பிக் பாஸ் கமலிடம் என்ன விசேஷம்? - பகிர்கிறார்கள் கோபிநாத், கார்த்திகை செல்வன்

கமல் , பிக் பாஸ்

நடிகராக, இயக்குநராக, பாடகராக, தயாரிப்பாளராக, அரசியல் விமர்சகராக... எனப் பல பரிமாணங்களில் கமல்ஹாசனைப் பார்த்திருக்கிறோம். நிகழ்ச்சித் தொகுப்பாளராக, கடந்த வாரங்களில் மக்கள் மத்தியில் அவருக்கு அமோக வரவேற்பு. நேர்த்தியான பேச்சு, சவால்விடும் தொனி என அனைவரையும் அசரடிக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக கமல்ஹாசனின் செயல்பாடுகள் குறித்து, அனுபவமிக்க சில தொகுப்பாளர்களிடம் பேசினேன்...

கோபிநாத் :

கமல் பிக்பாஸ் கோபிநாத்


``ஆங்கரிங் என்பது கலை. அதையும் தாண்டி அது ஓர் அணுகுமுறை. கமல்ஹாசன் என்ற பிம்பத்தை மறந்து, நெறியாளராக மட்டுமே நிகழ்ச்சியில் தெரிகிறார். அதுதான் கமலின் வெற்றி. நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தைப் பேசுகிறார். அதைப் போட்டியாளர்களும் பார்வையாளர்களும் பார்க்கின்றனர். ஒரு விஷயம்தான். ஆனால், இரு தரப்பினருக்கும் இருவேறு அர்த்தங்கள் தரவேண்டும். அதற்காக அவர் பயன்படுத்தும் வார்த்தைகள், திட்டமிடாத உடல்மொழி என அனைத்திலும் அசரடிக்கிறார். மக்களின் பிரதிநிதியாகத் தன்னை உருவகப்படுத்திக்கொண்டு, அதைச் சார்ந்து செயல்படுவது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது. ‘என் தங்கையைத்தான் வெளியே அனுப்புறேன்’னு சொல்லும் அந்த வார்த்தைகள்தான், அவரைப் பற்றி இப்போது அதிகமாகப் பேசவைக்கின்றன. மனிதநேயமும், பொறுப்பும், அக்கறையும் அவரின் குரலில் தெரிவது கமலின் ஸ்பெஷல்.  

நிஜமாகவே கமல் பண்றது மேஜிக். கமல்மேல் இருக்கும் பிம்பத்தினால்தான் சிறப்பா பண்றதா தோணலை. உண்மையிலேயே மிகச்சிறப்பா செய்றார்ங்கிறதுதான் உண்மை. சினிமாவும் தொலைக்காட்சியும் இருவேறு வித்தியாசமான தளம். டிவி-யில் நமக்கும் ஆடியன்ஸுக்கும் பெர்சனலாகவே ஓர் இணைப்பு இருக்கணும். அந்த மனநிலையை எளிதில் கமல் கைவசப்படுத்தியிருக்கிறார். வம்படியா பேசிட்டே இருக்காம, ஒரே வார்த்தையில் ரசிகர்களைச் சிரிக்கவைக்கவும் சிந்திக்கவைக்கவும் செய்வது கிரேட். ஓவியாவுக்காகக் கண் கலங்கியதும், ஜூலிக்காக அக்கறைப்பட்டதும் என நடிகர் கமலை மறந்து, புது கமலாக எனக்குத் தெரிகிறார்.” 

டிடி : 

பிக் பாஸ் கமல் டிடி

``அவர் லெஜெண்ட். அவரைப் பற்றிப் பேசுற அளவுக்கு நான் இன்னும் வளரலைன்னு நினைக்கிறேன். ஒரே வார்த்தையில் சொல்லிடுறேன். கமல் சாரிடமிருந்து நான் நிறைய நிறைய நிறைய நிறைய கத்துக்கணும்! அவ்வளவுதான்.”

கார்த்திகைச் செல்வன்:

“நிறையபேருக்கு வரும் ஒரே கேள்வி, `இந்த மாதிரியான பொழுதுபோக்கு நிகழ்ச்சியைப் பற்றி ஏன் அதிகமா பேசிட்டிருக்கோம்?' என்பதுதான். லட்சக்கணக்கில் மக்கள் விரும்பும் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமா புறக்கணித்துவிட முடியாது. அந்த நிகழ்ச்சியில் உள்ள  சரி, தவறுகளைப் பேசுவது முக்கியம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிதான் `பிக் பாஸ்'. நடிகராக, இயக்குநராக, சமூகத்தின் மீது அக்கறைக்கொண்ட மனிதராக கமலைப் பார்த்திருக்கிறோம். இப்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஆங்கர். 

எது சரி, தவறு. நியாயம், அநியாயம் எது, இனி என்ன பண்ணலாம் என்பது வரையிலும் ரொம்ப நுணுக்கமாகப் பேசுகிறார். ‘தமிழர்களுக்கு சுயமரியாதை அதிகம்’னு சொல்வதில் தொடங்கி மனநலம் பாதித்தவர்களாக `பிக் பாஸ்' வீட்டில் இருந்தவர்கள் நடித்த அந்த டாஸ்க் வரையிலும் சென்சிபிளாக கருத்துச் சொல்கிறார். எந்த விஷயம் என்றாலும் நேரடியாக ரியாக்ட் செய்கிறார். எதிர்மறை விமர்சனங்களுக்குப் பொறுப்போடு பதில் பேசுகிறார். 

கார்த்திகைச் செல்வன்

அரசியல் சார்ந்த சில விஷயங்களைப் போகிறபோக்கில் தட்டிவிடுகிறார். பிரபலமான நடிகராக இருந்து ஆங்கராக வந்திருந்தாலும்கூட மனிதர்களைப் புரிந்துகொள்வது, அவர்களுக்காக யோசிப்பது, அவர்களுக்காகப் பேசுவது என்பதெல்லாம் ரொம்ப நல்ல விஷயங்கள். அதற்காக தொடர்ந்து முயற்சி எடுத்துட்டே இருக்கிறதுதான் கமல்ஹாசன் ஸ்பெஷல். 

ஆனாலும், `சேரி பிகேவியர்'னு காயத்ரி சொன்னதுக்கு, இன்னும் சரியான பதிலை கமல் சொல்லவில்லை. அதற்கும் அவர் சரியான பதிலைச் சொல்லியிருக்கலாம். இந்த மாதிரியான சில விஷயங்களை இன்னும் கவனமாகக் கையாளணும். மொத்தமா பார்க்கும்போது கமலிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதையெல்லாம் சிறப்பாகவே செய்கிறார். நாம எதிர்பார்க்காத விஷயங்களையும் நிகழ்ச்சியில் செய்கிறார்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!