“ஓவியா, ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் ஆகணும்!” - கட் அவுட் பிரார்த்தனை

‘பிக் பாஸ்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஓவியா வெற்றிபெற வேண்டும் என அவரின் ரசிகர்கள் கட்அவுட் வைத்துள்ளதுதான்  சமீபத்திய வைரல்.

Oviya

கமல் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ்' நிகழ்ச்சி, பல விவாதங்களைக் கிளப்பிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகை காயத்ரி ரகுராம், ஓவியா ஆகியோரின் கிராஃப் தற்போது ஏறியுள்ளது. அதிலும், `பிக் பாஸ்' வீட்டில் துள்ளலும் துடிப்புமாக இருக்கும் ஓவியாவுக்கு, ரசிகர்கள் நாளுக்குநாள் கூடிக்கொண்டேபோகின்றனர். அவரின் ரசிகர்கள், `ஓவியா ஆர்மி', `ஓவியா புரட்சிப்படை' எனப் பல அமைப்புகள் தொடங்கி தினமும் வெவ்வேறு வகையில் வைரலாகிவருகின்றனர்.

இதனால் `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கும் நாளுக்குநாள் ரசிகர்கள் கூடிவருகின்றனர். மேலும் ஓவியா, ஆரவ்-வைக் காதலிப்பதுபோல் காட்டப்படுவதாகவும் ஓவியா கதறுவதாகவும் காட்சிகள் வருவதால், அவரின் ரசிகர்கள் பதைபதைக்கிறார்கள். `கஞ்சா கருப்பு, நடிகை நமிதா, பரணி ஆகியோரைத் தொடர்ந்து ஓவியாவும் எலிமினேட் ஆகிவிடக் கூடாது, `பிக் பாஸ்' டைட்டில் வின்னராக ஓவியா வெற்றிபெற வேண்டும்' என வலியுறுத்துகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த புலிவலம் கிராமத்தில் ‘ஓவியா புரட்சிப்படை’ எனும் பெயரில், அந்த ஊரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜா, கதிரேசன், அரவிந்தன் உள்ளிட்ட சில இளைஞர்கள் சேர்ந்து ``பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகை ஓவியா டைட்டில் வின்னர் ஆக வெற்றிபெற வேண்டும்' எனக் கட்அவுட் வைத்துள்ளனர்.

அதில், `நமிதாவை நடுங்கச்செய்த நாட்டாமையே! ஆர்த்தியை அலறவிட்ட ஆளுமையே! காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே! பரணிக்கு பாய் சொன்ன பாசமே! தங்கத் தலைவியே ஓவியா... `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வாழ்த்துகள்' எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தச் சாலையைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், `அட... இதைப் பார்டா!' எனத் திரும்பிப் பார்த்தபடியே கடக்கிறார்கள்.

Oviya‘ஓவியா மீது இந்த அளவுக்கு அக்கறையா?' என பேனர் வைத்தவர்களில் ஒருவரான செந்தில்குமாரிடம் பேசினோம்...

“படங்களில் ஓவியா நடிக்கும்போது ஒரு கதாநாயகியாக எங்களுக்குப் பிடிக்கும். `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு இன்னும் கூடுதலாகப் பிடித்துப்போனது. இதேபோல் பல ரசிகர்களின் உள்ளங்களில் ஓவியா இடம்பிடித்துள்ளார். அவரின் கள்ளங்கபடமற்ற அணுகுமுறை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படக் கூடாது என நினைத்து, அவருக்கு ஓட்டு போட்டோம். அத்துடன் எங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், வெளிநாட்டில் உள்ள தோழர்கள் எனப் பலருக்கும் இந்தத் தகவலைச் சொல்லி, ஓவியாவுக்கு ஓட்டுப் போடச் சொன்னோம். அவரின் நடவடிக்கைகள் எங்களுக்குப் பிடித்துப்போகவே, ‘ஓவியா புரட்சிப்படை’ எனும் பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளோம்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வட இந்திய சேனல்களில் நடந்த ஒன்றுதான். இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் விவாதித்துவருகின்றனர். ஓவியாவை, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு இன்சல்ட் செய்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், யதார்த்தமாக அவர் நடந்துகொள்வதும் பொறுமை காப்பதும் எங்களுக்குப் பிடித்துப்போனது. அந்த நல்ல உள்ளமும் அவரின் நேர்மையான செயல்பாடுகளும்தான் ஓவியா வெற்றிபெற வேண்டும் என நினைக்கவைத்தன. அவர்தான் டைட்டில் வின்னர் ஆகவேண்டும். அதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்வோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!