Published:Updated:

பிக் பாஸ் - 14 | என்னை பைத்தியக்காரனாவே நினைக்கிறல! இந்த அபிஷேக் பையனுக்கு ஒரு எண்டு இல்லையே மக்களே!

பிக் பாஸ் - 14

ஆக… ஒட்டு மொத்தத்தில் பிக் பாஸ் டீமிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான். “இன்னமும் நீ என்னை பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல?”

பிக் பாஸ் - 14 | என்னை பைத்தியக்காரனாவே நினைக்கிறல! இந்த அபிஷேக் பையனுக்கு ஒரு எண்டு இல்லையே மக்களே!

ஆக… ஒட்டு மொத்தத்தில் பிக் பாஸ் டீமிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான். “இன்னமும் நீ என்னை பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல?”

Published:Updated:
பிக் பாஸ் - 14

எந்தவொரு ரியாலிட்டி ஷோவும் சில நாட்களைக் கடந்த பிறகுதான் பிக்அப் ஆகும். பிக்பாஸூம் இதில் விதிவிலக்கில்லை. ஆனால் சீசன் 5 இந்த கெடு நாட்களைத் தாண்டியும் சோம்பி நிற்கிறதா என்று தெரியவில்லை. இதில் வரும் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. அப்படியே மெனக்கெட்டாலும் கூட, சப்டைட்டில் இல்லாத பிரெஞ்சு படத்தை பாதியில் இருந்து பார்க்க ஆரம்பித்து போல் பல விஷயங்களுக்கு கதை வசனமே புரியவில்லை. “வசனமாடா முக்கியம்... படத்தைப் பாருடா?” என்று முடிவு செய்து கொண்டால் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் எதுவும் தென்படவில்லை.

“பாஸ்... அப்ப நாம காட்டிக் கொடுக்கறோம்….” என்கிற காமெடி போல சில விஷயங்களுக்கு பிக்பாஸ் முன்வந்து சப்டைட்டில் போட்டு விளக்கினால் கூட, சில காட்சிகளை நோலன் படம் போல புரிந்து கொள்ள முடியாமல் நாம்தான் விழிக்க வேண்டியிருக்கிறது.

பிக்பாஸ் - 14  - கமல்ஹாசன்
பிக்பாஸ் - 14 - கமல்ஹாசன்

இங்கு யாருக்கும் யாருக்கும் இடையில் லவ் ஃபீலிங்ஸ் என்பதே முதலில் புரியவில்லை. பிரியங்காவும் நிரூப்பும் “யாருன்னு தெரியுதா... அவன்தான்..” என்று தங்களுக்குள் ரகசியம் பேசிக் கொண்டாலும் கூட ‘’யாருப்பா அவங்க? சொல்லித் தொலைங்கய்யா” என்று நாம்தான் அல்லாட வேண்டியிருக்கிறது. “மாலாவுக்கும் சேகருக்கும் நடுவுல ஒரு கனெக்ஷன் ஏற்படுது. ஆனா, மாலாவுக்கு எதிர் வீட்டு ரமேஷ் மேல ஒரு கண்ணு. இது நடுவுல கீதாவுக்கு பேபி ஃபார்ம் ஆயிடுது” என்று சீரியல்களைக் கிண்டலடித்து விவேக் செய்த காமெடிதான் இங்கு நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கான காதல் குழப்பம்.

‘’அக்ஷராவைப் பிடிக்கும் சார்… அதனாலதான் லைக் போட்டேன்” என்று சபையிலேயே சொல்கிறார் ராஜூ. (ஏம்ப்பா… ஒரு ரைட்டர் செய்யற வேலையா இது?! பேச்சு பிடித்தால்தான் லைக் போட வேண்டும் என்று நீங்களே மற்றவர்களுக்கு அத்தனை வியாக்கியானம் செய்து குழப்பி விட்டு நீங்கள் இந்த வேலையைச் செய்யலாமா?) ஆனால் இவரோடு கிசுகிசுக்கப்பட்ட அக்ஷராவோ “தங்கச்சி-ன்ற பாசத்துலதான் அவர் எனக்கு லைக் போட்டார்” என்று கமல் விசாரணையின் போது சொல்கிறார். (குத்துங்க எஜமான் குத்துங்க... இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்!). ராஜூவை நன்றாக குழப்பி உண்மையிலேயே கோமாளி ஆக்கி வெளியே அனுப்பி விடுவார்கள் போல.

பாவனியின் பிரச்னை என்னவென்றே புரியவில்லை. இவர் சீரியலில் நடித்த பழக்கமோ என்னமோ தெரியவில்லை.. அந்தப் பயிற்சி விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது யாரையாவது இழுத்துப் போட்டுக் கொண்டு மூசுமூசுவென்று அழுது புலம்புகிறார். இவர் அபினய்யிடம் கேட்டுக் கொண்டிருந்த விஷயம் என்னவென்று கடைசி வரை புரியவில்லை. “உங்க கிட்ட ஏதோ லவ் பீலீங்ஸை என்னால பார்க்க முடியுது. அது தப்பு தம்பி’’ன்னு சொல்ல வருகிறாரா.. அல்லது “இன்னுமா உங்களுக்கு அது வரலை?” என்று சப்கான்ஷியஸின் வழியாக கேட்கத் துடிக்கிறாரா? (பாவனி.. பாவம் நீ இல்ல... அந்த ‘பாவம் கணேசன்’ நாங்கதான்!).

இந்தக் கூத்துகளின் நடுவில் கோமாளி போல “இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேத்தான் பார்க்கப் போறீங்க?” என்கிற ஆவேசத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார் அபிஷேக். “ஒரு பெரிய சம்பவத்தை இனிமேத்தான் பார்க்கப் போறீங்க. ஒரு கதகளி ஆட்டம் இருக்கு” என்றவர், இன்னொரு இடத்தில் ‘பரதநாட்டியம்” என்கிறார். (எந்த டான்ஸ்ஸூன்னு முடிவு பண்ணிக்கங்க தம்பி!). இவர் எதற்காக இத்தனை பெரிய பில்டப்போடு சுற்றுகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறாவிட்டால் வாக்களிப்பதின் வழியாக அபிஷேக்குக்கு பெரிய ‘சம்பவத்தை’ பார்வையாளர்கள் நிகழ்த்தி விடக்கூடும். (அதை மொதல்ல செய்ங்கப்பா!).

ஆக… ஒட்டு மொத்தத்தில் பிக்பாஸ் டீமிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான். “இன்னமும் நீ என்னை பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல?”

பிக்பாஸ் - 14
பிக்பாஸ் - 14

ஓகே… நம்ம வீட்டு டிவிக்குள் போய் அகம் டிவியில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

பார்வையாளர்கள் அமர்ந்திருந்த அரங்கம் பணக்கார யோகா மண்டபம் போல் இருந்தது. நேற்று கமல் அணிந்திருந்த ஆடை, அபத்தமான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் இல்லாமல் நன்றாகவே இருந்தது. வாக்கிங் உடையில் இருந்தாலும் வசீகரமாக இருந்தார் கமல். ஆனால் உட்புற சட்டை முன்பகுதியில் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. கேட்டால் ஃபேஷன் என்பார்கள்… எதற்கு வம்பு?

“பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஒருவகையில் அவசியம். மக்களின் முகங்களில் தெரியும் சந்தோஷமும் அன்பும் மிக முக்கியம்” என்று நாத்திக வாசனையை விட்டுக் கொடுக்காமல் பண்டிகை தினங்களின் மகிழ்ச்சியை வலியுறுத்திய கமல், வியாழன் + வெள்ளி நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றார்.

நள்ளிரவைத் தாண்டியும் ‘சின்னப்பொண்ணு’ பஞ்சாயத்து ‘பெரிய பொண்ணு’ பஞ்சாயத்தாக மாறி நீண்டு கொண்டிருந்தது. “ஏற்கெனவே விளக்கம் தந்தாச்சு… இத்தோட விட்டுடு” என்று பிரியங்கா எச்சரித்தும் கூட சின்னப்பொண்ணுவிடம் சென்று அநாவசிய விளக்கம் தந்து கொண்டிருந்தார் அபிஷேக். இதன் நடுவில் அக்ஷரா ஏதோ சொல்லி விட அதற்கும் மறைமுக டென்ஷன் ஆகிக் கொண்டிருந்தார். ‘’சண்டை போடாதீங்க ஏட்டய்யா” என்று என்று வெள்ளந்தியாக சொல்லி இதில் டீசலை ஊற்றினார் தாமரை.

இளம் வயதில் என் நண்பர்கள் ஒருவிதமான வெறுப்பேற்றலைச் செய்வார்கள். தன்னால் கிண்டல் செய்யப்பட்டு விரோதமாக உட்கார்ந்திருப்பவனிடம் சென்று ‘கோபமா இருக்கியாடா.. கோபமா இருக்கியாடா?” என்று சமாதானப்படுத்துவது போல் ஆரம்பித்து விட்டு, பிறகு ‘பரவாயில்லே… கோச்சுக்கறதா இருந்தா கோச்சுக்கோ… ஒரு பிரச்னையும் இல்ல” என்று சொல்லி விட்டு பின்குறிப்பாக கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள். சின்னப்பொண்ணுவிடம் அபிஷேக் மன்னிப்பு கேட்ட விதமும் இப்படித்தான் இருந்தது.

Worst performer கேட்டகிரியில் மதுமிதாவின் பெயர் அடிபடுவதை, தேர்வுக்குழுவில் இருந்த அக்ஷரா மதுமிதாவிடம் சென்று போட்டுக் கொடுத்து விட்டார் போலிருக்கிறது. ‘’என்னையா குறி வைக்கறாங்க?” என்று அவர் பாவ்னியிடம் சென்று விசாரிக்க “இந்தப் படத்துல எல்லோருக்கும் டபுள் ரோல்… யாரையும் நம்பாதே” என்று உபதேசித்தார் பாவனி. (இந்த உபதேசத்தை நீங்களும் பின்பற்றலாம்). “மன்னிச்சுடு ஆத்தா” என்று உள்ளே சின்னப்பொண்ணுவிடம் சரணாகதி அடைந்த அபிஷேக், வெளியே வந்த பிறகு “பெரியவங்கன்னா மத்தவங்களை வாழ்த்தணும். அதான் பெரிய மனுஷத்தனம்” என்று புறணி பேசினார். அபிஷேக் சொல்வது ஒருவகையில் சரிதான். சின்னப்பொண்ணு, சின்னத்தனமாக நடந்து கொள்வதை கைவிட வேண்டும்.

“ஏன் சோகமா இருக்கே சொல்லு… சொல்லு… சொன்னாதான் என்னால தூங்க முடியும். சொல்லு சொல்லு” என்று பாவனியிடம் நச்சரித்த அபிஷேக், பிறகு “நான் இன்னமும் ஆட்டத்தை ஆரம்பிக்கலை. ஆரம்பிச்சேன்… ஒருபய இங்க இருக்க முடியாது” என்று எதற்கோ சவடால் விட்டுக் கொண்டிருந்தார். அபிஷேக்கை தேர்வுக்குழு உறுப்பினராக பிக்பாஸ் ஆக்கியது உண்மைதான். அதற்காக ‘’யாராக இருந்தாலும் வெட்டுவேன்’’ மோடியிலேயே இவர் அலைவது ஓவராக இருக்கிறது. மட்டுமல்லாமல் தேர்வுக்குழுவை அமைத்ததே, பிக்பாஸ் இவர்களுக்கு போட்ட ‘ஸ்கெட்ச்சாக’ இருக்கும் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் - 14
பிக்பாஸ் - 14

விடிந்தவுடன் தேர்வுக்குழு மறுபடியும் அமர்ந்து தீவிரமாக ஆலோசனை செய்ததது. அக்ஷராவையும் பாவனியையும் மூளைச்சலவை செய்யும் தீவிர முயற்சியில் இருந்தார் அபிஷேக். அதன் பிறகு ‘உனக்கு ஒகேதானே?” என்று மிரட்டி ஒப்புதலும் வாங்கிக் கொண்டிருந்தார். அபிஷேக்கிற்கு ராஜூவைப் பிடிக்காவிட்டாலும் அவரைப் பாராட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படை.

“அபினய் என் கிட்ட ஒரு மாதிரியா பேசறாரு... என்னன்னு புரியலை” என்று புலம்பிக் கொண்டிருந்த பாவனி, ஒரு கட்டத்தில் அபினயிடம் நேராகப் பேச முடிவு செய்தது நல்ல விஷயம். ஆனால் இதைக் கேட்டதும் “என்னம்மா நீயி... நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல” என்பது போல் திகைத்து விட்டார் அபினய். “மொத நாளே உனக்கும் எனக்கும் ஒரு பிரச்னை வந்தது. அதைப் போக்கலாமேன்னுதான் உன் கிட்ட நெறய பேசினேன்” என்பது அவரின் விளக்கம். ஆனால் அவர் வெறும் பசுவா, புலித்தோல் போர்த்திய பசுவா என்று தெரியவில்லை. “நீங்க அந்த மாதிரி நெனக்கறது போல நான் ஏதாவது நடந்திக்கிட்டேனா” என்று பாவனி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். (“இந்தம்மா இன்னமும் ஒரு வாரம் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். அதுவரைக்கும் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம்!).

அகம் டிவியாக விசாரணைக்கு வந்த கமலைப் பார்க்க பாவமாக இருந்தது. முப்பத்தைந்து வயதில் எல்கேஜி படிக்க வந்த பிள்ளைகளை (?!) கட்டி மேய்க்க நேர்ந்த வாத்தியார் மாதிரி பரிதாபமாக இருந்தது அவரது நிலைமை. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கத்துவதைப் போல, பிக்பாஸ் வீட்டிலும் பிரியங்கா கத்துவதையே முதலில் நம்மால் சகிக்க முடியவில்லை. ஆனால் கமலின் விசாரணை சபையிலும் அவர் தொடர்ந்து செய்த இடையூறுகள் எரிச்சல் ஊட்டின. (இனிமேல் விஜய் டிவி ஆட்களை பிக்பாஸில் சேர்க்கக்கூடாது என்று யாராவது பொதுநல வழக்கு போடலாம்!).

“தலைவர்… தாமரை சொல்லுங்க. பயமெல்லாம் போயிடுச்சா” என்று கமல் விசாரிக்க “போயிடுச்சுங்கய்யா… இனிமே என்னைப் பார்த்துதான் மத்தவங்க பயப்படணும்” என்று அமாவாசை கணக்காக கெத்தாக சொன்னார் தாமரை. (பில்டிங் ஸ்டிராங்க்… பேஸ்மென்ட் வீக்). அடுத்ததாக பலூன் விளையாட்டில் அபினய் செய்த விதிமீறல் விசாரணைக்கு வந்தது. அபினய் ‘மாற்று வழியில்’ சிந்தித்ததில் தவறில்லை. அதுவும் ஒருவகையான ஸ்டராட்டஜிதான். ஆனால் அதற்கு முன்னால் விதிகளை அவர் சரியாக கவனித்திருக்க வேண்டும். இந்தச் சண்டையின் போது தக்க சமயத்தில் நீரை ஊற்றி அணைத்த ஐக்கியின் ஐ.க்யூவை மனந்திறந்து பாராட்டினார் கமல்.

பிக்பாஸ் - 14
பிக்பாஸ் - 14

இமானிடம் ஹைடெஸிபல் குரலில் வருண் சண்டையிட்டதை மறைமுகமாக கிண்டலடித்த கமல் “ஸ்கூல் பசங்கன்னு சொல்ல மாட்டேன். ஆனா +2…” என்று இக்கு வைத்து கொக்கி போட்ட அந்த கிண்டல் அட்டகாசம்.

சின்னப்பொண்ணுவின் பெரிய பஞ்சாயத்துக்கு வந்த கமல் “தோற்பது நாமாக இருப்பினும் ஜெயிப்பது கலையாக இருக்கட்டும்” என்று தீர்ப்பு எழுத அசட்டுச்சிரிப்புடன் அதை ஒப்புக் கொண்டார் சின்னப்பொண்ணு. “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... எனக்கென்ன வருத்தம்?” என்று சின்னப்பொண்ணு வெளியே அங்கலாய்த்தாலும் அவருக்குள் இருக்கும் பொறாமை அப்பட்டமாக வெளியே தெரிந்து விடுகிறது. (கேமரா முன் எப்படி நடிக்க வேண்டும் என்று இன்னமும் பயிற்சி வேண்டும் அம்மா!). தாமரை இயல்பாகச் சொன்ன ஒரு விஷயத்தின் மீது வொயிட் பெட்ரோலை ஊற்றி மேலும் பற்ற வைத்த பிரியங்காவை “நீங்க பண்ற மேட்ரிமோனியல் விஷயம் நல்லாயிருக்கு’’ என்று கமல் மறைமுகமாக கிண்டலடிக்க, புரிந்து கொண்ட பிரியங்கா சங்கடமான சிரிப்புடன் தலைகுனிந்தார்.

அக்ஷரா சொன்ன கதையை தூசு தட்டிய கமல் “அப்பாவின் மரணத்துக்குப் பிறகு மூத்த சகோதர்தான் அப்பாவா இருந்தார்ன்னு சொன்னீங்க. அது எனக்கும் புரியும்” என்று தன் சொந்தக் கதையை நுழைக்க ஆரம்பித்து, நல்ல வேளையாக அனைத்து ஹாசன்களையும் பற்றி விவரிக்காமல் உடனே நிறுத்திக் கொண்டார். பாராட்டுக்கள் கமல். ‘மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் பிரியங்காவின் empathy-ஐ பாராட்டிய கமல், தான் அரசியல் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கும் போது ஆம்புலன்ஸ் வந்தால் பேச்சை நிறுத்தி அதற்கு வழிவிடச்சொல்வேன். அதுவும் ஒருவகையான மக்கள் சேவைதான்” என்றார். பின்குறிப்பாக “அதுக்காகவே நிறைய காலி ஆம்புலன்ஸ் வரும்” என்றது நல்லதொரு பொலிட்டிக்கல் காமெடி பன்ச்.

பிக்பாஸ் - 14
பிக்பாஸ் - 14

“இது இடைவேளை இல்லை. இதுதான் டைட்டில் கார்டு… இனிமேத்தான் உங்க கதை ஆரம்பிக்கப் போகுது. ஒரு புதிய ஆரம்பம்” என்று ராஜூவின் கதைக்கு உள்குத்துடன் லைக் போட்டார் கமல். (‘பிக்பாஸ் மேடைக்கு வந்துட்டீங்கள்ல… இனிமே பாருங்க. எப்படி ஆகப் போறீங்கன்னு’ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி. உடம்பு ரணகளமா ஆனவங்க பல பேரு!).

“பிக்பாஸ் வீட்ல இருந்து ஆட்டோ பிடிச்சு மெயின் ரோட்ல வந்து நின்னு அழுதீங்களே… ஏன்?” என்று அக்ஷராவை அவர் விசாரிக்க, பிரியங்காவின் கமென்ட் அவ்வாறு தன்னை கலங்க வைத்ததாக வாக்குமூலம் தந்தார் அக்ஷரா. “அவங்க குழந்தை மாதிரி இருக்காங்க சார்… பட்ட கஷ்டங்களையே சொல்லிட்டு இருந்தாங்க. இது ரத்தபூமின்னு சொல்லி அவங்களை வெறியேத்தி விட்டேன்” என்று பிரியங்கா இதற்கு விளக்கம் தந்தார். பிரியங்கா தன் ஆட்டத்தை மட்டும் ஆடுவது நல்லது. மற்றவர்களுக்கு டியூஷன் எடுக்க வேண்டாம்.

“நெஜமாவே சிலர் தன்னடக்கத்தோட இருக்கலாம்” என்று பிரியங்காவை சிறப்பான முறையில் நோஸ்கட் தந்தார் கமல். “பிரியங்கா, ராஜூ, அக்ஷரா…. உங்க மூணு பேருக்கும் நான் ஒரு முக்கியமான செய்தி சொல்லியே ஆகணும், கேட்பீங்களா?” என்று சஸ்பென்ஸ் வைத்த கமல் “நீங்க Saved” என்றார். பிரியங்கா காப்பாற்றப்படுவார் என்பது எதிர்பார்த்ததுதான் என்றாலும் தன்னிச்சையாக உள்ளே ஒரு ஏமாற்றம் படர்ந்தது.

பிக்பாஸ் - 14
பிக்பாஸ் - 14

அக்ஷரா அழுத கதையை விசாரித்த கமல், விசாரணை இடைவேளையில் பாவனி அழுத கதையை அடுத்ததாக விசாரிக்க ஆரம்பித்தார். (பாவம்ப்பா... இந்த மனுஷன்!). இந்த வார நாமிஷேனில் பாவனி மட்டும் தப்பித்து விட்டதால் அவர் எல்லோரையும் கிண்டல் செய்தது, அக்ஷராவை டென்ஷன் ஆக்கி விட்டது. இது நியாயமான கோபம்தான். செய்வதையெல்லாம் செய்து விட்டு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழுது அனுதாபம் தேடுவதில் பாவனி வல்லவராக இருக்கிறாரோ?

“இசைவாணி... நீங்க சொல்லுங்க” என்று கமல் எடுத்துக் கொடுத்ததும் “என்னை ஒதுக்கறாங்க சார்... மிதிக்கறாங்க சார். நான் போனா பேச்சை நிறுத்திடறாங்க” என்று கானா பாட ஆரம்பித்தார் இசை. ஆனால் விசாரணையின் பின்னால் ‘இசைதான் அப்படி ஒதுங்கிப் போகிறார்’ என்பதாக தெரிய வருகிறது. அடித்தட்டு சூழலில் இருந்து பிக்பாஸ் போன்ற மேடைக்கு வரும் போது ஒருவருக்குள் தாழ்வுணர்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் இசைவாணி தனது தாழ்வுணர்ச்சியை கைவிட்டு இயல்பாகப் பழகத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். “டீ போட பால் இல்லை” என்று ஒருவர் சொன்னதற்கெல்லாம் சலித்துக் கொள்ளக்கூடாது.

நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டார்கள். இந்தத் தகவலை சொல்வதற்காக அவர்கள் இருவரையும் தன் உரையாடலில் அநாவசியமாக இழுத்து வந்த கமல், சுற்றி வளைத்து இதைச் சொன்னார். மீதமிருந்தவர்களை ஐந்து ஜோடிகளாக பிரிந்து அமரச் சொன்னவர், அந்த ஜோடிகளில் ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டதை வரிசையாக சொன்னார். இசைவாணி, மதுமிதா, சிபி, ஐக்கி மற்றும் அபினய் ஆகியோர் காப்பாற்றப்பட்டார்கள்.

ஆக மீதமிருக்கும் ஐவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். ஆனால் இதன் முடிவு ஏற்கெனவே கசிந்து விட்டது. புகழை ‘நாடி’ பிக்பாஸிற்கு வந்தவர்தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுகிறாராம். (எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்-ன்ற மாதிரி இதுல என்ன சஸ்பென்ஸ்).

‘இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேத்தான் பார்க்கப் போறீங்க” என்று சவடால் விட்டுக் கொண்டிருக்கும் ஆசாமியை அடுத்த வாரமாவது நல்லா கவனிச்சு அனுப்புங்க மக்களே… (முடியல!).