Published:Updated:

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2
பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2

இன்று காலையில், `ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்கிற பாடலை பிக்பாஸ் வீட்டில் போட்டிருக்கலாம். அந்த அளவுக்கு இன்றைய நாள் பாடலும் கூத்துமாக இருந்தது. இந்த சந்தோஷ மனநிலையிலேயே இறுதிப்போட்டியை முடித்து விடலாம் என்பது பிக்பாஸின் நோக்கமாக இருக்கக்கூடும். ‘டெடர் ஆசாமி’ கனிந்து இப்போது திருந்தி விட்டார் போல. மகிழ்ச்சி. 

‘தகிட தகிட’ என்கிற பெயரில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தொடங்கியது. கடந்த சீஸனில் நடுவிலேயே வந்த விஷயம்தான் இது. 4 போட்டியாளர்களும் அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகரின் ஒப்பனை மற்றும் உடல்மொழியில் நாள் முழுவதும் இருக்க வேண்டும். பாட்டு ஒலிக்கும் போது சம்பந்தப்பட்ட நடிகர் எந்தப் பணியில் இருந்தாலும் நிறுத்திவிட்டு மேடையில் வந்து ஆட வேண்டும். ஐஸ்வர்யா, நயன்தாரா பாத்திரத்திலும் (‘நானும் ரவுடிதான்’), ரித்விகா, அஜித் பாத்திரத்திலும் (வேதாளம்), ஜனனி, த்ரிஷா பாத்திரத்திலும் (கில்லி), விஜி, விஜய் பாத்திரத்திலும் (போக்கிரி) தென்பட்டார்கள்.  

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2இதில் மற்றவர்களைக் கூட ஒரு மாதிரியாக ஒப்புக் கொள்ளலாம். ரித்விகா மட்டும் சம்பந்தமேயில்லாமல் இருந்தார். ‘தல’ ரசிகர்கள் இதற்காகப் பொதுநல வழக்கு கூட போடலாம். பாவாடை, தாவணியில் ‘ஜனனி’ செம க்யூட்டாக இருந்தார். சில வருடங்கள் கழித்து அத்தைப் பெண்ணைப் பார்க்கும் போது ‘அட இந்தப் புள்ளயா இது?” என்று விழி விரிய பார்த்த ஞாபகமெல்லாம் வந்து போனது. 

‘ஆலுமா டோலுமா’வோடு மங்களகரமாக இந்த டாஸ்க் தொடங்கியது. ‘யாருடைய பாட்டு” என்பதில் குழப்பம் வந்து சற்றுத் திகைத்து பின்பு ரித்விகா சென்று நடனம் என்கிற பெயரில் எதையோ செய்தார். அடுத்ததாக, ‘இருமுகன்’ படத்திலிருந்து ‘ஹெலனா’ பாட்டு ஒலிபரப்பாக, நயன்தாரா சென்று அவருடைய உலகத்தில் நின்று ஆடினார். ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு’ பாடலுக்கு ‘த்ரிஷா’ ஆட, திடீரென்று சம்பந்தமேயில்லாமல் ‘கபாலி’ படத்திலிருந்து ‘நெருப்புடா” பாடல் ஒலித்தது. 

‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்று போட்டியாளர்கள் திகைத்து நின்றுகொண்டிருக்கும் போது ‘கெத்தான’ நடையுடன் உள்ளே நுழைந்தார் பாலாஜி. கோட், கறுப்புக்கண்ணாடி என்று ஒரே அமர்க்களம். மீதமிருந்த 50 கிராம் முடியின் மீது 500 கிராம் டையை தடவிக் கொண்டு இளமையாகத் திரும்பியிருந்தார். போட்டியாளர்கள் சந்தோஷக் கூச்சலுடன் அவரை உள்ளே அழைத்து வந்தனர். அத்தனை கெத்தாக உள்ளே வந்தவரிடம் ‘கைவலி எப்படி இருக்கு?” என்று ரித்விகா விசாரிக்க, அப்படியே டொங்கலாக அமர்ந்து ‘ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தேன்’ என்று அவர் சொன்னதில் நட்சத்திரப் பிம்பங்களின் கெத்துக்குப் பின்னால் உள்ள அவஸ்தைகள் தெரிந்தன. 

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2இதே போல், ‘நம்ம லிஸ்டில் இல்லையே’ என்கிற வரிசையில் ‘கை தட்டித் தட்டி அழைத்தாளே’ என்ற பாடல் ஒலிக்க, ‘சிம்ரன்’ ஒப்பனையில் யாஷிகா உள்ளே நுழைந்தார். தன்னைக் கூட்டிப் போக வந்திருக்கும் அம்மாவைப் பார்த்த எல்கேஜி குழந்தையின் மகிழ்ச்சி ஐஸ்வர்யாவிடம் தெரிந்தது. பாய்ந்து சென்று கட்டிக்கொண்டார்கள். ‘இப்பத்தான் இவ இவ்வளவு ஸ்மைல் பண்றா” என்றார் ஜனனி. அனைவரையும் விசாரித்த யாஷிகா, நடனத்தை நிறுத்தாமல் மேடைக்குச் சென்று ஆடினார். “நான் வெளியே வந்துருவேன்னு ஃபிரெண்ட்ஸ்ங்க நம்பவேயில்ல. ஆனா அப்பாவுக்கு உள்ளுணர்வு தோணுச்சு. நான் வந்துருவேன்னு. எல்லோருக்கும் மகிழ்ச்சி’ என்று அவர் சொல்ல பிறகு வரிசையாக சில பாடல்கள் ஒலித்தன. ‘நெருப்பு’டாவை மறுபடியும் பிக்பாஸ் பற்ற வைக்க, கெத்தாக எழுந்து பாலாஜி மேடைக்கு வருவதற்குள் பாட்டு நிறுத்தப்பட்டது. இப்படியாக சில குறும்புகளையும் பிக்பாஸ் செய்தார். 

‘இடையில் வந்த இடைச்செருகலாக இல்லாமல் தவறுகளை தைரியமாகத் தட்டிக் கேட்டு உங்களின் தனித்துவத்தை நிலைநாட்டிய’ என்பது போல் நீளமாகச் சென்ற வாக்கியத்துடன் விஜியின் வீடியோவுக்கான முன்னுரையை வழங்கினார் பிக்பாஸ். பிறகு வீடியோ ஒளிபரப்பானது. தனது குழந்தையுடன் அவர் இருக்கும் காட்சிகள், உறவுகளைப் பிரிந்திருக்கும் வலியுடன் குழந்தை போல கண்கலங்கியது போன்ற காட்சிகள் சிறப்பாக இருந்தன. நள்ளிரவில் விஜி உள்ளே நுழையும் போது போட்ட பாட்டு காரணமாக ‘என்னமோ ஏதோவென்று’ அலறியடித்துக்கொண்டு சென்றாயன் ஓடி வரும் காட்சியைப் பார்த்து இரண்டாம் முறையாக விழுந்து விழுந்து சிரித்தார் ஜனனி. ‘பார்த்தீங்களா. பிக்பாஸ் எல்லோரையும் சமமாத்தான் பார்க்கறாரு’ என்று பிக்பாஸுக்கு ஐஸ் வைத்தார் ரித்விகா.  

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2பிறகு மீண்டும் சில பாடல்கள் ஒலிபரப்பாகின. இறுதிப்போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை எந்த அளவுக்குக் கவனித்துள்ளார்கள் என்பதை சோதிக்கும் டாஸ்க் நடந்தது. சிலவற்றைச் சரியாகச் சொன்னாலும் பலவற்றைத் தவறாகச் சொன்னார்கள். ‘எல்லாம் டல்கோஸ்’ என்று சலித்துக் கொண்டார் நடுவர் பாலாஜி. இந்தப் போட்டியில் வென்ற ஜனனிக்கு சாக்லேட் பரிசளிக்கப்பட்டது. ‘இப்ப நான் டிஸிப்ளின் ஆயிட்டேன். வெஷல் வாஷிங் சரியாப் பண்றேன். படுக்கையை ஒழுங்கு பண்றேன்’ என்று தனக்குத் தானே சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. (வில்லன்னா கிளைமாக்ஸ்ல திருந்தித்தானே ஆகணும்” என்று புறணி பேசக்கூடும்’). மீண்டும் சில பாடல்கள் ஒலிபரப்பாகின. 

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2**

மகிழ்ச்சி, கோபம், சோகம் என்று பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்றைத் தேர்ந்தெடுத்து போட்டியாளர்கள் நடித்துக் காண்பிக்க வேண்டும் என்பது அடுத்த டாஸ்க். சம்பவத்தை வேறு வகையாக மாற்றிக்கொள்ளலாம் என்கிற ஜாலியான விதியும் இருந்தது. ‘கழிவறைக்குச் செல்ல அனுமதி கோரி மும்தாஜிடம் ‘டெரா டெரா பைட்டாக’ சென்றாயன் அவஸ்தைப்பட்ட’ சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள். மும்தாஜாக ஐஸ்வர்யா நடிக்க, ஏற்கெனவே சென்றாயனாக நடித்து அசத்திய ஜனனி, அதே பாத்திரத்தை எடுத்துக் கொண்டார். 

அடுத்ததாக ‘குப்பை கொட்டிய சமாசாரம்’. பாலாஜியாக ரித்விகா நடிக்க, ஐஸ்வர்யாவாக பாலாஜி நடித்தார். (ஆனால் ஐஸ்வர்யாவின் கெத்தில் ஒரு பங்கு கூட இல்லை).  “ஃபாலோ த ராணி, நான் பாடிகார்ட் டேனி’ என்று ரைமிங்காக வசனம் பேசினார் ஜனனி. ‘யாரு குப்பை கொட்டறது” என்று பாலாஜி கேட்க, ‘நானு நானு.. ‘ என்று அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். சென்றாயனாக நடித்த யாஷிகா, ரித்விகாவின் தலையில் கையால் கொட்ட, ‘நான் குப்பையைக் கொட்டச் சொன்னேன்டா.. இது கூடவா புரியாது?” என்று மரண மொக்கை ஜோக் அடித்தார் பாலாஜி. (அப்போது அவர் இருந்தது ஐஸ்வர்யா பாத்திரம் என்பதை மறந்து விட்டார் போல). அனைவரும் குப்பையைக் கொட்டச் சென்ற போது ‘பாலாஜி’ (ரித்விகா) தனது பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த அனைவரும் மூக்கை மூடி விலகிச் சென்றார்கள். ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தது. இந்த சுய பகடிக்கு பாலாஜி ஒப்புக்கொண்டது சிறப்பான விஷயம். ‘திரும்பத் திரும்ப இந்த விஷயம் பேசப்படுகிறதே’ என்று நினைத்தாரோ, என்னவோ, ஐஸ்வர்யா மட்டும் தொடக்கத்தில் சற்றுக் கலக்கமாக இருந்தார். 

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2மும்தாஜாக நடித்த ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டப்பட்டவுடன் ‘ஓ மை காட்.. என்ன பண்றீங்க?” என்று பதறுவது போல் பாவனை செய்ய, ‘ஆமாம்.. குப்பை கொட்ற வரைக்கும் சும்மா இருந்துட்டு இப்ப சீன் போடறியா?” என்று ரித்விகா கிண்டலடித்தார். இரண்டு சம்பவங்கள்தாம் வந்தன. மூன்றாவதைக் காணவில்லை. 
 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

சிறிது நேரத்துக்குப் பிறகு ஜனனி பற்றிய வீடியோ ஒளிபரப்பானது. பார்பி பொம்மையின் ‘தமிழ் வெர்ஷன்’ என்று ஜனனியைச் சொல்லலாம். பல காட்சிகளில் அத்தனை க்யூட்டாக இருந்தார். குறிப்பாக மஹத்தின் உடையை அயர்ன் செய்து கொண்டே காமிராவை பரிதாபமாக பார்த்த அந்தப் புகைப்படம் சிறப்பானது.  

பிக்பாஸ் எல்லாருமே டல்கோஸ்..! `லாலால்லா' சீசன் #BiggBossTamil2பாலாஜியும் யாஷிகாவும் கிளம்ப வேண்டிய நேரம் வந்ததால் விடைபெற்றுச் சென்றார்கள். ‘இன்னிக்கு நாள் ரொம்ப நல்லாயிருந்துச்சுல்ல’ என்று ஜஸ்வர்யாவும் ஜனனியும் கைகோத்து மகிழ்ந்தார்கள். அவர்கள் ஒப்பனைகளைக் கலைத்து சாவகாசமாக அமர்ந்திருந்த போது, அந்த இரவிலும் வரிசையாக பாடல்களைப் போட்டார் பிக்பாஸ். தொடர்ச்சியாக வந்த பாடல்களுக்குச் சளைக்காமல் ஆடினார்கள். (‘இந்த டாஸ்க் எப்போதோ முடிந்து விட்டது. தொழில்நுட்பக்குறையினால் பாடல்கள் தவறுதலாக ஒலித்தன’ என்றோர் அறிவிப்பு வந்திருந்தால் நீண்ட நேரம் ஆடிய போட்டியாளர்களுக்கு செம பல்பு கிடைத்திருக்கும்). அவர்கள் ஆடிக்கொண்டிருந்த போதே விளக்குகள் அணைக்கப்பட, ‘இன்னமும் ஒரேயோரு பாட்டுப் போடுங்க பாஸ்’ என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். 

நள்ளிரவு 12.45. வரவேற்பறை சோபாவில் படுத்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, தூக்கத்தில் பினாத்துவது போல் தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தார். ‘பிக்பாஸ் இன்னமும் 3 நாள்ல நான் போயிடுவேன். உங்களை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன். இங்க தெரியாம நெறைய தப்புப் பண்ணிட்டேன். தெரிஞ்சு பண்ணலே. எதையும் திட்டம் போட்டு பண்ணலை. இங்கிருந்து நெறைய கத்துக்கிட்டேன். இங்க ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப தூரம் வந்திருக்கேன். இறுதிப்போட்டியில் ஜெயிக்கணும்னு ஆசையில்லை. ஃபைனல் வந்ததே சந்தோஷம்தான்’ என்பதை தன் மழலைத் தமிழில் பேசிய ஐஸ்வர்யாவின் பிரியத்தையும் உருக்கத்தையும் கண்ட பிக்பாஸ் உள்ளே கண்ணீர் சிந்தியிருக்கக்கூடும். 

பாக்யராஜ் நடித்து, இயக்கிய ‘சின்ன வீடு’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். பாக்யராஜிற்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்து விடும் அவரது மனைவி கல்பனா, அது பற்றி கொதிப்புடன் பேச திருட்டு முழியுடன் அங்கிருந்து சென்று விடுவார் பாக்யராஜ். நள்ளிரவில் பாக்யராஜ் தூக்கத்தில் உளறுவதைக் கேட்டு எழுந்து சென்று பார்ப்பார் கல்பனா. ‘பாக்யலஷ்மி.. என்னை மன்னிச்சுடு.. தெரியாம தப்பு பண்ணிட்டேன். நீதான் என் தெய்வம்’ என்றெல்லாம் அவர் தூக்கத்தில் பினாத்துவதைக் கண்டு கண்கலங்கும் கல்பனா, அங்கிருந்து அகன்றவுடன் கண் விழித்து அவர் செல்வதை நைசாக பார்ப்பார் பாக்யராஜ். முக்கால் பகுதி படம் முடிந்த நிலையில், அந்தக் காட்சியின் மீதுதான் ‘கதை, வசனம், இயக்கம்’ என்ற டைட்டில் கார்ட் வரும். ரகளையான காட்சியது. 

ஐஸ்வர்யாவின் அனத்தல் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அவர் ‘சின்ன வீடு’ படம் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

அடுத்த கட்டுரைக்கு