Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஓவியா இல்லாத பிக் பாஸ் வீடு - எப்படி? ஓவியா ரிட்டர்ன்ஸ் எப்போது? #BiggBossTamil 

​'ஓவியா.. ஓவியா’ என்று ஒரு மாதகாலம் பலரையும் உச்சரிக்க வைத்த அவர், ‘ஓகே பிக் பாஸ்.. கெளம்பறேன்’  என்று பிக் பாஸ் வீட்டிலிருந்து சனிக்கிழமை கிளம்பிவிட்டார். ஞாயிறன்று கமல்ஹாசன் எல்லாரையும் குறுக்கு விசாரணை செய்ய ஓரளவு தாக்குப்பிடித்தது. கடந்த இரண்டு தினங்களில்.. ஓவியா இல்லாத பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது?

ஓவியா பிக் பாஸ்

ஓவியா இருந்த நாட்களில் அவரது காலை உற்சாகம், நிகழ்ச்சியைப் பார்க்கும் இரவு நேரத்திலும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். ‘குட்மார்னிங் சாங்’ ஒலிக்க ஆரம்பிக்கும். முழுத்தூக்கத்தில் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக போர்வைக்குள்ளிருந்து தலையை நீட்டி உடலின் ஒவ்வொரு செல்லிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆட்டத்தை போடுவார். லேசாகத் தலையை ஆட்ட ஆரம்பித்து, பாடலின் ரிதத்திற்கு ஏற்ப ஆடிக்கொண்டே வந்து புல்தரையில் குத்தாட்டம் போடுவது வரை என்ன செய்தாலும் அதில் ஓர் உண்மை இருந்தது. இசையும், நடனமும் அவருக்கு அந்த வீட்டில் இருந்த மனிதர்களைவிடவும் நெருக்கமாக இருந்ததை நம்மாலும் உணரமுடிந்தது. அன்றைக்கு அவர் ஆடும்போது ‘கேமரா முன்னாடி காட்டிகிட்டு ஆடறா’ என்று புறம்பேசியவர்கள், இன்றைக்கு ஆடுகிறார்கள். ஆனால் என்னால் ரசிக்க முடியவில்லை. இத்தனைக்கும் இன்றைக்கு ஆடுபவர்களில் பலரையும் ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டரும் இருக்கிறார். ஆனாலும் அவர் ஆட்டத்தில்  ஏதோ குறை. அதே போல, ஓவியா இருந்த நாட்களில் இந்த ஆட்டத்திற்கு அவர் யாரையும் அழைத்ததில்லை. யாரும் வந்தால் விலக்கியதும் இல்லை. ஆனால், இன்றைக்கு ஆடுபவர்களுக்கு யாரேனும் ஒரு துணை தேவைப்படுகிறது. ஆடுவதிலேயே ‘எல்லாரும் பார்ப்பாங்க’ என்கிற எண்ணத்தில் ஆடுவது வெட்டவெளிச்சமாய்த் தெரிகிறது. ஓவியாவை மிஸ் செய்யும் தருணங்களில்  முக்கியமானது  இந்த ‘குட்மார்னிங் சாங்’ நேரம். 

டாஸ்க் என்ற ஒன்று கொடுத்தால் சிரத்தையாய் செய்கிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யம் இல்லையே!  ‘அவ சாப்டத நான் ஏன் கழுவணும்?’ என்று ஸ்பூனைத் தூக்கி எறிந்த ஒருவர் நேற்று யாருடையதையோ மாங்கு மாங்கு என்று துவைத்துக் கொண்டிருந்தார். சண்டையே நடக்காவிட்டாலும் ‘சண்டை போடாதீங்கப்பா’ என்று வையாபுரி  சொல்லிக் கொண்டிருந்தார். ‘சண்டையா.. அதெல்லாம் இல்ல ப்ரோ’ என்று கணேஷும், ஆரவ்வும்   சொல்லிக் கொண்டிருந்தனர். ‘அவரு என்னைத் தப்பா நினைச்சுட்டாரு’ என்று சக்தி  சொல்லிக் கொண்டிருந்தார். ‘இல்லல்ல ப்ரோ. இது கேம்தானே’ என்று சினேகன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றிலும் ஒரு ‘அதோ அவரே வந்துட்டாரே’, ‘என்ன வெய்யில்.. சாரதா கொஞ்சம் தண்ணி கொண்டு வா’  ரக நாடகத்தன்மை. 

பிக் பாஸ் ஓவியா

இவற்றையெல்லாம் பார்க்கும்போதும் ஓவியாவின் இன்மையை உணர்கிறேன். பிடித்தால்தான் டாஸ்க் செய்வார். செய்தால் முழுமனதோடு செய்வார். இல்லையா ‘டாஸ்க்லாம் செய்ய முடியாது’ என்பார். எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது என்று தெரியவில்லை. லிவிங் ஏரியாவில் பாட்டு போடப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் பாடல் வரும்போது ஆடவேண்டும் என்றொரு டாஸ்க். ஓவியா யார் ஆடும்போதும் சென்று ரசித்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தைத் தொழிலாகக் கொண்ட ஒருத்தர் தன் தோழியிடம் ‘அவ ஆடறப்ப நாம யாரும் போய்ப் பார்க்கக்கூடாது.. அவதான்.. ஓவியாவத்தான் சொல்றேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்றைக்கு இவர் ஆடுவது நமக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. மொத்தத்தில் இரண்டு நாட்கள் பிக் பாஸ்.. சவ சவ! 

ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘சிவாஜி’ படத்தில் ‘சிவாஜி’ ரஜினி இறந்து விடுவார். இடைவேளைக்குப் பிறகு அவரே ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக வந்து கெத்து காட்டுவார். அதேபோல, ஒரு மாதத்திற்குப் பிறகு புதிய போட்டியாளராக உள்ளே வந்த பிந்து மாதவி  சிலரிடம் துணிச்சலாகக் கேள்விகளெல்லாம் கேட்கும்போது ஓவியாவுக்கு நேர்ந்த இழுக்குக்கெல்லாம் இவர் பழி வாங்குவார் என்று தோன்றியது. ம்ஹும். அவரும் ‘நானுண்டு என் வேலையுண்டு’ என்று இருப்பதாகப் படுகிறது. 

பிக் பாஸ் கமல்

சண்டை போடவோ, சினேகமாய்ச் சிரிக்கவோ, ஆடவோ,  பாடவோ, வம்புக்கிழுக்கவோ, சும்மா உலவவோ என்ன செய்தாலும் அவர் அவராக இருந்த ஓவியா இல்லாதது பெரும்குறை. இரண்டு நாள் எல்லாரையும் பாடாய்ப்படுத்தி ஒரு ‘காட்டு காட்டி’விட்டு மருத்துவர் ஆலோசனைக்காக வெளியே வரும் ஓவியா, கமல் சொல்லுங்க என்றதும்  ‘ஹவ் ஆர் யூ சார்?' என்று கமலை நலம் விசாரிக்கிறார். ஆக்சுவலாக கமல்தான் ஓவியாவைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். ஓவியாவின் நலம்,  பலரைக் கவலைக்குள்ளாக்கிய நேரம் அது. ஆனால் அவர் கூலாக கமலிடம் நலம் விசாரித்து அந்த உரையாடலை ஆரம்பிக்கிறார். அந்த Easy Girl ஓவியாவைத்தான் பிக் பாஸ் வீடும், நாமும் மிஸ் செய்கிறோம்.

சரி, ஓவியா திரும்ப வருகிறாரா?

‘சேனல் சார்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்; மக்களும் எதிர்பார்க்கிறார்கள்; பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் திரும்ப வருவார். வைல்ட் கார்ட் எண்ட்ரியில் தெறிக்க விடுவார்’ என்றெல்லாம் பேச்சுகள். என்னளவில் அவர் வராமல் இருப்பதுதான் சிறந்தது. ஏன்?

அங்கே இருந்த நாட்களில் அவர் அன்பே சிவம் என்றிருந்தார். அன்பில் காட்டியது விஸ்வரூபம். அவருக்கெதிரான சதிகளை புன்னகையில் கடந்தார். பிறகு சில சமயங்களில் ருத்ரதாண்டவமும் ஆடினார். (உன்னால எப்படி இப்படி ஒரு பொய்யை இழுக்க முடியுது ஜூலி?)  புறம் பேசாது இருந்தார். சில சமயம் மனதில் தோன்றியதை படாரென்று போட்டுடைத்தார். (ரைசா, கிரீடம்  டாட்டு தலைலதானே போடணும்? ஏன் கால்ல போட்டிருக்கு / தெரியல / நீங்கதானே போட்டிருக்கீங்க? ஏன் தெரியல?) 

ஒருவர் பேசியது பிடிக்கவில்லை என்றால் அவரிடமே அதை அன்பாய், கோபமாய், கடும்கோபமாய் வெளிப்படுத்தினார். அந்த ஓவியாவை நமக்குப் பிடித்திருந்தது. அவரைப் பலர் ஒதுக்கக் காரணமாய் இருந்த, ‘அவ போகட்டும்’ என்று ஓவியாவைத் தவிர பிற எல்லாரையும் நிற்கவைத்து திருஷ்டி சுற்றிய ஒருவரிடமே ‘உங்கமேல கோபம் இல்லை’ என்று பேசிக் கொண்டிருந்தார். அந்த நபரும், ‘இவ போய்டுவா எப்படியும்’ என்ற உறுதியாகத் தெரிந்தபிறகு ஓவியாவுக்கு ஆதரவு வேடம் பூண்டார்.


வெளியில் வந்தபிறகு இந்த நாடகங்களையெல்லாம் ஓவியா தெரிந்து கொண்டிருப்பார். இன்றைக்கு அழுதாலும், அன்றைக்கு இந்த விஷயங்களுக்கு உடந்தையாக சினேகனும் இருந்திருக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்த ஓவியா, உள்ளே வந்தால் என்ன ரியாக்ட் செய்வார் என்று சொல்ல முடியாது. விதிகளின்படி வெளியே பார்த்ததை விவாதிக்கக் கூடாது என்றிருக்கும். அதனால்தான் பிந்து மாதவி சில விஷயங்கள் தெரிந்தாலும் கேட்பதில்லை. ஆனால் ஓவியாவால் அப்படி இருக்க முடியாது. ’நான் பார்த்துச்சு. நீ நடிக்காத’ என்று முகத்திலடித்தாற்போல பலமுறை சிலரிடம் சொல்லும் சந்தர்பங்கள் வாய்க்கும். அப்படி ரிவெஞ்ச் ரீட்டாவாக அவர்களைப் பழிவாங்க சிலவற்றைச் செய்தால் ரசிக்கலாம். மாறாக இவரும் ‘மன்னிப்பு கேளு மன்னிப்புக் கேளு’ என்று டார்ச்சர் செய்தால் மீண்டும் இவருக்கெதிராக ஒரு அணி, இவரை ஒதுக்குவதும் இவர் டென்ஷனாவதுமே நடக்கும். இப்படியாக  அந்த ‘ரிட்டர்ன்’ ஓவியா, இன்றைக்கு நம் மனதில் இருக்கும் ‘சூப்பர் கேர்ள்’ ஓவியாவை வெறுக்கச் செய்துவிட வாய்ப்புகள் உண்டு. 

ஆகவே....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement