ஐஸ்வர்யாவைவிட யாஷிகாவை நாமதான் ரொம்ப மிஸ் பண்ணுவோம்... ஏன்னா? #BiggBosstamil2

பிக்பாஸ் போட்டியில் எந்தவொரு போட்டியாளர் வெளியேறினாலும் அத்தனை உணர்வுவயப்படாத என்னை முதன்முதலில் சலனப்படுத்தியது மும்தாஜின் வெளியேற்றம்தான். ஆனால் அதைவிடவும் அதிகமாக யாஷிகாவின் வெளியேற்றத்தினால் இன்று உணர்வுவயப்பட நேர்ந்தது. இந்த இளம் வயதில் அவரிடம் எத்தனை நிதானம், முதிர்ச்சி, பக்குவம்! ‘I admire you’ என்று கமலே நெகிழ்ந்து வியக்குமளவுக்கான நேர்மை அவரது பிரிவு உபச்சார பேச்சில் வெளிப்பட்டது. தனக்கேற்பட்ட ‘காதலை’ பொதுச்சபையில் அதுவும் பெற்றோர்களுக்கு முன்னால் சொல்வது முதற்கொண்டு `எனக்குள்ள ஒரு பொண்ணு இருக்குன்றதையே இங்க வந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்பது வரை பல ஆதாரமான விஷயங்களை தனது எளிமையான பேச்சால் சொல்லிச் சென்றார். நம்மையும் அதிகமாக கவர வைத்து விட்டார்.

இந்த சர்வேயில் பங்கு பெற இங்கே க்ளிக் செய்யவும்
மிகக் குறிப்பாக அவரிடமிருந்து வெளிப்பட்ட தாய்மையுணர்வு அற்புதம். “ஐஸ்வர்யா எனும் குழந்தை வளர்வதற்கு எனக்குள் இருந்த குழந்தைமையை விட்டுத்தந்தேன்’ என்ற வாக்கியம் அடிக்கோடிட்டு கவனிக்கும் அளவுக்கு அத்தனை அபாரமானது. வெளியேறுவதற்கு முன்னால் ‘இவளைத் தனியா விடாதீங்க. சாப்பிட மாட்டா.. சரியா தூங்க மாட்டா’ என்று இதரப் போட்டியாளர்களிடம் வேண்டுகோள் வைத்தது நெகிழ வைத்த காட்சி. 28 வயது பெண்ணுக்கு 19 வயது இளம்பெண் தாயாக இருக்கும் அதிசயம் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்தது.
மேற்கத்திய நாடுகளில் அறிமுகமில்லாத நபர்களை கூட எதிரில் கண்டால் புன்னகையுடன் முகமன் சொல்லிக்கொள்ளும் கலாசாரம் இருக்கிறது. நம்மிடம் அப்படியில்லை. பழகும் வரை, ஓர் அந்நியரை விலகலான மனநிலையில் இருந்துதான் நோக்குகிறோம். ரயிலில் எதிர்சீட் ஆசாமியை ஆக்கிரமிப்பு செய்ய வந்த எதிரியாகவே பார்க்கத் தொடங்குகிறோம். ஆனால் பழகி விட்டால் சட்டென்று மறக்க மாட்டோம் என்பது வேறு விஷயம். இதைப் போலவே பிரபலங்களை நாம் ஒருபக்கம் விரும்பினாலும் இன்னொரு பக்கம் அவர்களைப் பற்றி மலினமாகவும் எள்ளலாகவும் பேசவும் எண்ணவும் தயங்குவதில்லை. அதிலும் கவர்ச்சி நடிகைகளைப் பற்றி நம்மிடமுள்ள மனப்பதிவுகள் மிகவும் எள்ளலானவை. அவர்களின் தனிப்பட்ட பக்கங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு நமக்குக் கிடைப்பதில்லை. அறியவும் நாம் முயற்சி செய்வதில்லை.

யாஷிகாவும் அப்படியொரு ‘கவர்ச்சி நடிகை’ என்கிற பின்புலத்தில்தான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தார். ‘இளம் தலைமுறை’ என்கிற காரணத்தினால், ‘ஐஸ்வர்யா, மஹத், டேனி, ஷாரிக்’ என்கிற தன்னிச்சையான கூட்டணி உருவாகியது. அந்த வயதுக்கேயுரிய கலாட்டாக்களை இவர்கள் செய்து மூத்தவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்தார்கள். ‘மற்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்’ எனகிற அவப்பெயரையும் யாஷிகா சம்பாதித்தார். அது இனக்கவர்ச்சியோ அல்லது காதலோ, மஹத்தோடு ஓர் உறவு உருவாகியது. அதை வெளிப்படுத்தும் நேர்மையும் இவரிடம் இருந்தது. ‘அக்கா.. ஆரவ்வைப் பார்த்தா ஒரு மாதிரியா ஆகுதுக்கா’ என்று முதலில் சொல்லி விட்டு பிறகு சில காரணங்களால் மறுத்த, கடந்த சீஸன் ஜூலியைப் போல யாஷிகா எதையும் மறைக்கவில்லை. சபையிலும் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.
தங்களின் நண்பர்கள் ஒவ்வொருவராக வெளியேறும் போது அது சார்ந்த மாற்றங்கள் யாஷிகாவிடம் தெரிந்தன. அனைத்துச் சோகங்களையும் தனக்குள் புதைத்துக்கொள்ளும் கல்லுளி மங்கியாக இருந்தார். ஐஸ்வர்யாவின் தரப்பில் பிழைகள் இருந்தாலும் கூட அவரை விட்டுக் கொடுத்ததில்லை. ஆங்கிலத்தில் பேசி விட்டு பிறகு அழிச்சாட்டியம் செய்த ஐஸ்வர்யாவை ஒரேயொரு முறை பயங்கரமாகக் கண்டித்து விட்டு பிறகு அதற்காகவும் கண்கலங்கினார். ‘என் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் நான் விட்டுக்கொடுத்ததில்லை. ஆனா அவங்க செஞ்சிருக்காங்க’ என்று அவர் மேடையில் சொன்னது உண்மைதான்.
“நான் பிறந்தப்ப கூட அழலை –ன்னு சொல்லுவாங்க. அப்படியொரு ஜென்மம். Dumb piece’ என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டாலும் எளிதில் உணர்ச்சிவயப்படாத சமநிலைத்தன்மை அவரிடம் இருந்தது. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, சமூகத்தில் இயங்குவதற்கு கூட இந்தக் குணாதிசயம் அவசியமானது. விளையாட்டுப் போட்டிகளில் மிக ஆர்வமாகப் பங்குகொண்டார். சில பல புகார்கள் இவர் மீது சொல்லப்பட்டாலும் ‘இறுதிப்போட்டியில் வெல்லக்கூடியவர்’ என்று மற்றவர்களை ஆத்மார்த்தமாகச் சொல்ல வைக்கும் அளவுக்கு இவரது பங்களிப்பு இருந்தது.

“யாஷிகா இல்லாத இறுதிப்போட்டி நியாயமற்றது” என்று சக போட்டியாளரான ஜனனியே ஒப்புக் கொள்ளுமளவுக்கு யாஷிகாவின் திறமை இருப்பது பாராட்டத்தக்கது. இவர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தால் அது ஆறுதலான விஷயமாக இருந்திருக்கும். வாக்கு சதவிகிதத்தில் ஏன் பின்தங்கினார் என்பது ஆய்வுக்குரிய சமாசாரம். இவர் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அன்பு என்னும் மலர்ப்பாதையால் அது அமையட்டும்.
