Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓவியாவுக்கு ஓய்வு தேவை தான்... இருந்தாலும் மிஸ் யூ ஓவியா! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (41-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

பிக் –பாஸ் வீடு இன்று நெகிழ்ச்சியான உணர்வுகளால் நிறைந்திருந்தது. ஒரு டிராமாவின் கிளைமாக்ஸ் போல. அழுகை – பிரிவுத் துயரம் – குற்றவுணர்ச்சி – சுயபரிசீலனை – கருணை – துரோகம் - நடிப்பு ஆகியவற்றின் உணர்ச்சிக்கலவைகள். தன்னுடைய விலகலின் மூலம் அத்தனை பேரையும் ஒற்றுமைப்படுத்தியும் சிந்திக்க வைத்தும் சென்று விட்டார் ஓவியா.

அதற்கு முன் –

முந்தைய வாரங்களை விட இந்த வாரம் கமலின் ‘தீர்ப்பு நாள்’ குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஓவியாவின் வெளியேற்றம், அதன் பின்னணிக்காரணங்கள், அது தொடர்பான நபர்கள் போன்வற்றை கமல் மிக கறாராக குறுக்கு விசாரணை செய்வார் என்று பார்வையாளர்கள் தீர்க்கமாக நம்பினர். கமல் அந்த நம்பிக்கையை பெரிதும் காப்பாற்றினார் என்பது மகிழ்ச்சி. மிகவும் நுட்பமான, அதிரடியான கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கினார். அதே சமயத்தில் எதிர் தரப்பிற்கும் அதிக சங்கடத்தை தரவில்லை. கமலுக்கு ஒரு hats-off.

kamal

இது மட்டுமல்லாமல், ஓவியாவின் உடல்நலம், பிக் –பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறி விட்டாரா, அல்லது தொடர்வாரா என்பது குறித்த பல கேள்விகளும் வதந்திகளும் பொதுவெளியில் தொடர்ந்து உருவாகிக் கொண்டேயிருந்தன. இதற்குமான பதில் கிடைத்தது. ஆம். ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது இன்று உறுதிப்படுத்தப்பட்டது. 

ஒரு தகவல் சோகத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர தரமுடியும் என்றால் அது இதுதான். பிக் –பாஸ் வீடு மட்டுமல்லாமல், நாமுமே ஓவியா இல்லாததின் வெறுமையை வரும் வாரங்களில் நிச்சயம் அனுபவிப்போம். இன்னொரு பக்கம், அவருடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்துப் பார்க்கும் போது அவர் வெளியேறியது சிறந்த முடிவு என்றே தோன்றுகிறது. 

**

இந்த வாரம் முழுக்க எடுக்கப்பட்ட யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள் என கேட்டிருந்தோம். வழக்கம்போல் 90% வாக்குகள் ஓவியா வசம் தான். வாசகர்களின் கருத்துப்படி ஜூலி தான் வெளியேற்றப்படவேண்டும். எதற்கும், இன்று இரவு நிகழ்ச்சி வரை காத்திருப்போம்

ஓவியா


ஓர் இரங்கல் செய்தி என்பதுடன் இந்த நிகழ்ச்சியை கமல் துவங்கிய போது ஒரு விநாடி சட்டென்று தூக்கிப் போட்டது நிஜம். ஏனெனில் ஓவியா உடல்நலம் குறித்த வதந்திகள் அப்போது காற்றில் உலவிக் கொண்டிருந்தன. பிக் –பாஸ் நிகழ்விற்காக அரங்கப் பணியாளராக இருந்த கலீம் ஷேக் என்பவரின் மரணத்திற்காக கமல் அனுதாபச் செய்தி தெரிவித்தது கண்ணியம். (‘ஏற்கெனவே இருந்த நோயின் காரணமாக’ என்றார் கமல். ஆனால் ஊடகங்களில்  அங்கு ஏற்பட்ட விபத்து என்றே வந்திருந்தது).

அடுத்ததாக ஒரு முக்கியமான விஷயத்தை தொட்டார். இதற்காக கமலை எத்தனை பாராட்டினாலும் தகும். 

பிக் பாஸ் போட்டியாளர்களை மனநலம் குன்றியவர்களைப் போல நடிக்க வைக்கும் task-ஐ விகடனின் இந்தத் தொடரில் நானும் கண்டித்திருந்தேன். பல சமூக ஆர்வலர்களும் மனநல மருத்துவர்களும் இதைப் பற்றிய தங்களின் கண்டனங்களையும் கடுமையான அபிப்ராயங்களையும் தெரிவித்திருந்தார்கள். 

இதே கண்டனத்தை கமலும் தனது பிரத்யேகமான பாணியில் அழுத்தமாக தெரிவித்தார். ‘என்னுடைய படங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாத்திரங்களாக வருவார்கள், ஆனால் காமெடியனாக அல்ல, கதாநாயகனாக’ என்றது மிகச்சிறப்பு (‘குணா’ படம் சட்டென்று நினைவிற்கு வந்தது). ‘இது போன்று நடக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஒருவேளை அது தொடர்ந்தால் இந்த நிகழ்ச்சி கூட எனக்கு முக்கியமில்லை’ என்று துணிவுடன் கமல் அறிவித்தது அபாரம். தான் ஒரு சிறந்த கலைஞர் என்பது மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமகன், சமூகவுணர்வுள்ள பிரதிநிதி என்பதை பதிவு செய்து விட்டார். நன்றி கமல்.

கமல்

 

கூட்டுக்குடித்தன அமைப்பு பலமாக இருந்த காலக்கட்டங்களில் குடும்ப உறுப்பினர்களில் எவருக்கேனும் மனநலம் பிசகியிருந்தால் அவரை புறக்கணிக்காமல் அரவணைத்துப் பாதுகாப்பார்கள். ஆனால் நவீன காலத்தில் அவர்களை மருத்துமனைகளில் தள்ளி தனிமைப்படுத்தும் சூழல் உருவாகி விட்டது. இப்போது அந்த நிலைமை மெல்ல மாறுகிறது. இந்தச் சூழலில் இது போன்ற கேளிக்கைச் சித்திரங்கள் ஆபத்தானது’ என்று அவர் குறிப்பிட்டது முக்கியமானது. இது பிக் –பாஸ் நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா இயக்குநர்களுக்குமே முக்கியமான செய்தி. 

**

உளவியல் ஆலோசகர் – ஓவியா தொடர்பான உரையாடல்கள் காட்டப்பட்டன. ‘என்னால் இயன்றதை முயன்றேன். ஆனால் முடியவில்லை’ என்பதையே வேறு வேறு விதங்களில் கூறிக்கொண்டிருந்தார் ஓவியா. பாவம், உளவியல் ஆலோசகரே சோர்வடைந்திருப்பார். ‘இந்த விளையாட்டில் தொடர வேண்டுமென்பதற்காக ‘I can’t change myself’ என்று சொன்னது அவருடைய பிரத்யேகமான முத்திரை வாக்கியம். சிம்புவின் மொழியில் சொன்னால் ‘எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா’. 

ஓவியா

தங்களின் அடுத்த நகர்விற்கான திட்டங்களைப் பற்றி ஓவியாவும் ஆரவ்வும் பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் சிலை போல அமர்ந்திருந்த ஜூலியின் சித்திரத்தை, வெளியே வந்த வையாபுரி நகைச்சுவையுடன் நடித்துக் காண்பித்தார். ஜூலி கடந்து சென்ற போது ‘என்னதான் நான் முயற்சி செய்தாலும் மக்கள் மாறவில்லை’ என்ற ஓவியாவின் சொல் ஜூலியைச் சுட்டதா என்று தெரியவில்லை. 

ஆனால் பலியாடாக ஜூலியை முன்நிறுத்தி அவரைக் கிண்டலடித்து சிரிப்பதன் மூலம் தங்களின் குறைகளை மற்றவர்கள் மறைக்க முயல்கிறார்களோ என்று தோன்றியது. குறிப்பாக, சக்தி மற்றும் காயத்ரி.


ஆனால் இது போன்றவைகளைத் தாண்டி ஓவியாவின் பிரச்னைகளுக்குப் பிறகு பிக் –பாஸ் குடும்பமே ஒன்றிணைந்து அவருக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருந்தது முக்கியமான விஷயம். குறிப்பாக சிநேகன் மற்றும் வையாபுரி தந்த ஆறுதலும் ஆலோசனைகளும் முக்கியமானது. மற்றவர்களின் ஆறுதல்களில் போலித்தன்மையும் நடிப்பும் குற்றவுணர்வின் வெளிப்பாடும் இருந்திருக்கலாம். 


குடும்பம் என்கிற அமைப்பு தொடர்ந்து சுழல மிக ஆதாரமான அச்சு அன்பு என்கிற விஷயம். கூடிவாழும் தன்மை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், மற்றவர்களின் பிரச்னைகளை அனுசரணையுடன் புரிந்து கொள்ள முயலுதல் போன்றவை குடும்பத்தின் அடிப்படையான இயங்குமுறையாக இருக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகளினால், சச்சரவுகளினால் தனிநபருக்கு ஏற்படும் மனச்சிக்கல்தான் தொற்று நோய் போல் அப்படியே பரவி சமூகத்தின் பிரச்னைகளாகவும் மாறுகின்றன. சமூகக் குற்றங்களின் ஊற்றுக்கண்கள் எங்கேயிருக்கிறது என்று ஆராய்ந்தால் அது சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்பத்திற்குள் மறைந்திருப்பதை உணரலாம். குடும்ப வன்முறை என்பது மிக ஆபத்தான விஷயம். ஓவியாவின் மூலம் இது சார்ந்த மிகப்பெரிய பாடத்தை நாம் கற்க முடிகிறது. 

பிக்- பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் விதம் விதமாக ஓவியாவை ஆற்றுப்படுத்த முயன்றனர். நகைச்சுவையும் அதில் கலந்து ஓடியது. ‘காதல் வந்துட்டாலே.. பிரச்னைதான்.. இதுல முட்டைப் பிரச்னை வேற’ என்று மனச்சிக்கலின் இடையேயும் பவுண்டரிகளாக அடித்துக் கொண்டேயிருந்தார் ஓவியா. 

மறுபடியும் வாக்குமூல அறை. ‘தன்னால் ஒரளவிற்கு சமாளிக்க முடியும்’  என்று நம்பிய ஓவியாவால் இந்த விளையாட்டைத் தொடர முடியவில்லை. இந்தப் பொய்யான விளையாட்டை விட வெளியே சென்று நம்பகத்தனமான மனிதர்களுடன் உண்மையான விளையாட்டை ஆட விரும்புகிறேன் என்றார். 
சிங்கத்தின் குரல் மெலிந்து பூனையாகியது போல ‘செத்து செத்து ஆடும் இந்த நள்ளிரவு விளையாட்டில்’ பிக் பாஸின் இயந்திரக்குரலில் அப்பட்டமான சோர்வு தெரிந்தது. ‘போதும் விட்ரு தாயே’ என்று உள்ளுக்குள் கதறியிருப்பார். 

**

பிக் பாஸ் நிகழ்வுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட திரைக்கதை என்பதை இன்னமும் பலர் பிடிவாதமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். களமும், சில சிக்கல்களை நோக்கி அவர்களை உந்தித் தள்ளும் பின்னணிச் செயல்களும் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் தரப்படுகிறது. மற்றபடி போட்டியாளர்களின் தன்னிச்சையான எதிர்வினைகள் அனைத்துமே நிஜம். உண்மையானது. 

ஓவியாவின் காதல். அது சார்ந்த துயரம் கூட திரைக்கதையின் ஒரு பகுதி என்று சிலரால் நம்பப்பட்டது. அவரின் இத்தனை அல்லல்களைப் பார்த்த பிறகும் எப்படி அவர்களால் பிடிவாதமாக எண்ண முடிகிறது என்பது ஆச்சரியம். இது 99 சதவீதம் நடிப்பல்ல, உண்மை என்று இந்தத் தொடரில் முன்னர் கூறியிருந்தேன். 

ஆனால் –

ஓவியா

 

நள்ளிரவு 01.00 மணிக்கு குழப்பமான மனநிலையுடன் வீட்டில் உலவிக் கொண்டிருந்த ஓவியா, எதையோ பகிர்ந்து கொள்ள, மற்றவர்களை எழுப்புவதற்காக தண்ணீர் பாட்டிலை போட்டு சத்தம் எழுப்பியது அராஜகமான குறும்பு. ‘am done. Am the winner. எழுந்திருங்க நண்பர்களே.. போட்டி முடிந்து விட்டது’ என்றெல்லாம் அவர் உற்சாகமாக கூவிய போது சட்டென்று ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது. எதிர்தரப்பினர் நம்பியது உண்மையோ?

புதிய பறவை சிவாஜி கணேசன் மாதிரி, ‘அத்தனையும் நடிப்பா” என்று நான் உணர்ச்சிகரமாக கலங்கத் துவங்குவதற்குள் புரிந்து போனது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க முடியாமல் ஓவியா நிலைகொள்ளாமல் தவிக்கிறார் என்பது. ‘இந்த விளையாட்டில் ஜெயிக்கிறேனா என்பது முக்கியமில்லை. இங்கு அனுபவம், காதல் போன்றவை கிடைத்தன. True love never fails’ என்றெல்லாம் தத்துவ மழைகளாகப் பொழிந்தார். நள்ளிரவு இரண்டு மணிக்கு கிடைத்த இந்த உபன்யாசத்தால் பிக் –பாஸ் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார். 

**

தன் கெத்து குறையாமல் ஓவியாவிடம் மன்னிப்பு மாதிரி எதையோ கேட்டார் சக்தி. ‘எனக்கு ஆக்ட் பண்ணத் தெரியாது’ என்பதுதான் திரைப்பட ரசிகர்களுக்கு அதில் இருந்த ஒரே சிறந்த வாக்கியம். ‘நல்லவேளை, நான் போறதுக்குள்ள, இது தெரிஞ்சிடுச்சு’ என்றார் ஒவியா. அற்ப பகையைக் கூட வருடக்கணக்காக பாதுகாத்து வைப்பவர்களுக்கான பாடம் இது. 

விடைபெறும் தருணமாக சிநேகனும் ஓவியாவும் பேசிக் கொண்டது நெகிழ்ச்சி. ‘அப்படிப் பார்க்காதீங்க’ என்றார் ஓவியா. முன்னர் நமீதா விடைபெறும் போதுதான் இதையே சொன்ன நினைவு. சிநேகனின் பார்வையில் ஏதோவொரு வசீகரம் இருக்கிறது போல. அதுவும் பெண்களின் கண்களுக்குத்தான் அது தெரிகிறது. சிநேகனின் அழுகையைப் பார்த்து ‘ஓவர் ஆக்ட் பண்றீங்க’ என்று ஓவியா சொன்னதும் ‘யாரு நானா?’ என்று சிநேகன் பதிலுக்கு கேட்டதும் ரகளை. 

snegan oviya

மற்றவர்களின் வெளியேற்றங்களின் போது அவர்கள் விலகிய பிறகுதான் போட்டியாளர்கள் கலங்குவார்கள். ஆனால் ஓவியாவின் விஷயத்தில் முன்கூட்டியே இது நடந்தது. சிநேகன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கலங்கிக் கொண்டேயிருந்தார். ‘நாம் இணைந்து அவரை தனிமைப்படுத்தி விட்டோமோ என்று சக்தியிடம் கூறினார். சக்தி அப்போதும் மனம் திறக்காமல் தவறுகளை பொதுவாக நியாயப்படுத்த முயன்றது நெருடல். அதிக தவறுகள் செய்யாமல்  இருந்தாலும் மனம் வருந்தும் சிநேகனின் மீதான மரியாதை கூடியது. 
ஓவியாவின் விலகல் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக பிக் – பாஸால் அறிவிக்கப்பட்டது. ‘எல்லோரும் கோஷம் எழுப்புங்கள்’ என்கிற பிரசங்கக்குரலில் ‘உதவி செய்யுங்கள்’ என்றார் பிக் பாஸ்.

ஆனால் மற்றவர்களின் உதவியை கறாராக மறுத்து விட்டார் ஓவியா. மற்றவர்களின் அனுதாபங்களை எந்தவகையிலும் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்கிற மனவுறுதியின் வெளிப்பாடு இது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சுயமரியாதையுணர்வு மற்றவர்களை புண்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். 

‘மத்ததெல்லாம் இங்க இருக்கட்டும்’ என்றார்… ‘வேறென்ன.. இருக்கு’ என்று வையாபுரி கேட்க, ‘இங்க ‘விட்டுட்டுப்’ போறதெல்லாம் இங்கேயே இருக்கட்டும் என்றார் ஓவியா. என்னத்தை விட்டுட்டுப் போறார்? என்று வையாபுரியின் மைண்ட் வாய்ஸ் நினைத்திருக்கக்கூடும்.

வர வர ரஜினியின் ‘வாய்ஸ’களுக்கு இணையான பூடகங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது ஓவிய மொழி. 

மற்றவர்கள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, ‘No more emotional drama’ என்கிற கறாரான அறிவிப்புடன் எவரிடமும் விடைபெறாமல் வெளியேறினார் ஓவியா. இது தவிர்க்கப்பட்டிருக்கலாம், இது நிச்சயம் நெருடலான விஷயம்தான் என்றாலும் அவர் இன்னமும் மனக்குழப்பத்தின் பிடியிலிருந்து வெளியே வரவில்லை என்பதையே காட்டுகிறது. மட்டுமல்லாமல், அங்கிருந்து உடனே வெளியேற விரும்புகிற ஆர்வத்தை மறைத்துக் கொண்டு போலியாக மற்றவர்களிடம் நடிப்பதை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம். 

**

பிறகு வீட்டுக்குள் துவங்கியது குற்றவுணர்ச்சி மீதான நாடகம்.. தனக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று ஓவியாவை கருதிய பிந்து மாதவியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘அவர் வெளியே சென்றதுதான் நல்லது’ 

விடைபெறும் போது ஒரு வார்த்தையாவது சொல்லி விட்டுச் சென்றிருக்கலாமே என்று சக்தி வருந்தினார். ‘அவ அவளா இல்லை’ என்று தாம் சரியாக உணர்ந்ததை பதிலாகச் சொன்னார் சிநேகன். 

snegan

 

ஒருவரது இருப்பின் அருமை அவரது விலகலின் போதுதான் அழுத்தமாக உறைக்கிறது என்பதை காலம் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது. நாம் எப்போதுமே தாமதமாகத்தான் இந்தப் பாடத்தை கற்கிறோம் என்பதுதான் இதிலுள்ள கசப்பான உண்மை. 

குற்றவுணர்வின் உச்சத்தை அடைந்தவர் ரைசா தான். அதுவே அவர் மனம் திரும்புவதற்குமான வழியாகவும் அமைந்தது. இனி இன்னொரு ஓவியாவை உருவாக்கி விடக்கூடாதென்கிற கவனத்துடன் இதர போட்டியாளர்கள் அவரை தொடர்ந்து ஆற்றுப்படுத்தியது சிறப்பானது. 
‘இந்த விளையாட்டிற்காக நாம் பல காரியங்களைச் செய்திருக்கிறோம். சிலரை தொடர்ந்து போலி என சொல்லியிருக்கிறோம். குறிப்பாக பரணியை தனிமைப்படுத்தியிருக்கிறோம். அவங்க தப்பு செஞ்சாங்களா, இல்லையான்னு நமக்கு எப்படி தெரியும், நம்ம எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்’ என்றெல்லாம் ரைசா வாக்குமூலம் போல குறிப்பிட்டது உள்ளபடியே அவர் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காட்டியது. 

raisa

‘தான் செய்த நிராகரிப்பு, புறக்கணிப்பு, கேலி, நையாண்டி’ போன்றவை கூட ஓவியாவின் இந்த நிலைக்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்’ என்று அவர் வருந்துவது நெகிழ்ச்சி. ஆனால் சக்தி மற்றும் காயத்ரி இதை இன்னமும் defending ஆகவே அணுகுவது போல பட்டது.  ‘அவ பிரச்னைக்கு நாம காரணம் கிடையாது. ஆரவ்வின் rejectionதான் காரணம்’ என்கிறார் காயத்ரி. உண்மையும் பொய்யும் கலந்த காரணம் அது என்று தோன்றுகிறது. இந்த நாடகத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஓரமாக பங்கெடுக்க முயன்றார் ஜூலி. ஆனால், முதல் முறையாக நடிப்பில் 'பெயிலு' வாங்கினார் ஜூலி.
‘எல்லோரும் அவள் நடிக்கிறாள் என்றே நினைத்தார்கள். இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது’ என்றார் ஆரவ். 

‘ஓவியாவை ஆரவ் இன்னமும் சரியாக அரவணைத்துச் சென்றிருக்கலாமோ’ என்று ஒட்டுமொத்த பழியையும் சிநேகன் சுமத்த முயன்ற போது ‘அப்படிச் சொல்ல முடியாது. நாம் இளம் வயதிற்கான அனுபவப் போதாமைகளுடன் உள்ளோம். ஆரவ்வும் அப்படித்தான். என்று ரைசா குறிப்பிட்டது அவர் அடைந்த மனப்பக்குவத்தை காட்டுகிறது. பிக் பாஸ் வீட்டில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக இது அவருக்கு இருக்கும். 

**

‘வெளியே சென்ற பிறகு ஓவியாவைத் தொடர்பு கொள்ள முயல்வேன். அவள் தண்டனை கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு நட்பை புதுப்பிப்பேன்’ என்றார் ஜூலி. நல்ல மாற்றம். ‘நமது நிருபர்’ பிந்து மாதவி இந்தச் சமயத்தில் சரியான கேள்வியை முன் வைத்தார். ‘அவங்க மன்னிப்பு கேட்டும் நீங்க ஏன் சொல்லலை?” “சார் முன்னாடியே கேட்டுட்டேன். திரும்பத் திரும்ப எப்படி ஸாரி சொல்றது’ என்பது ஜூலியின் பதில்.

ஒருவர் உண்மையாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதற்கும் மற்றவர்களின் கட்டாயத்திற்காக சம்பிரதாயத்தன்மையுடன் போலியாக மன்னிப்பு கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஜூலியால் இன்னமும் உணர முடியவில்லையா என்று தெரியவில்லை.  அவரின் போலித்தனத்தை நம்மாலேயே உணர முடிகிற  போது பொய்யை கடுமையாக வெறுக்கும் ஓவியாவால் உணர முடியாமலா இருக்கும்?
ஓவியா நுழைவின் போது அரங்கமே உற்சாகக் கூச்சலுடன் அவரை வரவேற்றத்பார்வையாளர்களின் உற்சாகமான அன்பை அதே உற்சாகத்துடன் வாங்கிக் கொண்டு திருப்பியும் அளித்தார் ஒவியா. ‘உங்கள் அன்பிற்கு கைம்மாறு அளிக்கும் வகையில் பொறுப்போடு நடந்து கொள்வேன். இது பற்றிய அறிவிப்பு வரும்’ என்றார் ஓவியா. ‘வருங்கால தமிழகமே, ஆட்சி நமதே’ என்றலெ்லாம் ஓவியப்படை இதை அரசியல் ரீதியாக கற்பனை செய்து கொள்ளக்கூடாதே என்று கவலையாக இருந்தது. 

bigg boss tamil

**

காதல் என்கிற உணர்வுகளைப் பற்றிய அடிப்படைகளை விளக்க ஆரம்பித்தார். முன்னாள் ‘காதல் இளவரசன்’ ஆயிற்றே….எத்தனை அனுபவங்களைக் கடந்து வந்திருப்பார். ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ என்கிற தோரணையுடன் அவர் ஓவியாவிற்கு அளித்த உபதேசங்கள் அருமையானவை. 

விடைபெறுவதற்கு முன்பாக ‘வீட்ல இருக்கறவ மத்தவங்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்றார் கமல்.

சபையே மிக ஆவலாக அந்தப் பதிலை எதிர்பார்த்தது. சம்பிரதாயமாக எல்லோருக்கும் நன்றியும் அன்பும் சொல்வார் போல என்று நான் கூட நினைத்திருந்தேன். தூக்கி வாரிப் போட்டது போல் பளிச்சென்று வந்து விழுந்தது அந்த மகா வாக்கியம் ‘luv you arav’.

உருகி உருகி ரொமான்ஸ் திரைப்படங்கள் எடுத்திருந்த தமிழ் இயக்குநர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைப் பார்த்தால் மிரண்டு போயிருப்பார்கள். இப்படியொரு உணர்ச்சியை தங்கள் திரைப்படங்களின் காட்சியில் கொண்டு வரவில்லையே என்று. அந்தப் பதிலைக் கண்டு கமலே ஒரு கணம் திகைத்துப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது. 

ஓவியாவை இத்தனை தயார் செய்து கமலின் முன்னால் அமர்த்தி வைத்திருந்த உளவியல் ஆலோசகர் நொந்தே போயிருப்பார். ‘நமக்கு இன்னமும் பயிற்சி தேவையோ”

‘அவர் உங்களுக்குப் பொருத்தமானவர் இல்லை’ என்று கூட்டம் ஆரவரித்த போது, அதை மிகவும் பணிவுடன் மறுத்த ஓவியா, ‘decision is mine’ என்றது அற்புதம். கமலும் இதை வழிமொழிந்தார். ‘மக்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பு உண்மையானது’ என்றதும் அற்புதம். 

பார்வையாளர்களின் ஆரவரமான கைத்தட்டலுடனும் பிரியாவிடையுடனும் ஓவியாவின் வெளியேற்றம் நடந்தது. 

‘ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாளே’ என்கிற ‘காக்க காக்க’ பாடலின் பின்னணியுடன் ஓவியாவைப் பற்றிய காட்சித் தொகுப்பு ஒன்று காட்டப்பட்டது. அபாரமாக  தொகுக்கப்பட்ட அந்தக் காணொளியை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு. 

**

பிறகு துவங்கியது குற்ற விசாரணை. பிக்-பாஸிடம் அனுமதி வாங்கிக் கொண்டார் கமல். ‘கொஞ்சம் தள்ளிக்கறீங்களா.. அவங்க கூட பேசணும்’ என்ற போது வசூல்ராஜா கமலின் குரல் ஒலித்த பிரமை. ‘வழக்கமாக மொத்தமா உட்கார வெச்சு பேசுவேன். இந்த முறை தனித்தனியா பேசணும். ஒரு காரணம் இருக்கு’ என்ற போது சக்தியும் காயத்ரியும் ஒருவரையொருவர் பள்ளி மாணவர்கள் போல பார்த்துக் கொண்டார்கள். 

அந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் (Day 40)

‘ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்?  (Day 39)

‘ஓவியாவின் காதல் உண்மையானதா, அத்தனையும் நடிப்பா -  (Day 38)

‘மிஸ்டர் பிக் பாஸ்... இதெல்லாம் தவிர்க்கலாமே..!' - ஒரு ரசிகனின் ஆதங்கம்  (Day 37)

மனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா?! - (Day 36)

ரைசாவின் சீக்ரெட்... பிந்து மாதவியின் டார்கெட்... சமாளிப்பாரா ஓவியா?! - (Day 35)

ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? -  (Day 34)

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! -  (Day 33)

‘இதுவரையான காட்சிகளை வெளியில் இருந்து பார்த்து ஒரு மாதிரி குழம்பிப் போயிருந்தேன். ஆனால் உள்ளே நிலைமை அத்தனை பயமுறுத்தலாக இல்லை’ என்றார் பிந்து மாதவி. ‘ஓவியா வின்னராக இருப்பார்’ என்று அவர் கூறியதும் கூட்டம் ஆரவரித்தது. 

நடுநிலைமையைப் பின்பற்றுவதற்கும் எல்லாவற்றில் இருந்தும் சாமர்த்தியமாக ஒதுங்கியிருப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது’ என்று கணேஷின் மைனஸ் பாயின்ட்டை சரியாகப் பிடித்தார் கமல். ‘அவரை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கூட்டாக இணைந்து பணியாற்றுவதில் அவர் எப்போதும் பின்னடைவை அடைந்தார்’ என்று கணேஷ் சொன்னது ஒருவகையில் உண்மைதான்.

‘inhumane’ என்று ஓவியா குறித்து சொன்னதை பரணிக்கும் ஏன் பொருத்திப் பார்க்கவில்லை என்ற கமலின் கிடுக்கிப்படி கேள்வியை கணேஷால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தடுமாறி பதில் சொன்னார்.

இந்த வாக்குமூலப் படலத்தை மிக நேர்மையாக எதிர்கொண்டது ரைசா. “ஆம் அவர் தனிமைப்படுத்தப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருப்பேன்’. ‘இந்தக் குடும்பத்தில் எவரேனும் நாட்டாமைத்தனமாக நடந்து கொள்கிறார்களா’ என்கிற கமலின் கேள்விக்கு பதிலளிக்க ரைசா முதலில் தயங்கினாலும், கமல் தைரியப்படுத்திய பிறகு ‘சக்தி மற்றும் காயத்ரி’யை குறிப்பிட்டதற்குப் பாராட்டு. அவர்கள் செல்வாக்கான பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்கிற காரணத்தை அவர் சொன்னது சரியானது. 

ஒரு கூட்டத்தில் உயர்வு – தாழ்வு மனப்பான்மைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான சிறந்த வாக்குமூலம் ரைசாவுடையது. 

நாளை ஒளிபரப்பாகவிருக்கும் சிநேகனின் வாக்குமூலத்தை கலங்கிய கண்களுடன் கமல் கேட்டது நெகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. 

**

சரி, ஓவியாவின் மீதான இந்த அதீதமான அன்பை ஒருபுறம் வைத்து விட்டு இந்தச் சூழலை இன்னமும் கறாராக அணுகுவோம். 

ஓவியா போட்டியிலிருந்து விலகியது அல்லது வெளியேற்றப்பட்டது குறித்து துயரமும் வருத்தமும் இருக்கும். இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று சக போட்டியாளர்களின் தனிமைப்படுத்துதல் இருந்திருக்கும். இந்த சமயங்களில் ஆரவ் தந்த ஆறுதலையும் நட்பையும் ஓவியா காதல் என்று தவறாக புரிந்து கொண்டாரோ அல்லது ஆரவ்வும் முதலில் அது போன்ற சமிக்ஞையை தந்து விட்டு பின்பு மாறினாரா என்பதெல்லாம் ஆய்வுக்குரியது. இது சார்ந்த முழு உண்மைகள் நாம் அறியாதது. 

எனவே இது குறித்தான முழு சாதகத்தையும் ஓவியாவிற்கு தந்து விட்டு ஆரவ் மற்றும் இதர நபர்களின் மீது மட்டும் சுட்டுவிரலை கடுமையான தொனியில்  நீட்டுவது முறையற்றது. 

ஓவியா வெளிப்படையாக நடந்து கொள்பவர், பொய் சொல்லத் தெரியவாதவர், வெகுளியானவர் என்பதெல்லாம் எத்தனை உண்மையோ, அதேயளவிற்கான உண்மை, கூடிவாழும் தன்மையில் அவருக்கு இருக்கும் பலவீனங்கள். பணிகளை பங்கிட்டு செய்வதில் அவருக்கு இருந்த சோம்பேறித்தனம், தலைவராக ஏற்கப்பட்டவரின் வழிகாட்டுதல்களை அலட்சியத்துடன் புறக்கணித்தது என்று பல பின்னடைவுகள் அவரின் பங்காக இருந்தது. இந்த விளையாட்டின் அடிப்படைக்கு இந்த அம்சங்கள் மிக எதிராக இருக்கின்றன. 

kamal oviya

இன்னொன்று, இந்தக் குறுகிய காலத்திலேயே இத்தனை அழுத்தமான காதல் உணர்ச்சி அவரிடம் உருவானது நிச்சயம் நிலையானதல்ல. பெரும்பாலான காதல் திருமணங்கள் தோற்றுப் போவதும், கடுமையான சச்சரவுகளுடன் வேறு வழியில்லாமல் தொடர்வதும் இந்தக் காரணத்தினாலேயே. பெரும்பாலான காதலும் திருமணங்களும் இனக்கவர்ச்சியின் உந்துதலால்  அவசரமாக நடைபெறுகின்றன. காதலுக்கு முன்பு இன்பமாக இருந்த சூழல்,  திருமணத்திற்குப் பிறகு பரஸ்பர வேடங்கள் கலைந்தவுடன், அந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் கசப்பாக மாறுகிறது. 

இத்தனை ஆழமாக இந்தக் காதலுக்குள் ஓவியா விழுந்தது அவருடைய நோக்கில் சரியானதாக இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கலாம். உண்மையான அன்பை அவர் தேடியலைந்தது கூட இந்த விபத்து நிகழ்வதற்கு ஒரு வழியாக இருந்திருக்கக்கூடும். 

ஆனால் இந்த விலகலின் மூலம் சிந்திப்பதற்கான அவகாசம் அவருக்கு கிடைக்கக்கூடும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நிதானமாக வளர்ந்து முதிர்ச்சியடையும் காதலே, அதற்குப் பின் உருவாகும் உறவிற்கு பலமான அஸ்திவாரமாக அமையும் என்பதை அவர் உணரக்கூடும். 

ஓவியாவின் ஆளுமையும் அவரது குழப்பமான நடவடிக்கைளும் உளவியல் நோக்கில் ஒரு நல்ல case study-க்கான உதாரணம். காதலர்கள் கொள்ளக்கூடிய துயரங்களை காதல் திருமணங்களை தடுத்த பெற்றோர்கள், தடுக்கவிருக்கிற பெற்றோர்கள் புரிந்து கொள்ள இந்த அத்தியாயங்கள் உதவக்கூடும். 

குறுகிய காலத்தில் உருவாகும் காதலை விடவும் வாழ்க்கை இன்னமும் பிரமாண்டமானது.  அந்த சவால்களையும் திறம்பட ஓவியா சமாளிப்பார் என நம்புவோம்.ஏனென்றால், அவர் ஓவியா.

ஓவியாவிற்கு, நீங்கள் சொல்ல விரும்பும் வாழ்த்தினை கமென்ட்டில் பதிவு செய்யவும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்