Published:Updated:

ஆரி - பாலாஜி சண்டைகள்... சட்ட கிழியல... ஆனா மைக்கு?! பிக்பாஸ் – நாள் 89

பிக்பாஸ் – நாள் 89

மீண்டும் நடந்த விவாதத்தில், "ஆரி மன்னிப்பு கேட்கவில்லை" என்று சாதித்தார் பாலாஜி. 'ஆத்திரம் கண்ணை மறைக்கும்' என்பது இதுதான். எனில் குறும்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பாலாஜியின் மூக்கு உடைபடப் போகிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 89

Published:Updated:

ஆரி - பாலாஜி சண்டைகள்... சட்ட கிழியல... ஆனா மைக்கு?! பிக்பாஸ் – நாள் 89

மீண்டும் நடந்த விவாதத்தில், "ஆரி மன்னிப்பு கேட்கவில்லை" என்று சாதித்தார் பாலாஜி. 'ஆத்திரம் கண்ணை மறைக்கும்' என்பது இதுதான். எனில் குறும்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பாலாஜியின் மூக்கு உடைபடப் போகிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 89

பிக்பாஸ் – நாள் 89
பாலாவும் ஆரியும் உறைந்த நிலையில் இருக்கும் போது ‘இப்படி நீங்க ஒண்ணா இருக்கற காட்சி நல்லால்ல... சண்டை போட்டாதான் அழகு. சண்டை போடுங்க’ என்று ரம்யா ஜாலியாக கலாய்த்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், 'இந்த வாரம் ஆரி கேப்டன் என்பதால் ‘பாலாஜிக்கும் ஆரிக்கும் நடுவில் சண்டைக்கு உத்தரவாதம் உண்டு’ என்று நான் முன்பே எழுதி விட்டேன். எனவே இதை முன்பே யூகித்த பெருமை என்னைத்தான் சேர வேண்டும்.

இவர்கள் வீட்டிற்குள் சண்டை போட்டது போதாதென்று ‘ஓய்வறையில்’ அடைக்கப்படும் சூழல் ஏற்படும்போதே எனக்கு விபரீதமாக தோன்றியது. எதிர்பார்த்தது போலவே இருவரும் சண்டைக்கோழிகளாக சிலிர்த்துக் கொண்டு நின்றார்கள். நல்லவேளையாக கைகலப்பு ஏதும் நிகழவில்லை.

நமக்கு காட்டப்பட்ட காட்சிகளின்படி நமக்குப் புரிவது என்னவென்றால் ஆரி உழைப்பிற்கு அஞ்சாதவர். மற்றவர்கள் சுணங்கினாலும் அதை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யுமளவிற்கு களத்தில் இறங்கி வீட்டு வேலைகளைச் செய்பவர். போலவே டாஸ்க்கிலும் அவர் கில்லி. மணிக்கூண்டு டாஸ்க்கில் அகாலமான நேரத்தில் அவரை எழுப்பினாலும் முனகாமல் டக்கென்று எழுந்து கொண்டார். (ஆனால் அந்தச் சமயத்தில் பாலாஜி செய்த சேஷ்டைகள் நமக்கு நினைவிருக்கும்.) ஆரி உழைப்பாளி மட்டுமல்ல, நேர்மையாளரும் கூட. கருத்துச்சுதந்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். (இது முக்கியமான ப்ளஸ் பாயின்ட்). அவர் மீது எவராவது வைக்கும் ஒரு புகாரை தர்க்க ரீதியாக விளக்கிவிட்டால் அமைதியாக ஒப்புக் கொண்டுவிடுவார். ஆனால் அவரை கன்வின்ஸ் செய்வதுதான் சிரமமானது.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

ஆனால், ஆரியின் மிகப் பெரிய மைனஸ் பாயின்ட் என்று ஒன்று இருக்கிறது. இது விளையாட்டுப் போட்டிதான். வெற்றிதான் இதன் அடிப்படையான நோக்கம். அதை நோக்கித்தான் முன்னேற வேண்டும். அதில் சந்தேமேயில்லை. ஆனால் - அந்த வீட்டின் ஒவ்வொரு துளி இயக்கத்தையும் விளையாட்டின் அவர் பகுதியாகவே பார்ப்பது சமயங்களில் சலிப்பூட்டுகிறது. அவர் வெற்றி பெறுவதற்காக வந்த இயந்திரம் மட்டும்தானா? ‘இதை நான் பதிவு பண்ணியே ஆகணும்... இது எல்லாமே ஃபுட்டேஜ்ல இருக்கு... இது என்னோட கருத்து’ என்று முழு நேரமும் இறுக்கமாக விளையாட்டு கான்ஷியஸிலேயே ஆரி இருப்பது அபாயகரமான மனநிலை.