‘கவர்ச்சி நடிகை’ என்னும் பிம்பத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டு ‘யாஷிகா’ என்கிற அற்புதமான பெண்ணின் பிம்பத்தை நமக்குள் பதிய வைத்து விட்டார். யாஷிகா மட்டுமல்ல, இதரப் போட்டியாளர்கள் அனைவருக்குமே இது பொருந்தும். ஒவ்வொருவருமே நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக, அதிக காலம் பழகியவர்களைப் போல இவர்கள் மாறி விட்டார்கள்.
**
“இன்று வெளியேறப் போகிறவரைத் தவிர மற்றவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதியாவார்கள்” என்கிற முன்னுரையுடன் நிகழ்ச்சிக்குள் வந்த கமல், ‘நான் எப்படி இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்?’ என்கிற பிரசாரத்தைச் செய்ய வேண்டும் என்கிற குறிப்பை போட்டியாளர்களிடம் வைத்தார்.
‘இப்பச் சொல்லிட்டு நான் வீட்டுக்குப் போயிட்டன்னா என்ன பண்றது?” என்கிற சரியான கேள்வியைத் தயக்கமில்லாமல் கேட்டார் யாஷிகா. இந்த வாரம் வெளியேறப் போகிறவர்களில்தான் இருக்கிறோம் என்கிற வலிமையான உள்ளுணர்வு அவருக்குள் ஏற்கெனவே இருந்தது. அதனால்தான் கடந்த இரவே தன் பிரிவுச் செய்தியை கண்ணாடியில் எழுதி வைத்தார். ‘இதே புடவைல மேடைல இருந்தேன். ‘வெளியே வா’ –ன்னு நீங்க கூப்பிட்ட மாதிரி கனவு வந்துச்சு” என்று கமலிடம் பிறகு சொன்னார். ‘ஐந்து லட்சம்’ பரிசு அறிவிக்கப்பட்ட போதே அவருக்குள் இது தோன்றியிருக்கலாம்.

“நல்ல கேள்விதான். டெபாசிட் இழக்கறவங்க கூட தேர்தல் பிரசாரம் செய்யறாங்க இல்லையா, அது போல நினைச்சுக்கிட்டு செய்ங்க’ என்கிற சாமர்த்தியமான பதிலைச் சொன்னார் கமல். “இங்க இருக்கறதுலயே நான்தான் இளைய போட்டியாளர். என்னை விட வயதிலும் அறிவிலும் உயர்ந்தவர்களைத் தாண்டி இந்த இடத்துக்கு வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. ஜெயிப்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இறுதி வரைக்கும் விளையாடுவதுதான் எனக்கு முக்கியம். அதுதான் என் பெற்றோரின் ஆசையும். டாஸ்க்லாம் விட்டுக்கொடுக்காமப் பண்ணேன். தமிழகம் என்னை ஆதரிக்க வேண்டும்’ என்று முதலில் தன் உரையைப் பதிவு செய்தார் யாஷிகா.
“ரெண்டு வாரம்தான் தாங்குவேன்னு நெனச்சேன். இங்க சில தப்புல்லாம் செஞ்சிருப்பேன். அதை கரெக்ட்ன்னு சொல்ல மாட்டேன். ஆனா அந்தச் சமயத்துல என் மனசுல சரின்னு பட்டதைத்தான் செஞ்சேன். தமிழ்நாட்ல 6 வருஷமா இருக்கேன். அவங்க ஆசி எனக்கு வேணும். ஜெயிக்கணும்னு எனக்கு ஆசையில்லை. ஃபைனல் ஸ்டேஜ்-ல நின்னா போதும்” என்றார் ஐஸ்வர்யா.
“வைல்ட் கார்ட் –ன்ற புகாரைத் தொடர்ந்து என் மீது வெச்சாங்க. 5 வாரத்துல இதுக்கு பதில் சொல்லுவேன்-னு சொன்னேன். குறைந்த டைம்தான். ஆனா சொன்னதைச் செஞ்சேன்-னு நெனக்கிறேன். தமிழ்ப்பெண்கள் அமைதி, வீரம், புத்திசாலித்தனத்தோட இருக்கணும்னு நெனக்கறேன். இதயங்களை சம்பாதிப்பதில் எனக்குப் பேராசை உண்டு’ என்று சென்டிமென்ட்டாகப் பேசி வாக்கு கேட்டார் விஜி.
“முதல் நாலு வாரத்துக்கு இங்க இருக்க சேர், டேபிள் மாதிரிதான் என்னைப் பார்த்தாங்க. நானும் மெளனமா இருந்தேன். அதுக்கு மேல தாண்ட மாட்டாங்கன்னு சொன்னாங்க. அதையெல்லாம் மீறி பொறுமையா இருந்து இங்க வந்திருக்கேன். மத்தவங்களுக்கு அட்வைஸ் சொல்றப்ப எல்லாம் நானும் அதைக் கேட்டுப்பேன். மூணு விஷயம் கத்துக்கிட்டேன். வெற்றியை நியாயமா அடையணும். அடுத்தவங்க வெற்றியையும் கொண்டாடணும். சின்ன வெற்றியைக் கூட தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்னைக் காப்பாத்துவாங்க –ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று நேர்மைறையாகப் பேசினார் ரித்விகா.

“இங்க நெறைய விழுந்திருக்கேன். ஆனா ஒவ்வொரு முறையும் எழுந்து நடந்திருக்கேன். சின்னச் சின்ன பலவீனங்கள் எனக்கும் இருக்கு. டிப்ளமஸியா நடந்துக்கறேன்னு சொல்வாங்க. இனிமே நியாயமா, தைரியமா நடந்துப்பேன். உங்கள்ல ஒருத்தியா நெனச்சு தப்புப் பண்ணியிருந்தா மன்னிச்சு என்னை ஏத்துக்கங்க’ என்று பேசினார் ஜனனி. “அழகாவும் ஆணித்தரமாகவும் பேசினீங்க. குறைகளை அழகா பூசி மெழுகி அற்புதமா பேசினீங்க. இதை நானும் இனிமே பேச வேண்டியிருக்கும். உங்க கிட்ட இருந்து கத்துக்கறேன்’ என்றார் கமல்.
அடுத்ததாக ஒவ்வொரு போட்டியாளரின் பெயர்களைத் தாங்கிய அட்டைகள் வந்தன. ஒவ்வொரு கட்டிலும் அனைவரது பெயரும் இருக்கும். தன்னுடைய பிரசாரத்துக்கு நேர் எதிராக, இன்னொரு போட்டியாளர் எப்படி இறுதிக்குத் தகுதியானவர் என்று பேச வேண்டும். முதலில் கார்டை எடுத்த ஜனனி, ரித்விகாவை வெல்வதற்கு தகுதியானவர் என்றார். ‘கடமை, பொறுமை, நேர்மை போன்ற வழக்கமான காரணங்கள்.
அடுத்ததாக கார்டை எடுத்த ரித்விகா, ஐஸ்வர்யாவின் பெயரை முன்மொழிந்தது ஆச்சர்யம். ஜனனியின் பெயரைச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அப்படிச் சொல்லியிருந்தாலாவது அது நேர்மையாக இருந்திருக்கும். ஆனால் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவோ, என்னவோ ‘ஐஸ்வர்யா’வின் பெயரைச் சொன்னார். ஆனால் அவரது உரையில் வஞ்சப்புகழ்ச்சியணி இருந்தது. ‘எந்தவொரு கதையிலும் வில்லன் இருந்தாத்தான் அது சுவாரஸ்யம். மும்தாஜ் உட்பட மற்றவர்களின் பிரபலத்துக்கு ஐஸ்வர்யாதான் காரணம். பேராசையாக இருந்தாலும் அவரது ஆசையும் முக்கியம்தானே?” என்றார் ரித்விகா. (ஊமைக்குசும்பு என்பது இதுதானோ?!) .
தன்னைப் போலவே வலிமையான போட்டியாளர் என்கிற வகையில் யாஷிகாவின் மீது விஜிக்குப் பொதுவாகவே பாசம் இருந்தது முன்பே வெளிப்பட்டது. எனவே அவர் யாஷிகாவின் பெயரை முன்மொழிந்ததில் ஆச்சர்யமில்லை. “நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இருக்கு. எதையும் மனசுக்கு ஏத்திக்க மாட்டாங்க. வாய் வார்த்தை விட மாட்டாங்க. டாஸ்க் நல்லாப் பண்ணுவாங்க. சின்னப் பொண்ணா இருந்தாலும் முதிர்ச்சி அதிகம்” என்று யாஷிகாவைப் புகழ்ந்தார் விஜி.

தன்னைப் போலவே Non Expressive என்கிற காரணத்தினால் ரித்விகாவைத் தேர்ந்தெடுத்தார் யாஷிகா. ‘பொறுமை, நேர்மை போன்ற காரணங்களுக்காக அவர் பெயரைச் சொல்வதாக தெரிவித்தார்.
தன் நெருக்கமான தோழியான, யாஷிகாவைச் சொல்வார் என்று எதிர்பார்த்த போது ரித்விகாவின் பெயரை ஐஸ்வர்யா சொன்னது ஆச்சர்யம். “அவங்க அப்பாவைப் பார்க்கும் போது எங்க அப்பா ஞாபகம் வந்தது. சமகால இளம் பெண்களுக்கு ரித்விகா முன்னுதாரணம்” என்று அவர் சொன்னது ஆத்மார்த்தமான குறிப்பு போல்தான் தெரிந்தது. ஒருவேளை, யாஷிகா தன் பெயரைச் சொல்லாததால் பழிவாங்கி விட்டாரோ!
“ஆபீஸ் ரூமுக்கு வாங்க’ என்று ‘சிவாஜி’ திரைப்பட காமெடி காட்சியை ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு வரவழைத்த கமல், இன்ப அதிர்ச்சியாக அவரவர்களின் உறவுகளுடன் பேச வைத்தார். ‘ஆங்க்ரி பேர்ட்’ விஜியின் இன்னொரு பாச முகத்தை அப்போது பார்க்க முடிந்தது. ‘தமிழ்ப் பெண்கள் ஜெயிக்கணும்’ கூட்டணியைச் சேர்ந்த ரித்விகா ‘மம்மி” என்று கூவியது நகைமுரண். எவ்வித முகபாவத்தையும் காட்டாமல் பேசிய யாஷிகாவைப் பார்த்து கமலே மிரண்டு போனார். தன் நண்பரின் பெயரை விரலில் பச்சை குத்தியிருக்கும் ஐஸ்வர்யா, அவருடனேயே பேசிய போது வழக்கம் போல் குழந்தையாக மாறிப் போனார். ஒரு சராசரி குடும்பத்தின் இயல்பான உரையாடலாக ஜனனியின் பேச்சு இருந்தது.
**
உறவுகளிடம் உரையாடிய மகிழ்ச்சியை அளித்த கமல், அடுத்த கணத்தில் எவிக்ஷன் உறையோடு வந்தார். “என்ன சார்.. இப்படிப் பண்றீங்களே?” என்று போட்டியாளர்கள் சிணுங்கினார்கள். பிக்பாஸ் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் அனைவரும் பெண்களாக இருப்பது இதுதான் முதன்முறை என்பதாக கமல் சொல்லியது முக்கியமான செய்தி. “சரி. எவிக்ஷன் பக்கம் போயிடலாமா?” என்ற கமலிடம் ‘தக்.. தக்..தக் தக்’ என்று தங்களின் இதயத்துடிப்பைப் போட்டியாளர்கள் வெளிப்படுத்தியவுடன் ‘ஒரு சின்ன பிரேக் அப்புறம் வர்றேன்’ என்றது கொடூரமான குறும்பு.
