Published:Updated:

`ஆரி ப்ரோ'வைப் பாராட்டிய பிக்பாஸ்... குரூப்பிஸ ரூட்டில் பாலாஜி! பிக்பாஸ் – நாள் 74

பிக்பாஸ் – நாள் 74

"நாட்கள் குறைவா இருக்கு. உங்க முழுத்திறமையையும் காட்டுங்க" என்று சிஷ்யன் ஆரிக்கு உத்வேகம் அளித்து வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ் குருநாதர். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 74

Published:Updated:

`ஆரி ப்ரோ'வைப் பாராட்டிய பிக்பாஸ்... குரூப்பிஸ ரூட்டில் பாலாஜி! பிக்பாஸ் – நாள் 74

"நாட்கள் குறைவா இருக்கு. உங்க முழுத்திறமையையும் காட்டுங்க" என்று சிஷ்யன் ஆரிக்கு உத்வேகம் அளித்து வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ் குருநாதர். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 74

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸின் ‘தங்கமணி’ ஊருக்குப் போயிருக்கிறார் போல. ஆசாமி இப்போதெல்லாம் குஜாலாகத்தான் பேசுகிறார். ஷிவானியை சுருக்கி ‘ஷிவு’ என்கிறார். பாலாஜி கூட அத்தனை உரிமையாக கூப்பிட்டது போல் தெரியவில்லை. அனிதாவை ‘ஆல் தி பெஸ்ட் கன்னுக்குட்டி’ என்று பாசம் காட்டுகிறார்.

இன்றோ ரம்யாவை நோக்கி ‘உங்க டிரெஸ் நல்லாயிருக்கு’ என்று வழிந்து பாராட்டுகிறார். எத்தனை நாள் இந்த ஆசையை மனதில் வைத்திருந்தாரோ?! இன்று ரம்யா ஆடை அணிந்திருந்த விதமும் அப்படித்தான் இருந்தது. (ஆர்மியின் எண்ணிக்கை கன்னாபின்னாவென்று பெருகியிருக்கும்).

"இப்பல்லாம் லவ் சாங்காத்தான் கேட்கப் பிடிக்குது” என்கிற பருத்தி வீரன் கார்த்தி மாதிரி ‘ஒரு மார்க்கமாகத்தான்’ இருக்கிறார் பிக்பாஸ். அர்ச்சனாவின் கணவர் ஆர்மியில் பணிபுரிகிறாராம். பார்த்து சூதானமா நடந்துக்கங்க பாஸ்!

74-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

நாட்டுப்புற இசையில் அமைந்த ஒரு பாடலைப் போட்டார்கள். அது என்ன திரைப்படம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு! வேறென்ன? முட்டைதான். அந்த அளவிற்கு இந்த வார்த்தை கடந்த இரண்டு நாட்களாக மூளையில் நிரம்பி வழிகிறது; காதுகளில் ‘கொய்... கொய்’ என்று குடைந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

மார்னிங் டாஸ்க் என்கிற பாடாவதி பகுதி. ‘அமெரிக்க ரிட்டன்’ ஆஜித் ஆங்கிலம் கற்றுத்தர வேண்டுமாம். குரலை சற்று குழறி காற்றை அதிகம் வெளியே விட்டு பேசினால் அது ‘அமெரிக்க ஆங்கிலமாம்’. ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ பாட்டை ஆங்கிலத்தில் ஆஜித் கொத்து பரோட்டா போட கூட வந்து இணைந்து கொண்டார் அர்ச்சனா. சும்மா சொல்லக்கூடாது! டக்கென்று பிக்கப் ஆகி எக்ஸ்ட்ரா சங்கதிகளைப் போட்டு அசத்தி விட்டார் அச்சும்மா.

"போரடிக்குது பிக்பாஸ்... ஏதாச்சும் சொல்லுங்களேன்" என்று சிணுங்கியபடி கேமராவின் முன்பு வந்தார் ரம்யா. ஷிவானிக்கு சற்று போட்டியான கவர்ச்சியுடன் அவர் இன்று இருந்ததால் "பார்க்க ரொம்ப நல்லாயிருக்கீங்க ரம்யா" என்று பிக்பாஸ் சொன்னவுடன் வழக்கம் போல் தனது பிரத்யேக பாணி சிரிப்பை பொங்க விட்டபடி சந்தோஷத்தில் மிதந்தார் ரம்யா.

வரவேற்பறையில் மக்களை ஒன்றுகூட்டிய பிக்பாஸ், கந்து வட்டிக்காரனைப் போல "ஆளுக்கு எவ்ளோ வெச்சிருக்கீங்க.. சொல்லுங்க பார்க்கலாம்" என்றார். கோழி டாஸ்க்கில் அவர்கள் சம்பாதித்த கரன்ஸி பற்றிய விசாரணை. இதில் சாமர்த்தியமாக ஆடிய பாலாஜி அதிகம் சம்பாதித்து வைத்திருந்தார். எனவே ஏற்கெனவே வாக்களித்தபடி அவருக்கு ஒரு ‘ஸ்பெஷல் பவர்’ வழங்கப்படுமாம். அது என்னவென்று பின்னர் அறிவிக்கப்படுமாம். (இனிமேல் பிக்பாஸ் வீட்டில் பாலாஜி எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிற சிறப்பு சலுகையாக இருக்குமோ?!).

அடுத்ததாக டாஸ்க்கில் சிறப்பாக கோழி பிடித்த இருவர் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் சந்தேகமே இல்லாத வெற்றியாக பாலாஜி மற்றும் அர்ச்சனா தேர்வானார்கள். தனது ஏரியாவை விட்டு தைரியமாக தாண்டிச் சென்று ரியோவின் வாலை கைப்பற்றியதாகட்டும், சாமர்த்தியமாக டீல் போட்டதாகட்டும் என்று பாலாஜி துறுதுறுவென இருந்தார். இதைப் போலவே பெண்கள் அணியாக இணைந்து கூட்டணி அமைத்ததாகட்டும், ஏழு கட்ட பாதுகாப்பு ஏற்பாடு அமைத்து தனது முட்டையைக் காப்பாற்ற முயன்றதாகட்டும், அர்ச்சனா கலக்கிவிட்டார்.

அடுத்ததாக டாஸ்க் உட்பட வீட்டு வேலைகள் முழுவதிலும் இந்த வாரம் ஈடுபாட்டோடு செய்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பகுதி. இதில் வீட்டின் கேப்டனான ரம்யாவையே பெரும்பாலோனோர் கைகாட்டினார்கள். ரம்யா தேர்வானார்.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

ஆக அடுத்த வார தலைவர் போட்டியில் அர்ச்சனா, பாலா, ரம்யா ஆகியோர் இருப்பார்கள். இந்த முறையாவது பாலாஜிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைக்குமா? (சின்னப் பையன் ஆஜீத் கூட ஆகி விட்டான்). ரம்யா ‘ஹேட்ரிக்’ அடிப்பாரா? பார்க்கலாம்.

அடுத்ததுதான் வில்லங்கமான பகுதி. சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக செயல்பட்ட இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்றவர்களை ‘இன்ஃப்ளூயன்ஸ்’ செய்வதற்காக முதலில் எழுந்த பாலாஜி, அனிதா மற்றும் கேபியை சுட்டிக் காட்டினார். அனிதா இதுவரை ஒருமுறை கூட கழிப்பறை சுத்தம் செய்யும் பணிக்கு செல்லவேயில்லையாம். ‘கத்துக்கறேன் தலைவரே’ என்று சொல்லியே டபாய்க்கிறாராம். அனிதா இதற்கு சும்மாவா இருப்பார்? "என்னை அந்த டீம்ல சேர்க்கவேயில்ல. நான் என்ன பண்றது இன்னிக்கு நான்தான் க்ளீன் பண்ணேன்" என்றெல்லாம் மறுப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்.

அனிதா பேச ஆரம்பித்தால் "சரி... நீங்க பேசி முடிங்க" என்று தரையிலேயே அமர்ந்து விட்டார் பாலாஜி. (அந்த டைட் பேன்ட் போட்டு தரையில் உட்கார முயன்றது உண்மையிலேயே ஒரு சாகசம்தான்). இந்த ‘அஹிம்சை முறை’ உடனே பலன் அளித்தது. "சரி... நாமினேட் பண்ணா பண்ணிக்குங்க... ஆனா நான் கத்துக்க ரெடியாத்தான் இருக்கேன்" என்றார் அனிதா. (பாத்ரூம் க்ளீனிங்கிற்கு ட்ரெய்னிங் தர தனியா பயிற்சி நிலையம் இருக்கா என்ன?!).

சுவாரஸ்யம் குறைவான நபர் என்று பாலாஜி ஒருமுறையாவது ஷிவானியை கைகாட்டி விட்டால் தமிழ்நாட்டில் அன்று பயங்கரமான மழை வரும். அந்த அளவிற்கு ஷிவானிக்கு சேஃப்ட்டி தருகிறார் பாலாஜி. இதுவரை ஒரு முறை கூட ஷிவானியை நாமினேட் செய்ததில்லை என்றே நினைவு. ஷிவானியை ‘சுவாரஸ்யமில்லாத நபர்’ என்று சொல்ல பாலாஜிக்கு எப்படி மனது வரும்? பாலாஜிக்கு மிகப்பெரிய டைம்பாஸே ஷிவானிதானே?

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

இப்படி ஆளாளுக்கு ஒருவரையொருவர் பாரபட்சத்துடன் கடித்துக் குதறியதில் இறுதியாக கேபி மற்றும் ஷிவானி பெயர்கள் அதிகம் வந்தன. தான் சிறைக்குச் செல்லப் போகிறோம் என்பதை கேபி துவக்கத்திலேயே உணர்ந்துவிட்டார்.

ஒய்வறைக்குச் செல்வதை ஷிவானி ஏற்றுக் கொண்டாலும் ஒரு மறுப்பு சொல்ல ஆரம்பித்தார். "என்னை ‘டீம் பிளேயர்’ இல்லைன்னு சொன்னாங்க... முன்பு சமையல் அணியும், பாத்திரம் சுத்தம் செய்யும் அணியும் தனித்தனியாக இருந்தன. ஆனால் இந்த வாரம் அதை ஒன்றாக இணைத்து விட்டதால் எனக்கு குழப்பமாக இருந்தது. தனியாக விட்டிருந்தால் என் வேலையைச் சிறப்பாக செய்திருப்பேன்" என்று சமாளிக்க, "இப்போ கூட பாரும்மா... பாத்திரங்கள் அப்படியேதான் இருக்கு” என்று பிறகு ஷிவானிக்கு வலிக்காத வகையில் அர்ச்சனா சுட்டிக் காட்டினார்.

இதைப் போலவே அனிதாவும் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு பாலாஜியிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

"கோழி டாஸ்க்கில் ஷிவானிக்காக பாலாஜி நிறைய செளகர்யம் செய்து கொடுத்தார்" என்ற நாமிஷேனின் போது ஆரி ஒரு புகார் தெரிவித்திருந்தார். "அப்படில்லாம் இல்லைல்ல…" என்று ஆரியின் முன்பாகவே கேட்டு பாலாஜியிடம் தெளிவுப்படுத்திக் கொண்டார் ஷிவானி (நம்பிட்டோம்! என்பது ஆரியின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும்).

"அது லவ்வோ, நட்போ... எது வேணா இருந்துட்டுப் போகட்டும். விளையாட்டில ஒருத்தருக்காக செளகரியம் செஞ்சி தர்றது சரியில்லை" என்று பிறகு அனிதாவிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஆரி. “ஷிவானி வெளியே போயிட்டா பாலாஜி ‘லவ் பெட்’ போய் செளகரியமா அட்மிட் ஆயிடுவான்" என்று ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. உண்மைதான். இப்போதே பாலாஜியிடம் அதற்கான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

"என்னைத் தவிர இந்த வீட்டில் யாருக்கும் தகுதியில்லைன்ற மாதிரி மத்தவங்க மேல ஆரி குறை சொல்லிட்டே இருக்காரு. எரிச்சலா இருக்கு" என்று ரம்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பாலாஜி. "அது அவரோட உத்தி... தன்னை மேலே வெச்சி அதன் மூலம் மத்தவங்களை கீழே காட்டறது" என்று ரம்யாவும் பின்பாட்டு பாடினார்.

இரண்டு பேர் சில்லறைப் பிரச்னைக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நடுவில் புதிதாக நுழையும் ஒருவர் பஞ்சாயத்து செய்து விட்டு, ‘அது சரி... உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க’ என்று சொன்னால் அது அவர்களுக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்குமோ, அத்தனை அதிர்ச்சியாக இருந்தது அப்போது ஆஜித் சொன்ன தகவல். "என்னையும் ஆரி ப்ரோ அப்படித்தான் வெறுப்பேத்தறாரு. ஆடியன்ஸூக்கு பிடிக்காமயா எழுபது நாள் என்னை உள்ளே வெச்சிருக்காங்க" என்று சொன்ன போது ‘இந்தப் பையன் மனசுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்’ என்று தோன்றியது.
பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

"தனியா நின்னு அழிச்சாட்டியம் பண்றதுதான் ஆரி ஸ்டைல்ன்னா, நான் குரூப்பிஸமாவே இருந்துக்கறேன்” என்று வில்லங்கமாக பேசினார் பாலாஜி. (நீங்க ஏற்கெனவே அப்படித்தான் இருக்கீங்க பாலாஜி!). ஆக... 'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’ என்று கெத்தாக பாடியவர்கள், மறுபடியும் ‘அக்னி நட்சத்திரம்’ பிரபு – கார்த்திக் போல மாறிவிட்டார்கள்.

'என்னை நாமினேட் பண்ணவங்களையலெ்லாம் பதிலுக்கு டார்ச்சர் பண்ணனும்’ என்கிற கொலைவெறித்திட்டத்தோடு சிறையில் இருந்த ஷிவானி, "எப்படி இருக்கீங்க?” என ரியோ நோக்கி உரக்க கத்த, யாரோ ‘கா.. கா’ என்கிற குரலை டைமிங்காக மிமிக்ரி செய்தார்கள். ‘'கத்தாதே... மூட்டை சந்துல மாட்டின பூனையோட குரல் மாதிரி இருக்கு’' என்று கிண்டலடித்தார் ரியோ. "ஏம்மா... வீட்டுக்குள்ளாற இருந்தப்ப சைலன்ட்டா இருந்துட்டு உள்ளே போனவுடன் ஏன் இப்படி கத்தறே?” என்று டைமிங்காக சொன்னார் அர்ச்சனா.

தகர ஷீட்டில் ஆணியால் கீறும்போது எழுகிற ஒலியைப் போன்ற ஷிவானியின் குரல், அனிமல் பிளானெட் சேனலில் ஒலிப்பதைப் போன்ற அனிதாவின் சிரிப்பு ஆகியவை வரும் போது தொலைக்காட்சி தன்னாலேயே ம்யூட் ஆகிற மாதிரி ஏதாவதொரு டிவி மாடல் வந்தால் தேவலை. அத்தனை அவஸ்தையாக இருக்கிறது. பிக்பாஸ் டீமாவது இதை ம்யூட் செய்து பார்வையாளர்களைக் காப்பாற்றலாம்.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

‘அழுகாச்சி டாஸ்க்கிற்காக’ ஆஜித்தை உள்ளே அழைத்தார் பிக்பாஸ். "யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க?” என்று அழவைக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்க ஆஜீத் நல்லவேளையாக அதைச் செய்யவில்லை. "வேற யாரு? எங்க அம்மாவைத்தான் மிஸ் பண்றேன். உலகத்திலேயே அம்மாவின் அன்பிற்கு நிகராக ஏதுமில்லை" என்று எம்.ஜி.ஆர் ரேஞ்சிற்கு வசனம் பேசினார். "பாடும் திறமையைத் தவிர எனக்கு நடிப்புத் திறமையும் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்" என்று ஆஜீத் சொல்ல "ஏதாவது நடிச்சுக் காண்பிங்க" என்ற பிக்பாஸ், அதற்கேற்ற சூழலையும் சொன்னார்.

ஆஜித்தைப் பார்க்கும்போது மினி சைஸ் பாபி சிம்ஹாவைப் போலவே எனக்குத் தோன்றும். அவர் ஒரு நல்ல பாடகர் என்று தெரியும். ஆனால் அவருக்கு ‘ஆக்டிங்’ வருமா? என்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் அப்படியொரு அடையாளமே அவரிடம் தெரியவில்லை. அவருடைய நண்பர்கள் எவராவது சும்மா உசுப்பேற்றியிருப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் அந்தச் சூழலுக்கு இயன்ற வரையில் நன்றாகவே நடித்தார் ஆஜித். ரகுவரனின் ஸ்டைல் ஆங்காங்கே வந்து போனது. ‘போயிட்டு வாங்க ஹீரோ’ என்று உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ்.

சமையல் அறையில் வேலை செய்ய விடாமல் தன் முந்தானையை சுற்றி வந்த அனிதாவின் இம்சைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தார் அர்ச்சனா. எனவே அனிதாவின் கணவரை நோக்கி கேமராவின் வழியாக, "வாழ்க்கைல கஷ்டம் வரலாம்... கஷ்டமே வாழ்க்கையா உனக்கு வந்திருக்கு தம்பி. இந்த நூறு நாள்தான் உன் வாழ்க்கையிலே சிறந்த நாட்கள். ஜாலியா இருந்திருப்பே. ஆனா இங்க நாங்க அவஸ்தைப்படறோம். சிறந்த ஆங்கரான எனக்கே பேச்சு வராம பண்ணிட்டா உங்க பொண்டாட்டி" என்று ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருக்க பின்னணியில் நின்று தன்னுடைய பிரத்யேக பாணியில் ‘அஹஅஹஅஹஅஹ’ என்று சிரித்தார் அனிதா.

பிறகு "சாரிடா... எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை இவங்க செய்தியா வாசிச்சிட்டாங்க" என்று அனிதா தன் கணவருக்கு ‘செய்தி’ சொன்னது சுவாரஸ்யம்.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

அர்ச்சனாவின் இடுப்பு எதையும் தாங்கும் வலிமை பெற்றது போல. எனவே லூட்டி அடித்துக் கொண்டிருந்த அனிதாவை குழந்தை போல் இடுப்பில் ஏற்றிக் கொண்டு பயணித்து பெட்டில் தூக்கிப் போட்டு அவர் மீது போர்வையையும் எடுத்து மூடினார். பிறகு தங்கமூட்டையை பாதுகாக்கும் உத்திக்காக செய்தது போல அனிதாவின் மீதே படுத்துக் கொண்டு ‘இங்கயே இரு... அங்க வந்தே கொன்னுடுவேன்’ என்பது போல் தட்டி உறங்க வைத்தார்.

போட்டியாளர்களின் இடையே நிகழும் சண்டைகளையே பெரும்பாலும் பார்த்து வெறுத்துப் போன மனதிற்கு இது போன்ற ஜாலியான காட்சிகள் சற்று ஆறுதலாக அமைந்தன.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

அடுத்ததாக ‘அழுகாச்சி டாஸ்க்கிற்கு’ ஆரியை அழைத்தார் பிக்பாஸ். “ஆரியை மட்டும் அழ வெச்சி காட்டிடுங்க பிக்பாஸ்... பார்க்கலாம்" என்று ஒரு வரி என் மனதில் ஓடியது. "எனக்கு அப்பா அம்மா இல்லை... மனைவியும் குழந்தையும்தான் என் சொத்து. அவங்களைத்தான் மிஸ் பண்றேன்" என்னும் போது கூட ஆரி கலங்கவில்லை. ஆனால், "இந்த வீட்டில் பலவற்றிற்கு என்னை குற்றம் சொல்கிறார்கள்" என்று ஆரி கலங்கிய போது "சிறப்பாத்தான் விளையாடிட்டு இருக்கீங்க ஆரி... உங்க முழுமையான பங்களிப்பைத் தந்திருக்கீங்க" என்று பிக்பாஸே பாராட்டிய போது மனம் நெகிழ்ந்து கலங்கி விட்டார்.

"நாட்கள் குறைவா இருக்கு. உங்க முழுத்திறமையையும் காட்டுங்க" என்று சிஷ்யனுக்கு உத்வேகம் அளித்து வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ் குருநாதர்.

ஷிவானியின் ஹைடெஸிபல் கத்தலின் காரணமாக கண்ணாடி அறை உண்மையிலேயே விரிசல் விட ஆரம்பித்ததோ என்னமோ, அவரையும் கேபியையும் சீக்கிரமாகவே ரிலீஸ் செய்தார் பிக்பாஸ். மகிழ்ச்சியில் கத்திய ஷிவானியின் கானர்வ குரலை அப்போதும் கேட்டு மகிழ முடிந்தது.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74

அடுத்ததாக ஒரு பெயின்ட் கம்பெனியின் விளம்பரதாரர் நிகழ்ச்சி. அர்ச்சனாவும் ரியோவும் இதற்கு நடுவர்கள். வீடு இரண்டு அணியாகப் பிரியும். குறிப்புகள் அடங்கிய அட்டைகள் வீடெங்கும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். நடுவர்கள் தரும் க்ளூவை வைத்து போட்டியாளர்கள் அந்த அட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். பிறகு கண்ணை மூடிக் கொண்டு உறியடிப்பானையை அடிக்க வேண்டும். இவற்றை குறைந்த நேரத்தில் எந்த அணி செய்கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

இதற்காக ஒவ்வொரு அணியையும் கயிற்றால் இணைத்து கிஃப்ட் பேக் போல் கட்டி விட்டார்கள். பாலாஜியும் ஷிவானியும் ஏற்கெனவே ‘மாற்றான்’ திரைப்படத்தில் வரும் சூர்யா(க்கள்) மாதிரி ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள் போலத்தான் இருப்பார்கள். இப்படி கட்டிப் போட்டது பாலாஜிக்கு இன்னமும் வசதியாகப் போயிருக்கும்.

பிக்பாஸ் – நாள் 74
பிக்பாஸ் – நாள் 74
உறியடிக்கும் பகுதியில் ஆஜீத் விரைவாகச் செய்து முடித்ததை ஆரியால் செய்ய முடியவில்லை. இதை உள்ளிருந்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் பாலாஜி. இறுதியில் குறைவான நேரத்தில் இந்த டாஸ்க்கை செய்து வெற்றி பெற்றது என்னமோ ஆரி அணிதான். அவர்களுக்கு சிறப்பு பரிசு... வேறென்ன முட்டை கேக்தான். கோழியே மறந்தாலும் இந்த முட்டையை மறக்க விட மாட்டார்கள் போல.