Published:Updated:

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2
``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்குநர் விக்ரமன் பார்த்திருந்தால், ‘நம்மால் இப்படியான பாசக்காட்சிகளை உருவாக்க முடியாமல் போயிற்றே’ என்று ஒருவேளை கண் கலங்கியிருப்பார். அப்படியொரு ‘லாலாலா’ சத்தம் அங்கு கேட்டுக் கொண்டேயிருந்தது. இதுவும் ஒருவகையில் அழகாகத்தான் இருந்தது. இத்தனை நாள்கள் அங்கு சுழன்றுகொண்டிருந்த எதிர்மறையான உணர்ச்சிகளுக்கு அன்பாலும் சிரிப்பாலும் மருந்திடுவது போல் இன்றைய நாள் அமைந்திருந்தது சிறப்பு. 

‘பாபநாசம்’ திரைப்படத்தில் பாசமலர் பார்த்து விட்டு கண்கலங்கும் சுயம்புலிங்கத்தை கூட இருக்கும் சிறுவன் கிண்டல் செய்வது போல், மென்மையான உணர்ச்சிகளைப் பார்த்து கலங்குபவர்களை எள்ளி நகையாடுவது இன்று பெரும்பான்மையாகி விட்டிருக்கிறது. வன்முறை, ரத்தம், இருண்மை, பழிக்குப் பழி போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைப் பரப்பும் விஷயங்களும் மனநிலையும் இன்று நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன; அவைதாம் நம்மை பெரும்பாலும் வசீகரிக்கின்றன. செய்தித்தாள்கள் முதற்கொண்டு தொலைக்காட்சித் தொடர்கள் வரை எங்கும் எதிர்மறையான சித்திரங்கள். 

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2இந்தச் சூழலில், சற்று செயற்கையாக இருந்தாலும் பரவாயில்லை என்று மென்மையான, நேர்மறையான உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் விஷயங்களை வலுக்கட்டாயமாகக் கூட நாம் பழக வேண்டும் என்று தோன்றுகிறது. பிறகு அதுவே இயல்பாக நமக்குள் படியலாம். இந்த நோக்கில், ஒரு காலத்தில் நான் பயங்கரமாக கிண்டலடித்துக் கொண்டிருந்த, எம்.ஜி.ஆர் திரைப்படங்களே எவ்வளவோ தேவலை என்றான நிலைமை இன்றிருக்கிறது. தீயபழக்கங்களைப் பின்பற்றாத, அதை தம் திரைப்படங்களில் தொடர்ந்து பரப்புரை செய்த எம்.ஜி.ஆரைப் பின்பற்றி எத்தனையோ இளைஞர்கள் அக்காலத்தில் இருந்தார்கள் என்று கேள்வி. 

**

99-ம் நாள் காலை. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்திலிருந்து ‘என் ஜன்னல் வந்த காற்றே’ என்கிற துள்ளலிசைப் பாடலை ஒலிப்பரப்பினார்கள். ஆண்களின் படுக்கையறை காலியாக இருப்பதை காமிரா சுற்றிக் காட்டிய போது சற்று நெகிழ்வாகத்தான் இருந்தது. ‘6 days to go’ என்ற செய்தியுடன் பிளாஸ்மா டிவியில் ‘am watching’ என்பது போல் கமல் திரும்பத் திரும்ப காட்டிய சமிக்ஞையை விஜி மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். (இறுதிப் போட்டியை உணர்த்தும் சமிக்ஞையாக மட்டுமல்லாமல் அவர்களுக்கொரு துணையாகவும் அந்தக் காட்சி இருக்கலாம் என்று தோன்றுகிறது).  

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2‘இறுதி வாரத்தில் இருக்கிறீர்கள். சக போட்டியாளர்களைப் பற்றிய தகவல் அல்லது வாழ்த்துகளைப் பகிர்வதற்கான ஒரு வாய்ப்பு தரப்படுகிறது’ என்று அறிவித்த பிக்பாஸ், அதற்கான டீஷர்ட்டுகளை வழங்கினார். ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களைப்  பற்றிய நல்ல விஷயங்களை எழுதி வாழ்த்து தெரிவித்தனர். ஐஸ்வர்யா தன் ஆங்கிலப் புலமையை எல்லாம் காட்டி கட்டுரைகளாக எழுதித் தள்ளியிருந்தார். விட்டிருந்தால் அடிஷனல் டீஷர்ட் கேட்டிருப்பார் போலிருக்கிறது. ‘ரித் WE கா’ என்றெழுதிய விஜி, அதற்கு ‘ரித்விகா எல்லோரிடமும் ‘கா விடாமல் பழம் விடும் நபர்’ என்பது போல் விளக்கம் சொன்ன போது, நம் டீஷர்ட்டை கிழித்துக்கொண்டு சாலையில் ஓட வேண்டும் போலிருந்தது. 

இப்போதைக்கு அந்த வீட்டிலுள்ள ஒரே ஆண் நபர் பிக்பாஸ் என்பதால் ‘நீங்கதான் எங்களைப் பார்த்துக்கணும்” என்றார் ஜனனி. குழாயில் தண்ணீர் வந்தால் கூட ‘பிக்பாஸ் வீ லவ்  யூ’ என்று பிக்பாஸின் மீது பெண்கள் பாசமழை பொழிந்தார்கள்.நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை எடுக்க அனுமதித்தற்கும் ‘வீ லவ் யூ பிக்பாஸ்”.  

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2‘பொம்மலாட்டம்’ டாஸ்க்கின் இடையில் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த வைஷ்ணவியைப் பற்றி இவர்கள் புறணி பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்டோர் ரூம் வாசலில் சரியாக வந்து நின்றார் வைஷ்ணவி. கூடவே ரம்யாவும். இவர்களின் திடீர் வருகையை எதிர்பார்க்காத போட்டியாளர்கள் சந்தோஷமும் நெகிழ்ச்சியும் அடைவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. சக போட்டியாளர்களின் மூன்று முகங்களையே பார்த்து சலித்திருந்த அவர்களுக்கு இவர்களின் வருகை பெரிய ஆறுதலைத் தந்திருக்கும். “என்ன எல்லோரும் மெலிஞ்சிட்டீங்க?” என்று வந்தவர்கள் விசாரிக்க, ‘எங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா?” என்று வீட்டுக்கு வந்த மாமாவிடம் கேட்கும் சிறுமி மாதிரி கேட்டார் ஜனனி. 

நள்ளிரவில் ரம்யாவும் வைஷ்ணவியும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருந்த போது ‘மைக்கை மாட்டுங்கள்’ என்று பிக்பாஸ் அவர்களை மெல்லிய குரலில் எச்சரித்ததையும் இதற்குச் சம்பந்தமேயில்லாத ரித்விகா, தூக்கத்திலிருந்து எழுந்து சிணுங்கலுடன் மைக்கை மாட்டிக் கொண்டு மறுபடியும் படுத்துத் தூங்கியதுமான பழைய சம்பவத்தை வந்தவர்கள் சிரிப்பொலியுடன் பகிர்ந்து கொண்டனர். (1984 நாவல் எழுதிய ஜார்ஜ் ஆர்வெல்லை இந்தச் சமயத்தில் நினைத்துக்கொண்டேன். பிக்பாஸ் நிகழ்ச்சி உருவாவதற்கு அந்தப் படைப்பு ஒரு பிரதான காரணம். உயிரில்லாத இயந்திரக் குரல், உயிருள்ள மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்க முடியும் என்கிற கண்காணிப்பு சமுக அவலத்தை விவரிக்கும் படைப்பு அது). 

“யாஷிகா வெளியேறிதால் அதிர்ச்சியிலும் மனஅழுத்தத்திலும் இருந்ததாகவும், இப்போது தேறி வருவதாகவும் வைஷ்ணவியிடம் சொன்ன ஐஸ்வர்யா, இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் லட்சியம் நிறைவேறியதில் மகிழ்ச்சி என்றும் போட்டியை வெல்லும் பேராசை இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ரித்விகா அல்லது ஜனனி இதை வெல்லட்டும் என்பது அவரது விருப்பமாம். மிக குறிப்பாக ரித்விகா ஜெயித்தால் வரும் நிதி அவரது குடும்பத்துக்கு உபயோகமாக இருக்கும் என்றார். இது நல்லியல்பில் வெளிவந்த அபிப்பிராயமாக இருந்தாலும் இதிலுள்ள இரக்கத் தொனி சற்று முரணாக இருந்தது. ‘நான் வெளியில் போய் சம்பாதித்துக் கொள்வேன்’ என்று ஐஸ்வர்யா சொல்ல, ‘ஏன் அவளும்தான் அப்படிப் போய் சம்பாதிப்பாள்’ என்று வைஷ்ணவி சொன்னது நல்ல பதில்.

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2‘யாராவது ஒருவரை வெளியேற்றப் போகிறோம்’ என்கிற நாடகத்தை நடத்தத்தான் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பது பார்வையாளர்களுக்குத் தெரியும் படியான உரையாடலை வைஷ்ணவியும் ரம்யாவும் ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதன் மூலம் போட்டியாளர்களுக்கு சஸ்பென்ஸ் தருவதுதான் அவர்களின் நோக்கமாம். ஆனால் இது ரொம்பவும் மொக்கையான டிராமாவாக பிறகு முடிந்தது. ‘விஜியைச் சொல்லலாமா?. அவதான் வைல்ட் கார்ட்ல வந்திருக்கா?” என்று சரியாகக் காரணத்தோடு ரம்யா ஆரம்பிக்க, ‘கார்ட்ல பேர் எதுவும் இல்ல. அதனால பேர் சொல்ல வேணாம். அப்படியே கன்டினியூ செய்வோம். அவங்களை டென்ஷன் பண்றதுதான் மெயின் அஜெண்டா” என்று ஆச்சர்யமாக வைஷ்ணவியும் சரியான காரணத்தைப் பதிலாகச் சொன்னார். 

இதுவரையான பிக்பாஸ் நாள்களிலிருந்து மகிழ்ச்சியான மற்றும் அது அல்லாத காட்சிகளை ஒளிபரப்பப் போவதாக பிக்பாஸ் அறிவிக்க, போட்டியாளர்கள் உற்சாகக் கூக்குரல்களுடன்  மகிழ்ச்சியடைந்தனர். போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்குக் கூட உண்மையிலேயே அது ஒரு நல்ல ‘ரீவைண்ட் ஷோ’வாக இருந்திருக்கக்கூடும். பல மலரும் நினைவுகள் உள்ளே மலர்ந்தன. இந்த நூறு நாள்களில் ஒவ்வொரு போட்டியாளருமே நம்முடைய நண்பர்களைப் போல் மாறிவிட்ட நெகிழ்ச்சி தோன்றியது. வெவ்வேறு முகபாவங்களுடன் இவற்றை ஐஸ்வர்யா பார்த்துக்கொண்டிருந்தார். குறைவான நாள்களே விஜி இந்த வீட்டில் இருந்திருப்பதால், அவர் தொடர்புப்படுத்திக்கொண்ட காட்சிகள் குறைவாகத்தான் இருந்திருக்கும். வீடியோ முடிந்தவுடன், ‘நம்ம அப்ப கொஞ்சம் குண்டா இருந்திருக்கம்ல’ என்பது போல் பேசிக்கொண்டிருந்தார்கள். (அப்ப லக்ஸரி பட்ஜெட் பொருள்களையெல்லாம் பிக்பாஸே சாப்பிட்டு விடுகிறாரா?!).

வந்திருக்கும் விருந்தினர்கள் இறுதிப்போட்டியாளர்களைப் பற்றிய தங்களின் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டும் என்ற நிகழ்ச்சி அடுத்து நடந்தது. முதலில் வைஷ்ணவி ஆரம்பித்தார். ரித்விகாவைப் பற்றிச் சொல்லும் போது ‘மொதல்ல ரொம்ப அமைதியா இருந்தாங்க. நியாயம், கடமை, நேர்மை –ன்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க. பிக்பாஸ் ரூல்ஸை ஒரு முறை கூட மீறாத ஒரே போட்டியாளர்’ன்னு கூட சொல்லலாம்” என்ற போது ரித்விகாவின் முகத்தில் ஒரே குஷி. (அதுக்காக தூக்கத்துல கூட ரூல்ஸை ஃபாலோ பண்றதெல்லாம் ஓவர் மேடம்). 

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2ஐஸ்வர்யா வரும் போது ரொம்பவும் முதிர்ச்சியான பெண் என்று நினைத்ததாகவும் ஆனால் சில நாள்களிலேயே அவர் ஒரு குழந்தை என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்த வைஷ்ணவி, டார்க்கெட் என்று வந்து விட்டால் ரேஸ் குதிரை மாதிரி அதை நோக்கியே ஓடுகிறார். எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்பது ஐஸ்வர்யாவைப் பற்றிய அவரது கருத்தாக இருந்தது. ‘வைல்ட் கார்ட்ல வந்துட்டமேன்னு அலட்சியமா இல்லாம, ரொம்ப சின்ஸியராக இருக்கிறார்’ என்று விஜியைப் பற்றிய சான்றிதழை வழங்கினார் வைஷ்ணவி. கடைசியாகச் சொன்னது ஜனனியைப் பற்றியது. ‘இந்த வீட்டின் முதல் தலைவர். இறுதிப்போட்டிக்குத் தகுதியாகியிருக்கும் முதல் நபர். இவங்களை முதல் நாள் பார்க்கும் போது ரொம்பத் திட்டம் போட்டு இயங்குற ஆள் –ன்னு நெனச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, திருவிழால காணாமப் போன குழந்தை –ன்னு. ஆனா விட்டதைப் பிடிச்சுட்டாங்க’ என்ற அபிப்பிராயத்துக்கு அகம் மகிழ்ந்தார் ஜனனி. 

அடுத்ததாக ரம்யா, இந்த நால்வரைப் பற்றிய தன் கருத்துகளை தெரிவிக்கத் தொடங்கினார். “ரித்விகாவை முதல் நாள் பார்க்கும் போது, இவங்க கூட பேச முடியுமா, நம்ம கூட செட் ஆவாங்களா’ன்னு நெனச்சேன். அந்த அளவுக்கு சைலன்ட்டா இருந்தாங்க. அப்புறம் போகப் போக பழகி நெருக்கமாயிட்டோம். ரொம்ப நியூட்ரலா இருப்பாங்க. எப்ப தேவையோ அப்ப மட்டும் அளவா பேசறது எனக்குப் பிடிச்ச குவாலிட்டி” என்ற ரம்யா, அடுத்ததாக ஐஸ்வர்யாவைப் பற்றிச் சொன்னது: ‘என்னோட சிஸ்டர் மாதிரிதான் இவங்களை ஃபீல் பண்ணியிருக்கேன். நல்லது கெட்டது –ன்னு ரெண்டு பக்கமும் இருக்கு. ஒரு பக்கம் ஏஞ்செல் மாதிரி இருப்பாங்க. கோபம் வரும் போதுதான் இன்னொரு பக்கத்தையும் பார்க்க முடியுது”.  

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2விஜியைப் பற்றிச் சொல்லத் தொடங்கிய ரம்யா, “ரொம்ப தைரியமான நபர். அவங்க அவங்களா இருக்காங்க. டாஸ்க்குகளுக்கு எப்படித்தான் யோசிக்கறாங்கன்னே தெரியலை. பயங்கரமான பிரெயின்.”. இறுதியாக ஜனனியைப் பற்றியது. “முதல் வாரத்துல ரொம்ப ஓப்பனா இருந்தாங்க. அப்புறம் நியூட்ரலா மாறிட்டாங்க. இவங்க ஃபைனலுக்கு வருவாங்கன்னு எனக்கு அப்பவே தெரியும்” என்று முடித்தார்.

**

போட்டியாளர்களின் நடிப்பாற்றலை வெளிக்கொணரும் டாஸ்க் அடுத்ததாக நடந்தது. அந்நியன் திரைப்படக்காட்சியை ஐஸ்வர்யாவும் (என்ன பொருத்தம்!), மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சியை ஐனனியும், ‘சந்திரமுகி’ ஜோதிகாவாக ரித்விகாவும் கைப்புள்ளயாக விஜியும் நடிக்க வேண்டுமாம். விருந்தினர்களான ரம்யாவும் வைஷ்ணவியும் ரத்தக்கண்ணீர் திரைப்படக்காட்சிகளை நடிக்க வேண்டும். ‘அந்நியனா, அது என்னாது?” என்று விசாரித்துக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ரம்யா இவருக்குக் காட்சியை விளக்கிச் சொல்லி உதவினார். (இதற்காக வீடியோ காட்சிகளையும் காட்டுவார்களாக இருக்கும் என்று தோன்றியது. பார்த்திராத படத்தின் காட்சியை வெறும் வாய்மொழி விளக்கத்தை வைத்துக்கொண்டு நடிப்பது சிரமமானது அல்லவா?).

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


பிறகு அந்த காமெடியான டாஸ்க் தொடங்கியது. அந்நியன் பாத்திரமெல்லாம் ஐஸ்வர்யாவுக்கு உண்மையிலேயே ஜூஜூபி என்பதால் பாத்திரமாகவே மாறிவிட்டார். ‘குப்பைத் தொட்டியை எடுத்துட்டு வாடா” என்று அந்நியனாக உறுமி, ‘நான் குப்பையைக் கொட்டலை’ என்று அம்பியாக குழைந்ததையெல்லாம் விக்ரம் பார்த்திருந்தால் மிரண்டிருப்பார். நிஜமாகவே அடிவிழுமோ என்று ஒரு கட்டத்தில் வைஷ்ணவி கூட பயந்தது போல் தெரிந்தது. 

வின்னர் ‘கைப்புள்ள’ என்பது ஒரு லெஜண்டரி பாத்திரம். அதை வடிவேலுவைத் தவிர வேறு எவருமே செய்ய முடியாது. எனவே விஜி அவ்வாறு செய்ய முயன்றது, நூறு சதவிகிதத்தில் ஒரு சதவிகிதமாகக் கூட இல்லாமல் இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஜனனி இதற்கு உதவியது க்யூட்டாக இருந்தது. பிக்பாஸ்ஸில் நடந்த சம்பவங்களையே இதற்கு உபயோகப்படுத்திக் கொண்டது சுவாரஸ்யம். 

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2சந்திரமுகி பாத்திரத்தை ரித்விகா ஓரளவுக்குத் திறமையாகவே செய்தார். ‘வா’ன்னு கூப்பிடுங்க என்று அந்தக் கோபத்தின் இடையிலும் விஜியை பிராம்ப்ட் செய்தது நகைச்சுவை. பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மூன்றாம் பிறை கிளைமாக்ஸில் கமல் உருண்டு புரண்டதை, மும்தாஜை வைத்துக்கொண்டு ஜனனி கிண்டலடித்து நடித்தது ரகளையான காட்சி. ரித்விகாவும் இதற்கு நன்றாக ஈடுகொடுத்தார். 

நடிப்பதற்காக மிகவும் சங்கடப்பட்ட ரம்யா, சம்பிரதாயத்துக்கு மேடையேறினார். எம்.ஆர்.ராதாவை குறைந்த பட்சமாக இமிட்டேட் செய்வதற்கு கூட அபாரமான திறமை வேண்டும். எனவே வைஷ்ணவி செய்தது நமக்குத்தான் ரத்தக்கண்ணீரை வரவழைத்தது. ‘இது இட்லின்னா சட்னி கூட நம்பாது’ மொமன்ட்.  


பிறகு எவிக்ஷன் நாடகத்தை வந்திருந்த இருவரும் தொடங்கினார்கள். மிகச் சொதப்பலான டிராமா அது. இந்தச் சமயத்தில்தான் கமல். இதை எத்தனை திறமையாகக் கையாள்கிறார் என்கிற வித்தியாசம் புரிந்தது. வைஷ்ணவியால் போதுமான சஸ்பென்ஸைக் கொடுக்க முடியவில்லை. ‘பிக்பாஸ் செய்யச் சொன்னாருப்பா. அதனாலதான் வந்தேன்’ என்கிற மனநிலையிலேயே வைஷ்ணவி இருந்தார். சிறிது நேரம் கழிந்தவுடன் ‘உங்கள் நேரம் முடிந்தது. வெளியே வாங்க” என்று கூப்பிட்ட பிக்பாஸ் ‘உங்களைப் போய் கூப்பிட்டேன் பாரு’ என்று மனதில் சலிப்பாக நினைத்திருக்கக்கூடும்.  

``ரித்விகா ஜெயிச்சுக்கட்டும்!" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா?! #BiggBossTamil2இறுதி நாள்கள் ரணகளமாக இருக்குமோ என்று பயந்துகொண்டிருந்தால் ‘பூச்சி’ என்று விளையாட்டுக் காட்டி குழந்தைகளை சிரிக்க வைப்பது போல் பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கிறார். இந்த ஜாலியான மனநிலையிலேயே போட்டியை முடித்து வைத்தால் கூட நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு