நீங்களும் ஓவியா டைப் காதலர்களா..? #Oviya | Are You a Follower of Oviya in Love...?

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (08/08/2017)

கடைசி தொடர்பு:08:58 (08/08/2017)

நீங்களும் ஓவியா டைப் காதலர்களா..? #Oviya

காதல் என்றாலே தடுமாற்றம் இருக்கத்தானே செய்யும்.  எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும் சரி காதலன் முன்பு தோற்றுப்போகத்தான் விரும்புகிறார்கள். 'காதல்'  மலர்ந்தபின்  அவர்களின் உடல் மொழியில் ஏற்படும் அத்தனை மாற்றங்களும் அதற்கு சாட்சி. 1980கள் வரைக்கும் 'காதல்' என்பது உச்சரிக்கக்கூடாத வார்த்தையாகவே இருந்து வந்தது. ஆண்கள் மட்டுமே பெண்களைத் தேடிப்போய் காதல் மொழி புரிவதும், துரத்திப் பிடித்து காதலிப்பதும் வழக்கமாக இருந்தது. அதற்கு அக்காலத்தில் வந்த காதல் பாடல்களையே உதாரணமாகக் கூறலாம். 'நீதானே எந்தன் பொன்வசந்தம்.., பூவே செம்பூவே...' போன்றவை ஆண்களின் உணர்வு மொழிகளை அடக்கிய பேழைகள். அதுவே பெண்களுக்கு அக்காலத்தில் ஆண்களுடன் பேசுவதற்கே ஒருவித தயக்கமும், அவர்களுக்குப் பிடித்திருந்தாலும் வெளியேகூறமுடியாத சூழ்நிலைக் கட்டுப்பாடுகளும் இருந்து வந்தன. அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து வெளிப்படையாகக் கூறும் இயல்பை தற்போது பெற்றிருக்கிறோம். 

Love

இதனடிப்படையில் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நிகழ்வுதான் நம்முடைய புறம் பேசும் பழக்கத்திற்கு தற்காலிக தீணியைப் போட்டுக்கொண்டிருக்கிறது. ஓவியாவின் நிலை பிக் பாஸில் எப்படி இருந்ததோ அதே போல்தான் இன்று பல பெண்களின் நிலையும்காதலில் உதாசீனப்படுத்தப்படுகிறது. ஆரவ் போல் சில ஆண்கள் தனது உடல் மொழிகளால் காதல் பாஷைகளைக் காட்டிவிட்டு, வெறும் பேச்சுக்கு மட்டும் Mr. Clean வேஷம் போடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். என்னதான் வெளிஉலகிற்காக நல்லவர் வேஷம் போட்டாலும் ஒருநாள் நம் சுயம் வெளிப்படுவதை மாற்ற இயலாது. அதைக் காப்பாற்ற வெகு காலம் நடிக்கவும் இயலாது. அதற்கு ஆரம்பத்திலிருந்தே சுயத்தை வெளிப்படுத்துவது சிறந்தது என்பதே ஓவியாவின் பாலிசியாக இருந்தது. 'எனக்கு பிடித்திருந்தால் எது வேண்டுமானாலும் செய்வேன். அதுபோலத்தான் பாத்திரம் கழுவதும், துடைப்பதும், சுத்தம் செய்வதும். என்னுடைய இந்த குணம் பிடித்திருந்தால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பிடிக்கவில்லை என்றால் No Problem'. இப்படி வெளிப்படைத்தன்மையுடம் இருக்கும் பெண்களை ஓவியாவைப் போல் மனநலம் பிசக்கியவர்களாகத்தான் பார்க்கிறது உலகம்.

உண்மையில் உணர்ச்சிகளையும் சரி, உணர்வுகளையும் சரி திறம்பட கையாள்வது பெண்கள்தான் என்ற கருத்து 19ஆம் நூற்றாண்டிலேயே காரன் ஹார்னி என்ற உளவியலாளரால் விளக்கப்பட்டுவிட்டது. முதலில் ஆண்- பெண் இருவருக்கும் இடையில் காதலை வெளிப்படுத்தும் விதங்களின் வித்தியாசங்களை உணர்ந்தாலே போதும். உறவுகளில் பிரச்னைகளை எதிர்கொள்வது மிகச் சுலபம். அதனடிப்படையில் இருக்கும் காதல் கண்மணிகள் இவர்கள்தாம். புரிந்துகொள்ளுங்கள் காதலர்களே...!

ஓவியா-ஆரவ்

சைலன்ட் மோட் Vs லவுட் ஸ்பீக்கர்:

பெண்கள் மொழியில் அதிக நுட்பத்துடன் விளங்குவதற்கு ஒரு தனிக் காரணம் இருக்கிறது. .நிற்க...எந்த ஒரு கூற்றை மெய்ப்பிக்க நேர்ந்தாலும் அதற்கு ஆதிமனிதனிடமே சரணடைய வேண்டும் என்பது விதி. அதாவது, ஆதி மனித காலத்தில் மனிதன் வேட்டையாடச் செல்லும் போது வீட்டில் பெண்களுக்கு புறம் பேசுவதுதான் ஒரே பொழுது போக்காக இருந்தது. அதனை 'Fire Cage Language Practice' என்று கூறுவார்கள். ஆண்கள் இல்லாத அந்நேரத்தில் பொழுதுபோக்கிற்காக பெண்கள் ஒன்றுகூடி பேசுவதற்கு பழக்கப்பட்டுவிட்டனர். 

காலையில் நாம் தூங்கி எழுந்தவுடன் பெண்களுக்கு 20,000 வார்த்தைகளும், ஆண்களுக்கு வெறும் 5,000 வார்த்தைகளும் மூளைக்கும் லோட் ஆகிறது. அந்த நாளைக்குள் அவர்கள் லோடான வார்த்தைகளை உபாயோகப்படுத்திவிட வேண்டும். அவ்வாறுதான் நமது மூளையின் Commanding System-மும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் பெண்கள் அதிகம் புறம் பேசுவதற்கும் காரணம். இதனடிப்படையில்தான் பெண்கள் எந்த ஒரு உணர்ச்சியாக இருந்தாலும் சரி. அதனை வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஆண்கள் அதற்கு அப்படியே நேரெதிர். தனது உடல் மொழிகளால்தான் காதலை வெளிப்படுத்த வேண்டுமென்றே நினைப்பார்கள். இதனால் கருத்துப் பரிமாற்றத்தில்பலவிதமான  சண்டைகள் நிகழலாம். நான் மட்டும் தான் 'லவ் யூ' சொல்றேன். நீ ஏன் சொல்றதே கிடையாது என்று அடிக்கடி பெண்கள் கேட்பதுதான் இதன் சாட்சி. எனவே எப்போதுமே தொணத் தொணவென்று பேசிக்கொண்டிருந்தால் காதலியை நிராகரிக்காதீர்கள். எல்லா காதல் கண்மணிகளுமே இப்படித்தான். 

மிஸ்டர் க்ளீன் Vs மிஸஸ் க்ளீன்:

பெரும்பாலும் சூழலுக்குப் பயப்படுபவர்கள் பெண்கள்தான். இருந்தாலும் அவர்கள் காதலை வெளிப்படுத்தத் ஒருபோதும் தயங்குவதில்லை. அது போக உலகமே தன் காதலன்தான் என்றும் கூட குறுகிய வட்டத்துக்குள் எண்ணுவதுண்டு. அதற்கு முக்கியக் காரணம் இவர்களின் 'நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி'தான். அதாவது ஒருவர் மீது அதீத ஆர்வத்தைக் காட்டுவதும், அதே நேரம் அவர்களை வைத்து அதீத பகல் கனவில் ஈடுபடுவதும்தான் இதன் விளைவு. அதிகமாக உணர்ச்சிகரமான முடிவுககளை எடுப்பதும் பெண்கள்தான். இவ்விடத்தில் ஆண்கள் சற்று தாமதித்தே முடிவெடுக்கிறார்கள்; யோசித்தே செயல்படுகிறார்கள். எனவே 'மிஸ்டர். க்ளீன்' இமேஜை தக்கவைத்துக் கொள்ள முற்படுபவர்களும் ஆண்களே. அது நன்மைபயக்கும் விதத்தில் இருக்கும் வரையில், ஆண்களின் இக்குணத்தை நிராகரிப்பது பெண்களின் முட்டாள்தனமே...!

கவனித்தல் Vs கண்காணித்தல்:

காதலன் அல்லது காதலியின் அனைத்து குணங்களையும் கவனிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதில் கவனிப்பதை பெண்கள் செய்தாலும், கண்காணிப்பதை பரவலாக ஆண்களே மேற்கொள்கின்றனர். குடும்பம் எனும் சிஸ்டம் நம்மை இப்படி மாற்றியுள்ளது என்றும் கூறலாம். ஆண்கள் எங்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் பெண்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதே அது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். 'Cognitive Distortion'- ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றியோ தொடர்ச்சியாக யோசித்துக்கொண்டிருப்பதுதான் இதன் அர்த்தம். இதுவே காதலில், இந்த குணம் தொடர்ச்சியாக தனது இணையை கண்காணிப்பதாக  மாறுகிறது. அவர்களை பற்றிய சிந்தனை அதிகமாக தோன்றுவதால்தான் இந்த கண்காணிப்பும் அதிகமாகிறது. 

எப்படி யோசித்தாலும், போகிறபோக்கில் காதலில் அனுசரித்துப் போவதுதான் சிறந்தது. இதில் லாஜிக், க்ளீன் இமேஜ், பர்சனாலிட்டி மேக்கிங் இதெல்லாம் வேலைக்கே ஆகாது. உங்கள் காதலனோ அல்லது காதலியோ இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகித்தால், முதலில் பின்பற்றுவது 'No Contact Rule' ஆகத்தான் இருக்க வேண்டும். அதாவது ஃபோன் கால், மெசேஜ், வாட்ஸப் போன்ற எல்லாவற்றிலும்  தற்காலிகமாகத் தொடர்பை துண்டித்துவிடுவதுதான் ஒரேவழி. காதலில் எப்போதும் தொடர்பிலேயே இருப்பதும் கூட ஒருவித சலிப்புணர்வைத் தோற்றுவிக்கலாம். எல்லாவற்றிற்கும் காலமே பதில் சொல்லும் என்பதே சிறந்த மருந்து. எப்படி மற்றவர்கள் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருக்க "Please No more Emotional Drama" என்று தெளிவாகக் கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு ஓவியா வெளியேறினாரோ, அப்படி மனநிறைவை கெடுக்கும் இடத்திலிருந்து வெளியேறுவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு சிறந்த வழி. இதில் நீங்கள் எந்த டைப் காதலர்கள் பாஸ்...?


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close