Election bannerElection banner
Published:Updated:

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2
`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2

இன்னமும் மூன்று நாள்கள் பாக்கியுள்ள நிலையில், சாத்துக்குடியோட மருத்துவமனைக்கு வருகிறவர்கள் போல முன்னாள் போட்டியாளர்கள் தினமும் விருந்தினராக வந்து செல்கிறார்கள். ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்கிற பொன்மொழிக்கு ஏற்ப, இத்தனை நாள்கள் போட்டியாளர்களை சிரமப்படுத்திய பிக்பாஸ், இப்போது சாக்லேட், பரிசுப் பொருள்கள் என்று அவர்கள் மனம் குளிரும்படியான விஷயங்களை தந்து கொண்டிருக்கிறார்.

102-ம் நாள் காலை. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி..’ என்கிற பொருத்தமான பாடல் ஒலிபரப்பானது. பாலகுமாரிகளுள் ஒருவரான ரித்விகா, பாடலின் பொருள் புரிந்து சிரித்துக்கொண்டிருந்தார். ‘நைட்டு ஐஸ்வர்யாவை காணாமேன்னு பயந்துட்டேன். அப்புறம் பார்த்தா இங்க வந்து சோபால படுத்துக்கிட்டு பிக்பாஸ் கூட பேசிட்டிருக்கா” என்று விஜி சொல்ல, ‘அவ தினமும் பேசுவா போலிருக்கு” என்றார் ஜனனி. பிக்பாஸில் ஜெயிப்பது வேறு, பிக்பாஸையே ஜெயிப்பது வேறு என்கிற வித்தியாசம் ஐஸ்வர்யாக்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது போல. 

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2“வந்தா ராஜாவாத்தான் வருவேன், அப்படி வந்தா ராஜாவுக்கு நூறு தோஸ்து’ என்கிற ‘செசிவா’ வசனம் போல், வெற்றியை நெருங்கப் போகும் பூரிப்பில் இருக்கிறாரோ என்னமோ, ரித்விகா இன்று கூடுதல் வசீகரத்துடன் இருந்தார். ‘ஃபைனலுக்கு வந்துட்டோம். இதுதான் முக்கியம். ஜெயிக்கறது நம்ம கைல இல்ல. பார்ப்போம்’ என்பது மாதிரி ரித்விகாவும் ஜனனியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘இந்த வாரம் ரொம்ப நல்லாப் போகுது. முதலாளி நல்லா சோறு போடறாருல்ல. இங்கிருந்து போறதுக்கு கஷ்டமா இருக்கு” என்கிற விசுவாச ரேஞ்சுக்கு அவர்கள் போய் விட்டார்கள். 


மேள, தாளத்துடன் சில நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளே வந்து ஓர் உறையைத் தந்து விட்டுச் சென்றார்கள். ஓர் இணையதளம் நடத்தும் சிறப்புப் போட்டி. பட்ஜெட் பிரச்னையில்லாமல் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களாம். (நம்ம மேல எம்பூட்டு அக்கறை!). இதற்கான கூப்பன்கள் வீடு முழுவதும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் புள்ளிகள் இருக்கும். எவர் அதிக கூப்பன்களைக் கண்டெடுத்து அதிக மதிப்பெண்ணைப் பெறுகிறாரோ, அவர் வெற்றியாளர். 

ஐஸ்வர்யாவும் விஜியும் வீடு முழுவதும் பரவிப் பாய்ந்து துள்ளியோடி கூப்பன்களைத் தேடியெடுத்தார்கள். நீண்ட நேரமாக ஜனனிக்கு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருந்தவர் விஜி. மேளதாளக்காரர்கள் மறுபடியும் உள்ளே வந்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள். அவர்கள் கொண்டு வந்த பேனரில் ‘மகிழ்ச்சீக்கு’ என்று எழுதப்பட்டிருந்தது. (தீபாவளி கொண்டாட்டம் ஒருபுறம் இருக்கட்டும். பன்னாட்டு நிறுவனங்கள், முதலில் விளம்பர வாசகங்களை ஒழுங்காக எழுதினாலே நாங்கள் மகிழ்ச்சியடைவோம்).  

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2ஸ்டோர் ரூம் மணியடித்தது. இணையதளப் பரிசுப் பொருள் வந்திருக்குமோ என்று ஆவலாக கதவைத் திறந்தார் ஜனனி. உள்ளே சென்றாயன் ஒளிந்திருந்தார். மற்றவர்கள் சந்தோஷக் கூச்சலிட, கம்பீரமான நடையுடன் எங்கோ விறுவிறுவென நடந்தார் சென்றாயன். மற்றவர்கள் சற்றுத் திகைத்து ‘என்ன செய்கிறார்” என்று பார்த்தார்கள். நேராக கழிவறைக்குச் சென்ற சென்றாயன் அதைச் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். (பழசை மறக்காமல் இருக்கிறாராமாம்!). ‘நல்லாயிருந்த பாத்ரூமை ஏன் நாசம் பண்றீங்க?” என்று சென்றாயனைக் கலாய்த்தார் ரித்விகா. பிறகு தன் சஸ்பென்ஸைக் கலைத்த சென்றாயன், அனைவருக்கும் இனிப்பு வழங்கி. ..’உங்க எல்லோருக்குமே வெளில நல்ல பேரு இருக்கு. சூப்பரா வருவீங்க. சாமி சத்தியமா சொல்றேன்” என்று ‘ஜக்கம்மா சொல்றா’ குடுகுடுப்பைக்காரன் ரேஞ்சுக்கு ஆவேசமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்தார். ‘சிம்பு உன்னை விசாரிச்சார்’ என்றதும் ஐஸ்வர்யா குதூகலமாகி விட்டார். “என்னா சொன்னாரு” என்று அவர் ஆவலாக விசாரிக்க ‘அடுத்த படத்துல உனக்கு ஹீரோயின் வாய்ப்பு இருக்கு” என்ற சென்றாயன் ‘அய்யோ.. உளறிட்டேனே” என்று வருத்தப்பட, ஆகாயத்தில் மிதந்தார் ஐஸ்வர்யா. “ஐ லவ் யூ STR” என்று சந்தோஷக் கூச்சல் ஐஸ்வர்யாவிடமிருந்து வெளிப்பட்டது. (இத்தனை நாள் ஐ லவ் யூ பிக்பாஸ்’ ன்னு சொல்லிட்டிருந்த புள்ள படார்னு மாறிடுச்சே. அப்ப பிக்பாஸ் கதி?!). 

வெளியுலகத்தில் தன்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறியாமலேயே நீண்ட நாள்களைக் கழித்து விட்ட போட்டியாளர்களுக்குச் சென்றாயன் கொண்டு வந்த தகவல்கள் நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். ரித்விகாவை இறுக அணைத்துக் கொண்டு யாஷிகா இல்லாத குறையைப் போக்கிக் கொண்டார் ஐஸ்வர்யா.  

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2மஹத்தைப் பற்றிப் பேச்சு வர, ‘அவன் எங்கேயோ கோவா போயிருக்கான் போல. பைனலுக்குக் கூட வர்றது டவுட்டுதான்’ என்று சென்றாயன் சொல்லும் போதே தெரிந்து போயிற்று, மஹத் வரப்போவது. தன் பிரத்தியேகமான இளிப்புடன் உள்ளே வந்த மஹத்தை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். ‘என்ன ஐஸூ. பயங்கரமா ஒல்லியாயிட்டே’ என்று விசாரித்த மஹத், நேராகப் படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டார். “நீங்க மூணு பேரும் சூப்பரா பண்றீங்கப்பா..சந்தோஷமா இருக்கு” என்று விஜியைத் தவிர்த்து மற்றவர்களை நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். 

