Published:Updated:

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2

பிக்பாஸ் இறுதிச் சுற்று

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2

பிக்பாஸ் இறுதிச் சுற்று

Published:Updated:
வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2


பிக்பாஸ் சீஸன் 2-ன் கடைசி நாள் இன்று. 105 நாள்கள். (தொடக்க நாளையும் சேர்த்தால் எண்ணிக்கை 106). மகிழ்ச்சி, கோபம், பரவசம், சிரிப்பு, கண்ணீர் என்று நவரசங்களுடன் இறுதி நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. ‘ரித்விகா’தான் வெற்றியாளர் என்று ஏதோவொரு கட்டத்தில் பெரும்பாலோனோர் உணர்ந்துவிட்டதாலும் இதர போட்டியாளர்கள்கூட பெரிய சர்ச்சைகள் இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டதாலும் இன்று பெரிதான சஸ்பென்ஸ் ஏதுமில்லை. டேனி, யாஷிகா போன்ற வலுவான போட்டியாளர்கள் இறுதி வரிசையில் இருந்திருந்து அவர்களுடன் மோதி ரித்விகா இந்தப் பரிசை வென்றிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்கிற பொன்மொழியை நிஜமாக்கியிருக்கிறார் ரித்விகா. சீஸன் 2 வின்னர், ரன்னர், கமலின் காஃபி, இந்த சீஸனின் எந்த எபிசோடையும் பார்க்காத முன்னாள் பிரபலம், கலக்கப்போவது யார் டீமின் ஆசத்தல் ஸ்பூஃப் என பிக்பாஸ் ஃபைனலில் நடந்த 16 ஹைலைட்ஸ் இதோ

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2பிக்பாஸ் வீட்டின் நாய்க்குட்டி உட்பட அனைவருக்குமே ரித்விகாதான் வெற்றியாளர் என்பது தெரிந்திருக்கும்போது ரித்விகாவுக்கு இது உள்ளுற நிச்சயம் அழுத்தமாகத் தெரிந்திருக்கும். என்றாலும், பரிசை வாங்கியவுடனே, ஏ ‘நான் அப்பா ஆயிட்டேன்’ என்று கதறிய சென்றாயனுக்கு ஈடாக ரித்விகா கதறினார். அதுவரை அடக்கி வைத்திருந்த பரவசம் முழுவதும் மகிழ்ச்சியாகவும் கண்ணீராகவும் வந்தது போல. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் வந்த ஜனனி மற்றும் விஜிக்காவது செல்போன் ஆறுதல் பரிசாக கிடைத்தது. ஆனால் இரண்டாமிடத்தில் வந்த ஐஸ்வர்யாவுக்கு வெங்கலக்கிண்ணிகூட கிடைக்கவில்லை. பாவம், அது பாட்டுக்கு ‘We love we love big boss’ என்று கத்திக்கொண்டிருந்தது. பிக்பாஸ் தனது பிரியாவிடைச் செய்தியை தரும்போது காதலனைப் பிரியும் சோகமும் துயரமும் அவரின் முகத்தில் தெரிந்தது. தனிமைச் சிறையில் அடைக்கப்படுபவர்கள் அஃறிணைப் பொருள்களின் மீது சிநேகம் கொள்வதின் மூலம் தங்களின் தனிமையை சமன் செய்துகொள்ள முயல்வார்களாம். அந்த வகையில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸின் குரல் போல. 

பிக்பாஸ் போட்டியை நன்கு புரிந்துகொண்டு விளையாடியவர்களில் ஒருவராக ரித்விகாவைச் சொல்லலாம். ‘இந்த ரூல் அப்படித்தான் இருக்கும்... இல்ல... அது அப்படி இருக்காது’ என்றெல்லாம் தொடக்க நாள்களிலேயே அவர் விவரித்ததைப் பார்த்தபோது இதர சீஸன்களை அவர் ஓவர் டைமில் பார்த்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. சர்ச்சைகளில் சிக்காமல் மிக ஜாக்கிரதையாக இருந்தார். இதற்கு அவரது இயல்பான குணாதிசயமும் துணை நின்றது. ஆனால், இதையொரு புகாராகவே மற்றவர்கள் நாமினேஷன் சமயங்களில் தொடர்ந்து சொல்லும்போது பிறகு அவசியமான இடங்களில் ஜோதியில் கலந்தார். அதிர்ஷ்டமும் அவருடைய பக்கத்தில் இருந்தது. ‘ரூல்ஸ் ரித்விகா’ என்ற பெயரை இதர போட்டியாளர்களிடம் சம்பாதிக்கும் அளவுக்கு கறாராக இருந்தார். ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்கத் துடிக்கும் ‘முதல் பெஞ்ச்’ மாணவன் போல் பிக்பாஸிடம் பல சமயங்களில் நல்ல பெயரை வாங்கினார். கூடுதலாக, ‘பொண்ணு.. தமிழ்ப் பொண்ணு’ என்கிற பிரம்மாஸ்திரத்தை இவர் எடுத்ததில் வெற்றி இவரது கையில் வந்து சேர்ந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2ஜனனியை ஏறத்தாழ இன்னொரு ரித்விகா என்றுகூட சொல்லலாம். ஆனால் அவசியமான சந்தர்ப்பங்களில்கூட மெளனம் சாதித்தது, நட்பு காரணமாக பாரபட்சம் பார்த்தது, டாஸ்குகளை சரியாகக் கையாளாதது போன்றவை இவருக்கு பின்னடைவை அளித்திருக்கலாம். இதைப் போலவே விஜியை ‘இன்னொரு ஐஸ்வர்யா’ எனலாம். டாஸ்க்குகளை ஆர்வமாக செய்த இவர், சண்டை என்று வந்தால் ‘மவனே’ என்று புடவையை வரிந்துகொண்டு கிளம்பிவிடுகிறார். இந்தக் குணாதிசயத்துக்காகவே ‘கலகம் உண்டாகட்டும்’ என்று இவரை திட்டமிட்டு ‘வைல்ட் கார்டாக’ பிக்பாஸ் அனுப்பியிருக்கலாம். இவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்திருந்தால் ‘வைல்ட் கார்ட்லதானே வந்தே’ என்கிற ஒரே காரணத்தைக்கூட தராமல் கடுமையான போட்டியாளராக இருந்திருப்பார். குறுகிய நேரத்திலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்த வகையில் பாராட்டுக்குரியவர். 

ஐஸ்வர்யா, சர்ச்சைகளின் நாயகி. பிக்பாஸ் வீட்டு கேமராக்களுக்கு அதிக தீனியையும் அன்பையும் தந்தவர். ‘அவன் கிட்ட டிவியைப் போடுன்னு சொன்னா கீழே போட்டுடுவாம்மா’ என்கிற சிட்டி ரோபோ போல பிக்பாஸ் தரும் டாஸ்க்குகளை முடிக்க வேண்டுமென்றால் எதையும் யோசிக்காமல் இவர் செய்த விஷயங்கள் இவருக்கே எதிராக அமைந்தன. சமயங்களில் ‘ரெட் சிப்’ பொருத்திய ரோபாவாகவும் இவர் மாறியதில் பார்வையாளர்களின் அதிக எதிர்ப்பையும் சம்பாதித்தவர். ‘எல்லாம் எங்க வீட்டுப் பிள்ளைக’ என்கிற முதிர்ச்சியைக் கொண்டிருக்கிற கமலின் கோபத்தையும் பாராமுகத்தையும்கூட சம்பாதித்த ஒரே போட்டியாளர். 

இப்படி பல எதிர்மறையான அம்சங்களை வைத்துக்கொண்டு இரண்டாம் இடம் வரை ஐஸ்வர்யா முன்னேறியது ஆச்சர்யம். எதையும் பூசி மெழுகாமல் அந்நந்த நேரத்து உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்திவிடும் நேர்மை சிலருக்கு பிடித்திருக்கலாம். பலருக்குப் பிடிக்கவில்லை. ‘யாஷிகா இல்லையென்றால் இத்தனை நாள்கள் என்னால் தாக்குப் பிடித்திருக்க முடியாது’ என்கிற உண்மையை சபையிலேயே ஒப்புக்கொள்ளும் நேர்மையும் இவருக்கு இருந்தது. வேற்றுக் கலாசாரத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அதனால் கூடுதலாக எழும் எதிர்ப்புகளையும் சமாளித்து இவர் முன்னகர்ந்தது பாராட்டுக்குரிய விஷயம். இந்த வகையில் ‘மினி ஓவியா’ என்றுகூட ஐஸ்வர்யாவைச் சொல்லலாம். 

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2‘தமிழ்நாடு யாரையும் கைவிட்டதில்லை. உங்களையும் கைவிட மாட்டோம்’ என்று பார்வையாளர்களில் இருந்த ஒரு பெண் ஐஸ்வர்யாவை நோக்கிச் சொன்னார். ஐஸ்வர்யா செய்த பிழைகளை ‘தங்கள் வீட்டுப் பிள்ளை’யின் சறுக்கலாக நினைத்து நிச்சயம் தமிழகம் ஏற்றுக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. 

வலுவான எதிர்நாயகன் இல்லாமல் எந்தவொரு கதையும் சுவாரஸ்யம் பெறாது. அந்த வகையில் ஐஸ்வர்யா ஒரு சுவாரஸ்யமான Antagonist. ‘ராணி மகாராணி’ டாஸ்க்கில் ஒரு மாபெரும் பிழையைச் செய்தாலும் அதில் இவரின் தோரணை அபாரமாக இருந்தது. இவரின் நடிப்புத்திறனை தமிழ்த்திரை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

**

‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா...’ என்ற பாடலோடு Grand Finale நாள் கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கியது. அது, அங்கவஸ்திரமா அல்லது துண்டா என்று தெரியவில்லை, கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சட்டையோடு தைத்த டெய்லரைப் பாராட்ட வேண்டும். அப்படியொரு விநோதமான சட்டை மற்றும் வேட்டியோடு வசீகரமான தோற்றத்தில் உள்ளே நுழைந்தார் ‘விரு விரு மாண்டி... விருமாண்டி.’ “இரண்டாம் சீஸனின் முடிவு என்று சொல்வதைவிட நிறைவு என்று சொல்லலாம். இந்தப் பயணம், அனுபவம் எனக்கு நிறைவைத் தந்திருக்கிறது. நம் பாரம்பர்யக் கலைகளை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கரகாட்டம், மயிலாட்டம் போன்றவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்” என்று தன் உரையை ஆரம்பித்தார் கமல். 

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2“இதில் பலரைப் பற்றிய பாராட்டுக்கள் இருந்தன. பலர் நட்சத்திரமாக மாறினார்கள். பலர் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக மாறினார்கள். விமர்சனங்கள் இருந்தன. என்னைப் பற்றிகூட விமர்சனம் இருந்தது. அவற்றுக்கு பதில் சொல்லவில்லை என்று எவரும் நினைக்கக் கூடாது. அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், சில விமர்சனங்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. காலப்போக்கில் அவையே பதிலாக மாறிவிடும். நான் ‘சாட்சிபூதமாக’ மட்டும் இருந்திருக்கிறேன். நிகழ்வதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். தலையிடக் கூடாது. அனைவரையும் பாரபட்சமின்றிதான் பார்த்தேன். அவர்களின் குணக்கேடுகள், நலன்கள் எனக்கு பொழுபோக்காகத்தான் இருந்தன. கோபம் வரவில்லை. ஆனால், உங்களில் பலருக்கு கோபம் இருந்தது. எனக்கும் கோபம் வந்தாலும் தற்காலிகம்தான். எங்க வீட்டுப் பிள்ளை தப்பு பண்ணா என்ன இருக்குமோ அப்படித்தான். நீடிக்காது. ஆனால், உங்களில் சிலர் கட்சி பிரித்துக்கொண்டு போராடியதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. மனித மனங்களைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்த 106 நாள்களின் பயணம், நல்ல பயணமாக இருந்தது’ என்ற நீண்ட முன்னுரையை வழங்கினார். 

அடுத்ததாக பார்வையாளர்களுடன் கேள்வி பதில் நேரம் தொடங்கியது ‘அடுத்த சீஸன்தானே, பண்ணிட்டா போச்சு’ என்று முதல் கேள்வியை எதிர்கொண்ட கமல், அடுத்த கேள்விக்கு ‘பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராகக் கலந்துகொள்ளும் பேரார்வம் ‘அரங்கேற்றம்’ கமலுக்கு உண்டு. இப்பவும்கூட சிறிய ஆர்வம் இருக்கிறது. இதுவொரு அரிய வாய்ப்பு” என்றார். ‘பிக்பாஸ் தருணங்களில் மிகப் பிடித்தமானது என்றால், இதோ இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் அல்லவா, அதுதான். முன்னர் கேள்வி-பதில்களை அநாமதேயர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைவிட, திரைப்பட பாத்திரங்களாக அல்லாமல் நான், நானாக மக்களைச் சந்திக்கும் இந்தத் தருணம்தான் பிடிக்கிறது” என்றவுடன் கேள்வி-பதில் நேரம் ‘முடித்து’ வைக்கப்பட்டது. 

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்தார் கமல். தமிழ்ப் பெண்கள் பாரம்பர்ய உடையில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. ‘கல்யாண கேக்குல இருக்கற பொம்மை மாதிரி இருக்காங்கள்ல’ என்று மூவரையும் புகழ்ந்தார். பிக்பாஸ் வீட்டுக்கு ஒரே டெய்லர் போலிருக்கிறது. பிறகு மமதி அணிந்திருந்த உடையும் இதேபோல்தான் இருந்தது. 

``வெற்றியாளர் யாருன்னு இவங்க ஏறத்தாழ யூகிச்சிட்டாங்க’ என்று பார்வையாளர்களைப் பற்றி சொன்ன கமல், போட்டியாளர்களை அவரவர்களின் ரசிகர்களுடன் பேச வைத்தார்.  

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2‘டாஸ்க்குன்னு வந்தா கொலைவெறியாயிடறீங்களே' என்றார் விஜி ரசிகர். ‘ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்களை எங்க வீட்டுப் பொண்ணா பார்க்க ஆரம்பிச்சிட்டோம்’ என்றார் ரித்விகா ரசிகர். ஒரு முன்னணி நடிகருக்கான விசில்களும் கைத்தட்டல்களும் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தன. “அந்தந்த நேரத்து உணர்ச்சியை அப்போதே வெளிப்படுத்தி பிறகு எழுந்து வந்துடறீங்க. அது எனக்குப் பிடிக்கும்’ என்றார் ஓர் இளம்பெண். இவரைப் பார்ப்பதற்கு இலங்கையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். ‘உங்க தமிழ் பிடிக்கும். எங்க பசங்களும் அதை விரும்பறாங்க’ என்றார். (விட்டா சங்கத்தமிழ், வழக்குத் தமிழ், வட்டாரத் தமிழ் போன்வற்றுக்குப் பிறகு ‘ஐஸ்வர்யா தமிழ்’ என்று புது வகைமையை உருவாக்கிவிடுவார்கள்போல. வெளங்கினாப்லதான்!).

“உங்க மேல விமர்சனங்களும் இருக்கு. விமர்சகர்களைக் கொண்டு வரவில்லை. உங்களுக்கு தாக்கம் வந்து விடக்கூடாது என்பதால். வெளியில் வந்து பாருங்கள்” என்று போட்டியாளர்களிடம் கமல் சொன்னதற்குப் பிறகு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன. சீஸன் 2-ன் முன்னாள் போட்டியாளர்களில் பொன்னம்பலம் மற்றும் ஜனனியைத் தவிர அனைவரும் மேடையில் ஒவ்வொருவராக தோன்றி நடனமாடினார்கள். அவரவர்களுக்குப் பொருத்தமான பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டது சிறப்பு. சில முக்கியமான வசனங்களும் இணைந்து ஒலித்தன. ‘வீட்டு குத்துவிளக்கு’ பாடலுக்கு சிறப்பாக நடனமாடினார் நித்யா. ‘பீலா.. உடாத.. சீனைப் போடாத’ பாடலை மும்தாஜிற்கு போட்டது குறும்பு. கடைசியில் ‘உலக நாயகனே’ பாடலோடு இந்த நிகழ்ச்சி முடிந்தது. 

மஞ்சள் சோபாவில் வந்து அமர்ந்த கமல், “நான் இப்ப ஹவுஸ்மேட்டா இருக்கேன். நீங்க ஒவ்வொருத்தரும் ஆங்க்கரா இருந்து கேள்வி கேட்கலாம்’ என்று அரிய சந்தர்ப்பத்தை முன்னாள் போட்டியாளர்களுக்கு தந்தார். ‘உக்காருப்பா தம்பி’ என்பது மாதிரி கையைக் காட்டி இந்த டாஸ்கை சிறப்பாக  துவக்கினார் ஜனனி. ஆனால் சில நிமிடங்களில் கமல்ஹாசனே ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’யாக திரும்பி வந்து விட்டார். ஹவுஸ்மேட்டைக் காணவில்லை. ஆனால் எதிர் தரப்பின் பல கேள்விகளை வைத்து கேட்டவர்களிடமே பந்தை தள்ளி விட்டதில் கமலின் சமயோசிதமும் குறும்பும் வெளிப்பட்டது. ‘இந்த ஸ்ட்ராட்டஜி –ன்னு ஒண்ணு பண்றீங்க பாருங்க. அதெல்லாம் தேவையேயில்ல. நீங்க.. நீங்களா இருந்தாலே போதும். நீங்க தப்பு பண்ணா கூட மக்கள் ஏத்துப்பாங்க. அவங்களுக்கும் இந்த ஸ்ராட்டஜின்ற விஷயம் பிடிக்கலை” என்றார் கமல். (ஐஸ்வர்யா உட்பட பலர் அப்படித்தானே இருந்தாங்க பாஸூ. பஞ்சாயத்துல போட்டு காய்ச்சிட்டு இப்ப இப்படிச் சொன்னா எப்படி?) 

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2‘உங்க பக்கத்துல வந்து உக்காந்துடுவேன்’ என்று மிரட்டிய மும்தாஜ் அது போலவே வந்து அமர்ந்து ‘உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு.. என் ராசா.. என் மேல் ஆசையில்லையா?” என்று பாடாத குறையாக, ‘தப்பு செய்யும் போது திட்டியிருக்கீங்க. நல்லது செஞ்ச போது பாராட்டியிருக்கீங்க. ஆனா நான் செஞ்சது எதுவுமேவா உங்களுக்குப் பிடிக்கலை?’ என்று ‘ஐயோ பாவமாக’ கேட்ட போது ‘நீங்கள் காட்டிய பிரியம் பிடித்திருந்தது. அதில் நிஜம் இருக்கத்தான் செய்தது’ என்றார் கமல். 

இதற்குப் பிறகு அனைத்துப் போட்டியாளர்களுக்குமான ஒரு குறும்படம் போடப்பட்டது. சர்ச்சையான காட்சிகளின் தொகுப்பை் போட்டு சபையில் அவர்களின் மானத்தை வாங்கினார்கள். 

பிறகு நிகழ்ந்தது இன்றைய நிகழ்ச்சியின் ஒரு முக்கியமான, ரகளையான பகுதி எனலாம். ‘கலக்கப் போவது யாரு’ டீம், பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து ஓர் அட்டகாசமான spoof நாடகத்தை நடத்தினார்கள். சிரித்து சிரித்து கண்ணீரே வந்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்திருந்தவர்கள் கூட, இதை தவற விடாதீர்கள். அத்தனை சுவாரஸ்யமான பகுதி. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயத்தையும் கிண்டலடித்து தீர்த்தார்கள். ஒரேயொரு கம்ப்ளெயிண்ட்டில் அனைவரையும் கோர்த்து விடும் ஜனனியின் பாத்திரத்திற்குத்தான் அதிக டேமேஜ். 

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2மும்தாஜாக நடித்திருந்தவரும் எல்லாவற்றிற்கும் கண்ணீர் விட்டு அசத்தியிருந்தார். ‘முடியை கலர் பண்றதுக்குப் பதிலாக நான் விஷம் குடிச்சு செத்தே போயிடுவேன். எங்கே விஷபாட்டில்.. என்று மும்தாஜ் கேட்க, ‘கூப்பிட்டீங்களா” என்று ஜனனி வந்து நின்றது நகைச்சுவையின் உச்சம். மஹத்தின் கையை வைத்து மற்றவர்களை அடிக்கும் யாஷிகாவின் பகுதி சிறப்பு. பாலாஜியாக நடித்திருந்தவர் மிகத் துல்லியமாக தன் பாவனையை வெளிப்படுத்தினார். இதில் கமலையும் இணைத்திருக்கலாம். பதிலாக கவுண்டமணியை கொண்டு வந்திருந்தார்கள். ‘இது உங்களை சந்தோஷப்படுத்துவற்காகத்தான். காயப்படுத்த அல்ல’ என்கிற பாதுகாப்பான குறிப்பை கமல்ஹாசன் பிறகு வழங்கினார். அடுத்து பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு ஒளிபரப்பானது. மலரும் நினைவுகளாக இது அமைந்திருந்தது. 

**

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் சிலர் மேடையில் அமர்ந்திருந்தார்கள். தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவர்களும் இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டு விட்டார்கள் அல்லது பாதிக்கப்பட்டு விட்டார்கள். எனவே அவர்களின் குரலும் இங்கு ஒலிக்க வேண்டும் என்பது நல்ல நோக்கமே. ஆனால் பிக்பாஸ் டீம் எதிர்பார்த்திருந்த மோதலும் ஏற்பட்டதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். 

‘ஏன் தப்பான ஸ்ட்டராஜி யூஸ் பண்ணீங்க?’ என்று கயல்விழி முன் வைத்த கேள்விக்கு ஐஸ்வர்யா சொன்ன பதில் எவருக்கேனும் புரிந்திருக்குமானால் தபால் உறையில் எழுதி எனக்கு அனுப்பவும். “எங்க தமிழ்நாட்டுக்கு வந்தப்புறம் கோபமே வரக்கூடாது. குணமா வாயில சொல்லணும்” என்றார் பாலாஜியின் அம்மா. ஆம். தமி்ழகம் ஒரு அமைதிப்பூங்கா. தவறை உணர்ந்து விட்டால் அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று அவர் சொன்னது சரியானது.

‘டாஸ்க்குன்னு வந்துட்டா அந்நியனா மாறிடறீங்களே?” என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார் விஜியின் அண்ணி. இந்தக் கேள்வியை விஜியிடமும் பின்னர் தனியாக அவர் கேட்கலாம். ‘am dedicated to big boss’ என்று பதில் அளித்தார் ஐஸ்வர்யா. (பிக்பாஸை நம்பினோர் கைவிடப்படுவர்!). ‘எனக்கு வாய்ப்பு கிடைச்சா வெச்சு செய்வேன்’ என்று முன்னர் ஆவேசப்பட்ட உமா ரியாஸ்கான், ‘என் பையனை எல்லோரும் ப்ளெஸ் பண்ணுங்க’ என்று முடித்துக் கொண்டது நிம்மதி. ‘ஷாரிக் பையாவோட அம்மா நானு’ என்று இவர் அறிமுகப்படுத்திக் கொண்ட போது மையமாக சிரித்தார் ஐஸ்வர்யா. “உங்களின் நண்பர்கள் வெளிவந்து விட்ட பிறகு, இத்தனை எதிர்மறைகளின் இடையில் எப்படி தாக்குப் பிடித்தீர்கள்?” என்ற முக்கியமான கேள்வியைக் கேட்டார் பிராச்சி. “நண்பர்களின் உதவியால் எப்படியோ சமாளிச்சேன்” என்றார் ஐஸ்வர்யா.

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2‘நல்லாத்தானே போயிட்டிருக்கு’ என்று சென்ற இந்தப் பகுதியில் மும்தாஜின் சகோதரர் வந்தவுடன் சற்று ரணகளமாக மாறியது. அமைதியான பாசமலராகவும், பிள்ளைப் பூச்சியாகவும் இருந்த இவரால் இப்படி பேச முடியுமா என்று ஆச்சரியப்படுமளவிற்கு வெளுத்து வாங்கினார். “வீட்ல இருக்கும் போது சண்டை வரும். அப்புறம் சமாதானம் ஆயிடுவீங்க. அது ஓகே. ஆனா வெளியே போனப்பறமும் அப்படி இருக்கறது சரியா? மும்தாஜை திட்டி வர்ற டிவிட்களுக்கெல்லாம் லைக் போட்டீங்க. மஹத் ரெட் கார்ட் வாங்கி வெளியே வந்ததுக்கு கைதட்டி விசிலடிச்சீங்க. ஒரு பொண்ணு மேல நடந்த விஷயங்களில் உங்களுக்கு உடன்பாடா?” என்று நித்யாவிடம் கேட்டார். “மும்தாஜ் ஆர்மி என்னை வெச்சு வெச்சாங்க.. எங்க தனிப்பட்ட விஷயத்தையும் உள்ளே இழுத்தாங்க.. என்று நித்யா அளித்த நீ்ண்ட பதிலை பொறுமையாகக் கேட்ட மும்தாஜின் சகோதரர், “அதுக்கு இது பதில் இல்லையே?” என்று சொன்னது சரியானது. மும்தாஜ் ஆர்மி செய்யும் அத்துமீறல்களுக்கு அவர் எப்படிப் பொறுப்பாவார்? 

‘என்னோட டிவிட்டருக்கு அட்மின் இருக்காங்க’ என்று ஒரு சமயத்தில் நித்யா சொன்னது ‘ராஜா’த்தனமாக இருந்தது. ‘ஒரு பார்வையாளராக நான் சில விஷயங்களை ரசித்தேன். அதில் என்ன தப்பு?’ என்று நித்யா சொன்ன பதில் ஏற்படையதாக இல்லை. ‘பெண்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களைச் செய்கிறேன்” என்று சொல்லும் ஒரு பெண்மணி, ஒரு பொதுநிகழ்ச்சியில் சக பெண்ணின் மீது நிகழ்ந்த அவமதிப்புகளின் மீது, தனிப்பட்ட காரணங்களுக்காக மகிழ்வது மோசமான விஷயம். இதை ‘பார்வையாளர்’ என்ற கோணத்தில் மழுப்பக்கூடாது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்டவர் என்கிற முறையில் இந்த நிகழ்ச்சியில் உள்ள அழுத்தம் நித்யாவிற்குத் தெரியும். இதில் ஏற்படும் கசப்பை வெளியில் சென்றும் அவர் தொடர்வது முறையானதாக இல்லை. சமூகவலைத்தளங்களில் வரும் பின்னூட்டங்களை ஒரு பிரபலம் கருத்தில் கொள்ள ஆரம்பித்தால் அதற்கு முடிவேயில்லை. விஷச்சுழலுக்கு அது இட்டுச் செல்லும். நித்யா அதற்குப் பலியானது துரதிர்ஷ்டமானது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


ஒரு கட்டத்திற்குப் பிறகு மும்தாஜூம் இந்த விவாதத்திற்குள் நுழைந்தார். ‘எங்களுக்கும் கேள்வி கேட்க சிலர் இருந்தாங்க. ஓகே… ஆனா உங்கள் பர்சனல் மேட்டர் பொதுவுல வந்தததுக்கு காரணம் நீங்கதான். நீங்கதான் அதை பொதுவுல கொண்டு வந்தீங்க” என்று சொன்னவுடன் பாலாஜியின் தாயும் தலையாட்டி ஆமோதித்தார். ‘என்னோட ரசிகர்கள், அன்பு வைத்திருக்கிறவர்கள் யாருன்னு எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவங்க சார்பா நான் உங்க கிட்டே மன்னிப்பு கேட்டேன். உங்கள் வாழ்க்கை சிறப்புற வாழ்த்துகள்’ என்று கோபத்துடன் முடித்துக் கொண்டார். 

என்றாலும் நித்யா விடுவதாக இல்லை. ‘உள்ளே இருக்கும் போது நீங்கதானே எங்க மேட்டரை வந்து வந்து விசாரிச்சீங்க. சரியாகணும்னு சொல்லிட்டே இருந்தீங்க. வெளியே வந்தப்புறம் ஒருமுறை கூட வந்து பார்க்கலை. அப்ப உங்க அன்பு கேமிரா முன்னாடி மட்டும்தானா?” என்றார். ‘நான்தான் அவங்களை தடுத்து நிறுத்தினேன். அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கறேன்” என்று அரணாக வந்து நின்றார் மும்தாஜின் சகோதரர். “மன்னிக்கணும் சார். இது விஷயமா ஒரு ஒண்ணு தெளிவுப்படுத்துணும்” என்று கமலிடம் வேண்டுகோள் வைத்து மறுபடியும் வந்த மும்தாஜ் “பாலாஜிதான் வந்து எங்கிட்ட ஆலோசனை கேட்டிருந்தார். உங்க வாழ்க்கை இணையணும்னு ஒரு பொண்ணா நானும் ஆசைப்பட்டேன். அதனால்தான் பேசினேன்” என்று விளக்கமளிக்க, பந்து தன் பக்கம் வந்து விழுந்ததும் திகைத்து ‘ஜெர்க்’ ஆனார் பாலாஜி.

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2“நீங்க கேட்டீங்களா?” என்று நித்யா கேட்க, (மவனே.. வீட்டுக்கு வா உனக்கு இருக்கு!), தனது புகழ்பெற்ற இழுவையான குரலில் மழுப்பலான விளக்கத்தை ஆரம்பித்த பாலாஜி. பிறகு ‘ஆமாம். கேட்டிருந்தேன்’ என்பது போல் இறுதியில் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம். “நாங்க ரெண்டு பேரும் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக அவங்க என்னை நாமினேட் பண்ணாம இருந்தாங்க’ என்பதையும் ஒப்புக் கொண்டார். 

‘ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள்’ என்று மும்தாஜ் தன் ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரையோடு இந்த விவாதம் நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எப்படியோ திசை மாறி சற்று விரசமாகி விட்டது” என்று வருத்தப்பட்டார் கமல். (அதற்குத்தானே பிக்பாஸ் ஆசைப்பட்டார்?!). “எல்லோரும் நண்பர்களாக இருங்களேன். எதுக்கு சண்டை?’ என்ற உருக்கமான வேண்டுகோளை டேனியின் மனைவி வைக்க ‘என் வேலையை நீங்க செஞ்சுட்டீங்க” என்று அவரைப் பாராட்டினார் கமல். மும்தாஜிற்கும் நித்யாவிற்கும் இடையில் ‘கட்டிப்பிடி’ வைத்தியத்தையும் செய்ய வைத்திருக்கலாம். “நான் தப்பு செஞ்சதை ஒப்புக்கறேன்” என்று மும்தாஜிடமும் அவரது சகோதரிடமும் மஹத் மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம். (பயபுள்ள கிட்ட புடிச்சதே இந்த விஷயம்தான். அப்பப்ப சேட்டை பண்ணாலும் பிறகு மனமுணர்ந்து மன்னிப்பு கேட்பது சிறப்பு).

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2இந்த விவாதத்தை பார்வையாளர்களோடு இறுதிப் போட்டியாளர்களும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "ஓகே. இப்போது ஒருவரை வெளியேற்றுவதற்கான நேரம். ஒரு நண்பர் வந்து உங்களில் ஒருவரை வெளியே அழைத்துச் செல்வார்” என்றார் கமல். கடந்த சீஸனின் வெற்றியாளரான ஆரவ், இந்தப் பலியிடல் நிகழ்ச்சியை செய்ய முன்வந்தார். சில பல சுமாரான சஸ்பென்ஸ் முயற்சிகளுக்குப் பிறகு விஜியை வெளியே அழைத்து வந்தார். ரித்விகாவை மெயின் டோர் வரை இவர் கொண்டு வந்தாலும் கூட இதர போட்டியாளர்களே நம்பவில்லை. விஜிதான் என்றுதான் அவர்களுக்கே தெரிந்திருந்தது. மேடைக்கு வந்த விஜி ‘வாழ்க்கை கற்றுக் கொடுக்காத பாடத்தை இந்த நாற்பது நாள் அனுபவம் தந்தது. இங்க நான் நானாத்தான் இருந்தேன்” என்று சொல்லி இதர போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த வீட்டுத்தலைவர் (நித்யா), சிறந்த நடனக்கலைஞர் (யாஷிகா) -ஐஸ்வர்யாவிற்கும் இணைத்து அளிக்கப்பட்டிருக்கலாம். யாஷிகா ஐஸ்வர்யாவின் பெயரையும் சொல்லியது சிறப்பு. – சிறந்த சமையல் கலைஞர் (டேனி), ஆடை அலங்காரம் (விஜயலஷ்மி), தூய்மையாளர் (ஹைஜீன் மும்தாஜ்), நகைச்சுவை (பாலாஜி)- இவர் சென்றாயனையும்  அழைத்து வந்தது சிறந்த பண்பு. ‘சக கலைஞனை மதிக்கத்தெரிந்தவன்தான் சிறந்த கலைஞனாக இருக்க முடியும்” என்று கமலும் நெகிழ்ந்தார். “அவன் நூடுல்ஸ் சாம்பியன் சார்” என்று இதர போட்டியாளர்களும் சென்றயானுக்காக குரல் தந்தார்கள். 

ஜனனிக்கும் விஜயலஷ்மிக்கும் மொபைல் போன் பரிசளிக்கப்பட்டது. ‘சார்.. எங்களுக்கு இல்லையா?” என்று கம்பெனி நிர்வாகியை மஹத் கேட்க ‘கேட்டுச் சொல்றேன்’ என்று அவர் மையமாக பதில் அளிக்க ‘நான் தர்றேன்’ என்று வாக்களித்தார் கமல். பிறகு யாஷிகாவின் நடனம் இடம்பெற்றது. 

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2“முதல் சீஸன் போட்டியாளர்களோடு இப்பத்திய போட்டியாளர்களை ஒப்பிடாதீங்கன்னு நானே சொல்லியிருக்கேன். ரிசல்ட் சரியா வராத சமயத்தில் நானும் அதை அப்புறம் செஞ்சேன். ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லை. கடைசியா அதை ப்பிடிச்சிக்கிட்டீங்க. சரி. முன்னாள் போட்டியாளர் ஒருவரை இப்ப கூப்பிடப் போறேன்.” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னரே ‘ஓவியா’ என்று பார்வையாளர்கள் கூக்குரலிட்டார்கள்.

இன்ப அதிர்ச்சியாக வந்தாரய்யா.. தங்கத் தலைவி. இவர் வந்து கிளம்பிச் செல்லும் வரை நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நான் இங்கு எழுதுவதில் பிழைகள் இருக்கக்கூடும். அவற்றை வெற்றிடமாகவே கூட நான் விட்டிருக்கலாம். ஏனெனில் ஓவியாவையே பார்த்துக் கொண்டிருந்ததில் காதில் எதுவும் விழவில்லை. சரி, நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு சமாளித்து எழுதுகிறேன்.

“எப்படி இருக்கீங்க?” என்கிற அவரின் குரலைக் கேட்டு எத்தனை நாளாகி விட்டது? ‘பிக்பாஸ் சீஸன் 2 பார்த்தீங்களா?” என்று கமல் கேட்டவுடன் தயங்கிய ஓவியா… “பார்க்கவில்லை’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார். ‘அது அப்படித்தான். படம் முடிஞ்சவுடனே நாம் திரும்பிப் பார்க்க மாட்டோம்’ என்று நைசாக குத்த முயல “சார்.. அப்படில்லாம் நான் பழசை மறக்க மாட்டேன்” என்றார் ஓவியா. ‘இந்த அனுபவம் உங்களுக்கு நல்லா இருந்திருக்கும். எனக்கும் இருந்தது” என்று அவர் சீஸன் 2 போட்டியாளர்களிடம் சொல்ல, “பாருங்க.. ஜனனி உங்களை மாதிரியே டிப்ளமாட்டிக்கா பேசறாங்க” என்று மறுபடியும் கமல் குண்டூசியை எடுக்க ‘என்ன சார்.. பண்றது. சமயத்துல டிப்ளமாட்டிக்காத்தான் இருக்க வேண்டியிருக்கு” என்று பதிலளித்தார் ஓவியா. 

“ஆரவ்விடம் இன்னமும் காதல் இருக்கிறதா? உங்கள் இடையேயான உறவு என்ன?” என்கிற ‘அதிமுக்கியமான’ கேள்வியை பார்வையாளர் ஒருவர் கேட்டார். பிரபலங்களின் அந்தரங்கத்தை அறிந்து கொள்வதில் நமக்கு ஏன் இத்தனை ஆர்வமோ? ‘எங்க உறவு ஆரோக்கியமாகத்தான் இருக்கு” என்றார் ஓவியா. “மூடர்கூடம் படத்துல சேர்ந்து நடிச்சிருக்கோம் சார்” என்று ஓவியாவை உரிமை கொண்டாடினார் சென்றாயன். “அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டார் கமல். (உலக நாயகன்னு சும்மாவா சொல்றாங்க!). “உங்களுக்கு அத்தனை பாப்புலாரிட்டி கிடைச்சது. நிறைய சினிமாவில் வருவீங்கன்னு எதிர்பார்த்தோமே?” என்று முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஒருவர். ‘வந்துட்டே இருக்கு” என்ற மகிழ்ச்சியான பதிலைச் சொன்னார் ஓவியா. ‘மக்களுக்கு நல்லது பண்ணுவேன்னு அப்ப சொன்னீங்களே” என்றொரு அப்பாவியான ஒரு கேள்வி வந்தது. யார் சொன்னாலும் அப்படியே நம்பிடறதா? இதைக் கடமையாக செய்ய வேண்டிய அரசியல்வாதிகளை விட்டு விட்டு மத்த எல்லோர் கிட்டயும் கேக்கறது என்ன கெட்ட பழக்கமோ? “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன். எங்கேயும் ஓடி விட மாட்டேன்’ என்று பதிலளித்த ஓவியா “இப்போதைக்கு படங்களில் என் கவனம் இருக்கிறது. நிச்சயம் செய்வேன்” என்று ஆறுதலான பதிலையளித்தார்.


பிறகு கமலைப் பற்றிய குறும்படத்தை வெளியிட்டார் ஓவியா. அதற்காகத்தான் ஓவியா வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் தன்னைப் பார்த்து தானே நெகிழ்ந்தார் கமல். குறும்படம் சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது. கமல் தொகுப்புரையின் போது நடந்த பிழைகளையும் (bloopers) இணைத்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். “சார் உங்களுக்கு முதல் சீஸன் போட்டியாளர்கள் பிடிச்சிருந்ததா, இரண்டாவது சீஸனா?” என்ற கேள்வியை ஒவியா கேட்க “என் குடும்பம் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. எல்லோருமே எனக்கு வேண்டியவங்கதான்’ என்று ஜனனியை விடவும் அதிக டிப்ளமட்டிக்காக பதில் அளித்தது கமலின் சாமர்த்தியம். ‘காலில் விழுந்தா உங்களுக்குப் பிடிக்காதில்லையா?” என்றபடி விடைபெற்றார் ஓவியா. (போயிட்டு வா செல்லம்!). 

வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் ‘தேமே’ வென்று உள்ளே அமர்ந்திருந்த ஐஸ்வர்யா மற்றும் ரித்விகாவை தொடர்பு கொண்ட கமல், ‘பிக்பாஸ் உங்களுடன் பேச விரும்புகிறார்’ என்று தெரிவித்தார். ‘இந்த வீடுதான் உங்கள் உலகம் என்று வாழ்ந்த நீங்கள் சில நிமிடங்களில் வெளியுலகத்தைப் பார்க்கப் போகிறீர்கள்” என்று துவங்கிய உலோகக்குரலைக் கேட்டு இருவரும் நெகிழ, ஒருபடி மேலே சென்று கண்கலங்கினார் ஐஸ்வர்யா. பிறகு இருவரும் அந்த வீட்டிலுள்ள சோபா, படுக்கையறை, காமிரா என்று எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள்.

‘இறுதிப்போட்டியாளரை அறிவிக்கும் நேரம் வந்து விட்டது. அவர்கள் இருவரையும் நானே சென்று வெளியே அழைத்து வருகிறேன்’ என்று பட்டாசு வெடிக்க உள்ளே சென்ற கமல், கடுங்காப்பி போட்டுக் கொடுத்தார். ‘நீங்க உக்காருங்க நான் காப்பி போட்டுத்தர்றேன்” என்றவருக்கு இரண்டு உதவியாளர்கள் தேவைப்பட்டார்கள். டர்க்கியிலிருந்து வந்த அரபிக்காப்பியாம். “நல்லாயிருக்கு” என்று வேறுவழியில்லாமல் அந்த காஃபியை ஐஸ்வர்யா குடிக்க, சர்க்கரையை இணைத்துக் கொண்டார் ரித்விகா. பிறகு அவர்களிடம் சற்று உரையாடி விட்டு வெளியே அழைத்து வந்த அவர், ஒரு சிறிய சஸ்பென்ஸூக்குப் பிறகு இருவரின் கைகளையும் பிடித்து ஆட்டி விட்டு ஒரு சடாரென்ற கணத்தில் ஐஸ்வர்யாவின் கையில் முத்தமிட்டு விட்டு ரித்விகாவின் கையை உயர்த்துவதின் மூலம் வெற்றியாளரை அறிவித்தார். (கமல் முத்தம் கொடுத்தா உஷாரா இருக்கணும் போல). இறுதிப் போட்டியில் இருந்த நால்வருக்கும் மூன்று கோடிக்கும் மேல் வாக்குகள் வந்திருந்ததாம். இதில் வெற்ற பெற்றவருக்கு ஒரு கோடியே அறுபது லட்சம் கிடைத்திருந்ததாம். பலத்த கரகோஷங்களுக்கு இடையே கண்ணீருடன் இந்த வெற்றியை அனுபவித்தார் ரித்விகா. கூடவே ஐஸ்வர்யாவையும் அவர் இணைத்துக் கொண்டது நல்ல சமிக்ஞை. 

“வாழ்க்கையில் முதன்முறையாக முழுமையான வெற்றியை அடைஞ்சிருக்கேன். முகம் தெரியாத எத்தனையோ பேர் இந்த வெற்றியை எனக்கு அளித்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டுப் பெண்ணாக என்னை நினைத்து ஆதரவு அளித்திருக்கிறீர்கள். அவர்களின் வெற்றியும்தான் இது. பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்க விரும்புகிறேன். நேர்மையாகவும் துணிச்சலாகவும் எதிலும் போட்டியிடுங்கள். வெற்றி நிச்சயம். ஹவுஸ்மேட்ஸ்களும் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு இதை சமர்ப்பிக்கணும். கமல் சார் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் நடிகரா எனக்குத் தெரியல. கமல் சாரா தெரிஞ்சாரு” என்று நெகிழ்ந்தார் ரித்விகா. 

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2“உங்களை நல்லவரா கெட்டவரா –ன்னு ஜட்ஜ் பண்றதுக்கு நான் யாரு.. நீங்க யாரு.. கெட்ட விஷயங்களில் இருந்து அகன்று விட வேண்டும்’ என்று சரியான முடிவுரையைச் சொன்னார் கமல். ‘தமில் மக்களே.. உங்களுக்கு நன்றி. இந்த விளையாட்டின் மூலம் யாஷிகா எனக்கு கிடைத்த சிறந்த பரிசு.” என்றார் ஐஸ்வர்யா. மஹத், ஷாரிக், மும்தாஜ் ஆகியோரையும் அவர் இணைத்துக் கொண்டது சிறப்பு. ‘அன்பைப் பரப்புங்கள்’ என்ற செய்தியை உலக மக்களுக்கு ஐஸ்வர்யா சொன்னார். கோலாகலமான கூக்குரல்கள், கைத்தட்டல்களுக்கு இடையில் வெற்றிக்கோப்பை ரித்விகாவிற்கு வழங்கப்பட்டது. அவருடைய பெற்றோர்களும் வந்து மேடையில் நன்றி சொன்னது நெகிழ்வான விஷயம். ‘மகளைச் சான்றோர் எனக் கேட்ட பெற்றோர்களின் தருணம். ‘இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் நீங்களும்தான்” என்றார் கமல். (அப்ப எங்களுக்கும் செல்போன் உண்டா பாஸ்?!). 

**

இந்தத் தொடரை இத்தனை நாட்கள் வாசித்துக் கொண்டிருந்த நண்பர்களுக்கு சில சுருக்கமான வார்த்தைகள். உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி. இந்தத் தொடருக்காக வாய்ப்பளித்து, ஆதரவு தந்த விகடன் தளத்திற்கும் ஒருங்கிணைத்த நண்பர்களுக்கும் நன்றி. நான் எழுதியதில் உங்களுக்கிருந்த உடன்பாடான கருத்துக்கள், மாறுபட்ட அபிப்ராயங்கள் என்று பெரும்பாலானவற்றைக் கவனித்தேன். கட்டுரையைத் தொடர்வதற்கு அவை உதவிகரமாக இருந்தன. அதற்காகவும் நன்றி. 

பிக்பாஸ் என்பது சர்தேச அளவில் வெற்றி பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. தனிநபர்களின் அந்தரங்கங்களை கண்காணித்தல் உள்ளிட்டு பல விவகாரமான விஷயங்கள் இதில் இருக்கின்றன. மற்றவர்களின் அந்தரங்கத்தை அறிந்து கொள்வதில் மனிதர்களுக்கு அடிப்படையான ஆர்வமுண்டு. அதுவே இது போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு காரணம். ஆனால் தனிநபர் சுதந்திரம் என்கிற அடிப்படையான விஷயத்திற்கு முன்னுரிமை தருவது இதை விடவும் முக்கியம். ஒருவேளை நம்முடைய அந்தரங்கம் பொதுவில் வெளியானால் எத்தனை மனஉளைச்சல் அடைவோமோ, அதே கோணத்தில் மற்றவர்களையும் பார்க்க வேண்டும். 

இது மனித உணர்வுகளை மோத வைத்து, அதற்கேற்ற சிக்கலான சூழல்களை உருவாக்கித் தரும் விளையாட்டு. சாதாரண நடைமுறை வாழ்க்கையிலேயே நம்முடைய சமநிலையை நாம் பலமுறை இழந்து விடுகிறோம் என்னும் போது, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களான போட்டியாளர்கள் இந்தச் சிக்கலான சூழலில் அடிக்கடி இடறி விழுவது வெகுசாதாரணமான விஷயம். இந்தப் பின்னணியோடுதான் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பிழையையும் பூதாகரமாக ஆக்கிக் கொண்டு திட்டித் தீர்ப்பது, மலினமாக எள்ளல் செய்வது, கட்சி பிரித்துக் கொண்டு அடித்துக் கொள்வது போன்றவை முறையற்ற விஷயங்களாக இருக்கும்.

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்க்க நான் எவருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். குறிப்பாக இளைய மனங்களுக்கு நிச்சயம் செய்ய மாட்டேன். நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள இதை விடவும் உன்னதமான பல வழிகள் உள்ளன. “இல்லைங்க.. இது பிரபலமான ரியாலிட்டி ஷோ’ என்கிற வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பவர்களுக்காக மட்டும் சில வார்த்தைகள். 

‘இதில் வரும் போட்டியாளர்கள் ஒருபக்கம் பிரபலங்களாக இருந்தாலும் இன்னொரு பக்கம் நம்மைப் போன்ற சாதாரண நபர்கள். ஏன் ஒரு சராசரி நபருக்கு இருக்க வேண்டிய பக்குவம் கூட அவர்களில் சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். இவர்கள் இடறி விழும் இடங்களை சரியாகக் குறித்து வைத்துக் கொண்டு அவற்றை தனிநபர் காழ்ப்பாகவும் கட்சிக் கட்டிக் கொண்டு பரஸ்பரம் திட்டிக் கொள்ளும் போராகவும் மாற்றுவதைப் போல ஒரு அபத்தம் இருக்கவே முடியாது. மாறாக, இதில் வெளிப்படும் எதிர்மறை அம்சங்களை தன்னுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டு சுயபரிசீலனையோடு அணுகி  வற்றை திருத்திக் கொள்ள முடியுமா என்று இந்த நிகழ்ச்சியை அணுகுவதே 106 நாட்களுக்கான நேரத்தை செலவழித்தற்கு குறைந்த பட்ச பலனாக இருக்க முடியும். மாறாக அந்த எதிர்மறைத்தன்மைகளை ஊதி வளர்த்துக் கொண்டால் அது இந்த நிகழ்ச்சியின் வெற்றியாக மாறி விடும். நம்முடைய வெற்றியாக இருக்காது.

**

இரண்டு சீஸன்களையுமே சிறப்பாக தொகுத்தளித்தவராக கமலைச் சொல்ல முடியும். சில விமர்சனங்கள் அவர் மீது உண்டென்றாலும் பல சமயங்களில் இதை நேர்த்தியாக வழிநடத்திச் சென்றார். ஏனெனில் உணர்ச்சிகளில் எளிதில் விழுந்து விடக்கூடிய தந்திரமான ஷோ இது. கறாரான சமநிலையில்லா விட்டால் கடினம். நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வழிநடத்துனராகவும் இதை திறம்பட கையாண்டார் கமல். அவரை விட்டால் வேறு சிறந்த தேர்வு ஏதும் இருக்குமா என்று யோசித்தால் ஒன்றும் பிடிபடவில்லை. இதர பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்த கலாசார முரண்களை தமிழில் தவிர்த்த அளவில் கமலின் பங்கு முக்கியமானது. அவை குறித்து எச்சரித்துக் கொண்டும் இருந்தார் கமல். சீஸன் மூன்றைத் தொடர்வதற்கும் அவரே தகுதியானவர் என்பது என் விருப்பம். சமயங்களில் ஏதும் செய்யவியலாத கையறு நிலையில் அவர் இருந்தார் என்பது யூகம். பிக்பாஸின் புயவயமான உருவம் என்பதற்காக எல்லாப் பழியையும் அவர் மீது போடுவதும் முறையற்றது. 

வாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்! #BiggBossSeason2இந்த நிகழ்ச்சியின் பின்னால் பலர் உழைத்திருக்கிறார்கள் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஒரு நாளின் 24 மணி நேரத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட காமிராக்களின் மூலம் கிடைக்கும் ஃபுட்டேஜ்களை பிரித்து தொகுப்பது என்பது இமாலய டாஸ்க். பிக்பாஸ் எடிட்டிங் டீமின் அசுரத்தனமான பணி பிரத்யேகமாக பாராட்டப்பட வேண்டியது. 

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவற்காக ஒவ்வொரு எபிஸோடையும ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்க நேர்ந்த போது இவர்களின் எடிட்டிங் முறையைக் கண்டு வியந்தேன். தொடர்பில்லாத காட்சியோ என்று நாம் முதலில் நினைப்பதற்குப் பின்னால் அது பின்னர் எங்கேயோ சம்பந்தப்பட்டிருக்கும் விந்தையை பிரமித்தேன். இதை தினம் தினம் ஒரு கதையாடலாக தொகுத்திருக்கும் அவர்களின் பணி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது. 

வேறென்ன, இந்தக் கட்டுரைத் தொடரை இத்தனை நாட்கள் வாசித்த, சகித்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும். வேறொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். நன்றி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism