Published:Updated:

ஓவியா அப்பவும், இப்பவும், எப்பவும் அப்படித்தான்! #Oviya #BiggBossTamil 

பரிசல் கிருஷ்ணா
ஓவியா அப்பவும், இப்பவும், எப்பவும் அப்படித்தான்! #Oviya #BiggBossTamil 
ஓவியா அப்பவும், இப்பவும், எப்பவும் அப்படித்தான்! #Oviya #BiggBossTamil 

“வடபழனி க்ரீன் பார்க் ஹோட்டல்​ல களவாணி பட ஹீரோயின் ப்ரஸ் மீட்னு சொன்னாங்க.  நான் அப்ப ஆஹா எஃப்.எம்ல இருந்தேன். பேட்டி எடுக்க கார்ல போய் இறங்கினேன். நான் இறங்கறப்ப எனக்குப் பின்னால ஒரு ஆட்டோல வந்து ஒரு பொண்ணு இறங்கி ஹோட்டலுக்குள்ள போனாங்க. நான் டாக்ஸிய கட் பண்ணிட்டு மேல போனப்பதான் தெரிஞ்சது,  அந்த ஆட்டோல வந்த பொண்ணுதான் களவாணி ஹீரோயின் ஓவியான்னு” - தற்போது காவேரி தொலைக்காட்சியில் பணிபுரியும் ரோகிணி, நம்மிடம் பகிர்ந்து கொண்டது இது. 

“ ‘என்னப்பா... பேட்டி எடுக்கற நான் கார்ல வர்றேன். ஹீரோயின் ஆட்டோல வர்றீங்க?’னு நான் அங்கவெச்சே கேட்டுட்டேன்.. அதுக்கு ஓவியா சொன்னாங்க; ‘மொத படம் ஆட்டோல வரும். இந்தப் படம் ஹிட்டாச்சுன்னா கார்ல வரும்’னு சிரிச்சுட்டே சொன்னாங்க. 

அதுக்கப்பறம் ஆஹா எஃப்.க்கு வந்தாங்க. அப்பவும் அப்படித்தான். ‘ஹீரோயின்’ அப்டிங்கற பந்தாவ அவங்ககிட்ட பார்க்க முடியாது. ‘எல்லாரும் மனுஷங்கதானே’னு கூலா நின்னுட்டிருப்பாங்க. சிலர் வந்து ‘நான் ஸ்டார்’ங்கற ரேஞ்சுல கெத்தா நிப்பாங்க, எல்லாரும் நம்மளைப் பார்க்கறாங்க’ங்கற உடல்மொழி இருக்கும். இவங்ககிட்ட அதப் பார்க்க முடியாது. ரொம்ப அம்மா செண்டிமெண்ட். அம்மா உடம்பு சரியில்லாம இருந்தப்ப எல்லா மாதிரி படங்களும் ஒப்புகிட்டாங்க. அதை அவங்களே சொல்லவும் செஞ்சாங்க. ‘ஓவியான்னா எதும் ஓசில தருவாங்களா... என்ன வாங்கினாலும் பில்லு குடுக்கணும்ல”’ அப்டின்னாங்க. அவங்களைப் பொறுத்தவரை எதுக்காகவும் நடிக்கணும்ன்ற வேலைய பண்ற டைப் இல்ல” என்றார் ரோகிணி. 

நியூஸ் 18 பிரேம் சொல்வதும் அதுதான்: ‘‘ப்ரோ.. நான் எடுத்தது வீடியோ இண்டர்வ்யூ.  ஸ்டார்ஸ் பொறுத்தவரைக்கும் பேட்டி குடுக்கறப்ப ‘கட் பண்ணிடுங்க’, ‘எடிட் பண்ணிடுங்க’னு பலமுறை சொல்றத பார்த்ததுண்டு. ஆனா இவங்க எந்தக் கேள்வியையும் கட் பண்ணச் சொல்ல மாட்டாங்க. கேமரா ரோல்லயே இருக்கும். கிசுகிசு, பிரச்னைனு எந்த பெர்சனல் கேள்வியா இருந்தாலும் தடுமாற்றமே இல்லாம பதில் சொல்லுவாங்க. அவங்க பிக் பாஸுக்குள்ள பண்றத பாத்து என் ஃப்ரெண்ட்ஸ் ஸ்கிரிப்டட்னு சொல்றப்ப ‘ஓவியா வெளில எப்படி இருக்காங்களோ. அப்டித்தான் இருந்தாங்க’ன்னுதான் சொன்னேன்’’ என்றார்.

நேற்றைக்கு ஓவியா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியவற்றைக் கேட்கும்போது ‘இந்தப் பொண்ணு யுனிக்’ என்றுதான் தோன்றியது. ‘பிக் பாஸ்ல இருந்து வெளில இருந்து வந்தவங்களைத் திட்டாதீங்க - இன்னொருத்தங்களைத் திட்ற ஃபேன்ஸ் எனக்குத் தேவையே இல்லை’, “என் படம்கறதுக்காக பாக்காதீங்க - நல்லா இருந்தா மட்டும் பாருங்க. நல்லா இல்லைன்னா கேவலமா திட்டுங்க”. இந்த இரண்டு ஸ்டேட்மெண்ட்ஸை விடவும் முக்கியமான ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது.  அதை கடைசியில் சொல்கிறேன்;

சக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் சொன்னது இன்னும் ஆச்சர்யப்படுத்தியது. ‘‘நிறைய ஸ்டார்ஸ் பேட்டி எடுத்திருக்கேன். ஒருத்தரை பலமுறை தொடர்பு கொள்ளும்போதும், நம்மளை அறிமுகப்படுத்திக்கணும். ஓவியாவை ’களவாணி’ டைம்ல பேட்டி எடுத்தேன். அதுக்கறப்பறம் பல மாதங்கள் கழிச்சு பேசறப்ப ஃபோன் அடிச்சதும் எடுத்து ‘சொல்லுங்க’னு என் பேரைச் சொல்லிட்டு பேசினார். அதாவது நம்ம நம்பரை சேவ் பண்ணிருக்காங்கனு தெரிஞ்சது. வழக்கமா நடிகர் - நடிகைகள் அதப் பண்ண மாட்டாங்க. என் ஃப்ரெண்ட்ஸும் இதை சொல்லிருக்காங்க. அதே மாதிரி பேட்டி வெளில வந்ததும் ‘இதை ஏன் எழுதினீங்க? அதை அப்படி எழுதிருக்கலாமே’ அப்டினு எந்த ஒரு கமெண்ட்டும் வராது. பேசினா, அதைப் பேசலைன்னு சொல்ல மாட்டாங்க. பூசிமொழுக மாட்டாங்க. கொஞ்சம் சாஃப்டா எழுதிருக்கலாமேனு கேட்க மாட்டாங்க’’ என்றார். 

ஆர்.ஜே ஒருவர் ஓவியாவைப் பற்றி சொல்லும் போது, ‘‘ ‘சண்டமாருதம்’ ரிலீஸ நேரத்தில் மதுரை ஹோட்டல்ல நைட் 10 மணிக்கு ஓவியா பேட்டி எடுக்க வரச்சொல்லிருந்தாங்க. நான் போய் ஹோட்டல் ரூம் கதவ தட்னப்ப, அசிஸ்டெண்ட் பொண்ணு தூக்கக் கலக்கத்தோட கதவைத் தொறந்தாங்க. ஓவியா உள்ள பெட்ல உட்கார்ந்திருந்தாங்க. ஆடியோ பேட்டிதான். ஓவியா எங்களுக்குப் பேட்டி குடுக்கத் தயாரானதும், அந்த அசிஸ்டெண்ட் பொண்ணு ஓவியா தோள்ல கைவெச்சுட்டே பெட்ல ஏறி, அதே பெட்ல படுத்து தூங்க ஆரம்பிச்சாங்க. ஓவியா உட்கார்ந்து பேட்டி குடுத்துட்டிருந்தாங்க. வழக்கமா அசிஸ்டெண்ட்ஸை சோஃபோல தூங்க சொல்லுவாங்க, இல்லன்னா ப்ரைவசிக்காக வேற ரூம்ல இருக்கச் சொல்லுவாங்க. ஒரே ரூம்ல, ஒரே பெட்ல ஃப்ரெண்ட்ஸ் மாதிரி ஓவியா ட்ரீட் பண்ணிட்டிருந்தது ஆச்சர்ய்மா இருந்தது” என்றார்.

பலரிடம் பேசியதில் இருந்து, அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும், வெளியில் இருக்கும்போதும் எப்போதுமே எப்படி இருக்கிறாரோ.. அப்படித்தான் இருக்கிறார் என்பது தெரிந்தது. நான் பேசிய நிருபர்களில் பலர் அவரது தற்போதைய பேட்டிக்காக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இதில் யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பமும், ஒருத்தருக்குக் கொடுத்தா இன்னொருத்தர் ஃபீல் பண்ணுவாங்க’ என்கிற எண்ணமும்தான் ஓவியா நேற்று வீடியோ வெளியிடுவதற்கான காரணம் என்று நினைக்கிறேன். 

சரி.. அந்த வீடியோவில் ஓவியாவின் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்திய அந்த விஷயம் என்ன தெரியுமா?  அவர் முடிவெட்டிக் கொண்டதற்கான காரணத்தைச் சொன்னதுதான் அது.  அதுவும் பெருமைக்காகச் சொல்லவில்லை. யோசித்து யோசித்து ‘சரி.. சொல்றேன்’ என்பதுபோல சொன்னதில் இருந்தே அதில் தெரிகிறது.

'ரொம்பவும் அழகான விஷயம் அது: ஒரு ‘விக்  கம்பெனி’ அவரை விளம்பரத்துக்காக அணுகுகிறது. 'கேன்சர் ட்ரீட்மெண்ட்டுக்காக முடி இழக்கும் பெண்கள், தங்கள் அழகு குறைவதாய் எண்ணுகிறார்கள். ஆகவே அவர்கள் விக் வைத்துக் கொள்ளலாம். அழகு குறையாது’ என்பதுதான் அவர்கள் விளம்பர எண்ணம். அதற்கு ஓவியாவை அணுகுகிறார்கள். ஒப்புக் கொள்ளவில்லை ஓவியா.

‘முடில என்னடா அழகு இருக்கு? சொட்டையானாலும், மொட்டையானாலும் அழகு எப்படி இருக்கோமோ அப்படி இருக்கறதுதான்’ என்று நினைத்து அந்த விளம்பரத்துக்கு ஒப்புக் கொள்ளாத ஓவியா,  ஹேர் கட் செய்து கொள்கிறார்.  ‘கான்ஃபிடெண்டா இருக்கறதுதான் அழகு. இல்ல?’ என்கிறார்.  அந்த விக் பிஸினஸை வளர்த்துவிடப் பிடிக்கல’ என்ற ஓவியா ‘ Its Just My Hair.. Nothing Else. Girls, Try. ரொம்ப ஃப்ரீயா இருக்கு’ என்கிறார். 

இதே ‘Hair’ என்ற வார்த்தையை பிக் பாஸில்  வேறொருவர் வாயிலிருந்து  பலமுறை கேட்டோம். இப்போது ஓவியாவும் அதே வார்த்தையைச் சொல்கிறார். இரண்டுமே எதற்காகச் சொல்லப்பட்டது என்பதில்தான் நமக்கான பாடம் இருக்கிறது!

...

பரிசல் கிருஷ்ணா

“They laugh at me because I'm different; I laugh at them because they're all the same.”