Published:Updated:

பிக் பாஸ் 42: "உங்களுக்கெல்லாம் டாஸ்க் புரியுதா, இல்லையா?" நொந்துகொண்ட கமல்; காப்பாற்றப்பட்ட ராஜூ!

பிக் பாஸ்

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல் ‘லக்ஸரி பட்ஜெட்டை தியாகம் செய்த’ நிரூப்பின் நற்பண்பை பாராட்டிய கையோடு "பொம்மை டாஸ்க்கில் நிரூப் விளையாடிய விதம் யாருக்குப் பிடிக்கவில்லை?” என்று ஆரம்பத்திலேயே பஞ்சாயத்தில் புழுதியைக் கிளப்பினார்.

பிக் பாஸ் 42: "உங்களுக்கெல்லாம் டாஸ்க் புரியுதா, இல்லையா?" நொந்துகொண்ட கமல்; காப்பாற்றப்பட்ட ராஜூ!

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல் ‘லக்ஸரி பட்ஜெட்டை தியாகம் செய்த’ நிரூப்பின் நற்பண்பை பாராட்டிய கையோடு "பொம்மை டாஸ்க்கில் நிரூப் விளையாடிய விதம் யாருக்குப் பிடிக்கவில்லை?” என்று ஆரம்பத்திலேயே பஞ்சாயத்தில் புழுதியைக் கிளப்பினார்.

Published:Updated:
பிக் பாஸ்

‘சில நாள்களில் அதிரடியாகச் செயல்பட்டாலும் பல நாள்களில் கமல் பூசி மெழுகிச் சென்று விடுகிறார்’ என்கிற புகார் அவர்மீது எப்போதுமே இருக்கிறது. கமல்தான் இப்படி என்று பார்த்தால் ‘அவருக்கு நாங்கள் சளைத்தவர்கள்’ இல்லை என்று போட்டியாளர்களும் பெரும்பாலான நேரங்களில் முழு டைனோசரை பிரியாணியில் மறைக்கிறார்கள். “ஏதோ பிரச்னையாமே?” என்று விசாரணை நாளில் கமல் பூடகமாக எடுத்துக்கொடுக்கும் போது சட்டென்று பற்றிக் கொள்ளாமல் ‘சண்டையா... எங்க. எங்க. நாங்க பார்க்கலையே?’ என்று அவர்கள் நடிக்கும்போது கமலுக்கு எரிச்சல் வருகிறதோ, இல்லையோ, பார்வையாளர்களுக்கு நிச்சயம் எரிச்சல் வரக்கூடும். வாரம் ஆறு நாள்கள் உக்கிரமாகக் குடுமிப்பிடிச் சண்டை போட்டுவிட்டு விசாரணை நாளில் மட்டும் ‘ஹேஹே...’ என்று அவர்கள் சிரித்து மழுப்புவதற்குக் காரணம் சபை நாகரிகம் மட்டுமல்ல. அடுத்த நாள் நாமினேஷன் சடங்கு இருக்கிறது என்பதுதான் முக்கிய காரணம். யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வோ, என்னமோ.

பிக் பாஸ்
பிக் பாஸ்

நேற்றைய எபிசோடிலும் அப்படியேதான் நடந்தது. ‘ஆணாதிக்க சூழலில் பெண்களின் அதிகாரம் எடுபடவில்லை’ என்கிற தலைப்பை கமல் எடுத்துக் கொடுக்க, பெரும்பாலான பெண்களே கள்ள மெளனம் சாதித்ததோடு மட்டுமல்லாமல், இங்கு பாலினரீதியான பாரபட்சம் நிச்சயம் இல்லை என்று சத்தியம் செய்தார்கள். பிக் பாஸ் என்பது சமூகத்தின் ஒரு சிறுபகுதி என்னும் போது அங்கு மட்டும் எப்படி ஆணாதிக்கம் இல்லாமல் போகும்? பாவனி, இசை ஆகியோர் மட்டுமே சபையில் தங்களின் பிரச்னையை சிறிது முனகினார்கள்.

தாமரை தலைவராக இருந்த போது ‘என் பேச்சை யாரும் கேட்க மாட்டேன்றாங்க” என்று அனத்தினார். மதுமிதா, இசை, பாவனி ஆகியோருக்கும் இதே பிரச்னைதான். ஆனால் சிபி, நிரூப் ஆகிய இருவரும் ஆட்சி செய்த நாள்களில் இந்தப் பிரச்னை அதிகம் எழவில்லை. எனில் என்ன காரணம்? ‘இங்கு பாலின பாரபட்சம் இல்லை’ என்று தாமரையே மறுக்கிறார். அறியாமை காரணமாக ஆணாதிக்க சூழலுக்கு பெண்களே துணை நிற்கிறார்கள் என்பதுதான் வெளிசமூகத்திலும் நிகழ்கிறது.

பாவனி, இசை
பாவனி, இசை

எபிசோடு 42-ல் என்ன நடந்தது?

தண்ணீர் ஊற்றும் தண்டனை சடங்கு இமானிற்குத் தொடர்ந்தது. “உங்களை பழைய பன்னீர் செல்வமா பார்க்கணும்” என்று அபினய் சொல்ல “ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணாச்சி. நான் உங்க பொண்ணு மாதிரி” என்று கலக்கத்துடன் நீர் ஊற்றினார் இசை. நாமினேஷன் செய்தவர்களே இங்கு சென்டிமென்ட் ஆவது வேடிக்கை. இதுவும் விளையாட்டின் ஒரு பகுதிதானே? தண்ணீர்தானே ஊற்றுகிறார்கள்? நீர் வீணாகி விடக்கூடாது என்று தாமரை மேலும் மேலும் ஊற்றியது வேடிக்கை. “சரிப்பா... மோட்டார் ஆன் பண்ணி இன்னமும் ரெண்டு பக்கெட் தண்ணி கொண்டு வாங்க. அப்படியே குளிச்சிடறேன்” என்று இந்தத் தண்டனையை இயல்பாக ஏற்றுக் கொண்டார் இமான். ராஜூ போல அடக்கி வைத்த கோபத்தை கமுக்கமாக வெளிப்படுத்தவில்லை.

ராஜுவிற்கு தண்டனை கிடைத்தது பற்றி பலர் வருத்தப்படுவது போல் தெரிகிறது. இதுவும் விளையாட்டின் ஒரு பகுதிதான். “ஆம்... நான் முகமூடி அணிந்து விளையாடுகிறேன். எனக்கு நிறைய கோபம் வரும்” – இது ராஜுவைப் பற்றி வேறு யாரோ சொன்னதல்ல. அவரே தன்னைப் பற்றி முன்னர் சொன்னது. எனில் அவரது தனித்தன்மையை இழந்து விளையாடுகிறார் என்பது உண்மைதானே? ராஜூ ஒரு திறமையான ஆட்டக்காரர் என்பதும் நகைச்சுவையின் மூலம் சரியான விமர்சனங்களை வைத்து விடுகிறார் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் பல சமயங்களில் பாதுகாப்பாகவே வண்டியை ஓட்டுகிறார் என்பதை நாம் கவனிக்கிறோம்தானே? தாமரையின் விவகாரத்தில் மட்டும் ஆவேசமாக தலையிட்டவர், மற்றவர்களின் பிரச்னைகளில் எதற்குமே வரவில்லையே? ஒரு குடும்பத்தில் இப்படி ஒருவர் எல்லாவற்றையும் ஜாலியாக ஹாண்டில் செய்து கொண்டு ஒதுங்கிப் போனால் நாம் அவர் மீது விமர்சனம் வைப்போம்தானே? இதையேதான் சக போட்டியாளர்கள் சொன்னார்கள். தன்னை ஒளித்து வைத்துக் கொண்டு ஒருவர் விளையாடும் போது மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்டுவது இயல்பானதுதான்.

தாமரை
தாமரை

அடுத்த நாள் பஞ்சாயத்தில் தங்கள் பிரச்னை வரக்கூடாது என்று நினைத்தார்களோ, என்னவோ, அக்ஷராவும் சிபியும் உரையாடி தங்களின் பிரச்னையை தீர்த்துக் கொள்ள முயன்றார்கள். கோபத்தில் சிபி சொன்ன கெட்டவார்த்தையும் அதற்கு அக்ஷராவின் ஆக்ரோஷமான எதிர்வினையும் தொடர்பான பிரச்னை அது. ஆனால் சபை விசாரணையில் இதை கமல் சரியாகப் பிடித்து விட்டார். “வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி கேட்கறேன். யாருன்னு புரியுதா?” என்று கமல் சூசகமாகச் சுட்டிக் காட்டியும் கூட அக்ஷரா சிரிப்புடன் மெளனம் சாதித்ததால், “இந்த மாதிரி வழக்கையெல்லாம் நீதிமன்றம் தாமாகவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்” என்று ஆஜரான கமல், சிபியின் கெட்ட வார்த்தை பிரயோகத்தை நாசூக்காகக் கண்டித்தார்.

“டாக்டருக்குப் படிக்கும்போது கெட்ட வார்த்தையெல்லாம் சப்ஜெக்ட் ஆயிடும்” என்று கமலின் தந்தை சொல்வாராம். நல்ல பாயின்ட். “அதுக்காக நீங்க நீங்களா இருக்காதீங்க–ன்னு சொல்லலை. ஒரு கண்ணிய வரம்போடு செயல்படுங்கள்” என்று அறிவுறுத்தினார் கமல். தன் தரப்பில் தவறு இருந்ததால் சிபி இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மெளனமாக இருந்தது புத்திசாலித்தனம்.

ராஜூ தன்னை நாமினேட் செய்தது குறித்து தாமரைக்கு உள்ளூற கோபம். எனவே ‘தனித்தன்மையோடு செயல்படாதவர்கள்’ பிரிவில் இமானோடு சேர்த்து ராஜூவையும் கோத்து விட்டார். எனவேதான் ராஜூவும் பதிலுக்கு ‘செருப்பால அடிச்சுட்டு போ’ என்று தாமரையிடம் ஆத்திரப்பட்டார். இது தொடர்பான உரையாடல் காலையில் நடைபெற்றது. “நான் வெளில போகணும்தானே என்னை நாமினேட் பண்ணே?” என்று ராஜூவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார் தாமரை. “பாவனியை அடிக்கப் போற அளவிற்கு உனக்கு கோபம் வருது. அது இன்னமும் அதிகமாயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. நீ எப்படியும் வெளியே போக மாட்டே. மக்கள் காப்பாத்திடுவாங்க. அதனால்தான் நான் நாமினேட் பண்ணேன்” என்று குழப்பமாக விளக்கம் அளித்தார் ராஜூ.

இதற்கு எதற்கு நாமினேட் செய்ய வேண்டும்? தாமரையிடம் நேரடியாகவே சொல்லியிருக்கலாமே? “அந்தச் சமயத்தில் டக்குன்னு தோன்றியது” என்று ராஜூ சொன்னாலும் அவர் மனதின் உள்ளே அந்த விஷயம் இருந்திருக்கிறது. ராஜூவிற்கு இப்படிச் சில காரணங்கள் இருக்கும்போது தாமரையின் நோக்கிலும் சில காரணங்கள் இருக்கலாம்தானே? இதற்காக ராஜூ கோபப்படுவது முறையற்றது. “மத்தவங்க என்ன பேசறாங்கன்னு பார்க்கறதுல கவனமா இருந்தா என்னால ஜாலியா இருக்க முடியாது” என்கிறார் ராஜூ. கவனமாக இருப்பதும் இந்த விளையாட்டின் ஒரு பகுதிதானே? வெறும் நகைச்சுவை எத்தனை நாளைக்கு காப்பாற்றும்? “ஓ... தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாத்தான் ராஜூவை நாமினேட் செய்தீங்களா?” என்று தாமரையை சபையில் கிண்டல் செய்தார் கமல்.

ராஜூ
ராஜூ

அறிந்தோ, அறியாமலோ இமானின் கிண்டல் பலரின் மனதையும் புண்படுத்தி விடுகிறது என்பதை அவர் அறிய வேண்டும். “எனக்கு நல்ல துணி உடுத்தக்கூட வசதியில்ல” என்று தாமரை அழுதது நெகிழ்வான காட்சி. தாமரையின் அழகைப் பற்றி இமான் முன்னர் அடித்த கிண்டலின் எதிரொலி இது. இமான் உள்நோக்கமில்லாமல் கிண்டல் அடித்திருக்கலாம். ஆனால் ஒருவரின் நகைச்சுவை மற்றவர்களுக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. ‘அடுத்தவர்களை புண்படுத்தாத நகைச்சுவைதான்’ எப்போதும் உயர்வானது. இதையேதான் கமலும் சபை விசாரணையில் வழிமொழிந்தார். “நம்ம நகைச்சுவைக்கு அடுத்தவங்களை ஊறுகாய் ஆக்கி விடக்கூடாது”.

“மற்றவர்கள் பார்க்க நான் மட்டும் எப்படி சாப்பிடுவது?” என்கிற நோக்கில் லக்ஸரி பட்ஜெட்டை நிரூப் தியாகம் செய்தது நல்ல விஷயம். ஆனால் பிரியங்காவிற்கு அந்த இழப்பின் சோகம் போகவில்லை. “வாங்கி வெச்சிருந்தா நாங்க திருடியாவது தின்றிருப்போம்” என்று உணவின் மீதுள்ள தனது அதீதமான பிரியத்தை வெளிப்படுத்தினார். ‘கேமரா இருக்கும் போது மட்டும் நேர்மையாக இருப்போம்’ என்பது பிக் பாஸ் வீட்டில் சாத்தியமில்லை. ‘யாரும் கவனிக்காத போதும் பின்பற்றப்படுவதுதான் நேர்மை’ என்றொரு பொன்மொழி இருக்கிறது. “நான் சும்மா விட்டுடுவேனா. அதை வாட்ச் பண்ணத்தானே என்னை நியமிச்சிருக்காங்க” என்று குரல் கொடுத்தார் அபினய்.

விடிந்தது. ‘என்னை மட்டும் லவ்வு பண்ணு புஜ்ஜி’ என்று ஒலித்த பாடல் பிரியங்கா தொடர்பானது போல. நிரூப் தன்னிடம் மட்டுமே பாசமாக இருக்க வேண்டும் என்கிற அவரது பொசசிவ்னஸை பிக் பாஸ் கிண்டலடிக்கிறார் போல.

பிக் பாஸ்
பிக் பாஸ்

“நான் ரொம்ப இமோஷனல் பெர்சன். இங்க டிப்ரஷன் மேலும் அதிகமாகுது” என்று நிரூப்பிடம் சொல்லி கண்கலங்கினார் மதுமிதா. பாவம், ஏற்கெனவே சொன்னது போல் ரத்தபூமியில் உலவும் எல்கேஜி குழந்தை இவர். இந்த வாரம் மதுமிதாதான் வெளியேற்றப்படுகிறார் என்கிற தகவல் கசிந்திருக்கிறது. எனில் இது மதுமிதாவிற்கு மட்டுமல்ல, ஆட்டத்தின் சுவாரஸ்யத்திற்கும் நல்லதே. 'ஜெர்மனியின் செந்தேன்மலர்' வெளியேறி நிம்மதியாக சுதந்திரக்காற்றை சுவாசிக்கட்டும்.

“நானாக இருந்தால் விஷபாட்டில் டைட்டிலை பாவனிக்குத்தான் கொடுத்திருப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் ராஜூ. சமயத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி மாற்றிப் பேசுகிறாராம். பாவனி தன் ஆளுமையை கடுமையாக செயல்படுத்தியதின் கோபமா இது? மிக்ஸி விளம்பரம் தொடர்பாக நடந்த ஒரு டாஸ்க்கில் ‘தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது” என்று அக்ஷரா அணி போராடியது. அதில் நியாயம் இருந்ததைப் போல்தான் பட்டது. மற்ற அணிகளை விடவும் அக்ஷரா அணி, தரப்பட்டிருந்த விதிமுறைகளின் படி காய்கறிகளை சரியாக வெட்டியிருந்தார்கள். ஆனால் ‘தேசியக்கொடியை நினைவுப்படுத்தும் நிறக்கலவையில்’ பிரியங்கா அணி அடுக்கி வைத்ததில் நடுவர் சிபி உற்சாகமாகி விட்டார்போல. நடுவரின் தீர்ப்பையே பிக் பாஸ் வழிமொழிந்தார். அதுதான் மரபும் கூட. அக்ஷரா அணியின் கோரிக்கை காற்றில் பறந்தது. (மிக்ஸி போச்சு!).

“ஹப்பாடா, பாவனியோட ஆளுமை இந்த வாரத்தோட முடிஞ்சுதா. தொல்லை ஒழிஞ்சது. அடுத்த வாரம் இன்னொரு வில்லன் வருவார் பாரு...” என்று சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. (அந்த அடுத்த வார வில்லன், வருண்). “வில்லத்தனம்லாம் எனக்கு ஆகாது. நிரூப்பின் ஆளுமை எனக்குப் பிடிச்சிருந்தது” என்பது தாமரையின் அபிப்ராயம். நிரூப் வாரம் ஜாலியாக இருந்ததாம். பாவனியின் வாரம் இம்சையாம்.

அக்ஷரா
அக்ஷரா

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல் ‘லக்ஸரி பட்ஜெட்டை தியாகம் செய்த’ நிரூப்பின் நற்பண்பை பாராட்டிய கையோடு "பொம்மை டாஸ்க்கில் நிரூப் விளையாடிய விதம் யாருக்குப் பிடிக்கவில்லை?” என்று ஆரம்பத்திலேயே பஞ்சாயத்தில் புழுதியைக் கிளப்பினார். ஆனால் அக்ஷராவின் மெல்லிய ஆட்சேபத்தைத் தவிர யாருக்குமே இதில் பிரச்னையில்லை. (அப்ப அங்கு நடந்த உக்கிரமான சண்டையெல்லாம்?!).

“அவனோட கேம் பிடிச்சிருந்தது. அதனால்தான் அந்த ஆட்டம் சுவாரசியமா மாறிச்சி” என்று மனமார பாராட்டினார் ராஜூ. நிரூப் அடாவடியாக செயல்பட்டாலும், நிரூப்பின் ராஜதந்திர உத்தி சிறப்பு’ என்று சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் நான் குறிப்பிட்டிருந்தேன். இந்த விளையாட்டின் அம்சத்தைப் பற்றி, ‘தன் வினை உன்னைச் சுடும்’ என்று வித்தியாசமாக கமல் சுட்டிக்காட்டியது சுவாரஸ்யம்.

நிரூப்பின் வன்முறை பற்றி யாரும் பெரிய புகார் தரவில்லையென்றாலும் கூட “உங்க உயரம் மற்றும் எடைக்கு நீங்க ஆக்ரோஷமா ஆடினா யாருக்காவது அடிபட்டுடலாம். ஜாக்கிரதை” என்று நிரூப்பை கமல் மெலிதாக எச்சரித்தது சிறப்பு. “விளையாட்டில் ஜெயிப்பதை விடவும் அடுத்தவன் வாய்ப்பைத் தட்டிப் பறிக்காமல் இருப்பது முக்கியம்” என்று போகிற போக்கில் கமல் சொன்னது திருவாக்கியம்.

“பாவனியால் தன் அதிகாரத்தை செயல்படுத்த முடிந்ததா?” என்று அடுத்த பஞ்சாயத்திற்கு நகர்ந்தார் கமல். “நிரூப் என்கிற குழந்தை மட்டுமே சற்று அதிகப்படியான குறும்புடன் விளையாடியது. மற்றபடி பெரிய பிரச்னையில்லை” என்று பிரச்னையை அப்படியே மூடி போட்டு மறைத்தார் பாவனி. எனில் அவர் நிரூப்பிடம் அத்தனை நேரம் மல்லுக்கட்டியதற்கு பெயர் என்ன? “ரெண்டு பேருக்கும் நடந்த சண்டையை மறந்துட்டு சிபி மூலமாக அக்ஷராவிற்கு டாஸ்க் கொடுத்தேன்” என்று அம்மணி சொன்னதும் ஒரு திறமையான பொய். மறக்கும் அளவிற்கா அவர்களுக்குள் சண்டை நடந்தது? (என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?).

‘பாவனி பாரபட்சத்துடன் நடந்து கொண்டாரா?’ என்கிற கேள்வியை ஆமோதித்தார் நிரூப். ‘மதுமிதா, அபினய் போன்றவர்களுக்கு மெலிதான தண்டனையும் எனக்கு அதிகபட்ச தண்டனையும் தந்தார்” என்பது நிரூப்பின் புகார். “நிரூப் சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்கறாங்க” என்று இதற்கு விளக்கம் அளித்தார் பாவனி. ஒருவர் ஆரம்பக்கட்டத்திலேயே தண்டனையை ஏற்க மறுத்தால் தண்டனை கூடுதலாகிக் கொண்டே செல்லும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய லாஜிக்தான். நிரூப் அழிச்சாட்டியம் செய்யாமல் இருந்திருந்தால் எளிய தண்டனையோடு முடிந்திருக்கலாம். “ஆளுமை என்பது அடிமைத்தனத்தை உருவாக்குவதற்கு அல்ல. அன்பால் கூட அதை சாதிக்கலாம்” என்று கமல் சொன்ன ஒன்லைன் சிறப்பு. (அன்பே சிவம். அன்பே சிவம்!).

நிரூப்
நிரூப்

“இதெல்லாம் என்ன ஆளுமை? அடுத்த வாரம் வருண் வரப் போறாரு பாருங்க... வீடே தலைகீழாகப் போகுது” என்று ஏற்றி விட்ட பிரியங்கா “என்கிட்ட காயின் இல்லையேன்னு ரொம்ப காண்டா இருக்கு. சுருதி கொடுத்துட்டுப் போன காயினை கொடுங்க சார்” என்று கமலிடம் அவர் கேட்க “அதை நீங்க வெளிய வந்துதான் வாங்கிக்கணும்” என்று கமல் அடித்த கவுன்ட்டர் நல்ல டைமிங். “ஆணியே புடுங்க வேணாம்” என்று காமெடியான எதிர்வினையை பிரியங்கா தந்ததும் சுவாரஸ்யம்.

‘பெண் அதிகாரம் என்றால் அது ஏற்கப்படுவதில்லையா?’ என்கிற சப்ஜெக்ட்டை மீண்டும் அழுத்தமாக எடுத்தார் கமல். “ஆண்கள் யாரும் வாயைத் திறக்கக்கூடாது” என்று சொல்வதின் மூலம் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு தந்தார். இப்போதுதான் இசை எழுந்தார். “ஆமாம் சார். அந்த உணர்வு எனக்கு இருந்துச்சு” என்று சொன்னவர் அதற்காக இமான் அண்ணாச்சியை மேற்கோள் காட்டிவிட்டு அதற்காக ஓர் உதாரண நிகழ்வையும் சொன்னார்.

“எனக்கும் அந்த டவுட் இருந்தது” என்று முன்பு சொன்ன மதுமிதா, இப்போது இசையின் உதாரணத்தை காலி செய்தது முரண். “பாசத்தாலதான் ஐக்கியை பெருக்க வேணாமின்னு அண்ணாச்சி சொன்னாரு” என்று மதுமிதா சாட்சியம் சொன்னார். ஒரு தலைவர் உத்தரவு பிறப்பிக்கும் போது இன்னொருவர் அதில் தலையிடுவது முறையற்றது. இமானின் பாசம் காரணமாக வீடு சுத்தமாக இல்லாமல் இருந்தால் அது ஓகேவா?

பிக் பாஸ்
பிக் பாஸ்

“ஒரு பொம்பளைகிட்ட பொம்மையை ஒளிச்சு வெச்சு வெளையாடறே” என்று நிரூப் கோபத்தில் சொன்ன விவகாரத்தையும் கையில் எடுத்த கமல், அதை அழுத்தமாக ஆட்சேபித்தது சிறப்பு. "இந்திரா காந்தி போன்ற ஆளுமை மிக்க பெண் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்” என்று உதாரணம் சொன்ன கமல், அதற்கு நேரு போன்ற ஆண்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்று சேர்த்துக் கொண்டது அருமையான பாயின்ட். பெண்கள் அதிகாரத்தை நோக்கி நகரும் போது ஆண்கள் பொறாமையில் புழுங்காமல், உதவிகரமாக இருக்க வேண்டும்.

“நாமினேஷன்னா என்னாங்கய்யா?” என்று முதல் சீஸனில் கஞ்சா கறுப்பு கேட்டதைப் போல “Partiality’-ன்னா என்ன?” என்று நெடும் நேரம் விசாரித்துக் கொண்டிருந்தார் தாமரை. இன்னொரு பக்கம் “நான் பாரபட்சமாவா நடந்துக்கறேன்?” என்று ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார் பாவனி. இதற்கிடையில் பாவனியின் ஆளுமை முடிந்த அடுத்த கணமே, அவரின் நாணயத்தை கைப்பற்றும் ஐடியாவில் தாமரை இருக்கிறார்.

“யாருக்கு யார் கைப்பாவை?” என்று கமல் அடுத்து எடுத்த விவகாரத்தில் அனைவருமே அதை மறுத்தனர். ஒருவருக்கொருவர் டீல் போட்டுக் கொண்டு விளையாடுவதை ‘கைப்பாவை’ என்பதாக இசை புரிந்து கொண்டார் போல. நிரூப் – ஐக்கி கூட்டணியின் மீது இசை புகார் சொல்ல, “உங்களுக்கெல்லாம் டாஸ்க் புரியுதா, இல்லையான்னே எனக்கு சந்தேகமா இருக்கு” என்று தலையில் அடித்துக் கொண்டார் கமல். ஒரு டாஸ்க்கிற்காக கூட்டணி அமைப்பது வேறு. பிக் பாஸ் கேம் முழுக்க ஒருவருக்கு ஆதரவாகச் செயல்படுவது வேறு.

“என்னைப் பார்த்து பிரியங்கா பயப்படறாங்கன்னு நெனக்கறேன்” என்று தன் விளக்கத்தின் போது அதிரடியான ஒரு ஸ்டேட்மெண்டை சபையில் இமான் சொன்னது சிறப்பு. இது போன்ற விஷயத்தை ராஜூ நிச்சயம் செய்திருக்க மாட்டார். அதனால்தான் சொல்கிறேன். ராஜூ தனது பாதுகாப்பான ஏரியாவில் இருந்து வெளியே வராமலேயே இந்த ஆட்டத்தை ஆட நினைக்கிறார். இது நிச்சயம் மற்ற போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் ஆட்சேபத்தை ஏற்படுத்தும். இதற்காக அவர் மற்றவர்களை புண்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. துணிச்சலாக ஆடுவது வேறு. அராஜகமாக நடந்து கொள்வது வேறு. ‘வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டை’ என்கிற விதியை ராஜூ கையில் எடுக்கத் தேவையில்லை.

பிக் பாஸ்
பிக் பாஸ்

“ராஜூ தனித்தன்மையுடன் ஆடவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறீர்கள். ஆனால் மக்கள் வேறு செய்தியைச் சொல்கிறார்கள்” என்ற கமல் “அவர் மருந்தை தேன்ல தடவித் தர்றாரு. தேன் மட்டுமே உங்களின் கண்களுக்குத் தெரிகிறது” என்பதையும் சொல்லி ராஜூ காப்பாற்றப்பட்ட செய்தியை அறிவித்தார். எனில் தனது பயணம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை ராஜூ அடையலாம். ஆனால் நெருக்கடி தாங்காமல் தனது பாதுகாப்பு கூடாரத்திலிருந்து வெளியே வந்து அவர் வெடிக்கும் நாள் ஒன்று நிச்சயம் வரும். பிக் பாஸ் வீடு அத்தகைய தன்மையைக் கொண்டது.

“அப்ப... இமானோட கதி? நாளைக்குப் பார்க்கலாம்” என்கிற குறும்பான வார்த்தைகளோடு கமல் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அண்ணாச்சியும் காப்பாற்றப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ‘மதுமிதா வெளியேற்றப்பட்டார்’ என்கிற தகவலும் கசிந்திருக்கிறது.

‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்’ என்றொரு பழமொழி இருக்கிறது. நாற்பது நாள்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் இனிமேல்தான் ஒவ்வொருவரின் புளுகு ஆட்டமும் அம்பலமாகும்.