Published:Updated:

கமலுக்கு ஒரு க்ளாப்... ஒரு ரெக்வஸ்ட்! #BiggBossTamil2

கமலுக்கு ஒரு க்ளாப்... ஒரு ரெக்வஸ்ட்! #BiggBossTamil2
கமலுக்கு ஒரு க்ளாப்... ஒரு ரெக்வஸ்ட்! #BiggBossTamil2

“இந்த பிக்பாஸ் சீஸன் ஆரம்பிக்கும் போது ‘நல்லவர் யார், கெட்டவர் யார்’-னு ஆரம்பிச்சோம். இன்னமும்கூட அது சரியா தெரியலை. இன்னிக்காவது தெரியுமானு பார்ப்போம்’ என்பது போல் இன்றைய பிரமோவில் கமல் கோபத்துடன்... இல்லை, ரெளத்ரத்துடன் (இந்த வார்த்தைதான் அவருக்குப் பிடிக்கும்) பேசினார். அப்படிச் சொல்லிவிட்டு உடனே குறும்பாகப் புன்னகைக்கும் அவருடைய ஸ்டைல் சுவாரஸ்யம். (கண்ணாமூச்சி... ரே... ரே...) வழக்கம் போல் இந்த வாரமாவது போட்டியாளர்களை வெளுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு தந்தைக்குரிய கனிவுடனும், கரிசனத்துடனும், பொறுப்புஉணர்ச்சியுடனும் அவர் நிகழ்ச்சியை தொகுத்தது அபாரம். ஆனால் பிடிக்காத மாணவனை ஆசிரியர் குத்திக் காண்பிப்பது போல், ஐஸ்வர்யாவை ஓர் ஓரமாக வறுத்தெடுத்துக்கொண்டேயிருந்தார். அந்த வறுவலுக்கு ஐஸ்வர்யா தகுதியானவர்தான். 

என்ன பேசப் போகிறோம் என்கிற ஸ்கிரிப்ட் முன்பே ஒரு மாதிரியாக தயாராகிவிடும் என்பதை யூகிக்க முடிந்தாலும், தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கோத்து, சொல்ல வருகிற விஷயம் எதிர்தரப்பின் மனதில் உறைக்கும்படி கமல் திறமையாக பேசுவது நிச்சயம் பாராட்டத்தக்கது. ஆனால் அதற்காக நிறைய வார்த்தைகளையும் நேரத்தையும் அநாவசியமாக இறைக்கிறாரோ என்றும் தோன்றாமலும் இல்லை. மிக குறிப்பாக எல்லாவற்றிலும் தன்னுடைய சுயபுராணத்தை இணைத்துக்கொள்வது பல சமயங்களில் சலிப்பூட்டுகிறது. ‘நான் படிக்கிற காலத்தில்” என்று ஒரு போட்டியாளர் ஆரம்பித்தால், அவரை இடைமறித்து’ ‘நான் எட்டாவது படிக்கும் போது எனக்கு கிடைத்த குருமார்கள்… ‘என்று இரண்டு பிரேக் தொடர்ந்தும் கமல் தன்னை முன்நிறுத்திக்கொள்வது அபஸ்வரமாக இருக்கிறது. இதை கமலும் பிக்பாஸூம் கருத்தில் கொள்வது நல்லது. அச்சுபிச்சு ஜோக் அடிக்காம, சென்சிபிளா நடத்துறதுக்கு க்ளாப்... சுய ஃப்ளாஷ்பேக் குறைச்சுக்கலாம்னு ஒரு ரெக்வஸ்ட். எப்போதும் தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்ளும் கமல், இதையும் கவனிப்பார் என்று நம்புவோமாக. 

உதாரணமாக இன்றைய நிகழ்ச்சியில் நடந்த ஒன்றைப் பார்ப்போம். 'குழந்தைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். எனவே போட்டியாளர்களுக்கு அது குறித்தான பொறுப்புணர்ச்சி இருப்பது நல்லது’. இதுதான் கமல் சொல்ல விரும்பியது. அதற்காக, ஏதோ வரலாற்றுச் சம்பவம் போல தான் ஒருமுறை காரில் பயணித்துக்கொண்டிருந்த போது ஒரு குழந்தை அழுதுகொண்டே வழிமறித்ததாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் நீட்டி முழக்கிய அந்தச் சம்பவம் அத்தனை முக்கியமில்லாதது என்று தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்கிற பொறுப்புணர்ச்சி போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் இருக்க வேண்டும். ரணகளமான டாஸ்க்குகளை தருவதற்கு முன்னால் இதைப் பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும். கமல் இதைப் பற்றியும் பேசினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் பேச முடியாது என்பதுதான் நடைமுறை. மட்டுமல்லாமல், பிக்பாஸ் குழந்தைகள் காண வேண்டிய நிகழ்ச்சியே அல்ல. இதை முதன்மையாக வலியுறுத்துவதுதான் கமலின் பொறுப்பாக இருக்க வேண்டும். 

இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என்பது ஏற்கெனவே அறிந்ததுதான். ஆனால் இந்த ரகசியம் முன்பே கசிந்துவிடுவதால் நிகழ்ச்சியின் சுவாரசியம் கணிசமாக குறைகிறது என்பதை முன்பே பார்த்தோம். வழக்கம் போல் இந்த வாரத்திற்கான விடைகளும் கசிந்துவிட்டன. அது ‘பாலாஜி மற்றும் யாஷிகா’ என்பதாக இருக்கிறது. பாலாஜி வெளியேறியதைப் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் அறிந்துகொண்டோம். 

யாஷிகாவிற்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட போதே, அவரை கழற்றிவிடப் போகிறார்கள் என்று தோன்றிற்று. என்றாலும் வலிமையான போட்டியாளரான யாஷிகா, இறுதியில் வெல்வதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததால் அவ்வாறு இருக்காது என்றும் தோன்றியது. ஆனால், யார் ஜெயிக்க வேண்டும் என்பதை ‘பரம்பொருளாகிய' ’பிக்பாஸ் முடிவு செய்துவிட்ட பிறகு பக்தர்களாகிய நமக்கு கையறு நிலைதான். வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

யாஷிகா வெளியேற்றப்படுகிற ரகசியத்தைவிடவும் இன்னொரு ரகசியத்திற்கான விடையை அறிவதற்குத்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட டாஸ்க் முடிந்து நெடுநாட்களாகியும் ஏன் பிக்பாஸ் யாஷிகாவை புடவையிலேயே வைத்து அழகு பார்க்கிறார்? அவருடைய உடைகளும் ஒப்பனைச் சாதனங்களும் ஏன் திருப்பித் தரப்படவில்லை? இந்த விஷயம்தான் மண்டையைப் பிராண்டுகிறது. அதைவிடவும் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிற கேள்வி, ஐஸ்வர்யா எப்படி தொடர்ந்து காப்பாற்றப்படுகிறார்?

**

பாலாஜியின் எவிக்ஷன் அறிவிக்கப்பட்ட போது அவராலேயே இதை நம்ப முடியவில்லை என்பதுதான் உண்மை. கமலும் இதை சரியாக கவனித்துக் கேட்டார். இந்த அறிவிப்பு வந்த போது ‘நானா?’ என்கிற திகைப்பு பாலாஜியின் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. அவருடைய பெட்டியை தயாராக வைக்காததில் இருந்தே மனதளவில் இதற்கு அவர் தயாராகவில்லை என்பதை உணர முடிந்தது. என்றாலும் கமலிடம் இது பற்றி சமாளித்தார் பாலாஜி.

