''கமலுக்காகதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சக்தி!'' - மனம்திறக்கும் இயக்குநர் | Kamal was the only reason why Sakthi participated in bigg boss says Director Kumaravelan

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (10/08/2017)

கடைசி தொடர்பு:14:00 (10/08/2017)

''கமலுக்காகதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சக்தி!'' - மனம்திறக்கும் இயக்குநர்

விஜய் டி.வியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, நிகழ்ச்சி பற்றிய பரபரப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது பற்றி தெரிந்துகொள்ள பார்வையாளர்கள் சற்று ஆவலாக இருந்தனர். 

wagah movie

முதல் நாள் எபிசோட்டில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பதினைந்து பிரபலங்களை,  கமல் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  ஒவ்வொருவரின் வருகையும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. அந்த வகையில் பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தியின் என்ட்ரி பலரை ஆச்சரியமடைய செய்தது. இவர் சிறிய வயதிலேயே தனது தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த சில படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு, 'தொட்டால் பூ மலரும்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்துக்குப் பிறகு, இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'நினைத்தாலே இனிக்கும்’. இந்தப் படம் சக்திக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் எடுத்திருந்த இந்தப் படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்திலேயே சக்தி நடித்திருந்தார். 2009-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சக்தியின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. படத்தில் மிகவும் அமைதியான பையனாக நடித்திருந்த சக்தியை 'பிக் பாஸ்' வீட்டில் பார்க்கும் போது எப்படி இருக்கிறது என்று குமரவேலனிடம் கேட்டோம்.

'' ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் நடித்த சக்திக்கும் இப்போது இருக்கும் சக்திக்கும் வித்தியாசம் என்று பார்த்தால், சக்திக்குள் நிறைய முதிர்ச்சி வந்துவிட்டது.  நான் பார்த்த சக்தியிடம் கோபம் இருக்காது. என் படத்தில் எப்படி இருந்தாரோ அப்படிதான் நிஜ வாழ்விலும் இருந்தார். இப்போது காலங்கள் மாறும்போதும், அவருக்கும் சில பொறுப்புகள் வரும்போதும் ஓவராக பிரஷர் வந்திருக்கும். அதனால், சில நேரங்களில் கோபப்படுகிறார்.  பிக் பாஸ் மூலமாக அவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்.

sakthi

ஆலமரத்துக்கு அடியில் இருக்கும் நிழல்போல அவர் வளர்ந்தவர். பிக் பாஸ் வீட்டில் பார்ப்பதுபோல் வீட்டு வேலைகளை அவருடைய வாழ்க்கையில் எப்போதும் பார்த்திருக்க மாட்டார். இப்போது சக்தி வீட்டுக்குள் வேலைகள் செய்யும்போது பிரஷர் காரணமாகச் சில இடங்களில் கோபப்பட்டிருக்கலாம். ஒரு வீட்டுக்குள் அடைத்து வைக்கும்போது, கண்டிப்பாக நம்முடைய இயல்புகள் மாறும். ஆனால், சக்தி ரொம்ப சிம்பிளான மனிதர். அதை நிகழ்ச்சி பார்க்கும்போது நமக்கே தெரியும்.

எனக்கு சக்தி மேல் நிறைய நம்பிக்கை இருக்கு. பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வரும்போது, வேறு ஒரு சக்தியாக வருவார். அவரது தவறுகள் என்ன, ப்ளஸ் அண்ட் மைனஸ் என்னவென்று யோசிப்பார். என்னிடம் வந்து கேட்பார். ஏனென்றால், நிகழ்ச்சிக்குப் போவதற்கு முன்பு, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறேன். அக்ரிமென்ட் கையெழுத்து இட்டுள்ளேன் என்று என்னிடம் கூறினார். சக்தியின் நிறை குறை  இரண்டையும் அவரிடம் சொல்வேன். அவர் எனக்குத் தம்பி மாதிரி. சக்தி தன் மீது யாராவது குறைகள் சொன்னால் அதைக் கேட்டு சரி செய்துகொள்வார். அவரது இயல்பே அப்படிதான்.

அதுமட்டுமல்லாமல், சக்தி கமல் சாரின் வெறியர். அவருக்காகதான் இந்த நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார். கமல் சார் சொல்லும் வார்த்தைகளை சக்தி பெரிதாக மதிப்பார். அதனால், அவரிடம் ஏதாவது நெகட்டிவ் இருந்தாலும் அதை பாஸிட்டிவ்வாக மாற்றிக்கொள்வார் சக்தி'' என்றார் இயக்குநர் குமரவேலன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்