வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (11/08/2017)

கடைசி தொடர்பு:17:19 (11/08/2017)

'பிக் பாஸ்' வீட்டில் தற்கொலை முயற்சி ஏன்? - ஓவியா வாக்குமூலம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சி டீமில் இருந்தவர்களை ஏமாற்றவே தற்கொலைக்கு முயற்சித்ததாக, 'பிக்பாஸ்' புகழ் ஓவியா போலீஸாரிடம் தெரிவித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டி.வி நடத்திவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி,  நடிகை ஓவியாவின் மேனரிசம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஓவியாவுக்கு என ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்திருந்த நிலையில், அந்த  நிகழ்ச்சியில்  உள்ள  ஆரவ் என்பவரை ஓவியா காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஓவியாவை ஆரவ் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், 'பிக் பாஸ்' வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில், கடந்த      4 -ம் தேதி தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது. அதன் காரணமாகவும் ஓவியா, 'பிக்பாஸ்' வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. தற்கொலைக்கு முயற்சிசெய்த அன்று,போலீஸார் அங்கு விரைந்துசென்று  விசாரணை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், ஓவியாவின் இந்த தற்கொலை முயற்சிகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம்  புகார்  மனு ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகார் மனு, பூந்தமல்லி காவல்நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப் புகார் மீதான விசாரணை எந்த நிலையில் உள்ளது என காவல்நிலையத்துக்குச் சென்று கேட்டுள்ளார் பாலாஜி. அப்போது, காவல்துறை அதிகாரிகள் சொன்ன தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் .

"ஒவியாவிடம்  போலீஸார் விசாரணை செய்துள்ளனர். போலீஸாரின்  விசாரணைக்கு  ஒத்துழைத்த அவர், 'பிக் பாஸ்' வீட்டில் அணியில் இருந்தவர்களை ஏமாற்றவே  தற்கொலைக்கு முயற்சிசெய்ததாக  ஒவியா போலீஸாரிடம் தெரிவித்ததாக பாலாஜி கூறினார். மேலும் தொடர்ந்தவர், 'இந்த நிகழ்ச்சியை சிறார்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள். அவர்களுடைய மனநிலையைப் பாதிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது . அதனால், நிகழ்ச்சியை  நடத்தும்  நடிகர் கமலஹாசன் மற்றும் அதில் 'பிக் பாஸ்' டீமில் உள்ளவர்களையும்  விசாரிக்க வேண்டும். அதே நேரத்தில், விஜய் டி.வி நிர்வாகத்தின் மீதும் காவல்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்   


டிரெண்டிங் @ விகடன்