பாலாஜியே பிறகு குறிப்பிட்டபடி ‘அவர் இந்தப் போட்டியில் நெடுநாள் தாக்குப் பிடிக்க மாட்டார்’ என்றுதான் பார்வையாளர்கள் பெரும்பாலும் யூகித்திருப்பார்கள். ஒரு நகைச்சுவை நடிகர் என்கிற பின்புலத்தில்தான் அவர் இந்த நிகழ்ச்சிக்கு தேர்வானார் என்று தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல், பாலாஜி – நித்யா விவாகரத்து விவகாரத்தை ஊடகங்களில் அப்போது சூடாக வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் ஒரு காரணமாக இருக்கும். இருவருமே நிகழ்ச்சிக்குள் வந்த போது ‘ஹே... சூப்பரப்பு... இருக்கு. நமக்கு எண்டர்டெயின்ட்மெண்ட் இருக்கு” என்று மக்கள் ஆர்வமானார்கள். அதற்கான தீனியை பாலாஜியை நிறையவே தந்தார். ஒரு பொது நிகழ்ச்சியில் மற்றவர்களைப் பற்றி புறணி பேசுவது, மனைவியை மலினமான வார்த்தைகளால் ஏசுவது, அடிக்கடி கோபப்படுவது என்று பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். குறிப்பாக இவரை மூத்த சகோதரனாகவே பாவித்த சென்றாயனை அடிக்கடி சிறுமைப்படுத்தியது மோசமான விஷயம். 

என்றாலும் இவருடைய நகைச்சுவையுணர்வு அத்தனையையும் மழுப்பியது. இவர் அடிக்கும் ரகளையான கமெண்ட்டுகளால் விரும்பப்பட்டார். இந்த ரணகளமான நிகழ்ச்சியின்  இடையில் சில தருணங்கள் கலகலப்பாக இருந்ததற்கு இவர்தான் பிரதான காரணம். டாஸ்குகளை சரியாக செய்ய முடியாவிட்டாலும் இந்தக் காரணத்தினாலேயே இத்தனை நாட்கள் இவரால் பயணம் செய்ய முடிந்தது என்பதாக யூகிக்க முடிகிறது. 

‘ஆங்க்ரி பேர்ட்’ பாலாஜியாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு இவரிடம் கணிசமான மாற்றம் தெரிந்தது. கோபத்தைக் குறைத்துக் கொண்டார். குறிப்பாக நித்யாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு இந்த மாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும் புறணி பேசுவதை மட்டும் இவரால் தவிர்க்க முடியவில்லை. கமல் குறிப்பிட்ட படி இவரைக் கட்டுப்படுத்தும் மிகப் பெரிய அன்பாயுதம் இவருடைய மகள் போஷிகாவாக இருக்க முடியும். ‘வெளியில் இன்னொரு நூறு நாள் டாஸ்க் உனக்கு இருக்கு” என்கிற நித்யாவின் முடிவு மிக மிக அறிவுபூர்வமானது. பழைய திரைப்படங்களில் வருவது போல, எல்லாக் கொடுமைகளையும் செய்யும் கணவன், அடிபட்டு திருந்தி  கண்கலங்கிய வந்தவுடனேயே அனைத்தையும் மன்னித்து விட்டு ‘என்னங்க’ என்று கண்ணீருடன் கட்டியணைத்துக் கொள்ளும் பழமைவாதப் பெண்ணாக நித்யா இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி. வெளியில் இருந்து அறிவுரை சொல்வது எளிது. ஆனால் ஒன்பது வருடங்கள் பழகியவரால்தான் இதைப் பற்றி சரியாக சொல்ல முடியும். இது சார்ந்து முடிவு எடுக்கும் உரிமையும் அவருக்குத்தான் இருக்கிறது. 

பிக்பாஸ் வீட்டு சூழல் பாலாஜியிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் தற்காலிகமானதா அல்லது ஓரளவிற்காகவாவது நிரந்தரமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள பொறுமையுடன் காத்திருக்கும் நித்யாவின் அணுகுமுறை சமகால பெண்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணம். பாலாஜியின் மாற்றம் நிரந்தரமாக அமைந்து அந்தக் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் பெருகட்டும். கமல் குறிப்பிட்டது போல பாலாஜியின் படிப்பினை அவருக்கானதாக மட்டுமல்லாமல், அனைத்து பாலாஜிகளுக்கானதாக அமைந்தால் அது இந்த நிகழ்ச்சியின் வெற்றியாக இருக்கும். 

**

‘இது இறுதிவாரம். இறுதிப் போட்டிக்கான உத்வேகத்துடன் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் உத்வேகம் எல்லை மீறி மோதலாக உருவெடுத்ததால் காயங்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டன. பார்க்கும் நமக்குத்தான் பதட்டமாக இருந்தது’ என்கிற முன்னுரையுடன் வந்த கமல் இந்த வாரத்தின் நிகழ்ச்சித் தொகுப்பை காண்பித்தார். பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். மரியான் திரைப்படத்திலிருந்து ‘சோனாப்பரியா’ என்கிற ரகளையான பாடல் ஒலிபரப்பானது. பிறகு திடீரென்று இசை ஒலிக்க, ஜனனியைப் போலவே நானும் கூட கமல்தான் உள்ளே வருகிறாரோ என்று நினைத்துவிட்டேன். 

போட்டியின் மூலம் வென்ற ஜெயக்குமார், சபீதா தம்பதியினர் வந்தார்கள். தனியாக ஆள் வைக்காமல் லக்ஸரி பொருட்களை இவர்களிடமே கொடுத்தனுப்பிய பிக்பாஸின் சாமர்த்தியத்தை மெச்ச வேண்டும். இரண்டு பேருமே தனித்தனியாக போட்டியில் கலந்து கொண்டு ‘ஆச்சரியகரமாக’ வென்றார்களாம். (நம்பிட்டோம்!) ‘நாங்க ரெண்டு பேரும் ஒரே ஃபேமிலி. கணவன், மனைவியா இருக்கோம்’ என்று ஜெயக்குமார் இயல்பாக சொன்னதை சரியாக அடிக்கோடிட்டு கலாட்டா செய்தார் பாலாஜி. ஜெயக்குமாரும் ‘தமிழ்க்கூட்டணி’ ஆள் போல. பிடித்த போட்டியாளர்களாக ‘ரித்விகா மற்றும் ஜனனியை’ குறிப்பிட்டுச் சொன்னவர், ‘இன்னமும் சிறப்பா செய்யுங்க’ என்று ரித்விகாவிற்கு தனியாக டிப்ஸ் சொன்னார். 

‘ஐந்து லட்சம் பரிசு’ தரப்பட்டதால், தான் வெளியேறப் போகிறோம் என்பதை யாஷிகா உள்ளுணர்வால் உணர்ந்தாரோ, என்னமோ அன்று இரவு பிக்பாஸிற்கு பிரியாவிடை செய்தியை கண்ணாடியில் எழுதி வைத்தார். 

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் ‘எப்படியிருக்கீங்கன்னு நான்தான் கேட்கணும், உக்காருங்க.. உக்கார முடியுமா?” என்று துவக்கத்தில் இருந்தே கலகலத்துக் கொண்டிருந்தார். டிங்க்ச்சர் போட வந்த கம்பவுண்டர் மாதிரி ‘யார் யாருக்கு எங்க எங்கெல்லாம் அடிபட்டிருக்கு. காண்பிங்க” என்று இவர் விசாரிக்க, தங்களின் விழுப்புண்களை மறைத்து வைத்த கண்ணீருடன் போட்டியாளர்கள் உற்சாகமாக காட்டினார்கள். ‘எனக்கும் அடிபட்டுச்சு அங்கிள்’ என்பது மாதிரி ஐஸ்வர்யா உற்சாகமாக சொல்ல, ‘நல்ல வேளை, வெளியில தெரியல’ என்று குத்தலாக கமல் சொல்லியதற்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்கள் கிடைத்தன. 

அடுத்ததாக ‘மண் வாசனை’ போட்டியில் நிகழ்ந்த கலாட்டாக்களைப் பற்றியும் உரையாடப்பட்டன. ‘சாதுவான ஜனனிக்கே கோபம் வந்துடுச்சே’ என்று பாராட்டினார் கமல். ஐஸ்வர்யாவின் அழிச்சாட்டியங்களை முன்னிட்டு பொதுவாக பேசிய கமல் ‘இது போல் எல்லை மீறுவது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் அல்ல. இந்த நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்க்கிறார்கள். அது சார்ந்த கவனத்தோடு இருங்கள்’ என்பதை மிகச் சிறந்த உரையின் மூலம் வலியுறுத்தினார். “ஆபிஸ்க்கு போகணும்-ன்றது கூட  ஒருஸ்ட்ராட்டஜிதான். அதுக்காக வழியில நடக்கற ஆக்சிடெண்டை கூட கவனிக்காம போவீங்களா?” என்று அவர் சொன்னது நல்ல உதாரணம். 

“போன சீஸன்ல கலந்துக்கிட்ட போட்டியாளர்களை ‘அப்பப்ப சந்திச்சிக்குவீங்களா’-ன்னு கேட்பேன்’. ஆனா இங்க நடக்கற அடிதடியைப் பார்த்தா அப்படி கேட்க பயமாயிருக்கு. வெளியே வா பார்த்துக்கறேன் –னு யாரோ சொன்னாங்க. யாரு?’ என்று விசாரித்ததற்கு ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் கள்ளமெளனம் சாதிக்க, ‘சரி விடுங்க. மக்களுக்கு யாருன்னு தெரியும். அவங்களும் அதுக்காகத்தான் காத்திருக்காங்க. இது உள்ள இருக்கறவங்களுக்குத் தெரியாது” என்று அவர் குத்தியது நல்ல நையாண்டி. ஆனால், இருவரும் அப்போதைய மனநிலையில் பேசியது அது. சினிமா வில்லன்களைப் போல நிஜமாகவே கதவருகே காத்துக் கொண்டிருக்கப் போகிறார்களா என்ன? பிறகு வெள்ளிக்கிழமை இரவில் அனைவரும் உற்சாகமாக பேசிக் கொண்டுதானே இருந்தார்கள்? ஒரு போட்டியாளரின் மீது பொதுமக்களுக்கு ஏற்படும் வெறுப்பையும் கோபத்தையும் மட்டுப்படுத்தும் பொறுப்பை வழக்கமாக சரியாக செய்யும் கமல், இந்த சீஸனில் அந்தப் பொறுப்பிலிருந்து சமயங்களில் தவறுவது நெருடலாக இருக்கிறது. 

‘தாயுள்ளத்தோடுதான் ஐஸ்வர்யா ‘மவனே’ –ன்னு சொல்லியிருக்கணும்’ என்று அவர் சொன்னது சிறந்த நையாண்டி. பாவம், ஐஸ்வர்யாவிற்கு இதெல்லாம் புரியாமல் மையமாக சிரித்துக் கொண்டிருந்தார். ஸ்போர்ட்மேன்ஷிப்போடு விளையாடிய யாஷிகாவையும் ரித்விகாவையும் கமல் பாராட்டத் தவறவில்லை. 

‘பத்து பதினைந்து ஜோக் சொல்லி அதிக கைத்தட்டல் வாங்கி இந்த மேடையை இன்னமும் கூட என்னால் சுவாரசியப்படுத்த முடியும். ஆனால் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பாக இதைக் கருதி பொறுப்போடு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அதனால்தான் இதை ஒப்புக் கொண்டேன். இத்தனை காலம் இதை தவற விட்டுவிட்டோமே என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது’ என்பது போல் கமல் பேசியது அருமை. 

ரேங்க் வரிசையைப் பெறுவதில் ஏற்பட்ட சச்சரவுகள், அதிருப்திகள் ஆகியவற்றைப் பற்றியும் விசாரணை செய்தார் கமல். “படிக்கற காலத்துல ரேங்க் பத்திலாம் நான் கவலைப்பட்டதேயில்ல. இப்பவும் கூட. இதுக்காக நீங்க ஏன் சண்டை போடறீங்க என்பது வியப்பாக இருக்கிறது’ என்று கமல் பேசியது முக்கியமானது. சிறந்த மதிப்பெண்களை பெறுகிற மாணவர்களை விடவும் நல்ல குடிமகன்களை உருவாக்குகிற பொறுப்பைத்தான் சமூகமும் கல்விநிலையங்களும் முக்கியமானதாக கருத வேண்டும். 

அடுத்ததாக எவிக்ஷன் படலத்திற்குள் நுழைந்தார் கமல். ‘இந்த வாரம் டபுள் எவிக்ஷன். வழக்கமாக காப்பாற்றும் படலம் நடக்கும். இப்போ அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை” என்றவர் எவ்வித பீடிகையும் இல்லாமல், சுற்றி வளைக்காமல் பாலாஜியின் பெயரைக் காண்பித்தார். முன்பே குறிப்பிட்டதைப் போல இதை எதிர்பார்க்காத பாலாஜி முகத்தில் திகைப்புடன் எழுந்து பிறகு  தன்னுடைய பிரத்யேக பிராண்ட் சிரிப்புடன் சமாளித்தார். “கோபியர் கொஞ்சும் தமையனா இருந்தீங்க. அல்லி ராஜ்ஜியம் தொடரட்டும். வந்துடுங்க” என்றார் கமல். பாலாஜி விடைபெறும் போது ‘படக்கென்று’ காலில் விழுந்த ஐஸ்வர்யா, ‘அண்ணா.. வெயிட் பண்ணுங்க. நானும் வெளியே வந்துருவேன்’ என்றார். 

உணர்ச்சிகரமான சூழலில் கூட பாலாஜி பொதுவாக அதிகம் உணர்ச்சிவசப்படுவதில்லை. எனவே இந்தச் சூழலையும் அவ்வாறே இயல்பாக கடந்தார். ‘சண்டை போடாம இருங்க. சந்தோஷமா இருங்க’ என்ற பாலாஜி, செடியை அனைவருக்கும் இணைந்து பரிசளித்து விட்டு விடைபெற்றார். ‘போஷிகா வந்திருப்பாள்ல’ என்று யாஷிகா கேட்டதற்கு ‘இல்லைன்ட்டே போவோமே. எதிர்பார்த்துப் போயிட்டு அப்புறம் இல்லைன்னா கஷ்டமாயிடும்’ என்று அவர் சொன்னது யதார்த்தம். பிக்பாஸ் வீடு போதிமரம்தான் போல. 

பார்வையாளர்கள் கூட்டத்தில் நித்யாவும் போஷிகாவும் அமர்ந்திருந்தார்கள். ‘அண்ணலும் நோக்கினார், அண்ணியும் நோக்கினார்’ என்று இதைக் கிண்டலடித்தார் கமல். “இவ்ள நாள் தாங்குவேன்னு நானே எதிர்பார்க்கலை. டாஸ்க்லாம் நான் சரியா செஞ்சதில்லை. என்னமோ நேத்திக்கே தோணுச்சு. கோபம் நிறைய வரக்கூடிய ஆள் நான். ஆனா என்னை விடவும் கோவக்காரங்களை உள்ளே பார்க்கறப்ப ஆஃப் ஆயிட்டேன்’ என்று ஜாலியாகச் சொன்னார் பாலாஜி. “போன சீஸனா இருந்தா நீங்களும் இப்ப ஒரு finalist.” என்று பாலாஜியை கெளரவப்படுத்தினார் கமல். (எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ?!) 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“நீங்க நீடிச்சதுக்கு முக்கியமான காரணம், குடும்பத்தோடு ஒன்று சேரணும்-ன்ற குறிக்கோளோடு வந்தீங்க. அதை சாதிச்சிட்டீங்க. மக்களும் அதுக்கு ஆதரவு தந்தாங்க. இந்த வார வாக்கு சதவீதத்தின் படி நீங்க நாலாவது பொஷிஷன்ல இருந்தீங்க” என்றார் கமல். (அதுக்கும் கீழேதான் யாஷிகாவா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?!) பாலாஜி பற்றிய ‘சந்தோஷ’ குறும்படம் ஒளிபரப்பாயிற்று. (நல்ல எடிட்டிங்!) ‘நல்ல பயணம் உங்களுடையது. சில பேருக்கு நடக்கும் போதே தெரிஞ்சிடும். சரியில்லைன்னு மாத்திப்பாங்க. சிலர் தடுக்கி விழுந்தப்புறம்தான் கத்துப்பாங்க. நான் கூட அப்படித்தான் கத்துக்கிட்டேன்” என்ற கமல், பாலாஜியின் குடும்பத்தையும் மேடைக்கு அழைத்தார். “9 வருஷத்துல மாறாத பாலாஜியை 90 நாட்கள்ல மாத்திட்டீங்க” என்று ரைமிங்காக சொன்னார் நித்யா. (இவரையும் பிக்பாஸ் டீம்ல சேர்த்துக்கங்கப்பா. நல்லா டயலாக் எழுதறாங்க). “பிக்பாஸ் என்பது ஒரு சூழல்தான். நான்லாம் சும்மா அட்சதை போடறவன் மாதிரி. உங்க முயற்சிதான் இதற்கு முக்கிய காரணமா இருக்கும்’ என்று கமல் சொன்னது முக்கியமானது. 

“பாலாஜி.. உங்களுக்கு இன்னொரு பிக்பாஸ் வெளியே காத்துட்டு இருக்கு. நானும் பார்த்துட்டே இருப்பேன். காமிரால்லாம் கிடையாது. நீங்கதான் உங்களுக்கு காமிரா. குறிப்பாக நீங்க ஏதாச்சும் செஞ்சா போஷிகா எனக்கு சொல்லிடுவாங்க” என்று ஜாலியாக எச்சரித்தார் கமல். “என் பொண்ணுக்காக கெட்டவார்த்தை பேசறதையும் குடிக்கறதையும் விட்டுட்டேன்’ என்று பாலாஜி சபையில் சொன்னது நெகிழ்ச்சி. “எங்க அப்பா கால்ல விழலை. உங்க கால்ல விழறேன்’ என்று சொல்லி பாலாஜி நெகிழ்ந்தது உணர்வுபூர்வமான விஷயம்தான் என்றாலும் வழக்கமாக மேடைகளில் நிகழும் பாவனை போன்று ஓவர் டோஸாக தெரிந்தது. இந்தப் பிரியத்தையும் மரியாதையையும் அவர் தனது குடும்பத்திடம் காண்பிப்பதுதான் உண்மையான விஷயமாக இருக்க முடியும். ‘Take care of this boy’ என்று போஷிகாவிடம் கமல் சொன்னது அக்மார்க் குறும்பு என்றாலும் உண்மையும் அதுதான். 

‘நீங்க அடிக்கடி உச்சரித்த பெயர் போஷிகா, இல்லையா?” என்று கமல் குறிப்பிட்டதற்கு “ஆமாம் சார். பிக்பாஸ்னால ரெண்டு பேர் புகழ் அடைஞ்சது. ஒண்ணு போஷிகா, இன்னொன்ணு யாஷிகா’’ என்று அந்த உணர்வுபூர்வமான நிலையிலும் பாலாஜி ஜோக் அடித்தது சுவாரஸ்யம். “இந்த நகைச்சுவையுணர்வு முக்கியம். எந்த நிலையிலும் இதை இழந்துடாதீங்க. மிக வலிமையான விமர்சனத்தையும் நகைச்சுவை என்கிற சிறந்த ஆயுதத்தின் மூலம் முன்வைக்கலாம். உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையாளர்களுக்கு உள்ளே தார்மீகக் கோபம் நிறைய இருந்தது’ என்று நகைச்சுவையின் பெருமையை சொன்னதோடு பாலாஜியை வழியனுப்பி வைத்தார். 

அடுத்த எவிக்ஷன் பற்றி நாளை அறிவிப்பாராம். அது யாஷிகாதான் என்கிற விவரம் கசிந்து விட்டது. இனி பிக்பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம்தான். வலிமையான போட்டியாளரான யாஷிகாவும் வெளியேறப் போகின்ற நிலையில் மீதமிருப்பவர்களில் தகுதியானவராக ரித்விகாவைத்தான் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

அடுத்த கட்டுரைக்கு