Published:Updated:

பிக்பாஸ் -70 : பாவனி விவகாரம்; கமல் சுழற்றிய சாட்டை! அதிர்ந்த ராஜூ

பாவனி - பிக்பாஸ்

பிக்பாஸ்: பாவனி விவகாரத்தை அழுத்தமாக கமல் கையாண்ட விதம் சிறப்பு. அதே சமயத்தில் யாரையும் காயப்படுத்தாமல் விசாரணையை மேற்கொண்டதும் பாராட்டத்தக்கது.

பிக்பாஸ் -70 : பாவனி விவகாரம்; கமல் சுழற்றிய சாட்டை! அதிர்ந்த ராஜூ

பிக்பாஸ்: பாவனி விவகாரத்தை அழுத்தமாக கமல் கையாண்ட விதம் சிறப்பு. அதே சமயத்தில் யாரையும் காயப்படுத்தாமல் விசாரணையை மேற்கொண்டதும் பாராட்டத்தக்கது.

Published:Updated:
பாவனி - பிக்பாஸ்

கமல் தனது விசாரணையை ‘வாழைப்பழ ஊசி’ பாணியில் செய்வார் என்பது நமக்குத் தெரியும் பாவனி விவகாரத்தை அவர் நாசூக்காக ஆரம்பித்த போது வழக்கம் போல் ‘ஸ்டார்ட்டிங் டிரபுள்’ இருந்தது. ‘இது சரியாக நடக்குமா?’ என்று கூட ஒரு கட்டத்தில் தோன்றி விட்டது. பழத்திற்குப் பதிலாக வாழைக்காயின் மீது கமல் ஊசியை அனாவசியமாக குத்திக் கொண்டிருப்பது போலவும் தெரிந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் டாப் கியரைப் போட்ட அவர், ஊசியை அல்ல, கடப்பாரையையே ‘நச்’சென்று அதில்இறக்கிய விதம் அற்புதம். இந்த விவகாரத்தை கையாண்ட வகையில் ‘One of the best episode’ என்று சொல்லலாம்.

‘தன்னுடைய கண்முன்னால் ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது குறித்து எவரும் கேள்வியே கேட்கக் கூடாதா?’ என்று இன்னமும் கூட பலர் நினைக்கலாம். அவர்களுக்கு ஒரு உன்னதமான சிறுகதையை பரிந்துரைக்க விரும்புகிறேன். ‘அந்தரங்கம் புனிதமானது’ என்கிற ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை அது. வயதுக்கு வந்த இருவரின் அந்தரங்கமான உறவை எட்டிப் பார்ப்பதற்கு அவர்களின் மிக நெருக்கமான உறவுகளுக்கு கூட அனுமதி கிடையாது; அது அநாகரிகம்’ என்கிற நுட்பமான பார்வையை மிகச் சிறப்பாக அந்தப் படைப்பில் பதிவு செய்திருப்பார் ஜெயகாந்தன்.

கமல் தன்னுடைய சினிமா பயணத்தில், தன் வாழ்நாள் முழுவதும் இது போன்ற புகார்களை அவதூறுகளை எதிர்கொண்டவர். ‘என் படுக்கையறையில் எட்டிப் பார்க்காதீர்கள்” என்று ஊடக உலகத்தை சற்று காட்டமாகவே எதிர்கொண்டவர். எனவே அந்த வலி சார்ந்த அனுபவத்துடன் பாவனி விவகாரத்தை அழுத்தமாக அவர் கையாண்ட விதம் சிறப்பு. அதே சமயத்தில் யாரையும் காயப்படுத்தாமல் விசாரணையை மேற்கொண்டதும் பாராட்டத்தக்கது.

பிக்பாஸ் -70 : பாவனி விவகாரம்; கமல் சுழற்றிய சாட்டை! அதிர்ந்த ராஜூ

எபிசோட் 70-ல் என்ன நடந்தது?

அட்டகாசமான ஆடை வடிவமைப்பில் அரங்கத்திற்குள் நுழைந்தார் கமல். ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் நிகழ்ச்சியை துவக்கினார். “பத்தாவது வாரத்தை நெருங்கி விட்டோம். போட்டியாளர்களுக்கும் அது புரிந்து விட்டது. எனவே மிக துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னவர், “போட்டியாளர்கள் உள்ளிட்டு தீர்ப்பளிக்கும் ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் மற்றவர்களை ஆராய்வதை நிறுத்தி விட்டு தன்னை நிறுத்துப் பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ரைமிங்கில் அவர் சொன்ன உபதேசம் மிக மிக முக்கியமான கருத்து.

இந்த நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்காகவும் வம்பு பேசும் வாய்ப்பாகவும் மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் ‘சுயபரிசீலனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பமாக உபயோகிப்பதுதான் இதில் செலவழிக்கும் நேரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும்’ என்பதை நான் முதல் சீசனில் இருந்தே சொல்லி வருகிறேன்.

பிக்பாஸ்
பிக்பாஸ்வெள்ளிக்கிழமை நடந்தது என்ன?

“வாங்க.. வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்றார் கமல். ‘யாரோ ஒரு கருப்பு ஆடு ஓட்டை மாற்றிப் போட்டது’ குறித்து தான் மன உளைச்சல் அடைவதாக சஞ்சீவ் சொல்லிக் கொண்டிருந்தது சற்று காமெடியாகவே தெரிந்தது. வருண் சொன்னது போல், நிஜ அரசியலிலேயே ‘இதெல்லாம் சாதாரணமப்பா’ என்கிற அவலமான நிலைமையில் இருக்கிறோம்.

‘என்வழி தமிழ் வழி’ என்கிற தலைப்பில் தமிழ் மொழியின் பெருமைகளை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’ என்கிற டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. இதன் தொகுப்பாளராக பிரியங்கா இருப்பார். நாட்டுப்புற நாடகம் என்கிற பிரிவில் தாமரை பாடியது மிகச் சிறப்பாக இருந்தது. இது போன்ற சமயங்களில்தான் அவர் மீதான பிரமிப்பு உயர்கிறது. அத்தனை அற்புதமாக பாடினார்.

பிரியங்கா
பிரியங்காநாடகம் என்கிற பிரிவில் பாவனி மற்றும் அபினய்யை காதலர்களாக வடிவமைத்தது ஸ்கிரிப்ட் ரைட்டரின் குறும்பு. இருவரும் தங்கள் வேடத்தை மிக இயல்பாக ஏற்றுக் கொண்டு நடித்தார்கள். ராஜகுருவாக நிரூப்பும் மணமகளின் தந்தையாக ராஜூவும் நடித்தார்கள். ஆனால் ஸ்கிரிப்ட் இன்னமும் பலமாக அமைந்திருக்கலாம். ரொம்பவும் சாதாரணமாக இருந்தது. இலக்கியம் என்கிற தலைப்பில் போட்டியாளர்களின் பெயர்கள் வருமாறு தமிழை கொத்துப் பரோட்டா போட்டார் இமான். இது நம்மூர் அரசியல்வாதிகள் மொழியை வைத்துச் செய்யும் வழக்கமான சர்க்கஸ் வித்தை. என்றாலும் சுவாரசியமான வகையில் இதைச் செய்த இமான் பாராட்டுக்குரியவர்.

“எல்லோரும் கார்டன் ஏரியாக்கு வாங்க” என்று அழைத்த பிக்பாஸ் பணமதிப்பிழப்பு அறிவிப்பை அறிவித்து மக்களை அதிர்ச்சி அடையச் செய்தார். அதாவது ‘நாணயங்கள் இனிமேல் செல்லுபடி ஆகாது’ என்று சொல்லி சம்பந்தப்பட்டவர்களை பிக்பாஸிடம் ஒப்படைக்கச் சொன்னார்.

‘இதன் சக்தி முதலில் தெரியாமல் போய் விட்டது’ என்று நிரூப் சொன்ன பாயிண்ட் முக்கியமானது. அப்போதே பிக்பாஸ் இதை அறிவித்திருந்தால் நாணயம் கைப்பற்றும் ஆட்டம் இன்னும் சூடாக அமைந்திருக்கும். ‘பிரியங்காவின் நாணயத்தை நான் கைப்பற்றிக் கொண்டேன்” என்பதை நிரூப் ஒப்புக்கொண்டு “நாணயம் இல்லாமலேயே தலைவராக ஜெயிக்க முயன்றேன்” என்று சொன்னதும் சிறப்பு. “நாணயத்தை பயன்படுத்த விரும்புகிறீர்களா?” என்று பிக்பாஸ் கேட்கும் போதெல்லாம் ஸ்பெஷலாக உணர்வேன் என்று பாவனி சொன்னதும் அருமையான பாயிண்ட். இந்த நாணயத்தை சரியான நேரத்தில் திறமையாக பயன்படுத்தியதால்தான் தன்னால் இந்த வீட்டில் இன்னமும் தன்னால் நிலைத்திருக்க முடிகிறது என்கிற உணர்வை நன்றாக பதிவு செய்தார் வருண்.

‘எஞ்சியிருக்கும் வாரங்களில் திறமையான வியூகங்களை வகுத்து சிறப்பாக விளையாடுங்கள்’ என்று போட்டியாளர்களை அறிவுறுத்தினார் பிக்பாஸ். கடந்த சீசன்களில் பிக்பாஸ் செய்த காமெடி அறிவிப்புகள் இந்த சீசனில் ஏறத்தாழ அறவே இல்லாதது ஒரு சுவாரசிய இழப்பு.

அவ்வளவு சத்தமாவா…. கேக்குது?

கமல் என்ட்ரி. “எங்க வீட்ல கலாட்டா பண்ணிட்டேன். டிவி வால்யூம் ரொம்ப அதிகமா இருந்தது. அப்புறம் செக் பண்ணி பார்த்தா மத்த நிகழ்ச்சியில் எல்லாம் சவுண்ட் சரியா இருக்கு. நம்ம நிகழ்ச்சியில் மட்டும்தான் இப்படி” என்கிற நையாண்டியுடன் உரையாடலை ஆரம்பித்தார் கமல். அவரின் வாழைப்பழ ஊசி பாணிக்கு இது ஒரு நல்ல உதாரணம். தாங்கள் அணிந்திருக்கும் மைக் மெல்லிய உரையாடலைக் கூட பதிவு செய்யும் சக்தி வாய்ந்தது என்பது போட்டியாளர்களுக்குத் தெரியும். இந்த நிலையில் ஹைடெஸிபலில் கத்துவது எப்படி வீடுகளில் எதிரொலிக்கும் என்கிற கட்டுப்பாடு அவர்களுக்கு அவசியமான நேரங்களிலாவது இருத்தல் நல்லது.

“சரி என்ன சாப்பிடறீங்க?.. சூடாவா குளிர்ச்சியாவா..?” என்று கமல் விருந்தோம்பல் செய்தவுடன் “மோர் சாப்பிடலாம் சார்” என்று ஜாக்கிரதையாக பதில் அளித்தார் இமான். “பாம்பேல இருந்து ஒருத்தர் எனக்கு போன் பண்ணினார். இமானை எனக்குப் போட்டியா வர வேணாம்னு தயவு செய்து சொல்லுங்க என்று கெஞ்சி மிரட்டி கேட்டுக்கொண்டார். அவர் பெயர் ஹிருத்திக் ரோஷன்” என்று ஆரம்பத்திலேயே நகைச்சுவையின் டாப் கியரை போட்டார் கமல். இன்று அவர் மிக ஜாலியான மூடில் இருந்தது போலவே தெரிந்தது. பிறகு அமீர் சொல்லித் தந்த படி இந்திப் பாடலுக்கு இமான் நடனமாடிய காட்சி நல்ல காமெடி. அமீரின் துள்ளலான அசைவுகள் சிறப்பாக இருந்தன. ‘எலந்த பயம்’ பாடலை நன்றாகப் பாடினார் தாமரை.

தாமரை
தாமரை


வாரநாட்களில் பாய்பவர்கள் இறுதிநாட்களில் பம்முவது ஏன்?

கமலின் விசாரணை நாட்களில் போட்டியாளர்கள் பதுங்கிப் பம்முவது ஒரு நெருடலான சடங்காகவே ஒவ்வொரு சீசனிலும் தொடர்கிறது. வார நாட்களில் அப்படி மூர்க்கமாக அடித்துக் கொள்கிறார்கள். அதைப் பற்றி விசாரணை நடக்கும் போது தன்னுடைய தரப்பு நியாயத்தை வாய் திறந்து பேச வேண்டும் அல்லவா? ஆனால் ‘எதற்கு வம்பு?’ என்கிற பாணியில் பலர் அடக்கி வாசிப்பது நமக்கு எரிச்சலைத் தருகிறது. நேற்றைய எபிசோடிலும் ஏறத்தாழ அப்படியேதான் நடந்தது. தாமரை போன்றவர்கள்தான் சற்றாவது தங்களின் பிரச்சினையை அழுத்தமாக சொல்கிறார்கள்.

“ஜில்லுன்னு சாப்பிட்டது போதும். ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது. சூடா ஆரம்பிப்போம்” என்று கொடிக்கம்ப பிரச்சினையில் தாமரையும் இமானும் முட்டிக் கொண்ட விவகாரத்திற்கு வந்தார் கமல். தாமரையிடமிருந்து மிக பலவந்தமாக கொடி கம்பத்தை இமான் பிடுங்கியது குறித்து கமல் அழுத்தமாக ஆட்பேசணை செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கமலோ “உங்க ரெண்டு பேருக்கும் பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருந்தது” என்று இடதுகையால் இந்த விவகாரத்தை வேடிக்கையாக தாண்டிச் சென்றது நெருடலாக இருந்தது. என்னதான் நட்பு ரீதியாக அவர்கள் விளையாடினாலும், தாமரை கொடியை எடுத்த பிறகு மிக மூர்க்கமாக இமான் பிடுங்கியது ரசிக்கத்தகுந்த காட்சியாக இல்லை. ‘ஒரு பெண்ணிடம் தான் தோற்பதா?” என்கிற ஆவேசம்தான் இமானிடம் இருந்ததைப் போல் பட்டது.

இமான்
இமான்


மூக்கு ஊறுகாயை வாயால் சாப்பிட முடியுமா?

“தாமரையுடன் அபினய், பிரியங்கா ஆகியோருக்கு வாய்க்கா தகராறு உண்டா?” என்று சாவகாசமாக விசாரணை செய்து கொண்டிருந்தார் கமல். நாடகம் என்கிற வார்த்தை தாமரையின் மனதை புண்படுத்திய விவகாரத்தை கையில் எடுத்த அவர். ‘இதை நீங்கள் பாசிட்டிவ்வாக அணுகலாமே?” என்று தாமரைக்கு அறிவுறுத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் ‘ஒரு சொல் எந்த தொனியில் சொல்லப்படுகிறது?’ என்று தாமரை சொன்ன ஆட்சேபம் பற்றியும் கமல் சற்று கவனித்திருக்கலாம்.

‘கொரானோ சமயத்தில் மூக்கு ஊறுகாய் சாப்பிட முடியாது’ என்றெல்லாம் கமல் சொன்னது டைமிங் நையாண்டி. ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதைத்தான் சுருக்கமாக ‘நாடகம்’ என்று பிரியங்கா சொல்லியிருப்பார்’ என்று இந்த விவகாரத்தை கமல் முடித்து வைத்தார்.

தாமரையின் தொழிலை அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கம் பிரியங்காவிடம் இருந்திருக்காது என்பதையே சம்பந்தப்பட்ட நாளில் நானும் குறிப்பிட்டிருந்தேன். கமல் சொன்னது போல, எதிராளியிடம் பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்ய அவர்கள் சொன்னதில் இருந்து ஒரு வார்த்தையை மட்டும் தவறான புரிதலுடன் எடுத்துக் கொண்டு மல்லுக்கட்டுவதை தாமரை ஒரு தன்னிச்சையான வழக்கமாக வைத்திருக்கிறார். “நீங்கள் விவாதிப்பதற்கு வேறு நல்ல பாயிண்டுகள் இருக்கும் போது இதை ஏன் கையில் எடுத்தீர்கள்?” என்று கமல் சுட்டிக் காட்டியதும் அருமை.

வெள்ளிக்கிழமை ‘திடீர்’ மாற்றங்கள்

தாமரையும் பிரியங்காவும் அடிக்கடி முட்டிக் கொண்டு பிறகு முத்தா கொடுத்துக் கொள்ளும் பகுதிக்கு வந்த கமல் “அதெப்படி வெள்ளிக்கிழமை மட்டும் நீங்க திடீர்னு நல்லவங்களா மாறிடறீங்க?” என்று கேட்டதும் போட்டியாளர்களே ரசித்து சிரித்தார்கள். “வார நாள்ல டாஸ்க் இருக்கு. அதையொட்டி சண்டைகள் நடக்குது. பிறகு சமாதானம் ஆயிடறோம்” என்று பிரியங்கா சொன்னது ஒரு நல்ல லாஜிக் பதில் என்றாலும் வார இறுதியிலும், நாமினேஷன் சமயத்திலும் மக்களிடம் ‘திடீர் மாற்றம்’ வந்து விடுவதை நாம் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

“மத்தவங்களுக்கு இருக்கான்னு பார்த்து சாப்பிடுங்க’ என்று அளவுமுறையை நினைவுப்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால் இதை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சொல்லாதீர்கள். எனக்கு கூட இது வலிக்கும்” என்று பிரியங்காவிற்கு கமல் அறிவுறுத்திய போது சிபி அப்போதாவது வாய் திறப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ‘என்ன சிபி..?” என்று கமலே கேட்டு பலவந்தமாக அவரின் வாயைத் திறக்க வைக்க வேண்டியிருக்கிறது. சாதாரணர்களிடம் பேசும் போது அதிகாரமாக சத்தமிடுவதும், தன்னை விட அதிகாரம் உள்ளவர்களைப் பார்த்ததும் அப்படியே பம்மி விடுவதும் நல்ல பண்பல்ல. ‘எதிரியா இருந்தா கூட சாப்பிடும் போது தொந்தரவு செய்யக்கூடாது’ என்று சிபி அப்போது சரியாக சொன்ன விஷயத்தை இப்போது சபையிலும் துணிச்சலாக பிரதிபலித்திருக்கலாம்.

பாவனி - அபினய்
பாவனி - அபினய்


பாவனையாக அமர்ந்திருந்த பாவனி

ஓர் இடைவேளைக்குப் பின்பு திரும்பிய கமல், சோர்வு காரணமாகவோ, என்னவோ சோபாவில் அமர்ந்திருந்தார். “என் கூட பேசணும்ற பாவனையோட ரொம்ப நேரமா காத்திருக்கீங்கன்னு தெரியுது’ என்று வெளிப்படையான க்ளூவை வைத்த பிறகும் கூட பாவனிக்கு அது புரியவில்லை என்பது வியப்பைத் தருகிறது. “என்ன விஷயம் சார்?” என்று பாவனி கேட்டதற்கு கமல் ஒரு ஆச்சரிய ரியாக்ஷன் தந்தார். பிரமோவில் வந்திருந்த இந்த அருமையான காட்சி, மெயின் எபிசோடில் காணோம்.

“வாரா வாரம்.. நான் டாப்பிக்ல எப்படியோ வந்துடறேன் சார்” என்று பாவனி சொன்ன போது “ரொம்ப நல்ல விஷயம்தானே அது?.. அதுக்காகத்தானே பலரும் போராடறாங்க. நான் கூட ஒரு வாரம் வராமப் போனதுக்கு .ஃபீல் பண்ணேன்” என்று கமல் சொன்னது உண்மை. செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருப்பதற்காக தானே முன்வந்து அடிபடும் விளம்பர மோகிகள் மிக அதிகம்.

பாவனி
பாவனிராஜூவின் தன்னிலை விளக்கம்

பாவனி விவகாரத்தை நேரடியாக தொட்டு கமல் ஆரம்பித்ததும், இதன் ரிஷிமூலத்தை விவரிக்க ஆரம்பித்தார் ராஜூ. “வருணைப் பற்றி தன்னிடம் பாவனி தவறாக பேசுகிறார்’ என்கிற விஷயத்தை ஒரு கடிதமாக எழுதி பாவனியிடம் தந்திருக்கிறார் அபினய். இது பாவனியின் வழியாக பொதுவில் வந்து விட்டது. இதற்கும் ‘காதலுக்கும்’ தொடர்பில்லை. அடுத்ததாக “என் மேல ஏதாவது ஃபீலிங்க்ஸ் இருக்கா.. அப்படி நீங்க நினைக்கற மாதிரி நான் நடந்துக்கிட்டேனா?” என்று அபினய்யிடம் நேரடியாக பாவனி கேட்டது ஒரு நல்ல பண்பு. இது பற்றி அவர் மற்றவர்களிடம் சொல்லி வம்பு பேசவில்லை. இது இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் தலையிடவோ, இது பற்றி வம்பு பேசவோ மற்றவர்களுக்கு உரிமையில்லை, அது பிக்பாஸ் வீடாகவே இருந்தாலும் கூட.

பிக்பாஸ் -70 : பாவனி விவகாரம்; கமல் சுழற்றிய சாட்டை! அதிர்ந்த ராஜூஆனால் ராஜூ என்ன செய்தார் என்றால் இதைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்; இமானுடன் வம்பு பேசுகிறார்; இந்த விஷயத்தை டாஸ்க்குகளில் சேர்க்கிறார். பிரியங்கா உள்ளிட்டவர்களும் இதை ரகசிய வம்பாக பேசி கிளுகிளுக்கிறார்கள். இது சராசரி நபர்களின் இயல்புதான். ஆனால் இது சர்ச்சையாகி, வெடித்த பிறகாவது ‘இரு தனிநபர்களின் வாழ்க்கை இதில் உள்ளது’ என்கிற நுண்ணுணர்வு சம்பந்தப்பட்டவர்களுக்கு வந்திருருக்க வேண்டும். ஆனால் அமீர் வந்த பிறகு அவருடனும் இணைத்து இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார்கள். அமீருடன் ராஜூ பேசிய தொனியைக் கவனித்தால் அவர் இந்த விவகாரத்தை இன்னமும் தொடரும் முகாந்திரத்தில்தான் இருந்தார் என்பது தெளிவாகவே புலப்படுகிறது.

“ஒரு விஷயம் கண்ணால பார்த்தேன்”.. என்று ராஜூ அனத்திக் கொண்டிருந்ததற்குப் பின்னால் ஒன்றுமே இல்லை. “பிக்பாஸில் டாஸ்க் தர்றாங்க.. அதனால் சுற்றியுள்ளவர்களை கவனிக்க வேண்டியிருந்தது” என்று கமல் விசாரிக்கும் போது ராஜூ கூறினார். பாவனி, அபினய் ஆகியோரின் மீதான விமர்சனங்களை வைக்க இதர ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது இந்த சென்சிட்டிவ்வான விஷயத்தையே ராஜூ தொடர்ந்து கையில் எடுத்தது சரியானதல்ல. எனில் அவர் மன்னிப்பு கேட்டது வெறும் சம்பிரதாயமா?

“ஒண்ணுமே புரியலைங்கய்யா” – அண்ணாச்சியின் அழும்பு

ராஜூவைப் போலவே இமானும் பழமைவாத மனம் கொண்டவர்தான். பெண்களை ஒருபடி கீழே இறக்கிப் பார்க்கும் ஆணாதிக்கச் சிந்தனையை உடையவர்தான். அமீரைக் கூப்பிட்டு அவர் மெல்லிய தொனியில் எச்சரித்ததும் இந்த நோக்கில்தான். ஆனால், ‘பெண்களுக்கு அடிச்சா வலிக்கும்’ என்று கமலிடம் அவர் தந்த விளக்கமெல்லாம் ‘சும்மா’. இதை கமல் திறமையாக அம்பலப்படுத்தி விட்டார். “என்ன அண்ணாச்சி”..? என்று இமானிடம் இந்த விவகாரத்தை கமல் கொண்டு வந்த போது வழக்கம் போல் “எனக்கு ஒண்ணுமே புரியலைங்கய்யா” என்று பூசி மெழுக முயன்றார் இமான். ஆனால் அது அபத்தமாகி விடும் என்று பிறகு அவரே நினைத்ததால் “காதல். கீதலாக இருக்குமோன்னு நெனச்சேன்’ என்று வாக்குமூலம் தந்தார்.

“அப்படி இருந்தாதான் உங்களுக்கெல்லாம் என்ன?” என்று கமல் கேட்ட கேள்வியை நேற்றைய எபிசோடின் ஆணித்தரமான தருணம் எனலாம். அப்படியொரு ‘நச்” கேள்வி இது. பிரியங்காவும் பாவனியும் பலமாக கைத்தட்டியது ஒரு முக்கியமான தருணம். “அமீர் அடிச்சு விளையாண்டாரு. நீங்க கொடியை பிடிச்சு விளையாண்டீங்க” என்று ரைமிங்கில் இமானை கமல் மடக்கியது சுவாரசியமானது. “Mr. Private person..” என்று அபினய்யை விளித்து அவர் கள்ள மெளனம் சாதிக்கும் தன்மையையும் கமல் கண்டித்தது நன்று. இதைப் போலவே இதைப் பற்றி வம்பு பேசிய பிரியங்காவின் தருணத்தையும் அம்பலப்படுத்தியது சிறப்பான விஷயம். கமல் இத்தனை அடித்த பிறகு “அதானே?” என்று இமான் சட்டென்று கட்சி மாறியது நல்ல காமெடி.

பிக்பாஸ் -70 : பாவனி விவகாரம்; கமல் சுழற்றிய சாட்டை! அதிர்ந்த ராஜூ“காதலா. நட்பா.. சகோரத்துவமா.. இதெல்லாம் இருக்கா இல்லையான்னு கேட்கறதுக்கு கூட உங்களுக்கு உரிமையில்லை. அது அவங்க பர்சனல். நீங்களா அவங்களை கமிட் பண்ண வெச்சிடாதீங்க” என்பதை மீண்டும் மீண்டும் கமல் வலியுறுத்தியது நல்ல விஷயம். ஆனால் ஒரு கட்டத்தில் அபினய்யிடம் “இருந்தா ஒத்துக்கங்க. ஒண்ணும் பிரச்சினையில்ல” என்று அவரே வலியுறுத்திய தொனி நெருடலாக இருந்தது.

“உங்க பையனுக்குப் புரியும்” – கமல் அதிரடி

கமல் இத்தனை நீளமாக வியாக்கியானம் தந்தும் கூட ராஜூ அதனால் சமாதானம் ஆகாத முகபாவத்துடன் இருந்தார். அது கமலுக்கு நன்றாகப் புரிந்தது. ஒரு கட்டத்தில் தான் பேச விரும்பியதெல்லாம் அவர் சொல்லி முடித்து விட்டு “சரி.. சொல்லுங்க. ஆனா இது உங்களுக்குப் புரியாட்டியும் உங்க பையனுக்குப் புரியும். பொண்ணா இருந்தா இன்னமும் நல்லாப் புரியும்” என்றது சிறப்பு. சமகால தலைமுறையினரை விடவும் இளையதலைமுறையினர் அதிக முற்போக்குச் சிந்தனையுடன் இருப்பது பாராட்டத்தக்கது. “நான் சொன்னது உங்களுக்கு அறிவுரை இல்ல. என் அனுபவம்” என்கிற முத்தாய்ப்பை கமல் தந்தது சிறப்பானது.

‘தனிநபர் அந்தரங்கத்தை மதித்தல்’ என்கிற தலைப்பில் நான் ஒரேயொரு விஷயத்தை மட்டுமே இணைக்க விரும்புகிறேன். ஒரு தனிநபருக்கு எந்தவொரு உறவையும் இணைத்துக் கொள்ளவோ, முறித்துக் கொள்ளவோ அனைத்து விதமான உரிமையும் உண்டு. ஆனால் இதில் அவரைச் சார்ந்தோர் எவருக்கும் துளி கூட பாதிப்பில்லாமல் கையாளும் கட்டுப்பாடும் கண்ணியமும் ஒருவருக்கு வேண்டும். ஒரு உறவை முறித்துக் கொண்டால் கூட அது இரு தரப்பிற்கும் வலிக்காமல் நியாயமான முறையில் நடக்க வேண்டும். “இது என் பர்சனல். நீ கேட்காதே” என்று இருதனிநபர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக ஒருவர் முடிவெடுக்க முடியாது.

பிக்பாஸ் -70 : பாவனி விவகாரம்; கமல் சுழற்றிய சாட்டை! அதிர்ந்த ராஜூ


கட்டக்கடேசியில் பார்த்தால் மனிதன் என்பவன் சமூகவிலங்கு. அவன் கூடி வாழத்தான் வேண்டும். அதே சமயத்தில் மற்றவர்களுக்காக தன் சொந்த வாழ்க்கையை ஆயுள் பூராவும் தியாகம் செய்து பலியிடத் தேவையில்லை. இது ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் நன்கு பொருந்தும். ஒரு மணவுறவில் தீர்க்க முடியாத கசப்பு ஏற்பட்டால் இரு தரப்பு சம்மத்துடன் அதிலிருந்து விலகலாம். ‘மணமுறிவு’ என்கிற பெயரில் சட்டமே இதை அனுமதிக்கிறது. ஆனால் இந்தப் பிரிவில் எந்தவொரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் முறையானது.

காப்பாற்றப்பட்ட சிபி – வெளியேறும் அண்ணாச்சி

“ஏழு பேர் நாமினேட் ஆகியிருக்கீங்க.. இதில் ஒருத்தரை காப்பாத்தலாம்” என்ற கமல் ‘BBMK கட்சியின் உறுப்பினர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்’ என்று சூசகமாக சொன்னதும் ‘அது நிரூப்பாக இருக்கலாம்’ என்கிற தன் ஆசையை வெளியிட்டார் பிரியங்கா. ஆனால் காப்பாற்றப்பட்டது ‘சிபி’.

இந்த வாரத்தில் இமான் எலிமினேட் ஆகியிருக்கிறார் என்கிற தகவல் கசிந்திருக்கிறது. சற்று அதிர்ச்சியான தகவல்தான். சிலபல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு இமான் அண்ணாச்சி ஒரு ஆதாரமான காரணமாக இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. “மிஸ் பண்ணாதிய.. வருத்தப்படுவிய” என்றுதான் இனி சொல்ல முடியும்.