Published:Updated:

பிக் பாஸ் 48: ஆக்ரோஷமான என்ட்ரி கொடுத்த அபிஷேக்; துள்ளி குதித்த பிரியங்கா, தெறித்து ஓடிய அண்ணாச்சி!

பிக் பாஸ் அபிஷேக்

அபிஷேக்கின் வருகையால் உண்மையாக மகிழ்ச்சியடைந்தவர் பிரியங்கா மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். பலருக்கு உள்ளுக்குள் எரிச்சலும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம்.

பிக் பாஸ் 48: ஆக்ரோஷமான என்ட்ரி கொடுத்த அபிஷேக்; துள்ளி குதித்த பிரியங்கா, தெறித்து ஓடிய அண்ணாச்சி!

அபிஷேக்கின் வருகையால் உண்மையாக மகிழ்ச்சியடைந்தவர் பிரியங்கா மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். பலருக்கு உள்ளுக்குள் எரிச்சலும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம்.

Published:Updated:
பிக் பாஸ் அபிஷேக்

'வைல்ட் கார்ட் என்ட்ரி'யில் உண்மையிலேயே ‘வைல்டாக’ கத்தி அபிஷேக் என்ட்ரி தந்ததுதான் நேற்றைய எபிசோடின் ஆச்சர்யமான மற்றும் அதிர்ச்சியான ஹைலைட். இது ஏற்கெனவே கசிந்த தகவல்தான் என்றாலும் நேற்று உறுதிப்பட்ட போது நமக்கு சற்று சங்கடமாகவே இருந்தது. வைல்ட் கார்ட் என்ட்ரி என்பது ரியாலிட்டி ஷோக்களின் ஒரு அங்கம்தான். என்றாலும் பார்வையாளர்களின் வாக்கின் மூலம் வெளியேற்றப்பட்ட ஒரு நபர், மீண்டும் பின்வாசல் வழியாக உள்ளே வரும்போது மக்களின் வாக்கிற்கு என்னதான் மதிப்பு என்கிற ஆதாரமான கேள்வி எழுகிறது.

இதற்கு மாறாக வேறு ஏதேனும் புதுமுகத்தை உள்ளே கொண்டு வந்திருக்கலாமோ? அபிஷேக்கின் மீள்வரவு நிச்சயம் போட்டியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். என்றாலும் மகிழ்ச்சியடைந்தது போலவே பலர் நடித்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் முன்னர் அபிஷேக் செய்திருந்த ராவடிகள் அப்படி. ஒருவேளை இனிமேல் அவர் சற்று அடக்கி வாசிப்பாரோ?

அபிஷேக்கின் என்ட்ரி ஒருபக்கம் இருக்கட்டும். இதற்கு பிரியங்கா தந்த ரியாக்ஷன் இருக்கிறதே?!.. தேசிய விருது பெறக்கூடிய தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகையை நாம் ரியாலிட்டி ஷோக்களில் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியொரு Stunning performance. பாவம், பாவனியும் இவருக்கு நிகராக சந்தோஷப்பட முயன்று பின்தங்கிப் போனார். (ஆறுதல் பரிசு).

பிக் பாஸ்
பிக் பாஸ்

எபிசோட் 48-ல் என்ன நடந்தது?

நள்ளிரவு. “பசங்களா.. சாப்பிட்ட பாத்திரங்களையெல்லாம் சமர்த்தா கழுவி வெச்சிட்டு வந்து தூங்குங்க” என்று பிரியங்கா அன்பாகத்தான் சொன்னார். ஆனால் ராஜூ இதற்கு செய்த அழிச்சாட்டியமும் விதண்டாவாதமும் இருக்கிறதே?!.

நம் வீடுகளில் கூட இதைப் பார்க்கலாம். இளைய தலைமுறையினர்களில் பலர், வீட்டில் சிறிய பணிகளைச் செய்வதற்கு கூட அப்படி சுணங்குவார்கள். அவர்களுடன் மல்லுக்கட்டுவதை விட நாமே செய்து விடலாம் என்று தோன்றிவிடும். இப்படி மற்றவர்களின் உதவியால் மட்டுமே வளரும் பிள்ளைகள் வருங்காலத்தில் நிறைய சிரமப்படுவார்கள். பெற்றோர்கள் இப்படிப்பட்ட மனோபாவத்தை செல்லம் தந்து வளர்க்கக்கூடாது.

ராஜூ தன் பணிகளை சரிவர செய்வதில்லை என்கிற புகார் ஆரம்பக்காலத்திலிருந்தே இருக்கிறது. இந்த லட்சணத்தில் ‘மக்கும் குப்பை.. மக்காத குப்பைன்னு’ பிரிச்சுப் போடலாம்” என்று விழிப்புணர்வு பிரச்சாரமெல்லாம் ராஜூ செய்திருக்கிறார் போல. ஊருக்குத்தான் உபதேசம். “பெரிய பெரிய பிரச்சினைல்லாம் நடக்கும் போது உன் குரல் இப்படி வரலையே?” என்று இடையில் பிரியங்கா சொன்னது முக்கியமான குறிப்பு.

பிக் பாஸ்
பிக் பாஸ்

ராஜூ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்பதற்காக அவர் மீதுள்ள குறைகளை புறந்தள்ளி விட முடியாது. “இந்த வீட்ல நீ என்னதான் வேலை பார்த்தே.. சொல்லு பார்க்கலாம்..” என்று ஒரு கட்டத்தில் தலைவர் என்கிற பந்தாவில் பிரியங்கா அடித்து ஆட, ராஜூவின் ஈகோ காயப்பட்டு விட்டது.

இதனால் நீண்ட நேரம் பிரியங்காவுடன் வாக்குவாதம் செய்த ராஜூ ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு கத்தி விட்டார் போலிருக்கிறது. . ஆனால் இது ஏனோ ஒளிபரப்பப்படவில்லை. “என் கிட்டயே கத்திட்டே இல்ல” என்று பிரியங்கா சொல்லி அழுவதின் மூலம்தான் இந்தத் தகவல் நமக்குத் தெரிய வருகிறது. (பிக்பாஸ் டீம் ராஜூவின் இமேஜை காப்பாற்ற முயல்கிறதா?!) பிரியங்கா அழுததால், குற்றவுணர்வு கொண்ட ராஜூ, அவரைச் சமாதானப்படுத்துவதற்காக பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். இதுவே தாமரையாக இருந்தால் “சும்மா கண்ணைக் கசக்காதே. எனக்கு கோபம் வரும்” என்று ஹாண்டில் செய்திருப்பார்.

பிறகு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த ராஜூவிடம் ‘”என்னடா பிரச்சினை?” என்று நிரூப் விசாரிக்க “இந்த சின்னக் குடுவையோட சைஸ்தான் பிரச்சினையே. அது கூட இல்லை” என்றார். எனில் இவரே அதை வளர விட்டிருக்கத் தேவையில்லையே?! பிரியங்காவின் அழுகையைக் கண்டதும் “இதுவரைக்கும் நான் வேலை பண்ணலைதான். நாளைல இருந்து ஒழுங்கா பண்றேன்” என்று வாக்குறுதி தந்து சமாதானப்படுத்தி விட்டார் ராஜூ. இந்த ரணகளத்திலும் “நீ என்னை இதுவரைக்கும் நாமினேட் பண்ணியிருக்கியா?” என்று பிரியங்கா கேட்டு வைத்துக்கொண்டது சுவாரஸ்யமான காட்சி. பிரியங்கா ஒரு ஜெனிலியாவா அல்லது ஜெகன்மோகினியா என்பதை இறுதிவரை கண்டுபிடிக்கவே முடியாது போலிருக்கிறது.

பிக் பாஸ் நிரூப், ராஜு
பிக் பாஸ் நிரூப், ராஜு

விடிந்தது. ‘சொடக்கு சொடக்கு மேல சொடக்கு போடுது” என்கிற அதிரடியான பாடல் ஒலித்தது. நாம் கூட காலை அலாரத்திற்கு இந்தப் பாடலை வைத்துக் கொள்ளலாம். தினமும் பதறியடித்துக் கொண்டு எழுவதற்கு தோதான பாடல்.

‘நிழல்’ டாஸ்க் ஆரம்பிப்பதற்கான பஸ்ஸர் அடித்தது. “நேத்து நாங்க சண்டை போட்டதை நீ. பார்த்தியா. அது லவ்…” என்று பிரியங்கா, தனது நிழலான ராஜூவுடன் இணைந்து தாமரையிடம் கொஞ்சலாக சொல்லிக் கொண்டிருந்தார். “கருமத்த.. நானே இந்த இசை குளிச்சிட்டு எப்ப வரும்னு உக்காந்திருக்கேன்?”!” என்று தாமரை உள்ளுக்குள் தலையில் அடித்துக் கொண்டிருக்கலாம். தாமரையின் நிழலான இசை குளிக்கச் சென்றிருந்தார்.

இமான் அண்ணாச்சி
இமான் அண்ணாச்சி

பச்சை மிளகாயைக் கொண்டு வந்த நிரூப் “உன் பிம்பத்துக்கு ஊட்டி விடு” என்று இசையிடம் சொல்ல, அவர் வேண்டாவெறுப்பாக மறுத்து விட்டார். இதனால் தாமரையின் முகத்தில் மெல்லிய கோபம் ஏறியது.

பேட்ஜ் பெறும் அடுத்த போட்டி இமானுக்கும் ஐக்கிக்கும் இடையில் நடந்தது. நடுவில் உள்ள குடுவையில் யார் பந்தை சரியாக அதிக முறை போடுகிறார்களோ அவரே வெற்றியாளர். தவற விட்டவர் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இதில் அண்ணாச்சி ஆச்சரியமாக அதிகமுறை ஜெயித்தாலும் ஓவர் நம்பிக்கை காரணமாக சில தடவைகள் தவற விட்டார். இவருக்கு நிகராக ஈடு கொடுத்தார் ஐக்கி. இருவருமே ஐந்து முறை பந்தைப் போட்டதால் ஆட்டம் சமன் ஆகியது. தவற விட்ட சமயங்களில் எல்லாம் பாகற்காய் ஜூஸை மளமளவென குடித்து முடித்தார்கள். (உடம்பிற்கு நல்லதுதான்!).

பாத்திரம் கழுவும் வேலைக்காக ராஜுவைத் தேடிய அக்ஷரா, பாத்ரூம் ஏரியாவிலிருந்து அவரைக் கூட்டி வந்தார். “என்னடா இது. ஈரமண் தரைல போன லாரி டயர் மாதிரி பாத்திரத்தில இவ்வளவு கறை.? வெள்ளைக்காரன் மாதிரி சமைக்க கத்துக்க மாட்டீங்களா?” என்று காமெடி செய்து கொண்டிருந்தார் ராஜூ. நாம் வெள்ளைக்காரன் மாதிரியே தினமும் சாப்பிடுவோமோ? சாம்பார், குழம்பு, ரசம் என்று தினமும் வைணமாக நாக்கு தேடுகிறதே?! ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒருமுறை பாத்திரம் கழுவ வந்தால் இப்படித்தான் தோன்றும்.

சிபி
சிபி

கண்ணாடிச் சட்டத்தின் வழியாக அபினய், சிபியைப் பார்த்து பேச வேண்டிய நேரம். “நீ ரொம்ப ஹாண்ட்சமா இருக்கே. முதல் நாள் வரும் போது நீ மட்டும்தான் வீட்டை ஆர்வமா சுத்திப் பார்த்தே. ஆனா அதுக்கப்புறம் inquisitiveness (அறிவதில் ஆர்வம்) கம்மியா ஆயிடுச்சு. சலிப்பான பாத்திரமா மாறிட்டே. என் பத்து வயசு வரைக்கும் நான் இப்படித்தான் இருந்தேன். அதனால ரொம்ப கஷ்டப்பட்டேன். அதைத்தான் உனக்கு முன்னாடியே அட்வைஸ் பண்ணேன். கோபத்தை ஒரு ஆயுதமா உபயோகிக்கற. ஒரு செளகரியமான வட்டத்திற்குள்ளயே இருக்க. உன்னைப் பத்தின விஷயங்கள் இங்க கம்மியாத்தான் நடக்குது. நீ சேஃப்பா ஆடறேன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. இறங்கி அடிச்சு ஆடு” என்று பல்வேறு புத்திமதிகளை தனது பிம்பமான சிபிக்கு சொல்லிக் கொண்டிருந்தார் அபினய். “Same to you” என்று சிபி மனதிற்குள் சொல்லியிருக்கலாம்.

பாவனி உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். “நான் சமைச்சதால இருக்கலாம்” என்று ராஜூ சொல்ல “அப்ப போகட்டும் விடு” என்றார் தாமரை. “என்னாலலாம் அப்படி இருக்க முடியாதுப்பா. சண்டை வேற. சோறு வேற. பசிக்குமில்ல” என்று தட்டில் சாதத்தை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார் நிரூப்.

இரண்டு அணிகளுக்குள் நடந்த முதல் இரண்டு போட்டிகளும் சமன் ஆகி விட்டதால் மூன்றவாது போட்டி நடந்தது. இதில் முதல் சுற்றில் தாமரையும் இசையும் மோதுவார்கள். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்பவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். (இது ஓகே). ஆனால் தவறான பதில்களைச் சொன்னால் எதிரில் இருப்பவரின் தலையில் முட்டையை உடைக்க வேண்டுமாம். (இது என்னடா.. கோக்குமாக்கான லாஜிக்கா இருக்கு?! ஒருத்தரை பழிவாங்கணும்னா வேணுமின்னே தப்பான பதிலா சொல்லலாமே?!). எது எப்படியோ, பரபரப்பான ஃபுட்டேஜ் பிக்பாஸிற்கு வேண்டும். அவ்வளவுதான். இதில் லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது.

இசைவாணி, தாமரை
இசைவாணி, தாமரை

‘நவராத்திரி நாடகத்தில் தாமரையின் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர் என்ன?, வாக்குமூல அறைக்கு முதன்முதலாக சென்ற நபர் யார்? போன்ற கேள்விகளுக்கு தவறாகப் பதில் சொன்ன இசை, தாமரையின் தலையில் முட்டையை உடைத்தார். “வேக் அப் பாடலுக்கு நடனம் ஆடாத இரண்டு சோம்பேறிகள் யார்”? என்கிற பங்கமான கேள்வி பிக்பாஸிடமிருந்து வந்ததும் அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது. அது நிரூப் மற்றும் ராஜூவாம். ஆனால் ‘சிபி மற்றும் ராஜூ’ என்று தவறான பதிலைச் சொன்னார் இசை.

நகரம், கிராமம் அணியில் பிரெட் பாக்கெட் திருடியவர்கள் யார், தீபாவளியன்று மதுமிதாவிற்கு வந்த உணவு என்ன? ஆகிய இரண்டு கேள்விகளுக்கு மட்டும் சரியான பதில்களைச் சொல்லி இரண்டு மதிப்பெண்களைப் பெற்றார் இசை.

இப்போது தாமரையின் டர்ன். ‘பிரியங்காவின் தம்பி பெயர் என்ன?” என்ற கேள்விக்கு சரியான பதிலை தாமரை சொன்னதும், இந்தத் தகவல் பிக்பாஸ் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்று விட்ட சந்தோஷத்தில் குதித்தார் பிரியங்கா. இது மட்டுமே தாமரை சொன்ன சரியான பதில். மற்ற அனைத்திற்கும் தவறான பதில்களைச் சொல்லி இசையின் மண்டையில் இவர் ஆவேசமாக ஆம்லேட் போட “பார்த்துக்கா. தலை வலிக்குது.. வேணுமின்னே பண்ணுவியா?” என்று விதவிதமாக சிணுங்கினார் இசை

“இசைவாணி பாடிய முதல் சினிமாப்பாடல் எது?” என்று தாமரையிடம் பிக்பாஸ் கேட்டது அநியாயமான குறும்பு. “இது இங்கயே பாடினது கிடையாது. சினிமால்ல பாடினதுல்லாம் யாருக்குத் தெரியும்?” என்று தாமரை எரிச்சலுடன் முனகிய போது இசையின் முகம் காண்டாகியது. ஒரு கட்டத்தில் இசையின் தலையில் தாமரை அடித்த முட்டை உடையாமல் போக “அது அவிச்ச முட்டையா இருக்கும்” என்று டைமிங் காமெடி செய்தது நிச்சயம் ராஜூவாகத்தான் இருக்க வேண்டும். இசை 2 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில் தாமரையால் ஒரு மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்தச் சுற்றில் இசை வெற்றி பெற்றார்.

சிபி
சிபி

அடுத்ததாக சிபி பதில்களைச் சொல்ல வேண்டும். எதிரில் ஆம்லேட்டிற்காக தயாராக அமர்ந்திருந்தவர் அபினய். ‘அதிக விலை கொண்ட காலனியை பரிசாகப் பெற்றவர் யார்?” என்ற கேள்விக்கு ‘ஐக்கி’ என்ற சரியான பதிலைச் சொல்லி விட்டார் சிபி. ‘அபினய் நடித்த முதல் திரைப்படம் என்ன?’ என்ற கேள்விக்கு ‘கணக்குல்லாம் போடுவாரே.. அய்யோ. அவர் பேரு.. தொண்டைலயே பதில் நிக்குதே..’ என்றெல்லாம் தடுமாறினார் சிபி. (பாவம் ஒரு கணிதமேதையை இப்படி பரிதாபமாக சுருக்கியிருக்க வேண்டாம்!). என்றாலும் பிறகு ‘ராமானுஜம்’ என்பதை சரியாக சொல்லி விட்டார் சிபி.

இது தவிர, இமானின் மகள் பெயர் என்ன? முதல் நாள் வீட்டிற்குள் நுழையும் போது அக்ஷரா அணிந்திருந்த உடையின் வண்ணம் என்ன? (ரொம்ப முக்கியம்!) போன்ற கேள்விகளுக்கு சிபியின் பதில் தவறாக அமைந்தது. இவர் இரண்டு மதிப்பெண்கள் பெற்றார்.

சிபி
சிபி

இப்போது அபினய்யின் முறை. “சிபி நடித்த முதல் திரைப்படம் என்ன?” என்ற கேள்விக்கு ‘மாஸ்டர்’ என்று சொல்லி பழிவாங்கி விட்டார் அபினய். (மாஸ்டரில் சிபி தோன்றியிருக்கிறார், அவ்வளவே!). ஆனால் அதற்கு சரியான பதில் ‘வஞ்சகர் உலகமாம்”. (அடடே! பிக்பாஸ் வீட்டிற்கும் இந்த டைட்டில் மேட்ச் ஆகுதே?!).

‘பண்றதெல்லாம் மோசம், இதுல பாசம்..” என்கிற டைட்டிலை யார், யாருக்குத் தந்தது?’ என்கிற கேள்விக்கு ‘மதுமிதா இமானிற்குத் தந்தார்” என்கிற பதிலை மட்டும் அபினய்யால் சரியாக சொல்ல முடிந்தது. “முதல் நாள் பாவனி அணிந்த உடையின் வண்ணம் என்ன?” என்ற கேள்விக்கு அபினய் தடுமாற “அடப்பாவி.. பாவனி கூட சண்டை போடற எனக்கே இது தெரியுமே” என்று மைண்ட் வாய்ஸில் அலறினார் ராஜூ. (ராஜூவிற்குள் ஒரு தீவிர பாவனி ரசிகர் சைலண்ட்டாக அமர்ந்திருக்கிறார் போல). இந்தச் சுற்றில் சிபி வெற்றி.

இத்துடன் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் முடிந்தது என்று அறிவித்து ‘கண்ணாடி’யை தலைக்கு மேல் உயர்த்தி உடைத்துப் போட்டார் பிக்பாஸ். இனிமேலும் இவர்கள் செய்கிற கோணங்கித்தனங்களை எல்லாம் நாம் பார்க்கத் தேவையில்லை. இதில் ‘அணி B’ அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றது.

“உங்களுக்கான பரிசுகளை பகடையை உருட்டுவதன் மூலம் பெற முடியும். எல்லோரும் ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போங்க” என்று அறிவித்தார் பிக்பாஸ். அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது, அங்கு ஒரு விபரீதமான பரிசு காத்திருக்கிறது என்று.

இரண்டு அணிகளும் பகடையை உருட்ட, அதில் வந்த எண்ணின் படியாக பெட்டிகளைத் திறந்தார்கள். பன்னீர், ஜாம், சிக்கன் என்று வரிசையாக உணவுப்பண்டங்கள் கிடைக்க, போட்டியாளர்கள் சந்தோஷத்தில் குதித்தார்கள். இருப்பதிலேயே பெரிய பெட்டிக்கான எண் அடுத்து விழுந்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பெட்டிகள்
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பெட்டிகள்

“பிக்பாஸ் லம்ப்பா ஏதாவது கொடுத்திருப்பாரு” என்று நாடகத்தனத்துடன் இமான் அதைத் திறக்க, பூமியிலிருந்து வேதாளம் ஒன்று பீறிட்டுக் கொண்டு எழுந்ததைப் போல ‘சக்திமான்’ போஸில் ஆவேசமாக கத்திக் கொண்டு எழுந்தார் அபிஷேக். இதை எதிர்பார்க்காத அண்ணாச்சி பீதியுடன் அலறியடித்து ஓடியது சுவாரஸ்யமான காமெடி. புதிய லுக்கில் இரண்டு வயது குறைந்தது போல் இருந்தார் அபிஷேக்.

ஏதோ பேயைக் கண்டது போல் மற்ற போட்டியாளர்கள் அலறியடித்துக் கொண்டு சந்தோஷப்பட்டார்கள். ‘தெய்வத்திருமகள்’ சாரா வளர்ந்து பெரியவளாகி விட்ட போன்ற தோற்றத்துடன் வாய் மூடி திகைத்து நின்ற பிரியங்காவின் எதிர்வினையை தமிழ் சினிமா இயக்குநர்கள் எவராவது பார்த்திருந்தால் உடனே புக் செய்திருப்பார்கள்.

அபிஷேக் என்ட்ரி
அபிஷேக் என்ட்ரி

அங்கிருக்கிற பெட்டிகளையெல்லாம் ஆவேசமாக உடைத்து அபிஷேக்கின் வருகையை ‘ஹைபராக’ கொண்டாடினார் பிரியங்கா. “என் கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்” என்று பிரியங்காவின் மகிழ்ச்சிக்கு இணையான பர்பாமன்ஸை பாவனி தர முயன்றாலும் பிரியங்காவின் உயரத்தை எட்டமுடியவில்லை. வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த அமைச்சர், ஏழை மக்களை அணைத்துக் கொள்வதைப் போல, அனைவரையும் கருணையுடன் அணைத்துக் கொண்டார் அபிஷேக்.

அபிஷேக்கின் வருகையால் உண்மையாக மகிழ்ச்சியடைந்தவர் பிரியங்கா மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். பலருக்கு உள்ளுக்குள் எரிச்சலும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக “அப்பாடா!. போனானா?” என்று நினைத்துக் கொண்டிருந்த நிரூப்பிற்கு இது பேரதிர்ச்சியாக இருக்கும். இனி பிரியங்காவிடம் அவருக்கு இரண்டாம் இடம்தான்.

அபிஷேக்கின் ரீஎன்ட்ரி நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் பல மாறுதல்களை நிகழ்த்தலாம். அதற்காகத்தான் அவரும் வரவழைக்கப்பட்டிருக்கிறார். இனி என்ன நடக்கும்?

அபிஷேக், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் அதிர்ச்சி தந்து ‘அபிஷாக்’காக மாறி விட்டார்.