வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (05/08/2017)

கடைசி தொடர்பு:20:45 (05/08/2017)

காதலால் ஓவியா சறுக்கும் இடங்கள் சொல்லும் பாடம் என்ன? #BiggBossTamil

ஓவியா


காதல் தோல்விக்கான பல காரணங்கள், அதனால் சந்திக்கும் பல பிரச்னைகள் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம். யானைக்கே அடி சறுக்கும்போது ஓவியாவுக்கு காதல் சறுக்காதா என்ன? 

ஓவியா இப்படிச் செய்வது ஆரவை ஈர்க்க மட்டுமா? இல்லை... அது, நம் மனம் ஈடுபடும் வேறு ஒரு விளையாட்டு. எனக்குத் தெரிந்து ஒரு பணக்கார, அழகான, இணையத்தில் புகழ்பெற்ற, விளையாட்டிலும் சிறந்த ஒரு பையன். பல பெண்கள் அவனைச் சுற்றினர். ஆனால், கல்லூரி காதலில் தோல்வி அடைந்தான் அவன். நான்கு முறை தற்கொலை முயற்சி, ஊரில் உள்ள சிறந்த மனநல மருத்துவர்களின் ஆலோசனை என பரபரப்பானது அவனது வாழ்க்கை. குடும்பத்தின் மீது வன்முறை காட்டினான். கேம்ஸ் அடிக்‌ஷனாகி அதிலிருந்து மீண்டான். கடைசியில் கல்லூரிவிட்டு வெளியேறினான். தற்போது, அவன் அம்மா ஊரைவிட்டே வெளியேறி, சொந்தக் கிராமத்துக்குச் சென்று பையனை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். 

இங்கே தோல்வி அடைந்தது அவனது காதல் மட்டுமில்லை. அவனுக்கு தன் மீதிருந்த நம்பிக்கையும் தோற்றுள்ளது. தன்னால் சாதிக்க முடியும், தான் நினைத்தால் யாரையும் காதல்கொள்ள செய்ய முடியும். தன்னால் ஈர்க்க முடியும். தான் மிகவும் அழகு, திறமைசாலி என்ற அவனது கர்வத்துக்கு விழுந்த அடி. இந்த அடியையும் தோல்வியையும் தாங்க முடியாதுதான். 

ஓவியா விஷயத்திலும் இப்படித்தான். ஓவியாவை வேண்டாம் என்று ஆரவ் சொன்னதும், ஓவியாவின் தன்னம்பிக்கை, ஈகோ அசைய ஆரம்பித்து. அவரால் நம்பவே முடியவில்லை. 'நிஜமா, நிஜமா' என்கிறார். தன்னால் எவரையும் ஜட்ஜ் செய்ய முடியும் என்கிற எண்ணத்தில் விழுந்த பெரும் அடி. தான் செம கூல், தன்னால் எந்த மனிதரையும் தன்னால் ஹேண்டில் செய்யமுடியும் என்றெல்லாம் நினைத்திருந்தவை பொய்யானபோது ஆரம்பித்த சரிவுதான் அவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

ஓவியா

சாப்பிடாமல் இருப்பது, தற்கொலை முயற்சி, மழையில் தூங்குவது போன்ற செயல்கள், ஆரவை திரும்பிப் பார்க்கவைக்கும் என்று நினைத்தார். உண்மையில், அது ஆரவுக்கு அதீத வெறுப்பையே உண்டாக்கும் என்று ஓவியா உணரவில்லை. தான் நினைத்தது எல்லாம் தோல்வியில் முடியவே மன உளைச்சல் அதிகமானது. ஆரவை தன் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்ற ஆற்றாமையில், மேலும் மேலும் முயன்றார். எல்லாமே பொய்யானதும் ஓவியாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

ஒருவர் எந்த அளவுக்குத் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் ஈகோ இருக்கும். அது அசைக்கப்படும்போது அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தன்னைத் தானே வருத்திக்கொள்கிறார்... இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், காதலைத் தாண்டி வரவேண்டியது மிகவும் அவசியம். பெற்றோரும் ஆசிரியர்களும் இளைஞர்களின் காதலை எதிர்கொள்வதைவிட, காதல் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தைச் சொலித்தர வேண்டியது அவசியம். 

'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஸ்க்ரிப்டோ, நிஜமோ... ஒரு நாவல் படிப்பது, சினிமா பார்ப்பதுபோல ஓர் அனுபவம் நமக்கு. அவ்வளவுதான். அதில் நடக்கும் தவறுகளில் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே நமக்கான விஷயம். ஓவியா விஷயத்தில் காதலில் ஏற்படும் சறுக்கல்களை எப்படி கடந்து போக வேண்டும் என்கிற பாடத்தை, அனுபவமாக எடுத்துக்கொண்டாலே போதும்.

 


டிரெண்டிங் @ விகடன்