வீட்டிலுள்ள 4 போட்டியாளர்களும் இரண்டு அணியாகப் பிரிந்து ஒரு டாஸ்க் செய்ய வேண்டும். நீச்சல் குளத்தில் உள்ள நீரை மக் வழியாக எடுத்து ஒரு பக்கெட்டை நிரப்ப வேண்டும். எவர் முதலில் நிரப்புகிறார் என்பது போட்டி. இத்தனை மொக்கையான போட்டி என்னும் போதே தெரிந்து போயிற்று, அது மஹத்தின் விளையாட்டு என்பது. ஆனால் ‘டாஸ்க்’ செய்தே பழகிப் போன மக்கள் விசையை அழுத்தியவுடன் இயங்கும் இயந்திரம் போல செயல்பட்டார்கள். அதிலும் ஐஸ்வர்யா செயல்பட்டது ஆவேசத்துடன் இருந்தது. எதிரணி பக்கெட்டை நிரப்பி முடித்த பின்னரும் ஆவேசம் குறையாமல் நிரப்பிக்கொண்டிருந்தார்.

‘மச்சான்.. நம்ம ஜெயிக்கறோம் மச்சான்’.. அப்படின்னு என் கிட்ட அடிக்கடி சொல்லிட்டு, ஒவ்வொரு வாரமும் இந்தப் பய புள்ள என்னை நாமினேட் பண்ணியிருக்கான். நான் ஒரேயொருமுறைதான் இவனை நாமினேட் பண்ணினேன்’ என்ற ஜாலியான புகாரை மஹத்தின் மீது வைத்தார் சென்றாயன். வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக அனைத்து வீடியோக்களையும் பார்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.  

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2வந்திருக்கும் விருந்தினர்கள், போட்டியாளர்களாக இருந்த போது நடந்த சம்பவங்களை, தற்போதைய இறுதிப் போட்டியாளர்கள் நடித்துக் காண்பிக்க வேண்டும் என்கிற அடுத்த டாஸ்க். ‘பொம்மலாட்டம்’ போட்டியில் மஹத்தும் டேனியும் மோதிக் கொண்டதை ஜாலியாக செய்து காண்பித்தார் ஐஸ்வர்யா. பாலாஜியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு மஹத் மன்னிப்பு கேட்ட காட்சியை ரித்விகா செய்து காண்பித்தார். யாஷிகாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் மஹத் பதறும் காட்சியையும் அவர் செய்து காண்பிக்க, வெடித்துச் சிரித்தார் மஹத். 

சென்றாயனின் தலையில் டை அடிக்க ஐஸ்வர்யா சம்மதிக்க வைத்த காட்சியை ஜனனியும் விஜியும் செய்து காண்பித்தார்கள். வழக்கம் போல் சென்றாயனாக நடித்து அசத்தினார் ஜனனி. உலகமே இடிந்து விழுந்தாலும் தன் வேலையில் கவனமாக இருக்கிற ரித்விகாவின் ‘ஜென்’ குணாதிசயத்தைக் கிண்டலடித்தார் சென்றாயன். இதற்கு ரசித்து சிரித்தார் ரித்விகா. பொம்மலாட்டம் டாஸ்க்கில் தான் தள்ளி விழுவதற்கு முன்பே அலறியடித்து விழுந்த ரித்விகாவைக் கிண்டலடித்தார் மஹத். ‘நீ ஓடி வர்ற வேகத்தைப் பார்த்தே இந்தப் புள்ள பயந்து விழுந்திருக்கும்” என்றார் சென்றாயன். அந்த டாஸ்க்கில் ஜனனி அடைந்த ஆவேசத்தை அவர் நடித்துக் காண்பிக்க வீடே சிரிப்பில் மூழ்கியது. 

**

“உன் குற்றமா.. என் குற்றமா’ என்கிற அடுத்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அடுத்தவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். தன் பக்கம் தவறில்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் அதை மறுத்து விளக்கம் அளிக்கலாம் அல்லது தவற்றை ஒப்புக்கொள்ளலாம்.  

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2முதலில் ஆரம்பித்த ஜனனி ‘ராஜமாதாவா இருந்த மும்தாஜ் கிட்ட நீ பண்ணது ஓவர்தான் மஹத்’ என்று புகாரை முன்வைக்க “ஆமாம். அதை அப்ப பர்சனலா எடுத்துக்கிட்டேன். தப்புதான்’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் மஹத்.  “ஐஸ்வர்யா குப்பை கொட்டாம இருந்திருக்கலாம்’ என்று அடுத்த புகாரை ஜனனி முன்வைக்க, ‘இதையே எத்தனைமுறைதான் சொல்லிக் காண்பிப்பீங்க’ என்று பரிதாப பாவனையை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா. “ரித்விகா.. டாஸ்க் அப்ப நான் வேற மாதிரி ஆயிடுவேன்னு சொல்றீங்க. ஆனா சமயங்கள்ல நீங்களும் அப்படித்தான் இருந்தீங்க” என்கிற புகாரை முன் வைக்க, “அந்த வாட்டர் டேங்க் டாஸ்க்தானே? அப்ப நாம சரியா பேசிக்க மாட்டோம். நீங்க ஒட்டுக் கேட்டுட்டு போனீங்க. அதனாலதான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கமளித்தார் ரித்விகா. 

அடுத்ததாக வந்த ஐஸ்வர்யா “ஜனனி … நீங்க பொதுவா கோபமே படமாட்டீங்க. கோலமாவு டாஸ்க்ல ஏன் கோபப்பட்டீங்க, என் டவரை தள்ளி விட்டீங்க?” என்று கேட்க, “அதற்கு முந்தின நாள்தான் கைவலிக்க அவ்ள கஷ்டப்பட்டு காப்பாத்தினதை நீ தள்ளி விட்டதாலதான் பதிலுக்குக் கோபப்பட்டேன்’ என்று விளக்கமளித்தார் ஜனனி. அடுத்து விஜி பக்கம் ஐஸ்வர்யா நகர ‘சொல்லும்மா.. எல்லாக் குறையையும் சொல்லு” என்று உற்சாகமாகத் தயாரானார் விஜி. ‘நீங்க இங்க வரும் போது பாலாஜி குரூப் கிட்ட மட்டும் நல்லாப் பேசினீங்க. எங்க கிட்ட பேசலை ஏன்?” என்கிற முக்கியமான கேள்வியைக் கேட்க, ‘eye contact பண்றவங்க கிட்ட மட்டும்தான் எனக்குப் பேச வரும். உங்க பக்கம் இருந்து ஸ்மைலே வரலே. vibe தப்பா இருந்தது. மத்தபடி மனுஷங்க கூட பழகறதுன்னா எனக்குப் பிடிக்கும்” என்று ‘வாங்க பழகலாம்’ விளக்கத்தை அளித்தார் விஜி. “ரேங்கிங் டாஸ்க்ல ரெண்டாவது ரேங்க் உங்களுக்குக் கிடைக்கும் போது, ‘ஐஸூக்கு இருக்கட்டும்’ன்னு சொன்னீங்க.. ஏன்?” என்று அடுத்த கேள்வியை ரித்விகா பக்கம் தள்ளினார் ஐஸ்வர்யா. ‘நீதான் பச்சப்புள்ள மாதிரி அழுதியே.. ஸ்போர்டிவ்வா எடுத்துக்கலையே” என்று ரித்விகா பதில் சொன்னதை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார் ஐஸ்வர்யா.

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2
அடுத்ததாக வந்தவர் விஜி. ஜனனியை நோக்கி சரியான சிக்ஸரை அடித்தார். ‘நீங்க நிறைய சமயங்கள்ல பேசாம டிப்ளமஸியா இருந்தீங்க. ‘அது எனக்கு சரியா வராது –ன்ற மாதிரி சொன்னீங்க. அப்ப ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தீங்கன்னு கூட நான் கேட்டேன்.” என்று ‘நீங்க பிக்பாஸூக்குத் தேவையில்லாத ஆணி’ என்கிற மாதிரியான புகாரை முன்வைத்தார். ‘எனக்குன்னு ஒரு பேஸிக் நேச்சர் இருக்கு. அதன்படிதான் நான் செயல்பட முடியும். இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு நான் அப்புறம் பேசினேன்’ என்று ஜனனி அளித்த விளக்கத்தை பிறகு விஜியும் ஏற்றுக் கொண்டார். ‘உங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு காரணம் யோசிச்சேன்’ என்று ரித்விகாவை நோக்கி ஆரம்பித்த விஜி ‘இந்த வீட்லயே சரியா சிந்திக்கற ஆள் நீங்க. கமல் முன்னாடி தவிர பேச வேண்டிய நெறைய சமயத்துல மெளனமாக இருந்தீங்க. ஏன்?” என்ற கேள்வியைக் கேட்க ‘மஹத்தை இந்த வீடே திட்டினப்ப அவன் கிட்ட இருக்கற நல்ல குணத்தை நான் மட்டும்தான் சொன்னேன்’ என்று எஸ்கேப் ஆனார் ரித்விகா.

அடுத்ததாக வந்தவர் பொறுமையின் சிகரம், நேர்மையின் திலகம் ரித்விகா. “யாஷிகா கூட எனக்கு ஃப்ரெண்டுதான், ஆனா இங்க யாருக்குமே அந்த விஷயம் தெரியாது. ஆனா மஹத் உங்க ஃப்ரெண்டு –ன்றதால பாரபட்சம் காட்டியிருக்கீங்க” என்ற புகாரை ஜனனியின் மீது வைக்க அதற்கு அப்ரூவர் ஆனார் ஜனனி. “ஆமாம். ஆரம்பகட்டத்துல அப்படி நடந்துக்கிட்டது உண்மைதான். அப்புறம் அந்தத் தவற்றை உணர்ந்து என்னை மாத்திக்கிட்டேன். ஆனா மஹத் கிட்ட தனியா அவன் செஞ்ச தப்பைச் சொல்லியிருக்கேன்” என்று விளக்கமளித்தார். 

“விஜி.. கோலமாவு டாஸ்க்ல நீங்க ரொம்ப ஆக்ரோஷமா இருந்தீங்க. நீங்களும் யாஷிகாவும் ராட்டினம் மாதிரி சுத்தினது டெரரா இருந்தது’ என்ற புகாரை அடுத்ததாக வைத்தார் ரித்விகா. இதற்கு விஜி அளித்த விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது. “நெம்பர் 1 அக்ரஸிவ்வே நெம்பர் 2 அக்ரஸிவ்வைத் தாக்கும் போது நெ.2 அக்ரஸ்ஸிவ் கொஞ்சம் கூட அக்ரஸ்ஸிவ்வா ஆகக்கூடாதா?” (பைத்தியக்கார ஆஸ்பத்திரில பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கற வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சா, அவர் வேற எந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரில பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் கிட்ட வைத்தியம் பார்த்துப்பார்” மோமென்ட் இது).

**

“நீங்க இறுதிப் போட்டிக்குத் தயாராவது போல் இப்போது தயார் ஆக வேண்டும். நீங்கள் குறுகிய நேரத்தில் அலங்கரித்திருக்கும் விதம், உங்கள் பேச்சு ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும்’ என்று அடுத்த டாஸ்க்கை தொடங்கி வைத்தார் மஹத். பெண்கள் குறுகிய நேரத்தில் ஒப்பனையை முடிக்க வேண்டும் என்பதெல்லாம் உலகமகா கடினமான டாஸ்க்தான் என்றாலும் தயாராகி வந்தனர். அதில் உண்மையிலேயே க்யூட் ஆக இருந்த ஐஸ்வர்யாவை ‘சிறந்த ஒப்பனைக்காக’ தேர்ந்தேடுத்தார் மஹத். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


பிறகு ஒவ்வொருவரும் இறுதிப் போட்டியில் வென்றிருப்பதற்கான பாவனையில் தங்கள் உரையை முன்வைத்தார்கள். ‘தமில் மக்களே நன்றி’ என்றார் ஐஸ்வர்யா. ‘இறுதிப் போட்டிக்குத் தகுதியான யாஷிகாவை மிஸ் பண்றேன்’ என்ற நியாயமான விஷயத்தை இணைத்தார் ரித்விகா. ‘வெற்றியை விடவும் மக்களின் மனதை வெற்றி கொண்டதையே பெரிய விஷயமாக நினைக்கிறேன்’ என்று அரசியல்வாதி மாதிரி பேசினார் ஜனனி. ‘சுயமரியாதை, தனித்துவம் போன்றவைதாம் இந்த வெற்றிக்குக் காரணம். புது விஜயலஷ்மியை நானே பார்த்தேன்’ என்றார் விஜி. 

‘வெளில போனவுடனே நிறைய நல்ல படங்களுக்கு வாய்ப்புக் கிடைச்சது. அப்பதான் பிக்பாஸ்ஸோட அருமையை உணர்ந்தேன். வீட்ல போய் டிவில இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது இதை நிறைய மிஸ் பண்ணினேன். உணர்ச்சிகரமான பிணைப்பு இருந்தது. நீங்க மூணு பேரும் சிறப்பா விளையாடறீங்க” என்று அப்போதும் விஜியை ஓரம் தள்ளி வைத்தார் மஹத். 

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2அடுத்து அவர் சொன்ன விஷயம் பார்வையாளர்களுக்கு மிக முக்கியமானது. “இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களின் உறவினர்கள் வரும் காட்சியை வீட்டில் பார்க்கும் போது அழுதேன். என் வீட்டில் விசாரித்தார்கள். உள்ளே இருந்த எனக்குத்தான் அந்த வலி தெரியும். இங்க இருக்கறவங்க சின்னச் சின்ன தப்புகள்தான் செஞ்சாங்க. கொலை பண்ணலை, யார் வாழ்க்கையையும் நாசம் பண்ணலை. எல்லோரும் மனுஷங்கதான்.” என்று கண்கலங்கினார் மஹத்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும். யார் வின்னர் –னு சொல்லுங்க” என்று போட்டியாளர்கள் ஆர்வமாகக் கேட்க, ‘நானும் சென்றாயனும்தான் வின்னர்ஸ்’ என்று அதுவரையிலான விளையாட்டைப் போட்டு உடைத்தார் மஹத். ‘அடப்பாவி.. இதுக்காக எக்ஸ்ட்ரா கோட்டிங் மேக்கப்பெல்லாம் போட்டோமே’ என்பது போல் ரித்விகா சிணுங்கினார். 

மறுபடியும் ஒரு ரேங்க் விளையாட்டு. வந்திருக்கும் விருந்தினர்களான மஹத்தும், சென்றாயனும் தங்களின் தனிப்பட்ட கருத்தின் மீதாக, கலந்துரையாடாமல் நான்கு போட்டியாளர்களை வரிசைப்படுத்த வேண்டும். சென்றாயன் முதலில் ஆரம்பித்தார். 1) ரித்விகா, 2) ஜனனி, 3) ஐஸ்வர்யா, 4) விஜி என்பதாக அவருடைய தரவரிசை தேர்வு இருந்தது. ஆனால் முற்றிலும் வேறொரு கோணத்தை அளித்தார் மஹத். 1) ஐஸ்வர்யா, 2) ஜனனி 3) ரித்விகா 4) விஜி என்பதாக அவர் தேர்வு இருந்தது. ‘ஐஸ்வர்யா அனுபவிச்ச வலிகள் அத்தகையது” என்று அவர் அளித்த விளக்கத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்களோ, தெரியாது. “இது என்னோட பர்சனல் சாய்ஸ். யாரும் திட்டாதீங்க” என்று பாதுகாப்பான வேண்டுகோளையும் கூட வைத்து விட்டார். (தினமும் சோஷியல் மீடியாவில் நேரம் செலவு செஞ்சிருப்பார் போல!). 

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2விருந்தினர்களின் நேரம் முடிய ‘பசங்களா வெளியே வாங்க’ என்று அன்புடன் அழைத்தார் பிக்பாஸ். ‘இளைய தளபதி ஐஸ்வர்யா, அல்டிமேட் ரித்விகா” என்று புதிய பட்டங்களை தந்தார் சென்றாயன். (இந்த விஷயம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியுமா!). “நாளைக்கு என்னோட பரிசா சாப்பாடு கொடுத்தனுப்பறேன்” என்றார் மஹத். ‘காலை சாப்பாடுல இருந்து வருமா?” என்று ஜாக்கிரதையாகக் கேட்டுக் கொண்டார் ரித்விகா. (சமைக்கறவங்களுக்குத்தானே இந்தப் பிரச்னை தெரியும்?!).

**

விஜியை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், சில முக்கியமான கேள்விகளை அவரிடம் கேட்டார். 

`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்?’ #BiggBossTamil2“இத்தனை நாள்களை கழித்த பிறகு உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது?” என்பது முதல் கேள்வி. ‘பரவசம், பெருமை, மகிழ்ச்சி என்று கலவையான உணர்வுகளால் இருக்கிறேன்” என்று பதில் அளித்தார் விஜி. “இந்த வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது எதைக் கொண்டு செல்வீர்கள், எதை விட்டுச் செல்வீர்கள்” என்பது அடுத்த கேள்வி. (எதை எடுத்துச் செல்வீர்கள் என்பது உணர்வு ரீதியான கேள்வி என்று நினைக்கிறேன். ஆனால் விஜி சொன்னது புயவயமான பொருள்களாக இருந்தது). “என் பையனுக்காக பொம்மை எடுத்துப் போவேன். தண்ணி பாட்டிலும் வேணும்” என்றார். “கோபம் வரும் போது ஹார்ஷா பேசறேன்னு சொல்றாங்க. அதை நிச்சயம் விட்டுடுவேன்” என்று வாக்குறுதி அளித்தார். 

“மற்ற மூவருடன் ஒப்பிடும் போது உங்கள் பலம் மற்றும் பலவீனம் என்ன?” என்பது அடுத்த கேள்வி. ‘மூன்று பேரிடம் உள்ள பலமும் என் கிட்ட இருக்கு. லேட்டா வந்தேன் –றதுதான் பலவீனம்’ என்ற பதில் வந்தது. ‘வைல்ட் கார்ட் என்று மற்றவர்கள் தொடர்ந்து சொல்வதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு ‘அவங்க பாயின்ட் ஆஃப் வியூல இருந்து பார்க்கும் போது அது நியாயம்தான்’ என்கிற நேர்மையான பதிலை அளித்த விஜி “ஆனா நானும் என்னோட பெஸ்ட்டை கொடுத்திருக்கேன். ஹார்ஷா பேசறேன் –ற ஒரே குறையை மட்டும்தான் அவங்களால சொல்ல முடிஞ்சது. மத்தபடி எல்லா விஷயமும் சரியா பண்ணியிருக்கேன்ற நம்பிக்கை இருக்கு” என்றார். 

‘கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டீர்களா?” என்ற கேள்விக்கு “ஆம். குறைந்த நாள்கள் என்றாலும் இந்த வீடு முழுவதும் என்னுடைய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்தேன். இந்த அனுபவம் விலை மதிப்பில்லாதது. மகத்தானது” என்று சொல்லி முடித்தார்.

‘திரும்பத் திரும்ப பேசற நீ’ மாதிரி, ‘am watching you’ என்று திரும்பத் திரும்ப மிரட்டிக் கொண்டிருக்கிற கமல்ஹாசன் சொல்லும் செய்தி ‘3 days to go’. ஆம். இன்னமும் மூன்றே நாள்கள். இறுதிப் போட்டியில் வெல்லப் போகிறவர் எவர்? மஹத்தா, சென்றாயனா?

‘இளைய தளபதி ஐஸ்வர்யா, அல்டிமேட் ரித்விகா ' இப்படியெல்லாம் போற போக்குல சென்றாயன் கிளப்பிவிடறாரே, இதப்பத்தி என்ன நினைக்கறீங்க ? . 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு