Published:Updated:

"எடிட் பண்ணாம பிளே பண்ணா, பிக் பாஸ் வீடு என்ன ஆகும் தெரியுமா!?" - `பிக் பாஸ்' ஆர்த்தி #VikatanEXclusive

நா.சிபிச்சக்கரவர்த்தி
"எடிட் பண்ணாம பிளே பண்ணா, பிக் பாஸ் வீடு என்ன ஆகும் தெரியுமா!?" - `பிக் பாஸ்' ஆர்த்தி #VikatanEXclusive
"எடிட் பண்ணாம பிளே பண்ணா, பிக் பாஸ் வீடு என்ன ஆகும் தெரியுமா!?" - `பிக் பாஸ்' ஆர்த்தி #VikatanEXclusive

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சியில கலந்துகொண்டதால் என் லைஃப்ல நிறைய நல்ல மாற்றங்கள் நடந்திருக்கு. நிச்சயம் `பிக் பாஸ்' டீமுக்கும் விஜய் டிவி-க்கும் நன்றி சொல்லியே ஆகணும்'' என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை ஆர்த்தி. அவரிடம் `பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றிக் கேட்டோம்...

``இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னாடி `பிக் பிரதர்ஸ்', இந்தியில் வந்த `பிக் பாஸ்' எல்லாம் பார்த்தீங்களா?'' 

``சல்மான் கான், டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்றதும் `என்ன மாதிரியான ஷோ இது?'னு  ஒரு தடவைப் பார்த்தேன். அவ்வளவுதான். மற்றபடி நான் ஹோம்வொர்க் எல்லாம் பண்ணிட்டுப் போகலை. ஓடவும் கூடாது... ஒளியவும் கூடாது... நடிக்கவும் கூடாதுனு நினைச்சேன். அங்கே இருந்த வரை நான் உண்மையாகத்தான் இருந்தேன்.''

``உங்களுக்குத் தங்கச்சியா இருக்கணும்னா, சில தகுதிகள் வேணும்னு நீங்க சொன்னது பெரிய சர்ச்சை ஆச்சே?''

``நானும் பார்த்தேன். `உங்களுக்கு தங்கச்சியா இருக்கணும்னா, 150 கிலோ எடை இருக்கணுமா?'னு நிறைய ட்ரோல் பண்ணாங்க. நானே அதை எல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணினேன். ஆனா, ஜூலி  என்னை வெளியே அனுப்பணும்னு சபதம் போட்டுட்டு... என்கிட்ட வந்து `அக்கா, சாப்பிட்டீங்களா?'னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி கேட்டாங்க.  நானும் அதை எல்லாம் மறந்துட்டு `தங்கச்சி... தங்கச்சி'னு உருகணும்னு நினைச்சாங்க. இப்படிப்பட்டப் போலிகளை நீங்க வேணும்னா ஏத்துக்கலாம். நான் ஏத்துக்க மாட்டேன். நான் அங்கே அப்படிச் சொன்னது எல்லாருக்கும் ரொம்பத் தப்பா தெரிஞ்சிருக்கலாம். ஆனா, நான் ஜூலியை எச்சரிக்கை செய்யத்தான் அப்படிச் சொன்னேன்.''

``உங்களை வைச்சு மீம்ஸ் எல்லாம் போட்டிருந்தாங்க, பார்த்தீங்களா?''

``நான் வீட்டுக்கு வந்ததும், `கையில மொபைல் கொடுக்க மாட்டேன்'னு சொல்லிட்டார் என் அப்பா. `நீ தூங்கு. அப்புறமா பார்த்துக்கலாம்'னு சொன்னார். `எனக்காக நேரம் ஒதுக்கி ட்ரோல் பண்ணியிருக்காங்க. நான் கட்டாயம் பார்க்கணும்'னு சொன்னேன். அப்புறம்தான் மொபைலைக் கையில கொடுத்தாங்க. நான் பார்த்த முதல் மீம், `தமிழ்நாட்டு மக்கள், இப்ப அதிகம் வெறுக்கும் மூஞ்சிங்கள்'னு என் போட்டோவையும்  காயத்ரி போட்டோவையும் போட்டிருந்தாங்க. அப்பவே எனக்குத் தெரிஞ்சுப்போச்சு, என்மேல கோபத்துல இருக்காங்கனு. நீங்க நம்ப மாட்டீங்க, 48 மணி நேரம் நான் கொஞ்சம்கூட தூங்காம, சாப்பிடாம, பல்லுகூட துலக்காம... எனக்குப் போடப்பட்ட அத்தனை மீம்ஸ்களையும் பார்த்தேன்... படிச்சேன். முடிஞ்ச அளவுக்கு ரிப்ளை பண்ணினேன். மக்கள் என்மேல காட்டின அத்தனை கோபங்களையும் நான் வாங்கிக்கிட்டேன்.''

``கமல்ஹாசன் பாரபட்சம் இல்லாமல் தொகுத்து வழங்குகிறார் என நினைக்கிறீர்களா?''

``பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாரையும் ஒரே மாதிரிதான் அவர் நடத்தினார். வீட்டுக்குள்ள இருப்பவர்களிடம் கமல் சார் பேசும்போது, சின்ன க்ளூ கூட கொடுக்க மாட்டார். ஒரு வார்த்தையைக்கூட அவர் மிகைப்படுத்தி பேசினதே இல்லை. இந்த உலகத்துலேயே பெஸ்ட் ஆங்கர்ன்னா அது கமல் சார்தான்.'' 

``வெளிய வந்த பிறகு, நீங்க இருந்த எல்லா எபிசோடையும் பார்த்தீங்களா?''

``இல்லைங்க. 24 மணி நேரம் முழுக்க அங்கேயேதான் இருந்தேன். வெளியே வந்ததுக்குப் பிறகு ஏன் திரும்பவும் பார்க்கணும்னு விட்டுட்டேன். ஆனா, இப்ப தொடர்ந்து ஷோவைப் பார்க்கிறேன். இப்ப பார்க்கும்போதுதான் சில விஷயங்கள் புரியுது, தெரியுது. `இவங்க எல்லாம் இப்படிப்பட்டவங்களானு...  ஆனா, இங்கே ஒண்ணு சொல்லியே ஆகணும். விஜய் டி.வி-யே பாதி எடிட் பண்ணி இவங்க இப்படித்தான் என்பதை மட்டும்தான் போடுறாங்க. முழுக்க அப்படியே போட்டால், மக்கள் எல்லாரும் வீட்டுக் கதவை உடைச்சுட்டு உள்ளே போயிடுவாங்க.''

``Wild card என்டரியில் திரும்பவும் கூப்பிட்டால் போவீங்களா?''

``நான் போக ரெடி. ஆனா, திரும்பவும் கூப்பிடுவாங்களா என்பது சந்தேகம்தான். திரும்பவும் உள்ளே போனாலும், `எல்லாத்தையும் தெரிஞ்சுட்டு வந்து சீன் போடுது பாரு'னு சொல்வாங்க. 100 நாள் வெளியே என்ன நடக்குதுனே தெரியாம இருப்பவர்களால் மட்டும்தான் ஜெயிக்க முடியும். நான் மீண்டும் உள்ளே போனால், எல்லோரையும்  என்டர்டெயின் பண்ண முடியுமே தவிர, ஜெயிக்க முடியுமானு தெரியலை.'' 

``நீங்க வெளியே வந்த பிறகு கஞ்சா கருப்பு, பரணி, நமீதாகூட எல்லாம் பேசுனீங்களா?''

``கஞ்சா கருப்பு அண்ணா கூட பேசினேன். பரணிகூட பேசலை. அவர் நம்பர் என்கிட்ட இல்லை. ஆனா, `Save bharani' கேமை விளையாடிட்டிருக்கேன். எப்படியாவது அவரைக் காப்பாத்திடணும்னு நினைக்கிறேன். என்கிட்டயோ அல்லது காயத்ரிகிட்டயோ வந்து மாட்டிக்கிறார். இந்த கேமைக் கண்டுபிடிச்ச செல்லங்களா... பரணியை எங்ககிட்ட இருந்து தப்பிக்கவைக்கிற மாதிரி கேமை ரெடி பண்ணுங்கப்பா.''

நா.சிபிச்சக்கரவர்த்தி

ஆ.முத்துக்குமார்