Published:Updated:

பிக்பாஸ் 44 : ‘கலக்கப்போவது யாரு?’ டாஸ்க்; தலைவரான பிரியங்கா; மீண்டும் வெடித்த இசை-தாமரை பஞ்சாயத்து

பிக்பாஸ் பிரியங்கா

யாருடைய குடுவையில் குறைந்த சாயம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர். இதுதான் விதிமுறை.

பிக்பாஸ் 44 : ‘கலக்கப்போவது யாரு?’ டாஸ்க்; தலைவரான பிரியங்கா; மீண்டும் வெடித்த இசை-தாமரை பஞ்சாயத்து

யாருடைய குடுவையில் குறைந்த சாயம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர். இதுதான் விதிமுறை.

Published:Updated:
பிக்பாஸ் பிரியங்கா

பல திரைப்படங்களில் இது போன்ற காட்சியைப் பார்த்திருப்போம். பாவப்பட்ட கதாபாத்திரம் ஒன்று படத்தின் முக்கால்வாசி வரை அனைவராலும் கேலியாக பார்க்கப்படும். ஆனால் ஒரு கட்டத்தில் அந்தப் பாத்திரம் ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ பாணியில் பொங்கியெழும்போது பார்வையாளர்களுக்கு மிகுந்த பரவசமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். நேற்றைய எபிசோடில், தலைவர் போட்டியின்போது தாமரை நடத்திய குறுக்கு விசாரணை அப்படியொரு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. ‘இந்த கேம் புரியாம விளையாடறாங்களோ?!” என்று இதுவரை தாமரையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது போய் ‘அடடே.. இவளோ தெரிஞ்சிருக்கா?!” என்று ஆச்சரியப்பட முடிந்தது. இதே பாதையில் சென்றால் தாமரை நிச்சயம் மலரும். (அதாவது பிக்பாஸிற்குள்).

எபிசோட் 44-ல் என்ன நடந்தது?

‘நீர்’ ஆற்றலின் வாரம் என்பதால் ‘தண்ணி கருத்திருச்சு’ என்கிற கும்மாளமான பாட்டைப் போட்டு மகிழ்ந்தார் பிக்பாஸ். மற்ற ஆளுமைகளுக்கு கிடைக்காத பல சலுகைகள் வருணிற்கு இந்த வாரத்தில் கிடைத்தன. அந்த வீட்டின் நீர்க்கட்டுப்பாடு முழுக்க அவருக்கு கிடைத்தது. அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நீரை நிறுத்த முடியும். மக்களுக்கு வேண்டுமென்றால் வெளியேயுள்ள பைப்பின் மூலம் பக்கெட்டில் பிடித்து எடுத்து வர வேண்டுமாம். இதெல்லாம் கூட ஓகே. ஆனால் ‘பல்விளக்கி விட்டு நிரூப்பிடம் சான்றிதழ் வாங்க வேண்டும்’ என்பதெல்லாம் சற்று ஓவர். பிரியங்கா பாத்ரூமில் இருக்கும்போது வேண்டுமென்றே தண்ணீரை நிறுத்தி கலாட்டா செய்தார் வருண். உள்ளேயிருந்து பிரியங்கா ‘லபலபலப’வென கத்தும் சத்தம் கேட்டதும் மிஷன் சக்சஸ் என உற்சாகமானார். கூட இருந்த அக்ஷராவிற்கு வருணை விடவும் குஷியாக இருந்தது.

வருண்
வருண்

‘கலக்கப்போவது யாரு?’ என்கிற தலைப்பில் இந்த வார தலைவருக்கான போட்டி நடந்தது. பிரியங்கா, சிபி, ஐக்கி, நிரூப் ஆகியோர் வேட்பாளர்கள். ‘யார் தலைவராகக்கூடாது’ என்று ஒருவர் நினைக்கிறாரோ, அவரின் குடுவையின் நீரில் சாயத்தை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றாதவாறு போட்டியாளர் தடுக்கலாம். தன்னுடைய தனித்தன்மை, குணாதிசயம், ஏன் அடுத்தவருக்கு ஊற்ற வேண்டும்? போன்றவற்றை விளக்கி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். யாருடைய குடுவையில் குறைந்த சாயம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர். இதுதான் விதிமுறை.

அக்‌ஷரா
அக்‌ஷரா

இந்தப் போட்டியில் நடந்த விஷயங்களை வைத்து சிலவற்றை அனுமானிக்க முடிகிறது. ‘பொம்மை’ டாஸ்க்கில் ஐக்கிக்கும் நிரூப்பிற்கும் ஏற்பட்ட கூட்டணி, பிரியங்காவின் கண்களை உறுத்த ஆரம்பித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் ‘ஜால்ரா’ என்கிற பட்டத்தை ஐக்கி தந்தது வேறு உள்ளூற அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றவர்கள்கூட மறந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் ‘எனக்கு ஜால்ரா பட்டம் கொடுத்தாங்க’ என்பதை பிரியங்காவே மீண்டும் மீண்டும் கூறி நினைவுப்படுத்தி விடுகிறார். மேலும் இமான், ஐக்கியைத் தூண்டிவிட்டதாகவும் பிரியங்கா கருதுகிறார். “தனக்கு வெத்துவேட்டு பட்டதை பிரியங்கா கொடுத்ததால் பதிலுக்கு ‘ஜால்ரா’ பட்டத்தை ஐக்கி தந்தது சிறப்பு" என்று அண்ணாச்சி கூறியது பிரியங்காவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தலைவர் போட்டி என்பது பிரியங்காவிற்கும் நிரூப்பிற்கும் இடையில்தான் என்பது போன்ற காட்சிப்பிழை ஏற்பட்டது. அந்தளவிற்கு இருவர் மட்டுமே அதிகம் பேசினார்கள். வழக்கத்திற்கு மாறாக ஐக்கியும் அதிகமாகப் பேசியது ஆச்சரியமே. ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் இயலாமல் சோர்ந்து போய் “என்னுடையதுல ஊத்துங்க” என்று சரணடைந்தார். சிபிக்கு இந்தப் போட்டியில் விருப்பமே இல்லை போலிருக்கிறது. “ஏன் அடுத்தவருக்கு ஊற்ற வேண்டும்?” என்று தலைவர் போட்டிக்கு நிற்பவர் பேசியாக வேண்டும். ஆனால் ‘நான் அப்படிப் பேச மாட்டேன்’ என்று மறுத்து விட்டதால் போட்டி திசைமாறி விட்டது. இந்த விஷயம் நிருப்பின் எரிச்சலை ஏற்படுத்தியது.

போட்டி பிரசாரத்தின் போது ஐக்கி மறுபடியும் ‘ஜால்ரா’ என்கிற வார்த்தையை தன்னிச்சையாக சொல்லி விட பிரியங்காவிற்கு எரிச்சல் ஏற்பட்டது. எனவே சர்காஸ்டிக்காக அதை குத்திக் காண்பித்துக் கொண்டே இருந்தார். “ஐக்கி இப்படி தலைகீழாக மாறுவாங்கன்னு எதிர்பார்க்கலை. இந்த மாதிரி ஆளை நம்பி எப்படி வாக்களிப்பீங்க?” என்பது அவரின் கேள்வி.

பிரியங்காவிற்கும் நிரூப்பிற்கும் இடையில் தொடரும் பாவனையான சண்டை நமக்கே எரிச்சல் ஊட்ட ஆரம்பித்திருக்கிறது. எனில் அந்த வீட்டில் வாழும் போட்டியாளர்களும் எரிச்சலாகவே கருதியிருப்பார்கள். (இதையேதான் நாமினேஷன் சமயத்தில் சிபி சொன்னார்). “தேவா..டா.. சூர்யா..டா” என்கிற நட்பு இவர்களுக்குள் இருக்குமாம். ஆனால் போட்டி என்று வந்தால் குடுமியைப் பிடித்துக் கொள்வார்களாம். “நீங்க நம்பலைன்னாலும் அதான் நெஜம்’ என்று பிரியங்கா மல்லுக்கட்டினாலும் நமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

தாமரை வாக்களிக்க வந்தபோது நடந்த விஷயங்கள் சுவாரஸ்யம். நிரூப்பிடம் சென்ற அவர் “பிரியங்கா ஜால்ரா அடிப்பது உறுதியா?” என்று கேட்க, நிரூப் ‘ஆம்’ என்றார். பிறகு பிரியங்காவிடம் சென்ற தாமரை “அவனை மட்டும்தானே நீங்க நம்பறீங்க.. அப்ப அவன் சொல்றது உண்மையாத்தானே இருக்கணும்?” என்று கிடுக்கிப்பிடி போட்டது அட்டகாசமான செக்மேட். ஆனால் ‘நட்பு வேறு, ஆட்டம் வேறு’ என்பதை நீட்டி முழக்கிச் சொன்னார் பிரியங்கா. என்றாலும் பிரியங்காவின் குடுவையில் சாயத்தை ஊற்றி ஆச்சரியப்படுத்தினார் தாமரை.

சிபியைத்தான் டார்க்கெட் செய்ய வேண்டும் என்பதை அக்ஷரா முன்பே முடிவு செய்துவிட்டார் என்பது வெளிப்படை. என்றாலும் பாவனையாக மற்றவர்களிடம் விசாரித்து விட்டு, சிபியிடம் எதையும் பேசாமல் அவரின் குடுவையில் ஊற்றிச் சென்றார். நிரூப் தன்னை “மேடம்’ என்று அழைத்ததற்காக இவர் சந்தோஷப்பட்டது நல்ல நடிப்பு.

கலக்கப்போவது யாரு டாஸ்க்
கலக்கப்போவது யாரு டாஸ்க்

சிபி ஏற்கெனவே தலைவராக இருந்திருக்கிறார். நிரூப்பிடம் நாணயம் இருக்கிறது. நிரூப் தன் ஆளுமையையும் ஏற்கெனவே பயன்படுத்தியிருக்கார். பிரியங்காவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர்தான் பிக்பாஸ் வீட்டின் நிரந்தர தலைவர் என்பது மாதிரியே நடந்து கொள்வார். எனவே இந்த தலைவர் வாய்ப்பு ஐக்கிக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இப்படியாக சிலர் யோசித்தார்கள். ஆனால் ஒற்றுமையான சிந்தனை நிகழாததால் இது நடக்கவில்லை. சிபியின் மீது அக்ஷரா கொண்டிருக்கும் காண்டைப் போலவே பிரியங்காவின்மீது இமானுக்கு உள்ளூற எரிச்சல் இருக்கிறது. அவர் எல்லோரிடமும் விசாரித்து விட்டு பிரியங்காவின் குடுவையில் ஊற்ற “இனிமே எதுக்கும் உங்களை நம்ப மாட்டேன்” என்று தன் எரிச்சலைக் காட்டினார் பிரியங்கா.

தலைவர் போட்டி நடந்து முடிந்தாலும் எண்ணிக்கை சமநிலையில் அமைந்ததால் மீண்டும் நடத்தப்பட்டது. முதன்முறை நிரூப்பிற்கு ஊற்றிய அபினய், இம்முறை அதையே நேர்மையாக பின்பற்றினார். பாவனியும் ஐக்கியின் குடுவையிலேயே ஊற்றினார். ஆனால் இரண்டாம் சுற்றில் பலர் மாற்றிக் கொண்டார்கள். இமான் இந்த முறை ஐக்கியை தேர்ந்தெடுத்தார். இந்த முறையும் தாமரையின் குறுக்கு விசாரணை சிறப்பாக நடந்தது. “உங்க நட்பும் கேம்தானா?” என்கிற அவரின் அதிரடியான கேள்விக்கு வழக்கம்போல் அரைமணி நேரம் விளக்கம் தந்தார் பிரியங்கா. நிரூப்பும் மல்லுக்கட்டினார். இவர்களின் சண்டையில் நொந்துபோன ஐக்கி “என்னுதுல ஊத்துங்க” என்று தானாக சரண்டர் ஆனதால் அவருடைய குடுவையில் ஊற்றினார் தாமரை.

கடைசியில் வந்தவர் வருண். முதல் சுற்றில் இவர் நிரூப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் இம்முறை வருண் தேர்ந்தெடுக்கும் வாக்குதான் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்கு என்பதால் “சிபி.. நீ ஏற்கெனவே தலைவரா இருந்திருக்க” என்கிற காரணத்தைச் சொல்லி அவரின் குடுவையிலேயே ஊற்ற.. பிரியங்கா வெற்றி பெற்று தலைவர் ஆனார்.

பிரியங்காவிடம் அபாரமான பேச்சுத்திறமை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எத்தனை பேர் வந்தாலும் சோர்வே அடையாமல் தன்னுடைய தரப்பை சலிக்காமல் சொல்வதற்கு அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். அடுத்தவரை கன்வின்ஸ் செய்யும் திறமையும் அவரிடம் நிறைய இருக்கிறது. ஆனால் விளையாட்டையும் தனிப்பட்ட விஷயங்களையும் கலப்பது முரண். “நீ எனக்கு எதிராக வாக்களித்தால் பிறகு என்னிடம் வந்து பேசக்கூடாது” என்பது போல் எமோஷனல் பிளாக்மெயிலை செய்கிறார். “அப்புறமா வந்து. சின்னப்பிள்ளேன்னு என்கிட்ட நிக்கக்கூடாது” என்று தாமரையிடம் அவர் சொன்னது ஓர் உதாரணம்.

பிரியங்கா
பிரியங்கா

தாமரை அதிரடியாக பேசியபோது வருண், அக்ஷரா உள்ளிட்ட சிலர் கைத்தட்டினார்கள். இதை தனக்கு எதிரான சமிக்ஞையாக எடுத்துக் கொண்டு பிரியங்கா கோபப்பட்டது அவரது பேச்சில் தெரிந்தது. எனவே “அதுக்காக நாங்க கைத்தட்டலை. தாமரையால இப்படியெல்லாம் பேச முடியுமான்னு எங்களுக்கு ஆச்சரியமா இருந்தது” என்று விளக்கம் அளித்து தலைவரை சமாதானப்படுத்திக் கொண்டார் வருண். “நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த வாரம் வீட்டை சிறப்பா நிர்வகிக்கலாம்’ என்று வருணும் பிரியங்காவும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

தலைவர் போட்டியை பறிக்க நாணயத்தை எவரும் பயன்படுத்த முன்வரவில்லை. தாமரையின் அதிரடி பேச்சிற்கு இமானும் ஆச்சரியப்பட்டார். “அப்படி அவ பேசுவான்னு எனக்கு முன்னமே தெரியும்” என்று பெருமிதப்பட்டார் அக்ஷரா. “நிரூப் நட்புதான் முக்கியம்-னு பிரியங்கா சொல்றாங்க. அப்ப நாமெல்லாம் என்ன தக்காளி தொக்கா?” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார் இமான். “பிக்பாஸ் முடிஞ்சப்புறம் யார் கூடயும் நான் தொடர்பில் இருக்க மாட்டேன்” என்பதை தன் பிரத்யேகமான ‘லைலா’ சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார் அக்ஷரா. நட்பிற்கும் சண்டைக்கும் இடையில் நிகழும் பிரியங்கா – நிரூப் உறவு மற்றவர்களுக்கு நெருடலாகவும் காமெடியாகவும் எரிச்சலாகவும் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

தாமரை
தாமரை

புதிய தலைவராக பிரியங்கா பதவி ஏற்ற அடுத்த நிமிடமே வீட்டில் ஏழரை வெடிக்க ஆரம்பித்தது. ‘கிச்சன் பொருட்களை நிர்வகிக்க அபினய் மற்றும் இசையை நியமிக்கலாம்’ என்பது பிரியங்காவின் கருத்து. இருவருக்குமே இதில் முன்அனுபவம் இருந்ததால் இது சரியான தேர்வே. “எதுக்கு இசையே மறுபடியும்?. ஆளை மாத்திப் பார்க்கலாம்” என்று இமான் பரிந்துரைத்தார். எனவே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ‘ஒகேதான்’ என்று முடிவாகியது.

“அக்கா. பொருட்களை அதிகம் பயன்படுத்தாதீங்க..” என்று தன்னுடைய ஆளுமையின்போது இசை, தாமரையிடம் சொல்லிக் கொண்டிருந்த காட்சிகளை முன்பே பார்த்தோம். மீண்டும் அதே பிரச்சினை வருமா என்று எண்ணிக் கொண்ட தாமரை “அஞ்சு தக்காளி வேணுமின்னா. மூணு தக்காளி கொடுப்பீங்களா?” என்று தெளிவு ஏற்படுத்திக் கொள்வதற்காக கேட்டது பிரச்னையானது. இது தன்னைத்தான் குறிக்கிறது என்பதால் இசை உள்ளூற கோபமடைந்தார்.

“எதுக்கு இசையை மறுபடியும் நியமிக்கிறீங்க?...அப்புறம் அந்த பிள்ளையை யாராவது நோண்டுவாங்க..’ என்று இமான் மறுபடியும் ஆட்சேபிக்க “சிபி + அபினய்’ என்கிற கூட்டணி மாற்றம் உருவானது. இதை ஒப்புக் கொண்ட இசை, “ரொம்ப நன்றிக்கா.. மத்தவங்க என்ன நெனக்கறாங்கன்னு இதன் மூலம் எனக்கு தெரிய வந்தது” என்று ஆரம்பிக்க, தாமரை இதற்கு விளக்கம் கொடுக்க முன் வர “யம்மா.. சாமி.. உன் கிட்ட பேச விருப்பமில்ல. ஆளை விடு” என்பது போல் இசை கையெடுத்து கும்பிட, இந்த உடல்மொழி தாமரையை கோபப்படுத்திவிட்டது. தாமரையின் குரல் வழக்கம் போல் உயர ஆரம்பிக்க “உனக்கு மேல எனக்கும் கத்தத் தெரியும். அது ஏன் என் கிட்ட மட்டும் கத்திப் பேசறீங்க. இதெல்லாம் என் கிட்ட வேணாம்” என்று கோபமடைந்தார் இசை.

ரேஷன் தொடர்பாக தெளிவுப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன்தான் தாமரை கேட்டார் என்றாலும் இவருக்கும் இசைக்கும் உள்ள முன்விரோதம்தான் இந்த மோதலுக்கு காரணம் என்பது வெளிப்படை. இது மட்டுமல்லாமல், கமலின் விசாரணை நாளில் “மூஞ்ச காண்பிச்சு சோறு போடறாங்க” என்று தாமரை அளித்த புகார் வேறு இசையை ஆத்திரப்படுத்திவிட்டது. தாமரையை பிரியங்கா ஒருமாதிரியாக சமாதானப்படுத்தினாலும் இந்த நெருப்பு உள்ளூற அடங்காமல்தான் இருந்தது.

இசை
இசை

நாமினேஷன் சடங்கு துவங்கியது. ‘இரண்டு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்’ என்பதுதான் மரபு. ஆனால் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ‘மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்’ என்று மங்காத்தா ஆட்டம் ஆடினார் பிக்பாஸ். ஆனால் இந்த மாற்றத்தை கடந்த முறையைப் போல் அவர் சபையில் அறிவிக்கவில்லை. போட்டியாளர்கள் தனித்தனியாக வாக்களிக்க வெளியே வந்த போது அறிவிக்கப்பட்டிருக்கலாம். எனவே “மூணாவதா.. யாரை சொல்றது,’’ என்று போட்டியாளர்கள் குழம்பி வாக்களித்தார்கள்.

அபினய்
அபினய்

யாரை நாமினேட் செய்கிறாரோமோ அவரின் புகைப்படத்தில் கறுப்பு ஸ்பிரே அடிக்க வேண்டும். எல்லோருமே புகைப்படத்திலுள்ள முகத்தின் மீது கொலைவெறியுடன் பெயிண்ட் அடித்தார்கள். ஆனால் அபினய் மட்டும் பெருக்கல் குறியால் அடித்தது வித்தியாசமாகவும் நாகரிகமாகவும் இருந்தது. “இசை என்னை யூஸ் பண்ற மாதிரி இருக்கு” என்று காரணம் சொன்னார் வருண். (அப்ப அக்ஷரா?!). இமானை ‘அண்ணாச்சி அண்ணா” என்று புதுமையாக அழைக்கிறார் அக்ஷரா. இரண்டுமே ஒரே பொருள்தான் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லலாம்.

நாமினேஷன்
நாமினேஷன்

“எப்பவும் காமிரா கிட்ட பேசற பொண்ணை நம்பாதீங்க” என்பது போல் தலைவர் போட்டியின் போது ஐக்கியைப் பற்றி பிரியங்கா சொன்னார். எனவே தன்னுடைய நாமினேஷனை முடித்து விட்டு திரும்பிய ஐக்கி “கேமிரா முன்னாடிதான் பேசுவேன். அது என் விருப்பம்” என்று பிடிவாதமாக காமிரா முன் சொல்லி விட்டுச் சென்றார். “தலைவர் ஆட்டத்தை கெடுத்துட்டான்” என்கிற காரணத்தைச் சொல்லி சிபியை நாமினேட் செய்தார் நிரூப். “என்ன முயன்றாலும் அக்ஷரா கிட்ட ஒட்ட முடியலை. அவங்க பேச மறுக்கிறாங்க. அப்ப நானும் அப்படித்தான் இருப்பேன்” என்கிற காரணத்தைச் சொல்லி அவரை நாமினேட் செய்தார் பாவனி.

இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றவர்களின் முடிவுகள் வெளிவந்தன. ஐக்கி, பாவனி, சிபி. நிரூப், இமான், அக்ஷரா, இசை, தாமரை, மற்றும் அபினய்.

பிரியங்கா தலைவர் என்பதால் அவருக்கு வாக்களிக்க முடியாது. ஆக இந்த வாரம் தப்பிப் பிழைத்தவர்கள் ராஜூ மற்றும் வருண். வருணிற்காவது ஒரு வாக்கு வந்தது. ஆனால் ராஜூவை யாருமே நாமினேட் செய்யவில்லை. ‘எப்படியும் மக்கள் காப்பாத்திடுவாங்க” என்று நினைத்தார்களோ என்னமோ. “இப்பத்தானேடா.. தப்பிச்சு வந்தேன். அதுக்குள்ளயா?” என்கிற விரக்தியான சிரிப்பைத் தந்தார் அபினய்.

பாவனி
பாவனி

இசையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக “எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை. வீட்டுக்குப் போறேன்” என்று அனத்த ஆரம்பித்த தாமரையை சமாதானப்படுத்தினார் பிரியங்கா. “அவங்க என்ன காரணத்திற்காக கேட்டாங்க தெரியுமா. இதுக்கு முன்னாடி உங்களுக்குள்ள ஏதாவது நடந்திருக்கும். அதனால்தான்” என்று தாமரைக்கு ஆதரவாக இசையிடம் சொல்லிக் கொண்டிருந்தார் இமான். “என் கிட்ட மட்டும் ஏன் கத்தறாங்க.. அன்னிக்கு விரதம் இருந்துட்டு கமல் சார் கிட்ட ‘எனக்கு சாப்பாடு போடலைன்னு சொல்லியிருக்காங்க.. இது சரியா,?” என்று வருத்தம் அடங்காமல் பேசினார் தாமரை.

“நான் சத்தமா பேசினாலும் நியாமாத்தான் பேசுவேன்” என்று இரவு சமயத்திலும் சிபியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் தாமரை. அவருக்கு சிபி ஆறுதல் சொல்லும் காட்சியோடு எபிசோட் நிறைவடைந்தது.

இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யாராக இருக்கும்? வாரக்கடைசியில் இணையத்தில் லீக் ஆவதற்கு முன் யூகியுங்கள். அதை கமெண்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்களேன். வாரத் துவக்கத்திலேயே இந்த ஆட்டத்தை ஆடிப் பார்ப்போம்.