிறகு இது வெளிப்படையான அனலாகத் தெறிக்கிறது. 

95-ம் நாள் காலை. பிக்பாஸ் வீட்டில் இன்றுதான் மிக மிகப் பொருத்தமான பாடலைப் போட்டார்கள். ஆடுகளம் திரைப்படத்திலிருந்து ‘வாழ்க்கை ஒரு போர்க்களம்’ என்கிற ரணகளமான பாடல் ஒலிபரப்பானது. வீட்டின் சூழலுக்கும் அது சாலப் பொருத்தமானது. 

விஜயலட்சுமி - Bigg Boss Tamil

‘இணைந்த கைகள்’ என்றொரு சுவாரஸ்யமான டாஸ்கை காலையிலேயே ஆரம்பித்தார், பிக்பாஸ். போட்டியாளர்கள் வட்டமாக நிற்க வேண்டும். சதுரப் பலகைகள் தரப்படும். அந்தப் பலகையை ஒவ்வொரு போட்டியாளரும் வலது மற்றும் இடது கையினால் இன்னொரு போட்டியாளர் கையின் இடையில் வைத்து கீழே விழாதவாறு அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். பலகையை, விரல்களை உபயோகப்படுத்திப் பிடிக்கக் கூடாது. கைகளுக்கு இடையே தரப்படும் அழுத்தத்தின் மூலம் பலகை விழாதவாறு பிடிக்க வேண்டும். 2 நபரின் உடன்பாட்டோடுதான் இது நிற்கும். ஒருவர் கை சளைத்து பலகையைவிட்டால் அவர் அவுட். “ஐஸ்வர்யாவை அந்தப் பக்கம் நிக்க வெச்சுடலாம். அவளுக்கு லெஃப்ட் கைதான் ஸ்ட்ராங். வெயிட் அந்தப் பக்கம் வரும்” என்று போட்டிக்கு முன்பே விதவிதமான ஐடியாக்களோடு டெரராக யோசித்துக்கொண்டிருந்த விஜியைப் பார்த்து மிரண்டு போய் நின்றிருந்தார், ரித்விகா. உத்தியிலேயே தூங்கி உத்தியையே சாப்பிட்டு உத்தியிலேயே விஜி வாழ்கிறார் போல. இதை அறியாத பாலாஜி பின்பு டாஸ்க் நடக்கும்போது "த்தூ.. இதுக்கெல்லாம் ஸ்ட்ராட்டஜியா?” என்றார். 

டாஸ்க் ஆரம்பித்தது. வட்டமாக நின்று, தரப்பட்டிருக்கும் சதுரப்பலகையை தேர்தல் கூட்டணி மாதிரி ஒருவருக்கொருவர் ஆதரவில் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சலிப்புறக் கூடாது என்பதற்காக நகைச்சுவையும் பாடலுமாக அமர்க்களப்பட்டது. மிக வலிமையான போட்டியாளராகக் கருதப்படும் யாஷிகா, முதலிலேயே துவண்டுபோய் ‘தான் வெளியேறுவதாக’ கையை எடுத்துவிட்டார். “அப்ப நீங்க சும்மாதானே இருக்கப் போறீங்க? நீங்கதான் நடுவர்” என்று அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார் பிக்பாஸ். (முதலாளின்னா சும்மாவா?!) 

‘கொஞ்சம் பிடிங்க அட்ஜட்ஜ் பண்ணிக்கறேன்’ என்பது போல் ஐஸ்வர்யாவின் கை வளைந்து செல்ல, “ஏய் என்ன பண்றே?” என்று அலறினார் விஜி. ஜனனியால் தாக்குப் பிடிக்க முடியாததால் அவரும் வெளியேற, பிறகு விஜியும் வெளியேறினார். இப்போது களத்தில் ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் பாலாஜி மட்டுமே. ``நீ எதுக்கு ஐஸ்வர்யா பக்கம் பிடிச்சிட்டிருக்கே. விட்டுடு. அப்பதான் டாஸ்க் சீக்கிரம் முடியும்” என்பதுபோல் ‘ஐடியா திலகம்’ விஜி யோசனை சொல்ல ஐஸ்வர்யாவும் வெளியேறினார். மிஞ்சியவர்கள் பாலாஜியும் ரித்விகாவும். சிறிது நேரத்திலேயே ரித்விகாவினால் தாக்குப் பிடிக்க முடியாமல் போக பாலாஜி வெற்றி பெற்றார். பிக்பாஸ் வரலாற்றிலேயே பாலாஜி வெற்றி பெற்ற முதல் டாஸ்க் இது என்பதை பொன்னெழுத்துகளில் பொறித்து வைக்கலாம். 

Bigg Boss Tamil

ஒரே மாவை வைத்து விதவிதமாக தோசை சுடுவதைப் போல ஒரே மாதிரியான டாஸ்க்குகளை வெவ்வேறு வடிவத்தில் தந்து சலிப்பேற்றுகிறார், பிக்பாஸ். அடுத்த டாஸ்க் ஏற்கெனவே பல முறை வந்ததுதான். ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளரைப் பற்றிய நேர்மறையான மற்றும் எதிர்மறையான அபிப்பிராயங்களைக் கூற வேண்டும். 

ஒரு மாதிரியாக அனைவரின் கருத்துகளையும் ஏறத்தாழ தொகுத்துப் பார்த்தால் இப்படித்தான் வருகிறது. ரித்விகாவிடம் பிடித்தது அவருடைய பொறுமையும் நேர்மையும். பிடிக்காதது, வெளிப்படையாக இருக்காதது. பாலாஜியிடம் பிடித்தது அவருடைய நகைச்சுவையுணர்வு, அரவணைப்பு போன்றவை. பிடிக்காதது கோபம் மற்றும் டாஸ்க்குகளில் முனைப்பாகப் பங்கேற்காமை. விஜயலட்சுமியின் புன்னகை பெரும்பாலானோர்க்குப் பிடித்திருக்கிறதாம். (நீ பார்த்தே?!) பிடிக்காதது டாஸ்க்குகளில் அவர் கொலைவெறியுடன் ஈடுபடுவதாம். யாஷிகாவிடம் பிடித்தது டாஸ்குகளில் வலிமையாகச் செயல்படுவது. பிடிக்காதது குழுத்தன்மையால் தனித்தன்மையை இழப்பது. ஐஸ்வர்யாவிடம் பிடித்ததும் அவருடைய ஸ்மைல்தானாம். (பார்றா!) பிடிக்காதது அவருடைய கோபமும் சார்புத்தன்மையும். 

‘பாலாஜியைப் பற்றி ஒரு நெகட்டிவ் விஷயம் சொல்ல மறந்துட்டேன்’ என்று கடைசியில் துள்ளி வந்த ஜனனி, ‘சமையல் அறையில் எந்தப் பொருள்களையும் எடுக்க விடமாட்டேன்கிறார். கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். ரொம்பக் கஞ்சம்’ என்று அவர் ஜாலியாகப் புகார் சொல்ல, சங்கடத்தில் நெளிந்தார், பாலாஜி. ஜனனி சொன்னதை பிறகு அனைவருமே ஆமோதித்தார்கள். உண்மையில் இதை ஆரம்பித்து வைத்தது யாஷிகாதான். டாஸ்க்கின் போது “பாலாஜியண்ணா என்னை பால்பாக்கெட், ஆப்பிள் திருட வந்த பொண்ணு மாதிரியே பார்ப்பாரு” என்று தொடங்கி வைத்ததை மற்றவர்கள் பிறகு உற்சாகமாக தொடர்ந்தனர். ‘அஞ்சாநெஞ்சன், கஞ்சன் பாலாஜி’ என்று விருது தந்தார், விஜி. (மதுரைப்பக்கம் போய்ச் சொல்லிடாதீங்க!) 

‘மாஸ்டர்... ஸ்ட்ராங்கா ரெண்டு, லைட்டா ஒரு டீ” என்று டீக்கடைகளில் ஆர்டர் செய்தைப் போல, பெண்கள் அனைவரும் படுத்துக்கொண்டு பாலாஜிக்கு உத்தரவு போட, மனிதரும் சளைக்காமல் அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தது அழகான காட்சி. 

Bigg Boss Tamil

**

அடுத்து தொடங்கியது அந்த ரணகளமான டாஸ்க். ‘மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை’ என்று வைரமுத்து எழுதியதைப் போலவே மண்ணுக்காக அடித்துக்கொண்ட சண்டைகள் உலக வரலாற்றில் ஏராளம். இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிற அந்தப் போரின் ஒரு மினி வெர்ஷனை பிக்பாஸ் ஏற்பாடு செய்திருந்தார். போட்டியாளர்கள் மண்ணுக்காக அடித்துக்கொள்ள வேண்டும். 

ஆறு டவர்களில் வெவ்வேறு அளவுகளில் மண் இருக்கும். மேலே மூடியும் கீழே லிவரும் இருக்கும். லிவரைத் திறந்தால் மண் கொட்டும். போட்டியாளர்கள் தங்கள் மண்ணைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே சமயத்தில் எதிராளிகளின் மணலைப் பறித்து கீழே கொட்ட வேண்டும். இதன் மூலம் மற்றவர்களின் மணல் அளவைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இறுதியில் எவருடைய மணலின் அளவு அதிகமாக இருக்கிறதோ அவரே வெற்றியாளர். மற்றவர்களுக்கு அவரவர்களின் அளவுக்கேற்ப மதிப்பெண் வழங்கப்படும். 

மணல் வெவ்வேறு அளவுகளில் இருந்ததால் குலுக்கல் முறையின் மூலம் டவர்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஐஸ்வர்யா டவரில் இருந்த மண்ணின் அளவு குறைவாக இருந்தது. பாலாஜிக்கு அதிக அளவு இருந்த அதிர்ஷ்ட டவர் கிடைத்தது. “மற்றவர்களிடமிருந்து மண்ணைப் பறித்து என் டவரில் போட்டுக் கொள்ள முடியாதா?” என்ற ஆதாரமான சந்தேகத்தைக் கேட்டார் ஐஸ்வர்யா. “இல்லை. மண்ணைப் பறித்து கீழேதான் போட வேண்டும்’ என்ற பதில் கிடைத்தது. உடனே தன் டவரின் லீவரை அவர் திறக்க, மற்றவர்கள் எச்சரித்துத் தடுத்து நிறுத்தினார்கள். ‘நீ உன்னோட மணலைப் பாதுகாக்கணும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார் யாஷிகா. விதிகளைச் சரியாகக் கேட்டு தெளிவாக்கிக் கொள்ளாமல் இருப்பது ஐஸ்வர்யாவுக்கு ஒரு வழக்கமாகவே இருக்கிறது போல. 

‘யார் தாக்குதலை முதலில் தொடங்குவது?’ என்கிற தயக்கத்தில் ஆரம்பத்தில் துள்ளலும் மகிழ்ச்சியுமாகச் சென்ற இந்த விளையாட்டு போகப் போகச் சற்று மூர்க்கமாக மாறியது. பெண்கள் அனைவரும் இணைந்து ஒரே அப்பிராணி ஆணான பாலாஜியை தொடர்ந்து குறிவைத்தனர். இத்தனை பெண்களைச் சமாளிக்க முடியாத பாலாஜி சிரிப்பின் இடையே தவித்துப் போனார். அவரிடம் மண்ணின் அளவு அதிகமாக இருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். தங்களைத் துரத்தி வந்தவர்களில் ஜனனியின் மக்கைப் பறித்து டவருக்குள் போட்டார் பாலாஜி. ‘மக் போச்சே’ என்று சிணுங்கினார் ஜனனி.

போட்டியாளர்கள் - Bigg Boss Tamil

போட்டியாளர்கள் நிற்பதற்காகப் போடப்பட்டிருந்த மேடையை எடுத்து டவரின் மேல் மூடி பாதுகாப்பாக வைத்தார் ஐடியா திலகம் விஜி. இதைப் பார்த்து ஐஸ்வர்யாவும் காப்பியடிக்க முயன்றார். ஆனால் அவரால் அதைத் தூக்க இயலவில்லை. ஒரு ஆட்டின் மீது ஐந்தாறு சிங்கங்கள் பாய்வதைப் போல பெண்கள் அனைவரும் பாலாஜியின் மீதே பாய்ந்து மல்லுக்கட்ட, ‘டர்புர்’ ஆயுதத்தை எடுக்கட்டுமா என்பது போல் பாவனை செய்தார் பாலாஜி. ``ச்சே’’ என்று தற்காலிகமாகப் பின்வாங்கினார்கள். 

ஒரு கட்டத்தில் பாலாஜி அசந்திருந்த நேரம் பார்த்து, பாலாஜி டவரின் லிவரை யாஷிகா நைசாக திறந்துவிட மணல் கொட்டிக் கொண்டேயிருந்தது. மற்றவர்கள் அதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பாகச் சிரித்துக்கொண்டேயிருக்க, எதற்காகச் சிரிக்கிறார்கள் என்று தெரியாத பாலாஜியும் இணைந்து சிரித்துக் கொண்டிருந்தார். பெண்கள் தொடர்ந்து சிரித்தும் அதற்கான காரணத்தை அவரால் யூகிக்க முடியவில்லை. ஒருபக்கம் மணல் கொட்டிக் கொண்டேயிருக்க, ‘காவல் வீரன்’ மாதிரி கெத்தாக நின்று கொண்டிருந்தார் பாலாஜி. 

சில நிமிடங்களுக்குப் பிறகுதான் மணல் கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாலாஜி ‘ஜெர்க்’ ஆக, பெண்கள் மேலும் வெடித்துச் சிரித்தார்கள். இப்படியே ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தால் பிக்பாஸின் சாபத்துக்கு ஆளாக வேண்டுமே என்பதை உணர்ந்த பெண்கள் கூட்டணி தங்களுக்குள் போட்டி போடத் தொடங்கியது. யாஷிகாவுடையதை குறி வைத்தார் விஜி. ஆனால் லீவர் இறுக்கமாக இருந்ததால் சட்டென்று திறக்க முடியவில்லை. விஜிக்கும் யாஷிகாவுக்கும் நேரடியான தள்ளுமுள்ளு தொடங்கியது. இதில் பின்பு ஐஸ்வர்யாவும் வந்து சேர்ந்து கொண்டார். 

“ஏண்ணே.. நீங்க சும்மா நிக்கறீங்க?” என்று ஜனனி பாலாஜியிடம் சிணுங்க, இந்தப் போட்டி, யாஷிகா x விஜி கூட்டணியின் இடையில் என்பதாக மாறியது. “அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒத்துமையா இருந்து கவுக்கறாங்க. நம்ம கிட்ட ஏன் அந்த ஒத்துமையில்லை?” என்று ஜனனி கேட்டதற்குப் பின்னால் ஓர் அரசியல் இருந்ததை அவர் உணர்ந்திருந்தாரா என்று தெரியவில்லை. “மேலே வைக்கப்பட்டிருக்கும் மேடை யார் மேலயாவது விழுந்துடப் போகுது. எடுத்துடுங்க” என்று பொறுப்புஉணர்ச்சியுடன் விஜியையும் ஐஸ்வர்யாவையும் எச்சரித்துக்கொண்டேயிருந்தார் ரித்விகா. யாஷிகாவுக்கும் விஜிக்கும் நேரடியான மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் இழுத்துச் சென்று பின்பு ஆவேசமாக மூச்சுவாங்கி நின்றார்கள். இதில் விஜிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டன. 

ஐஸ்வர்யா Bigg Boss Tamil

“வாடா.. வாடா.. என் ஏரியாவுக்கு வாடா” என்று ரித்விகா, ஐஸ்வர்யாவுக்கு சவால்விட, அவர் யாஷிகாவை கூப்பிட, ‘யாஷிகா வந்தாதான் வருவியா?” என்று ஐஸ்வர்யாவைச் சீண்டினார், ரித்விகா. இதற்கிடையில் விஜிக்கும் யாஷிகாவுக்கும் நிகழ்ந்த ஆவேசமான தள்ளுமுள்ளுவில் விஜியின் டவர் சரிந்து கீழே விழுந்தது. அடிபட்ட முகபாவத்துடன் அமைதியாக அமர்ந்துவிட்டார், விஜி. மற்றவர்கள் தொடர்ந்து விளையாட முற்பட, ‘இதுக்கு பிக்பாஸ் என்ன சொல்றார்னு பார்ப்போம். அப்புறம் தொடரலாம்” என்று சிலர் எச்சரித்தார்கள். என்றாலும் விளையாட்டு தொடர அதை ஆட்சேபித்தார் விஜி. “ விஜி… நீங்கள் தொடர்ந்து விளையாடலாம்’ என்றார் பிக்பாஸ். (பின்னே.. விஜியினால்தான் சண்டை நிகழும். அதை விட்டு விட முடியுமா?”).

டவரை பாதுகாக்கும் பொறுப்பு விஜயலஷ்மிக்கு இப்போது இல்லாததால், புயலுக்கு முன் வரும் அமைதி மாதிரி, எவ்வித பதற்றமும் இல்லாமல் மௌனமாகச் சென்று பொருள்களை ஓரமாக வைத்தார். ஐஸ்வர்யாவிடம் சென்று அவருடைய மக்கைப் பிடுங்கி தூக்கியெறிந்தார். ‘சிங்கம் களம் இறங்கிடுச்சே’ என்பது மாதிரி மற்றவர்கள் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யாவின் டவரில் இருந்த மணலைப் பறித்து அவர் வெளியே போட, ஐஸ்வர்யா ஓடிச் சென்று ஜனனியின் மணலைப் பறித்து வெளியே போட்டார். புகை மண்டலம் சூழ, முன்பிருந்த சிரிப்பொலி ஓய்ந்து மயான அமைதி நிலவியது. விஜியின் எண்ட்ரி அப்படி. 

அடுத்ததாக யாஷிகாவிடம் சென்ற விஜி, மூர்க்கத்தனமாக டவரின் மூடியைத் திறக்க முயல, அதே மூர்க்கத்துடன் யாஷிகா தள்ளி விட, கீழே சரிந்திருந்த டவரின் மேலேயே சென்று விழுந்தார் விஜி. ஏற்கெனவே அங்குக் கண்ணாடி உடைந்திருந்ததால் மற்றவர்கள் பதறிப் போனார்கள். விஜியை ஓரமாக வைத்து உதவி செய்ய முனைந்தார்கள். யாஷிகாவும் அதில் இணைந்து கொண்டார். கையில் சிராய்ப்புகள் அதிகம் இருந்ததால் வலியில் அவதிப்பட்ட விஜி, சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டார். முதல் உதவி பொருள்களை யாஷிகா சென்று எடுத்து வர மற்றவர்கள் விஜிக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

இதற்கிடையில் வழக்கம் போல் தன் அபத்தமான சிறுபிள்ளைத்தனத்தை நிகழ்த்தினார் ஐஸ்வர்யா. ஜனனியின் டவர் லீவரை அவர் திறக்க முயல, ‘அடிபட்ட ஒருவருக்கு உதவி செய்யும் நேரத்திலும் இதைச் செய்வாயா? வேண்டுமென்றால் எல்லாவற்றையும் நீயே எடுத்துக் கொள்” என்று எரிச்சலானார் ஜனனி. ரித்விகா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இந்தக் கோபம் பரவியது. 

யாஷிகா - விஜயலட்சுமி Bigg Boss Tamil

இது ஸ்போர்ட்மேன்ஷிப்பே அல்ல. ஐஸ்வர்யா செய்தது அயோக்கியத்தனம் என்று கூட சொல்லலாம். எனவே மற்றவர்களின் கோபத்தில் நியாயம் இருந்தது. மற்றவர்கள் எடுத்துரைத்த நியாயத்தையும் ஐஸ்வர்யாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘விளையாட்டு என்றால் விளையாட்டு’ என்று பிடிவாதம் பிடித்தார். தனக்கு என்றால் மட்டும் “நீங்க என்னை டார்ச்சர் பண்றீங்க” என்று அழும் ஐஸ்வர்யா மற்றவர்களுக்கு என்றால் கேம்தானே என்று பிடிவாதம் பிடிப்பது மனிதத்தன்மையற்றது. “நீ செஞ்சது சரியில்லை” என்று பிறகு புகையறையில் உபதேசம் செய்தார் யாஷிகா. ‘எனக்கும்தான் கையில் அடிபட்டிருக்கு” என்று அப்போதும் தன் நோக்கிலேயே பேசினார் ஐஸ்வர்யா. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

விஜியை வெளியே அழைத்துச் சென்ற மற்றவர்கள் ஐஸ்வர்யாவின் நியாயமற்ற செய்கையைப் பற்றி ஆட்சேபித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இடைவெளிக்குப் பின்னால் விஜி இல்லாமல் போட்டி மறுபடியும் தொடங்கியது. இம்முறை அவர்களின் கோபம் ஐஸ்வர்யாவின் மீது இருக்க, ‘வாங்க வெச்சுக்கறேன்’ மோடில் ஐஸ்வர்யாவும் இருந்தார். ஐஸ்வர்யாவுக்கும் ஜனனிக்குமான மோதல்தான் உக்கிரமாக இருந்தது. தன்னுடைய டவரின் மணல் கொட்டிக் கொண்டிருந்த நிலையிலும் ஜனனியிடமிருந்து மணலைப் பிடுங்க மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘போய் உன் லிவரை மூடு’ என்று யாஷிகா கத்த வேண்டியிருந்தது. 

ஜனனியின் காலைப் பிடித்து ஐஸ்வர்யா இழுக்க, அடுத்து எவர் மண்டை உடையுமோ என்ற பதற்றம் ஏற்பட்டது. தனிநபர் போட்டியாக அல்லாமல் கூட்டணிகளுக்கான போட்டியாக இது மாறியது. இதற்கிடையில் யாஷிகாவின் உடனான தள்ளுமுள்ளுவில் ரித்விகாவின் கையிலும் அடிபட அவரும் துடித்துப் போனார். ‘ஒரே ரத்தக்காயமா வாங்குதே’ என்று நினைத்த பிக்பாஸ் போட்டியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ரித்விகாவை வாக்குமூல அறைக்கு அழைத்தார். 

 

“என் கிட்ட இருக்கிற மணல் அளவு கம்மியா இருக்கு. அதைப் பாதுகாக்கத்தானே நான் முன்னுரிமை தரணும்” என்பது ஐஸ்வர்யாவின் தரப்பு. இதை ரித்விகாவிடம் அவர் சொல்ல, அவர் இதை விரும்பவில்லை. ‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தாக்கும் போதுதான் என் மனவலிமை அதிகமாகுது. யாஷிகா வந்தாத்தான் அவ வர்றா’ என்று ஜனனி சொன்னதை பாலாஜியும் ஆமோதித்தார். 

போட்டியாளர்கள் Bigg Boss Tamil

பருப்பு சம்பந்தமான போட்டி நாளை நடைபெறவிருப்பதால் அது தொடர்பான பொருள்கள் வந்தன. இதற்கு ஜனனியும் ரித்விகாவும் நடுவர்களாக இருப்பார்கள். பாலாஜி, விஜி ஓர் அணியாகவும் யாஷிகா, ஐஸ்வர்யா மற்றோர் அணியாகவும் இருப்பார்கள். ‘பருப்பை ஊற வைக்கணும்’ என்றதற்கு ``ஊற வெக்கறதுன்னா என்னாது” என்று கேட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. 

‘ஏதாவது ஒரு டவரை முழுசா காலி பண்ணாத்தான் போட்டி முடியும். நாம நாலு பேரும் சேர்ந்து அவங்களை டார்க்கெட் பண்றோம். தட்றோம், தூக்கறோம்’ என்று தமிழ்க்கூட்டணி சபதம் ஏற்ற தருணத்தோடு இந்த ‘மணல் மாஃபியா’ போட்டி முடிவுற்றது. 

நிலம், நீர், காற்று. ஆகாயம், தீ என்று பஞ்சபூதங்களையும் வைத்து விளையாட்டு காண்பிக்கிறார் பிக்பாஸ்.