ஏனெனில் இது சில நிமிடங்களுக்குள் நடந்து முடியும் ஆவேசமான குத்துச்சண்டையல்ல. அந்தப் போட்டியில் எதிராளியின் முகத்தில் நாக்-அவுட் செய்வது மட்டுமே போட்டியாளர்களின் ஒரே ஆவேசமான நோக்கமாக இருக்கும். அதில்தான் அவர்களின் முழு கவனமும் இருக்கும். ஆனால் பிக்பாஸ் என்பது மனித உணர்வுகளும் கலந்த நெடுங்கால விளையாட்டு. எனவே அது சார்ந்த நெகிழ்வுகளும் தளர்வுகளும் தேவை. மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகும் சகிப்புத்தன்மை என்பது இதில் முக்கியமானது. இதில்தான் ஆரி பல சமயங்களில் சறுக்கி விடுகிறார்.

“நீங்க மத்தவங்க கூட சந்தோஷமா சிரிச்சி பேசலாமே... நீங்க ஒண்ணு சொன்னா... நாங்க கேட்டுக் கொள்கிறோம்... இல்லையா பாஸ்... ஆனால் நாங்க ஒண்ணு சொன்னா மட்டும் நீங்க கேட்கவே மாட்டேன்றீங்களே. லாஜிக் பேசி கொல்றீங்களே...” என்று ரியோ கதறுவதன் பொருள் இதுதான்.

இதைப் போலவே பாலாஜியின் ப்ளஸ் மற்றும் மைனஸ்களைப் பார்த்து விடலாம். ஆரியைப் போலவே பாலாஜியும் ‘டாஸ்க்’ என்று வந்துவிட்டால் கில்லியாக மாறிவிடுவார். தானோ அல்லது தங்கள் அணியோ ஜெயிப்பதற்கான அத்தனை விஷயங்களையும் செய்வார். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் வீட்டு வேலைகளை சுணக்கமின்றி செய்பவரா என்றால் ‘இல்லை’ என்பதற்கான சாட்சியங்கள் பல இருக்கின்றன. சில சமயங்களில் ‘செய்ய முடியாது’ என்று விதண்டாவாதம் செய்வதில்தான் அவர் வல்லவர்.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

‘'நான் வீட்டுவேலை செய்யறதுக்காக இங்க வரலை’' என்று ரம்யா சொல்வதைப் போலவே பாலாஜியும் இன்று சொல்வது நிச்சயம் விதண்டாவாதம். ஏனெனில் பிக்பாஸ் விளையாட்டு என்பது அளிக்கப்பட்ட ‘டாஸ்க்குகளை’ மட்டும் அர்ப்பணிப்புடன் செய்வதல்ல. ஏனைய அனைத்து விஷயங்களையும் இணைத்துதான் ஒருவரின் பங்களிப்பு மதிப்பிடப்படுகிறது.

ஜெயிலுக்கு சென்றவுடன் ஏதோ ரயிலில் இடம்பிடிப்பது போல படுக்கையை உதறி முதலில் இடம் பிடித்தார் பாலாஜி. ஆனால் பாருங்கள்... பின்னால் என்ன நிகழ்ந்தது? ஆரிதான் படுக்கையில் சொகுசாக படுத்துக் கொண்டு அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். பாலாஜி நின்று கொண்டு உணர்ச்சிவசப்பட்டு மைக்கைத் தூக்கியெறிந்து (அடேய்!.. பதினைஞ்சாயிரம்டா.. அது!. பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ்) கோபமடைந்தார். படுக்கையில் இடம் கிடைக்கவில்லை.

‘ஆத்திரப்பட்டு எழுகிறவன் நஷ்டத்துடன் அமர்வான்’ என்பதே இதிலுள்ள நீதி (ஹிஹி).

ஓகே... நாள் 89-ல் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘அடியே... அடியே இவளே.... என் வாழ்க்கை பாழாக்கப் பொறந்தவளே’ என்கிற கருத்துள்ள பாடல் ஒலித்தது. (என் வீட்டம்மணியை ஜாலியாக வெறுப்பேற்ற நான் விரும்பினால், இந்தப் பாடலைத்தான் முணுமுணுப்பது வழக்கம்.) இந்தப் பாடல் ஒலித்த போது மூன்று பெண் போட்டியாளர்களை கேமரா காண்பித்தது. யாருக்கு அது பொருந்தும் என்று தெரியவில்லை.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் முடிந்தது என்கிற செய்தியை பிக்பாஸ் அறிவித்தார். இந்தச் சமயங்களில், வழக்கமாக நிம்மதி பெருமூச்சு விடும் போட்டியாளர்கள் இம்முறையோ ‘மிக்க நன்றி பிக்பாஸ்’ என்று நெகிழ்ந்தார்கள். ஏனெனில் இந்த வாரம் அவரவர்களின் வீட்டு உறுப்பினர்களைச் சந்தித்தது அவர்களுக்கு பெரிய உணர்ச்சி போனஸாக அமைந்திருக்கும்.

ஆனால் அடுத்த நிமிடமே தன்னுடைய வில்லத்தனத்தைக் காட்ட பிக்பாஸ் முடிவு செய்தார். ‘வாரம் முழுவதும் சுவாரஸ்யமும் ஈடுபாடும் இல்லாத இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். "அய்யோ... பிக்பாஸ், நாங்க எமோஷன் மோட்ல இருக்கோம். இந்த வாரம் வேணாமே...” என்று போட்டியாளர்கள் கெஞ்சியும் பிக்பாஸ் மெளனம் காக்கவே, ஆரி சட்டென்று எழுந்து ‘நாமினேட்’ செய்யப் போனார்.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

“இப்ப பாரேன்... அண்ணன் என்னைத்தான் முதலில் குத்துவார்" என்று ஆஜித்திடம் பாலாஜி முணுமுணுக்க, "யப்பா தம்பி... இங்க பேசிட்டிருக்கம்ல" என்று ஆரி முறைப்பாகச் சொல்ல ‘நீங்க சொல்லுங்கண்ணே’ என்று போலிப்பணிவு காட்டினார் பாலாஜி. அப்போதே இன்றைய நாளின் சண்டைக்கான விதை நடப்பட்டது. பாலாஜியின் ப்ளஸ் பாயின்ட்டுகளைச் சொன்ன ஆரி, "ஃப்ரீஸ் டாஸ்க்கில் பாலாஜி சரியாகச் செய்யவில்லை. வீடு சுத்தம் வேலையில் சுணக்கம் காட்டினார்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாலாஜி குறுக்கிட்டார்.

“போன வாரக் கதையெல்லாம் இழுக்காதீங்க. இந்த வாரக் கதையை மட்டும் பேசுங்க” என்று பாலாஜி சொல்ல, "அதைத்தான் சொல்ல வர்றேன். சொல்லி முடிச்சிட்டப்புறம் சொல்லு... சம்பந்தம் இருக்கா... இல்லையான்னு... இப்ப பேச விடு. நாமினேஷன் செய்யறப்ப குறுக்கே பேசக்கூடாதுன்னு முதல்ல சொன்னவனே நீதான்... மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறதை நீ முதல்ல பின்பற்று...” என்று ஆரி சொன்னதில் நியாயமுள்ளது.

ஏனெனில் ஆரியே சுட்டிக் காட்டுவது போல கடந்த முறையும் அப்படித்தான் ஆயிற்று. ஆரி என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக கேட்காமலேயே ‘என் குடும்பத்தைப் பத்தி தப்பா பேசாதீங்க ஆரி’ என்று சிலிர்த்துக் கொண்டு நின்றார் அனிதா. ஏறத்தாழ அதே தவறைத்தான் இப்போது பாலாஜியும் செய்கிறார்.

‘வீடு சுத்தம் வேலையில் கடந்த வாரம் இருந்த பாக்கிப் பணிகள் பாலாஜியின் சுணக்கத்தால் இந்த வாரமும் சேர்ந்துவிட்டன’ என்பதுதான் ஆரி சொல்ல வந்தது. அதைப் பேச பாலாஜி அனுமதித்திருக்க வேண்டும். பிறகு தன்னுடைய முறை வரும் போது அதற்கான விளக்கத்தைத் தந்திருக்கலாம்.

அஹிம்சை பாதையில் மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த பாலாஜி வேகமாக ரிவர்ஸ் கியரில் வருவதுதான் இனி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது. "என் மேல இருக்கற குறைகளையும் நீயும் வந்து சொல்லுடா” என்று ஏக வசனத்தில் ஆரி சொன்னவுடன் அதில் இருந்த மரியாதைக் குறைவை முறைப்புடன் வந்து ஆட்சேபித்தார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

இதில் நமக்கான நீதியும் இருக்கிறது. நம்மை விட வயதில் குறைந்த அந்நியரை நாம் உரிமையுடன் ‘வாடா... போடா’ என்று அழைப்பது ஜாலியான நேரங்களில் பிரச்னையை ஏற்படுத்தாது. ஆனால் சண்டை உருவாகும் போது அப்படி அழைப்பதை எதிராளி ஓர் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வார். எனவே அப்படி ஒருவரை அழைப்பதை மிக ஜாக்கிரதையாகத்தான் பயன்படுத்த வேண்டும். மிகச் சரியான புரிதல் உள்ளவரைத்தான் அப்படி அழைக்க வேண்டும்.

பாலாஜி ஆட்சேபித்த பிறகும் ‘வாடா... போடா’ பாணியை ஆரி பயன்படுத்துவது நிச்சயம் provoking தான். ஆரி விரித்த வலையில் பாலாஜி எளிதாக வந்து விழுந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் இறுதிக்கட்டத்தை நோக்கி போட்டி சென்று கொண்டிருக்கும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பார்வையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கி வெளியேறினால் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை’யாக போய் விடும். ஒருவேளை பாலாஜி வெளியேறி விட்டால் ஆரியின் பாதை மிக எளிதாகி விடும். இதுவே கூட ஆரியின் கணக்காக இருக்கலாம். ‘எல்லாமே ஸ்ட்ராட்டஜி’ என்று சொல்லிக் கொண்டிருந்த பாலாஜிக்கு இது தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்.

"என் லிஸ்ட்லயே அவர் இல்லை… இருந்தாலும் அவரைத்தான் நாமினேட் பண்ணப் போறேன்" என்று ஆரியை நாமினேட் செய்தார் பிறகு வந்த பாலாஜி. கடமை வீரரான ஆரி ‘'தான் படுத்த படுக்கையைக் கூட மடிப்பதில்லை. காய்ந்த துணிகளை எடுப்பதில்லை. அழுகின பழங்கள் மேஜையில் அப்படி கிடக்கின்றன’' என்று பல உதாரணங்களை பாலாஜி சொல்லிய போது கேமரா சம்பந்தப்பட்டவற்றைக் காண்பித்தது. உண்மையிலேயே இது நமக்கு அதிர்ச்சிதான். தன்னை ஒழுக்கவாதியாக சித்திரித்துக் கொள்ளும் ஆரி, இப்படி சாதாரண விஷயங்களில் கூட அசிரத்தையாக இருந்திருக்கக்கூடாது. (என்னா ஆரி ப்ரோ இது?!). ஆனால் இதற்கு மெளனமாக புன்னகைத்துக் கொண்டார் ஆரி.

கோபத்துடன் சண்டைக்குச் செல்கிறவர் பக்கத்தில் இருக்கிற கோயிஞ்சாமியையும் ஒரு தட்டு தட்டி விட்டுச் செல்வது போல ஆரியின் மீதிருக்கிற கோபத்தில் ஆஜித்தையும் நாமினேட் செய்தார் பாலாஜி. ஹவுஸ்கீப்பிங் கேப்டனான அவர் வாலன்டியர்ஸை கேட்டு வாங்கியிருக்க வேண்டுமாம். (ஆனால் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ பாலிஸியின் படி பிறகு Best perfomer தேர்விலும் ஆஜித்தை நாமினேட் செய்தார் பாலாஜி. எப்படி ஒருவரே மோசமான பங்கேற்பாளராகவும் சிறந்த பங்கேற்பாளராகவும் இருக்க முடியும் என்று தெரியவில்லை.)

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89
இந்த வாரத்தில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் இல்லாத விஷயத்தில் பாலா மிகப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை. அதை நாமே பார்த்தோம். ஆனால் ஆரி இதற்கு முன்மொழியப்பட்டதில் நிச்சயம் நியாயமில்லை. ஏனெனில் வீட்டு வேலை, டாஸ்க் விதிகளை கறாராக பின்பற்றியது போன்றவற்றில் அவர் தனித்தன்மையுடன் இருந்தார். ஆரியை விடவும் பலவீனமான போட்டியாளர்கள் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக இருந்தது ஆரிக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதில் சந்தேகமில்லை.

கேபியும் ரியோவும் மிகச் சுமாரான காரணங்களைச் சொல்லி ஆரியை நாமினேட் செய்தார்கள். கேபியின் காரணத்தை ஒப்புக் கொண்ட ஆரி, ரியோ சொன்ன காரணத்தை மட்டும் ஆட்சேபித்து பின்பு விரிவாக வாக்குவாதம் செய்தார்.

ஆக... ஆரியும் பாலாவும் இந்த வாரம் ஓய்வறைக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மக்களின் இந்த ஜனநாயகத் தேர்விற்கு ஆரி ஆட்சேபிக்கவில்லை. உடனே ஒப்புக் கொண்டார். ‘மந்தையில் இருந்து பிரிந்த இரு சிங்கங்கள்... மீண்டும் சந்தித்த போது... நம்மால் தாங்க முடியவில்லையே' என்கிற கதையாக ஆகிப் போனது. (ஆஹா! ஜெயிலுக்குள்ள செம கன்டென்ட் சிக்கப் போவுது என்று பிக்பாஸ் சந்தோஷமாகியிருப்பார்).

அடுத்ததாக, இந்த வாரம் முழுவதும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்ட மூன்று நபர்களை தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக்பாஸ். வழக்கமாக இரண்டு பேர்கள்தான் தேர்வு செய்யப்படுவார்கள். "என்னது மூன்று பேரா?” என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89
இதில் ஆஜித், சோம், ரியோ ஆகியோர்களின் பெயர்கள் நிறைய முறை வந்ததால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சோம், ஆஜித் பெயர்கள் எல்லாம் பெஸ்ட் கேட்டகிரியில் வருவது ஆச்சர்யமான விஷயம்.

"லவ் பெட்டோட சக்தி இன்னமும் குறைலை... இந்த வாரம் போகணும்னு சொன்னா கூட தைரியமா நான் போவேன். ஆனா அவங்க எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு மக்கள் மன்றத்தை சந்திப்பாங்க?” என்று ரம்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஆரி. "'நான் உங்களை முதன்முதல்ல நாமினேட் பண்றேன்’-ன்ற அலங்கார வார்த்தைகள்லாம் எதுக்கு? யாரையும் பகைச்சுக்கக்கூடாது –ன்ற ஜாக்கிரதையுணர்ச்சியா?” என்று ஆரியும் ரம்யாவும் பேசிக் கொண்டது சரியானது.

ஓய்வறைக்குச் செல்பவர்களை கேப்டன்தான் உள்ளே வைத்து பூட்ட வேண்டும். ஆனால் பிக்பாஸ் வீட்டின் ராசிப்படி கேப்டனே சமயங்களில் உள்ளே சென்று விடுகிறார்கள். (தவறு செய்யும் தலைவர்களுக்கு தண்டனை கிடைப்பதை பிக்பாஸ் வீட்டில் மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும்). எனவே ஆரியையும் பாலாஜியையும் ஓய்வறையில் வைத்து ரம்யா பூட்டும் போது ‘உங்க கையால பூட்டப்படறது சந்தோஷமா இருக்கு’ என்று சர்காஸ்டிக்காக கமெண்ட் செய்தார் ஆரி. இதுவரை யாரிடம் அதிக புன்னகையுடன் ஆரி பேசியிருக்கிறார் என்று பார்த்தால் அது ரம்யாவிடமாகத்தான் இருக்கும்.

“உங்க ரெண்டு பேரையும் இப்படி ஒண்ணா பார்க்கறது சந்தோஷமாக இருக்கு” என்று பதில் நையாண்டி செய்து அவர்களை புகைப்படம் எடுப்பது போல் காட்டினார் ரம்யா. அவர் இப்படி வெள்ளந்தியாக செய்வதையெல்லாம் ‘விஷபாட்டில்’ லிஸ்ட்டில் சேர்த்து விடக்கூடாது. அது வேறு டிபார்ட்மென்ட்.

ஏதோ மிடில் பர்த்தில் இடம்பிடிப்பது போன்ற அவசரத்துடன் படுக்கையை உதறிப் போட்டார் பாலாஜி. ‘நான் மேலே படுத்துக்கறேன்... நீ கீழ படுத்துக்கோ’ என்று ஆரியிடம் சொல்வதைப் போலவே பாலாஜியின் செய்கை இருந்தது. ‘சட்டுபுட்டுன்னு வேலையை ஆரம்பிங்கப்பா’ என்று ஜாலியாக கொளுத்திப் போட்டார் ‘சொகுசு’ குமார் சோம். ஆனால் அது பிறகு உண்மையாயிற்று.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

"மார்னிங் ஷோ நல்லபடியா முடிஞ்சது... மேட்னிக்கும் எங்களுக்கு எண்டர்டெயிண்மென்ட் உண்டா? சொன்னீங்கன்னா இங்கயே பட்டறையைப் போட்டுருவோம்" என்று ரம்யாவின் சர்காஸ்டிக் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருந்தன. ஒருவகையில் இது போன்ற கிண்டல்கள் சண்டை போடுபவர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தக்கூடும். “நீங்க ரியோவை கூப்பிடுங்க... அவர்ட்ட பேசணும்... நீங்கதானே எண்டர்டெயின்மெண்ட் கேட்டீங்க” என்றார் ஆரி.

ரியோ தன்னை நாமினேட் செய்தது குறித்து ஆரிக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் அதற்கு ரியோ சொன்ன காரணம்தான் பிரச்னையாகத் தெரிந்தது. “நீங்களும் பாலாஜியும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒருவர் தொடர்ந்து கண்காணித்து சண்டை போடுகிறீர்கள். இதே அக்கறையை பிற விஷயங்களிலும் காண்பிக்கலாம்" என்பதுதான் ரியோ சொன்ன காரணம். இதற்கான மறைமுக அர்த்தம் என்னவெனில் "நீங்க மட்டுமே பிரமோல தினமும் வந்துட்டு இருந்தா நாங்கள்லாம் என்னதாம்ப்பா செய்யறது?” என்பதுதான்.

“நான் வீட்டு வேலைகளை சரியாகச் செய்திருக்கிறேன். ஃப்ரீஸ் டாஸ்க்கில் மற்றவர்கள் அடிக்கடி கலைந்தபோது கூட நான் உறுதியாக நின்றிருக்கிறேன். என்னை எப்படி நீங்கள் நாமினேட் செய்யலாம்... அதற்கான காரணம் வலுவாக இருக்க வேண்டாமா?” என்பது ஆரி முன்வைத்த வாதம். இதை முன்பே பார்த்துவிட்டோம். ஆரியை விடவும் பலவீனமான போட்டியாளர்கள் அங்கு இருக்கிறார்கள். ஆனால் வலிமையான போட்டியாளரை முதலில் அடித்து வீழ்த்துவது ஒருவகையான உத்தி. அதைத்தான் ரியோ செய்கிறார். அதைத்தான் ஆரி ஆட்சேபிக்கிறார்.

ரியோவிற்கும் ஆரிக்கும் நடந்த மோதலானது அப்படியே பரவி பாலாஜி – ஆரி மோதலாக மாறியது. வீடு சுத்தம் செய்யும் விஷயத்தில் பாலாஜி செய்த கொனஷ்டைகளைப் பற்றி ஆரி மீ்ண்டும் சொல்ல "நான் இங்க வீட்டு வேலை மட்டும் செய்ய வரலை” என்றார் பாலாஜி. எனில் அவர் சம்பந்தப்பட்ட வேலையை இழிவாக நினைக்கிறாரா என்று தெரியவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி ‘டாஸ்க்’கை சிறப்பாக செய்வது மட்டும் பிக்பாஸ் வெற்றிக்கான காரணியல்ல. “இந்த வாரம் கிச்சன் டீமிற்கு ஏன் நீ வரவில்லை? நீ அந்த டீமிற்கு வந்து நிறைய வாரம் ஆச்சுல்ல” என்ற ஆரியின் கேள்விக்கும் பாலாஜி இடக்காகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ‘வெச்சுக்கோ’ என்கிற எதிராளியை வெறுப்பேற்றும் செயலை மீண்டும் ஆரம்பித்துவிட்டார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

பாலாஜி, ரியோ ஆகிய இருவரையும் சமாளிக்கும் நிலைமை ஆரிக்கு ஏற்பட்டது. "நீங்க ஆடறது சேஃப் கேம் ரியோ... ஷிவானியை நாமினேட் செய்யும் போது, ‘சாரி... முதன்முறையா உங்களை நாமினேட் பண்றேன்'னுல்லாம் எதுக்கு காரணம் சொல்றீங்க?” என்று ஆரி முன்வைத்த கேள்விக்கு "அவங்களை எனக்குப் பிடிக்கும் பிரதர்... அதுல என்ன பிரச்னை?” என்று சமாளித்தார் ரியோ.

‘ஒருவரிடம் அன்பு வைத்திருப்பது வேறு, அது உள்நோக்கங்களுடன் விளையாட்டிற்குள் கலப்பது வேறு’ என்கிற அடிப்படையான கான்செப்ட் ‘லவ் பெட்’ ஆசாமிகளுக்கு இன்னமும் புரியவில்லை அல்லது புரியாதது போல் பாவனை செய்கிறார்கள்.

“நீங்க குப்பைக்கு கூட சண்டை போடற ஆள்” என்று பாலாஜி வெடிக்க “ஆமாப்பா. சுத்தமா இல்லன்னா கேக்கத்தான் செய்வாங்க" என்று ஆரி பதில் இடக்கு பேசினார். "நீங்கள் மரியாதைக்குத் தகுதியற்றவர்" என்று பாலாஜி சொல்ல, "என் மரியாதையை எப்படி சம்பாதிக்கணும்னு எனக்குத் தெரியும்" என்று ஆரி சொல்ல, விடாக்கொண்டன், கொடாக்கொண்டன் கதையாக இவர்களின் சூடான வாக்குவாதம் வளர்ந்தது.

ஆரி குறிப்பிட்ட ‘சோம்பேறித்தனம்’ என்கிற வார்த்தை பாலாஜிக்கு பிரேக்கிங் பாயிண்ட்டாக அமைந்து விட்டது. பத்து அனிதாக்களை ஒன்றாக இணைத்தது போல் ஆவேசமாகி விட்டார். "இன்னொரு முறை என்னை சோம்பேறின்னு சொன்னீங்க... மரியாதை கெட்டுப் போயிடும்… நீங்க 34 வயசுல செய்ததை நான் 24 வயசுல சாதிச்சிட்டேன்" என்று பாலாஜி கத்தியது, பிக்பாஸ் வீட்டிற்குள் வர தகுதியடைந்ததைப் பற்றியது போல் இருக்கிறது. எனில் ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எல்லாம் இளம் வயதில் அதை விடவும் சாதித்தவர்கள் எனலாமா?

சோம்பேறி என்கிற வார்த்தை தந்த ஆவேசத்தில் மைக்கை படுக்கையின் மீது விசிறியடித்தார் பாலாஜி. (கோபத்தின் இடையேயும் ஒரு ராஜதந்திரம். தரையில் வீசியிருந்தால் மைக் உடைந்திருக்கும்). பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆஜித் இந்தக் காட்சியைப் பார்த்து பதறிப் போனார்.

"நான் சோம்பேறின்னு சொல்லாதீங்க" என்று ஹிஸ்டீரிக்கலாக பாலாஜி கத்தியத்தைப் பார்த்து அமைதியடைந்து விட்டார் ஆரி. (மேல விழுந்து கடிச்சு கிடிச்சு வெச்சுருவானோ?!). "சரிப்பா. அந்த வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக்கறேன். மன்னிப்பு கேக்கறேன்" என்று சமாதானத்திற்கு வந்தார் ஆரி. (பின்ன.. படுபாவிய்ங்க.. ரூமுக்குள்ள வெச்சி பூட்டியிருக்காங்களே!).

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

ஆனால் பிறகு மீண்டும் நடந்த விவாதத்தில், "ஆரி மன்னிப்பு கேட்கவில்லை" என்று சாதித்தார் பாலாஜி. 'ஆத்திரம் கண்ணை மறைக்கும்' என்பது இதுதான். எனில் குறும்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பாலாஜியின் மூக்கு உடைபடப் போகிறது. அவரின் முன்கோபமும் பிழையும் மீண்டும் அம்பலமாகக்கூடும். (எனவே குறும்படத்திற்கு காத்திருங்கள்!).

“நீ ரசத்தை ஊத்து... அதுல பூனை கிடைக்குதான்னு பார்க்கலாம்" என்கிற காமெடியாக அடுத்து தலைவர் போட்டியை அறிவித்தார் பிக்பாஸ். CAPTAIN என்கிற வார்த்தை தனித்தனி எழுத்துக்களாக சற்று தொலைவில் ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கும். அதை மரத்தில் மாட்டிய காற்றாடியை லாகவமாக போட்டியாளர்கள் எடுக்க வேண்டும். ஆஜித், சோம், ரியோ ஆகியோர் இந்தப் போட்டியில் இருந்தார்கள். இதில் ரியோ வென்றார். ஒருவேளை ஆஜித் வென்றிருந்தால், இந்த வாரம் தப்பித்தும் விட்டால், இன்னொரு வாரம் அவருக்கு கிடைத்திருக்கும். ‘வட போச்சே’.

“ரியோ. ஒரு தலைவரா... நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை. இன்னொரு தலைவரை ரிலீஸ் செய்யறதுதான்’ என்று பிக்பாஸ் சொல்ல, ஆரியும் பாலாஜியும் ஓய்வறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

வெளியில் வந்த ஆரியிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் ‘ஸாரி. ப்ரோ’ என்று ஆரம்பிக்க அது இன்னொரு சண்டையாக பற்றிக் கொண்டது. ஆரி பல சமயங்களில் ஏன் உடனே சண்டைக்கோழியாக மாறி விடுகிறார் என்று தெரியவில்லை. ‘அதெல்லாம் இருக்கட்டும். இருந்தாலும் நீங்க காரணம் சரியில்லை. கேபி சொன்னதை ஏத்துக்கறேன்” என்று ஆரி முறைப்பாக பதில் சொல்ல பாலாஜியும் அங்கு ஆஜர் ஆக சூழல் மீண்டும் பற்றிக் கொண்டது.

“போடா... நடிச்சிட்டு இருக்காதே'’ என்று ஆரி மறுபடியும் ஆவேசமானார். பாலாஜி ஒரு முறை ஆட்சேபித்த பிறகு மீண்டும் ஏக வசனத்தில் பேசாமல் இருப்பதுதான் மரியாதை. ஆனால் ஆரி அதை மீண்டும் செய்யும் போது பாலாஜியை கோபப்படுத்துவதான் அவரது உள்நோக்கமா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. அவர் சொல்லும் விஷயங்களில் நியாயம் இருக்கிறது. ஆனால் சொல்லும் தொனியில்தான் பிரச்னை.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

"கோல்டு டாஸ்க்ல தூங்கி தங்கத்தை கோட்டை விட்ட கதைல்லாம் மறந்து போச்சா.. என்னை வந்து சோம்பேறின்றீங்க?” என்று முதல் சீஸன் சம்பவத்தையெல்லாம் தூசு தட்டி எடுத்தார் பாலாஜி. ஞாபகம் வைத்திருக்கும் விஷயத்தில் ஆரியையும் பாலாஜி மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. வாக்குவாதம் செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. “அது என் கருத்து" என்று ஆரி சொல்ல "நீங்க ஒரு அடிமுட்டாள். அது என் கருத்து" என்று சர்காஸ்டிக்காக ஆத்திரப்பட்டார் பாலாஜி. இப்படி நைசாக ஊசி செருகி எதிராளியை வெறுப்பேற்றுவதில் பாலா கில்லாடியாக இருக்கிறார்.

ஆனால் ஆரியோ ‘முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு’ மோடில் எதற்கும் தயாராக இருக்கிறார். ‘நாம செத்து செத்து விளையாடலாமா?’ என்கிற காமெடி போல ஆரியிடம் மறுபடியும் பேச ஆரம்பித்தார் ரியோ. உண்மையில் ஆரியிடம் சமாதானம் ஆகலாம் என்பதுதான் அவருடைய நோக்கம் என்பதாகத் தெரிந்தது. “நீங்க சொல்றதை நாங்க கேக்கறோம். நாங்க சொல்றதை நீங்க ஒருமுறை கூட கேக்கக்கூடாதா” என்று ரியோ கேட்க ‘அது நியாயமா இருந்தா இந்த முத்துப்பாண்டி தயக்கமில்லாம ஏத்துப்பான்' என்று கெத்து காட்டினார் ஆரி.

“ஓ... நீங்க சனிக்கிழமை எபிஸோடுக்கு தயார் ஆயிட்டிங்களோ?” என்று குத்தல் நகைச்சுவையை வைத்தார் ரியோ. எல்லாவற்றிற்கும் ஒரு பதிலை தயாராக வைத்திருக்கும் ஆரியிடம் பேசி ஜெயிக்க முடியாது என்பது இன்னொரு முறை அவருக்குப் புரிந்தது.

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ பாலிஸியாக தொலைக்காட்சியில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த பிக்பாஸ் ‘நீங்கள் இங்கு பல சவால்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். இன்னமும் இரண்டு வாரங்கள்தான் இருக்கிறது. புதிய சவால்கள் காத்திருக்கின்றன. இறுதிக்கட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துகள்’ என்று உத்வேகம் தந்து விட்டு குத்துப் பாடல்களைப் போட மக்கள் பழைய சண்டைகளையெல்லாம் மறந்து விட்டு கூட்டு நடனத்தை ஆவேசமாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 89
பிக்பாஸ் – நாள் 89

‘என்ன வேணா நடக்கட்டும் / நான் சந்தோசமா இருப்பேன் / உசுரு இருக்கு வேறென்ன வேணும் / உல்லாசமா இருப்பேன்’ என்கிற ‘ஜகமே தந்திரம்’ படத்திலிருந்து ரகிட ரகிட பாடல் ஒலித்தது. பாலாஜிக்கு அது மிகவும் பிடித்தது என்பதால் உற்சாகமாக ஆட ஆரம்பித்தார்.

கொரானோ காலக்கட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி, பணியிழப்பு போன்ற பல சோதனைகளை நாம் சந்தித்திருப்போம். சலிப்பும் சோர்வும் அடைந்திருப்போம். ஆனால் மேற்கண்ட வரிகளைக் கவனியுங்கள். அனைத்தையும் மீறி நாம் உயிரோடு இருப்பதே நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசுதான். எனவே அதைக் கொண்டாடுவோம். இழந்த கோட்டைகளை மீண்டும் கட்டுவதற்கு நமது மகிழ்ச்சியான இருப்புதான் முதல் ஆதாரம்.