“வழக்கமா நான்தான் பெயரை எடுத்துக் காட்டுவேன். இந்த முறை வித்தியாசமா மத்தவங்க எனக்குக் காட்டட்டும்’ என்று கமல் சொன்னதும் பார்வையாளர்களின் மத்தியில் இருந்து ஒரு பெண்மணி வந்து உறையைப் பிரித்து பெயரைக் காண்பிக்க, முகத்தில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய கமல், “நீங்களே மக்களுக்குக் காண்பிச்சுடுங்க” என்றார். ‘யாஷிகா’ என்றெழுதப்பட்டிருந்த பெயரை போட்டியாளர்களால் கூட நம்ப முடியவில்லை. “கனவு பலிச்சிடுச்சு. சொல்லிட்டு வாங்க’ என்றார் கமல்.

அப்போதே இறுக்கமான முகபாவத்துக்கு சென்றார் ஐஸ்வர்யா. ஆனால் அதிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை. ரித்விகா கண்கலங்க, மற்றவர்களும் யாஷிகாவை ஆரத்தழுவினார்கள். வலிமையான போட்டியாளர் விலகுவது அவர்களுக்கு ஒருவகையில் ஆறுதலாகக் கூட இருக்கும். என்றாலும் யாஷிகாவின் திறமையை அங்கீகரிக்க அவர்கள் தவறவில்லை. ‘என்னடா.. இது இப்படி அமைதியாக இருக்கிறாரே’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, பள்ளியில் விட்டுச் செல்லும் அம்மாவைப் பிரிய முடியாத முகபாவத்துக்குச் சென்றார் ஐஸ்வர்யா. அவரை அனுப்ப மனமில்லாத மனநிலையில் இறுகக் கட்டிக்கொண்டிருந்தார். யாஷிகாவும் அதைப் புரிந்துகொண்டு இணங்கிச் சென்றது அற்புதமான காட்சி.
தன் தாய் பரிசளித்த கரடி பொம்மையை யாஷிகாவுக்கு அவர் அளித்ததும் நெகிழ்வுபூர்வமான காட்சி. சில அழிச்சாட்டியங்கள் செய்தாலும், எதிர்முறை குணாதிசயங்கள் இருந்தாலும் அடிப்படையில் ஐஸ்வர்யா குழந்தைத்தனம் உள்ளவர் என்பதை நிதானமாகக் கவனித்தால் புரியும். அன்புக்கும் அரவணைப்புக்கும் உள்ளூற ஏங்குகிற ஒரு முரட்டுக்குழந்தை. அவர் மீதுள்ள புகார் தூசிகளை துடைத்து விட்டுப் பார்த்தால் இந்தச் சித்திரம் தெளிவாகத் தெரியும். ஆனால் பிக்பாஸ் போட்டிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் விஷயம். கலைந்திருந்த யாஷிகாவின் புடவையை ரித்விகா சரிசெய்தது, purely girls thing. செடியை ஐஸ்வர்யாவுக்குப் பரிசளித்த யாஷிகா, பிக்பாஸ் வீட்டையும் உணர்வுபூர்வமாகப் பார்த்தது அர்த்தமுள்ளது.
பார்வையாளர்களின் மத்தியில் யாஷிகாவின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். “என் கனவுல வந்தது அப்படியே நடந்திருக்கு. இரண்டு வாரம்தான் தாங்குவேன்னு நெனச்சிட்டு வந்தேன். அப்படித்தான் என் வீட்லயும் சொல்லிட்டு வந்தேன்’ என்ற யாஷிகாவை இடைமறித்த கமல், ‘போன சீஸனா இருந்தா நீங்களும் ஒரு ஃபைனலிஸ்ட்’ என்று பாலாஜிக்கு சொன்ன அதே விஷயத்தைச் சொன்னார். ‘பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராலோ என்னமோ, உங்கள் உழைப்பு என்னைக் கவர்ந்தது. டாஸ்க்குகளை சரியா செஞ்சீங்க” என்று யாஷிகாவின் அர்ப்பணிப்பையும் நட்பைப் பேணும் குணாதிசயத்தையும் உழைப்பையும் கமல் பாராட்டினார்.

‘உங்களைப் பற்றிய குறும்படம்’ என்றதும் சற்று அதிர்ந்து போன யாஷிகாவிடம் ‘சந்தோஷமான குறும்படம்தான்’ என்றதும் நிம்மதிப் பெருமூச்சை விட்டார். குறும்படம் முடிந்ததும் உணர்ச்சியின் தத்தளிப்பில் இருந்த யாஷிகா மேடையில் விழுந்து வணங்கியது நெகிழ்ச்சியான காட்சி. ‘இந்த மாதிரி மேடையை முத்தமிட்டு வணங்குவதற்கு எனக்கு 50 வருஷம் ஆச்சு” என்று வழக்கம் போல் தன்னையும் இணைத்துக் கொண்ட கமல் யாஷிகாவின் உணர்வுடன் இணைந்து தானும் நெகிழ்ந்தார். பிறகு யாஷிகா நிகழ்த்திய அந்த உரை, கேட்பதற்கு எளிமையானதாகத் தெரிந்தாலும், ஆத்மார்த்தமாகவும், ஆழமாகவும், உண்மையாகவும் இருந்தது. கமலே நெகிழ்ந்து போகுமளவுக்கு அபாரமான உரை.
நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
- Bigg Boss Tamil Calendar
- Mon
- Tue
- Wed
- Thu
- Fri
- Sat
- Sun
- Day 1
- Day 2
- Day 3
- Day 4
- Day 5
- Day 6
- Day 7
- Day 8
- Day 9
- Day 10
- Day 11
- Day 12
- Day 13
- Day 14
- Day 15
- Day 16
- Day 17
- Day 18
- Day 19
- Day 20
- Day 21
- Day 22
- Day 23
- Day 24
- Day 25
- Day 26
- Day 27
- Day 28
- Day 29
- Day 30
- Day 31
- Day 32
- Day 33
- Day 34
- Day 35
- Day 36
- Day 37
- Day 38
- Day 39
- Day 40
- Day 41
- Day 42
- Day 43
- Day 44
- Day 45 Part 1
- Day 45 Part 2
- Day 46
- Day 47
- Day 48
- Day 49
- Day 50
- Day 51
- Day 52
- Day 53
- Day 54
- Day 55
- Day 56
- Day 57
- Day 58
- Day 59
- Day 60
- Day 61
- Day 62
- Day 63
- Day 64
- Day 65
- Day 66
- Day 67
- Day 68
- Day 69
- Day 70
- Day 71
- Day 72
- Day 73
- Day 74
- Day 75
- Day 76
- Day 77
- Day 78
- Day 79
- Day 80
- Day 81
- Day 82
- Day 83
- Day 84
- Day 85
- Day 86
- Day 87
- Day 87
- Day 89
- Day 90
- Day 91
- Day 92
- Day 93
- Day 94
- Day 95
- Day 96
- Day 97
- Day 98
- ...
யாஷிகாவின் முதிர்ச்சியைப் பாராட்டிய கமல், “ஆனா ரொம்பப் பக்குவமாகி கிழவியாடாதீங்க” என்று கிண்டலாகவும் உபதேசம் செய்தார். “இந்த ஜெனரேஷனைப் பாருங்க. உள்ள தனிமைல என்ன பேசினாங்களோ, அதையேதான் இந்த சபையிலும் பேசுறாங்க’ என்ற கமல், யாஷிகாவை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். மேடையிறங்கிய யாஷிகாவின் கன்னத்தில் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த அவரது தந்தையை, அதே தந்தைமையுடன் கமலும் நெகிழ்வாகப் பார்த்துக்கொண்டிருந்தது அற்புதமான காட்சி.
“போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. உள்ளேயிருப்பவர்களுக்குப் பதற்றம் ஒருபுறமும் சந்தோஷம் ஒருபுறமும் இருக்கும். அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்’ என்றார் கமல். அதிர்ச்சியில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் சொன்னார் ஜனனி. “நீங்கள் நால்வர்தான் இறுதிப்போட்டியாளர்கள். வாழ்த்துகள்’ என்று பிக்பாஸ் சொன்ன போது அந்த மகிழ்ச்சியை முழுதும் அனுபவிக்க முடியாமல் கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. ‘ ``நீ ஃபைனலுக்குப் போவே –ன்னு பாலாஜியண்ணா முன்பே சொன்னாங்க’ என்று ஐஸ்வர்யா சொல்ல “டேனிக்குத்தான் அதிக ஷாக்கா இருக்கும்’ என்ற ஜாலியான கமென்ட்டை அடித்தார் ரித்விகா.
யாஷிகா வெளியேறியதை நம்ப முடியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள் ரித்விகாவும் ஜனனியும். “இது கடைசி வாரம். வாக்களிப்பு இப்போதே தொடங்கி விடும். வாக்களியுங்கள். வெற்றியாளர் யார் என்பதை அறிய நானும் ஆவலாக இருக்கிறேன். 99 நாள்களில் 99 பாடம் கத்துக்கிட்டேன் –னு யாஷிகா சொன்னாங்க. நான் 180 பாடம் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இவங்களுக்கு இவ்வளவு பக்குவமா –ன்னு ஆச்சர்யமா இருந்தது. ஒரு மனிதனுக்குள் இத்தனை உணர்ச்சி மோதல்கள் நிகழுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை வசதிகளுடன் இருந்த இவர்களுக்கே இப்படி என்றால் அடிப்படை வசதியில்லாத மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி எனக்குப் பாடமாக இருந்தது. உங்களுக்கும் இருக்கும். உங்களில் நான் என்று சொல்வது உங்களையும் சேர்த்துத்தான்’ என்றபடி விடைபெற்றார் கமல்.

சீசனின் ஆரம்பத்தில் எவ்வளவோ சொல்லியும், ஒரு மூட்டை வெங்காயத்தை அப்படியே நறுக்கும் யாஷிகா ஏனோ நினைவுக்கு வந்து செல்கிறார். அனைத்தையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளுதல், தன்னைவிட 10 வயது மூத்தவரான ஐஷ்வர்யாவைப் பார்த்துக்கொண்டது என யாஷிகாவின் பாசிட்டிவ் பக்கங்கள் பல. ஃபைனலில் வெற்றி பெற்றிருக்க வெண்டிய ஒரு போட்டியாளரை இந்த வாரம் மிஸ் செய்யப் போகிறோம் என்பது மட்டும் உறுதி.
யாஷிகா இல்லாத சவாலை ஐஸ்வர்யா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும். இறுதிப் போட்டி என்பதால் ஒருவேளை வரப்போகும் கடுமையான போட்டியை அவர் உணர்ச்சிவசப்படாமல் செய்வாரா என்பதையும் பார்க்கப் போகிறோம். ’நாங்க பார்த்துக்கறோம்’ என்று யாஷிகாவுக்கு வாக்களித்த இதரப் போட்டியாளர்கள் மென்போக்காக நடந்து கொள்வார்களா, இறுதிப் போட்டி எப்படியிருக்கும், கடைசிக்கட்ட சவாலை எப்படி எதிர்கொள்வார்கள், எவர் வெற்றியாளராக இருப்பார், என்பது போன்று பல சுவாரஸ்யமான கேள்விகள் எழுகின்றன. இன்னமும் ஒரே வாரம்தான். அத்தனைக்கும் விடை கிடைத்து விடும்.